Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


சமுதாய சிற்பி: அடுத்த தலைமுறைக்காக.. ஓய்வூதியப் பணத்தில் உருவானது…

Posted: 06 Sep 2013 11:02 PM PDT


சேவைகள் பலவிதம். அதில், செய்யும் செயல் காலங்களைக் கடந்து நிற்க வேண்டுமென்ற நோக்கில், அடுத்த தலைமுறையினருக்கும் பயன்படும் வகையில் பணியாற்றும் தம்பதியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஓய்வூதியப் பணத்தில் உருவானது

ஒரு சமூகத்தை அறிவுசார்ந்த சமூகமாக மாற்ற, தங்களது ஓய்வூதியப் பணப் பயன்களைக் கொண்டு ஞானாலயா எனும் நூலகத்தை உருவாக்கியவர்கள் புதுக்கோட்டை கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதி. இங்குள்ளவை அனைத்தும், கிடைப்பதற்கரியவை. பண்டைய நூல்கள் முதல் சமகால புத்தகங்கள் வரை இங்கு உண்டு. இதில் பெரும்பாலானவை முதல் பதிப்பு நூல்கள்.

அள்ள அள்ள குறையா செல்வம்

கடந்த 25 ஆண்டுகளில் 85 ஆயிரம் நூல்கள், 1,500 சிற்றிதழ்கள் எனப் பரந்து விரிந்திருக்கிறது இந்த ஞானாலயா. அள்ளி அள்ளிப் பருகினாலும் குறையாத அறிவுச் செல்வத்தை வழங்க, இவர்கள் எவ்வித கட்டணமும் பெறுவதில்லை.

சமூகத்தைக் கட்டமைக்கும் நூலகங்கள்

நூல்களே சமூகத்தைக் கட்டமைக்கின்றன என்பதால், இந்த தலைமுறை மட்டுமின்றி, அடுத்த தலைமுறையினருக்கும் இதைக் கொண்டு சேர்க்கும் அக்கறையும் இவர்களுக்கு உண்டு.

அறிவுசார் நாகரீகத்தின் சாளரங்கள்

நூல்களே, அறிவுசார் நாகரீகத்தின் சாளரங்கள். இந்த சமூகத்தை அறிவுசார் நாகரீகச் சமூகமாக்கத் தங்களால் இயன்ற வழியில் பாடுபடும் கிருஷ்ணமூர்த்தி- டோரதி தம்பதி சமுதாயச் சிற்பியே.

அதிர்ச்சிகர தகவல்: நக்சல் அமைப்பில் குழந்தைகள் சேர்ப்பு

Posted: 06 Sep 2013 10:01 PM PDT


நக்சலைட்டு அமைப்பை பலப்படுத்த சமீபத்தில் 4 ஆயிரம் குழந்தைகள் அந்த இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

நக்சல் அமைப்புள்ள சட்டிஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில்அதிக அளவு குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

10 வயது அதற்கும் குறைவாக உள்ள சிறுவர்களும், 15 வயது சிறுமிகளும் அதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக சிறுவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நக்சலைட்டுகளுக்கு சமையல் பணிக்காக சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மே, ஜூன், ஜூலை மாதங்களில் நக்சலைட்டுகள் நடத்திய 285 தாக்குதலில் 117 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சட்டிஸ்கரில் 47 பேரும் ஜார்கண்டில் 37 பேரும் பிகாரில் 15 பேரும் நக்சலைட்டுகளால் உயிரிழந்துள்ளனர்.

சிரியா விவகாரம்: ஒபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி

Posted: 06 Sep 2013 09:29 PM PDT


சிரியா மீது தாக்குதல் நடத்த ஆய்த்தமாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் செயல்களை கண்டித்து ஏமன் நாட்டில் பிரமாண்ட எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.

சிரியா மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான மசோதாவுக்கு அமெரிக்க செனட் அவையின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, இந்த மசோதா, அடுத்தவாரம் முழு செனட் அவையின் வாக்கெடுப்புக்கு வர இருக்கிறது. இதனால் சிரியாவை தாக்குவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தீவிரமாக்கி உள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிரிய அதிபர் பஷீருக்கு ஆதரவாகவும் ஏமன் தலைநகர் சானாவில் ஏராளமானோர் கலந்து கொண்ட எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. அப்போது அமெரிக்காவை கண்டிக்கும் பதாகைகள் மற்றும் கோஷங்கள் எழுப்பியபடி ஆர்பாட்டக்காரர்கள் சென்றனர்.

இத்தாலி க்ராண்ட் ப்ரி கார் பந்தயம்: இன்று தகுதிச்சுற்று போட்டிகள்

Posted: 06 Sep 2013 09:20 PM PDT


இத்தாலி க்ராண்ட் ப்ரி பார்முலா ஒன் கார் பந்தயப் பயிற்சி போட்டியில், நடப்பு உலக சாம்பியன் செபாஸ்டியான் முதல் இடத்தை பிடித்தார்.

மான்சா நகரில் நடைபெற்ற இந்த பயிற்சிப் போட்டியில் உலகின் முன்னணி வீரர்களின் கார்கள் மைதானத்தில் சீறிப்பாய்ந்தது. அப்போது வளைவு நெளிவான பாதையில், வீரர்களின் கார்கள் ஒருவரையொருவர் முந்தி சென்ற காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த பயிற்சி போட்டியில் நடப்பு மூன்று தொடர்களில், ஹாட்ரிக் சாம்பியன் வென்றுள்ள ரெட் புல் அணி வீரரான ஜெர்மனியின் செபாஸ்டியான் முதல் இடத்தை பிடித்தார். இரண்டாவது இடம் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வெப்பருக்கும், 3-வது இடத்தை பெர்னாண்டோ அலோன்சோவும் பிடித்தனர். மான்சா நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் பிரதானசுற்று நாளை நடைபெறுகிறது. முன்னதாக தகுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெறுகிறது.

2013-ஆம் ஆண்டிற்கான க்ராண்ட் ஃப்ரீ கார்பந்தய முதல் சுற்றுப்போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நகரில் தொடங்கியது. பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் 20-வது சுற்றுடன் இந்த சர்வதேச கார்பந்தயம் நிறைவடைய உள்ளது.

இந்த தொடரின் 17-வது சுற்று கார்பந்தயம், இந்தியாவின் டெல்லி அருகேயுள்ள நொய்டா மைதானத்தில் நடைபெற உள்ளது.

உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று : ஜோர்டான்- உஸ்பெகிஸ்தான் ஆட்டம் டிராவானது

Posted: 06 Sep 2013 09:09 PM PDT


ஜோர்டான்- உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை தகுதிச்சுற்று கால்பந்து போட்டி டிராவில் முடிவடைந்தது.

ஜோர்டான் தலைநகர் அமானில் நடைபெற்ற இந்த போட்டியை காண்பதற்கு, அந்நாட்டு அரசர் அலி- பின்- உசைன், ஃபிபா தலைவர் ஜோசப் பிளேடர் உள்ளிட்ட ஏராளமான பார்வையாளர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர். ஆட்டத்தின் முதல் பாதியின் 30 நிமிடத்தில், ஜோர்டான் வீரர்கள் முதல் கோல் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தனர். இதற்கு பதிலடியாக 2-வது பாதியில், உஸ்பெகிஸ்தான் அணி அபாரமாக கோல் அடித்தது. பின்னர் இறுதிவரை இரு அணியினரும், மேலும் கோல் அடிக்காததால், போட்டி டிராவில் முடிந்தது.

உலக கோப்பை கால்பந்து தொடர், வரும் 2014-ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற உள்ளது. இதில் ஆசிய பிரிவில் கலந்து கொள்ளும் அணிகளுக்கான ப்ளே ஃஆப் தகுதிச்சுற்று போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

2020ம் ஒலிம்பிக்: மல்யுத்தத்துக்கு ஆதராவாக பல்கேரியா

Posted: 06 Sep 2013 09:02 PM PDT


2020ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் இருந்து மல்யுத்தப் போட்டியை நீக்கும் முடிவுக்கு எதிராக பல்கேரியா நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்கேரிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அனைத்து உறுப்பினர்களும் அரசின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சம்மேளனம், வரும் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்தத்தை நீக்கும் முடிவுக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகமும் ஒலிம்பிக் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்திய பாராலிம்பிக் கமிட்டிக்கு அங்கீகாரம்

Posted: 06 Sep 2013 08:57 PM PDT


இந்திய பாராலிம்பிக் கமிட்டிக்கு ஆசிய பாராலிம்பிக்கிடமிருந்து அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதனால் இந்திய பாராலிம்பிக் வீரர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற வாய்ப்புள்ளது என இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராவ் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனில் உள்ள சர்வதேச பாராலிம்பிக் கமிட்டிக்கு இந்த அங்கீகாரம் தொடர்பான ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மே மாதம் இந்திய கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்திய பாராலிம்பிக் கமிட்டி கலைக்கப்பட்டது. இந்நிலையில் மே 26ம் தேதி புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

தெற்காசிய கால்பந்து தொடர்: அரையிறுதியில் இந்தியா- மாலத்தீவு மோதல்

Posted: 06 Sep 2013 08:24 PM PDT


தெற்காசிய கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்த்து மாலத்தீவு அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

நேற்று நடைபெற்ற பி பிரிவுக்கான கடைசி லீக் போட்டியில் மாலத்தீவு அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில், கடைசி வரை போராடியும் இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

இதனால் அரையிறுதி போட்டி டிராவில் முடிவடைந்தது. இதன்மூலம் மாலத்தீவு அணி அரையிறுதி சுற்றுக்குக் முன்னேறியது. இந்தியா, மாலத்தீவு அணிகள் இதுவரை 4 முறை விளையாடியுள்ளன. அதில் இந்தியா 3 முறையும், மாலத்தீவு ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் நேபாளம்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பின்னர் நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரையிறுதிப்போட்டியில், இந்திய- மாலத்தீவு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனைத்தொடர்ந்து வரும் 11-ஆம் தேதி தெற்காசிய கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

மாலத்தீவில் இன்று அதிபர் தேர்தல்

Posted: 06 Sep 2013 08:19 PM PDT


மாலத்தீவு புதிய அதிபரை தேர்வு செய்ய இன்று அந்நாட்டு மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தலில் மாலத்தீவின் ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை காப்பதே முக்கிய சவாலாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கு முன்னதாக அதிபராக இருந்த நஷீத் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிறகு போராட்டங்கள், வன்முறை என பல்வேறு சம்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அதனைத் தொடர்ந்து சுமார் 20 மாதங்களுக்கு பிறகு தற்போது தேர்தல் நடைபெறுகிறது. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரான முகமது நஷீத், கடந்த 2012ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் அதனை ராணுவ நடவடிக்கை என கூறினர். அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் காரணமாக மாலத்தீவில் நிலையற்ற தன்மை உருவானது.

தேர்தல் ஜனநாயக ரீதியாகவும், சுதந்தரமாகவும் நடக்குமேயானால் மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தமக்கு எந்த சந்தேகமும் இல்லை என நஷீத் முழங்கி வருகிறார். நஷீத் வெளியேறிய பிறகு முகமது வஹீத் ஹாசன் மாணிக்கும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஆஸ்திரேலியாவில் இன்று தேர்தல்

Posted: 06 Sep 2013 08:14 PM PDT


ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தலுக்கு முன்பான கருத்துக் கணிப்புகளில் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த டோனி ஏபெட் முன்னனி வகித்து வருகிறார்.

ஏபெட்டின் கூட்டணிக்கு 53 சதவிகிதம் ஆதரவும், ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 47 சதவிகித ஆதரவும் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், பொருளாதாரம், அகதிகள் குடியேற்றக் கொள்கை மற்றும் கார்பன் வரி உள்ளிட்டவைகளே தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

கட்டாய வாக்களிப்பு சட்டம் அமலில் உள்ளதால் 1 கோடியே 40 லட்சம் பேர் இன்றைய தேர்தலில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™