Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


பயஉலக செஸ் போட்டியில் கார்ல்செனை எதிர்கொள்ள தயார் ஆனந்த் பேட்டி

Posted: 07 Nov 2013 11:30 AM PST

சென்னை,

உலக செஸ்போட்டியில் கார்ல்செனின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த், தனக்கு உதவியாக இருக்கும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டார்.

ஆனந்த் பேட்டி

நடப்பு சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் நம்பர் ஒன் வீரர் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நாளை தொடங்குகிறது. 12 சுற்று கொண்ட இந்த போட்டியில் யார் முதலில் 6.5 புள்ளிகளை எட்டுகிறார்களோ? அவர்களுக்கு மகுடம் சூடப்படும். 1972–ம் ஆண்டு நடந்த வரலாற்று சிறப்பு மிக்க பாப்பி பிஷர்–போரிஸ் ஸ்பாஸ்கி இடையிலான போட்டிக்கு நிகராக ஆனந்த்–கார்ல்சென் இடையிலான மோதல் உலகம் முழுவதும் செஸ் ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் 43 வயதான ஆனந்தும், 22 வயதான கார்ல்செனும் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது தமிழகத்தை சேர்ந்த ஆனந்த் கூறுகையில், 'சொந்த ஊரில் விளையாட இருப்பது பெருமையும், சந்தோஷமும் அளிக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

பின்னணியில் இருப்பவர்கள்

உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக சிறப்பாக தயாராகி உள்ளேன். இதற்காக சில மாதங்களாக கடினமான பயிற்சிகளை மேற்கொண்டேன். இந்த போட்டிக்கு தயார் நிலையில் இருக்கிறேன். வெற்றியுடன் முடிக்கும் வகையில் தாக்குதல் பாணி ஆட்டத்திற்கும் தயாராக உள்ளேன். ஆனால் முதலில் ஆட்டம் எப்படி நகர்கிறது என்பதை பார்க்க வேண்டும்.' என்றார்.

இது போன்ற பெரிய போட்டிகளுக்கு ஒரு வீரர் தனியாக தயாராவதில்லை. அவர்களுக்கு என்று ஒரு அணியை உருவாக்கிக் கொள்வார்கள். அதில் பல முன்னணி வீரர்களை சேர்த்து கொண்டு அவர்களுடன் பல வகைகளில் முட்டி மோதி தங்களது ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொள்வார்கள். அந்த வீரர்களும் அவருக்கு தங்களுக்கு தெரிந்த பல்வேறு ஆலோசனைகளை வழங்குவார்கள். எதிரணி வீரரின் பலம், பலவீனம் என்ன, அதற்கு ஏற்ப எந்த மாதிரியான ஆட்ட முறையை கையாள்வது, காய் நகர்த்தலில் புதுப்புது யுக்திகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் போட்டிக்கு தயாராகும் இந்த முறையில் இடம் பெற்றிருக்கும்.

இப்படி ஆனந்த் தனது அணியில் யார் யாரை சேர்த்து பயிற்சியில் ஈடுபட்டார் என்று நிருபர்கள் கேட்ட போது, அவர் தனது கூட்டணியின் பெயரை வெளியிட்டார்., இந்தியாவின் சசிகிரண், சண்டிபன் சந்தா, போலந்தின் ரோடோஸ்லாவ் வோஜ்தஸ்செக், ஹங்கேரி கிராண்ட் மாஸ்டர் பீட்டர் லிகோ ஆகியோர் தனது பயிற்சிக்கு துணை நிற்பதாக குறிப்பிட்டார்.

இதில் பீட்டர் லிகோ, ஆனந்த்துடன் சில போட்டித்தொடர்களில் நேருக்கு நேர் விளையாடி கடும் சவால் அளித்தவர். போட்டி சமநிலையில் இருந்து ஜெயிப்பது யார்? என்று கணிக்க முடியாத சூழல் வரும் போது, அதை தனக்கு சாதகமாக திருப்புவதில் பீட்டர் லிகோ கெட்டிக்காரர். அவர் நிச்சயம் ஆனந்துக்கு பக்கபலமாக இருப்பார் என்று நம்பப்படுகிறது.

கார்ல்சென் மறுப்பு

பொதுவாக தங்களது பயிற்சி முறைகளை எந்த வீரரும் பகிரங்கமாக சொல்வதில்லை. ஆனால் ஆனந்த் வெளிப்படையாக கூறியது ஆச்சரியப்படுத்தியது.

பேட்டியின் போது உடன் இருந்த மார்க்னஸ் கார்ல்செனிடம் உங்களது அணியில் யார்–யார் உள்ளனர் என்று கேட்ட போது, அந்த ரகசியத்தை வெளியிட முடியாது என்று கூறி மறுத்து விட்டார். ஆனந்த் தனது பயிற்சி அணியினரின் பெயரை வெளிப்படையாக சொன்னதற்காக அவரை பாராட்டுகிறேன். ஆனால் நான் அந்த ரகசியத்தை கூறமாட்டேன். உலக போட்டிக்காக இங்கு அமர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். இதுவரை அனைத்தும் நன்றாக அமைந்திருக்கிறது. போட்டி தொடங்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்' என்றார்.

தனது உதவியாளர்கள் பட்டியலை கார்ல்சென் வெளியிட மறுத்தது குறித்து ஆனந்திடம் கேட்ட போது, 'உண்மையில் இது ஒரு பிரச்சினையே இல்லை. ஒரு கேள்விக்கு என்னால் நேர்மையாக பதில் சொல்ல முடியும். ஆனால் சொன்ன விஷயம் முழுவதும் உண்மையா இல்லையா? என்பது உங்களுக்கு ஒரு போதும் தெரியாது. கார்ல்செனுக்கும் அது பொருந்தும். இது தொடர்பான எல்லா உண்மைகளையும் பற்றி அவர் நம்ப மாட்டார்' என்றார்.

category:

ரோகித் ஷர்மாவின் சதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா அஸ்வினும் அபாரம்; தெண்டுல்கர் ஏமாற்றம்

Posted: 07 Nov 2013 11:25 AM PST

கொல்கத்தா,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ரோகித் ஷர்மாவின் சதத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு, முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 354 ரன்கள் குவித்துள்ளது.

கொல்கத்தா டெஸ்ட்

இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 234 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்தது. ஷிகர் தவான் 21 ரன்களுடனும், முரளிவிஜய் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தவான் (23 ரன்), விஜய் (26 ரன்) இருவரையும் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் ஷில்லிங்போர்டு காலி செய்தார்.

தெண்டுல்கர் 10 ரன்

தொடக்க ஜோடி வெளியேறியதும் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட வந்தார். தனது கடைசி தொடரில் விளையாடும் தெண்டுல்கர் மைதானத்திற்குள் நுழைந்த போது, ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.

ஷில்லிங்போர்டுவின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி ஓட விட்ட சச்சின் தெண்டுல்கருக்கு, நடுவர் எமனாக வந்தார். நடுவர் கொடுத்த தவறான எல்.பி.டபிள்யூ.வினால் அவர் 10 ரன்னில் (24 பந்து, 2 பவுண்டரி) அதிருப்தியுடன் பெவிலியன் திரும்பினார். இதற்கிடையே புஜாராவும் (17 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார். இளம் நாயகன் விராட் கோலியும் (3 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

கைகொடுத்த ரோகித்

இதனால் 83 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தத்தளித்தது. இதைத் தொடர்ந்து டெஸ்டில் முதல்முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்ற ரோகித் ஷர்மாவும், கேப்டன் டோனியும் ஜோடி சேர்ந்தார்கள். நெருக்கடியில் இருந்து அணியை ஓரளவு மீட்ட நிலையில், டோனி 42 ரன்களில் (63 பந்து, 5 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

இதனால் இந்தியாவுக்கு மீண்டும் சிக்கல் உருவானது. இதையடுத்து ரோகித் ஷர்மாவுடன், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கைகோர்த்தார். இவர்கள் இருவரும் அவசரம் காட்டாமல், ஏதுவான பந்துகளை மட்டுமே ரன்களாக மாற்றினார்கள். இவர்களின் நேர்த்தியான ஆட்டத்தால் இந்திய அணி வீழ்ச்சியின் பிடியில் இருந்து முழுமையாக நிமிர்ந்தது.

அபாரமாக ஆடிய ரோகித் ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் கோட்ரெலின் பந்து வீச்சில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்து தனது முதலாவது சதத்தை ருசித்ததுடன், இந்திய அணி 300 ரன்களையும் கடக்க வைத்தார். மறுமுனையில் தமிழகத்தின் அஸ்வினும் பிரமாதமாக விளையாடி, ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

முன்னிலை பெற்றது இந்தியா

2–வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் குவித்திருந்தது. ரோகித் ஷர்மா 127 ரன்களுடனும் (228 பந்து, 16 பவுண்டரி, ஒரு சிக்சர்), அஸ்வின் 92 ரன்களுடனும் (148 பந்து, 10 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருக்கிறார்கள். இந்த ஜோடி 7–வது விக்கெட்டுக்கு 198 ரன்கள் திரட்டியுள்ளது. 2–வது சதத்தை நெருங்கியுள்ள அஸ்வின் இதற்கு முன்பு அடித்துள்ள ஒரே சதமும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக (2011–ம் ஆண்டில்) எடுத்தது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி இதுவரை 120 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியிருக்கிறது. 3–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

ஸ்கோர் போர்டு

வெஸ்ட் இண்டீஸ் 234

இந்தியா

தவான் (பி)ஷில்லிங் போர்டு 23

விஜய் (ஸ்டம்பிங்) ராம்டின் (பி) ஷில்லிங்போர்டு 26

புஜாரா (சி) ராம்டின் (பி) கோட்ரெல் 17

தெண்டுல்கர் எல்.பி.டபிள்யூ (பி) ஷில்லிங்போர்டு 10

கோலி (சி) பவெல் (பி) ஷில்லிங்போர்டு 3

ரோகித் ஷர்மா (நாட்–அவுட்) 127

டோனி (சி) ராம்டின் (பி) பெஸ்ட் 42

அஸ்வின் (நாட்–அவுட்) 92

எக்ஸ்டிரா 14

மொத்தம் (102 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு) 354

விக்கெட் வீழ்ச்சி: 1–42, 2–57, 3–79, 4–82, 5–83, 6–156

பந்து வீச்சு விவரம்

டினோ பெஸ்ட் 14–0–53–1

கோட்ரெல் 15–3–53–1

ஷில்லிங்போர்டு 41–8–130–4

பெர்மால் 20–1–54–0

டேரன் சேமி 12–1–52–0

தெண்டுல்கருக்கு நடுவர் தவறான அவுட்

கொல்கத்தாவில் தனது 199–வது டெஸ்டில் பங்கேற்றுள்ள சச்சின் தெண்டுல்கருக்கு அதிர்ஷ்டம் இல்லை. நேற்று முதல் இன்னிங்சில் களம் இறங்கியதும், ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் மைதானமே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு அதிர்ந்தது. அவர் அடித்த ஒவ்வொரு ரன்னையும் ரசித்து மகிழ்ந்தனர்.

அவர் 10 ரன்னில் இருந்த போது, சுழற்பந்து வீச்சாளர் ஷேன் ஷில்லிங்போர்டுவின் 'தூஸ்ரா' வகை பந்து வீச்சை எதிர்கொண்ட போது ஆட்டம் இழந்தார். அவரது உள்காலில் தொடை உயரத்துக்கு பட்ட பந்துக்கு நடுவர் நைஜல் லாங் (இங்கிலாந்து) எல்.பி.டபிள்யூ. வழங்கினார். ஆனால் டி.வி. ரீப்ளேயில் நடுவரின் முடிவு தவறானது என்பது தெரியவந்தது. அதாவது அந்த பந்து தெண்டுல்கரின் காலில் படாமல் இருந்திருந்தால் ஸ்டெம்பை தாக்காமல், சற்று மேலாகவே சென்றிருக்கும் என்பது தெளிவாக தெரிந்தது. நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். முறை அமலில் இருந்திருந்தால், தெண்டுல்கர் அவுட்டில் இருந்து தப்பி இருப்பார். முதல் நாளில் தெண்டுல்கர், ஷில்லிங்போர்டுவின் விக்கெட்டை வீழ்த்தினார். அதற்கு மறுநாளே ஷில்லிங்போர்டு பழிதீர்த்ததுடன், இந்திய ரசிகர்களின் இதயங்களையும் நொறுக்கி விட்டார்.

category:

அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 14–வது இந்தியர் ரோகித் ஷர்மா

Posted: 07 Nov 2013 11:20 AM PST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் சமீபத்தில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ரோகித் ஷர்மா, கொல்கத்தாவில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தியதுடன், ஊசலாடிய இந்திய அணியையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

136 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 98 அறிமுக சதங்கள் அரங்கேறியுள்ளன. இதில் முதல் போட்டியிலேயே சதம் அடித்த இந்தியர்களின் எண்ணிக்கை 14 ஆகும். மேலும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அறிமுக வீரர் செஞ்சுரி அடிப்பது இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன்பு 1948–ம் ஆண்டு டெல்லியில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் கே.சி.இப்ராகிம் 85 ரன்கள் எடுத்ததே அந்த அணிக்கு எதிராக இந்திய புதுமுக வீரர் ஒருவரின் அதிகபட்சமாக இருந்தது. டெஸ்டில் சதம் விளாசிய இந்திய அறிமுக வீரர்கள் விவரம் வருமாறு:–

வீரர் ரன் எதிரணி ஆண்டு

லாலா அமர்நாத் 118 இங்கிலாந்து 1933

தீபக் சோதன் 110 பாகிஸ்தான் 1952

கிரிபால் சிங் 100* நியூசிலாந்து 1955

அப்பாஸ் அலி பெய்க் 112 இங்கிலாந்து 1959

ஹனுமந்த் சிங் 105 இங்கிலாந்து 1964

விஸ்வநாத் 137 ஆஸ்திரேலியா 1969

சுரிந்தர் அமர்நாத் 124 நியூசிலாந்து 1976

அசாருதீன் 110 இங்கிலாந்து 1984

பிரவின் ஆம்ரே 103 தென்ஆப்பிரிக்கா 1992

கங்குலி 131 இங்கிலாந்து 1996

ஷேவாக் 105 தென்ஆப்பிரிக்கா 2001

ரெய்னா 120 இலங்கை 2010

தவான் 187 ஆஸ்திரேலியா 2013

ரோகித் ஷர்மா 127* வெஸ்ட் இண்டீஸ் 2013

category:

முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம்

Posted: 07 Nov 2013 11:12 AM PST

முருகன் கோவில்களில் வெள்ளிக்கிழமை  சூரசம்ஹாரம்

முருக பெருமான் சூரபத்மனை அழித்து உலகுக்கு அருள் புரிந்த நாள் கந்தசஷ்டி திருநாளாகும்.

 சூரனை அழித்த நிகழ்ச்சியை நினைவூட்ட சூரசம்ஹாரம் அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று நடைபெறுகிறது.

 சூரன் தான் பெற்ற வரத்தால் நன் மக்களுக்கும் தேவர்களுக்கும் துன்பங்கள் பல செய்தான்.

அவன் நீண்ட காலம் இவ்வுலகில் வாழ்ந்தால் ஆயிரக்கணக்கான பாவ செயல்களை செய்து, நரகத்திற்கு ஆளாவான். தவத்தால் வரம் பலபெற்ற இவன், பெரும்பாவியாகி விடக்கூடாது என்ற கருணையால் நினைந்து இறைவன் குமாரனாக தோன்றி வேலாயுதத்தால் அவனுடைய உடலை இரு துண்டுகளாக்கினார்.

அதில் ஒன்றினை மயில் வாகனமாகவும், மற்றொன்றினைச் சேவல் கொடியாகவும், தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

 இதனை விளக்கவே சூரசம்ஹாரம் முடிந்த உடன் முருகனை மயில்வாகனத்தில் ஏற்றுகின்றனர். அப்போது அவனுக்கு "சேவல்'' கொடியாகிறது. இதில் இருந்து முருகன் சூரனைக் கொல்லவில்லை என்பதுவும் மறக்கருணையால் ஆட்கொண்டான் என்பதுவும் குறிப்பிடப்படுகின்றது.

 "சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம்'' என்பது பழமொழி. திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடந்ததால் திருச்செந்தூரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

முருகன் புராணங்களின்படி தன்படைகளுடன் முருகன் திருச்செந்தூர் வந்து தங்கியதாகவும் அங்கு விஸ்வகர்மாவால் அமைக்கப்பட்ட தேவகுருவாகிய குரு என்ற வியாழபகவானால் பூஜிக்கப்பட்டு அசுரர்களின் வரலாறு பற்றி அறிந்ததாக கூறப்படுகிறது. வியாழபகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் திருச்செந்தூர் சிறப்பு பெற்ற குரு தலமாகவும் போற்றப்படுகிறது.

இங்கிருந்து குமரபெருமான் வீரபாகு தேவரை சூரபத்மனுக்கு அறிவுரை கூறும்படி தூது அனுப்பினார். வீரபாகு தேவரின் தூது பயனற்று போகவே முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரனை வெற்றிக்கொண்டார். இந்நகர் வெற்றி மாநகர் என பொருள்படும்படி ஆரம்பத்தில் வடமொழியில் ஜெயந்திபுரம் என அழைக்கப்பட்டு பின்னர் சயந்தி, செந்தில், திருச்செந்தூர் என்றெல்லாம் தமிழில் பெயர்கள் பெற்றுள்ளது.

திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு புனிதமும் வளமும் நிறைந்த வெற்றி நகர் என்றும் செல்வமும் வெற்றியும் அருளவல்ல தலம் என்று பொருள் கூறுவர்.

மாமரமாக நின்ற சூரபத்மன் பிளவுபட்ட இடம் திருச்செந்தூரில் இருந்து 6 மைல் தூரத்தில் கடல் கரையோரமாக உள்ள மாப்பாடு என்ற தலம். தற்போது மணப்பாடு என்றும் அழைக்கப்படுகிறது.

 அங்கு இன்றளவும் மாமரங்கள் தழைப்பதில்லை என்று கூறப்படுகிறது. கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார லீலைக்காக இறைவனின் திருவிக்கிரகத்தை கடற்கரை ஓரமாக உலா செய்யும் போது இப்போதும் கடல் தற்போது பின்வாங்கி கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகபெருமான் சிவபூஜை புரிந்த இடமும் அபிஷேகத்திற்காக தன்கைவேலினால் கந்தபுஸ்கரணி தீர்த்தத்தை தோற்றிவித்த இடமும் திருச்செந்தூரே ஆகும்.

இதனை விளக்கும் வகையில் கோவிலின் கற்பகிரகத்தில் சூரசம்ஹாரமூர்த்தியான பாலசுப்பிரமணியர் சிவபூஜை புரியும் வகையில் தன்னுடைய நான்கு திருக்கரங்களில் இரண்டு அபயவரத ஹஸ்தங்களாகவும் (ரட்சிப்பதாகவும்), ஒரு கையில் ருத்ரட்சமாலையும் மற்றொரு கையில் புஷ்பம் ஏந்தி அர்ச்சனை செய்யும் திருக்கோலத்தில் காட்சி அருள்கின்றார்.

மூலவருக்கு பின்னால் முருகப்பெருமானால் பூஜிக்கப்பட்ட பஞ்சலிங்கங்கள் உள்ளன.

கோவிலின் தெற்கே கடற்கரை ஓரமாக சிறிது தூரத்தில் கந்தபுஸ்கரணி அமைந்துள்ளது. இத்தீர்த்தம் நாளி கிணறு என்று அழைக்கப்படுகிறது. இப்புனித கிணற்று நீர் இனிமையாக இருப்பதுடன் நோய்களை திர்க்கும் குணம் படைத்ததாகவும் இருக்கிறது.

"கந்தசஷ்டி திருநாளில் என்னவரம் கேட்டாலும் அந்த வரம் தந்திடுவான் முருகன்'' என்று கூறப்படுகிறது. திதிகளில் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருகிறது. செல்வத்தை தரும் சுக்கிரனின் எண் 6, சுக்கிரனின் அதிதேவதை மகாலெட்சுமி.

மற்ற நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட 6–வது திதியான சஷ்டியில் விரதம் இருப்பதன் மூலம் மகாலெட்சுமியின் அருளையும் பெறலாம், மனத்திற்கு அகம் என்ற பொருள் உண்டு. ஞானமான அறிவை பெற்று மனதளவில் உள்ள குழப்பங்கள் அகன்று உடல், நலம் மனநலம் கிடைக்க திருச்செந்தூரில் சூரசம்ஹார விழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிப்படுவது சிறப்பாகும்.
 

category:

பெண்களுக்கான சர்வதேச சதுரங்க தொடர்: 2–வது சுற்றில் ஹரிணி வெற்றி

Posted: 07 Nov 2013 11:11 AM PST

சென்னை,

உலக சதுரங்க போட்டியையொட்டி பெண்களுக்கான சர்வதேச கிராண்ட்மாஸ்டர் சதுரங்க தொடர் சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2–வது சுற்றில் சென்னையை சேர்ந்த ஹரிணி, ஜார்ஜியா கிராண்ட்மாஸ்டர் நினோ பேட்சியாஷ்விலிக்கு அதிர்ச்சி அளித்தார். இரண்டு சுற்று முடிவில் ஹரிணி, இவாகினோவா, அம்பர்ட்சுமோவா கரினா, பாக்டி குல்கர்னி, மீனாட்சி, கிரன் மனிஷா, மமினோவா, மேரி அன் கோம்ப்ஸ் ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார்கள்.

category:

ஆனந்த்–கார்ல்சென் மோதுகிறார்கள் சென்னையில் உலக சதுரங்க போட்டியை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் பரிசுத்தொகையாக ரூ.14 கோடி வழங்கப்படுகிறது

Posted: 07 Nov 2013 11:04 AM PST

சென்னை,

உலக சதுரங்க போட்டி ரஷியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் போன்ற வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.

 சதுரங்க போட்டி ஆர்வலர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் முதல் முறையாக இந்தியாவில், அதுவும் சென்னை நகரில் தற்போது உலக சதுரங்க போட்டி நடத்தப்படுகிறது.

தமிழக அரசின் முழுஆதரவு

தமிழக அரசின் முழுமையான ஆதரவுடன் தமிழ்நாடு சதுரங்க சங்கம் இந்த போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியை நடத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த போட்டிக்கான பரிசுத்தொகை ரூ.14 கோடியாகும்.

 இதில் 5 முறை உலக சாம்பியனான இந்திய கிராண்ட்மாஸ்டர் விசுவநாதன் ஆனந்தும், உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) ஆகியோர் மோதுகிறார்கள்.

12 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி வருகிற 9–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. 12 சுற்றுகள் முடிவில் இருவரும் சம நிலை வகித்தால், டைபிரேக்கர் ஆட்டம் 28–ந் தேதி நடைபெறும்.

ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சர்வதேச சதுரங்க அரங்கில் தமிழ்நாட்டின் பெயரை பதிய வைத்து இருக்கும் இந்த உலக சதுரங்க போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு வந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை, தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஸ்டேடியத்தில் குழுமி இருந்த ரசிகர்கள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை கொடியசைத்தும், முதல்–அமைச்சரின் உருவப்படம் பொறித்த பதாகைகளையும் அசைத்தும் வரவேற்றனர். விழாவின் முதல் நிகழ்ச்சியாக சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் கீதம் இசைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாக்னஸ் கார்ல்சென், ஆனந்த் ஆகியோரை அடுத்தடுத்து இளம் சர்வதேச சதுரங்க வீரர்கள் தேசிய கொடியுடன் அணிவகுத்து மேடைக்கு அழைத்து வந்தனர்.

ஆனந்துக்கு கறுப்பு நிற காய்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உலக சதுரங்க போட்டியை தொடங்கி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் முதல் சுற்றில் யார் எந்த நிற காயுடன் விளையாடுவது என்பது குலுக்கல் முறையில் முடிவு செய்யப்பட்டது. தனித்தனி குவளைகளில் வீரர்களின் படம், கறுப்பு, வெள்ளை நிற காய்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதனை முதல்–அமைச்சர் குலுக்கல் முறையில் தேர்வு செய்தார். முதலில் ஆனந்தின் படத்தை எடுத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, அவருக்கு கறுப்பு நிற காயை தேர்ந்தெடுத்தார். மாக்னஸ் கார்ல்சென்னுக்கு வெள்ளை நிற காயை தேர்வு செய்தார். வெள்ளை நிற காய் உடையவர்(மாக்னஸ் கார்ல்சென்) தான் முதலில் காய் நகர்த்துவார்.

மேலும் போட்டி தொடர்பான விழா மலரையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். இதன் முதல் பிரதியை உலக சதுரங்க சம்மேளன தலைவர் கிர்சான் இல்யும் சினோவ் பெற்றுக்கொண்டார். உலக சதுரங்க போட்டியை நடத்த முழு ஆதரவு அளித்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உலக சதுரங்க கூட்டமைப்பின் (பிடே) கவுரவ உறுப்பினருக்கான சான்றிதழை உலக சதுரங்க சம்மேளன தலைவர் கிர்சான் இல்யும் சினோவ் வழங்கினார். அத்துடன் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியின் ஓவியத்தையும் பரிசாக அளித்தார்.

சிறப்பாக அமையும்

உலக சதுரங்க சம்மேளன தலைவர் கிர்சான் இல்யும் சினோவ் தலைமை தாங்கி பேசுகையில், 'இந்தியாவின் சதுரங்க புலி ஆனந்தும், உலக தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென்னும் மோதும் இந்த உலக சதுரங்க போட்டி, சதுரங்க ஆட்டம் தோன்றிய நாடான இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலக சதுரங்க போட்டியை இங்கு நடத்த சம்மதித்ததுடன் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து போட்டிக்கு முழு ஆதரவு அளித்து வரும் தமிழக முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சதுரங்க ஆட்டம் சேர்க்கப்பட்டு இருப்பது சிறப்பான திட்டமாகும். இந்த உலக சதுரங்க போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமையும் என்று நம்புகிறேன்' என்றார்.

விழாவில் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை செயலாளர் முகமது நசீமுத்தின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ராஜாராமன், இந்தியாவுக்கான நார்வே தூதர் ஒய்மன் கோமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்கவர் கலைநிகழ்ச்சி

விழாவையொட்டி இரு நாடுகளின் பாரம்பரிய கலைநிகழ்ச்சி ஒரு மணி நேரம் நடைபெற்றது. திருவையாறை சேர்ந்த 45 நாதஸ்வர கலைஞர்கள், 25 தவில் வித்வான்கள் மங்கள இசை இசைத்தனர். நடிகை ஷோபனாவின் நாட்டிய குழுவினர் 81 பேர் சதுரங்க காய் நகர்த்துவது போல் நடனம் ஆடினார்கள். மயிலாட்டம், புலியாட்டம் மற்றும் ஊர்மிளா சத்யநாராயணன் குழுவை சேர்ந்த 90 பேரின் பரத நாட்டியம் அரங்கேற்றப்பட்டது. வீணை காயத்ரி குழுவை சேர்ந்த 70 பேர் தத்ரூபமாக வீணை வாசித்தனர். நார்வே குழுவினரின் கம்மிங் நடனம் பார்வையாளர்களை வியக்க வைத்தது.

முன்னதாக பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் வீரமணி வரவேற்றார். முடிவில் தமிழ்நாடு செஸ் சங்க தலைவர் வெங்கட்ராம ராஜா நன்றி கூறினார். நிறைவாக போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களின் (நார்வே, இந்தியா) தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

ஆன்மீக சிந்தனை (08-11-2013)

Posted: 07 Nov 2013 11:03 AM PST

Daily Thanthi Special Term:

Daily Thanthi Image Special Anmikasinthanai: 

கன்னித்தீவு (08-11-2013)

Posted: 07 Nov 2013 11:01 AM PST

Daily Thanthi Image Special: 

Daily Thanthi Special Term:

ஆண்டியார் (08-11-2013)

Posted: 07 Nov 2013 11:00 AM PST

Daily Thanthi Special Term:

Daily Thanthi Image Special Andiyar: 

சாணக்கியன் சொல் (08-11-2013)

Posted: 07 Nov 2013 10:58 AM PST

Daily Thanthi Image Special chanakkiyan: 


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™