Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


கருணாநிதியையும், தி.மு.க.வையும் காப்பதே லட்சியம்: தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை ஆதரவாளர்கள் கூட்டத்தில் மு.க.அழகிரி அறிவிப்பு

Posted: 17 Mar 2014 01:10 PM PDT

மதுரை,

கலைஞரையும், தி.மு.க. வையும் காப்பதே என் லட்சியம், தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்று ஆதரவாளர்கள் கூட்டத்தில் மு.க.அழகிரி எம்.பி. அறிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் மதுரை சத்தியசாய்நகரில் உள்ள தயாமகாலில் நேற்று நடந்தது. காலை முதலே ஏராளமான ஆதரவாளர்கள் அங்கு குவியத் தொடங்கினர். அங்கு வந்திருந்தவர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மு.க.அழகிரி காலை 10.45 மணிக்கு அங்கு வந்தார். பின்னர் மு.க.அழகிரி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

போஸ்டர் வேண்டாம்

இப்போது மட்டுமல்ல, என்றும் நீங்கள் எனக்கு ஆதரவாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. முதலில் போஸ்டர் அடிப்பதை நிறுத்த வேண்டும். அப்படி அடித்தது தான் இந்த நிலைக்கு நம்மை கொண்டு வந்து விட்டுள்ளது. கலைஞரை எதிர்த்தே சில இடங்களில் போஸ்டர் அடிக்கிறார்கள். அதெல்லாம் தவறு இல்லையாம். ஆனால் எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் அடிப்பது தவறாக தெரிகிறது.

என் ஆதரவாளர்களை நீக்கினார்கள். ஏன் என்று கலைஞரிடம் கேட்டேன். அதற்கு என்னையும் சஸ்பெண்டு செய்தார்கள். நான் என்ன தவறு செய்தேன்?

மன்னிப்பு

நிருபர்கள் என்னிடம், கட்சித்தலைமையிடம் நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா என்று கேட்டார்கள். நான் என்ன தவறு செய்தேன். மன்னிப்பு கேட்பதற்கு. நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் நான் மன்னிப்பு கேட்க தயார் (கூட்டத்தினர் மன்னிப்பு கேட்க வேண்டாம் என கோஷம் போட்டனர்). அப்பா-கட்சித் தலைவர் என்ற முறையில் கலைஞரிடம் ஏராளமான முறை மன்னிப்பு கேட்டுள்ளேன். ஆனால் எந்த தவறும் செய்யாமல் தற்போது எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

புதிய கட்சி இல்லை

இன்றைய கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப் போவதாக எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை. "கலைஞர் தி.மு.க." என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப் போவதாக போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள். அப்படி ஒரு திட்டம் இல்லை.

தி.மு.க. என்றாலே கலைஞர் தான். கலைஞரையும், தி.மு.க.வையும் காக்க வேண்டியது நமது லட்சியம். எனவே முடிவை நான் சொல்ல வேண்டியது இல்லை. உங்களை சந்தித்து கருத்து கேட்பது போல், தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களை கேட்டுத்தான் எந்த முடிவையும் அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ரித்திஷ் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் எம்.எல்.ராஜ், உதயக்குமார், இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேட்பாளர்கள்

கூட்டத்திற்கு பின் மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

கட்சிக்கு உழைத்தவர்களுக்கு சீட் தராமல், வேண்டியவர்களுக்கு எல்லம் சீட் தந்திருக்கிறார்கள். எனக்கு கூட வேண்டியவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சீட் வாங்கி தந்ததில்லை. வேலூரில் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு சீட் தரப்பட்டு உள்ளது. அங்கு துரைமுருகன் மகனுக்கு சீட் தரவில்லை என்று அந்த வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளது. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை.

ஜெயலலிதாவுக்கு பாராட்டு

ஜெயலலிதாவை ஒரு விஷயத்திற்காக நான் பாராட்டுகிறேன். அந்த கட்சியில் ஆண்டுக்கு ஒரு மாவட்ட செயலாளர் வந்து விடுகிறார். தி.மு.க. அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் மாற்றம் வரும் என்று கலைஞர் அறிவித்து இருக்கிறார். அவர் கூறியது போல், 35 வேட்பாளர்களையும் மாற்றினால் தான் தி.மு.க. வெற்றி பெற முடியும்.

இவ்வாறு அழகிரி கூறினார்.

category:

News Group Category:

சென்னையில் ஹோலி பண்டிகை வடநாட்டினர் வண்ணப்பொடிகளை தூவி கொண்டாட்டம்

Posted: 17 Mar 2014 01:00 PM PDT

சென்னை,

ஹோலி பண்டிகையையொட்டி சென்னை மாநகரில் வசிக்கும் வடநாட்டினர் வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி ஆடி, பாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

வசந்தகாலப்பண்டிகை

ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் வண்ணமயமான வசந்த காலப் பண்டிகையாகும். பனிகாலத்திற்கு விடையளித்து கோடைக்காலத்தை வரவேற்கும் விழாவாக ஹோலி கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை நேற்று முன்தினம் சென்னையில் வடமாநிலத்தினர் வசிக்கும் புரசைவாக்கம், வேப்பேரி, சவுகார்பேட்டை மற்றும் மத்திய சென்னை பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது.

கலர் பொடிகள்

நேற்று வேப்பேரி அகர்வால் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த ஹோலி பண்டிகை விழாவில் வடநாட்டைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் திரளாக கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கை, கால், முகம், தலை பகுதிகளில் வண்ண பொடிகளை தூவி, ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

ஹோலி பாடல்களை இசைக்கப்பட்டு நடன நிகழ்ச்சிகளும் நடந்தது.

இதுகுறித்து அகர்வால் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:–

கிருஷ்ண லீலைகள்

கிருஷ்ண பகவான் தன் குழந்தை பருவத்திலும், பால்ய பருவத்திலும் கோபியர்களுடன் விளையாடியது தான் இந்த ஹோலி பண்டிகை. இந்த நடன நிகழ்ச்சியில் பகவான் கிருஷ்ணரும் இடம் பெற்றிருப்பதாகவும் நம்பப்படுகிறது. இதில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்தும் பாடல்கள் பாடப்பட்டன. இந்த பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது வண்ண, வண்ண நீரை பீய்ச்சி ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடப்படுவது ஆகும்.

இந்தியாவில் வடமாநிலங்களில் ஹோலிப்பண்டிகை மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக வசந்த காலத்தில் காலநிலை மாறும் போது, விஷக்கிருமிகளால் நோய்கள் பரவுகின்றன. இதனால் இயற்கையான வண்ணம் நிறைந்த தூள்களை விளையாட்டாகத் தூக்கி எரிவதினால் சுற்றுப்புறபகுதி மருத்துவ முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வண்ணங்கள் ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம் மற்றும் பிற மருத்துவ மூலிகைகளினால் பாரம்பரிய முறையில் செய்யப்படுகின்றன.

இந்த வண்ணங்களை வசந்தம் – அரும்பும் மரங்களில் இருந்து பெறுகின்றனர். முன்னோர்கள் ஏற்படுத்திய மூலிகையை பயன்படுத்தி, அனைவரும் ஆனந்தமாக ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் ஜோகோவிச் பென்னட்டா சாம்பியன்

Posted: 17 Mar 2014 12:45 PM PDT

இன்டியன்வெல்ஸ்,

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின்ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச், இத்தாலி வீராங்கனை பென்னட்டா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

ஜோகோவிச் சாம்பியன்

அமெரிக்காவின் இன்டியன்வெல்ஸ் நகரில் பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் நோவக் ஜோகோவிச் (செர்பியா), 8-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள்.

2 மணி 12 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் 3-6, 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் 4 முறை சாம்பியனான (2004, 2005, 2006, 2012) பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

முதல் தோல்வி

இன்டியன்வெல்ஸ் இறுதிப்போட்டியில் பெடரர் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இது ஜோகோவிச் இந்த ஆண்டில் வென்ற முதல் பட்டமாகும். மொத்தத்தில் ஜோகோவிச்சுக்கு கிடைத்த 42-வது பட்டமாகும். பெடரருடன் 33-வது ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதிய ஜோகோவிச் பெற்ற 16-வது வெற்றி இதுவாகும்.

வெற்றி குறித்து ஜோகோவிச் கருத்து தெரிவிக்கையில், 'இது வியக்கதக்க வகையிலான கடினமான போட்டியாகும். பெடரர் சிறப்பாக விளையாடினார். பெடரருடன் விளையாடுவது எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்' என்றார்.

