Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றியதாக 6 பேர் மீது வழக்கு

Posted: 08 Feb 2014 03:10 PM PST

அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் ஜெயந்தி (வயது 22). ஜெயந்திக்கும் அதே ஊரை சேர்ந்த ராமசந்திரன் என்பவ ருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனால் இருவரும் நெருங்கி பழகினர். இதனை தொடர்ந்து ஜெயந்தி கர்ப்பமானார்.

இதனை சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று  கருகலைப்பு செய்து விட்டார். மீண்டும் திருமணம் செய்ய வற்புறுத்தியபோது ராமசந்திரன், அவரது தம்பி கொளஞ்சி, தாய் வள்ளியம்மை, தங்கை லட்சுமி, மற்றும் உறவினர்கள் முருகேசன், செல்வராஜ் ஆகியோர் ஜெயந்தியை மிரட்டிய தாக தெரிகிறது. இது பற்றி ஜெயந்தி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில்  போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து ராமசந்திரன் உள்பட 6 பேர்களை தேடி வருகிறார்.
 

3-வது அணி தோல்வி அடைவது உறுதி: வெங்கையா நாயுடு பேச்சு

Posted: 08 Feb 2014 03:10 PM PST

பெங்களூர்,

பாராளுமன்ற தேர்தலில் 3–வது அணி தோல்வி அடைவது உறுதி என்று பா.ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

பா.ஜனதா சார்பில் பெங்களூர் வடக்கு தொகுதி மாநாடு மல்லேசுவரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்து அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில் கூறியதாவது:–

தோல்வி உறுதி

3–வது அணி சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றார்போல் கூட்டணி அமைத்துக்கொள்கிறது. இது ஒரு தோல்வி அடையும் முயற்சி ஆகும். அதில் உள்ள தலைவர்கள் அனைவரும் பிரதமர் பதவியை விரும்புபவர்கள். இந்த அணிக்கு எந்த இலக்கும் கிடையாது.

இதனால் 3–வது அணியை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். பாராளுமன்ற தேர்தலில் அந்த அணி தோல்வி அடைவது உறுதி.

ஊழல் அதிகரித்துவிட்டது

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது. எங்கு பார்த்தாலும் ஊழல் தாண்டவமாடுகிறது. ஆகாயம், பூமி, பாதாளம் என்று எதையும் விட்டு வைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் ஊழல் செய்துள்ளனர்.

மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. நரேந்திரமோடி அலை வீசுகிறது. அவர் உறுதியான தலைவர் மட்டுமல்ல, நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய திறமை படைத்தவர். அனைத்துதரப்பு மக்களின் மேம்பாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படக்கூடியவர். அதனால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 22 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறும். நரேந்திரமோடி பிரதமர் ஆவது உறுதி.

ஓய்வு வேண்டாம்

தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். நரேந்திரமோடியின் ஆட்சி திறமை குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். தினசரி குறைந்தபட்சம் 10 முதல் 15 மணி நேரம் களப்பணி ஆற்ற வேண்டும். அடுத்து வரும் 55 நாட்கள் எந்தவித ஓய்வும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஒவ்வொரு தொண்டரும் தினமும் 100 பேரை சந்தித்து பேச வேண்டும். அந்த 100 பேரை பா.ஜனதாவுக்கு ஓட்டுப்போட வைக்க வேண்டும். 100 குடும்பங்களை சந்திக்க வேண்டும். 100 குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்ப வேண்டும்.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

மீனாட்சி லெகி பேச்சு

பா.ஜனதா தேசிய செய்தித்தொடர்பாளர் மீனாட்சி லெகி பேசுகையில், "இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தேசபக்தர்கள். ஆனால் அவர்களை தவறாக பயன்படுத்தி வரும் வெளிநாட்டு சக்திகளை தடுப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. அதனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை தூக்கி எறிய வேண்டும்" என்றார்.

இந்த மாநாட்டில் டெல்லி மாநில சட்டமன்ற பா.ஜனதா குழுத் தலைவர் ஹர்சவர்தன், முன்னாள் தணை முதல்–மந்திரி அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

category:

News Group Category:

அரியலூர் மாவட்டத்தில் 1,178 பயனாளிகளுக்கு தாலிக்கு 4¾ கிலோ தங்கம் கலெக்டர் தகவல்

Posted: 08 Feb 2014 03:06 PM PST

அரியலூர் மாவட்டத்தில் 1,178 பயனாளிகளுக்கு தாலிக்கு 4 கிலோ 712 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சரவண வேல்ராஜ் தெரிவித்தார்.

தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

அரியலூர் அன்னலெட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் சமூக நலத் துறையின் சார்பில் ஏழை, எளிய பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு  கலெக்டர் சரவண வேல்ராஜ் தலைமை தாங்கி னார்.  துரை.மணிவேல் எம்.எல்.ஏ   முன்னிலை  வகித் தார்.

4¾ கிலோ தங்கம்

விழாவில் 1,178 பயனாளி களுக்கு தாலிக்கு தலா 4 கிராம் வீதம் 4 கிலோ  712 கிராம் தங்கமும், திருமண நிதியுதவி யாக ரூ.3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம்  மதிப்பி லான காசோலைகளையும் வழங்கி கலெக்டர் சரவண வேல்ராஜ் பேசியதாவது:–

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை தமிழக முதல்–அமைச்சரின் ஐந்து வகையான திருமண நிதியுதவித்திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 420 பயனாளிகளுக்கு ரூ.19 கோடியே 49 லட்சம் வழங்கப் பட்டுள்ளது என்று கூறினார்.

இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித்தலைவர் தன லெட்சுமி, ஒன்றியக் குழுப் பெருந்தலைவர்கள் செல்வ ராஜ் (செந்துறை), சுதா (தா.பழூர்), மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் அன்பழகன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, வட்டாட்சியர் முருகன், கண்காணிப்பாளர் பரமசிவம் மற்றும் அரசு அலு வலர்கள் பலர் கலந்து கொண் டனர்.

நாடாளும் மக்கள் கட்சி 10 தொகுதியில் போட்டி தேனியில் போட்டியிடுவதாக நடிகர் கார்த்திக் அறிவிப்பு

Posted: 08 Feb 2014 03:00 PM PST

தேனி

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வருகிற தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயர் மாற்றத்துடன் தமிழகத்தில் 10 தொகுதிகளில் களம் இறங்குகிறது. கட்சியின் நிறுவனர் நடிகர் கார்த்திக் தேனியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

கார்த்திக் பேட்டி

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் மாநில தலைவர் எஸ்.சவுந்தரபாண்டியன் தேனியில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் பெயர் நாடாளும் மக்கள் கட்சி என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக கட்சியின் நிறுவனரான நடிகர் கார்த்திக் நிருபர்களுக்கு செல்போன் மூலம் பேட்டி அளிக்க உள்ளதாக கூறினார்.

இதையடுத்து கட்சியின் நிறுவனர் நடிகர் கார்த்திக் சென்னையில் இருந்து செல்போன் மூலம் நிருபர்களிடம் பேசினார். அவரது பேச்சு செல்போனில் உள்ள 'லவுட் ஸ்பீக்கர்' மூலம் நிருபர்களுக்கு கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது நடிகர் கார்த்திக் கூறியதாவது:–

சில நடைமுறை பிரச்சினை காரணமாக அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் பெயர் நாடாளும் மக்கள் கட்சி என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தேனியில் இம்மாதம் இறுதியில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். மார்ச் (அடுத்த மா£ம்) 2–ந்தேதி ராஜபாளையத்தில் மக்களவை தேர்தல் ஆயத்த கூட்டம், மனித உரிமை எழுச்சி சந்திப்பு கூட்டம் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் மனித உரிமை மறுப்பு, மனித உரிமை பறிப்பு குறித்தும், இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

தேனி தொகுதியில் கார்த்திக் போட்டி

வருகிற பாராளுமன்ற தேர்தலின்போது நாடாளும் மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் மத்திய சென்னை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். தேர்தல் கூட்டணி அமைவதை பொறுத்து போட்டியிடும் தொகுதிகள் மாற்றம் செய்யப்படலாம். தேனி பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன. எங்கள் கட்சிக்கு அனைத்து சாதி, சமுதாய மக்களின் ஆதரவும் உள்ளது.

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம். இந்த பாராளுமன்ற தேர்தல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். நிலையான இந்தியாவை உருவாக்கும் லட்சியம் கொண்ட கட்சியுடன் கூட்டணி அமைப்போம்.

இவ்வாறு கார்த்திக் கூறினார்.

பேட்டியின் போது மாநில பொறுப்பாளர் ரமேஷ், மாவட்ட நிர்வாகி வினோத்கண்ணன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
 

category:

News Group Category:

பணகுடி அருகே முயல்வேட்டையாடிய 3 பேர் கைது

Posted: 08 Feb 2014 02:29 PM PST

ஆரல்வாய்மொழி,

பணகுடி அருகே முயல்வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

முயல்வேட்டை

பூதப்பாண்டி வனசரகத்துக்கு உட்பட்ட பணகுடி சிவகாமிபுரம் பகுதியில் முயல்வேட்டையாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. வனவர் ராஜகோபால், வனகாப்பாளர்கள் அசோக், ராஜன், வேட்டை தடுப்பு காவலர் மாசனமுத்து ஆகியோர் அப்பகுதிக்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது அங்கு நாய் மற்றும் கண்ணிகளுடன் 4 பேர் முயல்வேட்டையாடிக்கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் மடக்கினர். அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

யார்- யார்?

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1.செல்லப்பா(வயது 53), சிவகாமிபுரம், பணகுடி.

2.சேகர்(45), சிவகாமிபுரம், பணகுடி.

3.ராஜன்ஸ் (28), பணகுடி.

தப்பி ஓடியவர் பெயர் செல்வம்(25), பணகுடி தர்மாபுரத்தை சேர்ந்தவர். இவரை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.

கைதான 3 பேரும் ஆரல்வாய்மொழியில் உள்ள வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டனர். 3 பேருக்கும், மாவட்ட வனஅலுவலர் ரிட்டோ சிரியாக் மொத்தம் ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்தார்.

மிளாவேட்டை

கடந்த 15-ந் தேதி மிளா வேட்டையாடியபோது வனத்துறையினரிடம் சிக்காமல் தப்பி ஓடிய சிவகாமிபுரம் லிங்கம்(49), கண்ணன்(32) ஆகிய 2 பேர் ஆரல்வாய்மொழி வனசரக அலுவலகத்தில் சரண் அடைந்தனர். 2 பேருக்கும் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் அமைச்சர் ரமணா பேச்சு

Posted: 08 Feb 2014 02:06 PM PST

தூத்துக்குடி,

பொதுமக்கள் கொடுக் கும் மனுக்களுக்கு அதிகாரிகள் கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா கூறினார்.

ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று காலை நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 12 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குறைகள் இல்லாமல்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கு இணங்க அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் துறையாக வருவாய்த்துறை இருக்கிறது. இந்த பகுதியில் மழை குறைவாக இருக்கிறது. கோடைகாலத்தை சமாளித்து சிறப்பாக பணியாற்றி பொதுமக்களிடம் இருந்து குறைகள் வராதவாறு மக்கள் பாராட்டும் அளவுக்கு பணிபுரிய வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 700 மாணவர்களுக்கு கல்விக் கடன் பெற்று கொடுத்து உள்ளனர். பல்வேறு துறைகளில் சிறப்பான முறையில் முன்னெடுத்து செயல்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாட்டில் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது. மழை குறைவாக பெற்ற மாவட்டங்களில் திருப்பூருக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.

நல்ல தீர்வு

பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தகுந்த பதில் கலெக்டர் அலுவலகத்தில் கிடைக்கிறது. அதே போன்று உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களிலும் மனுக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். முதல்- அமைச்சர் புதிய வழிமுறைகளை கொண்டு வருகிறார். ராமநாதபுரத்தில் மனுக்களை கண்காணிக்கும் அமைப்பு நிறுவப்பட்டு உள்ளது. இதன் மூலம் தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகங்களில் உள்ள மனுக்களின் நிலையையும் அறிய முடியும். அதனை தூத்துக்குடி மாவட்டத்திலும் செயல்படுத்தலாம்.

அம்மா திட்ட மனு, விரைவு பட்டா மனு, தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரிடம் மனுக்கள் இருந்தாலும், மனு கொடுத்தவர்களுக்கு கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும். இதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இதனால் மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும்.

கடந்த 2011-ம் ஆண்டு முதியோர் உதவித்தொகை ரூ.1,200 கோடி அளவில்தான் வழங்கப்பட்டது. தற்போது ரூ.4 ஆயிரம் 200 கோடியாக உயர்த்தப்பட்டு சுமார் 37 லட்சம் எளிய மக்கள் மாதந்தோறும் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகிறார்கள். கிராம நிர்வாக பணிகள் வேகமாகவும், விரைவில் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு 7 ஆயிரத்து 787 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.22 கோடியே 48 லட்சம் லேப்டாப் வழங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் 2 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 425 கிராமங்களில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் அம்மா திட்டம் மூலம் முதல் சுற்றில் 93 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு 50 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இரண்டாவது சுற்றில் 15 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு 10 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ரமணா பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.த.செல்லப்பாண்டியன் (தூத்துக்குடி), செ.ராஜூ (கோவில்பட்டி), ஜி.வி.மார்கண்டேயன் (விளாத்திகுளம்), சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநர் மலர்விழி, மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி, மேயர் பி.சேவியர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தெய்வேந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் உள்ள பொதுசேவை மையத்தை அமைச்சர் பி.வி.ரமணா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கம்ப்யூட்டர் சான்றிதழை பயனாளிகளுக்கு வழங்கினார்.

