Daily Thanthi |
- கொலை, ஆள்மாறாட்ட வழக்குகளில் கைதான வக்கீல் தம்பதி கோவை கோர்ட்டில் ஆஜர் சிறையில் அடைக்கப்பட்டனர்
- நெல்சன் மண்டேலா மரணம் 5 நாட்கள் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்படும் தமிழக அரசு அறிவிப்பு
- புதுவையில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட மாணவன் விடுவிப்பு
- முதலாவது ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வி: இந்திய பந்து வீச்சாளர்கள் மீது டோனி சாடல்
- நெல்சன் மண்டேலா மறைவு எதிரொலி: இந்தியா–தென்ஆப்பிரிக்க போட்டி அட்டவணையில் மாற்றம் வருமா?
- மண்டேலா மறைவுக்கு விளையாட்டு உலகினர் இரங்கல்
- இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: மைக்கேல் கிளார்க், ஹேடின் சதம் ஆஸ்திரேலியா 570 ரன்கள் குவிப்பு
- நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் டேரன் பிராவோ இரட்டை சதத்தால் முன்னிலை பெற்றது, வெஸ்ட் இண்டீஸ்
- உலக உள்ளரங்க வில்வித்தை போட்டி இந்திய அணியில் 23 தமிழக வீரர்–வீராங்கனைகள்
- நிறவெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மரணம்; 15–ந் தேதி இறுதிச்சடங்கு: உலக தலைவர்கள் பங்கேற்பு
| கொலை, ஆள்மாறாட்ட வழக்குகளில் கைதான வக்கீல் தம்பதி கோவை கோர்ட்டில் ஆஜர் சிறையில் அடைக்கப்பட்டனர் Posted: 06 Dec 2013 12:06 PM PST கோவை கொலை மற்றும் ஆள்மாறாட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த வக்கீல் தம்பதியை போலீசார் கைது செய்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்பாவி பெண் கொலை கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேல் (வயது 45).இவரது மனைவி மோகனா (41). இருவரும் வக்கீல்கள். ராஜவேலின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஈங்கூர். கோவை சட்டக்கல்லூரியில் படித்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.வக்கீல் ராஜவேலின் மனைவி மோகனா சில ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தில் 'ரைட் மேக்ஸ்' என்ற நிதி நிறுவனம் நடத்தினார்.இதில் ரூ.12 கோடிக்கு மோசடி நடைபெற்றதாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து மோகனா தலைமறைவானார். இதைத்தொடர்ந்து அவரை ஒடிசா போலீசார் தேடி வந்தனர். இந்த மோசடி வழக்கில் இருந்து மனைவி மோகனாவை காப்பாற்ற வக்கீல் ராஜவேல் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவை ரத்தினபுரி சிவானந்தாகாலனியை சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி அம்மாசை(வயது 45) என்ற பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.கடந்த 11.12.2011 அன்று இந்த சம்பவம் நடைபெற்றது. அம்மாசையின் உடலை தனது மோகனாவின் உடல் என்று கூறி வக்கீல் ராஜவேல் தனக்கு நெருங்கிய டாக்டர் மூலம் இறப்பு சான்றிதழ் வாங்கினார். போலீசார் சந்தேகம் இந்த நிலையில் கோவை ராமநாதபுரம் ரியல் எஸ்டேட் அதிபர் மணிவேல் கொலை வழக்கிலும் வக்கீல் ராஜவேல் ஈடுபட்டுள்ளார்.மணிவேலுக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்தை தனது மனைவி பெயருக்கு மாற்ற வக்கீல் ராஜவேல் முயற்சி செய்தார்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 கொலை வழக்குகள் மற்றும் மோசடி வழக்கு தொடர்பாக வக்கீல் ராஜவேலையும் அவரது மனைவி மோகனாவையும் தீவிரமாக தேடி வந்தனர். இவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி செல்லக்கூடும் என்று கருதி அவர்களுடைய பாஸ்போர்ட்டையும் போலீசார் முடக்கினார்கள். அம்மாசை கொலை வழக்கு தொடர்பாக பொன்னரசு(32), வக்கீல் ராஜவேலின் கார் டிரைவர் பழனிசாமி(50) ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட வக்கீல் ராஜவேல், மனைவி மோகனா ஆகியோரை நேற்று முன்தினம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளத்தில் கேரள போலீசார் மடக்கிப் பிடித்தனர்.இதைத்தொடர்ந்து உதவி கமிஷனர் ராமச்சந்திரன் மேற்பார்வையில் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கனகசபாபதி, ராஜவேல்,சந்திரமோகன்,வெங்கட்ராமன் ஆகியோர் கோவையிலிருந்து கோவளம் சென்று வக்கீல் தம்பதியினரை கோவளம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் நேற்று அதிகாலை 3 மணிக்கு தனி வேன் மூலம் கோவளத்திலிருந்து வக்கீல் தம்பதியினருடன் புறப்பட்டனர்.அவர்கள் நேற்று மதியம் 1.30 மணிக்கு கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர். போலீசில் வாக்குமூலம் அங்கு ராஜவேல் மற்றும் மோகனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.கோவை ரத்தினபுரியை சேர்ந்த அம்மாசை என்ற பெண் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வக்கீல் ராஜவேல் மற்றும் மோகனா ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 302 (கொலை) மற்றும் 201 (தடயங்களை மறைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த கொலை குறித்து வக்கீல் ராஜவேல் மற்றும் மோகனா ஆகியோர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். வக்கீல் ராஜவேல் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- என் மனைவி மோகனா மீது ஒடிசா போலீசார் பதிவு செய்த மோசடி வழக்கிலிருந்து காப்பாற்றுவதற்காக புதிய திட்டம் ஒன்றை உருவாக்கினேன்.அதன்படி மோகனா இறந்து விட்டதாக சான்றிதழ் கொடுத்து விட்டால் இதில் இருந்து தப்பித்து விடலாம் என்று கருதினேன். அதன்படி ஒரு பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டேன்.அப்போது தான் எனது அலுவலகத்துக்கு ஒரு வழக்கு தொடர்பாக அடிக்கடி வந்து கொண்டிருந்த அம்மாசை என்ற பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்கு பொன்னரசு, மற்றும் பழனிச்சாமி ஆகியோர் உதவினார்கள். சொத்தை மாற்ற முயன்றார் எங்கள் திட்டப்படி அம்மாசையின் வாயில் துணியை திணித்து குரல்வளையை நெரித்து கொலை செய்தோம். பின்னர் அந்த பெண்ணின் பிணத்தை என் மனைவி மோகனாவினுடைய உடல் என்று கூறி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை நம்ப வைத்தேன். பிறகு ஆத்துப்பாலம் மின்மயானத்துக்கு அந்த உடலை கொண்டு சென்று என் மனைவி உடல் என்று கூறி எரித்தேன்.அந்த சம்பவத்துக்கு பின்னர் மோகனாவை தலைமறைவாக இருக்கும்படி கூறினேன்.அதன்படி அவரும் வெளியூர் சென்று விட்டார். பின்னர் மனைவி மோகனா இறந்து விட்டதாக கூறி இறப்பு சான்றிதழ் வாங்கினேன்.இந்த நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் மணிவேல் என்பவரிடம் இருந்து மோகனாவின் பெயருக்கு சொத்து வாங்க முயன்றேன்.இதற்காக என்மனைவி பெயரில் ஏற்கனவே வாங்கிய இறப்பு சான்றிதழை ரத்து செய்யுமாறு விண்ணப்பித்தபோது தான் மாநகராட்சி அதிகாரி சந்தேகம் அடைந்து போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் விசாரித்த போது தான் நாங்கள் சிக்கிக் கொண்டோம். இவ்வாறு வக்கீல் ராஜவேல் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அடுத்தடுத்து வழக்குப் பதிவு இந்த வழக்கு குறித்து போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் கூறியதாவது:- அம்மாசை கொலை வழக்கு தொடர்பாக வக்கீல் ராஜவேல் மற்றும் அவரது மனைவி மோகனா ஆகியோர் மீது முதற்கட்டமாக கோவை ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வக்கீல் ராஜவேல் மீது கொலை வழக்கும், மோகனா மீது போலி சான்றிதழ் தயாரித்தல் பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ரியல் எஸ்டேட் அதிபர் மணிவேல் கொலை வழக்கும் அவர்கள் மீது பதிவு செய்யப்படும்.இந்த நிலையில் கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் விசாலாட்சி என்ற பெண் கொலை வழக்கிலும் ராஜவேலுக்கு தொடர்பிருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.இவர்கள் மோசடியாக சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கோர்ட்டில் ஆஜர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வக்கீல் தம்பதியினர் ராஜவேல் மற்றும் மோகனா ஆகியோரை போலீசார் நேற்று மாலை கோவை 2-ம் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை வருகிற 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு விஜய் கா£ர்த்தி உத்தரவிட்டார். அப்போது வக்கீல் ராஜவேல் தரப்பில் தங்களுக்கு சிறையில் முதல் வகுப்பு அளிக்க வேண்டும் என்று கோரி மனு அளிக்கப்பட்டது.இதைதொடர்ந்து ராஜவேல் மற்றும் மோகனாவுக்கு சிறையில் முதல் வகுப்பு அனுமதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் 2 பேரையும் போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். காவலில் எடுத்து விசாரிக்க முடிவு கைது செய்யப்பட்ட வக்கீல் ராஜவேல் மற்றும் அவரது மனைவி மோகனா ஆகியோரை போலீசார் நேற்று மாலை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போது அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று போலீசார் அது போன்று மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. எனவே வக்கீல் தம்பதியை காவலில் எடுத்து விசாரிக்க இரண்டொரு நாளில் போலீசார் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. *** வக்கீல்கள் புடைசூழவந்த வக்கீல் தம்பதி கைது செய்யப்பட்ட வக்கீல் தம்பதி ராஜவேல் மற்றும் மோகனா ஆகியோர் நேற்று மாலை கோவை 2-ம் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசார் அங்கிருந்து அழைத்துவந்தனர். அப்போது திரளான வக்கீல்கள் புடை சூழ்ந்து காணப்பட்டனர். இதனால் அந்த தம்பதியினரை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுக்க முடியாமல் திணறினர். இதற்கிடையில் வக்கீல் தம்பதியினர் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்ததால் அவர்களின் முகத்தை பார்ப்பதற்காக கோர்ட்டு வளாகத்தில் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒருவழியாக அந்த தம்பதியினரை போலீசார் அழைத்துக்கொண்டு, கோர்ட்டு வளாகத்துக்கு வெளியே நிறுத்தி இருந்த வேனில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். category: |
| நெல்சன் மண்டேலா மரணம் 5 நாட்கள் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்படும் தமிழக அரசு அறிவிப்பு Posted: 06 Dec 2013 12:06 PM PST சென்னை, தமிழ்நாடு பொதுத்துறை முதன்மை செயலாளர் ஜிதேந்திரநாத் ஸ்வைன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான நெல்சன் ஆர்.மண்டேலா கடந்த 5–ந் தேதி மரணமடைந்துள்ளார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, டிசம்பர் 6–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை தமிழக அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில், தமிழகம் முழுவதும் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்படும். அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. இதுசம்பந்தமாக அனைத்து துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. category:Tagging:News Group Category: |
| புதுவையில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட மாணவன் விடுவிப்பு Posted: 06 Dec 2013 12:00 PM PST புதுச்சேரி புதுச்சேரியில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட மாணவன் நேற்று மாலை விடுவிக்கப்பட்டான். மாணவன் மாயம் புதுச்சேரி ரெயின்போ நகர் விரிவாக்கம் 7-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் மணிஷ்குமார். மூலக்குளத்தில் வட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது இளைய மகன் நீரஜ் ஜெயின்(வயது 10). தனியார் பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். நீரஜ் ஜெயின் தினமும் பள்ளிக்கூடம் முடிந்து வந்த உடன் அதே தெருவில் உள்ள டியூசன் சென்டருக்கு சென்று படித்து விட்டு இரவு 8.15 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வருவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு டியூசன் படிக்கச் சென்ற மாணவன் இரவு 9 மணியாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவனது பெற்றோர் டியூசன் சென்டருக்கு போய் விசாரித்தனர். அப்போது நீரஜ் ஜெயின் டியூசன் முடிந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அவனது நண்பர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று தேடினார்கள். ஆனால் எங்கு தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. நள்ளிரவில் தேடுதல் வேட்டை அதன்பின்னர் மாணவனின் தந்தை மணிஷ்குமார் இதுபற்றி பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் காணாமல் போன மாணவனை பல்வேறு இடங்களில் தேடினர். அவர்களோடு அந்த பகுதி இளைஞர்களும் சேர்ந்து தங்களது மோட்டார் சைக்கிளில் நகர் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை. சொகுசு கார்... பின்னர் பெரியகடை போலீசார் நீரஜ் ஜெயினின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். நீரஜ் ஜெயின் டியூசன் படித்த பகுதியை சேர்ந்தவர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது மாணவன் காணாமல் போவதற்கு முன்பாக அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு சொகுசு கார் சுற்றி வந்ததாகவும், மாணவன் காணாமல் போன பின்னர் அந்த காரையும் காணவில்லை என்றும் சிலர் தெரிவித்தனர். அதன்பின்னரே மாணவன் கடத்தப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் நீரஜ் ஜெயினின் புகைப்படத்தை புதுச்சேரியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் அனுப்பி வைத்தனர். மேலும் தமிழக பகுதி போலீசாருக்கும் புகைப்படத்தை அனுப்பி வைத்து தகவல் தெரிவித்தனர். சீனியர் சூப்பிரண்டு (பொறுப்பு) பைரோன்சிங் குர்ஜார் உத்தரவின் பேரில் வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் திரிபாதி, சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், செல்வம், ஜிந்தா கோதண்டராமன், வீரவல்லபன் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் மணிஷ் குமாரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம மனிதன் நீரஜ் ஜெயினை விடுவிக்க ரூ.1 கோடி தர வேண்டும் என்று கேட்டு மிரட்டினான். மேலும் இது பற்றி போலீசாரிடம் எதுவும் சொல்லக்கூடாது என்று கூறினான். இதுபற்றியும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் போலீசார் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர். அந்த மர்ம மனிதன் பயன்படுத்திய செல்போன் எண்ணை கொண்டு அவன் எங்கிருந்து பேசினான் என்பது குறித்து ஆய்வு நடத்தினார்கள். அப்போது அவன் புதுவையையொட்டி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இருந்து பேசியது தெரியவந்தது. தொடர்ந்து பேசிய அந்த மர்ம மனிதன் மணீஷ்குமாரிடம் ரூ.50 லட்சம் பேசி இறுதியாக ரூ.15 லட்சம் தரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளான். இதற்கிடையே நீரஜ் செயினின் தந்தை மணிஷ்குமாருக்கு பணம் கேட்டு வந்த அழைப்பை வைத்து கடத்தல் கும்பலின் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த பகுதியில் போலீசார் தீவிரமாக தேடினார்கள். அங்கு எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் முயற்சி தோல்வியில் முடிந்தது. விடுவிப்பு இந்த நிலையில் மாணவனை கடத்திய மர்ம மனிதர்கள் நேற்று மாலை 6.30 மணிஅளவில் அவனை புதுச்சேரி காமராஜ் நகரில் ஒரு காரில் வந்து இறக்கிவிட்டு சென்று விட்டனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து மாணவனிடம், கடத்தியது யார்? எங்கே கொண்டு சென்றார்கள்? என்பது குறித்து அவனிடம் போலீசார் விசாரிக்கிறார்கள். image: category:Tagging: |
| முதலாவது ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வி: இந்திய பந்து வீச்சாளர்கள் மீது டோனி சாடல் Posted: 06 Dec 2013 11:50 AM PST ஜோகனஸ்பர்க் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவிடம் அடைந்த படு மோசமான தோல்விக்கு பந்து வீச்சாளர்களே காரணம் என்று இந்திய கேப்டன் டோனி கூறியுள்ளார். இந்தியா தோல்வி ஜோகனஸ்பர்க்கில் நேற்று முன்தினம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், உலக சாம்பியனான இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் குயின்டான் டி காக் (135 ரன்), கேப்டன் டிவில்லியர்ஸ்(77 ரன்), டுமினி (59 ரன்) துணையுடன் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்திய பேட்ஸ்மேன்களால், தென்ஆப்பிரிக்காவின் அனல் பறந்த வேகத்தையும், பவுன்ஸ் தாக்குதலையும் துளியும் சமாளிக்க முடியவில்லை. பந்து, பல முறை நமது வீரர்களின் உடல்களை தான் பதம் பார்த்தது. இறுதியில் இந்தியா 41 ஓவர்களில் 217 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் டோனி அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான் (12 ரன்), ரோகித் ஷர்மா (18 ரன்), விராட் கோலி (31 ரன்) ஆகியோரின் பாச்சா இங்கு பலிக்கவில்லை. தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டெயின், ரையன் மெக்லரன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். டோனி பேட்டி சமீபத்தில் நடந்த ஆட்டங்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் எதிரணிக்கு 9 முறை 350 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துள்ளனர். தோல்விக்கு பின்னர் இந்திய கேப்டன் டோனி பந்து வீச்சாளர்கள் மீது கடுமையாக தாக்குதல் தொடுத்தார். அவர் கூறியதாவது:– ஒட்டுமொத்தத்தில் இது மிக மோசமான செயல்பாடாகும். பந்து வீச்சில் நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. புதிய பந்தில் எங்களது பந்து வீச்சு திருப்திகரமாக இல்லை. இந்த மாதிரியான ஆடுகளங்களில் ரன்கள் குவிப்பது மிகவும் கடினம். அது மட்டுமின்றி இது 300 ரன்களுக்கு மேலாக எடுக்கக்கூடிய ஆடுகளம் மாதிரியும் இல்லை. பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் கொண்ட இந்த மாதிரியான ஆடுகளங்களில், தொடக்க பந்து வீச்சில் அசத்த வேண்டியது முக்கியம். ஏனெனில் கடைசி 10 ஓவர்களில் பெரும்பாலும் நிறைய ரன்கள் சென்று விடும். எனவே முதல் 10 ஓவர்களில் சில விக்கெட்டுகளை சாய்த்து விட்டால், அதன் பிறகு மிடில் ஓவர்களில் நெருக்கடி கொடுக்க முடியும். இறுதி கட்டத்தில் அவர்களது கைவசம் விக்கெட்டுகள் அதிகமாக இருக்காது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அகமது மட்டும் உண்மையிலேயே சரியான அளவில் பந்து வீசினார். மற்றவர்கள் அதை செய்ய தவறி விட்டனர். பயிற்சி ஆட்டம் இல்லாததால்... இது போன்ற சீதோஷ்ண நிலையில் அனுபவம் முக்கிய பங்கு வகிக்கும். தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு இங்கு எப்படி துல்லியமாக பந்து வீச வேண்டும் என்பது தெரியும். என்றாலும் நமது பந்து வீச்சாளர்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். இதை விட அதிக வேகத்தில் பந்து வீச வேண்டும். 300 அல்லது 350 ரன்களுக்கு மேல் எதிரணிக்கு வழங்கி விட்டால், அதன் பிறகு பேட்ஸ்மேன்களுக்கு தான் நெருக்கடி உருவாகும். எந்த வித பயிற்சி ஆட்டமும் இல்லாமல் வந்த உடனே சர்வதேச போட்டியில் விளையாடுவது சிரமமானது தான். சில பயிற்சி ஆட்டங்களில் விளையாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதே நேரத்தில் போட்டி அட்டவணை நமக்கு முன்பே தெரியும் நிலையில், அதற்கு ஏற்ப நாம் மனரீதியாக தயாராக இருக்க வேண்டும். போட்டி அட்டவணையை குறை சொல்ல முடியாது. இவ்வாறு டோனி கூறினார். டிவில்லியர்ஸ் கருத்து தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் கூறுகையில், 'முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நிச்சயம் இந்த தொடரை நாங்கள் கைப்பற்றி விடுவோம் என்று அர்த்தம் கிடையாது. அடுத்த போட்டி நடக்கும் டர்பன் மைதானம் இந்தியர்களுக்கு இதை விட அதிகமாக ஒத்துழைக்க கூடியது. அவர்களால் சரிவில் இருந்து மீண்டு வர முடியும். எனவே களத்தில் தொடர்ந்து எங்களது ஆதிக்கத்தை நீட்டிக்க வேண்டியது அவசியம்.' என்றார். இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி டர்பனில் நாளை நடக்கிறது. --– டோனி சாதனை இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் டோனி 27 ரன்கள் எடுத்திருந்த போது, முகமது அசாருதீனை பின்னுக்கு தள்ளிவிட்டு ஒரு நாள் போட்டியில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அசாருதீன் கேப்டனாக விளையாடிய ஆட்டங்களில் 5239 ரன்களும் (174 ஆட்டம்), இந்த வகையில் டோனி 5278 ரன்களும் (152 ஆட்டம்) சேர்த்துள்ளனர். image: category: |
| நெல்சன் மண்டேலா மறைவு எதிரொலி: இந்தியா–தென்ஆப்பிரிக்க போட்டி அட்டவணையில் மாற்றம் வருமா? Posted: 06 Dec 2013 11:47 AM PST ஜோகனஸ்பர்க் உலகம் போற்றும் உன்னத தலைவர்களில் ஒருவரான தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவினால், இந்தியா–தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் திட்டமிட்டபடி நாட்களில் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மண்டேலாவின் இறுதிசடங்குகள் வருகிற 15–ந்தேதி நடக்கிறது. இறுதி சடங்குகள் நடக்கும் வரை அந்த நாட்டில் துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான போட்டியை தொடரலாமா? என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், தென்ஆப்பிரிக்க அதிபரிடம் ஆலோசனை கேட்டுள்ளது. தென்ஆப்பிரிக்க அரசின் முடிவை பொறுத்தே போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா? அல்லது போட்டி அட்டவணையில் மட்டும் மாற்றம் ஏதும் செய்யப்படுமா? என்பது தெரியவரும். இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி நாளை டர்பனிலும், 3–வது ஒரு நாள் போட்டி வருகிற 11–ந்தேதி செஞ்சுரியனிலும் நடத்த திட்டமிட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. image: category:Tagging: |
