Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: யுவராஜ்சிங்கை ரூ.14 கோடிக்கு பெங்களூர் அணி எடுத்தது தினேஷ் கார்த்திக், பீட்டர்சனுக்கு ‘ஜாக்பாட்’

Posted: 12 Feb 2014 12:06 PM PST

பெங்களூர்

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான ஏலத்தில் இந்திய வீரர் யுவராஜ்சிங்கை அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு பெங்களூர் அணி எடுத்தது.

ஐ.பி.எல். ஏலம்

7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் இரண்டு நாள் மெகா ஏலம் பெங்களூரில் நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. மொத்தம் 514 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் வகித்தனர். இதில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்கள் 169 இந்தியர் உள்பட 219 பேர். உள்ளூர் மற்றும் முதல்தர போட்டிகளில் மட்டும் ஆடியவர்களின் எண்ணிக்கை 225 இந்தியர் உள்பட 295 பேர்.

இந்த முறை ஏலத்தில் சில புதிய விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டன. முதல் முறையாக ஏலத்தின் தொகை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிடப்பட்டது. முதல் தடவையாக உள்ளூர் வீரர்களும் ஏலத்திற்கு இழுக்கப்பட்டனர். 'மேட்ச் கார்டு' என்ற ஜோர்க்கர் கார்டு முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக தலா 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 'மேட்ச் கார்டு' சலுகை அமையும். தங்கள் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட ஒரு வீரரை மீண்டும் வாங்க விரும்பினால், 'மேட்ச் கார்டை' பயன்படுத்தி ஏலத்தில் கேட்கப்பட்ட அதிக தொகையை கொடுத்து வாங்க முடியும் என்பதே இதன் சிறப்பம்சம்.

 

இது போன்ற சுவாரஸ்யமான விதிகளுடன் காலை 9.30 மணிக்கு ஏலம் தொடங்கியது. 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் மேட்லி ஏலத்தை நடத்தினார்.

பீட்டர்சன் ரூ.9 கோடி

முதல் வீரராக தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய் ஏலத்திற்கு வந்தார். இவரது அடிப்படை விலையான ரூ.2 கோடியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தை தொடங்கியது. பிறகு டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஏலத்தில் குதிக்க, சென்னை அணி ஒதுங்கிக் கொண்டது. சில நிமிடங்களில் அது டெல்லி டேர்டெவில்ஸ்–ஐதராபாத் சன்ரைசர்ஸ் இடையிலான நேரடி போட்டியாக மாறியது. இறுதியில் டெல்லி அணி ரூ.5 கோடிக்கு விஜயை வாங்கியது.

அடுத்து 33 வயதான இங்கிலாந்து முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனின் பெயர் ஏலத்தில் வாசிக்கப்பட்டது. அவரை சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரேயடியாக நீக்கி விட்டதால் இந்த முறை அவரால் ஐ.பி.எல். சீசனில் முழுமையாக பங்கேற்க முடியும். இதனால் அவருக்கு திடீரென மவுசு கூடியது. அவரை இழுக்க சென்னை, கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் முயற்சித்தன. ரூ.2 கோடியில் ஆரம்பித்த தொகையை சென்னை அணி ரூ.8½ கோடியாக உயர்த்தியது. ஐதராபாத் ரூ.9 கோடிக்கு கேட்டது. இதனால் ஐதராபாத் அணிக்கு பீட்டர்சன் விற்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணி மேட்ச் கார்டு சலுகையை பயன்படுத்தி அவரை ரூ.9கோடிக்கு தங்கள் அணிக்கு வாங்கிக் கொண்டது. பீட்டர்சன் முந்தைய சீசனில் அந்த அணிக்காகத் தான் விளையாடி இருந்தார். பீட்டர்சன் அந்த அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கோடிகளில் ஜொலிக்கும் யுவராஜ்

ஏலத்தில் அனைவரையும் வாய்பிளக்க வைத்தவர், முத்திரை வீரர் அந்தஸ்துடன் களம் இறங்கிய யுவராஜ்சிங் தான். இந்த அளவுக்கு ஜாக்பாட் அடிக்கும் என்று அவரே நினைத்திருக்கமாட்டார். 2011–ம் ஆண்டு உலக கோப்பை நாயகனான யுவராஜ்சிங், அண்மை காலமாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பார்மிலும் இல்லை.

ஆனாலும் அவரை எப்படியாவது தங்கள் அணிக்கு மடக்கி விட வேண்டும் என்பதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி உறுதியாக இருந்தது. பெங்களூர்–பஞ்சாப் இடையே போட்டி நிலவிய நிலையில், படிப்படியாக அவரது ரேட்டை ரூ.10 கோடிக்கு பெங்களூர் உயர்த்தியது. அத்துடன் பஞ்சாப் விலகிக் கொள்ள, யுவராஜ்சிங் ரூ.10 கோடிக்கு பெங்களூருக்கு ஒதுக்கப்படுகிறார் என்பதற்கான மணியை அடிப்பதற்கு ஏலம் நடத்திய ரிச்சர்ட் மேட்லி தயாரானார்.

ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை வாங்க விரும்புவதாக கூறி, அதன் அடையாளமாக பதாகையை தூக்கி காட்டியது. இதனை முதலில் ரிச்சர்ட் மேட்லி கவனிக்கவில்லை. இதனால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. பிறகு ரிச்சர்ட் மேட்லி, 'கொல்கத்தா அணி ஏலம் கேட்பதற்கான பதாகையை உயர்த்திய சமயத்தில், ஒருவர் குறுக்கே சென்று மறைத்து விட்டதால் நான் அதை கவனிக்கவில்லை. எனவே யுவராஜ்சிங் மீதான ஏலம் நீடிக்கிறது' என்றார்.

இதையடுத்து பெங்களூர்–கொல்கத்தாவும் வரிந்து கட்டி நின்றன. யுவராஜ்சிங்கின் விலை தாறுமாறாக எகிறியது. கடைசியில் அவரது விலையை ரூ.14 கோடிக்கு பெங்களூர் அணி தொட வைத்தது. ஆனால் அதற்கு மேல் கொண்டு செல்ல விரும்பாத கொல்கத்தா ஜகா வாங்கியது. இதையடுத்து ரூ.14 கோடிக்கு பெங்களூர் அணிக்கு யுவராஜ்சிங் விற்கப்பட்டார். ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு விலை போன வீரர் இவர் தான்.

வியக்க வைத்த தினேஷ் கார்த்திக்

எல்லோரது புருவத்தையும் உயர வைத்த இன்னொரு அதிர்ஷ்டசாலி யார் என்றால், அது இந்தியாவின் விக்கெட் கீப்பர் 28 வயதான தினேஷ் கார்த்திக் தான். தமிழகத்தை சேர்ந்த அவரது தொடக்க விலை ரூ.2 கோடியாகும். அவரை வாங்குவதற்கு டெல்லி–ஐதராபாத் அணிகள் விலை ஏற்றிக் கொண்டே போயின. டெல்லி அணி ரூ.10½ கோடிக்கு கேட்ட போது, ஐதராபாத் நகர்ந்து கொள்ள, கொல்கத்தா அணி கோதாவில் இறங்கியது. கொல்கத்தாவின் சவால் ரூ.12 கோடி வரை தொடர்ந்தது. இறுதியில் அவரை ரூ.12½ கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி சொந்தமாக்கியது.

இந்திய கேப்டன் டோனி விலையை சமன் செய்துள்ள தினேஷ் கார்த்திக், இத்தனைக்கும் தற்போது இந்திய அணியில் கூட இடம் பெறவில்லை. தினேஷ் கார்த்திக் முதல் ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்காக விளையாடினார். பிறகு மும்பை அணிக்கு தாவிய அவர், மறுபடியும் தாய் அணிக்கு திரும்புகிறார்.

ஷேவாக்கின் ஏமாற்றம்

டெல்லி அணி தக்க வைக்காததால் முதல் முறையாக ஏலத்திற்கு அனுப்பப்பட்ட அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக்கின் மதிப்பு, ரொம்ப குறைவாகவே காணப்பட்டது. ஆட்டத்திறன் பாதிப்பு காரணமாக இந்திய அணியில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்டிருப்பதால், பெரும்பாலான அணிகள் அவரை கண்டுகொள்ளவே இல்லை.

மும்பை–பஞ்சாப் அணிகள் மட்டும் 'சிக்னல்' காட்டியபடி சிறிதளவு உயர்த்தின. அவரை ரூ.3.20 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த ஒரே இந்தியரான ஷேவாக் சாதாரண தொகைக்கு விலை போனது பலரையும் வியப்படைய வைத்தது.

சென்னை அணி எப்படி?

ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக ரூ.60 கோடி வரை செலவு செய்யலாம். ஆனால் தக்க வைத்துக் கொள்ளப்படும் வீரர்களின் தொகை இதில் கழித்துக் கொள்ளப்படும். இந்த வகையில் சென்னை அணி கேப்டன் டோனி, ரெய்னா, வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகிய 5 வீரர்களை தொடர்ந்து வைத்துக் கொண்டதால் அவர்களுக்கான மொத்த ஊதியம் ரூ.39 கோடி போக மீதமுள்ள ரூ.21 கோடியை கொண்டு தான் எஞ்சிய வீரர்களை எடுக்க வேண்டி இருந்தது. இதனால் சென்னை அணி நிர்வாகிகள் ஏலத்தில் கவனமுடன் செயல்பட்டனர்.

தென்ஆப்பிரிக்க ஆல்– ரவுண்டர் ஜாக் காலிசை எடுக்க முயற்சித்து, அவரை அதிகபட்சமாக ரூ.5½ கோடி வரை சென்னை அணி கேட்டது. சென்னை அணிக்கு அவர் வழங்கப்படலாம் என்ற சூழலில், கொல்கத்தா அணி அவரை மேட்ச் கார்டை பயன்படுத்தி தட்டிப்பறித்து விட்டது. இதே போல் 'ஆஷஸ் ஹீரோ' ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனை ரூ.6 கோடி வரை கேட்டு சென்னை நிர்வாகிகள் முட்டி மோதினர். அவரை ரூ.6½ கோடிக்கு பஞ்சாப் அணி பெற்று விட்டது. பீட்டர்சன், முரளிவிஜயை வாங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட வியூகங்களும் தோல்வியிலேயே முடிந்தன.

சென்னை அணி வசம் ஒரே ஒரு மேட்ச் கார்டு மட்டுமே இருந்தது. பாப் டு பிளிஸ்சிஸ்சை (தென்ஆப்பிரிக்கா) டெல்லி அணி வாங்க முடிவு செய்து ரூ.4¾ கோடிக்கு கேட்ட போது, மேட்ச் கார்டை உபயோகப்படுத்தி அவரை மட்டும் சென்னை அணி தக்க வைத்துக் கொண்டது. வெஸ்ட் இண்டீசின் வெய்ன் சுமித் (ரூ.4½ கோடி), நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம்  (ரூ.3¼ கோடி ) ஆகியோரும் சென்னை அணி எடுத்த முக்கியமான வீரர்கள் ஆவர். மொத்தம் 8 வீரர்களை சென்னை அணி நேற்று வாங்கியது.

சென்னை அணி வசம் கையிருப்புத் தொகை குறைவாக இருந்ததால் எந்த வீரரையும் பெரிய அளவில் கேட்க இயலவில்லை. இதனால் கடந்த ஐ.பி.எல். சீசனில் 733 ரன்கள் குவித்து முதலிடம் வகித்த ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸ்சியையும் விட்டுக் கொடுக்க வேண்டியதாகி விட்டது. அவரை நடப்பு சாம்பியன் மும்பை இந்தியஸ் அணி ரூ.5 கோடிக்கு வளைத்து போட்டது.

மேக்ஸ்வெல்–ஆண்டர்சன்

வெளிநாட்டு வீரர்களில் ஆஸ்திரேலிய ஆல்–ரவுண்டர் கிளைன் மேக்ஸ்வெல்லும் நல்ல தொகைக்கு விற்கப்பட்டார். அவரை பஞ்சாப் அணி ரூ.6 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இது அவரது ஆரம்ப விலையை விட 5 மடங்கு அதிகமாகும். ஒரு நாள் கிரிக்கெட்டில் 36 பந்துகளில் சதம் அடித்த உலக சாதனையாளரான நியூசிலாந்து ஆல்–ரவுண்டர் கோரி ஆண்டர்சனை மும்பை அணி ரூ.4½ கோடிக்கு தேர்வு செய்தது.

முதல் நாள் ஏலத்தில் இலங்கை வீரர்கள் நிறைய பேர் ஏலம் போகவில்லை. ஏப்ரல், மே மாதங்களில் ஐ.பி.எல். போட்டி நடக்கும் காலத்தில், அவர்களுக்கு சர்வதேச போட்டிகள் இருப்பதால், அவர்களை வாங்குவதில் அணி நிர்வாகிகள் தயக்கம் காட்டினர்.

2–வது நாள் ஏலம் இன்றும் தொடர்ந்து நடைபெறும்.  

category:

வீரர்கள் ஏலம் போன தொகை

Posted: 12 Feb 2014 11:59 AM PST

யுவராஜ்சிங்குக்கு பெரிய தொகை ஏன்?

Posted: 12 Feb 2014 11:55 AM PST

யுவராஜ்சிங் முந்தைய சீசனில், புனே வாரியர்ஸ் அணிக்காக (தற்போது இந்த அணி நீக்கப்பட்டு விட்டது) விளையாடினார். 2011–ம் ஆண்டில் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பு ரூ.11 கோடி) கொடுத்து அவரை புனே அணி எடுத்து இருந்தது.

இப்போது அதையும் தாண்டி யுவராஜ்சிங் சாதனை படைத்திருக்கிறார். அவரை இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளர் தொழிலதிபர் விஜய் மல்லையா 'யுவராஜ்சிங்கை வாங்க வேண்டும் என்பதில் எங்கள் அணியின் கேப்டன் விராட் கோலி ரொம்ப ஆர்வமாக இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரூ.4 கோடி (குழப்பம் ஏற்பட்டதை சுட்டிகாட்டி) கூடுதலாக போய் விட்டது. ஆனாலும் ஏலத்தை தொடருவதா? முடிப்பதா என்பது ஏலம் நடத்துபவருக்கே உள்ள உரிமை. கோலி, கெய்ல், டிவில்லியர்ஸ் ஏற்கனவே எங்களிடம் உள்ள நிலையில் யுவராஜ்சிங்கை வாங்கியதன் மூலம் எங்களது அணி மேலும் வலுவடைந்துள்ளது' என்றார்.

category:

‘‘சோனியா காந்தியின் முதுகில் குத்தியவர்’’ சரத்பவார் மீது மத்திய மந்திரி கே.வி.தாமஸ் தாக்கு

Posted: 12 Feb 2014 11:52 AM PST

புதுடெல்லி,

சோனியா காந்தியின் முதுகில் குத்தியது போன்ற காரியத்தை செய்தவர் மத்திய மந்திரி சரத்பவார் என்று மற்றொரு மத்திய மந்திரியான கே.வி.தாமஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

கருத்து வேறுபாடு

கடந்த 2009–ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்த போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உணவு மற்றும் விவசாய துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். அந்த இலாகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.வி.தாமஸ் ராஜாங்க மந்திரி ஆனார். அதன்பிறகு 2011–ம் ஆண்டு கே.வி.தாமஸ் உணவு இலாகாவுக்கு தனிப்பொறுப்புடன் மந்திரி ஆனார். சரத்பவார் விவசாய இலாகாவை கவனித்து வருகிறார்.

அப்போது முதலே உணவு சட்டம், சர்க்கரை பற்றிய கொள்கைகள் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. கச்சா சர்க்கரைக்கு மானியம் வழங்குவது தொடர்பாக இருவரும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்ததால் 3 தடவை நடந்த மந்திரிசபை கூட்டங்களில் அந்த பிரச்சினையில் முடிவு எடுக்கப்படவில்லை.

கே.வி.தாமஸ் எழுதிய புத்தகம்

இந்த நிலையில், உணவு மந்திரி கே.வி.தாமஸ் 110 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், 'முதுகில் விழுந்த குத்து' என்ற பெயரில் ஓர் அத்தியாயம் இடம்பெற்று உள்ளது. 5 பக்கங்கள் கொண்ட அந்த அத்தியாயத்தில் அவர் விவசாய மந்திரி சரத்பவாரை கடுமையாக தாக்கி எழுதி இருக்கிறார்.

அந்த அத்தியாயத்தில் எழுதப்பட்டு இருப்பதாவது:–

முதுகில் குத்தியவர்

கடந்த 1999–ம் ஆண்டில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டுக்காரர் என்ற பிரச்சினையை கிளப்பி அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர் சரத்பவார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பி.ஏ.சங்மா தான் முதன் முதலில் இந்த பிரச்சினையை கிளப்பினார். பின்னர் சங்மா இந்த பிரச்சினையை கைவிட்ட போதிலும் சரத்பவார் அதை பிடித்துக்கொண்டார்.

கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்தி அதற்கு வலுவூட்டியவர் என்று சோனியா காந்தியை சரத்பவார் புகழ்ந்த போதிலும், அவர் வெளிநாட்டில் பிறந்தவர் என்று மேற்கொள்ளப்படும் பிரசாரத்தை காங்கிரஸ் கட்சியால் முறியடிக்க முடியாது என்றும் கூறினார். அந்த பிரச்சினையை பெரிதாக்கி சோனியா காந்தியின் முதுகில் குத்தியது போன்ற காரியத்தை செய்தவர் சரத்பவார்.

அவர்கள் அவ்வாறு பேசியது குறித்து சோனியா காந்தி மிகுந்த வருத்தம் அடைந்தார். பின்னர் சரத்பவார், பி.ஏ.சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்கள்.

சோனியா விலகி இருந்தார்

சரத்பவார் முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும் அவருக்கும், சோனியா காந்திக்கும் சுமுகமான உறவு இருந்தது இல்லை. சரத்பவார் திறமையானவர் என்ற போதிலும் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல என்ற ராஜீவ் காந்தியின் கருத்தை மனதில் கொண்டு அவரிடம் இருந்து சோனியா காந்தி சற்று விலகியே இருந்தார்.

காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் 2–வது நிலையில் இருந்த அர்ஜூன் சிங் வகித்த இடத்தின் மீது சரத்பவார் கண் வைத்து இருந்தார். 13–வது பாராளுமன்ற தேர்தலுக்கு பின் சோனியா காந்தி பிரதமர் ஆகிவிட்டால், பிரதமராகும் தனது கனவு ஒருபோதும் பலிக்காது என்ற எண்ணம் சரத்பவாருக்கு இருந்தது.

சோனியா காந்திக்கு எதிராக பேசியவர்களில் சிலர் பின்னர் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு காங்கிரசுக்கு கடிதம் எழுதிய போது, சோனியா காந்தி அதை பொருட்படுத்தவில்லை. அந்த கடிதங்களுக்கு அர்ஜூன் சிங்தான் பதில் எழுதினார்.

இவ்வாறு அந்த அத்தியாயத்தில் எழுதப்பட்டு உள்ளது.

இந்த புத்தகம் முதலில் கடந்த 2006–ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியானது. அதன்பிறகு கூடுதலாக சில அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டு அதன் ஆங்கில பதிப்பு வெளியாகி உள்ளது.

category:

News Group Category:

இன்னும் எவ்வளவு வீரர்கள் தேவை?

Posted: 12 Feb 2014 11:52 AM PST

ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 16 வீரர்களில் இருந்து 27 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணிக்கும் இன்னும் குறைந்தது எத்தனை வீரர்கள் தேவை, கை வசம் எவ்வளவு தொகை உள்ளது என்ற விவரம் வருமாறு:–

அணி-----    தேவையான வீரர் ---- மீதமுள்ள தொகை

சென்னை    3    ரூ.2.9 கோடி

கொல்கத்தா    6    ரூ.9 கோடி

டெல்லி    3    ரூ.8.6 கோடி

பஞ்சாப்    4    ரூ.14.2 கோடி

மும்பை    6    ரூ.5.15 கோடி

பெங்களூர்    4    ரூ.1.8 கோடி

ஐதராபாத்    3    ரூ.8.4 கோடி

ராஜஸ்தான்    5    ரூ.12.1 கோடி

category:

கேப்டன்களை மிஞ்சிய யுவராஜ்சிங்

Posted: 12 Feb 2014 11:47 AM PST

7–வது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் இந்திய வீரர் யுவராஜ்சிங் அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம் போனார். ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் வீரர் ஒருவர் போன அதிகபட்ச விலை இதுவாகும். இதற்கு முன்பு 2011–ம் ஆண்டில் கவுதம் கம்பீர் 11.04 கோடிக்கு (கொல்கத்தா அணிக்கு) ஏலம் போனதே அதிகபட்சமாக இருந்து வந்தது. அதுமட்டுமின்றி இந்த ஐ.பி.எல். போட்டியில் அணிகளால் தக்கவைக்கப்படும் கேப்டன்களுக்கு ஊதியமாக ரூ.12.5 கோடி நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி தக்கவைக்கப்பட்டு இருக்கும் சென்னை அணியின் கேப்டன் டோனி, பெங்களூர் அணியின் கேப்டன் விராட்கோலி, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஷேன் வாட்சன் ஆகியோரின் சம்பளத்தையும் மிஞ்சி யுவராஜ்சிங் சாதனை படைத்துள்ளார்.

category:

70 வீரர்கள் ஏலம்; கார்த்திக் நெகிழ்ச்சி

Posted: 12 Feb 2014 11:43 AM PST

* முதல் நாளில் 70 வீரர்கள் மொத்தம் ரூ.212.35 கோடிக்கு விற்பனையாகியுள்ளனர். 144 வீரர்கள் ஏலம் போகவில்லை.

* பெரும் இழப்பை சந்தித்தது பதான் சகோதரர்கள் தான். கடந்த ஏலத்தில் ரூ.10 கோடிக்கு மேல் ஏலம் போன இவர்கள், இந்த சீசனில் வீழ்ச்சியை சந்தித்தனர். தேசிய அணியில் இல்லாததால் இவர்களது மதிப்பு தடாலடியாக சரிந்து விட்டது. யூசுப் பதான் ரூ.3¼ கோடிக்கும் (கொல்கத்தா), இர்பான் பதான் ரூ.2 கோடியே 40 லட்சத்திற்கும் (ஐதராபாத்) விற்பனை ஆனார்கள்.

* முந்தைய சீசனில் தங்கள் அணிக்காக விளையாடிய வீரர்களை மீண்டும் வாங்குவதற்கு வழிசெய்யும் 'மேட்ச் கார்டு' சலுகையை பயன்படுத்தி மொத்தம் 8 வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர். பீட்டர்சன் (டெல்லி), யூசுப் பதான், காலிஸ் (கொல்கத்தா), பாப் டு பிளிஸ்சிஸ் (சென்னை), அமித் மிஸ்ரா, டேரன் சேமி (ஐதராபாத்), பிரக்யான் ஓஜா (மும்பை), பர்விந்தர் அவனா (பஞ்சாப்) ஆகியோர் இந்த வகையில் தங்களது முந்தைய அணிக்காக தொடர்ந்து விளையாட உள்ளனர். இன்னும் 5 மேட்ச் கார்டுகள் எஞ்சியுள்ளன.

* ஆஸ்திரேலியாவின் கேமரூன் ஒயிட், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் ஆகியோரை யாரும் ஏலம் கேட்காதது ஆச்சரியம் அளித்ததாக ராஜஸ்தான் அணியின் ஆலோசகர் ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

* 'இவ்வளவு தொகைக்கு நான் ஏலம் போவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. நான் ஏலம் விடப்பட்டதை பார்க்கவில்லை. ஏனெனில், அப்போது நான் இரானி கோப்பை கிரிக்கெட்டில் ரெஸ்ட் ஆப் இந்தியாவுக்காக களம் இறங்கி சீக்கிரம் அவுட் ஆன கோபத்தில் இருந்தேன். தவிர வீரர்களின் ஓய்வறையில் டி.வி. வசதியும் கிடையாது. எனவே கொஞ்சம் தாமதமாகத் தான் இந்த செய்தி எனக்கு வந்தது' என்று தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

category:

விலை போகாத வீரர்கள்

Posted: 12 Feb 2014 11:38 AM PST

இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க முடியாத யுவராஜ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிசயக்கத்தக்க விலைக்கு ஏலம் போனாலும், தலை சிறந்த வீரர்கள் பலரை நேற்று ஏலத்தில் எந்த அணியினரும் சீண்டவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. ஏலத்துக்கு வந்து எல்லா அணியினராலும் கைவிடப்பட்ட வீரர்களில் மஹேலா ஜெயவர்த்தனே (இலங்கை), ராஸ் டெய்லர் (நியூசிலாந்து), பிரவீன்குமார், அபிமன்யூ மிதுன், முகமது கைப், நமன் ஓஜா, முனாப்பட்டேல் (இந்தியா), மேத்யூ வேட் (ஆஸ்திரேலியா), கீஸ்வெட்டர் (இங்கிலாந்து), குஷல் பெரேரா (இலங்கை), டேவிட் ஹஸ்சி (ஆஸ்திரேலியா), ஏஞ்சலோ மேத்யூஸ், தில்ஷன் (இலங்கை),  முரளி கார்த்திக் (இந்தியா), நாதன் மெக்கல்லம் (நியூசிலாந்து), ராபின் பீட்டசர்சன் (தென் ஆப்பிரிக்கா) கேமரூன் ஒயிட் (ஆஸ்திரேலியா), டேரன் பிராவோ, சாமுவேல்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), பத்ரிநாத் (இந்தியா), இயான் பெல், அலெக்ஸ் ஹாலஸ் (இங்கிலாந்து), தமிம் இக்பால் (வங்காளதேசம்), மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து), ஆந்த்ரே ரஸ்செல் (வெஸ்ட் இண்டீஸ்), ரவிபோபரா (இங்கிலாந்து), பிரெட்லீ (ஆஸ்திரேலியா), பிராட் ஹாக் (ஆஸ்திரேலியா), உபுல் தரங்கா (இலங்கை), ஜெஸ்சி ரைடர் (நியூசிலாந்து), பிலாண்டர் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். நேற்று ஏலம் போகாத வீரர்களின் வாய்ப்பு முழுமையாக முடிந்து விட்டதாக சொல்ல முடியாது. அந்த வீரர்களுக்கு லேசான வாய்ப்பு உள்ளது. விலை போகாத வீரர்களின் எண்கள் எல்லா அணிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அதில் எந்த பெயரையாவது ஏலத்தில் சேர்க்கும் படி கோரிக்கை விடுத்தால் அந்த வீரர்களின் பெயர் இன்றைய ஏலத்தில் எடுத்து கொள்ளப்படும்.

category:

தேசிய சப்–ஜூனியர் கைப்பந்து: தமிழக ஆண்கள் அணி ‘சாம்பியன்’

Posted: 12 Feb 2014 11:34 AM PST

சென்னை,

சென்னை ஸ்பைக்கர்ஸ் வாலிபால் கிளப் சார்பில் கால்ஸ் 36–வது சப்–ஜூனியர் தேசிய கைப்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் தமிழ்நாடு அணி 25–18, 25–21, 27–25 என்ற நேர்செட்டில் உத்தரபிரதேசத்தை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெண்கள் பிரிவின் இறுதி சுற்றில் குஜராத் அணி 25–22, 25–19, 25–13 என்ற நேர்செட்டில் உத்தரபிரதேச அணியை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. முன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழக அணி 3–0 என்ற செட் கணக்கில் மேற்கு வங்காளத்தை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது.

பரிசளிப்பு விழாவில், எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் வி.கே. ஜெயக்கொடி, இந்திய கைப்பந்து சம்மேளன நிதி கமிட்டி சேர்மனும், கால்ஸ் நிர்வாக இயக்குனருமான எஸ்.வாசுதேவன், பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் சி.சக்திகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். இந்திய கைப்பந்து சம்மேளனத்துக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வாசுதேவன் வழங்கினார். இந்திய கைப்பந்து சம்மேளன தலைமை செயல் அதிகாரி கே.முருகன், போட்டி அமைப்பு குழு செயலாளர் ஜெ.நடராஜன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் தங்கப் பதக்கம் வென்ற தமிழக ஆண்கள் அணியினருக்கு தலா ரூ. ஆயிரமும், வெண்கலப்பதக்கம் பெற்ற தமிழக பெண்கள் அணியினருக்கு தலா 500 ரூபாயும், தமிழ்நாடு கைப்பந்து சங்க அசோசியேட் செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் வழங்கி பாராட்டினார்.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™