Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


சென்னை துறைமுகத்தில் கடத்தல்: 7 பேர் சிறையில் அடைப்பு

Posted: 11 Sep 2013 11:05 PM PDT


சென்னை துறைமுகத்தில் இருந்து நான்கரை கோடி ரூபாய் மதிப்புள்ள கணினிப் பொருட்கள் கடத்தப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 4 ஆம் தேதி சென்னை துறைமுகத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் கணினி உதிரி பாகங்கள், கன்டெய்னர் லாரி மூலம் மாதவரத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது கடத்தப்பட்டது.

ஆந்திராவை பிரிக்க தொடர்ந்து எதிர்ப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 11 Sep 2013 10:59 PM PDT


தனித் தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் போராட்டம் வலுத்து வருகிறது.

ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறுத்தி இந்த பகுதிகளில் உண்ணாவிரதம், மனிதசங்கிலி போராட்டம், சைக்கிள் பேரணி என தொடர்ந்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக கிருஷ்ணா மாவட்டத்தில் நடைபெற்று வரும் தீவிர போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விஜயவாடா நகரத்தில் வர்த்தக நிறுவனங்கள் மூடி கிடப்பதோடு பெரும்பாலான அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. ஹைதராபாத் நகரில் ஆந்திரத் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் ஒரு பகுதியினர் ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுபோல் ஆந்திர மாநில போக்குவரத்து கழக ஊழியர்களும் ஒருங்கிணைந்த ஆந்திரத்துக்காக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னையில் மழை: மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு

Posted: 11 Sep 2013 10:54 PM PDT


வங்கக் கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் பரவலாக கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை, பகலில் வானம் மேக மூட்‌டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு‌ உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் நள்ளிரவு முதல் ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. திருவொற்றியூர் இராஜாஜி நகரில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதே போல், கிண்டி, வடபழனி, தி.நகர் போன்ற முக்கிய இடங்களிலும் சாலைகளில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் போது மக்கள் பிரச்சணைகளை சந்தித்து வருகின்றார்கள்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னை பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய, ஐயப்பன்தாங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டு, தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

சேலம்: அடிப்படை வசதிகள் செய்துதர மக்கள் கோரிக்கை

Posted: 11 Sep 2013 10:51 PM PDT


சேலம் மாவட்டம் கவர்கல்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதராவிட்டால் ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். கவர்கல்பட்டியில், குடிநீர் வசதி, சாலை வசதி போன்றவற்றை செய்துதருமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக
கூறப்படுகிறது. இதையடுத்து, தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

திருவாரூர் பல்கலைக்கழகத்தில் ஊடக தொடர்பியல் துறை தொடக்கம்

Posted: 11 Sep 2013 10:40 PM PDT


திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் ஊடக தொடர்பியல் துறை தொடங்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் சஞ்சய் தலைமையில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மத்திய பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஊடக தொடர்பியல் துறை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாமக்கல்லில் சிறுமிக்கு வன்கொடுமை: பேருந்து ஊழியர் கைது

Posted: 11 Sep 2013 10:30 PM PDT


நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியை வன்கொடுமைச் செய்ததாக பேருந்து கிளினராக பணிபுரிந்து வந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டுக்கு அழுகையுடன் திரும்பிய சிறுமியிடம் விசாரித்த போது, பிரபாகரன் விளையாட அழைத்துச் சென்று வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கரூரில் பாரதியார் படத்திற்கு மாணவர்கள் மலரஞ்சலி

Posted: 11 Sep 2013 10:23 PM PDT


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாணவ- மாணவியர் பாரதியாரின் பாடல்களை பாடி அவரை நினைவுகூர்ந்தனர். பாரதியார் குறித்த பேச்சுப்போட்டியில் வீர முழக்கத்தோடு மாணவர்கள் பேசியதை மற்ற மாணவர்கள் பார்த்து ரசித்தனர்.

கடலூரில் ஆட்சியர் தலைமையில் மனுநீதி முகாம்

Posted: 11 Sep 2013 10:11 PM PDT


கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனுநீதி முகாம் நடைபெற்றது. அப்போது, மதுக்கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு கொடுத்த ஊராட்சித் தலைவர் ஜெகன், மது இல்லாத பகுதியாக தங்களது கிராமத்தை உருவாக்க இருப்பதாக கூறினார்.

வடக்குத்து கிராமத்தில் மனுநீதிமுகாம் தவிர, சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம் உள்ளிட்டவை நடைபெற்றன. மேலும் வருவாய்த்துறை சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

ஏற்காடு மலையில் சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் சிற்றருவிகள்

Posted: 11 Sep 2013 10:01 PM PDT


சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் உருவாகியுள்ள சிற்றருவிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றன. கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக இந்த அருவிகள் உருவாகியுள்ளன. மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதால் அங்குள்ள சிற்றருவிகளில் சுற்றுலாப்
பயணிகள் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

‘ரூபாய் தாள்களை மதிக்க வேண்டும்’: மக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை

Posted: 11 Sep 2013 08:32 PM PDT


ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிவிக்க வேண்டாம் என பொதுமக்களை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, பந்தல்களை அலங்கரிக்கவும், சுவாமி சிலைகளுக்கு மாலையாக அணிவிக்கவும் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.

மேலும் கலை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்களில் ரூபாய் தாள்களை வீசி எறிய வேண்டாம் எனவும் அறிவுறுத்திய ரிசர்வ் வங்கி, அவ்வாறு பயன்படுத்தினால் ரூபாய் தாள்கள் சேதமடைந்து அதன் ஆயுள்காலம் குறையும் என தெரிவித்துளது.

ரூபாய் தாள்களை தவறாகப் பயன்படுத்தாமல் அதனை மதிக்க வேண்டும் என நாட்டு மக்களை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

ரூபாய் நோட்டுகளை பாதுகாக்க ரிசர்வ் வங்கி அறிவறுத்தினாலும், இதுதொடர்பான தவறுகளைத் தடுக்க நம் நாட்டில் முறையான சட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™