Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


கச்சத்தீவு விவகாரம்: மத்திய அரசு என்ன சொல்கிறது?!

Posted: 02 Sep 2013 11:14 PM PDT


கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம், நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இதில் சுவையான தகவல், மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்தப் பிரமாண பத்திரத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தாக்கல் செய்துவிட்டது என்பதுதான். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த 2008 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு எதிர்மனுதாரர்களான கேபினட் செயலர் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் செயலர் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவி்ட்டிருந்தது. இதில் வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. இந்த பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட செய்தியே, கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தபோதுதான் வெளிவந்தது.

 

மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தே, இந்தியா, இலங்கை இடையே கச்சத்தீவு குறித்த எல்லை தொடர்பான தெளிவான வரையறை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள் யாரும் வாழாத தீவான கச்சத்தீவை, இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுமே பயன்படுத்தியது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கச்சத்தீவு குறித்த, பல்வேறு தகவல்கள், ஆவணங்கள், இந்தியாவிடம் இருந்த கோப்புகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்த கோப்புகள் ஆகியவை அட்டர்னி ஜெனரலால் ஆராயப்பட்டது என்றும், அதன் அடிப்படையில், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்றும், அத்தீவில் இந்தியாவுக்கு எந்த இறையாண்மையும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டதாக பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 1974 ஆம் ஆண்டு எல்லை வரையறுக்கப்பட்டது. அப்போது இயல்பாகவே இலங்கையின் எல்லைக்கு உட்பட்டு கச்சத்தீவு வந்துவிட்டது.

 

அது இந்தியாவின் பகுதியாகவே இல்லை. ஒப்பந்தப்படி அவர்களின் எல்லைக்குள் வந்துவிட்டது. கச்சத்தீவு இந்தியாவின் பகுதி என்பது தவறு என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. ராமநாதபுரம் ஜமீன், சென்னை மாகாணத்தின் அங்கமாக மாறிவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் கொடுத்த ஆவணங்கள், குத்தகை விவரங்கள், புத்தகங்கள் எதுவும் கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தம் என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் இல்லை என்று மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது. எனவே, கச்சத்தீவைத் தாரை வார்த்துவிட்டோம் என்ற கேள்வியே எழவில்லை என்றும் மத்திய அரசு கூறி இருக்கிறது

 

மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் : மேலும், 1974 ஒப்பந்தம் ஏற்பட்ட பின், 32 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு கச்சத்தீவு குறித்து வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும், எனவே இதனை மக்கள் நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டதாக நினைக்க முடியவில்லை என்றும் மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

 

தீவும்… சர்ச்சைகளும்…….

 

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த அறிக்கை தொடர்பாக, 3 வாரங்களில் முதல்வர் ஜெயலலிதா பதில் மனு தாக்கல் செய்ய இருக்கிறார். இதே விவாகரத்தில், திமுக தலைவர் கருணாநிதி தாக்கல் செய்திருக்கும் வழக்கில் மத்திய அரசு என்ன நிலையை எடுக்கப் போகிறது என்பதும் இன்னும் சில நாள்களில் தெளிவாகும்.

 

1974 ஒப்பந்தம் சொல்வது என்ன?

 
எழுபதுகளின் மையப்பகுதியில், இந்தியாவும் இலங்கையும் தங்கள் கடல் எல்லைகளை வகுத்துக்கொள்வதற்காக இரண்டு ஒப்பந்தங்களை செய்து கொண்டன. இதில் 1974 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலமே கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கூறுவது என்ன? இதில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் என்ன?

 

பாக் ஜலசந்தி…. வரலாற்று ரீதியாக இந்திய இலங்கை மீனவர்கள் நட்புறவுடன் தொழில் செய்து வந்த கடல் பரப்பு… 1974 ஆம் ஆண்டு இந்தியா இலங்கையிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் இந்த கடல்பரப்பை இரண்டாக பிரித்ததுடன் கச்சத் தீவுவையும் இலங்கைக்கு சொந்தமாக்கியது.இது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் இரு மீனவர்களிடமும் கருத்து கேட்கப்படவில்லை.

“மீடியன் முறை பின்பற்றப்படவில்லை” : வடக்கே பாக் நீரிணைப்பு தொடங்கி, தெற்கே ஆதம் பாலம் வரையிலான கடல் பரப்பில் எல்லையை பிரிப்பதற்காக இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. மீடியன் என்ற முறையை பின்பற்றி கடல் எல்லையை வகுத்துக் கொள்ளலாம் என இரு நாடுகளும் முடிவு செய்தன. அதாவது இரு நாட்டிற்கும் இடையே உள்ள மொத்த தொலைவு கணக்கிடப்பட்டு அதில் பாதி தொலைவு கடல் எல்லையாக குறிக்கப்பட வேண்டும். இதனடிப்படையிலேயே, பாக் நீணைப்பு தொடங்கி ஆதம் பாலம் வரை எல்லைக் கோடு வரையப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், கச்சத் தீவு அருகே எல்லைக் கோடு வரையும் போது, மீடியன் முறை பின்பற்றப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகின்றது.

