Daily Thanthi |
- மாசி மக தீர்த்தவாரி உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
- மதசார்பற்ற கொள்கையில் பா.ஜனதாவுக்கு நம்பிக்கை இல்லை: சித்தராமையா குற்றச்சாட்டு
- அமெரிக்காவுக்கு ஆப்கான் தலீபான்கள் எச்சரிக்கை ‘‘சோவியத் ரஷியாவுக்கு ஏற்பட்ட கதி உங்களுக்கும் ஏற்படும்’’
- இந்திய வம்சாவளி எம்.பி. மீது ஆபாச பட புகார் ரகசியத்தை வெளியிட்ட ஜெர்மனி மந்திரி விலகல்
- கலப்பு திருமணம் செய்த ஜோடிகளுக்கு பாராட்டு விழா கைக்குழந்தைகளுடன் வந்து பரிசு பெற்றனர்
- உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மீது புதிய நிர்ப்பந்தம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவிப்பு
- துபாயில் கட்டிடத்தில் இருந்து விழுந்து இந்தியப்பெண் சாவு
- நியூசிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்ட்: இந்தியா 438 ரன்கள் குவிப்பு ரஹானே அபார சதம்
- டிராவிட், தெண்டுல்கருக்கு நன்றி
- சூளகிரி அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் தனியார் நிறுவன ஊழியரை தந்தத்தால் யானை குத்திக்கொன்றது
| மாசி மக தீர்த்தவாரி உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் Posted: 15 Feb 2014 01:18 PM PST வில்லியனூர், புதுவை மாநிலம் திருக்காஞ்சி மற்றும் வீராம்பட்டினம் பகுதிகளில் நேற்று மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரி புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவில் மற்றும் திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றின் வடக்கே அமைந்துள்ள காசி விசுவநாதர் கோவிலிலும் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இந்த இரண்டு கோவில்களிலும் தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடைபெற்றது. தற்காலிக பாதை இரண்டு கோவில்களுக்கும் பக்தர்கள் சென்று தரிசிக்க வசதியாக சங்கராபரணி ஆற்றின் குறுக்கே மண்கொட்டி தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. மேலும் இரு கோவில்களிலும் நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்பதற்காக திருக்காஞ்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கோவில்களின் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சங்கராபரணி ஆற்றின் கரைக்கு எடுத்துவரப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. புனித நீராடல் இந்த உற்சவத்தில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். மேலும் பலர் தங்கள் முன்னோர் களுக்கு ஆற்றின் கரையில் திதி கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தேனீ.ஜெயக் குமார், நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். வில்லியனூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இலவச நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந் தது. அதனை காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கண்ணபிரான் தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. வீராம்பட்டினம் புதுவை மாநிலம் வீராம்பட்டினத்தில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நேற்று காலை நடைபெற்றது. இந்த உற்சவத்தில் வீராம்பட்டினம், முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம், பாகூர், தேங்காய்திட்டு உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், வீராம்பட்டினம் கடற்கரைக்கு எடுத்துவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அதையொட்டி அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சாமி உற்சவ மூர்த்திகள் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க, ரூரல் போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காந்தாரியம்மன் கோவில் புதுவை மாநிலம் பெரிய காலாப்பட்டில் உள்ள காந்தாரியம்மன் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நேற்றுகாலை பெரிய காலாப்பட்டு கடற்கரையில் நடைபெற்றது. இதற்காக கடற்கரையில் பெரிய அளவில் பந்தல் போடப்பட்டு இருந்தது. பெரியகாலாப்பட்டு காந்தாரியம்மன் கோவில், விநாயகர், கெங்கையம்மன், பாதாள கெங்கையம்மன், அய்யனாரப்பன் உள்ளிட்ட கோவில்களில் இருந்தும், தமிழக பகுதியான நெசல், ஒழியந்தட்டு, கிளியனூர், பிள்ளைச்சாவடி உள்பட 15 ஊர்களில் உள்ள கோவில்களில் இருந்தும் சாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பெரியகாலாப்பட்டு கடற்கரைக்கு எடுத்துவரப்பட்டன. இங்கு கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்குள் அடுத்தடுத்து சாமி சப்பரங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கடலில் புனிதநீராடி, பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. image: category: |
| மதசார்பற்ற கொள்கையில் பா.ஜனதாவுக்கு நம்பிக்கை இல்லை: சித்தராமையா குற்றச்சாட்டு Posted: 15 Feb 2014 12:25 PM PST பெல்காம், மதசார்பற்ற கொள்கையில் பா.ஜனதாவுக்கு நம்பிக்கை இல்லை என்று சித்தராமையா குற்றம்சாட்டினார். பெல்காமில் நேற்று நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், முதல்–மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– நம்பிக்கை இல்லை பா.ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது மாநிலத்தின் சொத்துக்களை கொள்ளையடித்தது. முதல்–மந்திரியாக இருந்த எடியூரப்பா மற்றும் சில மந்திரிகள் முறைகேடு புகாரில் சிறைக்கு சென்று வந்தனர். குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடியை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க செய்ய பா.ஜனதா தலைவர்கள் கர்நாடகத்துக்கு அழைத்து வருகிறார்கள். கோத்ரா சம்பவத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அத்தகையவர்களால் நாட்டை ஆள முடியாது. பா.ஜனதாவுக்கு மதசார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லை. சாதி மற்றும் மதத்தின் பெயரில் நாட்டை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சமூக நீதி நான் தாக்கல் செய்த பட்ஜெட், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டது. விவசாயிகள், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள் உள்பட அனைத்து சமுதாய முன்னேற்றத்துக்கும் அது உதவியாக இருக்கும். நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம் உள்பட அனைத்து துறைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் அளித்த 169 அம்சங்களில் 100–க்கும் அதிகமானவற்றை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு உள்ளோம். சட்டசபை தேர்தலில் உங்களின் (பொதுமக்கள்) ஆசிர்வாதத்துடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை மீண்டும் ஆதரித்து, கட்சியின் தேசிய தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தியின் கைகளை பலப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சித்தராமையா கூறினார். பரமேஸ்வர் காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர் பேசுகையில், 'கடந்த சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு பிறகு மாநிலத்தின் முன்னேற்றத்துக்கான நிர்வாகத்தை அளித்து வருகிறோம். முதல்–மந்திரி சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டில், அனைத்து சமுதாய முன்னேற்றத்துக்கும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. நீர்ப்பாசனம் உள்பட அனைத்து துறைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டு கால பா.ஜனதா அரசு ஊழலில் மூழ்கி மக்களின் நலனை காற்றில் பறக்க விட்டு விட்டது' என்றார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 15 Feb 2014 12:01 PM PST காபூல், அமெரிக்காவுக்கு ஆப்கான் தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், ''25 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ரஷியாவுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் ஏற்படும்'' என கூறி உள்ளனர். சோவியத் படைகள் வெளியேறிய நாள் அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷியாவுக்கும் இடையே பனிப்போர் நிலவிய காலகட்டம் அது. இதில் ஆப்கானிஸ்தானும் அப்போது அகப்பட்டுக்கொண்டது. ஆப்கானிஸ்தானுடன் சோவியத் ரஷியா ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தியது. ஒன்றரை லட்சம் சோவியத் ரஷிய வீரர்கள் ஆப்கானிஸ்தானுக்கு வந்தனர். ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த ரஷியப்படைகள், 1989–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15–ந்தேதி அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதன் 25–வது ஆண்டு விழா ஆப்கானிஸ்தானில் நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று அங்கு தேசிய விடுமுறையும் விடப்பட்டது. தலீபான்கள் எச்சரிக்கை இந்தக் கொண்டாட்டங்களையொட்டி ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான் தீவிரவாதிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் செய்தித்தொடர்பாளர் காரி யூசுப் அகமதி கையெழுத்திட்ட இந்த அறிக்கையில், சோவியத் ரஷியப் படைகளை முஜாகிதீன் வீரர்கள் துரத்தியடித்ததைப் போல அமெரிக்கப் படைகளையும் ஆப்கான் துரத்தியடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:– 25 ஆண்டுகளுக்கு முன் நமது நாட்டில் இருந்து சோவியத் ரஷியப் படைகள் தப்பி ஓடின. அதே விதியைத்தான் இன்றைக்கு அமெரிக்காவும் சந்திக்கப்போகிறது. அந்தக் காலத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்பட்ட அதே கதியை இன்றைய அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் ஏற்படுத்த வேண்டும். உலக வரைபடத்தில் இருந்து... அமெரிக்காவுக்கு நாங்கள் நினைவூட்ட விரும்புகிறோம். நாங்கள் ஆக்கிரமிப்பாளர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை (சோவியத் ரஷியா) உலக வரைபடத்தில் இருந்தே நீக்கி விட்டோம். அல்லா விரும்பினால், இதே நிலைதான் உங்களுக்கு ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 2001–ம் ஆண்டு செப்டம்பர் 11–ந்தேதி நடந்த அமெரிக்க தாக்குதல்களில் தொடர்புடைய அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தந்த ஆப்கான் தலீபான்கள் ஆட்சியை அமெரிக்கா முறியடித்தது. அது முதற்கொண்டு அமெரிக்கப் படைகள் ஆப்கானில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. image: category:Tagging: |
| இந்திய வம்சாவளி எம்.பி. மீது ஆபாச பட புகார் ரகசியத்தை வெளியிட்ட ஜெர்மனி மந்திரி விலகல் Posted: 15 Feb 2014 11:53 AM PST பெர்லின், ஜெர்மனியில் சர்வதேச அளவிலான குழந்தைகள் ஆபாச பட குழுவினருடன் இந்திய வம்சாவளி முன்னாள் எம்.பி.யான செபாஸ்டியன் இடாத்திக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரிடம் குழந்தைகள் ஆபாச படங்கள், வீடியோக்கள் இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதில், செபாஸ்டியனின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. போலீஸ் விசாரணையும் நடைபெற்று வருகிறது. ஆபாசப்பட விவகாரத்தில், செபாஸ்டின் இடாத்தி மீதான விசாரணை குறித்த தகவல்கள் ஏற்கனவே கசிய விடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று ஜெர்மனி உணவு மற்றும் விவசாயத்துறை மந்திரி ஹான்ஸ் பீட்டர் பிரடெரிக் பதவி விலகினார். செபாஸ்டியன் இடாத்தி மீதான விசாரணை குறித்த தகவல்களை அவரது சமூக ஜனநாயக கட்சித்தலைவரிடம் மந்திரி ஹான்ஸ் கசிய விட்டுள்ளார். இதை அந்த கட்சித்தலைவரே வெளியிட்டதால், மந்திரி ஹான்ஸ் மாட்டிக்கொண்டார். அதனால் அவரது பதவி பறிபோய் உள்ளது. image: category: |
| கலப்பு திருமணம் செய்த ஜோடிகளுக்கு பாராட்டு விழா கைக்குழந்தைகளுடன் வந்து பரிசு பெற்றனர் Posted: 15 Feb 2014 11:48 AM PST கோவை, கலப்பு திருமணம் செய்த 15 காதல் ஜோடிகளுக்கு கோவையில் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. இதில் சில ஜோடிகள் கைக்குழந்தைகளுடன் வந்து பரிசு பெற்றனர். 'காதல் திருமணம் செய்து கொண்ட தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக' தெரிவித்தனர். காதல் ஜோடிகளுக்கு பாராட்டு காதலர் தினத்தையொட்டி, கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகளுக்கு பாராட்டு விழா கோவை சித்தாபுதூரில் நேற்று நடைபெற்றது. கலப்பு திருமணம் புரிந்தோர் நலச்சங்க தலைவர் கு.ராமகிருஷ்ணன், வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட 15 ஜோடிகளுக்கு பதக்கம் மற்றும் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர். விழாவில் கு.ராமகிருஷ்ணன் பேசும்போது, 'காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ஆண்டு தோறும் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. காதல் கலப்பு திருமணம் காரணமாக ஜாதி, மத பாகுபாடுகள் குறைய வாய்ப்பு ஏற்படுவதால் இதனை ஊக்கப்படுத்தி வருகிறோம்' என்று தெரிவித்தார். கைக்குழந்தைகளுடன் கோவை உள்பட பல்வேறு இடங்களை சேர்ந்த 15 ஜோடிகள் மகிழ்ச்சியுடன் இந்த விழாவில் கலந்துகொண்டனர். சத்தியம்-ராஜேஸ்வரி, கோபி-எலிசிஜா ஆகியோர் ஒரு வயது கைக்குழந்தையுடன் வந்து இருந்தனர். அவர்கள் கூறும்போது, காதலித்து திருமணம் செய்ததால் நாங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறோம். ஆரம்பத்தில் எங்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்தாலும், தற்போது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சந்தோஷமாக இருக்கிறோம். உண்மையான காதலுக்கு ஊக்கம் அளிக்கும். இதுபோன்ற விழாக்கள் பாராட்டுதலுக்குரியது என்று தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ம.சண்முகசுந்தரம், இ.மு.சாஜித், ராசகனி, திருப்பூர் தமிழ்ச்செல்வி, பா.ம.ஆறுமுகம், கதிரவன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ராமசாமி, கோபால், வெ.ஆறுச்சாமி, தமிழரசன், இளங்கோ வக்கீல் முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஜாதி, மத பிரச்சினைகள் இருக்க கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் புதுவை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. image: category: |
| உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மீது புதிய நிர்ப்பந்தம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவிப்பு Posted: 15 Feb 2014 11:43 AM PST வாஷிங்டன், சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டுப்போர் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இதில் கொல்லப்பட்டு விட்டனர். அண்டை நாடான சிரியாவில் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நிலையில், ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லாவுடன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சன்னிலேண்ட்சில் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் தொடக்கத்திலேயே அப்துல்லாவிடம் ஒபாமா, ஜோர்டானுக்கு பொருளாதார உதவிகள் செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். 2 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தைக்குப்பின்னர் ஒபாமா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''சிரியாவில் நடைபெற்று வருகிற மோதல்கள் உடனடியாக தீர்க்கப்பட்டு விடும் என நான் எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் அங்கு மனித நேயப்பணிகள் நடைபெறுவதற்கு உதவுகிற விதத்தில் உடனடியாக சில நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இதில் நாம் சில மத்தியஸ்தங்களை செய்ய வேண்டும். அந்த விதத்தில் ஆசாத் அரசின் மீது மேலும் சில புதிய நிர்ப்பந்தங்களை ஏற்படுத்த வேண்டும்'' என்றார். image: category:News Group Category: |
| துபாயில் கட்டிடத்தில் இருந்து விழுந்து இந்தியப்பெண் சாவு Posted: 15 Feb 2014 11:39 AM PST துபாய், துபாயில் ஜூமாரியா ஏரி டவர்ஸ் என்ற இடத்தில் உள்ள பல மாடி கட்டிடத்தில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கீழே விழுந்து இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு வேலை பார்க்கும் வங்காளதேசத்தைச் சேர்ந்த துப்புரவு ஊழியர் உடனே கட்டிடத்தின் மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்தவர் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. image: category:Tagging: |
| நியூசிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்ட்: இந்தியா 438 ரன்கள் குவிப்பு ரஹானே அபார சதம் Posted: 15 Feb 2014 11:30 AM PST வெலிங்டன் வெலிங்டனில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்டில் இந்திய அணி ரஹானேவின் அபார சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்தது. வெலிங்டன் டெஸ்ட் இந்தியா–நியூசிலாந்து அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டன் பேசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இஷாந்த் ஷர்மா–முகமது ஷமி கூட்டணி முன்பு 'சரண்' அடைந்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 192 ரன்களில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. ஷிகர் தவான் 71 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. விக்கெட் தடுப்பாளராக இறக்கி விடப்பட்ட இஷாந்த் ஷர்மா (26 ரன், 50 பந்து) மேற்கொண்டு 40 நிமிடங்கள் தாக்குப்பிடித்து, அதுவும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழலை சமாளித்த விதம் ஆச்சரியப்படுத்தியது. மறுமுனையில் சதத்தை நெருங்கிய ஷிகர் தவான் 2 ரன்னில் 3–வது சதத்தை தவற விட்டார். டிம் சவுதியின் பந்து வீச்சில் தவான் (98 ரன், 127 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் வாட்லிங் 'டைவ்' அடித்து சூப்பராக பிடித்தார். அடுத்து வந்த ரோகித் ஷர்மா (0), அறிமுக வீரர் நீஷமின் பந்து வீச்சில் போல்டு ஆக, இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. அப்போது இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 162 ரன்களுடன் பரிதவித்தது. சரிவை தடுக்க உதவிய கோலி இப்படிப்பட்ட நெருக்கடிக்கு மத்தியில் ஜோடி சேர்ந்த விராட் கோலியும், அஜிங்யா ரஹானேவும் அணியை சரிவின் பிடியில் இருந்து மீட்பதற்கான பணியை கச்சிதமாக செய்தனர். ஸ்டெம்பை நோக்கி வரும் பந்துகளை தடுத்து ஆடுவது, ஸ்டம்பை விட்டு வெளியே சீறிப்பாயும் பந்துகளை தொடுவதை தவிர்ப்பது என்ற யுக்தியுடன் இவர்கள் விளையாடினர். இந்த தந்திரத்திற்கு ஓரளவு பலன் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். இதனால் இந்திய அணி மெல்லமெல்ல மீண்டதுடன், நியூசிலாந்தின் ஸ்கோரையும் மிஞ்சியது. இந்த ஜோடியை பிரிக்க நியூசிலாந்து 23 ஓவர்கள் செலவிட வேண்டி இருந்தது. நிதானமாக ஆடிய விராட் கோலி (38 ரன், 93 பந்து, 4 பவுண்டரி) அணியின் ஸ்கோர் 228 ரன்களை எட்டிய போது, கேட்ச் ஆனார். இதைத் தொடர்ந்து ரஹானேவுடன் கேப்டன் டோனி கைகோர்த்தார். தனது இன்னிங்சை அட்டகாசமாக தொடங்கிய டோனி நீல் வாக்னெரின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விரட்டியடித்து உற்சாகப்படுத்தினார். டோனி களத்திற்குள் நுழைந்த பிறகு தான் ரன் வேகமும் சூடுபிடித்தது. அவர் 54 பந்துகளில் 29–வது டெஸ்ட் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதற்கிடையே 93 பந்துகளில் அரைசதத்தை கடந்த ரஹானேவும் அதன் பிறகு வேகம் காட்டினார். ரஹானே சதம் ரஹானே–டோனி பார்ட்னர்ஷிப் 7–வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்த நிலையில் முடிவுக்கு வந்தது. டோனி 68 ரன்களில் (86 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அதைத் தொடர்ந்து களம் புகுந்த ரவீந்திர ஜடேஜா தனது பங்குக்கு அதிரடியாக 26 ரன்கள் (16 பந்து, 6 பவுண்டரி) எடுத்தார். மறுபக்கம் நிலைத்து நின்று, நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே, பவுண்டரி அடித்து சதத்தை தொட்டார். 5–வது டெஸ்டில் விளையாடும் ரஹானேவின் முதல் சதம் இதுவாகும். அவரது அழுத்தமான பேட்டிங் இந்திய அணி 400 ரன்களை கடக்க பக்கபலமாக இருந்தது. இறுதியில் அவர் 118 ரன்களிலும் (158 பந்து, 17 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஜாகீர்கான் 22 ரன்களிலும் (19 பந்து, 4 பவுண்டரி) ஆட்டம் இழக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இது நியூசிலாந்தின் முதல் இன்னிங்சை விட 246 ரன்கள் கூடுதலாகும். அடுத்து 2–வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்து அணி, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே மேலும் 222 ரன்கள் சேர்க்க வேண்டி இருப்பதால், இந்த டெஸ்டில் இந்தியாவின் கை முழுமையாக ஓங்கியுள்ளது. 3–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. ஸ்கோர் போர்டு முதல் இன்னிங்ஸ் நியூசிலாந்து 192 இந்தியா தவான்(சி)வாட்லிங்(பி)சவுதி 98 விஜய்(சி)வாட்லிங்(பி)சவுதி 2 புஜாரா எல்.பி.டபிள்யூ(பி)பவுல்ட் 19 இஷாந்த் ஷர்மா (சி) வாட்லிங் (பி) பவுல்ட் 26 கோலி (சி) ரூதர்போர்டு (பி) வாக்னெர் 38 ரோகித் ஷர்மா (பி) நீஷம் 0 ரஹானே(சி)பவுல்ட்(பி)சவுதி 118 டோனி(சி)வாட்லிங்(பி)பவுல்ட் 68 ஜடேஜா (சி) புல்டான் (பி) வாக்னெர் 26 ஜாகீர்கான் (சி) வாட்லிங் (பி) வாக்னெர் 22 முகமது ஷமி (நாட்–அவுட்) 0 எக்ஸ்டிரா 21 மொத்தம் (102.4 ஓவர்களில் ஆல்–அவுட்) 438 விக்கெட் வீழ்ச்சி: 1–2, 2–89, 3–141, 4–162, 5–165, 6–228, 7–348, 8–385, 9–423 பந்து வீச்சு விவரம் டிரென்ட் பவுல்ட் 26–7–99–3 டிம் சவுதி 20–0–93–3 வாக்னெர் 22.4–3–106–3 ஆண்டர்சன் 16–2–66–0 நீஷம் 18–2–62–1 2–வது இன்னிங்ஸ் நியூசிலாந்து புல்டான் எல்.பி.டபிள்யூ (பி) ஜாகீர் 1 ரூதர்போர்டு (நாட்–அவுட்) 18 வில்லியம்சன் (நாட்–அவுட்) 4 எக்ஸ்டிரா 1 மொத்தம் (9 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு) 24 விக்கெட் வீழ்ச்சி: 1–1 பந்துவீச்சு விவரம் இஷாந்த் ஷர்மா 3–0–9–0 ஜாகீர்கான் 3–2–7–1 முகமது ஷமி 3–0–8–0 image: category: |
| டிராவிட், தெண்டுல்கருக்கு நன்றி Posted: 15 Feb 2014 11:25 AM PST ''எனது மகிழ்ச்சியை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. டெஸ்ட் சதம் எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. அதிலும் இது எனது முதல் சதம் என்பதால் நீண்ட காலம் நினைவில் நிற்கும். ராகுல் டிராவிட் எனது முன்மாதிரி (ரோல் மாடல்). சிறு வயதில் இருந்தே அவரது ஆட்டத்தை பார்த்து வளர்ந்தவன். அவருடன் இணைந்து இந்திய அணியிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் விளையாடி உள்ளேன். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அவருக்கு எனது நன்றி. இதே போல் சச்சின் தெண்டுல்கருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவரது கடைசி இரு டெஸ்டுகளின் போது, எனது பேட்டிங் திறமை குறித்து என்னிடம் பேசினார். 'உங்களது கடின உழைப்பு, உடல்தகுதியை நான் கவனித்து வருகிறேன். பொறுமையுடன் இருங்கள். உங்களுக்கான வாய்ப்பு வரும்' என்று எனக்கு ஆலோசனை வழங்கினார். அவருக்கும் நன்றி'' –இந்திய வீரர் ரஹானே. image: category: |
| சூளகிரி அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் தனியார் நிறுவன ஊழியரை தந்தத்தால் யானை குத்திக்கொன்றது Posted: 15 Feb 2014 11:25 AM PST சூளகிரி அருகே 3 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதில் ஒரு யானை தனியார் நிறுவன ஊழியரை தந்தத்தால் குத்திக்கொன்றது. இதையடுத்து வனத்துறையினரை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். யானைகள் அட்டகாசம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது போடூர்பள்ளம் காடு. இங்கு கடந்த சில நாட்களாக 3 யானைகள் முகாமிட்டு, அட்டகாசம் செய்து வருகின்றன. பகலில் காட்டுக்குள் இருக்கும் இந்த யானைகள் இரவு ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவே பயந்து வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த 3 யானைகள் உணவுக்காக அருகில் இருந்த கிராமங்களுக்குள் புகுந்தன. அங்கு விவசாய பயிர்களை நாசம் செய்த அவை நேற்று காலை போடூர்பள்ளம், பாத்தகோட்டா வழியாக ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பக்கமாக வந்தன. ஏரியில் ஆனந்த குளியல் பின்னர் நெடுஞ்சாலையை கடந்த இந்த யானைகள், காமன்தொட்டி பக்கமுள்ள அட்டகுறுக்கி ஏரிக்கு சென்றன. அங்கு தண்ணீரை பார்த்ததும் ஆனந்தம் அடைந்த யானைகள் உள்ளே இறங்கி குளியல் போட்டன. இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். மேலும், பொதுமக்களும் அங்கு திரண்டு விட்டார்கள். இதையடுத்து வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால், ஏரியில் குளித்து கொண்டிருந்த யானைகள் பட்டாசு சத்தம் கேட்டதும், ஆவேசமடைந்து கரையேறின. பின்னர் 3 யானைகளும் தனித்தனியாக பிரிந்து பொதுமக்களை விரட்டத் தொடங்கின. இதை சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சூளகிரி அருகே உள்ள பன்னப்பள்ளியை சேர்ந்த சின்னவீரப்பா என்பவரின் மகன் வெங்கடேசன் (வயது 32) தன்னை விரட்டிய ஆண் யானையை கண்டதும் தப்பி ஓடினார். அவர் அட்டகுறுக்கி ஏரியில் குதித்து, தப்ப முயன்றார். ஆனால், யானையோ மதம் பிடித்ததுபோல பயங்கர சத்தத்துடன் பிளிறியபடி அங்கும், இங்கும் ஓடியது. அப்போது கரையேறி தப்பிக்க முயன்ற வெங்கடேசன் எதிர்பாராதவிதமாக அந்த ஆண் யானையிடம் சிக்கிக்கொண்டார். அவரை தும்பிக்கையால் தூக்கிய யானை கீழே போட்டு தந்தத்தால் அவரது இடுப்புக்கு கீழே குத்தியது. மேலும், தும்பிக்கையால் தூக்கி சுற்றி வீசியது. இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பின்னர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த வெங்கடேசனை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. யானை தாக்கியதில் பலியான வெங்கடேசன் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். மேலும், விவசாயமும் செய்து வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இதற்கிடையே, யானைகளின் அட்டகாசத்தை தடுக்க தவறியதாக வனத்துறையை கண்டித்து ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், காமன்தொட்டியில் உள்ள பாத்தகோட்டா பிரிவு சாலை அருகில் பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையின் இருபுறமும் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையில் நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபி, இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ் (சூளகிரி), சங்கர் (சிப்காட்), தாமரைச்செல்வன் (அட்கோ), வெங்கடேசன் (ஓசூர்டவுன்) மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம் பேசிய பொதுமக்கள், "யானைகளை விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை" என்று ஆவேசத்துடன் கூறினார்கள். இதைத் தொடர்ந்து யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இருந்தபோதும், பொதுமக்கள் மறியலை கைவிடாமல் அப்படியே அமர்ந்திருந்தார்கள். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து விரட்டினார்கள். பின்னர் போக்குவரத்து சீரானது. இந்த சாலை மறியல் காரணமாக ஓசூர்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

தந்தத்தால் குத்திக்கொன்றது
சாலை மறியல்
போலீஸ் தடியடி