puthiyathalaimurai.tv online |
- சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவில்லை: பயணிகள் அவதி
- திருமண உதவித் திட்டத்திற்கான வருமான வரம்பு: கருணாநிதி எதிர்ப்பு
- காமென்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- வேளாங்கன்னியில் ஆண்டுத்திருவிழா: கொட்டும் மழையில் தேர்பவனி
- மும்பையில் கார் மீது பேருந்து மோதி விபத்து: 9 பேர் பலி
- சி.ஏ.ஜி. புகாருக்கு இஸ்ரோ விளக்கம்
- யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டி: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்
- டோக்கியோவில் 2020 ஒலிம்பிக்: ஐ.ஓ.சி. வாக்கெடுப்பில் ஜப்பானுக்கு வெற்றி
- உத்தரப்பிரதேச கலவரத்தில் 9 பேர் பலி: ராணுவம் குவிப்பு
- தெலங்கானா விவகாரத்தில் மோதல்: ஐதராபாத்தில் உச்சக்கட்ட பதட்டம்
| சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவில்லை: பயணிகள் அவதி Posted: 07 Sep 2013 11:01 PM PDT விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கு வசதியாக, கூடுதல் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் சுமார் 5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. வார விடுமுறையை ஒட்டி பண்டிகை வந்ததால், ஏராளமான பொதுமக்கள், சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை முதலே புறப்பட்டுச் சென்று வருகின்றனர். ஆனால், அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் எந்தவித கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், புறநகரைச் சேர்ந்த பயணிகள் மாலை 6 மணியிலிருந்து, நள்ளிரவு 2 மணி வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர். மேலும், பேருந்துகளில் அதிகளவு கூட்டம் காணப்பட்டதால், இதனை பயன்படுத்தி தனியார் பேருந்துகளில் சாதாரண டிக்கெட் கட்டணத்தை விட 2 மடங்கு அதிகமாக வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். |
| திருமண உதவித் திட்டத்திற்கான வருமான வரம்பு: கருணாநிதி எதிர்ப்பு Posted: 07 Sep 2013 10:49 PM PDT ஏழைப் பெண்களின் திருமணத் உதவித் திட்டத்திற்கான வருமான வரம்பு முழுமையாக நீக்கப்பட்டிருக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழைப் பெண்களில் திருமண நிநியுதவி திட்டத்திற்கான வருமான வரம்பை 24 ஆயிரம் ரூபாயில் இருந்து 72 ஆயிரம் ரூபாயாக தற்போதைய அதிமுக அரசு உயர்த்தியுள்ளதை குறிப்பிட்டுள்ளார். மேலும், தமது தாயாரின் பெயரில் இருந்த அந்த திட்டத்தினை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் என அதிமுக அரசு பெயர் மாற்றம் செய்துவிட்டதாகவும் கருணாநிதி கூறியுள்ளார். கடந்த 2006- ஆம் ஆண்டுக்கு பிறகு, திமுக ஆட்சிக் காலத்தில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 756 ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டங்கள் மூலம் பயனடைந்து இருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். |
| காமென்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் Posted: 07 Sep 2013 09:24 PM PDT இலங்கையில் நடைபெற உள்ள காமென்வெல்த் மாநாட்டை கனடா புறக்கணித்தது போல் இந்தியாவும் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், இலங்கை அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. |
| வேளாங்கன்னியில் ஆண்டுத்திருவிழா: கொட்டும் மழையில் தேர்பவனி Posted: 07 Sep 2013 08:34 PM PDT நாகை மாவட்டம் வேளாங்கன்னி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனியை லட்சக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையிலும், தரிசனம் செய்தனர் வேளாங்கன்னியில் ஆண்டுத்திருவிழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பெரிய தேர்பவனி நேற்று நடைபெற்றது. 5 தேர்கள் முன் செல்ல அலங்கரிக்கபட்ட ரதத்தில் புனித ஆரோக்கிய மாதா பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் ஆம்ரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. இத்திருவிழா மாதா பிறந்தநாளான இன்றுடன் முடிவடைகிறது.
|
| மும்பையில் கார் மீது பேருந்து மோதி விபத்து: 9 பேர் பலி Posted: 07 Sep 2013 08:26 PM PDT மும்பை நாசிக் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது பேருந்து மோதிய விபத்தில், 9 பேர் உயிரிழந்தனர். மராட்டிய மாநிலம் நாசிக்கில் இருந்து சொகுசுப் பேருந்து ஒன்று மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. தானே அருகே சகாப்பூர் என்ற இடத்திற்கு அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, கார் மீது மோதியதில், காரில் பயணம் செய்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைத்துள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். |
| சி.ஏ.ஜி. புகாருக்கு இஸ்ரோ விளக்கம் Posted: 07 Sep 2013 08:18 PM PDT இந்திய அரசுக்கு சொந்தமான சுற்றுவட்டப் பாதையில் தனியார் செயற்கைக்கோளை நிலை நிறுத்த அனுமதி வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக, கணக்கு தணிக்கை குழு முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ வெளியிட்டுள்ள விளக்கத்தில், ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட ரேடியோ அலைவரிசை கட்டுப்பாடு இருப்பதாகவும், இதில், உறுப்பு நாடுகள் அல்லது அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுப் பாதைகளைப் பயன்படுத்துவது சர்வதேச நடைமுறைதான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்டெல்சாட் என்ற தனியார் செயற்கைகோளை இஸ்ரோவின் ஒருங்கிணைப்புக்கு உட்பட்ட 55-இ என்ற சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தியதன் மூலம் கே.யு. band சுற்றுப்பாதையில், இந்தியாவுக்கு கூடுதல் இடம் கிடைத்ததாகவும், இதைச் செய்யத் தவறியிருந்தால், அதன் மூலமாக கிடைக்கும் வருவாய் கிடைக்காமல் போயிருக்கும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. அண்மையில் தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையில், இஸ்ரோவின் செயல்பாடுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது. |
| யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டி: இறுதிப்போட்டியில் ஜோகோவிச் Posted: 07 Sep 2013 07:46 PM PDT யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு, செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் யு.எஸ். ஓபன் போட்டி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில், உலகின் நம்பர் 1 வீரரான நோவாக் ஜோகோவிச்சை எதிர்த்து ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரின்கா விளையாடினர். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதலாவது மற்றும் மூன்றாவது செட்டை வாவ்ரின்கா கைப்பற்றினார். இரண்டாவது மற்றும் 4ஆவது செட்டை ஜோகோவிச் கைப்பற்றினார். வெற்றியை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில், ஜோகோவிச் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அதனை தனதாக்கினார். முடிவில், 2-6, 7-6, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில், ஃப்ரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்கட்டுடன் விளையாடிய ரஃபேல் நடால், 6-4, 7-6, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற்றினார். |
| டோக்கியோவில் 2020 ஒலிம்பிக்: ஐ.ஓ.சி. வாக்கெடுப்பில் ஜப்பானுக்கு வெற்றி Posted: 07 Sep 2013 07:37 PM PDT ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. அர்ஜெண்டினாவில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில், இஸ்தான்புல் நகரை விட அதிக வாக்குகள் பெற்ற டோக்கியோ நகரம் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தும் வாய்ப்பைப் பெற்றது. அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் அதன் தலைவர் ரோக் தலைமையில் நடைபெற்றது. இதில் 2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரத்தை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், இறுதி வாய்ப்பை பெற்ற டோக்கியோ, இஸ்தான்புல் மற்றும் மேட்ரிட் நகரங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்று வாக்கெடுப்பில் மேட்ரிட் நகரம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது சுற்று வாக்குப்பதிவில், இஸ்தான்புல், டோக்கியோ இடையே கடும் நெருக்கடி காணப்பட்ட போதிலும், இறுதியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வாக்கெடுப்பு நடைபெற்ற அரங்கத்தில் இருந்த ஜப்பான் உறுப்பினர்கள் உற்சாகத்துடன் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அணு உலை விபத்து காரணமாக, 2020ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முன்னிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே விளக்கமளித்தார். கடந்த 1964ம் ஆண்டுக்குப் பின்னர், ஒலிம்பிக் போட்டிகளை 2வது முறையாக ஜப்பான் நடத்த உள்ளது. |
| உத்தரப்பிரதேச கலவரத்தில் 9 பேர் பலி: ராணுவம் குவிப்பு Posted: 07 Sep 2013 07:13 PM PDT உத்தரபிரதேச மாநிலம் முஸாஃபர்நகர் மாவட்டத்தில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் பலியாகியுள்ளனர். வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இச்சம்பவதிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அமைதிகாக்கும் படி கேட்டுக் கொண்டார். கலவர பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி முஸாஃபர்நகர் மாவட்டத்திற்குட்பட்ட கவால் என்ற கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. |
| தெலங்கானா விவகாரத்தில் மோதல்: ஐதராபாத்தில் உச்சக்கட்ட பதட்டம் Posted: 07 Sep 2013 07:05 PM PDT ஐதராபாத்தில் தெலங்கானா ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களும் மோதலில் ஈடுபட்டதால் பதட்டம் உருவாகியுள்ளது. தனி தெலங்கானா மாநில உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், பொதுமக்கள் ஐதராபாத்தில் ஊர்வலம் நடத்தினர். அதேநேரத்தில் தெலங்கானா கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பாக முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் ஆங்காங்கே தனி மாநிலத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இதற்கிடையே ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி லால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் போராட்டம் நடத்தச் சென்றவர்கள் மீது தெலங்கானா ஆதரவு கல்லூரி மாணவர்கள் கல்வீச்சுத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் தெலங்கானா ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. ஐதராபாத்தில் தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரித்தும் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கியிருப்பதால் பதட்டமான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்க ஐதராபாத் நகரம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |