Daily Thanthi |
- ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுகிறது: தெலுங்கானா மசோதா நிறைவேறியது; பாராளுமன்றத்தில் அமளிக்கு இடையே ஓட்டெடுப்பு
- போதிய நேரத்தை செலவழிப்பதுடன் சவால்களை சந்திக்க குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும் கவர்னர் ரோசய்யா பேச்சு
- இந்தியா–நியூசிலாந்து இடையிலான 2–வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது மெக்கல்லம் 302 ரன்; கோலியும் சதம் அடித்தார்
- ‘எனது வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னிங்ஸ்’ பிரன்டன் மெக்கல்லம் நெகிழ்ச்சி
- ரூ.67 லட்சம் மோசடி செய்த கணவன்–மனைவி கைது மேலும் ஒரு தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு
- மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி திண்டுக்கல் மாணவர்கள் சாதனை
- துபாய் சர்வதேச டென்னிஸ்: சானியா ஜோடி தோல்வி
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: பந்து தாக்கி காயமடைந்த தென்ஆப்பிரிக்க வீரர் மெக்லரன் விலகல்
- ‘காங்கிரசும் ஊழலும் இரட்டை சகோதரிகள்’ நரேந்திர மோடி கடும்தாக்கு
- ராஜீவ் கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் 3 பேரின் தூக்கு ரத்து விடுதலை பற்றி அரசு முடிவு செய்யலாம்; சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
| Posted: 18 Feb 2014 12:14 PM PST புதுடெல்லி, ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க வகைசெய்யும் 'ஆந்திரபிரதேச மறுசீரமைப்பு மசோதா–2014' கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஆந்திராவின் இதர பகுதியான சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். மிளகுப்பொடி வீசினர். இதில் 3 எம்.பி.க்கள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். சபையில் கண்ணாடிகள், மைக்குகள் உடைக்கப்பட்டன. கைகலப்பும் நடந்தது. எப்படி இருந்தாலும், மசோதாவை நிறைவேற்றியே தீருவது என்று மத்திய அரசு உறுதியாக இருந்தது. நேரடி ஒளிபரப்பு நிறுத்தம் இந்நிலையில், நேற்று பாராளுமன்ற மக்களவையில், தெலுங்கானா மசோதா பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, அதற்காக மசோதாவை மீண்டும் சபையின் முன்புவைத்தார். மிளகுப்பொடி வீச்சு போன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, டெலிவிஷன் நேரடி ஒளிபரப்பை நிறுத்துவது என்று சபாநாயகர் மீராகுமார் முடிவு செய்தார். அதன்படி, நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. தெலுங்கானா மசோதாவுக்கும், நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்படுவதற்கும் தெலுங்கானா எதிர்ப்பு எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'இது ஜனநாயக படுகொலை' என்று வர்ணித்தனர். அமளி முதல் முறையாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.க்கள் தெலுங்கானாவுக்கு எதிராக சபையின் மையப்பகுதிக்கு சென்று குரல் கொடுத்தனர். திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சியினரும் தெலுங்கானாவுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த அமளிக்கு இடையே, மசோதாவின் ஒவ்வொரு உட்பிரிவும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், மசோதாவின் மீது, ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கானா ஆதரவு மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டியும், எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜும் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர். மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி பேசியதாவது:– தெலுங்கானா தனிமாநில கோரிக்கை, 60 ஆண்டு காலமாக எழுப்பப்படுகிறது. இவ்வளவு நீண்ட காலம் வேறு எந்த கோரிக்கையாவது எழுப்பப்படுகிறதா என்பது சந்தேகமே. கடந்த 2004–ம் ஆண்டே, தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறுதி அளித்தது. அந்த ஆண்டின் ஜனாதிபதி உரையிலும் அது இடம்பெற்றது. ஆயினும், சீமாந்திரா பகுதியில் இருப்பவர்கள், இத்தனை ஆண்டு காலமும் 'கும்பகர்ண தூக்கத்தில்' இருந்தார்களோ என்னவோ. இவ்வாறு அவர் பேசினார். அப்போது, 'கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்' என்று அவரிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:– நானும், எனது கட்சியும் தெலுங்கானாவை ஆதரிக்கிறோம். தெலுங்கானா அமைக்கப்பட வேண்டும். அங்குள்ள இளைஞர்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். தெலுங்கானா பிரச்சினையை காங்கிரஸ் தவறாக கையாண்டுள்ளது. வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 3 தனி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் எதிர்ப்பே எழவில்லை. தெலுங்கானா உருவாக்குவதாக 2004–ம் ஆண்டிலேயே காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், சும்மா இருந்து விட்டு, கடைசி நேரத்தில் இதை செய்கிறது. தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றியதும், அந்த பெருமையை சோனியா காந்திக்கு அளிப்பீர்கள். இந்த சின்னம்மாவையும் (சுஷ்மா சுவராஜ்) மறந்து விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், மசோதா மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். மசோதாவை அவர் குரல் ஓட்டெடுப்புக்கு விட்டார். அதில், பா.ஜனதா ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், மசோதாவை ஆதரித்தது. அரசுத்தரப்பு கொண்டு வந்த 32 திருத்தங்களும் நிறைவேறின. இதையடுத்து, தெலுங்கானா மசோதா, டெல்லி மேல்–சபைக்கு அனுப்பப்படும். அங்கு நிறைவேறிய பிறகு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். சந்திரசேகர ராவ் நன்றி தெலுங்கானா மசோதா நிறைவேறியவுடன், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கே.சந்திரசேகர ராவ், சுஷ்மா சுவராஜிடம் சென்று, மசோதாவை ஆதரித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார். தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி. பொன்னம் பிரபாகர், சோனியா காந்தியின் காலைத் தொட்டு வணங்கினார். அவர் சோனியா படம் அச்சிட்ட சுவரொட்டியை சபையில் காண்பிக்க முயன்றபோது, அவரை சோனியா கண்டித்தார். இனிப்பும், எதிர்ப்பும் தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டதால், டெல்லியிலும், ஐதராபாத்திலும் தெலுங்கானா ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. அவர்கள் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தனர். அதே சமயத்தில், தெலுங்கானா எதிர்ப்பாளர்கள், 'இது ஜனநாயக படுகொலை' என்று வர்ணித்தனர். ஆந்திராவில் இன்று (புதன்கிழமை) முழு அடைப்பு நடத்தப்படும் என்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். 'இன்று கறுப்பு நாள்' என்றும் அவர் கூறினார். News Category:Hot Topic Icon : News Group Category: |
| Posted: 18 Feb 2014 11:56 AM PST மதுரை, போதிய நேரத்தை செலவழிப்பதுடன் சவால்களை சந்திக்கும் வகையில் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும் என்று கவர்னர் ரோசய்யா கூறினார். பள்ளி ஆண்டுவிழா மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள அரபிந்தோ மீரா மெட்ரிக் பள்ளியின் 18வது ஆண்டுவிழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– அரபிந்தோ பள்ளி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் சிறந்த கல்வியினை குழந்தைகளுக்கு அளித்து, அதன் மூலம் சிறந்த குடிமகன்களை உருவாக்குவது தான். தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களுக்கு பெரும் சவாலான காரியம். குழந்தைகளிடம் பெற்றோர்கள் நண்பர்களாக பழக வேண்டும். அவர்களது மனதை புரிந்து கொள்வதுடன், அவர்களுடன் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவது அவசியம். அப்போது தான் சிறந்தவர்களாக வளர முடியும். எதிர்கொள்ள போதிய அறிவுடனும் திறனுடனும் வாழ்வில் வரும் சவால்களை சமாளிக்கும் பொருட்டு சிறந்த கல்வியினை அவர்களுக்கு தர வேண்டும். அன்பு, பாசம் தேவை தற்போது அன்பு, பாசமற்ற நிலையில் தான் குழந்தைகள் வளர்கின்றனர். இந்தநிலையை பெற்றோர் மாற்ற வேண்டும். குழந்தைகளை திட்டவோ அல்லது அவர்களை தாழ்த்தியோ பேசக் கூடாது. நல்ல எண்ணங்களை அவர்களிடம் விதைக்க வேண்டும். நல்ல குணாதிசயங்களுடன் வளர்க்கப்படும் குழந்தைகளே பிற்காலத்தில் நல்ல மனிதர்களாக உருவாகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் பள்ளிக்குழுமத்தின் தலைவர் சந்திரன், இயக்குநர் அபிலாஷ், இணை இயக்குநர் அபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். image: category: |
| இந்தியா–நியூசிலாந்து இடையிலான 2–வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது மெக்கல்லம் 302 ரன்; கோலியும் சதம் அடித்தார் Posted: 18 Feb 2014 11:35 AM PST வெலிங்டன், இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. பிரன்டன் மெக்கல்லத்தின் முச்சதத்தால் வெலிங்டன் டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. வெலிங்டன் டெஸ்ட் இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டன் பேசின் ரிசர்வ் மைதானத்தில் கடந்த 14–ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 192 ரன்களும், இந்தியா 438 ரன்களும் எடுத்தன. 246 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 94 ரன்களுடன் தோல்வியின் விளிம்பில் தத்தளித்தது. இதன் பின்னர் கேப்டன் பிரன்டன் மெக்கல்லமும், விக்கெட் கீப்பர் வாட்லிங்கும் 6–வது விக்கெட்டுக்கு 352 ரன்கள் சேகரித்து உலக சாதனை படைத்ததுடன், தங்கள் அணியை வீழ்ச்சியின் பிடியில் இருந்தும் காப்பாற்றினர். 4–வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 571 ரன்கள் எடுத்திருந்தது. பிரன்டன் மெக்கல்லம் 281 ரன்களுடனும், அறிமுக வீரரும், ஆல்–ரவுண்டருமான ஜேம்ஸ் நீஷம் 67 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மெக்கல்லம் முச்சதம் இந்த நிலையில் 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. அதிரடியாக ஆடிய புதுமுக வீரர் நீஷம் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார். அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்த 10–வது நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பையும் 23 வயதான நீஷம் தட்டிச் சென்றார். ஜாகீர்கான் வீசிய அடுத்த ஓவரில் பிரன்டன் மெக்கலம், 'தேர்டுமேன்' பகுதியில் பந்தை பவுண்டரிக்கு விரட்டி முச்சத்தை புசித்தார். 84 ஆண்டு கால நியூசிலாந்து கிரிக்கெட் சரித்திரத்தில் நியூசிலாந்து வீரர் ஒருவர் 300 ரன்களை தொடுவது இதுவே முதல் முறையாகும். சரியாக 46–வது நிமிடத்தில் மெக்கல்லம் அரங்கேற்றிய இந்த அரிய நிகழ்வை அவரது குடும்பத்தினர் நேரில் கண்டு மகிழ்ச்சியில் நெகிழ்ந்தனர். முச்சதம் அடித்த அதே ஓவரில் மெக்கல்லம், டோனியிடம் கேட்ச் ஆனார். 302 ரன்கள் (559 பந்து, 32 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்து பெவிலியன் திரும்பிய அவருக்கு இந்திய வீரர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். நியூசிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 680 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. நீஷம் 137 ரன்களுடன் (154 பந்து, 20 பவுண்டரி) களத்தில் இருந்தார். கோலி சதத்துடன் 'டிரா' பின்னர் 67 ஓவர்களில் 435 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி 2–வது இன்னிங்சை விளையாடியது. 54 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை தாரைவார்த்த போதிலும், விராட் கோலியும், ரோகித் ஷர்மாவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். நேர்த்தியாக ஆடிய கோலி தனது 6–வது சதத்தை எட்டினார். இந்திய அணி 52 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்திருந்த போது, இரு அணி கேப்டன்களும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். கோலி 105 ரன்களுடன் (135 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். தொடரை வென்றது நியூசிலாந்து முன்னதாக முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்ததால் அந்த அணி தொடரை 1–0 என்ற கணக்கில் தனதாக்கியது. நியூசிலாந்து அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. மெக்கல்லம் ஆட்டநாயகன் விருதை பெற்றார். தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் (டெஸ்ட் 0–1, ஒரு நாள் போட்டி 0–2) ஒரு வெற்றி கூட பெறாத இந்திய அணி, அதைத் தொடர்ந்து நியூசிலாந்து தொடரிலும் (ஒரு நாள் போட்டி 0–4, டெஸ்ட் 0–1) வெற்றிக்கனி ஏதுமின்றி வெறுங்கையுடன் தாயகம் திரும்புகிறது. ஸ்கோர் போர்டு முதல் இன்னிங்ஸ் நியூசிலாந்து 192 இந்தியா 438 2–வது இன்னிங்ஸ் நியூசிலாந்து புல்டான் எல்.பி.டபிள்யூ (பி) ஜாகீர் 1 ரூதர்போர்டு (சி) டோனி (பி) ஜாகீர் 35 வில்லியம்சன் (சி) டோனி (பி) ஜாகீர் 7 லத்தம் (சி) டோனி (பி)ஷமி 29 பிரன்டன் மெக்கல்லம் (சி)டோனி(பி) ஜாகீர் 302 ஆண்டர்சன் (சி) அண்ட் (பி) ஜடேஜா 2 வாட்லிங் எல்.பி.டபிள்யூ (பி) ஷமி 124 நீஷம் (நாட்–அவுட்) 137 சவுதி (சி) புஜாரா(பி)ஜாகீர் 11 வாக்னெர் (நாட்–அவுட்) 2 எக்ஸ்டிரா 30 மொத்தம் (210 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு டிக்ளேர்) 680 விக்கெட் வீழ்ச்சி: 1–1, 2–27, 3–52, 4–87, 5–94, 6–446, 7–625, 8–639 பந்து வீச்சு விவரம் இஷாந்த் ஷர்மா 45–4–164–0 ஜாகீர்கான் 51–13–170–5 முகமது ஷமி 43–6–149–2 ஜடேஜா 52–11–115–1 ரோகித் ஷர்மா 11–0–40–0 கோலி 6–1–13–0 டோனி 1–0–5–0 தவான் 1–0–3–0 இந்தியா விஜய்(சி)ஆண்டர்சன்(பி)சவுதி 7 தவான் எல்.பி.டபிள்யூ (பி) பவுல்ட் 2 புஜாரா(சி)வாட்லிங்(பி)சவுதி 17 விராட் கோலி (நாட்–அவுட்) 105 ரோகித்ஷர்மா(நாட்–அவுட்) 31 எக்ஸ்டிரா 4 மொத்தம் (52 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு) 166 விக்கெட் வீழ்ச்சி:1–10,2–10,3–54 பந்து வீச்சு விவரம் டிரென்ட் பவுல்ட் 16–5–47–1 டிம் சவுதி 16–3–50–2 வாக்னெர் 11–3–38–0 நீஷம் 5–0–25–0 ஆண்டர்சன் 4–1–6–0 image: category: |
| ‘எனது வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னிங்ஸ்’ பிரன்டன் மெக்கல்லம் நெகிழ்ச்சி Posted: 18 Feb 2014 11:33 AM PST வெலிங்டன், முச்சதம் அடித்து முத்திரை பதித்த நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் கூறியதாவது:– 94 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், எனது ஆட்டம் அணிக்கு மிகவும் அவசியமாக இருந்தது. நெருக்கடிக்கு மத்தியில் சில அருமையான பார்ட்னர்ஷ்பை உருவாக்கினோம். அதன் பிறகு எங்களது பேட்டிங் நீண்டு கொண்டே போனது. சரிவில் இருந்து நிமிர்ந்து தொடரை கைப்பற்றியது மிகவும் திருப்தி அளிக்கிறது. ரசிகர்களின் கூட்டத்தை பார்க்காத வரை எனக்குள் எந்த பதற்றமும் இல்லை. ரசிகர்களின் வருகையை கண்ட பிறகு தான், அவர்களை குதூகலப்படுத்துவதற்கு எனது கையில் எவ்வளவு முக்கியமான பணி இருக்கிறது என்பதை உணர்ந்தேன். இந்த முச்சதம் நியூசிலாந்து கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இதற்கு முன்பு இது போன்ற அனுபவம் ஒரு போதும் எனக்கு ஏற்பட்டதில்லை. நிச்சயம் எனது வாழ்நாள் முழுவதும் இந்த பசுமையான நினைவு நிலைத்து நிற்கும். சிறுவயதில் இருந்தே நியூசிலாந்து கிரிக்கெட் அணியை பார்த்து வளர்ந்தவன் நான். மார்ட்டின் குரோவ் 299 ரன்களில் அவுட் ஆனதை நான் பார்த்து உள்ளேன். அவர் அதில் 300 ரன் மைல்கல்லை தாண்டியிருந்தால் வியப்புக்குரிய சாதனையாக இருந்திருக்கும். நேற்றிரவும் (4–வது நாள்), இன்றும் (5–வது நாள்) ஒவ்வொருவரும் நியூசிலாந்து நாட்டவர் ஒருவர் 300 ரன்கள் இலக்கை கடக்க வேண்டும் என்பதில் ரொம்ப ஆர்வமாக இருந்தனர். அதில் மார்ட்டின் குரோவும் ஒருவர். காலை உணவுக்காக வந்த போது, அவரை சந்தித்தேன். அப்போது முச்சதத்தின் மகத்துவம் குறித்து விவாதித்தார். அதன் பிறகே முச்சதம் என்பது எவ்வளவு பெரிய தருணம் என்பதை உண்மையிலேயே உணர்ந்தேன். இதே போல் ஸ்டீபன் பிளமிங்கிடமும் முந்தைய நாள் இரவில் பேசினேன். அவரும் நான் சாதனை படைக்க வேண்டும் என்ற மனநிலையில் தான் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் குரோவும், ஸ்டீபன் பிளமிங்கும் முதல் இரு இடங்களில் இருந்தனர். இப்போது இவர்களை நான் கடந்தது தான் கொஞ்சம் தர்மசங்கடமாக இருக்கிறது. ஏனெனில் நான் பெரிய பேட்ஸ்மேன் கிடையாது. அவர்களின் திறமையுடன் ஒப்பிடும் போது, நான் அவர்களை நெருங்க கூட முடியாது. எது எப்படியோ ஒரு வழியாக நியூசிலாந்து வீரர் ஒருவர் 300 ரன்களை எட்டியதில்லை என்ற குறையை போக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் மேலும் சில நியூசிலாந்து வீரர்கள் இந்த சாதனையை படைப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு பிரன்டன் மெக்கல்லம் கூறினார். image: category: |
| ரூ.67 லட்சம் மோசடி செய்த கணவன்–மனைவி கைது மேலும் ஒரு தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு Posted: 18 Feb 2014 11:33 AM PST திண்டுக்கல், திண்டுக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.67 லட்சம் மோசடி செய்த கணவன்–மனைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– நிதி நிறுவன மோசடி திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு பகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக தேவிநாயக்கன்பட்டியை சேர்ந்த சக்திவேல்–சசிபிரபா தம்பதியினரும், அதேபகுதியை சேர்ந்த காளிமுத்து–கவுதமி தம்பதியினரும் இருந்து வந்தனர். தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த ஆனந்த், முத்துக்குமார், தங்கவேல் ஆகியோர் முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்தனர். சிறு சேமிப்பு, நிரந்தர வைப்பு நிதி முறை என இரண்டு வழிகளில் மக்கள் முதலீடு செய்யும் வகையில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி கொடுப்பதாக அந்த நிறுவனம் அறிவித்ததால், ஏராளமான மக்கள் இங்கு முதலீடு செய்தனர். நிறுவனம் தொடங்கப்பட்டு ஆறு மாதம் ஆன நிலையில் திடீரென மூடப்பட்டது. அதன் இயக்குனர்கள் மற்றும் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகித்த 7 பேரும் தலைமறைவானார்கள். கணவன்–மனைவி கைது தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகவர்களும், முதலீடு செய்த பொதுமக்களும் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவுபோலீசில் புகார் கொடுத்தனர். இதுவரை 87 பேர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் தாடிக்கொம்பு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இதேபோல மாவட்டம் முழுவதிலும் இருந்து பலர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் நிறுவன இயக்குனர்கள், சென்னையில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாண்டிச்செல்வம், சீலைக்காரி மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சென்னை விரைந்தனர். மதுரவாயல் பகுதியில் தங்கி இருந்த நிறுவனத்தின் இயக்குனர்களான சக்திவேல்–சசிபிரபா தம்பதியை, நேற்று அதிகாலை 2 மணிக்கு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்கள், காலையில் திண்டுக்கல்லுக்கு கொண்டுவரப்பட்டனர். வந்த போலீசார், குற்றவாளிகளை மாலையில் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாலையில் சக்திவேல் மற்றும் சசிபிரபா ஆகியோர் மதுரையில் உள்ள முதலீட்டாளர்கள் நல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தம்பதிக்கு வலைவீச்சு மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தின் இயக்குனர்களான காளிமுத்து– கவுதமி தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுவரை கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்த நிறுவனத்தின் மூலம் சிறுசேமிப்பு முறையில் ரூ.38 லட்சத்து 80 ஆயிரத்து 039 உட்பட மொத்தம் ரூ.67 லட்சம் அளவில் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனத்தில் சுமார் 17 ஆயிரம் முதலீட்டாளர்கள் இருப்பதாக தெரிகிறது. இவர்கள் அனைவரிடமும் இருந்து ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை அந்த தனியார் நிறுவனம் மோசடி செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகித்த ஆனந்த், முத்துக்குமார், தங்கவேல் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மோசடி செய்த தம்பதியினர் கைது செய்யப்பட்டதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. image: category: |
| மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி திண்டுக்கல் மாணவர்கள் சாதனை Posted: 18 Feb 2014 11:23 AM PST திண்டுக்கல், மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டிகள் மதுரை மாவட்டம் டி.வி.எஸ். பள்ளியில் நடந்தது. இதில் சென்னை, திருச்சி, சேலம், நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் திண்டுக்கல் சார்பாக 15 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகள் ஜூனியர், ஜீனியர் பிரிவுகளின்படி நடந்தது. இதில் ஜீனியர் பிரிவில் போட்டியிட்ட திண்டுக்கல் மாணவர்கள் மணிகண்டன், ஞானபிரகாசம் மற்றும் ஜூனியர் பிரிவில் மோதிய ஜெயபாரத் ஆகியோரும் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். மேலும் ஜூனியர் பிரிவில் போட்டியிட்ட கிளாடிவின் ரெசிஸ், சரண்கவுசி, சிவக்குமார் ஆகியோர் வெண்கல பதக்கமும், நவின் சுந்தர் வெள்ளி பதக்கமும் வென்றனர். பதக்கம் வென்றவர்களை பெற்றோர்கள், விளையாட்டு அலுவலர்கள் உள்பட பலர் பாராட்டினர். image: category: |
| துபாய் சர்வதேச டென்னிஸ்: சானியா ஜோடி தோல்வி Posted: 18 Feb 2014 11:22 AM PST துபாய், டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி போராடி தோற்றது. இவர்களை செக்குடியரசின் ஹிலவக்கோவா–லூசி சபரோவா இணை 7–6 (5), 5–7, 11–9 என்ற செட் கணக்கில் வென்றது. இந்த ஆட்டம் 1 மணி 55 நிமிடங்கள் நீடித்தது. ஒற்றையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை டென்மா£ர்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 2–6, 6–3, 6–3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் சபினே லிசிக்கியை சாய்த்தார். செர்பியாவின் ஜான்கோவிச், பிரான்சின் அலிசி கார்னெட் ஆகியோரும் 2–வது சுற்றை எட்டினர். image: category:Tagging: |
| ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: பந்து தாக்கி காயமடைந்த தென்ஆப்பிரிக்க வீரர் மெக்லரன் விலகல் Posted: 18 Feb 2014 11:20 AM PST போர்ட் எலிசபெத், செஞ்சுரியனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 2–வது டெஸ்ட் போட்டி, போர்ட் எலிசபெத்தில் நாளை தொடங்குகிறது. இதற்கிடையே, தென்ஆப்பிரிக்க அணியில் ஆல்–ரவுண்டர் ரையான் மெக்லரன் 2–வது டெஸ்டில் ஆடமாட்டார் என்று அணி மேலாளர் முகமது மூசாஜீ தெரிவித்துள்ளார். முதலாவது டெஸ்டின் போது ஆஸ்திரேலிய புயல்வேக பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் பவுன்சராக வீசிய ஒரு பந்து அவரது தலைப்பகுதியை பதம் பார்த்தது. இதில் உள்காயம் ஏற்பட்டிருப்பதை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. 3–வது டெஸ்டில் இடம் பெறுவாரா? என்பது அடுத்த வாரம் திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் என்றும் மூசாஜீ குறிப்பிட்டார். image: category: |
| ‘காங்கிரசும் ஊழலும் இரட்டை சகோதரிகள்’ நரேந்திர மோடி கடும்தாக்கு Posted: 18 Feb 2014 11:19 AM PST பெங்களூர், "காங்கிரசும் ஊழலும் இரட்டை சகோதரிகள்'' என்று நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசினார். நரேந்திர மோடி பிரசாரம் கர்நாடக பா.ஜனதா சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தாவணகெரேயில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:– "சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் நாட்டின் தென் திசைக்கு வர நேரம் உள்ளது. ஆனால் ஆந்திராவுக்கு செல்ல அவர்களுக்கு நேரம் இல்லை. ஏனென்றால் காங்கிரசால் தெலுங்கானா மற்றும் சீமாந்திரா பகுதி மக்களின் உணர்வுகள் காயப்படுத்தப்பட்டு உள்ளது. தெலுங்கானா அமைந்த பிறகு சீமாந்திரா பகுதி மக்களின் கவலைகளுக்கு காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டும். அங்குள்ள மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்யவில்லை. கடந்த 2009–ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றிதான் அந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க உதவியது. ஆனால் இன்று ஆந்திர மக்கள் துயரத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் அந்த மக்களிடம் பேசுவதற்குகூட தயாராக இல்லை. அவர்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது இல்லை. சரியான தருணம் நாட்டு மக்கள் என் மீது வைத்துள்ள விசுவாசம், நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். ஊழல் இல்லாத, பாரபட்சமற்ற ஆட்சி நிர்வாகத்தை நடத்துவேன் என்று உறுதி அளிக்கிறேன். வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோல்வி அடைய செய்ய வேண்டும். அதிகாரத்தில் இருப்பதால் அக்கட்சி தலைவர்கள் மதிமயக்கத்தில் உள்ளனர். அதனால் மக்களின் வலியை, பிரச்சினைகளை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. காங்கிரசுக்கு பாடம் கற்பிக்க இது சரியான தருணம். குடும்ப வாரிசு, ஜாதிகள், சந்தர்ப்பவாதம், ஊழல் என்ற 4 வகையான குணங்கள் நாட்டை தொற்றிக்கொண்டுள்ளன. இந்த 4 குணங்களும் காங்கிரசில் உள்ளது. இதற்கு முடிவு கட்ட வேண்டும். ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் விலைவாசியை கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் கூறியது. ஆனால் நடந்தது என்ன? கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பல மடங்கு விலைவாசி அதிகரித்து உள்ளது. காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறது. ஒரு பிரிவு மற்றும் மேல்நிலையில் உள்ள வர்க்கத்தினரை ஈர்க்கும் அக்கட்சி, ஏழைகள், சாமானிய மக்களை பற்றி சிந்திப்பது இல்லை. இரட்டை சகோதரிகள் ஊழல் குற்றச்சாட்டில் பா.ஜனதா ஆட்சியில் மந்திரிகள் ஜெயலில் தள்ளப்பட்டனர் என்று ராகுல் காந்தி சொல்கிறார். மக்களை தவறான முறையில் திசை திருப்புவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு மந்திரி ஜெயிலுக்கு சென்றார். இதை அவர்(ராகுல் காந்தி) சொல்ல வேண்டும். அது மட்டுமல்ல, அவர் என்ன குற்றத்திற்காக ஜெயிலில் அடைக்கப்பட்டார் என்பதையும் அவர் சொல்ல வேண்டும். உண்மையில் சொல்லப்போனால் காங்கிரசும் ஊழலும் இரட்டை சகோதரிகள். எங்காவது காங்கிரஸ் சென்றால் அங்கு ஊழலும் பின் தொடர்ந்து செல்லும். எங்காவது ஊழல் இருந்தால் அங்கு நிச்சயம் காங்கிரசும் இருக்கும். மக்கள் காங்கிரசை ஒதுக்காவிட்டால் நமது நாடு ஊழலற்ற நாடாக மாறமுடியாது. இவ்வாறு நரேந்திரமோடி கூறினார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 18 Feb 2014 10:59 AM PST புதுடெல்லி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பரபரப்பான இந்த தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டு உள்ளது. தூக்கு தண்டனை மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாட்டுக்கு வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் மனித குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 1991–ம் ஆண்டு மே மாதம் 21–ந் தேதி இந்த துயர சம்பவம் நடந்தது. நாட்டை உலுக்கிய இந்த படுகொலை குறித்து சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினார்கள். சென்னை அருகே உள்ள பூந்தமல்லி தடா கோர்ட்டில் நடைபெற்ற கொலை வழக்கு விசாரணையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், முருகன் மனைவி நளினி உள்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற மேல் முறையீட்டு விசாரணையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்ற 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் தமிழக கவர்னர் பாத்திமாபீவி உத்தரவின் பேரில், நளினியின் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. சீராய்வு மனு இந்த நிலையில், தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருடைய கருணை மனுக்கள், 11 ஆண்டுகளுக்கு பிறகு அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீலால் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து 3 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த 2011–ம் ஆண்டு செப்டம்பர் 9–ந் தேதி அவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதித்தது. இதற்கிடையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட தங்களுடைய கருணை மனுக்கள் 11 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்ததாலும், ஏற்கனவே 23 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து இருப்பதாலும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அதைத் தொடர்ந்து ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்த ரிட் மனுக்கள் மீதான விசாரணையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு ஒன்றாக விசாரணை நடைபெற்றது. கடந்த 4–ந் தேதி நடைபெற்ற இறுதிகட்ட விசாரணையின்போது இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில், தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வு நேற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. தூக்கு தண்டனை ரத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 3 பேரும் இதுவரை அனுபவித்துள்ள ஜெயில் தண்டனையை கணக்கில் கொண்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர். மத்திய அரசு கருணை மனுக்களை முறையாக, விரைவாக பரிசீலனை செய்து முடிவை அறிவிக்க வேண்டும் என்றும், கருணை மனுக்களை பரிசீலனை செய்வதில் தேவையற்ற தாமதத்தை தவிர்க்கும்படி ஜனாதிபதிக்கு மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். மரண தண்டனைக்கு எதிரான கருத்து உலகம் முழுவதும் பரவலாகிவரும் தற்போதைய சூழ்நிலையில், தூக்கு தண்டனையில் இருந்து 3 பேரை காப்பாற்றிய இந்த தீர்ப்பில், தலைமை நீதிபதி பி.சதாசிவம் மேலும் கூறி இருப்பதாவது:– ஏற்க முடியாது ஜனாதிபதியின் அதிகாரத்தில் தலையிடுவதில் இந்த நீதிமன்றத்துக்கு கண்டிப்பாக மகிழ்ச்சி ஏதும் இல்லை. ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களின் மீது விரைந்து முடிவெடுப்பதற்காக, ஜனாதிபதியின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்த மூவரும் கருணைக்கு உரியவர்கள் அல்ல என்றும், அவர்கள் தங்களின் குற்றத்துக்கு எந்த வகையிலும் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும், அவர்களின் கருணை மனுவின் மீது பரிசீலனை செய்வதற்கு ஏற்பட்ட தாமதத்தினால் அவர்களுக்கு எவ்வகையான பிரச்சினையும் ஏற்படவில்லை; அவர்கள் சிறையில் தங்கள் நாட்களை மகிழ்ச்சியுடன்தான் கழித்து வருகின்றனர் என்றும் கூறும் மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. தண்டனை குறைப்பு ஏன்? இவர்கள் மூவரும் மீண்டும் மீண்டும் ஜனாதிபதிக்கு தங்கள் கருணை மனுக்களின் மீது பல நினைவூட்டல் கடிதங்களையும், மனுக்களையும் அனுப்பியிருக்கிறார்கள். இவை அனைத்தும் அவர்கள் அடைந்த மனஉளைச்சலை காண்பிக்கின்றன. அவர்களின் கருணை மனுவின் மீது முடிவெடுப்பதில் அரசு எடுத்துக்கொண்ட தேவையற்ற காலதாமதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற கருணை மனுக்களின் விஷயத்தில் மத்திய அரசு சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கடந்த ஜனவரி 21–ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் (சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உள்பட 15 பேருடைய தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது) வரையறுத்துள்ள கோட்பாடுகளின் அடிப்படையில் இவர்களின் கருணை மனுவின் மீதான தேவையற்ற மற்றும் விளக்கம் தரவியலாத தாமதம் இவர்களின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான காரணமாக அமைகிறது. இவர்கள் மூவரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்வதில் ஏற்பட்ட தேவையற்ற காலதாமதத்தை கருத்தில் கொண்டு இவர்களின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. மாநில அரசு முடிவு இந்த வழக்கில் மூவரும் 23 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தங்கள் வாழ்க்கையை கழித்திருக்கிறார்கள். குற்றவியல் சட்டத்தின் 432 மற்றும் 433–வது பிரிவுகளின் அடிப்படையில், மாநில அரசு தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும், சட்ட ரீதியான வகையிலும் இவர்களுடைய சிறை தண்டனை காலத்தை பற்றிய முடிவை எடுக்கலாம். இவ்வாறு தலைமை நீதிபதி சதாசிவம் கூறி இருக்கிறார். மகிழ்ச்சி–வரவேற்பு சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தமிழக அரசியல் தலைவர்கள், தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட 3 பேருடைய குடும்பத்தினர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அவர்கள், 3 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கில், தூக்கு தண்டனை கைதிகள் சார்பில் பிரபல மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு வக்கீல்கள் ஆஜராகி வாதாடினார்கள். image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |