Daily Thanthi |
- ஊட்டி அருகே சிறுத்தைப்புலி தாக்கி இளம்பெண் சாவு
- ரூ.500 முதல் 3 ஆயிரம் வரை கிடைக்கும்; அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் சிறப்பு போனஸ்: ஜெயலலிதா அறிவிப்பு
- கடைசி டெஸ்டிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி 5–0 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்தது
- ‘பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ மத்திய மந்திரி சரத்பவார் அறிவிப்பு
- ஓரினச்சேர்க்கை விவகாரம் ‘மத்திய அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு
- எதிர்க்கட்சிகள் போராட்டம் எதிரொலி வங்காளதேச தேர்தலில் மந்தமான ஓட்டுப்பதிவு போலீஸ்காரர் அடித்துக்கொலை; 11 தொண்டர்கள் பலி
- ஜி சாட்–14 செயற்கை கோளுடன் ஜி.எஸ்.எல்.வி–டி5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
- சவூதி அரேபியாவில் விமானம் அவசரமாக தரை இறங்கியதில் 29 பேர் காயம்
- கூட்டணியா?, தனித்து போட்டியா? உளுந்தூர்பேட்டை மாநாட்டில் முடிவு அறிவிப்பு; பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பேச்சு
- புதுடெல்லியில் பள்ளி மாணவிகள்
| ஊட்டி அருகே சிறுத்தைப்புலி தாக்கி இளம்பெண் சாவு Posted: 05 Jan 2014 01:38 PM PST ஊட்டி அருகே சிறுத்தைப்புலி தாக்கி இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் சங்கர் அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அரசின் சார்பில் ரூ.25 ஆயிரம் நிதி உதவியை வழங்கினார். கூலிதொழிலாளி ஊட்டி ஆடோசோலை அருகே சோலடா கிராமத்தை சேர்ந்தவர் ரவி(வயது 41), கூலிதொழிலாளி. இவருடைய மனைவி கவிதா(33). இவர்களுக்கு கோகுலபிரியா(13) என்ற மகளும், நவநீதன்(8)என்ற மகனும் உள்ளனர். சோலடா கிராமத்தை சுற்றிலும் அடர்ந்த காடுகள் உள்ளன. இந்த காட்டில் சிறுத்தைப்புலிகள், புலிகள், மான்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. மாலை நேரத்தில் காட்டை விட்டு வெளியே வரும் வனவிலங்குகளை இந்த பகுதி பொதுமக்கள் அதிகளவில் பார்த்து உள்ளனர். இதனால் எப்போதும் இந்த கிராம மக்கள் பீதியுடன் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை கவிதா கடைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வனப்பகுதி வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் ஒரு சிறுத்தைப்புலி சென்றுகொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கவிதா அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் சிறுத்தைப்புலி அவரை ஓட ஓட விரட்டி தாக்கி கொன்றது. பின்னர் கவிதாவின் உடலை அடர்ந்த வனப்பகுதிக்குள் அந்த சிறுத்தைப்புலி இழுத்துச்சென்றது. கடைக்கு சென்ற கவிதா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த ரவி தனது நண்பர்களுடன் அங்குள்ள வனப்பகுதியில் தேடினார். அப்போது ஒரு சில இடங்களில் ரத்தம் சிந்தியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுத்தைப்புலிகளின் உறுமல் சத்தம் கேட்டதால் அவர்கள் காலையில் தேட முடிவுசெய்தனர். உடல் மீட்பு இதைதொடர்ந்து நேற்று காலை ஊர் பொதுமக்கள் உதவியுடன் ரவி தனது மனைவியை தேடினார். அப்போது 2 சிறுத்தைப்புலிகள் பொதுமக்களை விரட்டியது. உடனே அவர்கள் கூச்சல் போட்டு சிறுத்தைப்புலிகளை விரட்டினார்கள். பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் கவிதாவின் உடல் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ரேஞ்சர் பெரியசாமி, பாரஸ்ட்டர்கள் பரமசிவன், ரவிக்குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் கோபாலகிருஷ்ணன், மணிகண்டன், தாமஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். சிறுத்தைப்புலி தாக்கி பலியான கவிதாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் மற்றும் வடக்கு கோட்ட வன அதிகாரி சுகிர்தராஜ் கோவில்பிள்ளைக்கு வனத்துறையினர் தகவல்கொடுத்தனர். ரூ.25 ஆயிரம் நிதியுதவி இதையடுத்து, கலெக்டர் சங்கர், சிறுத்தைப்புலி தாக்கி இறந்த கவிதாவின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் கவிதா குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.25 ஆயிரம் நிதி உதவியை வழங்கினார். மேலும் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் நிதி வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளதாக அவர் தெரிவித்தார். ஊட்டி அருகே இளம்பெண் ஒருவரை சிறுத்தைப்பலி தாக்கி கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மனித ரத்தத்தை ருசித்து உள்ளதால் அந்த சிறுத்தைப்புலி வனப்பகுதியையொட்டியுள்ள கிராமத்திற்குள் வர அதிக வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே சிறுத்தைப்புலிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கலெக்டர் சங்கர் உத்தரவிட்டு உள்ளார். image: category: |
| Posted: 05 Jan 2014 12:29 PM PST சென்னை, முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பொங்கல் பண்டிகையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சிறப்பாக கொண்டாட ஏதுவாக அவர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பொங்கல் போனஸ் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே போனஸ் என்றிருந்ததை மாற்றி, முதன் முதலில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் திருநாளன்று கருணைத்தொகை வழங்கும் முறையை அறிமுகப்படுத்திய பெருமை எம்.ஜி.ஆரையே சாரும். எனது தலைமையிலான அரசும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணித்தன்மையையும், வேலைப்பளுவினையும் கருத்தில் கொண்டு, அவர்களை பாதுகாக்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில், பொங்கல் பண்டிகையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சிறப்பாக கொண்டாட ஏதுவாக, அவர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் இதன்படி, 2012–2013–ம் நிதி ஆண்டிற்கு, 'சி' மற்றும் 'டி' பிரிவை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும். 'ஏ' மற்றும் 'பி' பிரிவை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், 2012–2013–ம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லரை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேரப்பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக்கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு திட்டப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப்பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப்பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். சிறப்பு மிகை ஊதியம் உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்திய பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை, சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். ரூ.308.28 கோடி ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும். இதன் மூலம், தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாளை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி பொங்க கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 308 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார். News Category:Hot Topic Icon : News Group Category: |
| கடைசி டெஸ்டிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி 5–0 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்தது Posted: 05 Jan 2014 12:19 PM PST சிட்னி, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 5–0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தி அசத்தியது. 448 ரன்கள் இலக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் 4 பந்தயத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 3–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 326 ரன்களும், இங்கிலாந்து 155 ரன்களும் எடுத்தன. 171 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2–வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. கிறிஸ் ரோஜர்ஸ் 73 ரன்களுடனும், ஜார்ஜ் பெய்லி 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சில் 61.3 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. தனது 3–வது சதத்தை பூர்த்தி செய்த கிறிஸ் ரோஜர்ஸ் 119 ரன்களும் (169 பந்து, 15 பவுண்டரி), பெய்லி 46 ரன்களும் விளாசினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்கு 448 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி களம் புகுந்த இங்கிலாந்து அணி வழக்கம் போல் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிக்கி சிதறியது. கேப்டன் அலஸ்டயர் குக் (7 ரன்) 2–வது ஓவரிலேயே கேட்ச் ஆனார். ஆஸ்திரேலியா வெற்றி இதன் பின்னர் இங்கிலாந்து அணி 'விக்கெட் அணிவகுப்பு' நடத்தியது. 31.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து 2–வது இன்னிங்சில் 166 ரன்களுக்கு சுருண்டது. அதாவது மூன்று மணி நேரத்தில் இங்கிலாந்து சரணாகதியாகி விட்டது. இதன் மூலம் 281 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை சுவைத்தது. இங்கிலாந்து அணியில் கார்பெர்ரி (43 ரன்), இயான் பெல் (16 ரன்), பென் ஸ்டோக்ஸ் (32 ரன்), ஸ்டூவர்ட் பிராட் (42 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கை தாண்டவில்லை. ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ரையான் ஹாரிஸ் 5 விக்கெட்டுகளும், மிட்செல் ஜான்சன் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரை 5–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இங்கிலாந்தை 'ஒயிட்வாஷ்' ஆக்கியது. நூற்றாண்டு காலமாக நடந்து வரும் நீண்ட பாரம்பரியமும், கவுரவமும் மிக்க ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா இங்கிலாந்தை 'ஒயிட் வாஷ்' ஆக்குவது இது 3–வது முறையாகும். இதற்கு முன்பு 1920–21, 2006–07–ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை ஒன்றும் இல்லாமல் வெறுங்கையுடன் விரட்டியடித்தது. இந்த மூன்று சாதனைகளும் ஆஸ்திரேலிய மண்ணிலேயே அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்டில் மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் ரையான் ஹாரிஸ் ஆட்டநாயகன் விருதையும், தொடரில் மொத்தம் 37 விக்கெட்டுகளை அள்ளிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றனர். கேப்டன்கள் கருத்து வெற்றிக்கு பிறகு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில், 'இது ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்வு. இங்கிலாந்து மண்ணில் தோல்வி கண்ட பிறகு அவர்களை இப்படி 5–0 என்ற கணக்கில் வெல்வோம் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. எனது வாழ்க்கையில் இந்த வெற்றி என்றும் மறக்க முடியாத நினைவாக நீடித்து நிற்கும். இந்த வெற்றிக்கு பின்னால் கடின உழைப்பு இருக்கிறது. பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை மிகச்சிறப்பாக செய்துள்ளனர். உலகின் சிறந்த பந்து வீச்சு தாக்குதல் எங்களிடம் உள்ளது என்பது எனது கருத்து. அந்த தகுதியை நாங்கள் போராடி அடைந்துள்ளோம். ஜான்சனின் பந்து வீச்சு இந்த தொடர் முழுவதும் ஆக்ரோஷத்துடன், வியக்கத்தக்க அளவுக்கு இருந்தது. அதிலும் அவரது சில பந்து வீச்சு மிரட்டலாக இருந்தது.' என்றார். அவமானகரமான தோல்வியால் கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் கூறுகையில், 'ஆஸ்திரேலியா எங்களை எல்லா வகையிலும் வீழ்த்தி விட்டது. 0–5 என்ற கணக்கில், அதுவும் மோசமாக தோற்றதை நினைக்கவே கடினமாக இருக்கிறது. தோல்விப்பாதையில் இருந்து மீள நாங்கள் பலமாக முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. இதற்கான எல்லா பெருமையும் மைக்கேல் கிளார்க் அணியையே சாரும். வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள்' என்றார். அடுத்து ஆஸ்திரேலியா–இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 12–ந்தேதி மெல்போர்னில் நடக்கிறது. மைக்கேல் கிளார்க் சாதனை ஆஷஸ் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை மூன்றாவது முறையாக 'ஒயிட் வாஷ்' ஆக்கியிருக்கிறது. ஆனால் 1920–21–ம் ஆண்டில் வார்விக் ஆம்ஸ்ட்ராங் தலையிலான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை ஒயிட் வாஷ் ஆக்குவதற்கு மொத்தம் 24 நாட்கள் எடுத்துக் கொண்டது. 2006–07–ம் ஆண்டில் ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு ஆஷஸ் தொடரை முழுமையாக ருசிக்க 22 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் இப்போது மைக்கேல் கிளார்க் தலைமையி£ன ஆஸ்திரேலிய அணி வெறும் 21 நாட்களில் 5 டெஸ்டுகளிலும் முடிவு கண்டு விட்டது. 543 பந்து...20 விக்கெட்...! *சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து அணி 20 விக்கெட்டுகளையும் 543 பந்துகளில் பறிகொடுத்து விட்டது. 1986–ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 530 பந்துகளில் (159 ரன், 152 ரன்னில் ஆல்–அவுட்) 20 விக்கெட்டுகளையும் இழந்த பிறகு இங்கிலாந்து குறைந்த பந்துகளில் மடிவது இதுவே முதல்முறை. *5 போட்டி கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி, ஒவ்வொரு டெஸ்டிலும் தலா 20 விக்கெட்டுகள் வீதம் மொத்தம் 100 விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஷஸ் வரலாற்றில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழப்பது இதுவே முதல் முறையாகும். *7–வது வரிசை பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடிய ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 493 ரன்கள் திரட்டினார் இதன் மூலம் ஒரு தொடரில் 7–வது வரிசையில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற மகிமையை பெற்றார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் (2001–02) 473 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது. *ஒட்டுமொத்தத்தில் ஆஸ்திரேலியா ஒரு அணியை 5–0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் ஆக்குவது இது 5–வது முறையாகும். வெஸ்ட் இண்டீஸ் (2000–01), தென்ஆப்பிரிக்கா (1931–32) அணிகளும் ஏற்கனவே ஆஸ்திரேலியாவிடம் சிதைந்து போயிருக்கின்றன. அதே நேரத்தில் இங்கிலாந்து 0–5 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் கேவலத்தை எதிர்கொள்வது இது 5–வது தடவையாகும். அந்த அணி வெஸ்ட் இண்டீசிடம் இரண்டு முறை இது போன்று மண்டியிட்டிருக்கிறது. *ஆஸ்திரேலிய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் மொத்தம் 37 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவின் பில்லி ஒயிட்டி 1910–11–ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 37 விக்கெட்டுகள் வீழ்த்தியதே இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் டெஸ்ட் தொடர் ஒன்றில் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகளாகும். அவரது சாதனையை ஜான்சன் சமன் செய்தார். *இந்த தொடரில் இங்கிலாந்து தரப்பில் டாப்–5 பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட சதம் காணவில்லை. 6–வது வரிசை வீரர் பென் ஸ்டோக்ஸ் மட்டும் சதம் அடித்திருந்தார். 5–க்கும் மேலான ஆஷஸ் தொடரில் 1900–ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்தின் டாப்–5 வீரர்கள் யாரும் சதம் எடுக்காதது இது 2–வது முறையாகும். *ஆஸ்திரேலிய தரப்பில் இந்த தொடரில் மொத்தம் 10 சதங்கள் விளாசப்பட்டன. 1920–21, 1946–47, 1993–ம் ஆண்டுகளில் நடந்த தொடர்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகபட்சமாக தலா 10 சதங்களை எடுத்திருந்தனர். அச்சாதனை சமன் ஆனது. image: category: |
| ‘பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ மத்திய மந்திரி சரத்பவார் அறிவிப்பு Posted: 05 Jan 2014 11:37 AM PST மும்பை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மத்திய மந்திரி சரத்பவார் தெரிவித்து உள்ளார். பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. இதில் அந்த கட்சியின் தலைவரும், மத்திய விவசாய மந்திரியுமான சரத்பவார் கலந்து கொண்டு பேசியதாவது:– போட்டியிட மாட்டேன் இனி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்திவிடலாம் என்று தீர்மானித்து இருக்கிறேன். இதனால் கட்சி பணியாற்றுவதற்கு எனக்கு கூடுதல் நேரம் கிடைக்கும். இருப்பினும், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு தயக்கம் இல்லை. ராஜ்யசபாவில் காலியாகும் இடங்களுக்கு மார்ச் மாதத்தில் தேர்தல் வர உள்ளது. நடந்து முடிந்த 4 மாநில சட்டமன்ற தேர்தலில் அடைந்த தோல்வி குறித்து காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியினரும் சிந்தித்து பார்க்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும், தேர்தல் முடிவுகளை கண்டு சோர்வுற வேண்டிய அவசியம் இல்லை. புரட்சிகரமான தலைவர் புரட்சிகரமான தலைவரையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். உறுதியான முடிவு எடுப்பவர்களுக்கே அவர்கள் ஆதரவும் அளிக்கின்றனர். கடந்த 1977–ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வேரறுக்கப்பட்டது. இருப்பினும், இந்திராகாந்தியின் தீவிர முயற்சிகளால் காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. நாட்டில் ஏதோ ஒரு மூலையில் நடப்பது, மராட்டியத்தில் பிரதிபலிக்காது. துலே, நந்துர்பர், அகோலா மற்றும் வாசிம் ஆகிய மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் நமக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நாம் மக்களிடம் தன்னம்பிக்கையுடன் செல்ல வேண்டும். உணவு பாதுகாப்பு திட்டம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா கட்சி அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு டெல்லியில் விளம்பரம் செய்து வந்தது. ஆனால் முடிவில் என்ன ஆயிற்று. அந்த கட்சி வாடிப்போய்விட்டது. உணவு பாதுகாப்பு திட்டம் ஜனவரி 26–ந் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் பயனடைவார்கள். இவ்வாறு சரத்பவார் பேசினார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 05 Jan 2014 10:13 AM PST புதுடெல்லி, ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு 'ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் அல்ல' என்று டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2009–ம் ஆண்டு, ஜூலை 2–ந்தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து கடந்த 11–ந்தேதி தீர்ப்பு வழங்கியது. டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்த (தற்போது ஓய்வு பெற்றுவிட்ட) நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான அமர்வு, ''இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 377–ன் கீழ் ஓரினச்சேர்க்கை கொள்வது கிரிமினல் குற்றம், இந்த குற்றத்துக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கலாம்' எனக்கூறியது. மறுஆய்வு மனு இந்த தீர்ப்பு ஓரினச்சேர்க்கை ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், கபில்சிபல், மிலிந்த் தியோரா உள்ளிட்டவர்கள் தீர்ப்புக்கு எதிராக கருத்து கூறினர். இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய மனு மத்திய அரசின் இந்த மறு ஆய்வு மனுவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் விஸ்வநாத் சதுர்வேதி என்ற வக்கீல் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:– இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 377 பாராளுமன்றம் கொண்டு வந்ததாகும். இதை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கோர முடியாது. இது அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினால் மத்திய அரசு வருத்தம் அடைந்தால், இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 377–ன் அரசியல் சட்ட செல்லுபடித்தன்மையை நிலைநிறுத்த பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்திருக்க முடியும் தள்ளுபடி செய்யவேண்டும் பாராளுமன்றம், மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு ஆகியவற்றுக்கு இடையே தேவையற்ற மோதல் போக்கை உருவாக்கி, அரசியல் சட்ட அடிப்படையில் இவற்றுக்கிடையே உள்ள சம நிலையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனு சிதைப்பதாக அமைந்துள்ளது. எனவே மத்திய அரசின் மறு ஆய்வு மனு முழுமையாக தள்ளுபடி செய்ய தகுதியானது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| Posted: 05 Jan 2014 09:59 AM PST டாக்கா, எதிர்க்கட்சிகளின் போராட்டம் விளைவாக வங்காளதேச தேர்தலில் மந்தமான ஓட்டுப்பதிவு நடந்தது. வன்முறை சம்பவத்தில் போலீஸ்காரர் கொல்லப்பட்டார். 11 தொண்டர்களும் செத்தனர். 160 வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு ரத்து செய்யப்பட்டன. பாராளுமன்ற தேர்தல் வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் 5–ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலை முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான 18 கட்சி கூட்டணி புறக்கணித்தது. இதனால் பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான ஆளுங்கட்சி கூட்டணி 153 தொகுதிகளில் போட்டியின்றி வென்றது. எனவே மீதமுள்ள 147 தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டங்களை நடத்தியதுடன் ஓட்டுப்போடுவதை புறக்கணிக்கும்படி அழைப்பு விடுத்திருந்தது. பல இடங்களில் அரங்கேறிய வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் தவிர 3¾ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். மந்தமான ஓட்டுப்பதிவு திட்டமிட்டபடி காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஆனால் முதல் ஒரு மணிநேரத்தில் பல நகரங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்போட ஆளே இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. மோனிபூரிபாரா என்ற இடத்திலுள்ள வாக்குச்சாவடியில் மொத்தம் 3,019 வாக்காளர் இருக்கிறார்கள். முதல் 3½ மணி நேரத்தில் 28 பேர் மட்டுமே ஓட்டு போட்டார்கள். தலைநகர் டாக்காவிலும் வாக்காளர்கள் ஆர்வம் இன்றி இருந்தனர். வன்முறை ஏற்படுமோ? என்ற அச்சத்தில் வீடுகளிலேயே முடங்கி கிடந்தார்கள். ஆகவே மொத்தமாக எடுத்துக் கொண்டால், நேற்றைய ஓட்டுப்பதிவு மிகவும் மந்தமாக நகர்ந்தது. இதை தேர்தல் கமிஷன் அதிகாரியே உறுதி செய்தார். கடைசி நேரத்தில் அதிகரிக்கலாம் என நம்பிக்கை தெரிவித்தனர். போலீஸ்காரர்–11 பேர் பலி இந்த ஓட்டுப்பதிவின் போது ராங்பூர், டினாஜ்பூர், நில்பாமாரி, பெனி, முன்ஷிகஞ்ச் ஆகிய இடங்களில் வன்முறைகள் நடந்தன. இதில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 11 பேர் பலியானார்கள். டினாஜ்பூரில் வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போலீஸ்காரர் அடித்துக் கொல்லப்பட்டார். தீவைப்பு, வாக்குச்சாவடிகளில் சூறையாடம் மற்றும் ஓட்டுப்பெட்டி–ஓட்டுச்சீட்டு பறிப்பு ஆகிய சம்பவங்களால் சுமார் 160 மையங்களில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டன. image: category:News Group Category: |
| Posted: 05 Jan 2014 09:40 AM PST ஸ்ரீஹரிகோட்டா, ஜி சாட்–14 செயற்கை கோளுடன் ஜி.எஸ்.எல்.வி–டி5 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து விஞ்ஞானிகள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஜி.எஸ்.எல்.வி–டி5 ராக்கெட் தகவல் தொடர்பு சேவைக்காக ஜி சாட்–14 என்ற செயற்கை கோள் ஜி.எஸ்.எல்.வி–டி5 ராக்கெட் மூலம் கடந்த ஆகஸ்டு மாதம் 19–ந் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் திரவ எரிபொருள் கசிவு காரணமாக ராக்கெட்டை ஏவுவது தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் திரவ எரிபொருள் கசிவு கோளாறை விஞ்ஞானிகள் சரி செய்தனர். இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.எல்.வி–டி5 ராக்கெட், சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. வெற்றிகரமாக பாய்ந்தது இதற்கான, இறுதிக்கட்ட ஆயத்த பணிகள் எனப்படும் 'கவுண்ட்டவுன்' நேற்று முன்தினம் காலை 11.18 மணிக்கு தொடங்கியது. திட்டமிட்டபடி 'கவுண்ட்டவுன்' முடிந்து, நேற்று மாலை 4.18 மணிக்கு ஜி சாட்–4 செயற்கை கோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி–டி5 ராக்கெட் தீப்பிளம்பை கக்கியபடி விண்ணை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது. 3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி–டி5 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2–ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது. மூன்றாவது நிலையில் முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. 49.13 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி–டி5 ராக்கெட்டின் எடை 414 டன் ஆகும். செயற்கை கோள் பிரிந்தது புறப்பட்ட 17 நிமிடம் 8 வினாடிகளில் ராக்கெட் பூமியில் இருந்து 35 ஆயிரத்து 975 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியது. திட்டமிட்ட அந்த உயரத்தை அடைந்ததும், 1,982 கிலோ எடை கொண்ட ஜி சாட்–14 செயற்கை கோள் ராக்கெட்டில் இருந்து வெற்றிகமாக பிரிந்தது. இந்த 17 நிமிடம் 8 வினாடி பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த கிரையோஜெனிக் என்ஜின் 12 நிமிடங்கள் வெற்றிகரமாக இயங்கி செயற்கை கோளை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு போய்ச் சேர்த்தது. ஜி சாட்–14 செயற்கை கோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 35 ஆயிரத்து 975 கிலோ மீட்டர் தூரமும், குறைந்தபட்சமாக 180 கிலோ மீட்டர் தூரமும் கொண்ட பாதையில் பூமியை சுற்றி வருகிறது. விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்ட இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அவர்களும் கே.ராதாகிருஷ்ணனுடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களின் மாடியில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினரும், பத்திரிகையாளர்களும் கூடி நின்றனர். அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கிரையோஜெனிக் என்ஜின் அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த ராக்கெட்டுகளில் கிரையோஜெனிக் என்ஜின்கள் பொருத்தப்பட வேண்டும். இந்த என்ஜின்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க ரஷியா முன்வந்தது. ஆனால் அமெரிக்கா இதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால் இந்தியா, அதிக எடைகொண்ட தனது செயற்கை கோள்களை வெளிநாட்டு ராக்கெட்டுகளின் உதவியுடனேயே விண்ணில் செலுத்தி வந்தது. அதே சமயம், உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் என்ஜின்களை தயாரிக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களுடைய அயராத உழைப்புக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது. இந்தியா சாதனை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் உதவியுடன் ஜி.எஸ்.எல்.வி–டி5 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம், விண்வெளி தொழில்நுட்பத்தில் நிபுணராக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து உள்ளது. இது ஒரு சாதனை ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஏற்கனவே 7 ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் 4 ராக்கெட்டுகள் வெற்றிகரமாக பறந்தன. 3 முறை தோல்வி ஏற்பட்டது. இப்போது 8 முறையாக அனுப்பி ராக்கெட் வெற்றி அடைந்துள்ளது. கடந்த 2010–ம் ஆண்டில் கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் கிரையோஜெனிக் என்ஜினை சுயமாக தயாரித்து அதன் மூலம் ராக்கெட்டை அனுப்ப இந்திய விஞ்ஞானிகள் கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. image: category:Tagging:News Group Category: |
| சவூதி அரேபியாவில் விமானம் அவசரமாக தரை இறங்கியதில் 29 பேர் காயம் Posted: 05 Jan 2014 09:33 AM PST ரியாத், சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 315 பயணிகளுடன் ஈரான் நாட்டில் உள்ள மஷாத் நகரிலிருந்து புறப்பட்டு விண்ணில் பறந்து கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக விமானத்தின் பின்பகுதி சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதை உணர்ந்த விமானி விமானத்தை சவூதி அரேபியாவில் உள்ள மெதினா விமான நிலையத்தில் அவரசமாக தரை இறக்கினார். இதில் 29 பயணிகள் காயம் அடைந்தனர். 18 பேருக்கு விமான நிலையத்தில் சிகிச்சை தரப்பட்டது. 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து மெதினா விமான நிலையத்தில் ஒருவர் கூறுகையில், ''அந்த விமானம் 2 முறை தரை இறங்க முயற்சித்து தோல்வி கண்டது. 3–வது முறைதான் தரை இறங்கியது'' என கூறினார். ஆன்லைனில் வெளியான படங்களில், அந்த விமானத்தின் பின்புற வலது சக்கரம் பழுதான நிலையில் ஓடுதளத்தில் இறங்கியது தெரிந்தது. image: category:News Group Category: |
| Posted: 05 Jan 2014 09:30 AM PST சென்னை பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியா?, தனித்து போட்டியா? என்பது குறித்து உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் தே.மு.தி.க. மாநில மாநாட்டில் முடிவு அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார். சென்னையை அடுத்த பொன்னேரியில் நடந்த தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:– மக்களை ஏமாற்ற சதி தற்போது, தமிழகத்தில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சி நாட்டை இருட்டாக்கிவிட்டுவிட்டு, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறிவருகிறது. மக்களை ஏமாற்ற சதி வேலை செய்கிறது. என் மேல் எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பயப்பட மாட்டேன். என்றைக்கும் நான் அனாவசியமாக பேச மாட்டேன். எப்போதும் உண்மையைத்தான் பேசுவேன். கூட்டணிக்கு தனி 'ரூட்' மத்திய அரசோ, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. யாரோ ஒரு முதலாளி சம்பாதிக்க இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறது. நாடு நல்லாயிருக்க வேண்டும், மக்களை தங்க தட்டில் வைத்து தாங்க வேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம். தேர்தல் சமயத்தில் நம்மை தேடி வருவார்கள். கூட்டணி வியூகம் எப்படி அமைக்கிறேன் என்று பாருங்கள். அதற்காக வேறு 'ரூட்' வைத்திருக்கிறேன். விஜயகாந்த் என்றாலே எப்போதும் கோபப்படுகிறான் என்கிறார்கள். கோபம் வருவது இயற்கைதான். அடிக்கிற கைதான் அணைக்கும் என்று கூறுகிறார்கள். 1991–ம் ஆண்டில் இருந்து 2008–ம் ஆண்டு வரை, தமிழ்நாட்டில் 2 கட்சிகளும்தான் மாறிமாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. ஆனால், மின் உற்பத்திக்காக என்ன செய்தார்கள். கூட்டணி பற்றி பேச குழு நமது கட்சியில் கூட்டணி குறித்து பேச அரசியல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி பற்றி பேச வருபவர்கள் அவர்களிடம் பேசுங்கள். உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் மாநாட்டையும் நாம் சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வளவு கூட்டமா என்று எல்லோரும் மூக்கின் மேல் விரலை வைக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில்தான் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் முடிவு குறித்து அறிவிப்பேன். மனதில் ஒரு ரகசியம் சட்டசபையில் என்னை பேச விடுவதே இல்லை. இன்று அரசு காரை விட்டுவிட்டு என்னுடைய காரிலேயே அங்கு போய் வருகிறேன். என்னுடைய கட்சியை யாரும் தவறாக பேசவிடமாட்டேன். என்னுடைய கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் எங்கள் கட்சி கரைபோட்ட வேட்டியை கட்டி வருகிறார்கள். மற்ற கட்சியினர் எதிர்கட்சியாகும்போது கரை வேட்டியை வீட்டில் வைத்துவிடுவார்கள். நான் சமீபத்தில் என் மகன் நடிக்கும் 'சகாப்தம்' படத்திற்கு பூஜை போட்டேன். ஆனால், அதுவரைக்கும் அது யாருக்காவது தெரியுமா?. அதேபோல், என் மனதில் ஒரு ரகசியம் உள்ளது. அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இன்றைக்கு ஊடகங்கள், தே.மு.தி.க. அந்த கட்சியுடன் கூட்டணி, இந்த கட்சியுடன் கூட்டணி என்று கூறுகின்றன. நாங்கள் தனித்து நின்றால் என்ன செய்வீர்கள். அதனால், பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு விஜயகாந்த் பேசினார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 05 Jan 2014 09:26 AM PST |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