| மண்டேலா மறைவுக்கு விளையாட்டு உலகினர் இரங்கல் Posted: 06 Dec 2013 11:45 AM PST துபாய் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உள்பட பல்வேறு சர்வதேச விளையாட்டு அமைப்புகளும், பிரபல வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 'உண்மையான அரசியல் மேதை மண்டேலா. விளையாட்டு மக்களை இணைக்கும் பாலமாகும் என்பதை உணர்ந்தவர்' என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாச் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 'மண்டேலா எதிர்த்து போராடுவதின் அடையாளம். தனது கொள்கைகளை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாதவர். நீதியிலும், சம உரிமையிலும் நம்பிக்கை உடையவர்' என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஆலன் ஐசக் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் ஜெப் பிளாட்டர், விளையாட்டு ஜாம்பவான்கள் பீலே (கால்பந்து), டைகர் உட்ஸ் (கோல்ப்), தெண்டுல்கர் (கிரிக்கெட்) உள்பட பலர் மண்டேலாவுக்கு புகழாரம் சூட்டி இருக்கின்றனர். 'மண்டேலா உண்மையிலேயே எழுச்சி மிகு மனிதர். அவரை நான் சந்தித்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத முக்கியமான நாட்களில் ஒன்றாகும்' என்று தெண்டுல்கர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா–இந்தியா இடையே நடந்து வரும் கிரிக்கெட் போட்டி தொடரை மண்டேலாவுக்கு அர்ப்பணிப்பதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா, இந்திய அணி வீரர்கள் மண்டேலா மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். image: category: |
| இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: மைக்கேல் கிளார்க், ஹேடின் சதம் ஆஸ்திரேலியா 570 ரன்கள் குவிப்பு Posted: 06 Dec 2013 11:42 AM PST அடிலெய்டு ஆஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2–வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் மைக்கேல் கிளார்க் 48 ரன்களுடனும், துணை கேப்டன் பிராட் ஹேடின் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2–வது நாளான நேற்று கிளார்க்–ஹேடின் கூட்டணி நேர்த்தியாக விளையாடி அணிக்கு வலுவூட்டினர். 91 ரன்களில் இருந்து போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த கிளார்க் 26–வது சதத்தை நிறைவு செய்தார். முதலாவது டெஸ்டிலும் அவர் சதம் அடித்திருந்தார். அணியின் ஸ்கோர் 457 ரன்களாக உயர்ந்த போது கிளார்க் 148 ரன்களில் (245 பந்து, 17 பவுண்டரி) கேட்ச் ஆனார். கிளார்க்–ஹேடின் ஜோடி 6–வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் திரட்டியது. அடிலெய்டு மைதானத்தில் 6–வது விக்கெட்டுக்கு ஓர் ஜோடி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். சிறிது நேரத்தில் தனது 4–வது சதத்தை எட்டிய ஹேடின் 118 ரன்களில் (177 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டம் இழந்தார். இறுதி கட்டத்தில் ரையான் ஹாரிசின் அதிரடியுடன் (55 ரன், 54 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 570 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. முன்னதாக பிராட் ஹேடின் 51 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது, அவருக்கும், இங்கிலாந்து அறிமுக பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்சுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஹேடின் அவரது பந்து வீச்சில் கேட்ச் ஆன போதிலும் அது 'நோ–பால்' என்று அறிவிக்கப்பட்டதும், ஹேடின் ஏதோ சொல்ல, பதிலுக்கு ஸ்டோக்சுக்கும் திட்டினார். பிறகு நடுவர் மரைஸ் எராஸ்மஸ் தலையிட்டு அமைதிப்படுத்தினார். அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய முடிவில் கேப்டன் அலஸ்டயர் குக்கின் (3 ரன்) விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்திருந்தது. 3–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. image: category: |
| நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் டேரன் பிராவோ இரட்டை சதத்தால் முன்னிலை பெற்றது, வெஸ்ட் இண்டீஸ் Posted: 06 Dec 2013 11:40 AM PST டுனெடின் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாலோ–ஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி டேரன் பிராவோவின் இரட்டை சதத்தால் முன்னிலை பெற்றுள்ளது. முதலாவது டெஸ்ட் நியூசிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டுனெடினில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 609 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. ராஸ் டெய்லர் 217 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 62.1 ஓவர்களில் 213 ரன்னில் ஆல்–அவுட் ஆகி 'பாலோ–ஆன்' ஆனது. 