Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


நிலத்தடி நீரில் எண்ணெய்க் கசிவு கலப்பு: ஆகஸ்ட் 21-க்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted: 05 Aug 2013 11:14 PM PDT


சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் நிலத்தடி நீருடன் எண்ணெய்க் கசிவு கலந்தது தொடர்பான வழக்கு விசாரணையை, ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு பசுமைத் தீர்ப்பாயம் ஒத்தி வைத்துள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பசுமைத் தீர்ப்பாயம் அலுவலகத்தில், மத்திய பெட்ரோலியத்துறை இணை செயலாளர் ஆர்.கே.சிங், நேற்று நேரில் ஆஜராகி விளமளிக்கத்தார். அப்போது சென்னை ஐஐடி நிபுணர் குழுவின் அறிக்கை வரும் திங்கள்கிழமை தான் கிடைக்கும் என்று தெரிவித்தார். இதனை முழுமையாக ஆராய்ந்து, எண்ணெய் கசிவு சம்பவத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்வதற்கு, 2 வாரம் அவகாசம் தேவை என்று அவர் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜோதிமணி அடங்கிய அமர்வு, ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை மீண்டும் ஒத்தி வைத்துள்ளது.    

எதிர்கட்சிகள் அமளி: மக்களவை12 மணி வரை ஒத்திவைப்பு

Posted: 05 Aug 2013 11:08 PM PDT


ஜம்மு காஷ்மீர் மாநில எல்லை பகுதியில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானிய வீரர்களால் கொல்லப்பட்டது, தெலங்கானா உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து மக்களவை நன்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவை கூடியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இந்திய ராணுவத்தின் மீதான தாக்குதல், தெலங்கானா, உள்ளிட்ட பிரச்னைகளை சுட்டிகாட்டி முழக்கங்களை எழுப்பினர். அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால் சபாநாயகர் மீரா குமார் அவையை நன்பகல் 12 மணிவரை ஒத்தி வைத்தார்.

அத்தியாவசிய மருந்துகள் விலை குறைக்கப்படவில்லை

Posted: 05 Aug 2013 11:05 PM PDT


அத்தியாவசிய மருந்துகள் பலவற்றின் விலையை குறைக்க காலக்கெடு தரப்பட்டிருந்தது. இது கடந்த 31-ம் தேதியுடன் முடிந்தது. இந்த நிலையில் எதிர்பார்த்தடி மருந்துகள் விலை குறைக்கப்படவில்லை எனத் தெரிகிறது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கடந்த மே 16-ம் தேதி அறிவித்த விலை உச்சவரம்பு அறிவிப்பையடுத்து 348 மருந்துகளின் விலை 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியான பின்னர் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கு மட்டுமே இந்த விலை பொருந்தும் என்று மருந்துவிலை ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதனால் மருந்து நிறுவனங்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மே 16 முதல் தயாரிக்கப்பட்டு கடைகளுக்கு விநியோகிக்கப்பட்ட மருந்துகளை திரும்பப் பெற்று விலையை மாற்றுவதில் மருந்து நிறுவனங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மருந்து நிறுவனங்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் அத்தியாவசிய மருந்துகள் அனைத்தும் முந்தைய அதிகபட்ச விலையிலேயே விற்கப்படுகின்றன. அரசு உத்தரவை மருந்து நிறுவனங்கள் அமல்படுத்தவில்லை என புகார் கூறப்படும் நிலையில் போதிய அவகாசம் தராததே இதற்கு காரணம் எனத் தெரிகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு

Posted: 05 Aug 2013 11:02 PM PDT


மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைகளில் குறைந்தபட்சம் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வழிசெய்யப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. தற்போதுள்ள மாற்றுத்திறனாளி சட்டப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரம்பை உயர்த்துவதன் மூலம் மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கையை அதிகரிப்பதுடன் அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உதவும் என அரசு கருதுகிறது. இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சர் பல்ராம் நாயக் தெரிவித்தார். பார்வையின்மை, பகுதியளவு பார்வையின்மை, குணப்படுத்தப்பட்ட தொழுநோய், காதுகேளாமை, ஊனம் உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்கள் அந்தந்த பிரிவுகளில் 40 சதவீதம் குறைபாடு இருந்தால் அரசு வேலை பெற தகுதி உடையவர்கள் ஆகின்றனர்.

