Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


காஞ்சீபுரத்தில் விபத்து: கணவன்–மனைவி உள்பட 3 பேர் பலி கார் டயர் வெடித்ததால் நிலைதடுமாறி கன்டெய்னர் லாரியுடன் மோதியது

Posted: 22 Feb 2014 12:01 PM PST

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் கார் டயர் வெடித்ததால் நிலைதடுமாறி கன்டெய்னர் லாரியுடன் மோதியதில் கணவன்–மனைவி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கார் கம்பெனி மேலாளர்

பெங்களூர் ராஜாஜி நகரை சேர்ந்தவர் பரத் (வயது 35). இவர் டயோட்டா கார் கம்பெனியில் உற்பத்தி பிரிவு மேலாளராக உள்ளார். பரத், தனது குடும்பம் மற்றும் மாமனார் குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக கார் மூலம் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தனர். காரை பரத் ஓட்டிச் சென்றார்.

காரில் பரத்தின் மனைவி தீபா (30), அவர்களது குழந்தைகள் நிஷாயி (8), அபிலாஷ் (3), ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை சேர்ந்த பரத்தின் மாமனார் ராஜேந்திரபிரசாத் (60), மாமியார் மீனா (56), அவர்களது மகன் அபிலேஷ் (36), அவரது மனைவி சிந்து (30), அவர்களது குழந்தை பப்லு (8) என மொத்தம் 9 பேர் பயணம் செய்தனர்.

3 பேர் பலி

சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரம் வெள்ளைகேட் என்ற இடத்தில் வரும் போது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் காட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு சுவர் மீது மோதி, எதிர்ப்புறம் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கண்டெய்னர் லாரியின் டீசல் டேங்க் உடைந்து லாரியும், காரும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இந்த விபத்தில் பரத் அவரது மனைவி தீபா, மாமியார் மீனா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செ.விஜயகுமார் உத்தரவின்பேரில் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு வி.பாலச்சந்திரன் மேற்பார்வையில், தாலுகா இன்ஸ்பெக்டர் ஆர்.மாதவன் மற்றும் போலீசார் தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் போராட்டம் சமையல் கியாஸ் வினியோகஸ்தர்கள் 25–ந் தேதி முதல் வேலை நிறுத்தம் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து

Posted: 22 Feb 2014 11:52 AM PST

புதுடெல்லி,

சமையல் கியாஸ் வினியோகஸ்தர்கள் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

ஒரே சீரான விலை

அகில இந்திய சமையல் கியாஸ் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சந்திர பிரகாஷ், இந்திய சமையல் கியாஸ் வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பவன் சோனி ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் சங்கத்தின் கோரிக்கை பற்றி கூறியதாவது:–

மானிய விலை சிலிண்டருக்கு ரூ.450 வரையும், மானியம் அல்லாத சிலிண்டர்களுக்கு ரூ.1,275 வரையும், 19 கிலோ வர்த்தக உபயோக சிலிண்டர்களுக்கு ரூ.1,900 வரையும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுபோன்ற சமச்சீரற்ற விலை நிர்ணயமே, கியாஸ் வினியோகத்தில் முறைகேடுகளுக்கு வழிகோலுகிறது. ஆனால், அதற்கு வினியோகஸ்தர்கள் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல. இதை தவிர்க்க ஒரே சீரான விலை நிர்ணய முறையை கடைப்பிடிக்க வேண்டும்.

கியாஸ் திருட்டு

சமையல் கியாஸ் சிலிண்டர்கள் சரியான முறையில் வடிவமைக்கப்படாததால் சில சமூக விரோத சக்திகள் திருட்டுத்தனமாக கியாசை உறிஞ்சி வேறு சிலிண்டர்களுக்கு மாற்றி விடுகிறார்கள். இதுபோன்ற திருட்டை தடுக்கும் வகையில் பாதுகாப்பாக சீலிடப்பட்ட சிலிண்டர்களை வடிவமைக்க வேண்டும்.

