Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


முதல் ஏழு மாதங்களில், பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் திரட்டப்பட்ட நிதி 3 மடங்கு உயர்வு

Posted: 17 Nov 2013 10:40 AM PST

மும்பை

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் (ஏப்ரல்–அக்டோபர்) பங்குகளாக மாறாத கடன்பத்திரங்களை வெளியிட்டு நிறுவனங்களால் சில்லரை முதலீட்டாளர்களிடம் திரட்டப்பட்ட நிதி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் மூன்று மடங்கு அதிகரித்து ரூ.16,279 கோடியாக உயர்ந்துள்ளது.

பங்கு வர்த்தகம் மந்தம்

பணவீக்கம் உயர்வு, கடனிற்கான வட்டி விகிதம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பங்கு வியாபாரத்தில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டுவது நிறுவனங்களுக்கு ஒரு சவாலாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்கு வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்கிய பல நிறுவனங்களின் பங்கு விலை வெளியீட்டு விலையைக் காட்டிலும் குறைந்துள்ளது. மேலும் 'செபி' அனுமதியை பெற்றுள்ள நிலையிலும் பல நிறுவனங்கள் பங்கு வெளியீட்டு திட்டங்களை ரத்து செய்துள்ளன.

எனவே பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் நிதி திரட்டுவதில் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. மேலும் இவ்வகை கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதில் சில்லரை முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.

அதிக ஆதாயம்

பங்குகளாக மாறக்கூடிய கடன் பத்திரங்களைக் காட்டிலும் பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு அதிக ஆதாயம் கிடைக்கிறது. ஐந்து ஆண்டுகால முதிர்வு காலத்தை கொண்ட வங்கி டெபாசிட்டுகளுக்கு 8.75 சதவீத வட்டி கிடைக்கும் நிலையில் இவ்வகை கடன் பத்திரங்களில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு 10 முதல் 12 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது.

மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என பொருளியல் நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். நிறுவனங்களுக்கு விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிக நிதி தேவைப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் பங்குகளாக மாறாத கடன் பத்திர வெளியீடு வாயிலாக நிறுவனங்கள் திரட்டிய நிதி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.

பவர் பைனான்ஸ்

முதல் ஏழு மாதங்களில் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் இவ்வகை கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ,4,467 கோடி திரட்டி உள்ளது. இது இந்நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை (ரூ.750 கோடி) காட்டிலும் சுமார் ஐந்து மடங்கு அதிகமாகும். ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் ரூ.1,000 கோடி திரட்ட திட்டமிட்டிருந்தது. இந்நிறுவனம் திரட்டிய நிதி இதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகரித்து ரூ.3,440 கோடியாக உயர்ந்துள்ளது. ஹட்கோ நிறுவனம் திரட்டிய நிதி இலக்கைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகரித்து ரூ.750 கோடியிலிருந்து ரூ.2,370 கோடியாக உயர்ந்துள்ளது.

என்.எச்.பி.சி. மற்றும் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் தலா ரூ.500 கோடி திரட்ட முடிவு செய்து இருந்தன. இந்நிறுவனங்களால் திரட்டப்பட்ட நிதி முறையே ரூ.1,951 கோடி மற்றும் ரூ.1,228 கோடியாக உயர்ந்துள்ளது. பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களுக்கு சில்லரை முதலீட்டாளர்களிமிருந்து அமோக ஆதரவு கிடைத்து வருவதையடுத்து முதல் ஏழு மாதங்களில் இரண்டு நிறுவனங்கள் இரண்டு முறை இந்த கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளன.

ஏழு மாதங்களில்...

கடந்த 2011–12–ஆம் நிதி ஆண்டில் பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள் வெளியீடு வாயிலாக நிறுவனங்கள் திரட்டிய நிதி வரலாறு காணாத அளவிற்கு ரூ.35,611 கோடியாக உயர்ந்தது. இது சென்ற நிதி ஆண்டில் ரூ.17,000 கோடியாக குறைந்தது. இந்நிலையில் இந்த நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் திரட்டப்பட்ட நிதி ரூ.16,000 கோடியை தாண்டி உள்ளது. எனவே இந்த நிதி ஆண்டில் திரட்டப்படும் நிதி ரூ.30,000 கோடியை நெருங்கும் என பங்கு வர்த்தக நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொழில்துறை உற்பத்தி உயர்வு

இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 8 சதவீதமும், தொழில்துறை உற்பத்தி 2 சதவீதமும் உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் சரக்குகள் ஏற்றுமதி இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 13 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே நிறுவனங்கள் விரிவாக்க திட்டங்களுக்கு ஆயத்தமாகி வருவதால் பங்கு, கடன் பத்திரங்கள் வெளியீடு மற்றும் தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு, உரிமை பங்கு வெளியீடு போன்ற வழிமுறைகள் வாயிலாக திரட்டப்படும் நிதி பெருமளவு அதிகரிக்கும் என நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

category:

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 6.6% வளர்ச்சி

Posted: 17 Nov 2013 10:38 AM PST

புதுடெல்லி

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 6.6 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.46,961 கோடியிலிருந்து ரூ.50,056 கோடியாக உயர்ந்துள்ளது.

எல்.ஐ.சி.

பொதுத்துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி. வங்கியின் பிரிமிய வருவாய் மட்டும் 7.26 சதவீதம் அதிகரித்து ரூ.35,340 கோடியிலிருந்து ரூ.37,906 கோடியாக உயர்ந்துள்ளது. இது அனைத்து நிறுவனங்களின் மொத்த பிரிமிய வருவாயில் 76 சதவீதமாகும். சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீடு தோல்வியை சந்திக்கும் போது எல்.ஐ.சி. நிறுவனம் அந்த வெளியீடுகளில் முதலீடு செய்து கை கொடுக்கிறது

தனியார் துறை

ஆயுள் காப்பீட்டுச் சேவையில் 23 தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. முதல் ஆறு மாதங்களில் இந்த நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 4.55 சதவீதம் அதிகரித்து ரூ.11,621 கோடியிலிருந்து ரூ.12,150 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த பிரிமிய வருவாயில் தனியார் துறையின் பங்கு 24 சதவீதமாகத் தான் உள்ளது.

தனியார் துறையில் ரிலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் பிரிமிய வருவாய் இரண்டு மடங்காக அதிகரித்து ரூ.570 கோடியிலிருந்து ரூ.1,022 கோடியாக அதிகரித்துள்ளது.

முதலீட்டு ஆதாயத்துடன் காப்பீட்டு வசதியும் கிடைப்பதால் 'யுலிப்' எனப்படும் பங்கு சார்ந்த காப்பீட்டு பாலிசிகள் ஒரு காலத்தில் பரபரப்பாக விற்பனையாகி வந்தன. ஆனால் இந்த பாலிசிகள் குறித்த புதிய விதிமுறைகளை கடந்த 2010 செப்டம்பர் மாதத்தில் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா) வெளியிட்டது. இதன் காரணமாக 'யுலிப்' பாலிசிகள் விற்பனை குறைந்தது. ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாயில் 'யுலிப்'பின் பங்கு அதிகமாக உள்ளதால் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிமிய வருவாயில் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது.

பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களைப் போன்று ஆயுள் காப்பீட்டு பாலிசிகளையும் மின்னணு வடிவில் (டீமேட்) வைத்து கொள்ளும் முறை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் ஆயுள் காப்பீட்டு துறையில் எழுச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடர்பாடுகள்

வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ள காப்பீட்டு திட்டங்கள் துணை புரிகின்றன. இதற்காக ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பெறுகின்றன. இதற்கு பிரிமியம் என்று பெயர். வாடிக்கையாளர்களுக்கு இடர்பாடு ஏற்படும் போது ஒப்புக் கொள்ளப்பட்ட தொகை இழப்பீடாக வழங்கப்படுகிறது. நம் நாட்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது காப்பீட்டு வசதி பெற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 4 சதவீதமாகத்தான் உள்ளது. எனவே காப்பீட்டு நிறுவனங்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்பு உள்ளது.

category:

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் தங்கம் இறக்குமதி 40 சதவீதம் குறையும்

Posted: 17 Nov 2013 10:36 AM PST

புதுடெல்லி

நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் நாட்டின் தங்கம் இறக்குமதி சென்ற நிதி ஆண்டைக் காட்டிலும் 40 சதவீதம் குறைந்து 500 டன்னாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அன்னியச் செலாவணி

சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் தங்கம் இறக்குமதி 835 டன்னாக இருந்தது. இதன் காரணமாக அந்த நிதி ஆண்டில் அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை 8,820 டாலராக மிகவும் அதிகரித்து இருந்தது.

எனவே தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடப்பு ஆண்டில் இதுவரை இறக்குமதி வரியை மூன்று முறை உயர்த்தி உள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் தங்கத்தில் 20 சதவீதத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற விதிமுறையை பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்தது. தங்க நாணயங்கள் மற்றும் பதக்கங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க தொடங்கியுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் (ஏப்ரல்–அக்டோபர்) தங்கம் இறக்குமதி 400 டன்னாக குறைந்துள்ளது. அடுத்த நான்கு மாதங்களில் மொத்த இறக்குமதி சுமார் 100 டன்னாகத் தான் இருக்கும் என்றும், இதனால் மொத்த இறக்குமதி 500 டன்னாக குறையும் என்றும் மத்திய வருவாய் துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி

கடந்த 2010–11–ஆம் நிதி ஆண்டில் தங்கம் இறக்குமதி 970 டன்னாக இருந்தது. 2011–12–ஆம் நிதி ஆண்டில், 1,067 டன்னாக உயர்ந்தது. 2012–13–ஆம் நிதி ஆண்டில் 835 டன்னாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 500 டன்னாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் நடப்பு கணக்கு பற்றாக்குறை சென்ற நிதி ஆண்டைக் காட்டிலும் 3,200 கோடி டாலர் குறைந்து 5,600 கோடி டாலராக குறையும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

category:

பொருளாதார முன்னேற்றம், அமெரிக்க நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் அதிகரித்து வரும் அன்னிய முதலீடு

Posted: 17 Nov 2013 10:33 AM PST

புதுடெல்லி

பொருளாதார முன்னேற்றம் மற்றும் அமெரிக்க நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருகிறது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

''நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டிலிருந்து பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். நடப்பு கணக்கு பற்றாக்குறை இலக்கை காட்டிலும் குறையும். மேலும் நிதி பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும். ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை நன்றாக இருந்ததால் நடப்பு ஆண்டில் உணவு தானியங்கள் மகசூல் அதிகரிக்கும்'' என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அண்மையில் தெரிவித்தார்.

அமெரிக்க ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பேற்க உள்ள ஜேனட் எல்லென் கடன் பத்திரங்கள் வாங்கும் அளவை தற்போதைக்கு குறைக்கப் போவதில்லை என்று தெரிவித்தார். இதுவும் இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீடு அதிகரிப்பிற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

ஏனென்றால், அன்னிய நிதி நிறுவனங்கள் பெரும்பாலும் அந்நாட்டு மைய வங்கியிடம் இருந்து நிதி திரட்டப்படுகின்றன. அவ்வாறு திரட்டும் மூலதனத்தை இந்தியா போன்ற நாடுகளில் முதலீடு செய்கின்றன. அமெரிக்க ரிசர்வ் சிறப்பு பணஅளிப்பு நடவடிக்கையை குறைத்தால் இந்நிறுவனங்களுக்கு நிதி ஆதாரம் தடைப்படும். இதன் விளைவாக அன்னிய நிதி நிறுவனங்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மேற்கொண்ட முதலீட்டை விலக்க தொடங்கும். எனவே அமெரிக்க மைய வங்கியின் தற்போதைய அறிவிப்பு இந்திய பங்கு சந்தைகளுக்கு சாதகமான அம்சமாகும்.

நிகர முதலீடு

நவம்பர் 1 முதல் 12 வரையிலான காலத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.22,584 கோடிக்கு பங்குகளை வாங்கின. ரூ.18,582 கோடிக்கு பங்குகளை விற்றன. இதனையடுத்து பங்குகளில் மேற்கொண்ட நிகரமுதலீடு ரூ.4,002 கோடியாக உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குகளில் ரூ.28,700 கோடி முதலீடு செய்துள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரை அன்னிய நிதி நிறுவனங்களில் பங்குகளில் மேற்கொண்ட முதலீடு ரூ.92,936 கோடியாக உயர்ந்துள்ளது.

அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குகளில் முதலீட்டை அதிகரித்துள்ள அதேசமயம் கடன் பத்திரங்களில் முதலீட்டை விலக்கி வருகின்றன. நவம்பர் மாதத்தில் இதுவரை ரூ.4,070 கோடிக்கு கடன் பத்திரங்களை விற்பனை செய்துள்ளன. 2013–ஆம் ஆண்டில் இதுவரை இந்நிறுவனங்கள் கடன் பத்திரங்களில் விலக்கிய தொகை நிகர தொகை ரூ.54,225 கோடியாக உள்ளது.

டாட்டா குழும நிறுவனங்களில் முதலீடு உயர்ந்தது

நடப்பு ஆண்டின் ஜூலை–செப்டம்பர் காலாண்டில் டாட்டா குழுமத்தின் முக்கிய 16 நிறுவனங்களில் 13 நிறுவனங்களில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ளது.

செப்டம்பர் காலாண்டில் டி.சி.எஸ். நிறுவனத்தில் அன்னிய நிதி நிறுவனங்களின் மூலதனம் 15.67 சதவீதத்திலிருந்து 16.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் இது டாட்டா மோட்டார்ஸில் 26.59 சதவீதத்திலிருந்து 26.73 சதவீதமாகவும், டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் 13.2 சதவீதத்திலிருந்து 13.56 சதவீதமாகவும், டாட்டா பவரில் 24.78 சதவீதத்திலிருந்து 25.05 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. டாட்டாவின் துணை நிறுவனங்களான டாட்டா கெமிக்கல்ஸ், டாட்டா கம்யூனிகேஷன்ஸ், டாட்டா எலக்ஸி டிரென்ட், இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி, டாட்டா குளோபல் பிவரேஜஸ், ராலிஸ் இந்தியா மற்றும் டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றில் அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளன. டாட்டா குழுமம் தனது மொத்த வருவாயில் 60 சதவீதத்தை சர்வதேச வர்த்தகத்தின் வாயிலாக ஈட்டுகிறது.

category:

சென்ற வார வர்த்தகத்தில், டாப் 10 பட்டியலில் 9 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.47,562 கோடி சரிவடைந்தது

Posted: 17 Nov 2013 10:30 AM PST

மும்பை

சென்ற வார வர்த்தகத்தில், டாப் 10 பட்டியலில் ஒன்பது நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.47,562 கோடி சரிவடைந்தது.

ரூபாய் மதிப்பு சரிவு

அக்டோபர் மாதத்தில் சில்லரை மற்றும் மொத்த விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அமெரிக்க ரிசர்வ் வங்கி சிறப்பு பண அளிப்பு நடவடிக்கை குறைக்கும் என்ற அச்சப்பாடு போன்ற காரணங்களால் சென்ற வாரத்தில் பங்கு வியாபாரம் கரடியின் பிடியில் இருந்தது.

டி.சி.எஸ். பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.13,133 கோடி குறைந்து ரூ.3,96,789 கோடியாக சரிவடைந்தது. கோல் இந்தியா பங்குகளின் மதிப்பு ரூ.10,833 கோடி சரிந்து ரூ.1,73,131 கோடியாக குறைந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு ரூ.7,674 கோடி குறைந்து ரூ.2,75,198 கோடியாக சரிவடைந்துள்ளது. ஓ.என்.ஜி.சி. பங்குகளின் மதிப்பு ரூ.6,074 கோடி சரிந்து ரூ.2,31,169 கோடியாக குறைந்துள்ளது.

ஐ.டி.சி. பங்குகளின் மதிப்பு ரூ.4,082 கோடி சரிந்து ரூ.2,49,207 கோடியாக குறைந்துள்ளது. எச்.டீ.எஃப்.சி. வங்கி பங்குகளின் மதிப்பு ரூ.2,632 கோடி குறைந்து ரூ.1,53,564 கோடியாக சரிவடைந்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.1,959 கோடி சரிந்து ரூ.1,35,551 கோடியாக குறைந்துள்ளது.

இந்துஸ்தான் யூனிலீவர், நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.963 கோடி குறைந்து ரூ.1,25,949 கோடியாக சரிவடைந்துள்ளது. இன்ஃபோசிஸ் பங்குகளின் மதிப்பு ரூ.212 கோடி குறைந்து ரூ.1,92,587 கோடியாக சரிவடைந்துள்ளது. அதேசமயம் என்.டி.பி.சி. பங்குகளின் மதிப்பு ரூ.124 கோடி அதிகரித்து ரூ.1,25,949 கோடியாக உயர்ந்துள்ளது.

முதல் 4 இடங்கள்

பங்குகளின் தற்போதைய சந்தை மதிப்பு அடிப்படையில் டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.டி.சி. மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்கள் முறையே முதல் நான்கு இடங்களில் உள்ளன. இன்ஃபோசிஸ், கோல் இந்தியா மற்றும் எச்.டீ.எஃப்.சி. வங்கி முறையே ஐந்து, ஆறு மற்றும் ஏழாவது இடங்களில் உள்ளன. பார்தி ஏர்டெல் மற்றும் என்.டி.பி.சி. ஆகியவை முறையே எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களை பிடித்துள்ளன. இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் பத்தாவது இடத்தில் உள்ளது.

category:

பங்கு வெளியீட்டில் இறங்க ஆந்திரா வங்கி திட்டம்

Posted: 17 Nov 2013 10:29 AM PST

ராஜி ரெட்டி

ஐதராபாத்

பொதுத்துறையைச் சேர்ந்த ஆந்திரா வங்கி பங்கு வெளியீட்டில் இறங்க திட்டமிட்டுள்ளது. தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்கி அல்லது பொதுமக்களுக்கு பங்குகளை விற்பனை செய்து மற்றும் அரசுக்கு முன்னுரிமை அடிப்படையில் பங்கு ஒதுக்கி நிதி திரட்ட உள்ளது.

ஒப்புதல் பெற முடிவு

மத்திய அரசுக்கு பங்குகளை ஒதுக்கி ரூ.200 கோடி திரட்ட இவ்வங்கியின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் டிசம்பர் 19–ந் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்குதாரர்களிடம் ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. செபி விதிமுறைகளின் படி முன்னுரிமை பங்குஒதுக்கீட்டுக்கான விலை நிர்ணயம் செய்யப்படும். மேலும் டிசம்பர் 19–ந் தேதி பங்கின் வெளியீட்டு விலை குறித்து முடிவு செய்யப்படும்.

ஆந்திரா வங்கி செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.71 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டில் ரூ.325 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் 78 சதவீதம் சரிவடைந்துள்ளது. மொத்த வருவாய் 12 சதவீதம் அதிகரித்து ரூ.3,817 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வர்த்தகம் 18 சதவீதம் அதிகரித்து ரூ.2.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்து.

இதே காலத்தில் வங்கி திரட்டிய டெபாசிட் 19.1 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ. 1.29 லட்சம் கோடியாகவும், வழங்கிய கடன் 16.5 சதவீதம் அதிகரித்து ரூ.1 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது.

வாராக்கடன்

செப்டம்பர் காலாண்டில் இவ்வங்கியின் ஒதுக்கீடுகள் ரூ.260 கோடியிலிருந்து ரூ.702 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த வாராக் கடன் 3.48 சதவீதத்திலிருந்து 5.15 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 2.16 சதவீதத்திலிருந்து 3.54 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. மொத்த வாராக்கடன் மற்றும் நிகர வாராக்கடன் முறையே ரூ.5,187 கோடி மற்றும் ரூ.3,477 கோடியாக உள்ளது.

category:

பி.எப். சேமிப்புக்கு 8.5 சதவீத வட்டி?

Posted: 17 Nov 2013 10:26 AM PST

புதுடெல்லி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நடப்பு நிதி ஆண்டிற்கு, பி.எப். சேமிப்பிற்கு குறைந்தபட்சம் 8.5 சதவீத வட்டி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011–12–ஆம் நிதி ஆண்டில் 8.25 சதவீத வட்டி வழங்கப்பட்டது. 2012–13–ஆம் ஆண்டில் வட்டி விகிதம் 8.50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் 8.5 சதவீதத்திற்கு குறையாமல் வட்டி நிர்ணயம் செய்யப்படும் என இ.பி.எப்.ஓ. அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் தற்போது 5 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். தொழிலாளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, வங்காளதேசம், இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியாவில் இ.பி.எஃப். சந்தாதாரர்கள் விகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இது போன்ற தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்களில் 100 சதவீத உறுப்பினர்கள் உள்ளனர்.

category:

நடப்பு நிதி ஆண்டில் கயிறு பொருள்கள் ஏற்றுமதி 20% உயரும்

Posted: 17 Nov 2013 10:21 AM PST

புதுடெல்லி

நடப்பு நிதி ஆண்டில் (2013–14) கயிறு பொருள்கள் ஏற்றுமதி 20 சதவீதம் உயர்ந்து ரூ.1,200 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் இத்துறையின் ஏற்றுமதி ரூ.1,000 கோடி அளவிற்கு இருந்தது. ஏப்ரல்–அக்டோபர் மாத காலத்தில் ரூ.700 கோடிக்கு கயிறு பொருள்கள் ஏற்றுமதியாகியுள்ளன.

நமது கயிறு பொருள்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்கு 72 சதவீதமாக உள்ளது. இந்த சந்தைகளில் தேவைப்பாடு அதிகரித்து வருவதால் ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் போன்ற புதிய சந்தைகளில் இருந்தும் அதிக ஆர்டர்கள் வந்து கொண்டிருப்பது இத்துறையினருக்கு சாதகமாக உள்ளது என குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் மாதவ் லால் தெரிவித்தார்.

புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் சர்வதேச வர்த்தக கண்காட்சி நடைபெறுகிறது. அதில் கயிறு வாரியத்திற்கான அரங்கத்தை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த தகவல்களை வெளியிட்டார். இந்த கண்காட்சியில் 66–க்கும் அதிகமான நிறுவனங்கள் தமது தயாரிப்புகளை பார்வைக்கு வைத்துள்ளன. இவற்றுள் அலங்கார பொருள்கள், வீட்டு உபயோக பொருள்கள் மற்றும் ஜவுளி உள்பட ஏராளமான தயாரிப்புகள் இடம் பெற்றுள்ளன.

கயிறு தொழிலை வளர்க்கும் நோக்கத்துடன் 60 ஆண்டுகளுக்கு முன் கயிறு வாரியம் உருவாக்கப்பட்டது. ஏற்றுமதியாகும் கயிறு பொருள்களில் தரைவிரிப்புகள், மிதியடிகள், நார்கள், கயிறு, அலங்கார பொருள்கள், பைகள், உறைகள், குடைகள் மற்றும் கயிறு ஆபரணங்கள் அடங்கும்.

category:

டெல்லி தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜனதா, சிவசேனா மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

Posted: 17 Nov 2013 08:00 AM PST

புதுடெல்லி

டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தார்.

வெளி மாநிலத்தவர் மீது தாக்குதல்

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று தெற்கு டெல்லி அம்பேத்கார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், வெளி மாநிலத்தவர்கள் மீது பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சியினர் தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது–

''மராட்டியம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பா.ஜனதா, சிவசேனா கட்சியினர் உத்தர பிரதேசம் போன்ற வெளி மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டி அடிக்கிறார்கள். ஆனால், தலைநகர் டெல்லியிலோ அல்லது காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களிலோ, அனைத்து மாநில மக்களும் சகோதரர்களாக பழகி வருகிறார்கள்.

4–வது முறையாக ஷீலா தீட்சித்

முதல் மந்திரி ஷீலா தீட்சித் ஆட்சியில் டெல்லி வரலாறு காணாத வளர்ச்சி அடைந்துள்ளது. அவரை 4–வது முறையாக ஆட்சி நடத்துவதற்கு வாய்ப்பு கொடுங்கள். டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையம் உலகிலேயே இரண்டாவது சிறந்த விமான நிலையமாக கருதப்படுகிறது.

டெல்லி மாநகருக்கு நாள்தோறும் 20 லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். முன்பு மின் பற்றாக்குறை இருந்த டெல்லியில் தற்போது 24 மணிநேரமும் தாராளமாக மின்சாரம் கிடைக்கிறது. பா.ஜனதா கூட்டணி அரசை விட, காங்கிரஸ் கூட்டணி நாடு முழுவதும் கூடுதல் கட்டமைப்பு வசதி திட்டங்களை நிறைவேற்றி உள்ளது''.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

ஊழல் குற்றச்சாட்டுக்குப் பதில்

காங்கிரசுக்கு எதிராக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, அரசுக்கு எதிராக எத்தகைய கேள்விகளையும் எழுப்புவதற்கு வகை செய்யும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி இருப்பதை சுட்டிக்காட்டியதுடன், பெண்கள் உள்ளிட்ட பொது மக்களுக்கு அதிகாரங்கள் கிடைக்கச் செய்து இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

டெல்லியில் நடைபெறும் ராகுல் காந்தியின் 2–வது தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இதுவாகும். டெல்லியில் கணிசமாக உள்ள கிழக்கு உ.பி. (பூர்வாஞ்சல்) மக்களின் ஓட்டுகளை கவருவதற்காக, ராகுல் மற்றும் ஷீலா தீட்சித் குடும்பத்தினருக்கு கிழக்கு உ.பி.யுடன் உள்ள தொடர்பு குறித்தும் அவர் பேசினார்.

நீண்ட நேரம் காத்திருந்த தொண்டர்கள்

இந்த பொதுக்கூட்டத்திற்காக நேற்று காலை 10.30 மணியில் இருந்தே தொண்டர்கள் மைதானத்தில் கூடி இருந்தனர். பிற்பகல் 1.15 மணிஅளவில்தான் ராகுல் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். நீண்ட நேரம் காத்திருந்த அவர்கள் பொறுமை இழந்து எழுந்து செல்லத் தொடங்கினார்கள்.

முதல்–மந்திரி ஷீலா தீட்சித் அவர்களை சமாதானப்படுத்தி, ராகுலின் பேச்சை கேட்கும்படி கோரிக்கை விடுத்தார். தொண்டர்களுக்கு குடிதண்ணீர் வழங்கும்படியும் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
 

image: 

category:

News Group Category:

இலங்கையில் 3 நாட்கள் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு முடிவடைந்தது மனித உரிமைகள் அமலாக்கத்தை வலுப்படுத்த அழைப்பு

Posted: 17 Nov 2013 07:52 AM PST

கொழும்பு

இலங்கையில் 3 நாட்கள் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு முடிவடைந்தது. மனித உரிமைகள் அமலாக்கத்தை துரிதமாக வலுப்படுத்துவது என, மாநாட்டின் முடிவில் அழைப்பு விடுக்கப்பட்டது.

காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் 3 நாள் மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்தியா பங்கேற்பு

இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரில் 1 லட்சம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறலை கண்டித்து கனடா மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகள், இந்த மாநாட்டை புறக்கணித்தன.

தமிழகத்தில் கிளம்பிய பலத்தை எதிர்ப்பினால், பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவில்லை என்றாலும், இந்தியா சார்பில் வெளியுறவு துறை மந்திரி சல்மான்குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றார்.

இங்கிலாந்து பிரதமர்

அதே நேரத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பை மீறி, அந்த நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் மாநாட்டில் பங்கேற்றார். ஆனால், அவர் உறுதியளித்தபடி, இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து மார்ச் மாதத்திற்குள் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து வற்புறுத்தினார்.

இலங்கையின் வடக்கு மாநிலமான யாழ்ப்பாணம் சென்று தமிழர் கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசிய அவரை தமிழ் மக்கள் எழுச்சியுடன் வரவேற்று இலங்கைக்கு எதிராக பல்வேறு மனுக்களை அவரிடம் கொடுத்தனர். மாநாட்டு நிகழ்வுகளை விட, இந்த நிகழ்ச்சி உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

மனித உரிமைகள் அமலாக்கம்

இன்றுடன்  முடிவடைந்த காமன்வெல்த் மாநாட்டின் இறுதியில் 24 பக்க கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இலங்கை இறுதி கட்ட போரில் நடந்த மனித உரிமைகள் மீறல் குறித்து நேரடியாக குறிப்பிடாமல், ''மனித உரிமைகள் அமலாக்கத்தை வலுப்படுத்த துரிதமான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்'' என்று உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தின் பிரிக்க முடியாத அங்கமாக வளர்ச்சிக்கான உரிமையை அங்கீகரிப்பது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்றும், உள்நாட்டிலும் நாடுகளுக்கு இடையேயும் எந்த வடிவத்தில் பயங்கரவாதம் தலைதூக்கினாலும் அதை ஒடுக்குவதற்கு மீண்டும் உறுதி பூணுவது என்றும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

காமன்வெல்த் மாநாட்டை நடத்திய இலங்கை அதிபர் ராஜபக்சே, கூட்டறிக்கையை விளக்கி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட மாநாட்டில் கையெழுத்தான பல்வேறு ஒப்பந்தங்கள் பற்றி விவரித்தார்.
 

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™