திருச்செந்தூர் அருகே புதுப்பெண் கழுத்தை அறுத்து கொடூரக்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை

Posted: 08 Feb 2014 01:54 PM PST

திருச்செந்தூர்,

புதுப்பெண் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கட்டிட தொழிலாளி

தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர், சுந்தர்ராஜன். அவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 25). கட்டிட தொழிலாளி. இவருக்கும் கோவில்பட்டி குருமலை மேல தெருவைச் சேர்ந்த மாரீசுவரன் மகள் அமுதா (19) என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 6-ந் தேதி திருமணம் நடந்தது. இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காலையில் மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் மதியம் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மாலை 6.30 மணி அளவில் 2 பேரும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கடத்தல்

குலசேகரன்பட்டினம்- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ஆலந்தலை அருகே வந்தபோது, அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் திடீரென்று கார்த்திகேயன் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். இதை சற்றும் எதிர்பாராத கார்த்திக்கேயன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அதில் இருந்த 4 பேரும் கார்த்திக்கேயனை தாக்கி விட்டு, அமுதாவை மட்டும் கடத்திச் சென்றனர்.

இதுகுறித்து கார்த்திகேயன் நேற்று முன்தினம் மாலையில் குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது தன்னுடைய மனைவியை அடையாளம் தெரியாத 4 பேர் கடத்தி சென்றதாக தெரிவித்து இருந்தார்.

கழுத்தை அறுத்துக் கொலை

இதற்கிடையே நேற்று காலையில் திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் மெயின் ரோட்டில் ஆலந்தலை- கல்லாமொழி இடையே சாலையோரத்தில் அமுதா கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவல் அறிந்ததும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மா.துரை, திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த அமுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவரிடம் விசாரணை

இது குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகி 2 மாதங்கள் மட்டுமே ஆகிறது. இதனால் திருச்செந்தூர் உதவி கலெக்டர் மு.தமிழ்ராஜன் நேரடி விசாரணை நடத்துகிறார்.

இதற்கிடையே அமுதாவின் தாயார் மல்லிகா (39) போலீசாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், தன்னுடைய மகள் அமுதாவுக்கும், கார்த்திகேயனுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு கார்த்திகேயன் சரியாக வேலைக்கு செல்வதில்லை. மது குடித்து விட்டு வந்து அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்வார். இதனால் அவர்களுக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. எனவே கார்த்திக்கேயன், என்னுடைய மகளை, கோவிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி கொலை செய்து விட்டார் என்று கூறியுள்ளார்.
 

2,806 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் அமைச்சர்கள் செந்தூர் பாண்டியன், பி.ரமணா வழங்கினார்கள்

Posted: 08 Feb 2014 01:30 PM PST

நெல்லில் நேற்று நடந்த விழாவில் 2,806 ஏழை பெண்களுக்கு தாலிக்கும் தங்கத்தை அமைச்சர்கள் செந்தூர் பாண்டியன், வி.ரமணா ஆகியோர் வழங்கினார்கள்

தாலிக்கு தங்கம்

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் தமிழக முதல்–அமைச்சரின் சிறப்பு திட்டமான ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகையுடன், தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

விழாவுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் ஏழை பெண்களுக்கு உதவி தொகை மற்றும் 4 கிராம் தங்கத்தை வழங்கினார்கள்.

பல்வேறு திட்டங்கள்

விழாவில், அமைச்சர் செந்தூர் பாண்டியன் பேசும் போது, "தமிழ்நாட்டில் வாழும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தவும், பொருளாதாரம் மற்றும் கல்வியில் உயர்ந்த நிலையினை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முதல்–அமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சமூக நலத்துறையின் மூலம் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக பட்டம் மற்றும் பட்டயம் படித்த பெண்களுக்கு தலா 4 கிராம் தங்கம் ரூ.50 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பெண்கள் பயன்படுத்தி கொண்டு, கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

தொலைநோக்கு திட்டங்கள்

விழாவில் அமைச்சர் பி.வி.ரமணா பேசும் போது, "முதல்–அமைச்சர் தமிழகத்தை அனைத்து வகையிலும் முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எண்ணற்ற தொலை நோக்குத் திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி வருகிறார். சமூக நலத்துறையினை மேம்படுத்திடும் வகையில் ஏழை, எளிய பெண்களின் நலனுக்காக ரூ.43 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கல்வித்துறைக்கு ரூ.45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். முதல்–அமைச்சரின் இந்த உயரிய நோக்கத்தை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