வெளி மார்க்கெட்டில் விற்கப்படும் 2 முதல் 5 கிலோ வரை எடை கொண்ட சிலிண்டர்களிலும் திருட்டு நடைபெறுகிறது. அத்துடன் இந்த சிலிண்டர்கள் பாதுகாப்பு அற்றவை என்பதால், அவற்றை தடை செய்ய வேண்டும். கியாஸ் மானியத்தை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மாற்றும் திட்டத்தில், சில தனியார் வங்கிகள் போலியான கணக்கு காட்டி நிதி மோசடி செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வினியோக உரிமை ரத்து

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் மூலம் கியாஸ் வினியோக முறைகேடுகளுக்கு அதிக அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது. முறைகேடுகளுக்கு வினியோகஸ்தர்களை மட்டுமே பொறுப்பாக்கி, வினியோக உரிமையை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றன. நியாயமற்ற இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கிறோம். வினியோக கொள்கை தொடர்பான விதிமுறைகளை நெறிப்படுத்த வேண்டும்.

புதிய வினியோகஸ்தர்கள் நியமனம் தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம், ஏழைகளுக்கு எதிராகவும், வசதி படைத்தவர்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது. பெட்ரோலிய அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களுக்கு மாறாக உள்ள இந்த விளம்பரத்தின் அடிப்படையில் புதிய வினியோகஸ்தர்களை நியமிக்கக்கூடாது.

25–ந் தேதி வேலைநிறுத்தம்

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடமும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடமும் நீண்ட நாட்களாக வற்புறுத்தி வருகிறோம். ஆனால், பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதனால் வருகிற 25–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல், கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை இந்தியா முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து இருக்கிறோம். இந்த போராட்டத்தின்போது வீடுகளுக்கு சமையல் கியாஸ் வினியோகம் நிறுத்தப்படும். மருத்துவமனை போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கியாஸ் தட்டுப்பாடு

வேலை நிறுத்தத்தின்போது வீடுகளுக்கு சமையல் கியாஸ் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால், போராட்டம் நீடித்தால் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகி உள்ளது.

தமிழ்நாட்டில் சமையல் கியாஸ் வினியோகஸ்தர்கள் 900 பேர் உள்ளனர். இவர்கள் மூலம் 1 கோடியே 30 லட்சம் பேர் கியாஸ் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகிறார்கள்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

காரில் இருந்தபடி கியாஸ் சிலிண்டரை வெடிக்கச் செய்து 3 பேர் தற்கொலை குடும்பமே பலியான பரிதாபம்

Posted: 22 Feb 2014 11:47 AM PST

நெல்லை,

காரில் இருந்தபடி கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு, காரை வெடிக்கச் செய்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கார் வெடித்து சிதறியது

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள அரியகுளம் காட்டுப்பகுதியில் நேற்று மதியம் 3 மணி அளவில் வெடிகுண்டு வெடிப்பது போன்று சத்தம் கேட்டது. அந்த பகுதியில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி நெஞ்சை பதற வைப்பதாக இருந்தது.

கார் ஒன்று வெடித்து சிதறி கிடந்தது. காரின் மேல் கூரை 100 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டு கிடந்தது.

3 பேர் கருகி சாவு

கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாய் உருக்குலைந்து கிடந்தது. காருக்குள் ஒரு ஆண், ஒரு பெண், ஒரு சிறுமி ஆகிய 3 பேரது உடல்கள் கருகிய நிலையில் கிடந்தன.

தகவல் அறிந்த உடன் பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் மாதவன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இறந்து கிடந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், காருக்குள் இறந்து கிடந்த 3 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் பாளையங்கோட்டை ரவிசங்கர் நகரைச் சேர்ந்த பரிபூரணம் என்ற கண்ணன் (வயது 39), அவருடைய மனைவி மல்லிகா (33), மகள் சுமதி (13) என்பதும் தெரியவந்தது.

கடிதம் சிக்கியது

இதுகுறித்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு கண்ணன் கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். அதை பார்த்தபோது அவர்கள் தற்கொலை செய்து கொண்டது உறுதிப்படுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-

பரிபூரணம் என்ற கண்ணன் காண்டிராக்ட்ராக இருந்து வந்தார். வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவது, நிலம் வாங்கி விற்பனை செய்வது உள்ளிட்ட தொழில்களும் செய்து வந்தார். அவருடைய மகள் சுமதி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கண்ணனிடம் ஏராளமானவர்கள் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தனர். இதேபோல் நிலம் வாங்கி விற்றதில் கண்ணன், ஏராளமானவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியதும் இருந்தது. ஏரலைச் சேர்ந்த 3 பேர் கண்ணனிடம், வட்டிக்கு பணம் வாங்கி இருந்தனர். அந்த பணத்தை கண்ணன் பலமுறை கேட்டார். ஆனால் அவர்கள் கொடுக்க மறுத்தனர். மாறாக கந்துவட்டி வசூலிப்பதாக கண்ணன் மீது ஏரல் போலீசில் புகார் செய்தனர்.