பென்னட்டா வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இத்தாலி வீராங்கனை பிளாவியா பென்னட்டா 6-2, 6-1 என்ற நேர்செட்டில் முழங்கால் காயத்துடன் ஆடிய உலகின் 3-ம் நிலை வீராங்கனை அக்னிஸ்கா ராட்வன்ஸ்காவை (போலந்து) எளிதில் சாய்த்து முதல்முறையாக இன்டியன்வெல்ஸ் பட்டத்தை கைப்பற்றினார். 25 வயதான பென்னட்டா மொத்தத்தில் வென்ற 15-வது பட்டம் இதுவாகும்.

தோல்விக்கு பின்னர் ராட்வன்ஸ்கா கூறுகையில், 'காயம் காரணமாக என்னால் வேகமாக ஓடி விளையாட முடியவில்லை. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடன் களம் கண்ட என்னால் வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த ஆட்டத்தில் பென்னட்டா சிறப்பாக விளையாடினார்' என்று தெரிவித்தார்.

image: 

category:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் அயர்லாந்து அணி திரில் வெற்றி கடைசி பந்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது

Posted: 17 Mar 2014 12:37 PM PDT

 சைலெட்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து அணி கடைசி பந்தில் திரில் வெற்றியை ருசித்தது.

உலக கோப்பை கிரிக்கெட்

ஐ.சி.சி. ஐந்தாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் நேரடியாக 'சூப்பர்-10' சுற்றில் (மார்ச் 21-ந் தேதி முதல்) விளையாட உள்ளன. 'சூப்பர்-10' சுற்றுக்கான எஞ்சிய இரு அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் 'சூப்பர்-10' சுற்றுக்கு முன்னேறும்.

3-வது லீக் ஆட்டம்

உலக கோப்பை போட்டியின் 2-வது நாளான நேற்று சைலெட்டில் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து-ஜிம்பாப்வே (பி பிரிவு) அணிகள் மோதின.

'டாஸ்' ஜெயித்த அயர்லாந்து அணி கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு, ஜிம்பாப்வே அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

ஜிம்பாப்வே 163 ரன்கள்

ஜிம்பாப்வே அணி வீரர்கள் அடித்து ஆடி வேகமாக ரன் சேர்த்தாலும், நிலைத்து நின்று விளையாட முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். கேப்டன் பிரன்டன் டெய்லர் அதிக நேரம் தாக்குப்பிடித்து ஆடினார். அவர் மட்டுமே அரை சதத்தை (46 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 59 ரன்கள்) கடந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. சிகும்புரா 22 ரன்னுடனும், மருமா 13 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். அயர்லாந்து அணி தரப்பில் டோக்ரெல், மெக்பிரைன் தலா 2 விக்கெட்டும், கசாக் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

நல்ல தொடக்கம்

பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு, பால் ஸ்டிர்லிங் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடியாக அடித்து ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

8.2 ஓவர்களில் அயர்லாந்து அணியின் ஸ்கோர் 80 ரன்னாக உயர்ந்த போது கேப்டன் போர்டர் பீல்டு 31 ரன்னில் (23 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) அவுட் ஆனார். அடுத்த சில ஓவர்களில் பால் ஸ்டிர்லிங் 34 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 10.3 ஓவர்களில் 100 ரன்னாக இருந்தது.

அயர்லாந்து 'திரில்' வெற்றி

வெற்றியை நோக்கி வேகமாக பயணித்த அயர்லாந்து அணி தொடக்க ஜோடி வீழ்ந்த பின்னர் சற்று தள்ளாடியது. அடுத்த 62 ரன்களை சேர்ப்பதற்குள் அயர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது. பன்யன்கரா வீசிய அந்த ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் தலா ஒரு ரன் வந்தது. அடுத்த 2 பந்துகளில் எட்ஜோய்ஸ் (22 ரன்), சோரென்சென் (0) ஆகியோர் ஆட்டம் இழந்தனர். கடைசி 2 பந்துகளில் தலா ஒரு ரன் கிடைத்தது.

இதனால் அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் திரில் வெற்றி கண்டது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பன்யன்கரா 4 விக்கெட்டும், சதரா, சீன் வில்லியம்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஸ்கோர் போர்டு

ஜிம்பாப்வே

ஹாமில்டன் மசகட்சா

(சி) போர்டர்பீல்டு (பி) மெக்பிரைன் 21

சிகந்தர் ராசா

(சி) சோரென்சென் (பி) கசாக் 10

பிரன்டன் டெய்லர்

(சி) எட் ஜோய்ஸ் (பி) டோக்ரெல் 59

சீன் வில்லியம்ஸ் (ஸ்டம்பிங்)

வில்சன் (பி) மெக்பிரைன் 16

சிபன்டா (சி) சோரென்சென்

(பி) டோக்ரெல் 16

சிகும்புரா (நாட்-அவுட்) 22

மருமா (நாட்-அவுட்) 13

எக்ஸ்டிரா 6

மொத்தம் (20 ஓவர்களில்

5 விக்கெட்டுக்கு) 163

விக்கெட் வீழ்ச்சி: 1-14, 2-56, 3-78, 4-111, 5-131.

பந்து வீச்சு விவரம்:

பால் ஸ்டிர்லிங் 4-0-24-0

கசாக் 4-0-53-1

சோரென்சென் 1-0-11-0

டோக்ரெல் 4-0-18-2

மெக்பிரைன் 4-0-26-2

கெவின் ஓபிரையன் 3-0-26-0

அயர்லாந்து

வில்லியம் போர்டர்பீல்டு

(சி)மருமா (பி) வில்லியம்ஸ் 31

பால் ஸ்டிர்லிங் (சி) சிகந்தர் ராசா

(பி) சதரா 60

எட் ஜோய்ஸ் (சி) பன்யன்கரா 22

ஆன்ட்ரூ பாய்டெர் (சி) சிகும்புரா

(பி) பன்யன்கரா 23

கேரி வில்சன் (சி) மசகட்சா

(பி) பன்யன்கரா 0

கெவின் ஓபிரையன்

(சி) வில்லியம்ஸ் (பி) பன்யன்கரா 17

ஸ்டூவர்ட் தாம்சன் (நாட்-அவுட்) 3

சோரென்சென் (ரன்-அவுட்) 0

கசாக் (நாட்-அவுட்) 0

எக்ஸ்டிரா 8

மொத்தம் (20 ஓவர்களில்

7 விக்கெட்டுக்கு) 164

விக்கெட் வீழ்ச்சி: 1-80, 2-100, 3-129, 4-129, 5-157, 6-162, 7-162.

பந்து வீச்சு விவரம்:

உத்சேயா 4-0-38-0

கமுன்கோஜி 2-0-17-0

சதரா 4-0-20-1

பன்யன்கரா 4-1-37-4

சீன் வில்லியம்ஸ் 4-0-27-1

மசகட்சா 2-0-20-0
 

category:

சின்னங்களை பொது இடங்களில் நிரந்தரமாக உருவாக்கும் கட்சிகளின் சின்னத்தை தேர்தல் நேரத்தில் மாற்றிவிடலாமா? தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

Posted: 17 Mar 2014 12:23 PM PDT

சென்னை,

சில அரசியல் கட்சிகள் பொது இடங்களில் கட்சி சின்னத்தை நிரந்தரமாக உருவாக்கிவிடுவதால், அந்த கட்சிகளின் சின்னத்தை தேர்தல் நேரத்தில் மாற்றிவிடலாமா? அதன் மூலம் இதுபோன்ற நடவடிக்கைகள் நின்றுவிடுமா? என தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருகிறது.

கட்சிகளின் சின்னங்கள்

ஒவ்வொரு முறையும் தேர்தலை நடத்தி முடிப்பதற்குள் இந்திய தேர்தல் கமிஷனுக்கு போதும், போதும் என்றாகிவிடுகிறது. தேர்தல் விதிமுறைகளை மீறுவதற்காக அரசியல் கட்சிகள் பின்பற்றும் மறைமுக வழிகளை அடைக்க தேர்தல் கமிஷன் கடும் பாடுபடுகிறது.

அரசியல் கட்சிகளின் தேர்தல் சின்னங்களும் தேர்தல் கமிஷனுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் சின்ன பிரச்சினைகள் ஏற்படுவதில், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.

யானையால் வந்த பிரச்சினை

அந்த வரிசையில் இந்தியாவின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சின்னம், பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னமாகும். இந்த கட்சி ஆட்சியில் இருந்தபோது பல இடங்களில் யானை சிலைகளை பிரமாண்டமான அளவில் செய்து வைத்தது. தேர்தல் நேரத்தில் இதுதொடர்பான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

ஒரு கட்டத்தில் அந்த யானை சிலைகளை தேர்தல் கமிஷன் மூடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்த சிலைகளை துணியால் மூடினாலும், அது யானை தான் என்பதை மறைக்க முடியவில்லை. மேலும் சிலைகளை மறைப்பதற்காக கூடுதல் செலவுகளையும் ஏற்க வேண்டிய நிலை எழுந்தது. யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழி மாறி, அது சிலையானாலும் ஆயிரம் பிரச்சினை என்பதை தேர்தல் கமிஷன் உணர்ந்தது.

இலையும், சூரியனும்

தமிழகத்தைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. ஆட்சியில் இரட்டை இலையும், தி.மு.க. ஆட்சியில் உதயசூரியனும் வழக்குகளில் சிக்கிய சின்னங்களாகும். தற்போது எம்.ஜி.ஆர். சமாதியின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள குதிரை சிலையின் இறக்கை, அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை ஞாபகப்படுத்துவதாக இருக்கிறது என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

அதோடு, அரசு ஸ்மால் பஸ்களில், இரட்டை இலையை, அ.தி.மு.க. அரசு வரைந்து வைத்து அரசு சொத்துகளில், அ.தி.மு.க.வின் சின்னத்தை பிரபலப்படுத்த முயற்சிக்கின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களில் கோர்ட்டு என்ன தீர்ப்பளிக்கப் போகிறது என்பதை தேர்தல் கமிஷன் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளது.

ஆலோசனை தொடங்கியது

அதே சமயத்தில் மற்றொரு கோணத்தில் இந்த சர்ச்சை குறித்து இந்திய தேர்தல் கமிஷன் ஆய்வு நடத்தி வருகிறது. தேர்தலில் வென்று, அதிகாரத்துக்கு வரும் கட்சிகள், தங்கள் கட்சி சின்னங்களை பிரதிபலிக்கும் வகையில், பிரமாண்டமான அளவில் பொது இடங்களில் அமைத்தால் தேர்தல் நேரத்தில் அவற்றை என்ன செய்வது? என்பது தான் ஆய்வின் முக்கிய நோக்கம்.

அந்த பிரமாண்ட அமைப்புகளை அப்படியே விட்டுவிடவும் முடியாது. ஏனென்றால், மற்ற கட்சிகள் சும்மா இருக்காது. இதனால் கோர்ட்டு, வழக்கு என்று தேவையற்ற காலவிரையம் ஏற்படும். ஆனாலும் இந்த மறைமுகமான விதிமீறல் நிகழ்வு, எதிர்காலத்தில் ஏற்படாதவாறு தடுப்பதற்கான ஆலோசனைகளை, இந்திய தேர்தல் கமிஷனுக்கு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

அதிரடி ஆலோசனை

அதில் ஒன்று, ஒரு கட்சி தனது சின்னத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொது இடங்களில் உருவாக்கினால், தேர்தல் நேரத்தில் அந்தக் கட்சிக்கு வேறு ஒரு பொதுவான சின்னத்தை வழங்கலாம் என்பதாகும். இந்த அதிரடி ஆலோசனையை, தேர்தல் நடத்தை விதிமுறையில் கொண்டு வந்துவிட்டால், பொது இடங்களில் அதுபோன்ற அநாவசிய பிரச்சினைகள் உருவாகாது என்றும் ஆலோசனை வழங்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

category:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு: 2,342 கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு ஆட்களை தேர்ந்து எடுக்க தேர்வு ஏப்ரல் 15–ந்தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்

Posted: 17 Mar 2014 12:19 PM PDT

சென்னை,

2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு ஆட்களை தேர்வு நடத்தி தேர்ந்து எடுக்க இருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள்

தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 2 ஆயிரத்து 342 காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பொறுப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்துள்ளது. இதையொட்டி ஆட்களை தேர்வு செய்வது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்வு செய்ய எழுத்து தேர்வு ஜூன் மாதம் 14–ந்தேதி நடைபெற உள்ளது. தேர்வு எழுத விரும்புவோர் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 1–7–2014 அன்று 21 வயது முடிந்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதள முகவரிகளான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net ல் விண்ணப்பிக்கவேண்டும்.

ஏப்ரல் 15–ந்தேதி கடைசி நாள்

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15–ந்தேதி கடைசி நாளாகும். அன்று இரவு 11–50 மணிவரை விண்ணப்பிக்கலாம். பார்வையற்றவர்கள், காதுகேட்காதவர்கள் விண்ணப்பிக்க தகுதி அற்றவர்கள் ஆவார்கள். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களாக பணியில் சேர்ந்தவர்கள் அவர்கள் ஓய்வு பெறும் வரை கிராம நிர்வாக அலுவலராகவே நீடிக்க வேண்டும்.

இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

category:

News Group Category:

பறக்கும்படையின் சோதனை கெடுபிடியில் தேர்தல் தலைமையக அலுவலரும் சிக்கினார்

Posted: 17 Mar 2014 12:15 PM PDT

சென்னை,

சோதனை என்ற பெயரில் பறக்கும் படையின் அதிரடி கெடுபிடியில் தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலக ஊழியரும் சிக்கினார்

பொறியில் சிக்கவில்லை

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் அரசியல் கட்சிகள் காட்டும் மும்முரத்தைவிட, அதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் காட்டும் கெடுபிடி அதிகமாக உள்ளது. தேர்தல் கமிஷனின் கெடுபிடி, வழக்கமாக அதிக பணப்புழக்கத்தில் இருக்கும் மக்களை அசைத்துவிட்டது.

குறிப்பாக பெரு வணிகர்கள், மொத்த வியாபாரிகள், தொழில் அதிபர்கள், தங்க, வைர வியாபாரிகள் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஆனால் யாருக்கென்று பொறி வைக்கப்பட்டதோ, இதுவரை அவர்களில் யாரும் (அரசியல்வாதிகள்) சிக்கவில்லை.

எத்தனை சோதனை?

தமிழகம் முழுவதும் பொதுவாக கார்களில் செல்லும் நபர்கள், தேர்தல் கமிஷனின் பறக்கும்படை சோதனைக்கு தப்ப முடியவில்லை. எங்காவது, குறிப்பாக மாவட்ட எல்லைப்பகுதியில் கார் நிறுத்தப்பட்டு விடுகிறது. ஒரு சோதனையோடு நின்றுவிடுமா என்றால், அதுவும் கிடையாது. ஒரு தொலைதூர கார் பயணத்தில் பல சோதனைகளை அனைவருமே கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இப்படித்தான், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் சென்ற காரும் பிடிபட்டது. சோதனை தொடர்பாக தினமும் பல புகார்களை போனில் வாங்கும் அவர் சென்ற கார் சிக்கினாலும், அவர் தன்னை யார் என்று அடையாளம் காட்டாமல் சோதனை முடிந்த பின்னரே சென்றார்.

பழைய நகைக்கு ரசீது எங்கே?

அதுமட்டுமல்ல, தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் பணியாற்றும் மற்றொரு ஊழியரின் உறவினர் காரும் சோதனையில் சிக்கியது. வீட்டில் நகைகளை வைத்திருந்தால் கொள்ளை போய்விடும் என்று பயந்து, அவற்றை தன்னுடன் அவர் எடுத்துச்சென்றுள்ளார். சோதனையில் அந்த நகைகள் பிடிபட்டன. அதற்கான ரசீதுகளை பறக்கும் படையினர் கேட்டுள்ளனர். பழைய நகைகளுக்கான ரசீதுக்கு எங்கே போய் பெற முடியும்? என்பதால், அந்த நகைகளை பறக்கும் படையிடம் கொடுத்துவிட்டு, தற்போது அவற்றை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

category:

குறிப்பிட்ட சட்டப்பிரிவில் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டவர்களை வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கவேண்டும் தலைமைத்தேர்தல் அதிகாரியிடம் வேண்டுகோள்

Posted: 17 Mar 2014 12:10 PM PDT

சென்னை,

இந்திய தண்டனை சட்டத்தின் குறிப்பிட்ட சட்டப்பிரிவில் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டவர்களை வாக்காளர் பெயர்ப்பட்டியலில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்க வேண்டும் என்று தலைமைத்தேர்தல் அதிகாரியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

200 பேருக்கு தண்டனை

இதுகுறித்து சமச்சீர் வளர்ச்சிக்கான கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் மு.லோகநாதன் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழகத்தில் 2011–ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பலர் பணம் மற்றும் பொருட்களை கொடுத்தனர். இதுதொடர்பாக பலர் மீது, இந்திய தண்டனை சட்டம் 171இ, 171 எப் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளுக்கான குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் போலீசார் தாக்கல் செய்தனர். அவர்களில் சுமார் 200 பேருக்கு தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 250 பேர் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

பெயரை நீக்கவேண்டும்

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8 மற்றும் 11ஏ(1) ஆகிய பிரிவுகளின்படி, இந்திய தண்டனை சட்டம் 171இ, 171எப் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயரை, தண்டனை விதிக்கப்பட்ட தேதியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு, வாக்களிக்கும் உரிமையை இழக்க செய்யவேண்டும். அதற்கேற்ற வகையில் வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயரை நீக்க வேண்டும்.

ஆனால் அந்த சட்ட பிரிவுகளின் கீழ் சுமார் 200 பேர் தண்டிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவில்லை. எனவே தண்டிக்கப்பட்டோரின் பெயர் பட்டியலை அனைத்து மாவட்ட கலெக்டருக்கும் அனுப்பி வைத்து, அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

category:

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகள் பாழடைந்த கிணற்றில் தூர்வாரும் போது கிடைத்தன

Posted: 17 Mar 2014 12:02 PM PDT

களியக்காவிளை,

பாழடைந்த கிணற்றை தூர் வாரிய போது, அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகள் கிடைத்தன.

கிணற்றில் கிடந்த சாமி சிலைகள்

குமரி மாவட்டம் கேரள எல்லையில் உள்ள நகரம் களியக்காவிளை. இதன் அருகே கேரள மாநிலம் மலையின்கீழ் மணியவிளை பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது கிணற்றை தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.

அப்போது, கிணற்றின் உள்ளே 2 சிலைகள் கிடப்பதை அவர்கள் கண்டு வெளியே எடுத்து வந்தனர்.

அது கணபதி, முருகன் சிலைகள் என்பது தெரிய வந்தன. முருகன் சிலை 16 கிலோ எடையிலும், கணபதி சிலை 14 கிலோ எடையிலும் காணப்பட்டன.

பல கோடி மதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த மலையின்கீழ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிலைகளை கைப்பற்றி காட்டாக்கடை கோர்ட்டில் ஒப்படைத்தனர். மேலும், அந்த சிலைகளை பரிசோதனை செய்த போது அவை பஞ்சலோக சிலைகள் என்பது தெரிய வந்தது. இந்த சிலைகள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு உடையவை என கூறப்படுகிறது.

இந்த சிலைகள் தமிழக சிற்பக்கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவை பல நூற்றாண்டு காலம் பழமையானவை என தெரிகிறது.
 

பங்கு வர்த்தகத்தின் எழுச்சி தொடருமா? வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகள் குறித்து ஆய்வாளர்கள் மதிப்பீடு

Posted: 17 Mar 2014 10:45 AM PDT

இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள எழுச்சியால் கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 22,000 புள்ளிகளை நெருங்கியது பங்கு வர்த்தகத்தின் இந்த எழுச்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்தும், எந்தெந்த துறைகளுக்கு வர்த்தக வாய்ப்பு உருவாகும் என்பது குறித்தும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எழுச்சிக்கான காரணங்கள்

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து கணிப்பால் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்களின் குறிப்பாக அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ரிசர்வ் வங்கி இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் சிறப்பு பண அளிப்பு நடவடிக்கையை குறைத்தது. இதனையடுத்து வளர்ந்து வரும் நாடுகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்தது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் குறைந்துள்ளது. இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

உள்நாட்டு தேவைப்பாடு

குவாண்டம் பரஸ்பர நிதி நிறுவனத்தின் தலைவர் (பங்கு சார்ந்த திட்டங்கள்) அதுல்குமார் இது குறித்து கூறுகையில், ''இந்திய பொருளாதாரம் உள்நாட்டு தேவைப்பாட்டை இலக்காகக் கொண்டது. இந்திய நிறுவனங்களின் பங்குகளில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு அதிக ஆதாயம் கிடைக்கிறது. நடப்பு கணக்கு பற்றாக்குறையையும் இந்தியா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது'' என்று தெரிவித்தார்.

சென்ற நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு 4.8 சதவீதமாக உயர்ந்து இருந்தது. தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் இந்த நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடைக்கால பட்ஜெட்டில் நடப்பு நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறையை 4.6 சதவீதமாக வைத்து இருக்க முடியும் என நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். சில்லறை விலை மற்றும் மொத்த விலை பணவீக்கமும் குறைந்து வந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இடர்ப்பாடுகள்

பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கும் பாராளுமன்றம் ஏற்பட்டால் பங்கு வியாபாரத்தில் பாதிப்பு ஏற்படும். எனவே, தேர்தல் கருத்து கணிப்பின் அடிப்படையில் பங்குகளில் முதலீடு மேற்கொள்ளக்கூடாது என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

அமெரிக்க ரிசர்வ் வங்கி சிறப்பு பண அளிப்பு நடவடிக்கையை மேலும் குறைத்தால் பாதிப்பு ஏற்படும். எச்.எஸ்.பீ.சி. மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி துஷார் பிரதான் இது குறித்து கூறுகையில், ''அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் வளர்ந்து வரும் நாடுகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறையும். இந்தியாவிற்கும் இந்த நிலை ஏற்படலாம்'' என்று தெரிவித்தார்.

முதலீட்டாளர்கள் என்ன செய்வது?

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் நிலையில் பங்கு வியாபாரத்தில் எழுச்சி ஏற்படும். இந்த எழுச்சி ஒரு சில தினங்களில் மட்டுமே ஏற்படும். எனவே, பங்குகளில் முதலீடு செய்யாமல் ஒதுங்கி இருந்தால் லாபம் ஈட்டும் வாய்ப்பை தவறவிடும் நிலை ஏற்படலாம்.

அதேசமயம், நன்கு ஆராய்ந்து சில துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளில் குறிப்பிட்ட அளவிற்கு முதலீடு செய்யலாம். லார்ஜ்கேப், ஐ.டி. மற்றும் மருந்து துறையை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டு நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பத்திற்காக அதிக செலவினங்களை மேற்கொள்ள உள்ளன. ஐரோப்பிய நாட்டு நிறுவனங்கள் செலவினத்தை குறைக்கும் வகையில் அவற்றின் ஐ.டி. சார்ந்த பணிகளை இந்திய நிறுவனங்கள் வாயிலாக நிறைவேற்றம். எனவே, ஐ.டி. நிறுவனங்களுக்கு வளர்ச்சி வாய்ப்பு நன்றாக இருக்கும். எனினும், அமெரிக்க குடியுரிமை மசோதா இத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஒரு சவாலாக இருக்கும்.

மருந்து துறை

வளர்ச்சி அடைந்த நாடுகள் மருத்துவ செலவினத்தை குறைக்கும் வகையில் ஜெனரிக் மருந்துகள் உற்பத்தியில் கவனம் செலுத்தும். மேலும், பல மருந்து நிறுவனங்களின் காப்புரிமை காலம் முடிவடைய உள்ளது. இது, இந்திய மருந்து நிறுவனங்களுக்கு சாதகமான அம்சமாகும்.

நுகர்பொருள் துறை

நுகர்பொருள் துறை குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இத்துறையைச் சேர்ந்த ஐ.டி.சி., மாரிக்கோ நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டிற்கு ஏற்றவை என்று கோட்டக் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருளாதார மந்தநிலை, கடனிற்கான வட்டி விகிதம் அதிகரிப்பால் அடுத்த ஆறு மாதங்கள் வரை நுகர்வோர் சாதன துறை நிறுவனங்களில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சியை பொறுத்து வங்கித்துறை மற்றும் மோட்டார் வாகனத் துறையில் முன்னேற்றம் ஏற்படும். எண்ணெய் மற்றும் எரிவாயு துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு வளர்ச்சி வாய்ப்பு உருவாகும் என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™