 

இலங்கை வசம் சென்ற கச்சத்தீவு : மீடியன் முறை முழுமையாக கடைபிடிக்கப்பட்டிருந்தால் கச்சத்தீவை நாம் இழந்திருக்க மாட்டோம் என்று கூறுகின்றனர் வல்லுனர்கள்…. எல்லைக் கோடு இலங்கைக்கு சார்பாக வளைக்கப்பட்டது.கச்சத்தீவு இலங்கையின் வசம் சென்றது. கச்சத்தீவு கைவிட்டுப் போனாலும், அதன் மீதான தமிழக மீனவர்களின் உரிமை தொடரும் வகையில் ஒப்பந்தத்தில் சில முக்கியமான ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன.

 

முக்கிய ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன

 

இந்திய மீனவர்களும், பக்தர்களும் பாரம்பரியமாக கச்சத்தீவுக்கு வருகை தந்ததைப்போல் இனியும் வரலாம். அதற்கு இலங்கை அரசிடமிருந்து எந்த வித அனுமதியையும் அவர்கள் பெறத் தேவையில்லை… என்று ஷரத்து ஐந்து கூறுகின்றது.

 

ஷரத்து ஆறு, இரு நாட்டு படகுகளும் மற்ற நாட்டின் கடல் பரப்பை இதுநாள் வரை பயன்படுத்தி வந்ததைப்போலவே பயன்படுத்திக் கொள்ளலாம்…. என்று கூறுகின்றது.

 

“கச்சத்தீவை தமிழக மீனவர்கள் பயன்படுத்தலாம்” : ஆகவே, பாக்ஜலசந்தியில் எல்லை பரிக்கப்பட்டிருந்தாலும், ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள ஷரத்துக்களின் அடிப்படையில், இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிக்கவும், தமிழக மீனவர்கள் கச்சத்தீவை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு பிறகு இரண்டு ஆண்டு கழித்து இந்தியா இலங்கையிடையே மீண்டும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் கூறுவது என்ன? இதை இலங்கை எவ்வாறு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது என்பதை பார்ப்போம்.

 

பாக் நீரிணைப்பில் பாகப்பிரிவினை முடிந்த பிறகும், இந்தியா இலங்கைக்கு இடையே, மேலும் இரண்டு கடல் பரப்புகள் எல்லை குறிக்கப்படாமல் இருந்தன. இதைதொடர்ந்து 1976 ஆம் ஆண்டு இந்தியா இலங்கையிடையே மீண்டும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இம்முறை வடக்கே வங்காள விரிகுடாவிலும், தெற்கே மன்னார் வளைகுடாவிலும் எல்லைக் கோடு வரையப்பட்டது.

 

இந்த ஒப்பந்தத்தில் மீனவர்கள் குறித்து எந்த விதமான தகவலும் இடம்பெறவில்லை… ஆனால், ஒப்பந்தத்தை தொடர்ந்து இரு நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்களும், தங்களுக்குள் பரிமாறிக் கொண்ட கடிதத்தில், மீனவர்கள் மீது கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன…

இந்த கடிதம் வங்காள விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா கடல் பரப்புகளில் இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடை செய்தாலும் இந்த கட்டுப்பாடு எந்த வகையிலும் பாக்ஜலசந்திக்கு பொருந்தாது என்பது வெளிப்படையான உண்மை. ஆனால், இலங்கை அரசோ, பாக்ஜலசந்தியில் எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்கு கொடுக்கப்பட்ட உரிமையை இந்த கடிதத்தை காரணம் காட்டி மறுத்து வருகின்றது.

 

இது நாள் வரை சுட்டுக் கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட, கைது செய்யப்பட்ட 99 விழுக்காட்டினர் பாக்ஜலசந்தியில் அமைந்துள்ள ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாருர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் என்பது சோகம் தரும் செய்தி.

 

76 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை பயன்படுத்தி, 74 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட உரிமைகளை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றது. இந்நிலையில் கச்சத் தீவு குறித்து தற்போது, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம், இலங்கையின் வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

பாக் நீரிணையில் அமைந்துள்ள ஆள் நடமாட்டம் இல்லாத, மனிதர்கள் வாழத் தகுதியில்லாத, ஒரு சிறிய நிலப்பரப்புதான் கச்சத் தீவு. தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு மையப்புள்ளியாக விளங்கும் இந்த நிலப்பரப்பு இலங்கைக்கு ஏன் வழங்கப்பட்டது? எவ்வாறு வழங்கப்பட்டது ?

 
வெளியுறவுக் கொள்கையில் உருவான மாற்றம்

 

1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய ராணுவம் பங்களாதேஷ் என்ற புதிய தேசத்தை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றம் உருவானது.உள்நாட்டில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்கவும், தனது அரசியல் எதிர்காலத்தை பாதுகாக்கவும், இலங்கை அதிபர் பண்டாரநாயக்கா, இந்திரா காந்தியின் உதவியை நாடினார்.

 

பண்டாரநாயக்காவின் வேண்டுகோளுக்கிணங்க, 1974 ஆம் ஆண்டு இந்தியா இலங்கையிடைய ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

அதனடிப்படையில், கச்சத் தீவு என்ற இந்திய நிலப்பரப்பு இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டது.குறைந்த பட்சம் உரிய நேரத்தில் நீதிமன்றத்தை நாடியிருந்தால் கூட, கச்சத் தீவை நாம் இழந்திருக்க மாட்டோம் என்று கூறுகின்றனர் சில அரசியல் விமர்சகர்கள்.

மேட்டூர் புதிய அனல் மின் நிலையம் நள்ளிரவு முதல் இயக்கம்

Posted: 02 Sep 2013 09:03 PM PDT


சேலம் மாவட்டம் மேட்டூரில், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் நேற்று நள்ளிரவு முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. மேட்டூரில் ஏற்கனவே தலா 210 மெ.வா., உற்பத்தி திறன் கொண்ட 4 அனல் மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

 

இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு, 600 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கின, கட்டுமானப் பணிகள் 100% முடியவில்லை என்றாலும், இயந்திரப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில், பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு நள்ளிரவு முதல் அனல் மின் நிலையம் இயங்கத் தொடங்கியது.

 

3500 கோடி ரூபாய் செலவில் இந்த புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எண்ணெய் கொண்டு, இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன. இதில் பிரச்னை இல்லை என்றால், நிலக்கரி செலுத்தப்பட்டு அழுத்தம் அதிகரிக்கப்படும். இதனைத் தொடர்ந்து இன்று மாலை மின் உற்பத்தி தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செங்கல் விலை குறைவு

Posted: 02 Sep 2013 09:01 PM PDT


விலைவாசி உயர்வால் வீடு மற்றும் வர்த்தக கட்டிடங்கள் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால், கட்டுமானத் துறையில் வளர்ச்சி தடைபட்டுள்ளது.

 

கட்டுமானப் பொருட்களின் தேவையும் குறைந்து வரும் நிலையில், செங்கல் விலை குறைந்து வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட சூளை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

போச்சம்பள்ளி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்படுகின்றன. அங்கு வாங்க ஆளின்றி செங்கல்கள் தேங்கிக் கிடப்பதால், 6 ரூபாய் வரை விற்ற ஒரு செங்கல்லின் விலை, இப்போது 3 ரூபாயாக சரிவு கண்டுள்ளது.

ஏ.சி.மிலன் அணியில் மீண்டும் காகா

Posted: 02 Sep 2013 08:47 PM PDT


பிரேசில் கால்பந்து அணியின் மத்திய கள வீரர் காகா இத்தாலியின் ஏ.சி.மிலன் கால்பந்து க்ளப் அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.

 

4 ஆண்டுகளாக ரியல் மேட்ரிட் அணிக்காக விளையாடிய அவரது ஆட்டமுறை பயனளிக்காததால் இந்த புதிய முடிவுக்கு அனுபவ வீரர் காகா வந்துள்ளதாக பிரேசில் பத்திரிக்கைகள் கட்டுரை எழுதியுள்ளன. அதிரடி வீரர் காகாவின் வருகை, தங்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று ஏ.சி.மில்லனின் துணை தலைவர் அட்ரியானோ கலியாணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக மிலன் நகர் வந்தடைந்த காகாவிற்கு ரசிகர்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் உற்சாக வரவேற்பு அளித்தன. இதனிடையே 2014-ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து தொடரில் விளையாட சொந்த அணியில் இடம் பிடித்துள்ள அனுபவ வீரர் காகா, தன்னுடைய திறமையை மெருகேத்தும் வகையில் ஏ.சி.மிலனில் விளையாடுவார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இளம் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் இன்று ஆலோசனை

Posted: 02 Sep 2013 08:38 PM PDT


இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் மீது கடும் விமர்சனங்களை கூறிய இளம் வீரர்கள் மூவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

 

உலக குத்துச்சண்டை போட்டிக்கு சிபாரிசின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அண்மையில் தினேஷ்குமார், தில்பாங் சிங், ப்ரவீன் குமார் ஆகிய மூன்று இந்திய குத்துச்சண்டை வீரர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் உண்டாயின.

 

இதில் அடிப்படை உண்மைகள் இல்லை என்று இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் அறிவுறுத்தியது. இந்நிலையில் புகார்கள் கூறிய வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் முடிவெடுத்துள்ளது. இதற்காக குத்துச்சண்டை சம்மேளனத்தின் துணை தலைவர் ஐ.டி.நானாவதி உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழு இன்று பாட்டியாலாவில் கூடுகிறது.

நாடு திரும்பியது இந்திய ஹாக்கி அணி

Posted: 02 Sep 2013 08:31 PM PDT


மலேசியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் 2 ஆவது இடம்பிடித்த இந்திய அணி நேற்றிரவு டெல்லி திரும்பியது.

 

இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த வீரர்களை வரவேற்க குறைந்த எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் வந்திருந்தனர். ஹாக்கி இந்தியா அமைப்பைச் சேர்ந்த எவரும் விமான நிலையத்திற்கு வரவில்லை.

 

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3 – க்கு 4 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணியிடம் தோல்வியடைந்து கோப்பையை நழுவவிட்டது.

மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் சோனியாகாந்தி

Posted: 02 Sep 2013 08:24 PM PDT


உடல் பரிசோதனை மேற்கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

 

அவருடன், அவரது மகள் பிரியங்காவும் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2011ம் ஆண்டு சோனியா காந்தி, அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

 

இதனைத் தொடர்ந்து இரண்டு முறை அமெரிக்கா சென்று சோனியாகாந்தி உடல் பரிசோதனை செய்து கொண்டார். இந்நிலையில், உணவு பாதுகாப்பு சட்டம் தொடர்பாக மக்களவையில் நடந்த விவாத்தின் போது இருமல், நெஞ்சு வலி காரணமாக கூட்டத்தில் இருந்து வெளியேறி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இந்தியா-ஜப்பான் இன்று பேச்சுவார்த்தை

Posted: 02 Sep 2013 08:20 PM PDT


இந்தியா ஜப்பான் இடையே அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை டோக்கியோவில் இன்று மீண்டும் தொடங்குகிறது.

 

கடந்த 2010ல் தொடங்கிய பேச்சுவார்த்தை புக்குஷிமாவில் நிகழ்ந்த அணுவிபத்துக்கு பிறகு கிடப்பில் போடப்பட்டிருந்தது. நான்கு மாதங்களுக்கு முன் பிரதமர் மன்மோகன் சிங், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்த போது பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது.

 

இந்த பேச்சுவார்த்தையில் இந்திய குழுவை வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் கெளதம் பேம்பேவாலே வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உயர் அலுவலர்களும் அணுசக்தித் துறை அலுவலர்களும் இடம்பெறுவார்கள்.

 

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால்தான் இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும் என்று சொல்லிவந்த ஜப்பான் தற்போது தனது நிலைபாட்டை தளர்த்திக்கொண்டிருப்பதாக தெரிகிறது.

 

இதனால் இரு நாடுகளுக்கு இடையில் அணுசக்தி தொடர்பாக விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊருக்குள் படைஎடுக்கும் பாம்புகள்: அச்சத்தில் கிராம மக்கள்

Posted: 02 Sep 2013 06:59 PM PDT


மேலூர் அருகே அழகுநாச்சிபுரம் கிராமத்திற்குள் தொடர்ந்து மலைப்பாம்புகள் புகுந்து வருவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த அழகுநாச்சிபுரத்தில், அன்பு எழில் வீட்டிற்குள் நேற்று 12 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட பாம்பு பின்னர் வெள்ளிமலைப் பகுதியில் விடப்பட்டது. இந்தப் பகுதியில் பிடிபட்ட 4- வது மலைப்பாம்பு இதுவாகும்.

 

அதுபோல்,மேலுரையடுத்து கொட்டாம்பட்டி கிராமத்திற்குள்ளும் இதுவரை 9 மலைப்பாம்புகள் பிடிபட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பருவநிலை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக மலைப்பகுதிகளில் போதிய இரை கிடைக்காத காரணத்தினால் மலைப்பாம்புகள் ஊருக்குள் புகுந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

Posted: 02 Sep 2013 06:54 PM PDT


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படைகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளன.

 

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இரண்டு இடங்களில் பாகி்ஸ்தான் படைகள் சிறிய ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியப் படைகளும் தாக்குதல் நடத்தின. இதில் இரு தரப்பிலும் சேதம் எதுவும் இல்லை என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

 

கடந்த 3 நாட்களாக எவ்வித தாக்குதலும் நடத்தாமல் இருந்து வந்த பாகிஸ்தான் மீண்டு்ம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™