இணையம் மூலமான வருமான வரித்தாக்கல் அதிகரிப்பு

Posted: 05 Aug 2013 10:59 PM PDT


இணையதளம் மூலமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது கடந்த நிதியாண்டைவிட இந்த நிதியாண்டில் 48 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் இதைத் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 69 லட்சத்து 63 ஆயிரத்து 56 வருமான வரிக் கணக்கு தாக்கல்கள் நிகழ்ந்தது. நடப்பு நிதி ஆண்டில் அது 1 கோடியே 3 லட்சத்து 21 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது என நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த வாரியம் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இணையம் மூலமாக வருமான வரி தாக்கல் செய்வது குறைந்திருப்பதாக தெரிவித்திருந்தது. இந்த புள்ளிவிவரம் தவறு என தற்போது கூறியுள்ள வாரியம், திருத்தப்பட்ட புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

பிரபலமாகும் கல்விச் சுற்றுலா

Posted: 05 Aug 2013 10:55 PM PDT


மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும் கல்விச் சுற்றுலா பிரபலமாகி வருகிறது. அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் பெருகி வருகின்றன. ஃபிராண்டியர்ஸ் எடுடைன்மெண்ட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஷால் சர்மா கூறுகையில், தங்கள் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் 80 முறை மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தார். அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா மூலம் மாணவர்களுக்கு நேரடியாக அறிவியல் தகவல்கள் கற்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற பயணங்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரை செலவாகிறது என்றார் அவர்.

தகவல் தொழி்ல்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் குறையும்

Posted: 05 Aug 2013 10:51 PM PDT


தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் இந்த ஆண்டில் 17 சதவீதம் குறையும் எனத் தெரிகிறது. மென்பொருள் நிறுவன அமைப்பான நாஸ்காம் இதைத் தெரிவித்துள்ளது. இத்துறையில் கடந்த ஆண்டில் 1,80,000 பேர் புதிதாக வேலை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 1,50,000 பேருக்கு வேலை கிடைக்கும் என நாஸ்காம் தலைவர் சோம் மிட்டல் தெரிவித்தார். கல்லூரி வளாகத் தேர்வு முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவது 60 சதவீதம் வரை குறையும் என்ற சோம் மிட்டல் ஐடி துறையில் பணியாளர்கள் நிறுவனம் மாறும் வீதமும் குறைந்துள்ளது எனத் தெரிவித்தார். 6.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு உடைய இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் இதுவரை 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களுக்கு பிரத்யேக இணையதளம்

Posted: 05 Aug 2013 10:48 PM PDT


ஃபேஸ்புக் உள்பட பல சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும்போக்கு சி்றுவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அவர்கள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர் மத்தியில் கவலையாக உள்ளது. அவர்களின் கவலையை போக்கும்வகையில் கொல்கத்தாவை சேர்ந்த மெகல் செளத்ரி என்பவர் சிறுவர்களுக்கு என தனியார் சமூக தளத்தை ஏற்படுத்தியுள்ளார். 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கென worldoo.com என்ற பெயரில் பிரத்யேக சமூக வலைத்தளத்தை அவர் தொடங்கியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த இணையதளம் தொடங்கப்பட்டது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக மெகல் செளத்ரி தெரிவித்தார். பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த வலைத்தளத்தில் சிறுவர்களுக்கு அவசியமான தகவல்கள் மட்டும் பரிமாறிக் கொள்ள அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

வறுமையை ஒழிப்பதில் சுய உதவிக்குழுக்கள் முக்கிய பங்காற்றுகின்றன: ராகுல் காந்தி

Posted: 05 Aug 2013 10:30 PM PDT


வறுமையை ஒழிப்பதில் சுய உதவிக்குழுக்கள் முக்கிய பங்கு வகிப்பதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அலகாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் சமூகத்தின் வறுமை நிலையை மாற்றுவதில் சுயஉதவிக்குழுக்கள் உதவிபுரிவதாக பாராட்டினார். தன்னம்பிக்கை இருந்தால் வறுமையை ஒழிக்க முடியும் என்று அவர் கூறினார்.வறுமையை ஒழிப்பதே தமது அரசியல் கொள்கைகளில் முக்கியமானதென அவர் தெரிவித்தார்.அதே நேரத்தில் இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக அமைப்பில் உள்ள பலவீனங்களை தாம் அறிந்திருப்பதாகவும் அவர் குறிபிட்டார். இருப்பினும் வறுமை நிலையை அகற்ற தீவிர முற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி

Posted: 05 Aug 2013 10:19 PM PDT


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் ஒரு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்றைய காலை வர்த்தகத்தின் போது ரூபாயின் மதிப்பு 61 புள்ளி 45 என்ற அளவுக்கு சென்றது. இது முன் எப்போதும் இல்லாத குறைந்த அளவாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நடப்பு 2013ம் ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 12 சதவீதம் சரிந்துள்ள குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகராக மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்த ஆசிய நாட்டு கரன்சியாகவும் ரூபாய் திகழ்கிறது. ரூபாயின் மதிப்பு குறைவால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அரசின் நெருக்கடிகள் அதிகரிக்கும் என தெரிகிறது. இதற்கிடையில் இந்திய பங்குச் சந்தைகளும் சரிவுப் போக்கிலேயே உள்ளன. இன்று காலை நிலவரப்படி சென்செக்ஸ் சுமார் 200 புள்ளிகளும் நிஃப்டி 70 புள்ளிகளும் குறைந்து வர்த்தகம் ஆகிக் கொண்டிருந்தன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™