விபரீத முடிவு

அதன் பேரில், கண்ணனை விசாரணைக்காக போலீசார் ஏரலுக்கு அழைத்தனர். நம்மிடம் பணம் வாங்கிக்கொண்டு, நம்மை போலீசில் புகார் செய்து விட்டார்களே என்று கண்ணன் மனம் வருந்தினார். குடும்ப கவுரவம் பாதிக்கப்படுவதாக கருதி தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவுக்கு வந்தார்.

நேற்று மதியம் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் மதிய உணவை சாப்பிட்டார். பிறகு மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டார். அதற்கு முன்பாக வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரை எடுத்து காரில் வைத்துக் கொண்டார்.

சிலிண்டரை வெடிக்கச் செய்தார்

காரை, தனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள அரியகுளம் காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்றார். அங்கு யாரும் இல்லாத இடத்தில் காரை நிறுத்தினார். கார் கண்ணாடி கதவை அனைத்தும் மூடினார். பிறகு வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டார். கியாஸ் கார் முழுவதும் நிரம்பிய நிலையில் மனைவி, குழந்தைகளுடன் சாக துணிந்த கண்ணன், மனதை கல்லாக்கிக் கொண்டு தீக்குச்சியை பற்ற வைத்து இருக்கிறார். கண் இமைக்கும் நேரத்துக்குள் கார் வெடித்து சிதறியது. காருக்குள் இருந்த கண்ணன் உள்பட 3 பேரும் உடல் சிதறி பலியானார்கள்.

விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தன.

உறவினர்கள் கதறல்

இறந்து கிடந்தவர்களின் உடல்களை கண்டு, கண்ணனின் தாய் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், ஏரலை சேர்ந்த 3 பேர் கண்ணனிடம் ரூ.2 கோடிக்கு மேல் பணம் வாங்கி இருந்துள்ளனர். அவர்கள் அசலையும், வட்டியையும் கொடுக்கவில்லை. பணத்தை கேட்ட கண்ணன் மீது போலீசில் புகார் செய்துள்ளனர். இதனால் கண்ணன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

image: 

மத்திய மந்திரி சிரஞ்சீவி கன்னியாகுமரி வந்தார் அதிகாரிகள் வரவேற்பு

Posted: 22 Feb 2014 11:42 AM PST

கன்னியாகுமரி,

மத்திய சுற்றுலாத் துறை மந்திரி சிரஞ்சீவி நேற்று மதுரையில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்தார். அவரை கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி அரிராதாகிருஷ்ணன், வரவேற்பு தாசில்தார் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த அவர் குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி அரிராதாகிருஷ்ணனிடம் கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் சுற்றலா வளர்ச்சி பணிகள், சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக மத்திய அரசு எவ்வளவு நித ஒதுக்கி உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் பூதப்பாண்டி அருகே மன்னடி கிராமத்தில் நடந்து வரும் அவரது மகன் நடிக்கும் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்றார். இரவு கன்னியாகுமரி வந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இன்று பகல் கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: கால்இறுதியுடன் இந்தியா வெளியேற்றம் இங்கிலாந்து அணியிடம் போராடி வீழ்ந்தது

Posted: 22 Feb 2014 11:19 AM PST

துபாய்,

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின் கால்இறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி இங்கிலாந்திடம் போராடி தோற்றது.

ஜூனியர் உலககோப்பை

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. 16 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் லீக் முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின.

இந்த நிலையில் முதலாவது கால்இறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், இங்கிலாந்தும் துபாயில் நேற்று பலப்பரீட்சை நடத்தின. காலையில் கடுமையான பனிமூட்டம் இருந்ததால் அரைமணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. இப்படிப்பட்ட சீதோஷ்ண நிலையிலும் டாஸ் ஜெயித்த இந்தியா கேப்டன் விஜய் ஜோல் தைரியமாக பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே பேரிடி விழுந்தது. அன்குஷ் பெய்ன்ஸ் (3 ரன்), அகில் ஹெர்வாட்கர் (2 ரன்), நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் (0), ரிக்கி புய் (7) ஆகியோர் 24 ரன்னுக்குள் (8.1 ஓவர்) 'விக்கெட் அணிவகுப்பு' நடத்தினர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மேகமூட்டமான சூழலை, இங்கிலாந்து பவுலர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

இந்தியா 221 ரன்

இதைத் தொடர்ந்து கேப்டன் விஜய் ஜோலும், தீபக் ஹூடாவும் ஜோடி சேர்ந்து இந்தியாவின் ஊசலாட்டத்தை தடுத்து நிறுத்தினர். இவர்களுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது. ஜோல் 9 ரன்னிலும், ஹூடா 27 ரன்னிலும் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தனர். அணியை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றிய இந்த கூட்டணி ஸ்கோர் 111 ரன்களை எட்டிய போது பிரிந்தது. ஜோல் 48 ரன்களில் (85 பந்து, 3 பவுண்டரி) கேட்ச் ஆனார். ஹூடா தனது பங்குக்கு 68 ரன்கள் எடுத்த நிலையில் ரன்–அவுட் ஆனார்.

இறுதி கட்டத்தில் மும்பையை சேர்ந்த சர்ப்ராஸ் கான் அணிக்கு கைகொடுத்ததுடன், சவாலான ஸ்கோரை எட்டவும் உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. சர்ப்ராஸ் கான் 52 ரன்களுடன் (46 பந்து, 4 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ பிஷர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

திருப்புமுனை எது?

பின்னர் 222 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்துக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. டட்டர்சால் 23 ரன்னிலும், பார்னர்ட் 24 ரன்னிலும், பென் டக்கெட் 61 ரன்னிலும் (64 பந்து, 7 பவுண்டரி) பெவிலியன் திரும்பினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 33.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 148 ரன்களுடன் தடுமாறிய போது இந்தியாவின் கை சற்று ஓங்கியது.

ஆனால் இந்த நல்ல வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள நமது வீரர்கள் தவறி விட்டனர். இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோ கிளார்க் 8 ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. அவர் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை தீபக் ஹூடா கோட்டை விட்டார். இது தான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. அதன் பிறகு ஜோ கிளார்க் 42 ரன்கள் (45 பந்து, 6 பவுண்டரி) எடுத்த பிறகு தான் விக்கெட்டை இழந்தார். அதற்குள் இங்கிலாந்து இலக்கையும் நெருங்கி விட்டது.

இங்கிலாந்து வெற்றி

கடைசி 2 ஓவர்களில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. ரசிகர்கள் மட்டுமின்றி இரு அணி வீரர்களும் மிகுந்த பதற்றத்திற்குள்ளானார்கள். 49–வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் தீபக் ஹூடா வீசினார். இந்த ஓவரில் அவர் ஒரு பவுண்டரி உள்பட 11 ரன்கள் விட்டுக்கொடுக்க, இந்தியாவின் நம்பிக்கை தகர்ந்து போனது. பேட்டிங்கில் முத்திரை பதித்த தீபக் ஹூடா, பீல்டிங்கிலும், பந்து வீச்சிலும் இந்தியாவுக்கு எமனாக வந்து சோதித்துவிட்டார்.

இதன் பின்னர் கடைசி ஓவரில் 4 ரன் தேவைப்பட்ட போது, ராப் சயர் பந்தை பவுண்டரிக்கு விளாசி இங்கிலாந்தின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இங்கிலாந்து அணி 49.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றியை ருசித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. ராப் ஜோன்ஸ் 28 ரன்னுடனும், ராப் சயர் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

2000, 2008, 2012–ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி கால்இறுதியுடன் நடையை கட்டியது. இந்திய அணி இனி 5 முதல் 8–வது இடத்திற்கான ஆட்டத்தில் விளையாடும்.

பாகிஸ்தானும் அபாரம்

ஷார்ஜாவில் நடந்த மற்றொரு கால்இறுதியில் பாகிஸ்தான்–இலங்கை அணிகள் சந்தித்தன. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, கேப்டன் சமி அஸ்லாம் (95 ரன்), இமாம் உல்–ஹக் (82 ரன்), கம்ரன் குலாம் (52 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் துணையுடன் 9 விக்கெட்டுக்கு 279 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 42.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு சுருண்டது. 121 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

லீக் சுற்றில் இந்தியாவும், இலங்கையும் தோல்வியையே சந்திக்காமல் கால்இறுதி சுற்றுக்கு வந்தன. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறி விட்டது. லீக் சுற்றில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தானும், இலங்கையிடம் தோல்வி கண்ட இங்கிலாந்தும் ஆச்சரியப்படும் வகையில் அரைஇறுதியை எட்டி விட்டன. அரைஇறுதியில் இங்கிலாந்து–பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இன்றைய ஆட்டங்கள்

இன்று நடக்கும் மற்ற இரு கால்இறுதி ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான்–தென்ஆப்பிரிக்கா (ஷார்ஜா), ஆஸ்திரேலியா–வெஸ்ட் இண்டீஸ் (துபாய்) அணிகள் மோத உள்ளன.

category:

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 246 ரன்னில் ஆல்–அவுட்

Posted: 22 Feb 2014 11:13 AM PST

போர்ட் எலிசபெத்,

போர்ட் எலிசபெத் நகரில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களில் ஆட்டம் இழந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 423 ரன்கள் குவித்தது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2–வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 65 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்த நிலையில் 3–வது நாளான நேற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், தென்ஆப்பிரிக்க பவுலர்களை சமாளிப்பதில் சிரமப்பட்டனர். வார்னர் 70 ரன்களில் பிலாண்டரின் பந்து வீச்சில் கேப்டன் சுமித்திடம் கேட்ச் ஆனார். ஓரளவு தாக்குப்பிடித்து கணிசமான ரன்களை சேர்த்த ஸ்டீவன் சுமித் (49 ரன்) 9–வது விக்கெட்டாக வெளியேற்றப்பட்டார். அப்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 9–209 ரன்களாக இருந்தது.

ஆஸ்திரேலியா 246 ரன்

பாலோ–ஆன் ஆபத்தை தவிர்க்க 224 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், அடுத்த பந்திலேயே பீட்டர் சிடிலும் அவுட் ஆகி இருக்க வேண்டியது. அவருக்கு வித்தியாசமான ஒரு அதிர்ஷ்டம் கிட்டியது. மோர்னே மோர்கல் 'ஷாட்பிட்ச்'சாக வீசிய பந்து சிடிலின் கையுறையை (குளோவ்ஸ்) உரசிக் கொண்டு விக்கெட் கீப்பர் டிவில்லியர்சின் கையில் சிக்கியது. ஆனால் இதை தென்ஆப்பிரிக்க வீரர்கள் பெரிய அளவில் அவுட் கேட்டு முறையிடவில்லை. இதனால் நடுவர் அமைதியாக நின்றார். ஸ்டெயின், மறுபரிசீலனை முறைப்படி அப்பீல் செய்ய வேண்டும் என்று கூறிய போதிலும், சக வீரர்கள் அதை பொருட்படுத்தவில்லை. இதனால் சிடில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு பெற்றார்.

சிடிலும் (11 ரன்), ரையான் ஹாரிசும் (26 ரன்) இணைந்து பாலோ–ஆனை தவிர்த்தனர். முடிவில் ஆஸ்திரேலியா 57 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க தரப்பில் பிலாண்டர், மோர்னே மோர்கல் தலா 3 விக்கெட்டுகளும், பார்னல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பார்னல் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பந்து வீசுவதை நிறுத்தி விட்டு, பாதியிலேயே வெளியேறினார். ஸ்கேன் பரிசோதனையில் அவர் 5 முதல் 7 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் எஞ்சிய போட்டியில் அவர் பந்து வீச வாய்ப்பில்லை. இது தென்ஆப்பிரிக்காவுக்கு சற்று பின்னடைவான விஷயம் தான்.

அம்லா அரைசதம்

அடுத்து 177 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 37 ஓவர் முடிந்திருந்த போது 4 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து, மொத்தம் 344 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கேப்டன் சுமித் (14 ரன்), எல்கர் (16 ரன்), பிளிஸ்சிஸ் (24 ரன்), டிவில்லியர்ஸ் (29 ரன்) ஆகியோர் அவுட் ஆனார்கள். அம்லா (77 ரன்) களத்தில் இருந்தார்.

category:

டோனி இல்லாவிட்டாலும் இந்தியா வலுவானது தான் பாகிஸ்தான் கேப்டன் கணிப்பு

Posted: 22 Feb 2014 11:10 AM PST

டாக்கா,

5 அணிகள் இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது. இதையொட்டி பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்–ஹக் அளித்த பேட்டி வருமாறு:–

