Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

Posted: 30 Dec 2013 02:59 PM PST

திருக்கனூர்,

புதுவை மாநிலம் லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

அரவை பணி

புதுவை மாநிலம் திருக்கனூரை அடுத்த லிங்காரெட்டிப்பாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் நடப்பு ஆண்டுக்கான (2013-2014) கரும்பு அரவைப் பணி தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு துணை சபாநாயகர் டி.பி.ஆர்.செல்வம், ஆலை சேர்மன் சூரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஞானசேகரன், அரியபுத்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலையின் மேலாண் இயக்குனர் ராஜசேகர் வரவேற்றார்.

முதல்-அமைச்சர்

நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி, பூஜைகள் செய்து கரும்பு அரவை பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆலையின் தலைமை கரும்பு அதிகாரி தெய்வசிகாமணி, தலைமை பொறியாளர் பாரதிதாசன் மற்றும் ஆலை அதிகாரிகள், தொழிலாளர்கள், கரும்பு விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கோரிக்கை

சர்க்கரை ஆலை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமியை அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வக்கீல் செந்தில்குமார், தட்சிணாமூர்த்தி, திருமால் உள்ளிட்ட கரும்பு விவசாயிகள் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் நடப்பு ஆண்டு (2013-2014) சர்க்கரை ஆலைக்கு அனுப்பும் கரும்புக்கு டன்னுக்கு ரூ.3 ஆயிரத்து 500 விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், கரும்பு எடைபோடும் பிரிவில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க, அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், ஆலைக்கு அனுப்பும் கரும்புக்கு உண்டான தொகையை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருந்தன

image: 

தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்த உடன்குடி என்ஜினீயர் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்

Posted: 30 Dec 2013 02:29 PM PST

உடன்குடி,

கோவையில் தண்ணீர் தொட்டியில் உடன்குடி என்ஜினீயர் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.

மெக்கானிக்கல் என்ஜினீயர்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சாதாரக்கோன்விளையைச் சேர்ந்தவர் பெருமாள். கூலி தொழிலாளி. அவருடைய மகன் சுரேஷ் (வயது 24). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயர். கோவை குன்னத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.

கடந்த 15-ந் தேதி காலையில் கோவையில் அவர் வசித்து வந்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து கிடந்தார். இதுகுறித்து கோவை அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சுரேஷின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, உடன்குடியில் அடக்கம் செய்யப்பட்டது.

சாவில் மர்மம்

இதற்கிடையே என்ஜினீயர் சுரேஷ் சாவில் மர்மம் உள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவருடைய பெற்றோர் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

கோவையில் வேலை செய்து வந்த எங்களுடைய மகன் சுரேஷ் கடந்த 15-ந் தேதி தண்ணீர் தொட்டியில் இறந்து கிடப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நாங்கள் அவனது உடலை வாங்கி வந்து அடக்கம் செய்தோம். ஆனால் கடந்த 14-ந் தேதி கோவையில் இருந்து ஒருவர் பேசினார். அப்போது சுரேஷ், சுற்றுலா சென்றிருப்பதாக கூறினார். சிறிதுநேரத்தில் அதே செல்போன் எண்ணில் இருந்து வேறு ஒரு நபர் பேசினார். அவர், சுரேசை காணவில்லை என்று கூறினார்.

மறுநாள் காலையில் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து சுரேஷ் இறந்து விட்டதாக எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். நாங்கள் கோவைக்கு சென்று பார்த்தபோது, எங்கள் மகனின் தலை, காது, மூக்கு ஆகிய இடங்களில் பலத்த காயம் இருந்தது.

நீதி விசாரணை

எங்களது மகன் சுரேஷின் சாவில் மர்மம் உள்ளது. அவனது உடலை அவசரம் அவசரமாக அடக்கம் செய்வதிலேயே போலீசார் குறியாக இருந்தனர். சுரேஷ் இறந்து கிடந்த புகைப்படம், பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவற்றை போலீசார் தர மறுக்கின்றனர்.

அவனை மர்மநபர்கள் அடித்து கொலை செய்து, தண்ணீர் தொட்டியில் வீசி சென்றுள்ளதாக தெரிகிறது. எனவே என்னுடைய மகனின் சாவில் உள்ள மர்மத்தை கண்டறிய நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ரஷியாவில் மீண்டும் மனித குண்டு வெடித்து 14 பேர் பலி; பாதுகாப்பை அதிகரிக்க புதின் உத்தரவு

Posted: 30 Dec 2013 02:05 PM PST

மாஸ்கோ

ரஷியாவின் தெற்கு பகுதியில் இருக்கும் சோஷி நகரில் பிப்ரவரி 7–ந்தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது.  இந்நிலையில் சோஷி நகருக்கு அருகே உள்ள வோல்கோராட் நகரில் நேற்று முன்தினம் ரெயில் நிலையத்தில் பெண் தற்கொலைப்படை தீவிரவாதி குண்டை வெடிக்க செய்தார். இதில் 17 பேர் பலியானார்கள். 50–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதில் பலத்த காயம் அடைந்த 37 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.

இந்த தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள் அதே நகரில் நேற்று மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. டிரைலர் பஸ்சில் ஆண் மனித குண்டு தீவிரவாதி ஒருவன் பயணிகளுடன் ஏறி திடீரென்று குண்டை வெடிக்கச் செய்தான். இந்த குண்டு வெடிப்பில் 14 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 28 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு குண்டு வெடிப்புக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

ஒரே ஊரில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்க ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

category:

News Group Category:

சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை

Posted: 30 Dec 2013 11:59 AM PST

சென்னை

சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள்

2013–ம் ஆண்டு இன்றோடு (செவ்வாய்க்கிழமை) விடைபெறுகிறது. 2014 புத்தாண்டை வரவேற்கும் வகையில், சென்னையில் இன்று ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்போது சென்னை நகர வீதிகளில் இளைஞர்களின் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும். புத்தாண்டு கொண்டாட்டங்கள் எல்லைமீறி போகாமல் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் நட்சத்திர ஓட்டல்கள், கிளப்புகள், உணவு விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளுக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களை எவ்வாறு கொண்டாடவேண்டும் என்பது தொடர்பாக போலீசார் விதிமுறைகளை வகுத்துகொடுத்துள்ளனர். ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளனர்.

18 ஆயிரம் போலீசார் குவிப்பு

இன்று நள்ளிரவு சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். 5 கூடுதல் கமிஷனர்கள், 7 இணை கமிஷனர்கள் மற்றும் 21 துணை கமிஷனர்கள் தலைமையில் சென்னை நகர் வீதிகள் முழுவதும் போலீசார் குவிக்கப்படுகிறார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இரவு முழுவதும் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கும். வாகன சோதனைகளும் தீவிரமாக நடத்தப்படும்.

பொதுமக்களுக்கு கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

போதையில் வாகனம் ஓட்டினால்...

* குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

* இரு சக்கர வாகனங்களில், அதிவேகமாக செல்வதற்கும், மூன்று பேர் ஓட்டி செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

* மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் எல்லை மீறும் செயல்களில் ஈடுபடக்கூடாது.

* புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் கடல் நீர் அருகே செல்லக்கூடாது.

* இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபடுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பெண்களை கேலி செய்யக்கூடாது

* புத்தாண்டு வாழ்த்து கூறுவதன் பேரில், பெண்களை கேலி செய்தல், கையைப் பிடித்து இழுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

* பொது மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பட்டாசுகள் வெடித்தல் கூடாது.

* இழிவான முறையில் கேலி மற்றும் கிண்டலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* பிறர்மீது வர்ணப்பொடிகள், வர்ணம் கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை பொது மக்கள் தவிர்த்தல் வேண்டும்.

* இருசக்கர வாகனம் மற்றும் கார்களை அதிவேகமாக ஓட்டிச்செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* பொதுமக்கள் கடலில் விளையாடுதல் மற்றும் படகுகளில் ஏறி கடலுக்குள் செல்ல முற்படுவதை தவிர்த்தல் வேண்டும்.

வாகன சோதனை

புத்தாண்டை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட, காவல் துறை வெளியிட்டுள்ள மேற்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றி, காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை காவல்துறை புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகர் முழுவதும் மேற்கொண்டுள்ளது. உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், காவலர்கள் உள்ளடக்கிய வாகன ரோந்து, வாகனச் சோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மெரினா, எலியட்ஸ் கடற்கரை மற்றும் அண்ணாசாலை பகுதிகள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களில் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்துள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனங்களில் வீலிங் போன்ற ரேஸ்களில் ஈடுபடுவதை தவிர்க்க சென்னையில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட உள்ளது. சென்னை நகர போலீசார், பொதுமக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

News Group Category:

நன்மங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

Posted: 30 Dec 2013 11:55 AM PST

சென்னை

சென்னை நன்மங்கலத்தில் உள்ள வீரமங்கள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வருகிற 1–ந்தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி 19–ந்தேதி முதல் லட்சார்ச்சனை தொடங்கி நடந்து வருகிறது.

இதன்தொடர்ச்சியாக 30–ந்தேதி முதல் 1–ந்தேதி வரை தினமும் சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் ஆரத்தி நடைபெறுகிறது. அனுமன் ஜெயந்தி அன்று லட்சார்ச்சனை நிறைவு விழாவும், வடைமாலை, வாழைப்பழ அர்ச்சனை மங்கள ஆரத்தியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

 

புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்: 106 பயனாளிகளுக்கு ரூ.6 கோடி கடன் உதவி ஜெயலலிதா வழங்கினார்

Posted: 30 Dec 2013 11:46 AM PST

சென்னை

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் மற்றும் தாட்கோ திட்டங்கள் மூலம் 106 பயனாளிகளுக்கு 6 கோடி ரூபாய்க்கான கடன் உதவி ஒப்பளிப்பு ஆணைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்கள்.

கடந்த ஆண்டு தொடக்கம்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கடந்த ஆண்டு துவக்கியது. இந்த திட்டம் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை இலக்காகக் கொண்டு படித்த இளைஞர்களுக்கு பெருந்தொழில் வர்த்தகர்களுடன் பரிச்சயம் ஏற்படுத்தவும், தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி பெறவும், வணிகத் திட்டங்களை வகுக்கவும், நிதி நிறுவனங்களோடு புதிய தொழில் தொடங்க ஆயத்தம் செய்யவும் உதவுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் ஆயிரம் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதுடன், 25 லட்சம் ரூபாய்க்கு மிகாத 25 சதவீத முதலீட்டு மானியமும், மூன்று சதவீத வட்டிக்குறைப்புடன் கூடிய கடனும் வழங்கப்படுகிறது. பயனாளிகளில் 50 சதவீதம் பெண்களாக இருப்பார்கள்.

106 பயனாளிகள்

மேலும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, ஆதி திராவிடர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தாட்கோ உதவித்தொகையுடன் கூடிய வங்கிக்கடன் பெறுவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, இதுவரை இல்லாத அளவிற்கு திட்டச் செலவில் உயரளவாக 30 சதவீதம் அல்லது 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இவற்றில் எது குறைவோ அந்த தொகையை ஆதிதிராவிடர்களின் தொழில் முன்னேற்றத்திற்காக வழங்கி வருகிறது.

தமிழக அரசின் மானியத்துடன் செயல்படுத்தப்படும் இந்த புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் மற்றும் தாட்கோ திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தினை பாங்க் ஆப் இந்தியா வங்கி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 106 பயனாளிகளுக்கு ரூ.6 கோடி கடன் உதவி அனுமதித்துள்ளது.

ஜெயலலிதா வழங்கினார்

இந்த 106 பயனாளிகளுக்கு ரூ.6 கோடி கடன் உதவி வழங்கி இத்திட்டத்தினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக இன்று கோடநாடு முகாம் அலுவலகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 7 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார். அவரிடம் இருந்து கடனுதவிக்கான ஒப்பளிப்பு ஆணைகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள், தாங்கள் தொழில் தொடங்கி வாழ்வில் வளம் காண உதவிய முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில், ஊரகத்தொழில் துறை அமைச்சர் ப.மோகன், தொழில் வணிகத்துறை ஆணையர் ஸ்வரண் சிங், தேசிய வங்கிகள் குழுமத்தின் (தெற்கு) பொது மேலாளர் சரண்சிங், பாங்க் ஆப் இந்தியா கோயம்புத்தூர் மண்டல துணை பொது மேலாளர் கே.ராஜராமன், வங்கியின் தொடர்பு அலுவலர் ஜெ.ஜான் பிரிட்டோ மற்றும் வங்கியின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

category:

பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்தார்

Posted: 30 Dec 2013 11:35 AM PST

கல்பாக்கம்

காஞ்சீபுரம் மாவட்டம் பவுஞ்சூர் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.84.5 லட்சத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் மற்றும் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஆரம்ப சுகாதார நிலையம்

காஞ்சீபுரம் மாவட்டம் லத்தூர் ஒன்றியம் பவுஞ்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பவுஞ்சூர் மற்றும் சுற்றுப்புறங்களை சேர்ந்த 30 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 மருத்துவர்கள், 3 செவிலியர் உள்பட 7 பணியாளர்களுடன் செயல்பட்டு வந்த இந்த சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை வசதி இல்லாததால் கர்ப்பிணிகள், நோயாளிகள் அவதிபட்டு வந்தனர்.

செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.ராஜூ, இந்த மருத்துவமனையை கூடுதல் பணியாளர்கள் மற்றும் நவீன கருவிகளுடன் மேம்படுத்தி தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதையேற்று ரூ.84.5 லட்சம் மதிப்பீட்டில் 498.5 சதுரஅடி பரப்பளவில் 30 படுக்கைகள், ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

முதல்–அமைச்சர் திறந்து வைத்தார்

தரம் உயர்த்தப்பட்ட பவுஞ்சூர் கிராம ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை நேற்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி மருத்துவமனை வளாகம் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலத்துடன் காணப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு செய்யூர் வி.எஸ்.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். லத்தூர் ஒன்றியக்குழு தலைவர் ஜெயசங்கரன், துணை தலைவர் ரஞ்சன், சைதாப்பேட்டை சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவர் கங்காதரன் வரவேற்றார்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா, காணொலி காட்சி மூலம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த நிகழ்ச்சியை அங்குள்ள தொலைக்காட்சியில் பார்வையிட்ட பொதுமக்கள், மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ராஜூ எம்.எல்.ஏ. அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

24 மணி நேரமும்...

இது குறித்து துணை இயக்குனர் ராஜசேகர் கூறும்போது, ''மேம்படுத்தப்பட்ட இந்த மருத்துவமனையில் தற்போது கூடுதலாக 3 மருத்துவர்கள், 2 செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதால் 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க இயலும். நவீன கருவிகள் விரைவில் பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் பயன்பெறுவர்'' என்றார்.

நிகழ்ச்சியில் டாக்டர்கள் கலைவாணி சாந்தகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் கொடூர் எஸ்.கோதண்டராமன், ஊராட்சி மன்ற தலைவர் ஏசுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு சிகிச்சை பிரிவு

இதேபோல் திருவள்ளூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு மற்றும் திருவள்ளூரில் இருந்து 14 புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கத்தை நேற்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலிகாட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவை அமைச்சர் பி.வி.ரமணா, மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பெங்களூர், புதுச்சேரி, புத்தூர் மற்றும் 14 புதிய வழித்தடத்தில் பஸ்களை தொடங்கி வைத்து அங்கிருந்த பஸ் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

இதில் மாவட்டகுழு உறுப்பினர் பா.ரவிச்சந்திரன், திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் கமாண்டோ அ.பாஸ்கரன், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

category:

பிரபல கார்பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கர் படுகாயம் கோமா நிலையில் சிகிச்சை

Posted: 30 Dec 2013 11:34 AM PST

கிரனோபில்,

பிரபல பார்முலா1 கார்பந்தய வீரர் ஜெர்மனியை சேர்ந்த மைக்கேல், பனிசறுக்கு விளையாட்டின் போது கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

கார்பந்தய சூரன் காயம்

கார்பந்தயங்களில் மிகவும் புகழ்பெற்ற பார்முலா1 வகை பார்பந்தயத்தில் முடிசூடா மன்னனாக விளங்கியவர், ஜெர்மனியின் மைக்கேல் சூமாக்கர். 7 முறை இப்பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ள சூமாக்கர் 2012–ம் ஆண்டு சீசனுடன் ஓய்வு பெற்றார்.

44 வயதான சூமாக்கருக்கு பனிசறுக்கு விளையாட்டில் அலாதி பிரியம் உண்டு. நேரம் கிடைக்கும் போதெல்லாமல் பனிசறுக்கு விளையாட்டில் ஈடுபடுவார்.

இந்த நிலையில் விடுமுறையை கழிப்பதற்காக அவர் தனது குடும்பத்தினருடன் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றார். அங்குள்ள ஆல்ப்ஸ் மலையில் மெரிபெல் பனிசறுக்கு பகுதியில் நேற்று முன்தினம் தனது மகனுடன் உற்சாகமாக பனிசறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி விழுந்தார். பாறையில் அவரது தலை பலமாக மோதியது. ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, நினைவிழந்து கோமா நிலைக்கு சென்றார்.

தீவிர சிகிச்சை

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட அவர் அருகில் உள்ள கிரனோபல் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை மிகவும் சிக்கலாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மூளையில் ரத்த கசிவுடன், பலத்த பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு உடனடியாக தலையில் இரண்டு முறை ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனாலும் இன்னும் அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை. அவரது மனைவியும், இரண்டு மகன்களும் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள்.

சூமாக்கர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தகவல் விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

category:

2–வது டெஸ்டில் இந்திய அணி தோல்வி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

Posted: 30 Dec 2013 11:30 AM PST

டர்பன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

டர்பன் டெஸ்ட்

தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதலில் ஒரு நாள் தொடரை 0–2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி மயிரிழையில் தோல்வியில் இருந்து தப்பி பிழைத்தது.

இந்த நிலையில் இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் கடந்த 26–ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் இந்தியா 334 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 500 ரன்களும் எடுத்தன. 166 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2–வது இன்னிங்சில் 4–வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 68 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது. புஜாரா 32 ரன்களுடனும், விராட் கோலி 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஏமாற்றிய ஜோடி

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. அணியை தூக்கி நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலியும், புஜாராவும் முந்தைய நாள் ரன்னை தாண்டவே இல்லை. ஸ்டெயின் வீசிய முதல் பந்திலேயே கோலி விக்கெட் கீப்பர் டிவில்லியர்சிடம் கேட்ச் ஆனார். ஆனால் பந்து அவரது பேட்டில் உரசியது மாதிரியே தெரியவில்லை. அதிருப்தியுடன் கோலி வெளியேறினார். ஸ்டெயினின் அடுத்த ஓவரில் புஜாராவும் நடையை கட்டினார்.

இதன் பின்னர் ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழ, ரஹானே மட்டும் தென்ஆப்பிரிக்காவின் அச்சுறுத்தலான பந்து வீச்சை எதிர்த்து நின்று போராடினார். ஒரு கட்டத்தில் 154 ரன்னுக்குள் 7 விக்கெட் சரிந்த போது, ஜாகீர்கான் ரஹானேவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி என்ற அவமானகரமான நிலையை தவிர்த்தது. 41 பந்துகளை சமாளித்த ஜாகீர்கான் 3 ரன்னில், எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால் டி.வி. ரீப்ளேயில் பந்து ஸ்டம்பை விட்டு விலகி செல்வது நன்றாக தெரிந்தது. நடுவரின் மோசமான தீர்ப்பு இன்னொரு பின்னடைவாக அமைந்தது.

ரஹானே 96 ரன்

விக்கெட்டுகள் கைவசம் இல்லாததால் இறுதிகட்டத்தில் ரஹானே அதிரடியாக ஆடினார். 2 சிக்சர்களை பறக்க விட்டார். ஆனாலும் 4 ரன்னில் தனது முதல் சதத்தை தவற விட்ட ரஹானே 96 ரன்களில் (157 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி விக்கெட்டாக பிலாண்டரின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். இந்திய அணி 86 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது.

இதன் மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு 59 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித்தும் (27 ரன், 33 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), அல்விரோ பீட்டர்சனும் (31 ரன், 37 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

தென்ஆப்பிரிக்க அணி 11.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 1–0 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றியது. டெஸ்ட் வரலாற்றில் தென்ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி காண்பது இது 8–வது முறையாகும். அதே சமயம் இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசிப்பது இதுவே முதல் முறையாகும்.

சோகம் தொடருகிறது

தென்ஆப்பிரிக்க அணி கடந்த 5 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. அந்த பெருமையை தக்க வைத்துக் கொண்டது. அதே சமயம் தென்ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை ஒரு போதும் வென்றதில்லை என்ற சோகத்துடன், வெறுங்கையுடன் இந்திய அணி தாயகம் திரும்புகிறது. தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி 6 டெஸ்ட் தொடரில் விளையாடி அதில் 5–ல் தோற்று இருப்பது (2010–11–ம் ஆண்டு மட்டும் 1–1 என்று டிரா) குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் போர்டு முதல் இன்னிங்ஸ்

இந்தியா 334

தென்ஆப்பிரிக்கா 500

2–வது இன்னிங்ஸ்

தவான் (சி) பிளிஸ்சிஸ் (பி) ராபின் பீட்டர்சன் 19

விஜய் (சி) சுமித் (பி) பிலாண்டர் 6

புஜாரா (சி) ஸ்டெயின் 32

கோலி (சி) டிவில்லியர்ஸ் (பி) ஸ்டெயின் 11

ரோகித் ஷர்மா எல்.பி.டபிள்யூ (பி) பிலாண்டர் 25

ரஹானே (பி) பிலாண்டர் 96

டோனி(சி) அல்விரோ பீட்டர்சன் (பி) ராபின் பீட்டர்சன் 15

ஜடேஜா (சி) மோர்கல் (பி) ராபின் பீட்டர்சன் 8

ஜாகீர்கான் எல்.பி.டபிள்யூ (பி) ராபின் பீட்டர்சன் 3

இஷாந்த் ஷர்மா (சி) டிவில்லியர்ஸ் (பி) ஸ்டெயின் 1

முகமது ஷமி (நாட்–அவுட்) 1

எக்ஸ்டிரா 6

மொத்தம் (86 ஓவர்களில் ஆல்–அவுட்) 223

விக்கெட் வீழ்ச்சி: 1–8, 2–53, 3–68, 4–71, 5–104, 6–146, 7–154, 8–189, 9–206

பந்து வீச்சு விவரம்

ஸ்டெயின் 21–8–47–3

பிலாண்டர் 16–4–43–3

மோர்னே மோர்கல் 16–6–34–0

ராபின் பீட்டர்சன் 24–3–74–4

டுமினி 8–2–20–0

பிளிஸ்சிஸ் 1–0–1–0

தென்ஆப்பிரிக்கா

சுமித் (நாட்–அவுட்) 27

அல்விரோ பீட்டர்சன் (நாட்–அவுட்) 31

எக்ஸ்டிரா 1

மொத்தம் (11.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி) 59

பந்து வீச்சு விவரம்

முகமது ஷமி 2–1–4–0

இஷாந்த் ஷர்மா 5–1–29–0

ரவீந்திர ஜடேஜா –0–16–0

ரோகித் ஷர்மா 0.4–0–10–0

சுவாரஸ்யமான துளிகள்

*இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு இரண்டு தரவரிசை புள்ளி கூடுதலாக கிடைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) அணிகளின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்கா 133 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. தோல்வியால் 2 புள்ளியை இழந்த போதிலும் இந்தியாவின் தரவரிசையில் மாற்றம் இல்லை. 117 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் தொடருகிறது. இங்கிலாந்து (116 புள்ளி), பாகிஸ்தான் (102 புள்ளி), ஆஸ்திரேலியா (101 புள்ளி) அடுத்த இடங்களில் உள்ளன.

*இந்திய அணி இந்த ஆண்டில் சந்தித்த ஒரே தோல்வி இது தான். அதே சமயம் வெளிநாட்டு மண்ணில் கடைசியாக விளையாடிய 10 டெஸ்டுகளில் இந்தியா தழுவிய 9–வது தோல்வி இதுவாகும்.

*டர்பனில் 2008–ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து 4 டெஸ்டுகளில் தோற்று இருந்த தென்ஆப்பிரிக்கா அந்த மோசமான பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

*முதலாவது டெஸ்டில் கடைசி 3 ஓவர்களில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது, அதை எடுக்க முயற்சிக்காமல் டிராவுக்காக ஆடியதால் ஸ்டெயின், பிலாண்டர் மீது உள்ளூர் ரசிகர்கள் வெறுப்பு கணைகளை அள்ளி வீசினர். அதற்கு உடனடியாக விமோச்சனம் தேடிக் கொண்ட இவர்கள் இந்த டெஸ்டில் வெற்றிக்கு முதுகெலும்பாக திகழ்ந்தனர். ஸ்டெயின் மொத்தம் 9 விக்கெட்டுகளுடன், 44 ரன்களும் எடுத்தார். பிலாண்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

*இஷாந்த் ஷர்மாவின் விக்கெட்டை ஸ்டெயின் வீழ்த்திய போது அது அவரது 350–ஆவது விக்கெட்டாக அமைந்தது. தனது 69–வது டெஸ்டில் இந்த மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் வரிசையில் 2–வது இடத்தை பிடித்தார். இலங்கையின் முரளிதரன் 66–வது டெஸ்டில் இந்த இலக்கை கடந்தார். நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹேட்லி தனது 69–வது டெஸ்டில் 350 விக்கெட்டுகளை தொட்டார். அவருடன் 2–வது இடத்தை ஸ்டெயின் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வெற்றியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்த விடைபெற்றார், காலிஸ்

தனது கடைசி டெஸ்ட் போட்டியை ரொம்ப அற்புதமாக முடித்துள்ளார், தென்ஆப்பிரிக்க ஆல்–ரவுண்டர் காலிஸ். முதல் இன்னிங்சில் சதம் விளாசி அசத்தினார். மழை மற்றும் வெளிச்சமின்மையால் கிட்டத்தட்ட ஒரு நாள் ஆட்டம் பாதிக்கப்பட்ட போதிலும், தென்ஆப்பிரிக்க பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு அவருக்கு வெற்றியை சமர்ப்பித்துள்ளனர். ஆட்டம் முடிந்ததும் காலிசை, சக வீரர்கள் தோளில் சுமந்து மைதானத்தில் வலம் வந்தனர். 1995–ம் ஆண்டு இதே டர்பனில் டெஸ்டில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்த காலிஸ் 18 ஆண்டுகளுக்கு பிறகு அதே மைதானத்தில் தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடியுள்ளார்.

காலிஸ் இதுவரை 166 டெஸ்டுகளில் விளையாடி 45 சதம், 58 அரைசதங்களுடன் 13,289 ரன்களும் (சராசரி 55.37), 292 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 200 கேட்ச்சும் செய்திருக்கிறார். ஒரு நாள் போட்டியில் 2015–ம் ஆண்டு உலக கோப்பை வரை தொடர்ந்து விளையாட திடடமிட்டிருக்கிறார்.

image: 

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™