'பாலோ–ஆன்' ஆனதால் தொடர்ந்து 2–வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3–வது நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து இருந்தது. டேரன் பிராவோ 72 ரன்னுடனும், சாமுவேல்ஸ் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 4–வது நாள் ஆட்டம் நேற்று 4–வது நாள் ஆட்டம் நடந்தது. டேரன் பிராவோ, சாமுவேல்ஸ் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். சாமுவேல்ஸ் 23 ரன் எடுத்த நிலையில் டிம் சவுதி பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சந்தர்பால் ஒரு ரன்னில் வாக்னர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனை அடுத்து டியோநரைன், டேரன் பிராவோவுடன் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய டேரன் பிராவோ 200 பந்துகளில் 15 பவுண்டரியுடன் தனது 5–வது சதத்தை பூர்த்தி செய்தார். டேரன் பிராவோவுக்கு பக்கபலமாக நின்ற டியோநரைன் 52 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து களம் கண்ட ராம்டின் தன் பங்குக்கு 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். டேரன் பிராவோ இரட்டை சதம் இதைத்தொடர்ந்து கேப்டன் டேரன் சேமி, டேரன் பிராவோவுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று அணியை தோல்வியில் இருந்து காக்க போராடினார்கள். அபாரமாக ஆடிய டேரன் பிராவோ 390 பந்துகளில் 28 பவுண்டரியுடன் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். பாலோ–ஆன் ஆகிய அணியை சேர்ந்தவர்களில் ஒருவர் இரட்டை சதம் அடிப்பது இது 7–வது முறையாகும். இதற்கு முன்பு இப்படி அடிக்கப்பட்ட 6 ஆட்டங்களிலும் அடித்த அணி தோல்வியில் இருந்து தப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. பாலோ–ஆனை சந்தித்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஒருவர் சதம் அடிப்பது இது முதல்முறையாகும். நேற்றைய ஆட்டம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2–வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்தது. டேரன் பிராவோ 210 ரன்னுடனும், டேரன் சேமி 44 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 47 ரன்கள் முன்னிலை இன்று (சனிக்கிழமை) 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணி கைவசம் 4 விக்கெட்டுகள் உள்ளது. image: category: |
| உலக உள்ளரங்க வில்வித்தை போட்டி இந்திய அணியில் 23 தமிழக வீரர்–வீராங்கனைகள் Posted: 06 Dec 2013 11:37 AM PST சென்னை உலக உள்ளரங்க வில்வித்தை போட்டிக்கான இந்திய அணியில் 23 தமிழக வீரர்–வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். உலக வில்வித்தை போட்டி உலக உள்ளரங்க வில்வித்தை போட்டி சிங்கப்பூரில் நாளை (8–ந் தேதி) முதல் 11–ந் தேதி வரை நடக்கிறது. பல்வேறு நாட்டு வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டியில் ராகுல் பானர்ஜி, தருண்தீப்ராய், தீபிகாகுமாரி, டோலா பானர்ஜி உள்பட 47 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. 23 தமிழக வீரர்–வீராங்கனைகள் தேர்வு இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த அச்சுதன், அறிவரசு, குரு, ஆலன், செல்வகணபதி, செந்தில்குமார் ராஜா, சோலை அழகு, ஸ்ரீசரண் தினேஷ், சுமதி தினேஷ், சுந்தர்ராஜன், பாரதி, மணிவண்ணன், முரளிதர், வெங்கடேஷ், ரவிபாபு, சையது அலி, ஸ்ரீதர் சுப்பிரமணியம் (ரிகர்வ் பிரிவு), குரலாழி, குல்தீப், விக்னேஷ்குமார், விஷால், ரோஹித் ராஜேஷ், அக்ஷயா கவுசிக், (காம்பவுண்ட் பிரிவு) ஆகிய 23 வீரர்–வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். பயிற்சியாளர்களாக, தமிழ்நாடு வில்வித்தை சங்க பொதுச்செயலாளர் ஷிகான் ஹூசைனி, சீனிவாசன், பரதன்குமார், ரவி ஆகியோர் செல்கிறார்கள். சர்வதேச வில்வித்தை போட்டியில் தமிழக வீரர்–வீராங்கனைகள் அதிக அளவில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். image: category: |
| Posted: 06 Dec 2013 11:26 AM PST நிறவெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மரணம் அடைந்தார். 15–ந் தேதி நடைபெறும் அவரது இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஜோகன்னஸ்பர்க், உலக வரலாற்றில் தன் பெயரை பொன்னெழுத்துகளால் பொறித்துக்கொண்ட மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலா. மண்டேலா மரணம் அமைதிக்கான 'நோபல் பரிசு' பெற்ற இவர், தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பர் இன அதிபர். ஆப்பிரிக்க காந்தி எனவும் அழைக்கப்பட்ட இவர், ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள தனது வீட்டில் உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. அவரது மரணச்செய்தி உலகமெங்கும் உள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும், துயரமாகவும் அமைந்தது. நுரையீரல் தொற்றுநோய் மண்டேலா உடல்நலக்குறைவால் கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதும், வீடு திரும்புவதுமாக இருந்தார். கடந்த ஜூன் மாதம் 8–ந் தேதி நுரையீரல் தொற்றுநோய் காரணமாக தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து உயிருக்கு போராடி வந்த அவர், மரணத்தின் விளிம்புவரை சென்று, 3 மாத சிகிச்சையில் ஓரளவு சுகம் பெற்றார். கடந்த செப்டம்பர் மாதம் 1–ந் தேதி வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு வீட்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆனது. இந்த நிலையில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலையில் அவரது உயிர் அமைதியாக பிரிந்தது. முறைப்படி அறிவிப்பு நெல்சன் மண்டேலாவின் மறைவுச்செய்தியை அந்த நாட்டின் அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார். இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், ''நமது அன்புக்குரியவரும், தென் ஆப்பிரிக்க ஜனநாயகத்தின் நிறுவனர் அதிபருமான நெல்சன் மண்டேலா காலமானார். அவர் இப்போது நிரந்தரமாக ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்... அவர் இப்போது அமைதியாக இருக்கிறார். நமது தேசம், அதன் மிகப்பெரிய புதல்வரை இழந்து விட்டது. நமது மக்கள் தங்கள் தந்தையை இழந்து விட்டனர்'' என்றார். உலக தலைவர்கள் இரங்கல் தொடர்ந்து அவர், ''மண்டேலாவின் ஓய்வு ஒழிச்சலில்லா விடுதலைப்போராட்டம், அவருக்கு உலகமெங்கும் மதிப்பை தேடித்தந்தது. அவரது பணிவு, கருணை, மனிதநேயம் ஆகியவை மக்களின் அன்பைப் பெற்றுத்தந்தது. நமது சிந்தனையெல்லாம், உலகமெங்கும் மண்டேலாவை தங்களது சொந்தத் தலைவராக, அவரது நலனை தங்கள் நலனாக கொண்ட கோடானுகோடி மக்களுடன் கலந்திருக்கிறது'' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மண்டேலாவின் மறைவுக்கு உலக தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து, அவரது வாழ்நாள் சேவைக்கு புகழாரம் சூட்டி உள்ளனர். 15–ந் தேதி இறுதிச்சடங்கு நெல்சன் மண்டேலாவின் உடல் ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு உடல் பதப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள யூனியன் கட்டிடத்தில் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் அணி, அணியாக சென்று தங்கள் உள்ளம் கவர்ந்த தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மண்டேலாவின் இறுதிச்சடங்கு 15–ந் தேதி, அவரது சொந்த கிராமமான குலுவில் நடத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இதில், உலகமெங்கும் உள்ள தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்தியாவின் சார்பிலும் உயர்மட்ட குழுவினர் பங்கேற்கிறார்கள். மண்டேலாவின் ஆன்மா அமைதி பெறுவதற்காக, நாட்டு மக்கள் அனைவரும் 8–ந் தேதி பிரார்த்தனையில் ஈடுபடுமாறு தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா கேட்டுக்கொண்டுள்ளார். 10 நாள் துக்கம் மறைந்த தலைவர் மண்டேலாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டேலாவின் இறுதிச்சடங்கு நடந்து முடிகிற வரை தென் ஆப்பிரிக்காவில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்; 10 நாள் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டேலாவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக அந்த நாட்டு அரசு, சிறப்பு இணையதளம் ஒன்றினை உருவாக்கி உள்ளது. சினிமா படம் அவரது வாழ்க்கையை பிரதிபலிக்கும் 'மண்டேலா, விடுதலைக்கு நீண்ட நடை' என்ற சினிமா படம் கடந்த வாரம்தான் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தை இந்திய வம்சாவளி தென் ஆப்பிரிக்க இயக்குனர் ஆனந்த் சிங் 20 ஆண்டுகளாக தயாரித்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நிறவெறிக்கு எதிராக தனது வாழ்வில் 27 ஆண்டுகளை தனிமைச்சிறையில் கழித்து, இறுதியில் வெற்றியும் கண்ட மண்டேலாவின் மறைவு, நிரப்ப இயலாத வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர். News Category:Hot Topic Icon : News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |