Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


தமிழக மீனவர்கள் மேலும் 26 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம்

Posted: 02 Jan 2014 11:01 AM PST

மண்டபம்,

தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் 26 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று சிறை பிடித்துச் சென்றனர்.

தினமும் அட்டகாசம்

ராமேசுவரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக கடலோரப்பகுதிகளில் இருந்து செல்லும் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் அச்சுறுத்துவதும், எல்லை தாண்டி வந்ததாகக்கூறி சிறைபிடிப்பதும் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஏற்கனவே 216 தமிழக மீனவர்கள் நீண்ட காலமாக இலங்கை சிறையில் வாடிவரும் நிலையில், கடந்த 29–ந்தேதி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 22 பேர் சிறை பிடித்துச்செல்லப்பட்டனர்.

அடுத்த நாளே (டிச.30) பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 18 பேர் சிறைபிடிக்கப்பட்டார்கள். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தை சேர்ந்த 256 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடைய 81 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது.

மேலும் 26 மீனவர்கள்

இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அனைத்துக் கட்சித்தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல், நேற்று மேலும் 26 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துச்சென்றது. இதுபற்றிய விவரம் வருமாறு:–

கடற்படை முகாமில் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து நேற்று காலை சுமார் 150 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது விஜயன், முகமது அப்துல்காதர், அந்தோணி, தேர்ஜின் ஆகியோருக்குச் சொந்தமான 5 படகுகளை அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர்.

அந்த படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களை பறிமுதல் செய்ததுடன், படகுகளில் இருந்த விஜயன், தேர்ஜின் ஆகிய படகு உரிமையாளர்கள் இருவர் உள்பட 26 மீனவர்களையும் கடற்படையினர் சிறை பிடித்தனர். பின்னர் அவர்களை கல்பட்டி கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பாம்பன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருவதைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேசுவரம் பகுதியில் 600–க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. நேற்று 3–வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது. இதனால் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்த நிலையில் பாம்பன் மீனவர்கள் 18 பேர் உள்ளிட்ட இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாம்பன் பஸ் நிலையம் முன்பு நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெயில் மறியல் எச்சரிக்கை

ஆர்ப்பாட்டத்தில் மீனவர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்களும் கலந்து கொண்டனர். சிறைபிடிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கைக்குழந்தைகளுடன் கண்ணீருடன் அழுதவாறு இருந்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகி எஸ்.பி.ராயப்பன் கூறும்போது, ''இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்கள் 18 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி வருகிற 9–ந்தேதி அன்று பாம்பனில் மீனவர்களின் சார்பாக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10–ந்தேதிக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் பாம்பனில் மீனவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்'' என்றார்.

 

category:

News Group Category:

ரஞ்சி கிரிக்கெட்: கால்இறுதியில் மும்பை, ஜம்மு–காஷ்மீர்

Posted: 02 Jan 2014 10:56 AM PST

வல்சாத்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை, ஜம்மு–காஷ்மீர் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

மும்பை அணி வெற்றி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. இதில் குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியத்தில் நடந்த (ஏ பிரிவு) ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பைக்கு எதிராக 175 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் அணி 3–வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த குஜராத் அணி, மும்பை வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 2–வது இன்னிங்சில் 147 ரன்னில் அடங்கியது. இதனால் மும்பை அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இக்பால் அப்துல்லா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் மும்பை அணி 'ஏ' பிரிவில் 29 புள்ளிகளுடன் 3–வது இடம் பிடித்து கால் இறுதியை எட்டியது. கர்நாடகா (38 புள்ளிகள்), பஞ்சாப் (30 புள்ளிகள்) அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்து ஏற்கனவே கால்இறுதியை உறுதி செய்திருந்தன.

ஜம்மு–காஷ்மீர் சாதனை

அகர்தலாவில் நடந்த திரிபுரா–ஜம்மு–காஷ்மீர் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. 'சி' பிரிவில் மராட்டிய அணி 35 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. ஜம்மு–காஷ்மீர், கோவா அணிகள் தலா 28 புள்ளிகள் பெற்றாலும் மயிரிழையில் அதாவது 0.001 புள்ளி விகிதாச்சாரம் வித்தியாசத்தில் ஜம்மு–காஷ்மீர் அணி கோவாவை வெளியேற்றி கால் இறுதிக்கு முன்னேறியது. ரஞ்சி வரலாற்றில் ஜம்மு–காஷ்மீர் அணி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைப்பது இதுவே முதல் முறையாகும். 'ஜம்மு–காஷ்மீர் கிரிக்கெட்டுக்கு இது மிக மிக பெரிய விஷயம்' என்று அந்த அணியின் கேப்டன் பர்வேஸ் ரசூல் உணர்ச்சி பொங்க கூறினார்.

வருகிற 8–ந்தேதி முதல் 12–ந்தேதி வரை நடக்கும் கால்இறுதி ஆட்டங்களில் மும்பை–மராட்டியம், பெங்கால்–ரெயில்வே, கர்நாடகம்–உத்தரபிரதேசம், பஞ்சாப்–ஜம்மு–காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.

category:

தூத்துக்குடி புதிய அனல்மின் நிலையத்தில் அடுத்த மாதம் உற்பத்தி தொடங்கும் அதிகாரி தகவல்

Posted: 02 Jan 2014 10:50 AM PST

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள புதிய அனல்மின்நிலையம் அடுத்த மாதம் (பிப்ரவரி) மின்சார உற்பத்தியை தொடங்கும் என்று அதிகாரி தெரிவித்து உள்ளார்.

மின்சார உற்பத்தி

தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம் அருகே நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 மின் உற்பத்தி இயந்திரங்களை நிறுவி வருகிறது. இந்த திட்டப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த திட்டக்குழு கூட்டத்தில் அனல்மின்நிலைய அதிகாரி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியில் இந்த அனல்மின்நிலையம் மின்சார உற்பத்தியை தொடங்க உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, என்று கூறினார்.

நடவடிக்கை

மேலும் உடன்குடி அனல்மின்நிலைய பணிகள் குறித்து தனி அலுவலர் கூறும் போது, உடன்குடி பகுதியில் 620 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட அதிநவீன 2 மின் உற்பத்தி இயந்திரங்களை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்தி வருகிறது. இதற்கு 356.5 எக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தனியார் வசம் உள்ள 116 எக்டர் நிலத்தை கையகப்படுத்தும் பணி இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இந்த அனல்மின்நிலையத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு உள்ளது. இந்த திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்று கூறினார்.

 

News Group Category:

கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

Posted: 02 Jan 2014 10:04 AM PST

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரிஞ்சேரியில் சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பில் ஏரி உள்ளது. இங்கு சேமித்து வைக்கப்படும் நீரை கொண்டு பெரிஞ்சேரி, ஸ்ரீராமாபுரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 300 ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெற்று வந்தன. பாராமரிப்பு இல்லாத காரணத்தால் ஏரி வறண்டு வருகிறது. பலத்த மழை பெய்தால் உபரி நீரை திறந்து விடுவதற்காக 50 ஆண்டுகளுக்கு முன் ஏரியிலிருந்து 5 கால்வாய்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 5 மீட்டர் அகலம், 5 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டன. அதில் ஒன்று பெரிஞ்சேரி கிராம மைய பகுதி வழியாக 2 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளது. இந்த கால்வாயில் தூர் வாராததாலும், ஆகாய தாமரைகள் படர்ந்து உள்ளதாலும் நீர் பாயாமல் தேங்கி நிற்கிறது. மேலும் கால்வாயின் இரு புறங்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் கால்வாயில் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவுவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த கால்வாயில் தூர் வாரி ஆகாய தாமரைகளை அகற்ற மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரிஞ்சேரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு வரத்து அதிகரிப்பு கோயம்பேட்டில் 1 கட்டு கரும்பு ரூ.150–க்கு விற்பனை

Posted: 02 Jan 2014 09:59 AM PST

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 14–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தற்போதே சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மதுரை, தேனி, சேத்தியாதோப்பு, பண்ருட்டி போன்ற இடங்களில் இருந்து கரும்பு வர தொடங்கிவிட்டது. இதுவரை 15 லாரி லோடு கரும்பு வந்துள்ளது. 7 அடி நீளமுள்ள ஒரு கட்டு கரும்பு(20 எண்ணிக்கை) ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் விலை அதிகரிக்கலாம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

புத்தாண்டில் புதிய மாற்றம் படைக்க உறுதிமொழி: ‘தமிழக மக்கள் விரும்பும் மாற்றத்தை பா.ம.க.வால் தான் அளிக்க முடியும்’ பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு

Posted: 02 Jan 2014 09:54 AM PST

சென்னை

சென்னையில் நடந்த பா.ம.க. தலைமை பொதுக்குழு கூட்டத்தில் புத்தாண்டில் புதிய மாற்றம் படைக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக மக்கள் விரும்பும் மாற்றத்தை பா.ம.க.வால் தான் அளிக்க முடியும் என்று கூறினார்.

தலைமை பொதுக்குழு

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பா.ம.க.வின் தலைமை பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு எம்.எல்.ஏ., கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், முன்னாள் மத்திய மந்திரிகள் ஏ.கே.மூர்த்தி, அ.வேலு, துணைத் தலைவர் கே.என்.சேகர், இளைஞர் அணி செயலாளர் அருள், இளைஞர் அணி துணைத் தலைவர் மாம்பலம் வினோத் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணி நிர்வாகிகள், நகர – ஒன்றிய நிர்வாகிகள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

புத்தாண்டு உறுதிமொழி

கூட்டம் தொடங்கியதும், நிர்வாகிகள் அனைவரும் புத்தாண்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். அதாவது, 'தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பா.ம.க. மாற்றத்தை அளிக்கிறது. புத்தாண்டில் புதிய மாற்றம் படைக்க உறுதி ஏற்போம்' என்று 14 உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.

கூட்டத்தில், சமையல் கியாஸ் விலை உயர்வுக்கும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காத மத்திய – மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், மணல், தாது மணல், கிரானைட் ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்பது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.

அரசியல் தீர்மானம்

குறிப்பாக, அரசியல் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:–

சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி, சமூக ஒருமைப்பாடு ஆகிய உன்னதமானக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதுதான் சமூக ஜனநாயகம் ஆகும். பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகள் உள்பட உலகம் முழுவதும் மொத்தம் 51 நாடுகளில் சமூக ஜனநாயகக் கொள்கைகளை கடைபிடிக்கும் கட்சிகள் தான் ஆட்சி செய்கின்றன.

ஐரோப்பிய நாடுகளில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சமூக ஜனநாயக கொள்கைகளை பின்பற்றித்தான் அரசாங்கத்தை நடத்துகின்றன.

இத்தகைய சிறப்பான கொள்கைகளின் அடிப்படையில்தான், டாக்டர் ராமதாஸ் கடந்த 21–10–2013 அன்று தமிழ்நாட்டில் சமூக ஜனநாயக கூட்டணியை அமைத்து, மக்களவைத் தேர்தலுக்கான அதன் வேட்பாளர்களை அறிவித்தார். அவரின் வெற்றிக்காக தீவிரமாக பாடுபடுவது என்று பா.ம.க.வின் தலைமைப் பொதுக்குழு உறுதியேற்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டத்திற்கு இடையே, பா.ம.க. அறிக்கைகளையும், கட்சியின் நிகழ்ச்சிகளையும் கட்சியினர் தெரிந்துகொள்வதற்காக புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளதாக, இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார். அந்த இணையதள முகவரி www.pmk4change.org என்பதாகும்.

தலைமை பொதுக்குழு கூட்டத்தின் இறுதியாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

வன்னியர் சங்கம் ஏன்?

இந்தியாவில் எந்த கட்சியும் செய்யாத புதுமையை இந்த பொதுக்குழு மூலம் நாம் படைக்க தொடங்கியுள்ளோம். முதன் முதலில் வன்னியர் சங்கத்தை நான் ஏன் தொடங்கினேன் என்பதை கூற விரும்புகிறேன். அப்போது, தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களைவிட மோசமான நிலையில் வன்னியர்கள் இருந்தனர். அதனால், வன்னியர் சங்கத்தை தொடங்கினேன். அதன்பின்னும் வன்னியர்களின் நிலை மாறவில்லை. அதனால், பா.ம.க.வை தொடங்கினேன். அன்று முதல் இன்று வரை வன்னியர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

அனைத்து சமுதாயத்திலும் பின் தங்கியவர்களுக்காக நான் தொடர்ந்து போராடி வருகிறேன். நான் 25 ஆண்டுகளாக விடுத்து வரும் அறிக்கைகள் தமிழனுக்காகவும், தமிழுக்காகவும் விடுக்கப்பட்டு வருவதாகும். 35 ஆண்டுகால அரசியல் வாழ்வில் என்றைக்குமே பதவிக்கு நான் ஆசைப்பட்டதில்லை. நான் தலைவராக இருப்பதைவிட போராளியாக இருக்கவே விரும்புகிறேன்.

காதல் நாடகத் திருமணம்

காதல் நாடகத் திருமணத்தை நான் தோலுரித்தபோது, 32 மாவட்டங்களுக்கும் அப்போது சென்றபோது எல்லோரும் முகம் சுளித்தனர். ஆனால், டைரக்டர் சேரன் மகளுக்கு அதேநிலை ஏற்பட்டபோது அனைவரும் துடித்தனர். அப்போதுதான் எல்லோருக்கும் ஞானம் பிறந்தது. நான் கூறியது சரியாகத்தான் இருந்தது என்று அதன்பின்னர் கூறினார்கள்.

தமிழ்நாட்டில் சமூக பொருளாதாரம், அரசியல் பண்பாடு எந்த நிலையில் உள்ளது?. குறிப்பாக கல்வி எப்படி உள்ளது?. போதிய ஆசிரியர்கள் இல்லை, பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. ஆனால், இதையெல்லாம் மேம்படுத்தாமல், மக்கள் பணத்தில் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்துகிறார்கள்.

வறுமை ஒழிந்ததா?

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளில் வறுமை ஒழிந்ததா?. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை தேவைகளுள் ஒன்று மின்சாரம். ஆனால், தமிழ்நாட்டில் 18 மணி நேர மின்வெட்டு தொடர்கிறது. இந்த ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம்கூட புதிதாக உற்பத்தி செய்யப்படவில்லை.

மத்தியில் நடந்த 2 ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழலைவிட, தமிழகத்தில் ரூ.4 லட்சத்து 36 ஆயிரம் கோடிக்கு மணல், தாதுமணல் ஊழல் நடந்துள்ளது. ஏட்டிக்கு போட்டியான அரசியல் இங்கு நடக்கிறது. ஏற்காடு இடைத்தேர்தலில் ஓட்டுக்காக 2 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளனர். 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்று வாக்காளர்கள் சொல்ல வேண்டும். இந்த கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது எங்களால்தான் முடியும்.

சமூக ஜனநாயக கூட்டணி

தமிழ்நாட்டிற்கு அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் அரசியல் சாபக்கேடு. 47 ஆண்டுகளாக கலாசார சீரழிவுக்கு காரணமாக இருந்து வருகிறார்கள். கம்யூனிஸ்டு கட்சிகள் அவர்களின் தோளில் மாறி மாறி ஏறிக்கொள்கிறார்கள். ம.தி.மு.க. தனியாக போட்டியிடும் நிலையில் இல்லை. தே.மு.தி.க. தலைவரோ அவரது கட்சியை பட்டமரம் என்கிறார், பட்டமரம் துளிர்க்கும் எனவும் கூறிவருகிறார்.

தமிழ்நாட்டில் பா.ம.க. நல்ல கொள்கைகளை கொண்ட கட்சி, நாணயமான கட்சி, வித்தியாசமான கட்சி, உலக மக்களின் கட்சி. அதனால்தான், நல்ல கூட்டணியாக சமூக ஜனநாயக கூட்டணியை அமைத்துள்ளோம். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதை பா.ம.க.வால் அளிக்க முடியும். வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்களது கட்சியின் 10 எம்.பி.க்களையாவது டெல்லிக்கு அனுப்புங்கள். அங்கு வெகுண்டெழுந்து, சீறிப்பாய்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக போராடுவார்கள்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

சமூக ஜனநாயக கூட்டணியின் மேலும் 3 வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னையில் நேற்று நடந்த பா.ம.க. தலைமை பொதுக்குழு கூட்டத்தின்போது பேசிய அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, சமூக ஜனநாயக கூட்டணி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 3–வது பட்டியலை அறிவித்தார்.

அதன்படி, திருவண்ணாமலை தொகுதியில் பா.ம.க. துணைப் பொது செயலாளர் எதிரொலி மணியனும், கடலூரில் பா.ம.க. சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமியும், சிதம்பரம் தனித் தொகுதியில் கோபி என்ற கோபாலகிருஷ்ணனும் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள்.

 

image: 

category:

சி.பி.எஸ்.இ. 10, 12–வது வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு

Posted: 02 Jan 2014 09:45 AM PST

சென்னை,

சி.பி.எஸ்.இ. 10–வது மற்றும் 12–வது வகுப்பு தேர்வு மார்ச் மாதம் 1–ந்தேதி தொடங்கப்படும் என்று ஏற்கனவே சி.பி.எஸ்.இ. நிறுவனம் அறிவித்து இருந்தது. அதைத்தொடர்ந்து தேர்வு அட்டவணை முழுவிவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

12–வது வகுப்பு தேர்வு அட்டவணை:–

மார்ச் 1–ந்தேதி ஆங்கில விருப்பபாடம்.

 4–ந்தேதி வரலாறு

6–ந்தேதி வர்த்தக கல்வி

8–ந்தேதி அரசியல் அறிவியல், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட தேர்வுகள்

10–ந்தேதி நடனத்தேர்வு

 11–ந்தேதி வேதியியல் உள்ளிட்ட தேர்வுகள்

13–ந்தேதி தமிழ், இந்தி விருப்பப்பாடம்

15–ந்தேதி உயிரியல்

20–ந்தேதி கணிதம்

, நுண் உயிரியல்

22–ந்தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ்

24–ந்தேதி உடல்கல்வி

26–ந்தேதி பொருளாதாரம்

29–ந்தேதி புவியியல்

ஏப்ரல் 1–ந்தேதி அக்கவுண்டன்சி

3–ந்தேதி சமஸ்கிருதம் உள்ளிட்ட தேர்வுகள்

10–சமூகவியல்

11–ந்தேதி மனை அறிவியல்

12–ந்தேதி தத்துவஇயல்

16–ந்தேதி உளவியல்

17–ந்தேதி ஓவியம்

10–வது வகுப்பு தேர்வு அட்டவணை:–

மார்ச் 1–ந்தேதி தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வுகள்

3–ந்தேதி கணிதம்

4–ந்தேதி மனை அறிவியல்

7–ந்தேதி இங்கிலீஷ் கம்யூனிகேசன்

10–ந்தேதி அறிவியல்

12–ந்தேதி மலையாளம், பஞ்சாபி உள்ளிட்ட தேர்வுகள்

14–ந்தேதி சமூக அறிவியல்

19–ந்தேதி ஆட்டோமொபைல் டெக்னாலஜி
 

category:

News Group Category:

450 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர்

Posted: 02 Jan 2014 09:44 AM PST

மதுராந்தகம் ஒன்றியம் அரையப்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் விழா ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேஸ்வரிபாபு தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் வள்ளிஅப்பாதுரை, மதுராந்தகம் தாசில்தார் ரமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கணிதா சம்பத் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊராட்சி பகுதியில் வசிக்கும் 450 பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கினார்.

இந்த விழாவில் பாபு, ஊராட்சி செயலர் ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் வார்டு உறுப்பினர் மீனா விநாயகம் நன்றி கூறினார்.

image: 

திரவ எரிபொருள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட ஜி.எஸ்.எல்.வி டி–5 ராக்கெட் 5–ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது 29 மணிநேர கவுண்ட்டவுன் நாளை காலை 11 மணிக்கு தொடங்குகிறது

Posted: 02 Jan 2014 09:43 AM PST

சென்னை,

கடந்த ஆகஸ்டு மாதம் திரவ எரிபொருள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. டி–5 ராக்கெட் வருகிற 5–ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. அதற்கான 29 மணி நேர கவுண்ட்டவுன் நாளை(சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

ஜி.எஸ்.எல்.வி. டி–5 ராக்கெட்

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து தகவல் தொடர்பு சேவைக்கு பயன்படும் 1,982 கிலோ எடை கொண்ட ஜி சாட்–14 என்ற செயற்கை கோளுடன் ஜி.எஸ்.எல்.வி டி–5 ராக்கெட் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் 19–ந்தேதி விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது.

160 அடி உயரமும் 414 டன் எடையும் கொண்ட அந்த ராக்கெட்டில் முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்ட கடைசி நேரத்தில் ராக்கெட்டின் 2–வது நிலையில் உள்ள என்ஜின் பகுதியில் இருந்து திடீரென்று திரவ எரிபொருள் கசிந்தது.

இதனால் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது நிறுத்தப்பட்டது.

சரிசெய்யப்பட்டது

திரவ எரிபொருள் கசிவுக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு ராக்கெட்டை மீண்டும் அனுப்பும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

 அதன்படி திரவ எரிபொருள் கசிவுக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு அது சரி செய்யப்பட்டுவிட்டது. ஜனவரி 5–ந்தேதி மாலை 4.18 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என்று அறிவித்தார்.

5–ந் தேதி ஏவப்படுகிறது

அதன்படி ராக்கெட் 5–ந்தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. டி–5 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. அந்த ராக்கெட்டில் 3 நிலைகளில் எரிபொருள் இருக்கும். முதல் நிலையில் திட எரிபொருளும், 2–வதாக திரவ எரிபொருளும், இறுதி நிலையில் கிரையோஜெனிக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான இறுதிக் கட்ட ஆயத்த பணிகள் எனப்படும் 29 மணி நேர கவுண்ட்டவுன் நாளை காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

இந்த ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. வரிசையில் 8–வது ராக்கெட் ஆகும். இந்தவகை இதுவரை 7 முறை விண்ணில் செலுத்தப்பட்டதில் 4 முறை வெற்றி பெற்றுள்ளது. 3 முறை தோல்வி அடைந்துள்ளது.

இந்த முறை ஜி.எஸ்.எல்.வி. டி–5 ராக்கெட்டை வெற்றிகரமாக அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.

 

category:

News Group Category:

காஞ்சீபுரம் ஜரிகை தொழிற்சாலையில் வெள்ளிநூல் தயாரிக்க திட்டம் இயக்குனர் தகவல்

Posted: 02 Jan 2014 09:26 AM PST

காஞ்சீபுரம் ஜரிகை தொழிற்சாலையில் வெள்ளிநூல் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் பிரகாஷ் தெரிவித்தார்.

ஜரிகை தொழிற்சாலை

பட்டு சேலைகளுக்கு பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் மாவட்டத்தின் ஓரிக்கை பகுதியில் அரசு ஜரிகை தொழிற்சாலை உள்ளது. பட்டுசேலைகளுக்கு மேலும் அழகு சேர்ப்பது ஜரிகைதான். தமிழ்நாட்டிலேயே ஒரே அரசு ஜரிகை தொழிற்சாலையாக இது கடந்த 37 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சூரத்தில் இருந்து வாங்கப்படும் வெள்ளி நூலில் தங்க முலாம் பூசப்பட்டு, காஞ்சீபுரத்தில் உள்ள 23 பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு ஜரிகைகள் வழங்கப்படும். இது தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் செயல்படும் பட்டுக் கூட்டுறவு சங்கங்களுக்கும் ஜரிகைகள் அனுப்பப்பட்டன.

இங்கு 92 தொழிலாளர்கள் நிரந்தர பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். சுமார் 6000 மார்க் ஜரிகை தயாரிக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில், கடந்த ஓரிரு ஆண்டுகளாக 2000 மார்க் ஜரிகை தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் சூரத்தில் இருந்து வாங்கப்படும் வெள்ளி நூலில் தரம் குறைவு காரணமாக தொழிற்சாலை நிர்வாகத்துக்கும், சூரத் வெள்ளி நூல் வழங்குபவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வெள்ளி நூல் அனுப்புவதை அவர்கள் நிறுத்தி கொண்டனர். இதனால் கடந்த 2 மாதங்களாக தொழிற்சாலை செயல்படவில்லை.

இயக்குனர் ஆய்வு

இந்த நிலையில் தமிழ்நாடு கைத்தறித்துறை இயக்குனர் கோ.பிரகாஷ் காஞ்சீபுரம் அரசு ஜரிகை தொழிற்சாலையில் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். தொழிற்சாலையில் எந்திரங்களின் தரம், ஆய்வகம் ஆகியன குறித்து சுமார் 2 மணி நேரம் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–

இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 72 ஆயிரம் மார்க் ஜரிகை தயாரிக்கும் திறன் உள்ளது. சூரத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் வெள்ளி நூலின் தரம் தொடர்ந்து குறைந்து வந்தது. உரிய தரத்தில் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சூரத்தில் வெள்ளி நூல் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இது வரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. வெள்ளி நூலுக்கு சூரத் உற்பத்தியாளர்களை மட்டும் நம்பி இருந்தால் தரமான வெள்ளி நூல் கிடைக்காது என்பதால், காஞ்சீபுரம் அரசு ஜரிகை தொழிற்சாலையிலேயே வெள்ளி நூல் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆய்வு அடிப்படையில்

இங்கு ஏற்கெனவே அதற்கான எந்திரம் உள்ளது. அந்த எந்திரம் மூலம் ஆய்வு அடிப்படையில்தான் வெள்ளி நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. முழு உற்பத்தி இதுவரை தொடங்கப்படவில்லை. அது குறித்து சாத்தியகூறுகள், அதற்கு ஆகும் செலவு குறித்து திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான நிதியை மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போதுள்ள நிலையில் சொந்தமாக வெள்ளி நூல் தயாரித்துதான் தொழிற்சாலையை இயக்க வேண்டும் என்றால் மேலும் 3 மாதத்துக்கு தொழிற்சாலையை இயக்க முடியாது எனவே சூரத் உற்பத்தியாளர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் இன்றைய விலைவாசிக்கேற்ப ஊதியம் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு கைத்தறித்துறை காஞ்சீபுரம் சரக துணை இயக்குனர் தமிழரசி, அரசு ஜரிகை தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் மாதூர் பூதேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊதிய பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச. சார்பில் மனு அளிக்கப்பட்டது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™