ஆசிய கோப்பை போட்டியில் இருந்து டோனி விலகி இருப்பதன் மூலம் அவரது அனுபவத்தையும், கேப்டன்ஷிப்பையும் இந்திய அணி தவற விடுகிறது. அதே நேரத்தில் அவருக்கு பதிலாக விராட் கோலியை இந்திய அணியின் கேப்டனாக்கி இருப்பது பொருத்தமான தேர்வு. டோனி இல்லாவிட்டாலும் இந்திய அணி தொடர்ந்து வலுவானதாகவே இருக்கிறது. இந்தியா மட்டுமல்ல, ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் சவாலானவை என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்களை கைப்பற்றிய நாங்கள் அதே வெற்றி வேட்கையுடன் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்கிறோம். இந்திய அணியையும் எங்களால் தோற்கடிக்க முடியும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு மிஸ்பா கூறினார்.

category:

டெல்லி ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ்: இந்திய வீரர் சோம்தேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி

Posted: 22 Feb 2014 11:07 AM PST

புதுடெல்லி,

ஏ.டி.பி. சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில் உலக தர வரிசையில் 96–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், 114–வது இடத்தில் இருக்கும் இவ்ஜெனி டான்ஸ்காயை (ரஷியா) எதிர்கொண்டார். சுமார் 1½ மணி நேரம் நடந்த இந்த ஆட்டத்தில் சோம்தேவ் 6–4, 6–2 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் சோம்தேவ், தர வரிசையில் 92–வது இடத்தில் இருக்கும் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் நெடெவ்சோவை சந்திக்கிறார்.

category:

தற்போதைய நிலவரங்களின் அடிப்படையில் பரிந்துரை வாகனம், நுகர்பொருள், மருந்து, ஐ.டி. பங்குகள் முதலீட்டுக்கு தகுதியானவை

Posted: 22 Feb 2014 10:36 AM PST

மும்பை

தற்போதைய நிலவரங்களின் அடிப்படையில் மோட்டார் வாகனம், நுகர்பொருள், மருந்து, ஐ.டி. ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.  

இடைக்கால பட்ஜெட்

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிப்ரவரி 17–ந் தேதியன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் மோட்டார் வாகனத்துறையில் எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி குறைந்துள்ளதால், வாகனங்களுக்கு உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது.

சிறிய கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், வர்த்தக வாகனங்கள் மீதான உற்பத்தி வரி 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எஸ்.யு.வி. கார்களுக்கான உற்பத்தி வரி 30 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பெரிய வகை கார்கள் மீதான உற்பத்தி வரி 27 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாகவும், நடுத்தர வகை கார்களுக்கான உற்பத்தி வரி 24 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

டயர், உருக்கு பொருள்கள்

இது மோட்டார் வாகன நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் இத்துறையைச் சார்ந்து இயங்கும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் டயர் தயாரிப்பாளர்களுக்கும் மிகச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உருக்குப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்களும் மிகுந்த ஆதாயம் அடையும் என்று கூறப்படுகிறது.

மோட்டார் வாகனங்கள் மற்றும் பொறியியல் சாதனங்களுக்கு உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளதால் கம்பி, தகடு உள்ளிட்ட பல்வேறு உருக்குப் பொருள்களுக்கான தேவைப்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரும்புத்தாது சப்ளை குறைந்ததுடன், விற்பனையும் குறைந்திருந்ததால் பாதிக்கப்பட்டிருந்த உருக்கு நிறுவனங்களுக்கு இது ஆறுதல் தரும் செய்தி என்று கூறப்படுகிறது.

குறிப்பாக வாகனங்களுக்கு தேவையான உயர்தர உருக்குத் தகடுகளை அதிகம் தயாரிக்கும் வகையில் விரிவாக்கம் செய்துள்ள டாட்டா ஸ்டீல், செயில், பூஷண் ஸ்டீல் போன்ற முன்னணி உள்நாட்டு நிறுவனங்கள் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிகிறது. எனவே மோட்டார் வாகன நிறுவனங்களை சார்ந்து இயங்கும் நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தலாம் என நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

ஐ.டி. துறைக்கு வாய்ப்பு

உலக நாடுகளில் இந்த ஆண்டில் தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவைப்பாடு பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் முன்னேற்றம், ஐரோப்பிய நாடுகள் மந்தநிலையிலிருந்து விடுபட்டுக் கொண்டிருப்பது போன்றவை இந்திய ஐ.டி. துறைக்கு வளமான வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது ஏற்றுமதியை பெரிதும் சார்ந்து இயங்கும் ஐ.டி. நிறுவனங்களுக்கு அனுகூலமாக உள்ளது.

பொருளாதார வளர்ச்சியை பெரும்பாலும் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் வட்டி விகிதங்கள்தான் நிர்ணயம் செய்கின்றன. எனினும் வட்டி விகிதங்களாலும், பொருளாதார மந்தநிலையாலும் பாதிக்கப்படாத துறைகளும் இருக்கின்றன. அவற்றுள் முதன்மையானவை மருந்து மற்றும் நுகர்பொருள் ஆகிய துறைகளாகும். விலைவாசி அதிகமாக இருந்தாலும் மருந்து மற்றும் நுகர்பொருள்களுக்கான செலவினங்களை பொதுமக்கள் குறைத்துக் கொள்வதில்லை.

ஆதாயம் தரும் பங்குகள்

மருந்து துறையில் சிப்லா மற்றும் கெடிலா ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பெரும்பாலும் கணிசமான ஆதாயம் தரும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். வாகன துறையில் பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை ரூ.2,355–ஆகவும், டாட்டா மோட்டார்ஸ் பங்கின் விலை ரூ.462–ஐ உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மருந்து துறையில் கெடிலா ஹெல்த்கேர் பங்கின் விலை ரூ.1,062–ஆக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  

முதலீடு செய்யும்போது...

மேற்கண்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு பற்றிய மதிப்பீடு இந்த பங்குகளின் கடந்த கால செயல்திறன், தற்போதைய பங்கு வர்த்தக சூழ்நிலை, நிதி நிலை முடிவுகள், வருங்கால வளர்ச்சி போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இப்பங்குகளில் முதலீடு செய்யும்போது, அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் முதலீடு செய்ய வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

category:

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஆச்சரியமில்லை கர்நாடக கவர்னர் பரத்வாஜ் பரபரப்பு பேட்டி

Posted: 22 Feb 2014 10:32 AM PST

பெங்களூர்,

"ஊழலால் மக்கள் வெறுப்பு அடைந்து உள்ளனர். இந்த சூழ்நிலையில் மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை" என்று கர்நாடக கவர்னர் பரத்வாஜ் பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார்.

பரபரப்பு கருத்து

கர்நாடக மாநில கவர்னராக இருப்பவர் பரத்வாஜ். இவர் காங்கிரஸ் அரசில் மத்திய மந்திரியாகவும் பணியாற்றி இருக்கிறார். கவர்னர் பரத்வாஜின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் முடிவடைகிறது. கடந்த பாரதீய ஜனதா அரசு ஆட்சியின்போதும் சரி தற்போதைய காங்கிரஸ் ஆட்சியின் போதும் சரி மந்திரிகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து அதிரடி கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்துவார். சமீபத்தில் கூட காங்கிரஸ் மந்திரிகள் ஒரு சிலரின் செயல்பாடு திருப்தியாக இல்லை என்று கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த சூழ்நிலையில் நேற்று பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஊழலால் மக்கள் வெறுப்பு

பெங்களூர் விவசாய பல்கலைக்கழகத்தில் நடந்த மூங்கில் கண்காட்சியை கவர்னர் பரத்வாஜ் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

"130 ஆண்டுகள் வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சியில் இப்போது தலைமை பற்றாக்குறை பிரச்சினை எழுந்துள்ளது. இதனால் காங்கிரஸ் தனக்கு உள்ள அங்கீகாரத்தை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அரசுகள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஆனால் சமீபகாலமாக பகிரங்கமாகி வரும் ஊழல்களால் மக்கள் வெறுப்படைந்து உள்ளனர்.

பா.ஜனதா ஆட்சி

போராட்டம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஆம் ஆத்மி கட்சி கூட தனது தவறான நடவடிக்கைகளால் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நாட்டில் 2–வது பெரிய கட்சியாக உள்ள பா.ஜனதா வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

இவ்வாறு கவர்னர் பரத்வாஜ் கூறினார்.

மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று கவர்னர் பரத்வாஜ் கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™