Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


ஊருக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள முதலை 4 மணி நேரத்திற்குப் பின் மீட்பு

Posted: 23 Mar 2014 01:48 PM PDT

சிதம்பரம்,

காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஒரே வாரத்தில் 3–வது சம்பவமாக நேற்று, ஆற்றை விட்டு வெளியேறி முதலை ஒன்று ஊருக்குள் புகுந்தது. இந்த முதலையை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் பிடித்து நீர்நிலைகளில் விட்டனர்.

ஊருக்குள் புகுந்த முதலை

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் உள்ள ஆறு, குளங்கள், வாய்க்கால்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், ஆறு, வாய்க்கால்களில் வசித்து வரும் முதலைகள் நீருக்காகவும், உணவு தேடியும் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை கடித்து அச்சுறுத்தும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் இருந்து வந்தனர்.

இந்தநிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் சிவாயம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அருகே சுமார் 7 அடி நீளம் உடைய முதலை ஒன்று பூலாமேடு செல்லும் சாலையின் குறுக்கே படுத்திருந்தது. உடனே தெருநாய்கள் முதலையை பார்த்து குரைத்தது. இந்த சத்தத்தை கேட்டு பொதுமக்கள் சாலையில் வந்து பார்த்தபோது ராட்சத முதலை ஒன்று படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

4 மணி நேர போராட்டம்

இதுகுறித்து, சிதம்பரம் வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், வனக்காப்பாளர்கள் ராஜேஷ்குமார், பழனிவேல், செந்தில் தலைமையில் களப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் சாலையின் குறுக்கே படுத்திருந்த முதலையை சுமார் 4 மணி நேரம் போராடி கயிறால் கட்டினர். அதையடுத்து, பிடிபட்ட முதலையை வனத்துறையினர் மினி லாரி மூலம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு வக்காரமாரி நீர் தேக்கத்தில் விட்டனர்.

ஒரே வாரத்திற்குள் 3 முதலை பிடிபட்டது

இதுகுறித்து, வனக்காப்பாளர் ராஜேஷ்குமார் கூறுகையில்:– கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் கொள்ளிடம் ஆறு மற்றும் குளங்கள், பாசன வாய்க்கால்களில் தண்ணீர் இன்றி வறண்டு விட்டது. அதேபோல், வக்காரமாரி நீர் தேக்கத்திலும் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், வனத்துறையினரால் வக்காரமாரி நீர்தேக்கத்தில் விடப்படும் முதலைகள் தண்ணீருக்காகவும், உணவு தேடியும் ஆறு, வாய்க்கால் கரையோர கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

வனத்துறையினர் எச்சரிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவாயம் வடக்குராஜன் வாய்க்கால் மேல்கரை, காட்டுமன்னார்கோவில் அருகே கால்நாட்டாம்புலியூர் கிராம வயல் பகுதிகளில் புகுந்திருந்த முதலை பிடிபட்டது. நேற்று அதிகாலையில் சிவாயம் கிராமத்திற்குள் முதலை புகுந்துள்ளது. கொள்ளிடக்கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் இரவு, பகல் நேரங்களில் ஆறு, வாய்க்கால் பகுதி குட்டைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் அருகே செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றார்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் ஒரே வாரத்தில் 3 ராட்சத முதலைகள் ஊருக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியபொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Posted: 23 Mar 2014 01:36 PM PDT

நாகர்கோவில்,

தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கன்னியாகுமரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

உற்சாக வரவேற்பு

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் நேற்று காலை கார் மூலம் முதல் முறையாக குமரி மாவட்டத்துக்கு வந்தார்.

அவருக்கு ஆரல்வாய்மொழி சந்திப்பில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரசாரம்

அதன்பிறகு அவர் தோவாளைக்கு சென்றார். அங்குள்ள கிருஷ்ணசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதில் அவர் கலந்து கொண்டு சாமி கும்பிட்டார். இதைத்தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

அவர் தோவாளை வடக்கூர் கிராமத்தெருவில் வீடு–வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அதன்பிறகு மெயின் ரோட்டுக்கு சென்று தெக்கூர் வழியாக பூ மார்க்கெட் சென்றார். அங்கு பொது மக்களிடமும், வியாபாரிகளிடமும் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி

தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன், பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :–

தமிழக அரசியல் வரலாற்றில், முதல் முறையாக தி.மு.க. அல்லது அ.தி.மு.க. தலைமை இல்லாமல் பா.ஜனதா கட்சி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணி அமைப்பதற்கு முழு ஒத்துழைப்பு தந்த தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர்கள் மேலும் ஆதரவு தெரிவித்துள்ள 41 இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த கூட்டணி தமிழகத்தில் முதல்நிலை கூட்டணியாக அமைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மாபெரும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. மக்கள் மிக பெரிய ஆதரவை தந்து கொண்டிருக்கிறார்கள். கூட்டணி கட்சி தலைவர்களின் பிரசாரம் முழுவீச்சில் வரும்போது தமிழகத்தில் ஒட்டு மொத்த அரசியல் மாற்றம் வரும்.

அதிக இடங்கள்

தமிழகத்தில் முதல் நிலை கூட்டணியான பா.ஜனதா கூட்டணி அதிகபடியான இடங்களை கைப்பற்றும். அகில இந்திய அளவில் 300–க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும். அதில் குறிப்பாக பா.ஜனதா 272 இடங்களுக்கு மேலாக வெற்றி பெறும். உறுதியாக தனிப்பெரும்பான்மையாக பா.ஜனதா வெற்றி பெற்றாலும், எங்களோடு கூட்டணி இருக்கும் அனைத்து கட்சிகளும் கவுரவப்படுத்தப்படும் என்று அகில இந்திய தலைவர் தெளிவாக கூறி இருக்கிறார். ஆகவே இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மாநில உணர்வு

அதன்பிறகு நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பதில்களும் வருமாறு :–

கேள்வி:– ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறார்களே?

பதில்:– இந்தியாவின் பெயர் பாரதம் என்று மாறும். அதாவது நம் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, பிரதமர் என்பவர் பல்வேறு மாநில முதல்–அமைச்சர்களின் கருத்துக்களை எடுத்துக்கொண்டு, மாநில உணர்வுகளை புரிந்து கொண்டு பணிபுரிபவராக இருக்க வேண்டும் என்றார். அப்படி நாம் இருப்போம் என்றும் கூறி உள்ளார்.

கேள்வி:– காங்கிரஸ்–பா.ஜனதா கட்சிகளின் வெளியுறவு கொள்கைகள் ஒன்று போல் உள்ளது என்று மற்ற கட்சிகள் கூறுகிறார்களே?

பதில்:– பா.ஜனதாவை அவமானப்படுத்த இதை தவிர வேறு கிடையாது. எல்லா நாடுகளோடும் இணைந்து போக வேண்டும் என்பதில் 2–வது கருத்து கிடையாது. ஆனால் காங்கிரஸ் எல்லா நாடுகளுக்கும் அடி பணிந்து போக வேண்டும் என்று உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி மீது ஏராளமான, ஆயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. 2009–ம் ஆண்டு இலங்கையில் சுமார் 2 லட்சம் மக்களை கொன்று குவித்து, மிகப்பெரிய பாவத்தை செய்த காங்கிரஸ் கட்சிக்கு இது தண்டனை காலம். அது நிறைவேற்றப்பட வேண்டும்.

அரசியல் ஆதாயம்

கேள்வி:– கூடங்குளம் மக்கள் பிரச்சினை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:– கூடங்குளம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு உறுதி படுத்தப்பட வேண்டும். அங்கு என்ஜினீயரிங் கல்லூரி, உலக தரம் வாய்ந்த மருத்துவமனை, தொழிற்பேட்டை ஆகியவற்றை தொடங்க வேண்டும். கூடங்குளம் மக்கள் உணர்வுகளை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்த பா.ஜனதா விரும்பவில்லை.

கேள்வி:– பா.ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடுமா?

பதில்:– தமிழக பா.ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை தயாரிக்கவில்லை. அகில இந்திய அளவில் வெளியிடப்படும். தொகுதி வாரியாக உள்ள பிரச்சினைகளை மையப்படுத்தி, இந்த தேர்தல் அறிக்கை அமையும். இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் உள்பட 2 இடங்களில் 2003–ம் ஆண்டு சாய் சப் சென்டர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. லக்னோவில் அமைக்கப்பட்டது. ஆனால் இங்கு தொடங்கவில்லை. இங்கு துறைமுகம், விமான நிலையம், சாலைகளை செப்பனிடுவது, குமரியை சுற்றுலா மையமாகக்குவது போன்றவை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் கன்னியாகுமரியை முதல் மாவட்டமாக கொண்டு வரவேண்டும் என்பது என் குறிக்கோள் ஆகும்.

கண்காணிப்பு

கேள்வி:– குலசேகரத்தில் கறி விருந்து அளித்ததாக வேட்பாளர் மீது தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் அதிகாரிகள் செயல்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:– தேர்தல் அதிகாரிகள் பாரபட்சமின்றி பணியாற்ற வேண்டும். ஒருவருக்கு சாதகமாக செயல்பட்டால் இந்திய ஜனநாயகத்துக்கு, இந்திய மக்களுக்கு துரோகம் செய்தவர் ஆகி விடுவார். இந்த தேர்தலுக்காக ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கும் கோடான கோடி பணம் வந்து குவிந்து உள்ளது. ஆகவே தேர்தல் அதிகாரிகள் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்களை கண்காணிக்க வேண்டும்.

ஒதுங்க வேண்டும்

கேள்வி:– மத்திய அரசில் கடந்த 10 ஆண்டுகளாக மந்திரிகளாக இருந்தவர்கள், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்குகிறார்களே?

பதில்:– அரசியலில் இருந்து ஒதுங்குவது தமிழ்நாட்டுக்கு நல்லது, நிதி மந்திரி ப.சிதம்பரம் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர். அவர் ஒதுங்குவது நாட்டுக்கு நல்லது.

தீர்வு

கேள்வி:– தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுமா?

பதில்:– இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி வந்து விட்டால் அடுத்த நிமிடமே இலங்கை தன்னை கட்டுப்படுத்தி கொள்ளும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மற்றும் பிரசாரத்தில் பா.ஜனதா கோட்ட பொறுப்பாளர் வேல்பாண்டியன், மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் கணேசன், நாகர்கோவில் நகரசபை தலைவி மீனாதேவ், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, வர்த்தக அணி தலைவர் முத்துராமன், வரவேற்புக்குழு தலைவர் ராஜன், மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் உமாரதி, நகர தலைவர் ராகவன், பொதுச்செயலாளர் அஜீத்குமார், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் முருகேஷ், ஒன்றிய தலைவர் ஈசை கிருஷ்ணன், பொதுச்செயலாளர் மணிசுவாமி, ஆரல் தலைவர் மாதேவன் பிள்ளை, தே.மு.தி.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன், அவைத்தலைவர் ஜெயபிரபாகர், வக்கீல் அணி நிர்வாகி பொன்.செல்வராஜன், துணை செயலாளர் ஜேம்ஸ் மார்ஷல், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தில்லை செல்வம், பொருளாளர் சாகுல் அமீது மாநில வக்கீல் அணி நிர்வாகி வெற்றிவேல், பா.ம.க. மாநில துணைப்பொது செயலாளர் ஹரிகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் நந்தகோபால், மேற்கு மாவட்ட செயலாளர் ரவி மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

தொகுதி கண்ணோட்டம் : விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி

Posted: 23 Mar 2014 01:29 PM PDT

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனித்தொகுதியாகும். இது 2008–ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது புதிதாக உருவாக்கப்பட்ட 13 பாராளுமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு இந்த தொகுதி திண்டிவனம் பாராளுமன்ற தொகுதியாக இருந்தது. அப்போது திண்டிவனம், வானூர்(தனி), கண்டமங்கலம்(தனி), விழுப்புரம், முகையூர், திருநாவலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.

தொகுதி சீரமைப்புக்கு பின்னர் விழுப்புரம் தொகுதியாக மாறிய இத்தொகுதியில் விழுப்புரம், வானூர்(தனி), திண்டிவனம்(தனி), விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

கடந்த 2009–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தான் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்ற முதல் தேர்தல். அதற்கு முன்பு திண்டிவனம் தொகுதியாக இருந்த போது நடந்த 14 பொதுத்தேர்தல்களில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 7 தடவை வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க., ம.தி.மு.க., உழவர் உழைப்பாளர் கட்சி ஆகியவை தலா 2 முறையும், சுயேச்சை வேட்பாளர் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

2009–ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 19 பேர் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் தன்னை எதிர்த்து தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரான ஓய்வு பெற்ற நீதிபதி சாமிதுரையை விட 2 ஆயிரத்து 797 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் விழுப்புரம் தொகுதியின் முதல் எம்.பி. என்ற பெருமையை ஆனந்தன் பெற்றார்.

இதன் பிறகு கடந்த 2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இந்த தொகுதிக்குட்பட்ட விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திண்டிவனம்(தனி), வானூர்(தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. விக்கிரவாண்டி தொகுதியை அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், திருக்கோவிலூர் தொகுதியை தே.மு.தி.க.வும் தன் வசப்படுத்தி கொண்டன.

விழுப்புரம் தொகுதியை பொறுத்தவரை ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இங்கு குடிசை பகுதிகள் அதிகம் உள்ளன. விவசாயம் தான் முக்கிய தொழிலாக இருக்கிறது. விழுப்புரத்தில் முந்தைய தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முடிவடையாமல் உள்ளது. விழுப்புரம் மாவட்ட விவசாயத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் நந்தன் கால்வாய் திட்டமும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய அளவில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை பயன்படுத்தி காகித தொழிற்சாலை அமைத்து தருவேன் என்றும் அரசூரில் பழச்சாறு தொழிற்சாலை அமைத்து தருவேன், உளுந்தூர்பேட்டையை ரெயில்வே சந்திப்பாக மாற்றித்தருவேன் என்பது போன்ற வாக்குறுதிகளை இத்தொகுதியின் எம்.பி. ஆனந்தன் அளித்து இருந்தார். ஆனால் எந்த ஒரு வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை.

தொகுதி எம்.பி. பேட்டி

இதுகுறித்து ஆனந்தன் எம்.பி. கூறியதாவது:–

திருக்கோவிலூர் ஒன்றியம் வடவானூர் ஊராட்சியில் மலட்டாற்றின் குறுக்கே ரூ.94 லட்சம் செலவில் மேம்பாலம் கட்டும் பணி, கோட்டக்குப்பம் பேரூராட்சியில் பல லட்சம் ரூபாய் செலவில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன. விழுப்புரம்–திருப்பதி இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து வசதியை செய்து கொடுத்துள்ளேன்.

உளுந்தூர்பேட்டை ஒன்றியம் ஆசனூர் கிராமத்திலும், திண்டிவனம் அருகேயும் சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முகையூர் ஒன்றியத்தில் ஒதியத்தூர் கிராமத்துக்கு செஞ்சி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் வசதி செய்து கொடுப்பதற்காக குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுதவிர 8 ஒன்றியங்களில் சமுதாயக்கூடங்கள் கட்டி கொடுத்துள்ளேன். ரூ.9 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகளை முடித்து கொடுத்துள்ளேன். விழுப்புரம் 4 முனை சந்திப்பு அருகில் ரூ.40 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைத்து கொடுத்துள்ளேன். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் பார்வையாளர்கள் தங்கும் அறை கட்டும் பணிகள் முடிவடைந்து திறக்கும் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தொகுதியில் வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் அதிகமாக வசிக்கின்றனர். ஆனால் இது தனித்தொகுதியாக இருப்பதால் எந்த சமூகமும் ஒரே கட்சியை சார்ந்து இருக்கவில்லை, இதனால் சாதிக்காக வாக்குகள் கிடைப்பதில்லை என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை மற்றொரு கூட்டணியாகவும், தே.மு.தி.க. தனித்தும் தேர்தலில் போட்டியிட்டன. அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன், மிகக்குறைந்த வாக்குவித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். (2,797 வாக்குகள்).

ஆனால் அவர் இத்தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் எந்த ஒரு தொழிற்சாலையையும் தொடங்க முயற்சி எடுக்கவில்லை என்று மக்கள் கருதுகிறார்கள்.

13½ லட்சம் வாக்காளர்கள்

தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2009–ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 250 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 25 ஆயிரத்து 879 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 10 லட்சத்து 68 ஆயிரத்து 171 வாக்காளர்கள் இருந்தனர். 1–1–2014–ஐ தகுதி நாளாக கொண்டு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி விழுப்புரம் தொகுதியில் தற்போது 6 லட்சத்து 85 ஆயிரத்து 753 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 82 ஆயிரத்து 461 பெண் வாக்காளர்களும், 121 திருநங்கைகளும் என மொத்தம் 13 லட்சத்து 68 ஆயிரத்து 335 வாக்காளர்கள் உள்ளனர். இது கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்ததை விட 3 லட்சத்து 164 வாக்காளர்கள் அதிகமாகும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில்....

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம்:–

எம்.ஆனந்தன் (அ.தி.மு.க. வெற்றி) –3,06,826

கே.சாமிதுரை (விடுதலை சிறுத்தை) –3,04,029

கணபதி (தே.மு.தி.க.) – 1,27,476

பொய்யாது (பா.ஜனதா) – 4,382

தேவராஜ் (ஐ.ஜே.பி.)     – 3,317

எம். வெங்கடேசன்(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) –2,672

பஞ்சநாதன்(ஜார்கண்ட் முக்தி மோர்சா)–1,607

எஸ்.வெங்கடேசன் (அகில இந்திய

வன்னியர் பேரவை)–8,16


 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி 2-வது வெற்றி வெஸ்ட் இண்டீசை தோற்கடித்தது

Posted: 23 Mar 2014 01:18 PM PDT

மிர்புர்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து 2-வது வெற்றியை சுவைத்தது.

வெஸ்ட் இண்டீஸ் திணறல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு மிர்புரில் நடந்த (குரூப்2) லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீசும் மோதின. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து கிறிஸ் கெய்லும், வெய்ன் சுமித்தும் வெஸ்ட் இண்டீசின் இன்னிங்சை தொடங்கினர். 'அபாயகரமான ஜோடி' என்று வர்ணிக்கப்படும் இவர்கள் இந்திய பந்து வீச்சில் தடுமாறினர். குறிப்பாக வெய்ன் சுமித் அதிரடி காட்ட முடியாமல் பரிதவித்தார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 'பவர்-பிளே'யில் தனது முதல் 3 ஓவர்களில் வெறும் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து மிரட்ட, அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள் பிடியை மேலும் இறுக்கி அழுத்தம் கொடுத்தனர்.

2 முறை தப்பிய கெய்ல்

இதற்கு மத்தியில் கிறிஸ் கெய்ல் இரண்டு முறை கண்டம் தப்பினார். ரன் கணக்கை தொடங்கும் முன்பு, ஸ்லிப்பில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை அஸ்வின் தவற விட்டார். 19 ரன்களில் பந்தை தூக்கியடித்த போது டீப் மிட்விக்கெட் திசையில் எல்லைக்கோடு அருகே மிக எளிதான கேட்ச் வாய்ப்பை யுவராஜ்சிங் வீணடித்தார். ஆனாலும் 'சிக்சர் மன்னன்' கிறிஸ் கெய்லால் அணிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் வந்து விடவில்லை.

சுமித் 11 ரன்னிலும் (29 பந்து), கிறிஸ் கெய்ல் 33 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்களிலும் (ரன்-அவுட்) வெளியேறினார்கள். பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளத்தை நமது சுழல் சூறாவளிகள் துல்லியமாக பயன்படுத்தி, வெஸ்ட் இண்டீசை நிமிர விடாமல் கட்டுப்படுத்தினர். சாமுவேல்ஸ் (18 ரன்), வெய்ன் பிராவோ (0), கேப்டன் டேரன் சேமி (11 ரன்) சுழலில் சிக்கி சிதறினர்.

130 ரன்கள் இலக்கு

இருப்பினும் கடைசி ஓவர் மட்டும் நமது கையை விட்டு போய் விட்டது என்று சொல்லலாம். 20-வது ஓவரை வீசிய ரவீந்திர ஜடேஜா அந்த ஓவரில் 3 சிக்சர் உள்பட 21 ரன்களை வாரி இறைத்தார். இதனால் அவர்களின் ஸ்கோர் கணிப்பை விட கொஞ்சம் கூடி விட்டது. ஆனால் 3 ஓவர்களில் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்த புவனேஷ்வர்குமாரை கடைசி ஓவருக்கு கேப்டன் டோனி அழைக்காதது வியப்பை அளித்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்தது. இந்தியாவின் பீல்டிங் மட்டும் கனகச்சிதமாக அமைந்திருந்தால் வெஸ்ட் இண்டீஸ் 100 ரன்களை கடப்பதே திண்டாட்டமாக இருந்திருக்கும். இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

கோலி 54 ரன்

பின்னர் 130 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான்(0) முதல் ஓவரிலேயே எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். இதன் பின்னர் ரோகித் ஷர்மாவும், விராட் கோலியும் ஜோடி சேர்ந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தி விடக்கூடாது என்பதற்காக கோலி ஆரபத்திலேயே அதிரடியில் இறங்கினார். அதன் பிறகு ரோகித் ஷர்மாவும் வேகம் காட்ட, இந்திய அணி சிரமமின்றி இலக்கை நோக்கி பயணித்தது. 2-வது விக்கெட்டுக்கு இவர்கள் 106 ரன்கள் சேர்த்து கலக்கினர். 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 2-வது விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அபாரமாக ஆடிய விராட் கோலி 54 ரன்களில் (41 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த யுவராஜ்சிங் மந்தமாக ஆடி வெறுப்பேற்றியதுடன், ஆட்டத்தையும் தேவையில்லாமல் கடைசிவரை கொண்டு சென்று விட்டார். யுவராஜ்சிங்(19 பந்து, 10 ரன்) கடைசி ஓவரின் 3-வது பந்தில் விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா வெற்றிக்குரிய ரன்னை அடித்து ஒரு வழியாக முடித்து வைத்தார்.

இந்தியா 2-வது வெற்றி

இந்திய அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் ஷர்மா 62 ரன்களுடன் (55 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். தொடர்ந்து 2-வது முறையாக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது. இதன் மூலம் இந்திய அணி அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. இந்திய அணி அடுத்து வங்காளதேசத்தை வருகிற 28-ந்தேதி சந்திக்கிறது.

ஸ்கோர் போர்டு

வெஸ்ட் இண்டீஸ்

வெய்ன் சுமித் (சி) அண்ட்

(பி) அஸ்வின் 11

கெய்ல் (ரன்-அவுட்) 34

சாமுவேல்ஸ் (ஸ்டம்பிங்)

டோனி (பி) மிஸ்ரா 18

சிமோன்ஸ் (சி) தவான் (பி)

ஜடேஜா 27

வெய்ன் பிராவோ

எல்.பி.டபிள்யூ (பி) மிஸ்ரா 0

டேரன் சேமி (சி) ரோகித்

(பி) ஜடேஜா 11

ஆந்த்ரே ரஸ்செல் (சி) கோலி

(பி) ஜடேஜா 7

சுனில் நரின் (நாட்-அவுட்) 7

ராம்டின் (ரன்-அவுட்) 0

எக்ஸ்டிரா 14

மொத்தம் (20 ஓவர்களில்

7 விக்கெட்டுக்கு) 129

விக்கெட் வீழ்ச்சி: 1-38, 2-62, 3-74, 4-74, 5-97, 6-108, 7-121

பந்து வீச்சு விவரம்

புவனேஷ்வர்குமார் 3-0-3-0

முகமது ஷமி 3-0-27-0

அஸ்வின் 4-0-24-1

அமித் மிஸ்ரா 4-0-18-2

சுரேஷ் ரெய்னா 2-0-8-0

ரவீந்திர ஜடேஜா 4-0-48-3

இந்தியா

ரோகித் ஷர்மா (நாட்-அவுட்) 62

தவான் எல்.பி.டபிள்யூ (பி) பத்ரீ 0

விராட் கோலி (பி) ரஸ்செல் 54

யுவராஜ்சிங் (சி) கெய்ல் (பி)

சாமுவேல்ஸ் 10

ரெய்னா (நாட்-அவுட்) 1

எக்ஸ்டிரா 3

மொத்தம் (19.4 ஓவர்களில்

3 விக்கெட்டுக்கு) 130

விக்கெட் வீழ்ச்சி:1-1,2-107,3-129

பந்து வீச்சு விவரம்

பத்ரீ 4-0-28-1

சான்டோகி 4-0-27-0

சுனில் நரின் 4-0-20-0

வெய்ன் பிராவோ 1-0-12-0

டேரன் சேமி 1-0-9-0

சாமுவேல்ஸ் 3.4-0-22-1

ரஸ்செல் 2-0-12-1

டோனி, சேமி கருத்து

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் டோனி கூறுகையில், 'எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பவுலிங் செய்தனர். இதுவரை பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் தான் களத்தில் முழுமையாக சோதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வருகிற போட்டிகளில் மற்ற பேட்ஸ்மேன்களுக்கும் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கும். ரோகித் ஷர்மா கடைசி வரை களத்தில் நின்றது முக்கியமான விஷயம். இந்த ஆட்டம் அவருக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கும். ஆட்டத்தை ஒரு ஓவருக்கு முன்பாக முடித்திருக்கலாம். ஆனால் அது களத்தில் நிற்கும் பேட்ஸ்மேன்களை பொறுத்தது' என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சேமி கூறுகையில், 'ரோகித் ஷர்மாவும், கோலியும் வெற்றியை எங்களிடம் இருந்து பறித்து விட்டனர். ஆனாலும் எங்களது பந்து வீச்சாளர்கள் போராடி, ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றனர். இது போன்ற தொடர்களில் ரன்-ரேட் முக்கிய பங்கு வகிக்கும். அடுத்த ஆட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு பதிலடி கொடுப்போம்' என்றார்.

category:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

Posted: 23 Mar 2014 01:13 PM PDT

தென்ஆப்பிரிக்கா–நியூசிலாந்து (குரூப்1)

இடம்: சிட்டகாங், நேரம்: மாலை 3 மணி

கேப்டன்கள்

டு பிளிஸ்சிஸ் பிரன்டன் மெக்கல்லம்

4 தரவரிசை 7

நட்சத்திர வீரர்கள்

டுமினி, அம்லா, டிவில்லியர்ஸ், ஸ்டெயின், இம்ரான் தாஹிர்

கப்தில், கோரி ஆண்டர்சன், ராஸ் டெய்லர், வில்லியம்சன், மில்ஸ்

இதுவரை நேருக்கு நேர் 11

வெற்றி 8 வெற்றி 3

தொடக்க ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்ற தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும். மீண்டும் தோற்றால், அரைஇறுதி வாய்ப்பை பெறுவது சிக்கலாகி விடும். தசைப்பிடிப்பால் முந்தைய ஆட்டத்தில் ஆடாத கேப்டன் தென்ஆப்பிரிக்க பாப் டு பிளிஸ்சிஸ் களம் திரும்ப வாய்ப்புள்ளது. அதே சமயம் மழையால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 2–வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் வியூகங்களை வகுத்து வருகிறது.

இலங்கை–நெதர்லாந்து (குரூப்1)

இடம்: சிட்டகாங், நேரம்: இரவு 7 மணி

கேப்டன்கள்

சன்டிமால் பீட்டர் போரென்

1 தரவரிசை 12

நட்சத்திர வீரர்கள்

குசல் பெரேரா, மலிங்கா, மென்டிஸ், சங்கக்கரா, மேத்யூஸ்

ஸ்டீபன் மைபர்க், வெஸ்லி பரேசி, டாம் ஹூப்பர், ஜமில்

இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு மூன்று ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. 3–லிலும் இலங்கை வெற்றி கண்டது.

தகுதி சுற்றில் விளையாடி பிரதான சுற்றுக்குள் வந்துள்ள குட்டி அணியான நெதர்லாந்து, அயர்லாந்துக்கு எதிராக 19 சிக்சர்களை விளாசி உலக சாதனை படைத்தது. எனவே அந்த அணியை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என்று இலங்கை வீரர்களை அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்திய இலங்கை அணிக்கு 2–வது வெற்றியும் அதிக தூரத்தில் இல்லை.

இன்றைய ஆட்டங்கள் நடைபெறும் துறைமுக நகரான சிட்டகாங்கில் மழை பெய்ய 60 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

category:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா

Posted: 23 Mar 2014 01:09 PM PDT

மிர்புர்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானிடம் போராடி தோற்றது.

20 ஓவர் கிரிக்கெட்

5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் தற்போது சூப்பர்–10 சுற்று நடக்கிறது. சூப்பர்–10 சுற்றில் ஆடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப்1–ல் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், குரூப்2–ல் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளும் இடம் வகிக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இந்த நிலையில் மிர்புரில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் (குரூப்2) சந்தித்தன. ஆஸ்திரேலிய அணியில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு டக் போலிஞ்ச் இடம் பெற்றார்.

சகோதரர்கள் அபாரம்

டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை பேட் செய்ய பணித்தது. இதன்படி பவுண்டரியுடன் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி அகமது ஷேசாத் (5 ரன்) மற்றும் அடுத்து வந்த கேப்டன் முகமது ஹபீஸ் (13 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்தது. இருப்பினும் சகோதரர்கள் கம்ரன் அக்மலும், உமர் அக்மலும் அணியை தூக்கி நிறுத்தினர். அண்ணன் கம்ரன் நிதானம் காட்ட, தம்பி உமர் மின்னல் வேகத்தில் பேட்டை சுழட்டினார். இதனால் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. இந்த ஜோடி 3–வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் திரட்டிய பிறகு பிரிந்தது. கம்ரன் அக்மல் 31 ரன்களில் (31 பந்து, 4 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

உமர் அக்மலின் தாக்குதல் தொடர்ந்ததால், பாகிஸ்தானின் ரன்வேட்டையை ஆஸ்திரேலிய பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. 94 ரன்கள் (54 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசிய நிலையில் உமர்அக்மல் கடைசி ஓவரில் கேட்ச் ஆனார். இன்னும் 6 ரன் எடுத்திருந்தால் 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றிருப்பார். இறுதி கட்டத்தில் அப்ரிடியும் (20 ரன், 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) கைகொடுக்க பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

மேக்ஸ்வெல் 6 சிக்சர்

பின்னர் ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 35 வயதான சுழற்பந்து வீச்சாளர் ஜூல்பிகர் பாபர் வீசிய முதல் ஓவரில் டேவிட் வார்னர் (4 ரன்), ஷேன் வாட்சன் (4 ரன்) இருவரும் காலியானார்கள். இதைத் தொடர்ந்து ஆரோன் பிஞ்சும், கிளைன் மேக்ஸ்வெல்லும் இணைந்து, அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், எதிரணியின் பந்து வீச்சை நொறுக்கியெடுத்தனர். குறிப்பாக மேக்ஸ்வெல், முட்டிப்போட்டு லெக்சைடில் சிக்சர்களை பறக்க விட்டார். இந்த ஜோடி வேகப்பந்து வீச்சாளர் பிலாவல் பாத்தி வீசிய ஒரே ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி, நோ–பால் பவுண்டரி என்று 30 ரன்களை சேகரித்து மிரள வைத்தது. 18 பந்துகளில் அரைசதத்தை கடந்த மேக்ஸ்வெல், 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் வரிசையில் சக நாட்டவர் டேவிட் வார்னருடன் 4–வது இடத்தை பகிர்ந்து கொண்டார்.

அணியின் ஸ்கோர் 126 ரன்களாக (11.4 ஓவர்) உயர்ந்த போது மேக்ஸ்வெல் 74 ரன்களில் (33 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டம் இழந்தார். 15 ஓவர் வரை ஆட்டம் ஆஸ்திரேலியாவின் (146–3) கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

பாகிஸ்தான் வெற்றி

ஆனால் பரபரப்பான சூழலில், பாகிஸ்தானின் இறுக்கமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கோட்டை விட்டனர். ஆஸ்திரேலியாவின் ஒரே நம்பிக்கையாக பரிமளித்துக் கொண்டிருந்த ஆரோன் பிஞ்ச் (65 ரன், 54 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) சயீத் அஜ்மலின் பந்து வீச்சில் கிளீன் போல்டானதும் (17.4 ஓவர்) அவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் தகர்ந்து போனது. இறுதி கட்டத்தில் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை தாரைவார்த்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 175 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேகரித்த ஆஸ்திரேலியா கடைசி 10 ஓவர்களில் 58 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து விட்டது. மேக்ஸ்வெல், பிஞ்ச் தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இதன் மூலம் பாகிஸ்தான் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றிருந்த பாகிஸ்தான் இந்த வெற்றியின் மூலம் அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. உமர் அக்மல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

ஸ்கோர் போர்டு

பாகிஸ்தான்

அகமது ஷேசாத் (சி) அண்ட் (பி) போலிஞ்சர் 5

கம்ரன் அக்மல் (சி) வார்னர் (பி) கவுல்டர்–நிலே 31

முகமது ஹபீஸ் (பி) வாட்சன் 13

உமர் அக்மல் (சி) மேக்ஸ்வெல் (பி) ஸ்டார்க் 94

சோகைப் மசூத் (பி) கவுல்டர்–நிலே 5

அப்ரிடி (நாட்–அவுட்) 20

சோயிப் மாலிக் (நாட்–அவுட்) 6

எக்ஸ்டிரா 17

மொத்தம் (20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு) 191

விக்கெட் வீழ்ச்சி: 1–7, 2–25, 3–121, 4–147, 5–180

பந்து வீச்சு விவரம்

மிட்செல் ஸ்டார்க் 4–0–35–1

போலிஞ்சர் 4–0–28–1

வாட்சன் 4–0–38–1

கவுல்டர்–நிலே 4–0–36–2

பிராட் ஹாக் 3–0–29–0

ஆரோன் பிஞ்ச் 1–0–18–0

ஆஸ்திரேலியா

வார்னர்(பி) ஜூல்பிகர் பாபர் 4

ஆரோன் பிஞ்ச் (பி) அஜ்மல் 65

வாட்சன் (பி) கம்ரன் (பி) ஜூல்பிகர் பாபர் 4

மேக்ஸ்வெல் (சி) ஷேசாத் (பி) அப்ரிடி 74

ஜார்ஜ் பெய்லி (பி) அப்ரிடி 4

பிராட் ஹாட்ஜ் (சி) அஜ்மல் (பி) உமர்குல் 2

ஹேடின் (சி) மாலிக் (பி) பிலாவல் பாத்தி 8

கவுல்டர் நிலே (பி) உமர்குல் 0

மிட்செல் ஸ்டார்க் (ரன்–அவுட்) 3

பிராட் ஹாக் (பி) பிலாவல் பாத்தி 3

போலிஞ்சர் (நாட்–அவுட்) 0

எக்ஸ்டிரா 8

மொத்தம் (20 ஓவர்களில் ஆல்–அவுட்) 175

விக்கெட் வீழ்ச்சி: 1–4, 2–8, 3–126, 4–146, 5–155, 6–162, 7–163, 8–172, 9–173

பந்து வீச்சு விவரம்

ஜூல்பிகர் பாபர் 4–0–26–2

முகமது ஹபீஸ் 2–0–18–0

உமர் குல் 4–0–29–2

சயீத் அஜ்மல் 4–0–33–1

அப்ரிடி 4–0–30–2

பிலாவல் பாத்தி 2–0–36–2

category:

உலக சதுரங்க தகுதி சுற்று: ஆனந்த் அபாரம்

Posted: 23 Mar 2014 01:06 PM PDT

கந்தி மான்சிஸ்க்

2014-ம் ஆண்டுக்கான உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதப்போகும் வீரரை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி (கேன்டிடேட்ஸ் சதுரங்க தொடர்) ரஷியாவின் கந்தி மான்சிஸ்க் நகரில் நடந்து வருகிறது. இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட 8 முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் ஒவ்வொருவரும் மற்ற வீரர்களுடன் தலா இரு முறை மோத வேண்டும். 14 சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் கார்ல்செனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்.

இந்த நிலையில் நேற்று 9-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த், பல்கேரியாவின் வெஸ்லின் தபலோவை எதிர்கொண்டார். வெள்ளை நிற காயுடன் ஆடிய ஆனந்த் 57-வது நகர்த்தலில் தபலோவின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்து வெற்றிக்கனியை பறித்தார். இதுவரை தோல்வியே சந்திக்காத ஆனந்த்துக்கு இது 3-வது வெற்றியாகும். மற்றொரு ஆட்டத்தில் அர்மேனியா வீரர் லெவோன் ஆரோனியனுக்கு, ஷக்ரியர் நேம்ட்யாரோவ் (அஜர்பைஜான்) அதிர்ச்சி அளித்தார். 9 சுற்று முடிவில் ஆனந்த் 6 புள்ளியுடன் மீண்டும் தனி முன்னிலை பெற்றுள்ளார். ஆரோனியன் 5 புள்ளியுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

category:

ஆக்கிரமிப்பை அகற்றியதால் மிரட்டுவதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது போலீசில் புகார்

Posted: 23 Mar 2014 01:05 PM PDT

ஆவடி,

தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டை குடியிருப்போர் சங்கத்தினர் சேதப்படுத்தியதாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனும், அவர் தங்களை மிரட்டுவதாக குடியிருப்போர் சங்கத்தினரும் போலீசில் புகார் செய்தனர். இருதரப்பு புகார் மீதும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பவர்ஸ்டார் சீனிவாசன் புகார்

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்திருப்பவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவரது வீடு சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ளது. இவர், மதுரவாயலை அடுத்த வானகரம் அடையாளம்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் சொந்தமாக 'லத்திகா டிபார்ட்மென்டல் ஸ்டோர்' என்ற பெயரில் சூப்பர்மார்க்கெட் நடத்தி வந்தார். கடந்த ஒரு வருடங்களாக இந்த கடை மூடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நேற்று பவர்ஸ்டார் சீனிவாசன், மதுரவாயல் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர், "நேற்று முன்தினம் இரவு குடியிருப்பில் வசிக்கும் சிலர் எனக்கு சொந்தமான சூப்பர்மார்க்கெட்டின் கிரில் கேட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டுபோய் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி இருந்தார்.

அதேபோல் குடியிருப்போர் சங்கம் சார்பிலும் 10 பேர் மதுரவாயல் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த புகாரில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

தொலைபேசியில் மிரட்டுகிறார்

கடந்த ஒரு ஆண்டாக மூடிக்கிடக்கும் கடையை காலி செய்யும்படி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனிடம் கூறினோம். அதற்கு அவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலி செய்வதாக கூறினார். ஆனால் இதுநாள் வரை காலி செய்யவில்லை. கடை முன்பு செட் அமைத்து உள்ளார். இதனால் குடியிருப்போரின் வாகனங்கள் உள்ளே செல்வதற்கு மிகுந்த சிரமமாக இருக்கிறது. எனவே கடையின் கேட்டை மட்டும் நாங்கள் கழற்றி ஓரமாக வைத்தோம். அதற்கு நடிகர் சீனிவாசன் எங்களை தொலைபேசியில் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறி இருந்தனர். மதுரவாயல் போலீசார் இரு தரப்பு புகாரையும் பெற்றுக்கொண்டு மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

பெண்கள் உலக கோப்பையிலும் ஆஸ்திரேலியா தோல்வி

Posted: 23 Mar 2014 01:04 PM PDT

சைலெட்,

பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நேற்று தொடங்கியது. இதில் களம் இறங்கியுள்ள 10 அணிகள் ஏ, பி என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா–நியூசிலாந்து அணிகள் (ஏ பிரிவு) சைலெட்டில் எதிர்கொண்டது. முதலில் ஆடிய நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 3 வீராங்கனைகளின் ரன்–அவுட்டால் பின்னடைவை சந்தித்ததுடன், 19.3 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி போனது. இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இலங்கையை (இரவு 7 மணி) இன்று சந்திக்கிறது.

category:

தென் சென்னை தொகுதியில் பா.ஜனதா பிரசாரம்: தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் இல.கணேசனை ஆதரித்து வெங்கையா நாயுடு பேச்சு

Posted: 23 Mar 2014 01:01 PM PDT

ஆலந்தூர்,

தென் சென்னை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் இல.கணேசனை ஆதரித்து பேசிய வெங்கையா நாயுடு, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

வேட்பாளர் அறிமுகம்

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் இல.கணேசன் அறிமுக பிரசார கூட்டம், மேடவாக்கத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவர் வெங்கையாநாயுடு கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

இந்தியா முழுவதும் இளைஞர்கள், முதியவர்கள், நடுத்தரத்தினர் என அனைத்து தரப்பினரும் மோடி பிரதமராக வர வேண்டும் என முடிவு செய்துவிட்டனர். நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்றால் மோடி தான் பிரதமராக வரவேண்டும் என கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

மாபெரும் வெற்றி

தமிழகத்தில் விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்கள் பங்கேற்கும் கட்சிகளின் கூட்டணி ஏற்பட்டு உள்ளது. இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். தமிழக மக்கள் பாரதீய ஜனதா கட்சியை விரும்புகின்றனர். பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து களத்தில் இறங்கி உள்ளோம். ஆனால் தலைமையின்றி காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கிறது.

அவர்களால் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா? பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்து ஏழை-எளிய மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். நாட்டில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய தொகையை கிடைக்கச் செய்வோம். இந்தியாவில் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுப்போம்.

மீனவர்கள் பிரச்சினை

இந்தியாவில் 3-வது அணி என்பது கானல் நீராக இருக்கும். இந்த அணியில் பிரதமர் பதவி போட்டியில் 7 பேர் உள்ளனர். அவர்களால் நிலையான ஆட்சியை தரமுடியாது. வருங்காலத்தில் காங்கிரஸ் காணாமல் போய்விடும். இடதுசாரி கட்சிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. பா.ஜனதாவால் மட்டுமே நிலையான ஆட்சி தர முடியும்.

இலங்கையில் 1 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருந்து இருக்காது. இலங்கையில் மக்கள் சம உரிமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காணப்படும்.

தென்சென்னையில் போட்டியிடும் இல.கணேசன் சிறந்தவர். இலங்கை பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை உள்பட மக்கள் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசி தீர்வு காண்பதற்கு அவருக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், வானதி சீனிவாசன், பா.ம.க.வை சேர்ந்த திருக்கச்சூர் ஆறுமுகம், தே.மு.தி.க.வின் ராஜன், ஐ.ஜெ.கே. ஆரூர் சுந்தரம். ம.தி.மு.க. செல்வபாண்டியன் மற்றும் செம்பாக்கம் வேதசுப்பிரமணியன், பொற்றாமரை சங்கரன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™