Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


அரசு மணல் குவாரியில், ஆயிரக்கணக்கான லாரிகள் அணிவகுப்பு நாள் கணக்கில் காத்து கிடக்கும் டிரைவர், கிளீனர்கள்

Posted: 01 Dec 2013 12:14 PM PST

வாலாஜா,

அரசு குவாரியில் மணல் விற்பனை தொடங்கியதால், ஆயிரக்கணக்கான லாரிகள் அணிவகுத்து நின்று, மணல் அள்ளிச் செல்கின்றன. எனினும் சென்னையில் இருந்து வரும் லாரி டிரைவர்–கிளீனர்கள் மணல் வாங்குவதற்காக நாள் கணக்கில் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டுமான பணி முடக்கம்

தமிழ்நாட்டில் காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 75–க்கும் மேற்பட்ட அரசு மணல் குவாரிகளில் மணல் அள்ளுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

திடீரென மணல் குவாரிகள் மூடப்பட்டதால் தமிழகம் முழுவதும் மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

விற்பனை தொடக்கம்

இந்த நிலையில் வேலூர் மாவட்டம், வாலாஜா தாலுகாவில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள காட்டேரி பாலாற்று படுகை அருகில் அரசு மணல் குவாரியில் மணல் விற்பனை கடந்த 25–ந் தேதி தொடங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1,500 லாரிகள் மணல் வாங்கி ஏற்றி செல்வதற்காக காட்டேரி நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளன. அதனால், அங்கு லாரிகள் அணிவகுத்து நின்று கொண்டிருக்கின்றன.

மேலும் உள்ளூர் லாரிகள் என்ற வகையில் வாலாஜா தாலுகாவில் உள்ள ஊர்களில் இருந்து சுமார் 100 லாரிகள் வரை குவிந்துள்ளன.

யாருக்கு முன்னுரிமை?

இந்த நிலையில் உள்ளூர் லாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மணல் வழங்கப்படுவதாகவும், சென்னையை சேர்ந்த லாரிகளுக்கு அந்த அளவிற்கு முன்னுரிமை, சலுகை அளிப்பதில்லை என்றும் லாரி டிரைவர், கிளீனர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இந்த இடத்தில் குடிப்பதற்குக்கூட தண்ணீர் வசதி இல்லை. உணவிற்கும் வசதி இல்லாததால் தாங்களே அடுப்பு மூட்டி சமையல் செய்து சாப்பிட்டு சிரமப்பட்டு வருகிறோம். மேலும் கையில் எடுத்து வந்த பணமும் செலவாகி விட்டது என அவர்கள் பெரிதும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

திருப்தியான முறையில்...

இதற்கிடையே குவாரி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், திங்கட்கிழமை முதல் இரு தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் மணல் வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

News Group Category:

குரூப்–2 தேர்வு 3 மாதத்துக்குள் முடிவு வெளியிடப்படும் ஏ.நவநீதகிருஷ்ணன் பேட்டி

Posted: 01 Dec 2013 12:12 PM PST

சென்னை

தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 98 ஆயிரத்து 437 பட்டதாரிகள் நேற்று நடைபெற்ற குரூப்–2 தேர்வை எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவுகள் மூன்று மாதத்துக்குள் வெளியிடப்பட உள்ளது.

2,269 மையங்களில்....

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்–2 தேர்வானது தமிழகம் முழுவதும் உள்ள 114 நகரங்களில், நேற்று நடைபெற்றது. சென்னையில் 263 மையங்கள் உள்பட 2 ஆயிரத்து 269 தேர்வு மையங்களில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 6 லட்சத்து 65 ஆயிரத்து 638 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் ஆயிரத்து 55 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. மொத்தம் 6 லட்சத்து 64 ஆயிரத்து 583 பட்டதாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 437 பேர் தேர்வு எழுதினர். 1 லட்சத்து 66 ஆயிரத்து 146 பட்டதாரிகள் தேர்வு எழுதவரவில்லை என்று கூறப்படுகிறது.

செல்போனுக்கு டோக்கன் முறை

தேர்வு மையங்களில் தேர்வு எழுத சென்றவர்களின் செல்போன்களை உள்ளே கொண்டு செல்லாமல் இருக்கும் வகையில், தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, செல்போன்களை வாங்கி கவரில் போட்டு வைத்துக் கொண்டு, அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

பின்னர் அவர்கள் தேர்வு முடிந்து வெளியில் வந்த பின்னர் டோக்கன் எண்களை அழைத்து உரிய நபரிடம் செல்போன்கள் வழங்கப்பட்டன. இதனால் செல்போன்களுடன் தேர்வு எழுத சென்றவர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் செல்போன்களை ஊழியர்களிடம் ஒப்படைத்து மீண்டும் பெற்றுச் சென்றனர்.

தேர்வுக்கான முன்னேற்பாடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன், செயலாளர் விஜயகுமார் ஆகியோர், திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.திருமலை நாயக்கர் தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப்–2 தேர்வினை பார்வையிட்டனர். அப்போது ஏ.நவநீதகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகம் முழுவதும் குரூப்–2 தேர்வுக்கு நல்ல முறையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அனைத்து மாவட்ட நிர்வாகங்களும், காவல்துறையும் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கி உள்ளனர்.

குரூப்–2 மூலம் ஆயிரத்து 64 பணியிடங்களுக்கான தேர்வுகள் 3 நிலைகளில் நடத்தப்படுகிறது. அதன்படி இன்று(நேற்று) முதல் நிலை தேர்வு நடைபெறுகிறது. இதில் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் தேர்வு பெறுபவர்கள் 2–வது நிலையான, முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதிலும் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

ஒளிவு மறைவின்றி நேர்மையாக...

அந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் 3–வது நிலையாக நடைபெறும் 40 மதிப்பெண்களுக்கான நேர்முகத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்படும். தேர்வுகள் ஒளிவு மறைவு இன்றி நேர்மையாக நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் 3 மாதங்களுக்குள் வெளியிடப்படும். தேர்வர்கள் விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, தமிழ் மொழி கல்வி, ஆதரவற்ற விதவை, சாதிச்சான்றிதழ்கள் போன்றவற்றை ஒழுங்காக சமர்ப்பிக்காமல் இருந்தால் குழப்பம் ஏற்படும்.

திருநங்கைக்கு அனுமதி

இது போன்ற குழப்பங்கள் இல்லாமல் இருந்தால், தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். முதல்நிலை தேர்வுக்கான விடைகள் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும். இந்த தேர்வில், மதுரையை சேர்ந்த சொப்னா என்ற திருநங்கை தற்காலிகமாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் பெண்கள் பிரிவில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், மருத்துவர் குழு ஆலோசனை மற்றும் பிற நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னர் அவரை எந்த பிரிவில் சேர்ப்பது என்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்நிலை தேர்வு எழுதிய பெரும்பாலான தேர்வர்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:–

கடந்த ஆண்டை விட எளிமை

இந்த ஆண்டு கேள்வித்தாள்கள் கடந்த ஆண்டை விட எளிமையாக இருந்தது. தமிழ் மொழித்தாள் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. பொது கல்விக்கான கேள்விகளும் எளிமையானதாகவும் மற்றும் அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளும் கேட்கப்பட்டிருந்தன. கணிதம் மற்றும் வேதியியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் சற்று யோசித்து பதில் அளிக்கும் வகையில் அமைந்திருந்தன. இதனால் நேரம் சற்று விரையமானது. திறனாய்வு கேள்விகளும் சற்று சிரமமாக இருந்தது.

இவ்வாறு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

image: 

News Group Category:

சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு ஒரு மணி நேரம் முன்னதாகவே நடை திறப்பு

Posted: 01 Dec 2013 12:07 PM PST

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து, கோவில் நடை மாலை 3 மணிக்கே திறக்கப்பட்டு சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மண்டல பூஜை

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 41 நாள் மண்டல கால பூஜைக்காக கடந்த 15–ந் தேதி நடை திறக்கப்பட்டு, பூஜை–வழிபாடுகள் நடந்து வருகிறது.

மண்டல பூஜை நிறைவு விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 26–ந் தேதி நடைபெறுகிறது. இதன் காரணமாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. சாமி தரிசனத்திற்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக போன்ற வெளிமாநில பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து பக்தர்களை போலீசார் பம்பையில் தடுத்து நிறுத்தி குழுவினராக பிரித்து மலையேற அனுமதிக்கின்றனர். கடந்த 2 தினங்களாக சபரிமலையில் பக்தர்கள் பல மணி நேரம் கியூ வரிசையில் காத்து நின்று சாமியை தரிசிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நிலக்கல், பம்பை மற்றும் சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

தரிசன நேரம் மாற்றி அமைப்பு

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நேற்று முன்தினம் சாமி தரிசனம் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. காலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மதியம் உச்ச பூஜைக்கு பின் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

அப்போது பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக மரக்கூட்டம் பகுதி வரை நீண்ட வரிசையில் காத்திருந்ததால், நடை மாலை 4 மணிக்கு பதில் 3 மணிக்கே திறக்கப்பட்டது. அதுபோல் இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

மேலும் பக்தர்களின் கூட்டத்திற்கு தகுந்தாற்போல் கோவில் நடை முன்னதாக திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஏற்பாடுகள்

பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு கார், வேன், பஸ்களில் வரும் பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு ஏராளமான பஸ் கள் இயக்கப்படுகின்றன.

பம்பையில் இருந்து குமுளி, பழனி, கோவைக்கு சிறப்பு பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

பிரசாதம் தயார்

சாமி தரிசனம் செய்து, மலையிறங்கும் பக்தர்கள் அப்பம், அரவணை தவறாது வாங்கிச் செல்வது வழக்கம். பக்தர்களுக்கு தட்டுப்பாடு இன்றி அப்பம், அரவணை போன்ற பிரசாதங்கள் கிடைப்பதற்காக கூடுதல் எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

கூட்டத்தில் நீண்ட வரிசையில் காத்து நின்று நெய் அபிஷேகம் செய்ய இயலாத பக்தர்கள் வசதிக்காக கோவில் கருவறையின் பின்புறம் நெய் ஊற்றுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கு நெய்யை ஊற்றிச் சென்றால் அந்த நெய், சாமிக்கு அபிஷேகம் செய்வதற்கு அனுப்பப்பட்டுவிடும்.
 

News Group Category:

தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted: 01 Dec 2013 11:58 AM PST

சேலம்

அ.தி.மு.க.வுக்கு தக்க பாடம் புகட்ட தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்று தேர்தல் பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசினார்.

சூறாவளி பிரசாரம்

ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வெ.மாறனை ஆதரித்து மாநில தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 நாட்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 3–வது நாளான நேற்று ஏற்காடு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் வேட்பாளர் மாறனுடன் திறந்த வேனில் சென்றபடி மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவர்கள் நாங்கள்தான்.

ஏற்காடு தொகுதியில் பிரசாரம் செய்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்காடு தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என்று கூறியுள்ளார். ஏற்காடு அ.தி.மு.க.விற்கு மட்டும் தான் கோட்டையா? ஏன் இதே ஏற்காடு தொகுதியில் 10 முறை நடத்தப்பட்ட தேர்தல்களில் 6 முறை அ.தி.மு.க.வும், 4 முறை தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து 5–வது முறையாக ஏற்காடு தொகுதியில் தி.மு.க.தான் வெற்றிப்பெற போகிறது.

தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்காடு தொகுதிக்குத்தான் வந்தாரே தவிர, மலைப்பகுதியான ஏற்காடுக்கு வரவில்லை. இந்த தொகுதிக்கு பெயரே ஏற்காடுதான். அப்படிப்பட்ட ஏற்காட்டில் உள்ள மலைவாழ் மக்களை அவர் சந்திக்கவில்லை. எனவே, உங்களை புறக்கணித்த அவரை, நீங்கள் இத்தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்.

ஏற்காட்டில் தற்போது மின்வெட்டு இல்லை. வருகிற 4–ந் தேதி தேர்தல் முடிந்ததும் பாருங்கள். ஏற்காடு இருளில் மூழ்க போகிறது. அதற்காகத்தான் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களாகிய உங்களுக்கு காமாட்சி விளக்கு பரிசாக வழங்கி வருவதாக கேள்விப்பட்டேன்.

பாகுபாடு

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் நில அபகரிப்பு முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டதாக பிரசாரம் செய்து சென்றுள்ளார். அவரது ஆட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் நில அபகரிப்பு, ஆள்கடத்தல் வழக்கில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மீது புகார் கொடுத்த உடனே கைது நடவடிக்கை பாய்கிறது. ஏன், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த தி.மு.க. ஆட்சியில் 1–ந் தேதி முதல் 30–ந் தேதி வரை ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட நாளில் வாங்க செல்லவில்லை என்றால் அப்புறம் கிடையாது. கடந்த ஆட்சியில் 5 லிட்டர் மண்எண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 2 லிட்டர்தான் வழங்கப்படுகிறது.

பாடம் புகட்ட வேண்டும்

எனவே, ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் மாறனுக்கு நீங்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்திட வேண்டும். அ.தி.மு.க.வுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

News Group Category:

தேஜ்பாலுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு தலையிடாது ஷிண்டே பேட்டி

Posted: 01 Dec 2013 11:55 AM PST

மும்பை,

பெண் நிருபர் கற்பழிப்பில் தெகல்கா ஆசிரியருக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு தலையிடாது என்று மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

தெகல்கா ஆசிரியர்

மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே  மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தெகல்கா பத்திரிகை பெண் நிருபர் கற்பழிப்பில், அதன் ஆசிரியர் தருண் தேஜ்பால் கைதான விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், ''குற்றம் செய்தவர்களுக்கு மத்திய அரசு ஒருபோதும் அடைக்கலம் அளிக்காது. தெகல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு எதிரான வழக்கு குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்த விவகாரம். இதனால் அந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது'' என்று பதிலளித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:–

நரேந்திர மோடி விவகாரம்

நரேந்திர மோடி இளம்பெண்ணை உளவு பார்த்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் முடிவு எடுக்கப்படும். இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க மத்திய மற்றும் மாநில உள்துறை அமைச்சகங்களுக்கு போதிய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

புனேயில் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் சில முக்கியமான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. இது தொடர்பாக நான் மராட்டிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்கள் இந்த வழக்கை திறம்பட கையாண்டு வருகிறார்கள்.

பால்தாக்கரேக்கு நினைவகம்

பால்தாக்கரேவை சிவசேனா கட்சி தலைவராக மட்டும் நான் பார்க்கவில்லை. அதையும் தாண்டி புரட்சிகரமாக கட்சியை வழிநடத்தி சென்ற தலைவராகவே கருதுகிறேன். அவரது தந்தை பிரபோதங்கர் தாக்கரே, தலித் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து குரல் எழுப்பியவர். அதை மராட்டியம் என்றும் மறவாது. இந்த நிலையில் பால்தாக்கரேக்கு நினைவகம் அமைப்பதற்காக அனைத்து கட்சிகளை சேர்ந்த ஒரு குழுவை அமைத்து உள்ளோம்.

இவ்வாறு மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.

category:

News Group Category:

இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சி அளிப்பதா? மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம் மறுபரிசீலனை செய்ய கோரி பிரதமருக்கு கடிதம்

Posted: 01 Dec 2013 11:05 AM PST

சென்னை,

முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு  ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:–

இனப்படுகொலை

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் சிறுபான்மை தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டனர். தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு சூழ்நிலைகள் குறித்தும், தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் உணர்வுகள் குறித்தும் கடந்த 2 ஆண்டுகளாக உங்களுக்கு நான் பல முறை கடிதங்கள் எழுதி வந்திருக்கிறேன்.

சிறுபான்மை தமிழர்களுக்கு எதிராக இலங்கை மேற்கொள்ளும் பாரபட்சமான போக்கை கண்டித்து, தமிழக சட்டசபையில் ஏற்கனவே 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதவிர, இன்னொரு கடுமையான பிரச்சினை என்னவென்றால், தற்போதைய இலங்கை அரசின் நியாயமற்ற போக்கை வெளிக்காட்டும் வகையில், இலங்கை கடற்படையினர் அப்பாவி தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்கியும், அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கைப்பற்றியும் வருகின்றார்கள்.

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்கள் காலவரையின்றி இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக அவர்களது வாழ்வாதாரம் இழந்ததுடன், குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறார்கள்.

எனவே தமிழ்நாட்டில் எல்லா தரப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆழமான உணர்வு மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கு ஏற்ப இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது நடந்த இனப்படுகொலை போர்க்குற்றங்கள் மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு தற்போதைய இலங்கை அரசை பொறுப்பாக்க வேண்டியது அவசியமாகும்.

தமிழக சட்டசபையில் தீர்மானம்

மேலும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தினரும் நடுக்கடலில் மீனவர்கள் ஈவு இரக்கமின்றி கடத்தப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்திவருகிறார்கள். இதன் பின்னணியில், இலங்கையை நட்பு நாடு என்று அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 27–3–2013 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக மக்களின் உணர்வை வெளிக்காட்டும் வகையில் கடந்த 16–7–2012, 25–8–2012, 28–8–2012 மற்றும் 8–6–2013 ஆகிய நாட்களில் நான் எழுதிய கடிதங்களை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கடும் ஆட்சேபம்

தமிழ்நாட்டின் கடுமையான ஆட்சேபத்தை நான் தெரிவித்ததுடன், இனிமேல் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதோ அந்த ராணுவத்துடன் ஒத்துழைப்பதோ கூடாது என்பதை நமது ராணுவ அமைச்சகத்திடம் இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தியுள்ளேன்.

இலங்கை அரசு சிறுபான்மை தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களையும், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான கொடூர தாக்குதல்களையும் நிறுத்திக்கொள்ளும் வரையிலும், இந்த விஷயத்தில் இலங்கை அரசின் நம்பகமான நடவடிக்கைகளில் திருப்தி ஏற்படும் வரையிலும் மேற்கண்ட உத்தரவை ராணுவ அமைச்சகத்துக்கு பிறப்பிக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்தியிருந்தேன்.

வருத்தம் அளிக்கிறது

மேலும், இலங்கைக்கு கடற்படை கப்பல்கள் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இலங்கை ராணுவத்திற்கு எந்த விதத்திலும் உதவக்கூடாது என்று வற்புறுத்தியும் 11–9–2013 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.

இப்பொழுது இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இந்திய கடற்படையில் பயிற்சி அளிக்கப்போவதாகவும், அந்த நாட்டின் கடற்படை அதிகாரிகளுக்கு 4 ஆண்டு தொழில்நுட்ப படிப்புக்கு நமது கடற்படை அதிகாரிகள் பயிற்சி அளிக்கப்போவதாகவும் ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி எனக்கு வருத்தம் அளிக்கிறது.

கடும் அதிர்ச்சி

கடற்படையின் தலைமை தளபதியும், இலங்கை அதிபர் ராஜபக்சேவும் சந்தித்துப்பேசிய பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது தமிழக மக்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் எண்ணம் மற்றும் உணர்வுகளை முற்றிலுமாக புறக்கணித்து விட்டு, இலங்கை ராணுவத்துடன் ஒத்துழைக்கும் கொள்கையை இந்திய அரசு கையாண்டு வருகிறது. இலங்கை அரசுக்கு இந்திய அரசு அளித்துள்ள இந்த வாக்குறுதி, இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிரானது மட்டுமின்றி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி காட்டு மிராண்டித்தனமாக தாக்கப்படும் இந்தியாவின் ஏழை மீனவர்களுக்கும் எதிரானது ஆகும்.

பயிற்சி அளிக்கக்கூடாது

எனவே, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டு, இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பு மேற்கொள்ளும் உணர்வுப்பூர்வமற்ற கொள்கைக்கு நான் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த கொள்கையை அவசரமாக மறு பரிசீலனை செய்து இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இந்திய கடற்படையில் பயிற்சி அளிக்கும் திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறி உள்ளார்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

‘தென்ஆப்பிரிக்க தொடர் மிகவும் சவாலானது’ இந்திய கேப்டன் டோனி பேட்டி

Posted: 01 Dec 2013 10:21 AM PST

மும்பை,

தெண்டுல்கர் இல்லாத நிலையில் தென்ஆப்பிரிக்க தொடர் மிகவும் சவாலானது என்று இந்திய கேப்டன் டோனி கூறினார்.

டோனி பேட்டி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக முடித்த டோனி தலைமையிலான இந்திய அணி அடுத்து தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது. இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 5–ந்தேதி ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது.

இதையொட்டி இந்திய அணி நேற்று நள்ளிரவில் மும்பையில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டது. முன்னதாக இந்திய கேப்டன் டோனி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சச்சின் தெண்டுல்கரின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியின் முதல் பயணம் இதுவாகும். ஆனால் குறிப்பிட்ட வீரர் ஓய்வு பெறும் போது எப்போதுமே அது புதிய தொடக்கமாகத் தான் இருக்கும்.

ஒரு நாள் போட்டி அனுபவம்

நமது அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் டெஸ்டை விட ஒரு நாள் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த தொடர் எல்லா வீரர்களுக்கும் புதிய சவாலாகும். இங்கு பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். அது மட்டுமின்றி வெளிநாடு தொடர்கள் எப்போதுமே சவால் மிக்கவை. குறிப்பாக பந்து வீச்சாளர்கள் சரியான திசையில், எகிறும் (பவுன்ஸ்) ஆடுகளங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு நாள் போட்டியுடன் இந்த சுற்றுப்பயணத்தை தொடங்குவது நல்ல விஷயமாகும். பேட்ஸ்மேன்கள் இதில் சிறப்பாக விளையாடி அதன் அனுபவத்தின் துணையுடன் அடுத்து வரும் டெஸ்ட் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.

தெண்டுல்கரின் இடம் யாருக்கு?

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளிவிஜயும், ஷிகர் தவானும் அருமையாக விளையாடி வருகிறார்கள். எனவே இப்போதைக்கு எங்களது 3–வது தொடக்க ஆட்டக்காரர் பரிசீலனையில் தான் கவுதம் கம்பீர் இருக்கிறார். ஆனால் அவர் அணியில் இடம் பெறவில்லை என்பதை அறிவேன்.

டெஸ்ட் அணியில் தெண்டுல்கர் ஆடிய 4–வது வரிசையில் யார் இறங்குவார் என்று கேட்கிறீர்கள். அது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் அவரது இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. ஒரு வேளை பேட்டிங் வரிசையில் 4–வது இடத்தை நீக்கிவிட சாத்தியக்கூறு இருந்தால், 1, 2, 3, 5, 6 என்று 12–வது வரை பேட்டிங் வரிசையை நீட்டிக்க முயற்சி செய்வோம்.

கடந்த சில ஆட்டங்களில் எங்களது பந்து வீச்சில் நிறைய முன்னேற்றம் அடைந்து உள்ளோம். ஆனால் மேலும் எப்படி முன்னேற்றம் காண்பது என்பதை பார்ப்போம். கடைசி 10 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பதை கட்டுப்படுத்த முயற்சிப்போம். இது புதிய சீதோஷ்ண நிலை. இங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தவை. யார்க்கராக வீசுவதுடன், பவுன்ஸ் தன்மையையும் பந்து வீச்சாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே பந்து வீச்சு எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் கவனிக்க வேண்டும்.

சுவாரசியமான தொடர்

உலக தரவரிசையில் இரண்டு அணிகளும் நல்ல நிலையில் இருக்கிறது. ஒரு நாள் போட்டி தரவரிசையில் நாங்கள் 'நம்பர் ஒன்' இடத்தில் உள்ளோம். டெஸ்ட் தரவரிசையில் தென்ஆப்பிரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. எனவே இந்த தொடர் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கப் போகிறது. ஆனால் இங்குள்ள சூழலுக்கு ஏற்ப வெகுவிரைவில் மாற்றிக் கொள்வதே முக்கியமான அம்சமாக இருக்கும்.

இவ்வாறு டோனி கூறினார்.

category:

ஆறு மாதங்களுக்குப் பின் நல்ல முன்னேற்றம் முதலீட்டாளர்களிடம் ரூ.66,325 கோடி திரட்டிய பரஸ்பர நிதி நிறுவனங்கள்

Posted: 01 Dec 2013 09:04 AM PST

புதுடெல்லி,

பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.66,325 கோடி திரட்டியுள்ளன. முந்தைய ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு இத்துறை ஈர்த்த முதலீட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.1.06 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு பெறப்பட்டிருந்தது. பரஸ்பர நிதி துறையில் செப்டம்பர் மாதத்தில் நிகர அடிப்படையில் ரூ.33,910 கோடி விலக்கப்பட்ட பிறகு மீண்டும் முதலீடு அதிகரித்துள்ளது.

நிர்வகிக்கப்படும் சொத்து

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களின் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதியை திரட்டுகின்றன. இந்த நிதி நிறுவன பங்குகள், நிதிச் சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படுகின்றன. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்களின் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு என்று அழைக்கப்படுகிறது. இது இந்த நிறுவனங்களின் செயல்திறனை எடுத்துக்காட்டும் அளவுகோலாகும்.

பங்கு வர்த்தகம்

பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு குறையும் போதும் அல்லது விலக்கப்படும்போதும், பங்கு வர்த்தகம் மந்தமாக இருக்கும் போதும் இத்துறையின் சொத்து மதிப்பு குறைகிறது. இத்துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினைக் கொண்டுள்ளன. இதில் கடன்பத்திரங்கள், நிதிச் சந்தைகள், பங்குகள், தங்கம் போன்ற பிரபலமான திட்டங்களின் சொத்து மதிப்பு பொதுவாக அதிகமாக உள்ளது. நடுத்தர அளவில் சொத்து மதிப்புடன் பல திட்டங்கள் உள்ளன.

2010 செப்டம்பர் முதல் 2013 செப்டம்பர் வரையிலான மூன்று ஆண்டுகளில் பத்து நடுத்தர பரஸ்பர நிதி திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் அளித்துள்ளன. அதே சமயம் பல திட்டங்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. மூன்று ஆண்டுகளில் இந்த திட்டங்கள் ஒரு சதவீதத்திலிருந்து 6 சதவீதம் வரை லாபம் தந்துள்ளன. இதே திட்டங்கள் ஓராண்டு காலத்தில் 8 முதல் 15 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளன. எனினும் இத்தகைய நடுத்தர திட்டங்கள் பொதுவாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்கவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பேற்ற ரகுராம் ராஜன் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளால் அக்டோபர் மாதத்தில் பரஸ்பர நிதி துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ரூ.1.02 லட்சம் கோடி

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல்–அக்டோபர் மாத காலத்தில் பரஸ்பர நிதி துறை திரட்டிய நிகர முதலீடு ரூ.1.02 லட்சம் கோடியாக உள்ளது. இது சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.1.49 லட்சம் கோடியாக இருந்தது.

ஒட்டுமொத்த அடிப்படையில் இத்துறை நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் ரூ.9.81 லட்சம் கோடியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டின. அதே சமயம் ரூ.9.15 லட்சம் கோடியை அவர்கள் திரும்ப பெற்றதால் இத்துறை ஈர்த்த நிகர முதலீடு ரூ.66,325 கோடியாக உள்ளது.

அக்டோபர் மாதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு அதிகரித்ததால் இத்துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.8.34 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, செப்டம்பர் மாதத்தில் ரூ.7.46 லட்சம் கோடியாக இருந்தது. அக்டோபரில் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்ததற்கு சென்செக்ஸ் 1,785 புள்ளிகள் அதிகரித்ததும் முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாதுகாப்பானது

பரஸ்பர நிதி நிறுவனங்கள் நன்கு தேர்ச்சியும், அனுபவமும் பெற்ற நிபுணர்களைக் கொண்டு முதலீடுகளை மேற்கொள்கின்றன. எனவே பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. புதிய முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி நிறுவனங்கள் வாயிலாக முதலீடுகளை மேற்கொள்வது நல்லது என்றும் கூறப்படுகிறது. அனுபவம் வாய்ந்த வல்லுனர்களை கொண்டு இந்த நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன.

நிகர முதலீடு

கடந்த முழு நிதி ஆண்டில் (2012–13) பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ.76,539 கோடியை நிகர முதலீடாக திரட்டியிருந்தன. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் முதலீட்டாளர்கள் விலக்கிய நிகர தொகை ரூ.22,000 கோடியாக இருந்தது.

image: 

category:

நவம்பர் மாதத்தில் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு ரூ.8,116 கோடி

Posted: 01 Dec 2013 08:57 AM PST

புதுடெல்லி,

அன்னிய நிதி நிறுவனங்கள் நவம்பர் மாதத்தில் பங்குகளில் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.8,116 கோடியாக உள்ளது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக பங்குகளில் இந்த நிறுவனங்கள் கணிசமாக முதலீடு செய்துள்ளன. இருப்பினும், இதற்கு முந்தைய இரு மாதங்களுடன் ஒப்பிடும்போது பங்குகளில் அன்னிய முதலீடு குறைந்துள்ளது.

சாதகமான அம்சங்கள்

நடப்பு நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை இலக்கை காட்டிலும் குறையும் என்றும், நிதிப் பற்றாக்குறை இலக்கை காட்டிலும் அதிகரிக்காது என்றும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் தெரிவித்தார். ஏற்றுமதி தொடர்ந்து வளர்ச்சி அடையும் என்றும், பருவமழை சிறப்பான இருந்ததால் உணவு தானியங்கள் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், செப்டம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 2 சதவீதம் அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 13.47 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், இறக்குமதி 14.5 சதவீதம் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன.

நவம்பர் மாதத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.55,806 கோடிக்கு பங்குகளை வாங்கின. ரூ.47,690 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்தன. இதனையடுத்து இந்நிறுவனங்கள் பங்குகளில் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.8,116 கோடியாக உள்ளது. இது, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முறையே ரூ.13,000 கோடி மற்றும் ரூ.15,700 கோடியாக உயர்ந்திருந்தது.

கடன்பத்திரங்கள் விற்பனை

கடந்த மூன்று மாதங்களாக அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குகளில் அதிக முதலீடு மேற்கொண்டு வருவதையடுத்து, நடப்பு நிதி ஆண்டில் இதுவரை இந்நிறுவனங்கள் பங்குகளில் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.97,050 கோடியாக உயர்ந்துள்ளது.

பங்குகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ள நிலையில் கடன்பத்திரங்களில் மேற்கொண்டிருந்த முதலீடு விலக்கப்பட்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் இந்நிறுவனங்கள் ரூ.5,983 கோடிக்கு கடன்பத்திரங்களை விற்பனை செய்துள்ளன. இதனையடுத்து, நடப்பு ஆண்டில் இதுவரை இந்நிறுவனங்கள் கடன்பத்திரங்களில் மேற்கொண்டிருந்த முதலீட்டில் விலக்கிய நிகர தொகை ரூ.56,138 கோடியாக அதிகரித்துள்ளது.

category:

ஆருஷி கொலை விவகாரத்தை சினிமா படமாக எடுக்க பெற்றோர் எதிர்ப்பு

Posted: 01 Dec 2013 08:21 AM PST

காசியாபாத்,

டெல்லியில் ஆருஷி என்ற பெண்ணும், அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜூம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆருஷியின் பெற்றோர் டாக்டர் ராஜேஷ் தல்வாருக்கும், நுபுர் தல்வாருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆலிவுட் படம்

ஆருஷியும், ஹேம்ராஜூம் வீட்டில் நெருக்கமாக இருந்ததைக் கண்ட ஆத்திரத்தில் அவர்களை பெற்றோரே கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த கதையை புத்தகமாக எழுதவோ அல்லது ஆலிவுட் சினிமா படம் ஆக்கவோ முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. ஆலிவுட் பட இயக்குனர் கிளிப் ரன்யார்டு இது தொடர்பாக ராஜேஷ் தல்வார் தம்பதியரை சிறையில் சந்திக்க முயற்சித்ததாகவும், சிறை நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.

அனுமதி கிடையாது

இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தால், ராஜேஷ் தல்வார் தம்பதியருக்கு அந்த ஆலிவுட் பட இயக்குனர் ரூ.5 கோடி தர முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்துக்கு ராஜேஷ் தல்வார் தம்பதியர் அனுமதி தர மாட்டார்கள் என தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அவர்களது வக்கீல் மனோஜ் சிசோடியா கூறுகையில், ''தங்கள் மகளின் கதையை படம் ஆக்கி அல்லது கதையாக எழுதி பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் பற்றிய ஊடகத்தகவல்களால் ராஜேஷ் தல்வார் தம்பதியர் வேதனை அடைந்துள்ளனர். தாங்கள் மிகவும் நேசித்த மகள் ஆருஷியின் கதையை படமாக எடுக்கவோ புத்தகமாக எழுதவோ அனுமதி அளிக்கவே மாட்டார்கள்'' என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ''ராஜேஷ் தல்வார் தம்பதியின் ஒப்புதலின்றி படம் எடுத்தால் சம்பந்தப்பட்ட பட இயக்குனர், கதாசிரியர் மீது அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்'' என தெரிவித்தார்.

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™