எம்.பி.க்கள்– எம்.எல்.ஏ.க்கள்

விழாவில் மாநில சமூக நலத்துறை செயலாளர் மலர்விழி, தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத் தலைவர் ஆர்.முருகையா பாண்யடின், எம்.பி.க்கள் எஸ்.முத்துக்கருப்பன், பி.மனோஜ்பாண்டியன், விஜிலா சத்யானந்த், நெல்லை மேயர் (பொறுப்பு) கணேசன், எம்.எல்.ஏ.க்கள் நயினார் நகேந்திரன், முத்துச்செல்வி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயண பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

image: 

பாளையங்கோட்டை அருகே கார் கவிழ்ந்து கலைகுழுவைச் சேர்ந்த பெண் பலி 11 பேர் படுகாயம்

Posted: 08 Feb 2014 01:25 PM PST

நெல்லை,

பாளையங்கோட்டை அருகே கார் கவிழ்ந்து கலைக்குழுவைச் சேர்ந்த பெண் பலியானார். காயம் அடைந்த 11 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கலைக்குழு

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து ஒரு கலைக்குழுவினர் நேற்று கார் மூலம் மதுரை மேலூருக்கு புறப்பட்டு சென்றனர். காரை மேல்பாறையைச் சேர்ந்த தாமஸ் மகன் புஷ்பராஜ் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார்.

பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி மலை அருகே கார் நேற்று மாலை வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்சு மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பெண் பலி

காயம் அடைந்த டிரைவர் புஷ்பராஜ், ஜானி (32), அவருடைய மனைவி சித்ரா (26), ராஜேஷ் (28), பெனு (32), பிரேமா (32), பிரவீன் (21), ஆதிரா (19), கிருஷ்ணஜீத் (19), தீபா (20), லிட்டில் (25), அபி (14) ஆகிய 12 பேர் அங்கு சிகிச்சை பெற்றனர்.

இதில் சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

image: 

முதல்–அமைச்சர் பிறந்தநாள் விழா: 6,100 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Posted: 08 Feb 2014 01:13 PM PST

நெல்லை,

முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 6,100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயல்வீரர்கள் கூட்டம்

நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள ரோஸ் மகாலில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் தலைமை தாங்கினார்.

இணைச் செயலாளர் வசந்தி முருகேசன், பொருளாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.முத்துக்கருப்பன் வரவேற்று பேசினார்.

மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

நலத்திட்ட உதவிகள்

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 66–வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளில் சிறப்பு வழிபாடு நடத்துவது. அன்னதானம், ரத்ததானம் வழங்கியும், பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்கள் வழங்க வேண்டும்.

முதல்–அமைச்சர் பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட 6,100 பேருக்கு நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் சுமார் ரூ.52 லட்சம் செலவில் வழங்கப்படும். நலத்திட்டம் வழங்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கழக தோழர்கள் இரவு, பகலாக பணியாற்ற வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகளை உயர்த்திய மத்திய அரசை, இந்த கூட்டம் கண்டிக்கிறது. 295 தமிழக மீனவர்களை சிறையில் இருந்து விடுவித்தும், அவர்களது உடமைகளை திரும்பப் பெற்று தந்த முதல்–அமைச்சருக்கு இக் கூட்டம் நன்றியை தெரிவிக்கிறது.

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எம்.பி.க்கள்– எம்.எல்.ஏ.க்கள்

கூட்டத்தில், தமிழக வீட்டு வசதிவாரிய தலைவர் ஆர்.முருகையா பாண்டியன், எம்.பி.க்கள் பி.மனோஜ் பாண்டியன், விஜிலா சத்யானந்த், எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், முத்துச்செல்வி, நெல்லை மேயர் (பொறுப்பு) கணேசன், மண்டல தலைவர்கள் எம்.சி.ராஜன், ஹைதர் அலி, முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான், ஜெயலலிதா பேரவை செயலாளர் சுதா பரமசிவன், சிறுபான்மை செயலாளர் மகபூப்ஜான், ஆவின் தலைவர் ரமேஷ், மானூர் யூனியன் தலைவர் கல்லூர் வேலாயுதம், சங்கரன்கோவில் நகர சபை தலைவர் கண்ணன், இளைஞர், இளம் பெண் பாசறை மாவட்ட செயலாளர் அரிகர சிவசங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™