Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


புதிய தேசிய ஓய்வூதிய திட்டத்தை பிரபலப்படுத்த திட்டம்

Posted: 04 Aug 2013 11:19 PM PDT


என்பிஎஸ் எனப்படும் புதிய தேசிய ஓய்வூதிய திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த ஓய்வூதிய நிதி வழிகாட்டு ஆணையமான பி.எஃப்.ஆர்.டி.ஏ. திட்டமிட்டுள்ளது. என்பிஎஸ் திட்டத்தில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை ஊடகங்கள் மூலமாக மக்களிடையே கொண்டுசெல்ல முடிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் என்பிஎஸ் திட்ட முதலீடுகள் காரணமாக 14.19 சதவீதம் லாபம் கிடைத்தது. இதனால் பி.எஃப்.ஆர்.டி.ஏ. உற்சாகம் அடைந்துள்ளது. என்பிஎஸ் திட்டம் கடந்த 2004-ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. 2009-ல் இது தனியார் துறைக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இத்திட்டத்தில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம் என்ற நிலை உள்ளது. தற்போது இத்திட்டத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் மூலமாக 33 ஆயிரம் கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

எதிர்காலத் தலைமுறையினருக்காக 1000 மரங்களுக்கு மேல் நட்ட சமுதாய சிற்பி

Posted: 04 Aug 2013 11:16 PM PDT


தள்ளாத வயதிலும் சமுதாயத்துக்கான தனது பங்களிப்பைத் தவறாமல் செய்யும் முதியவரால், ஒரு கிராமமே அழகு பெற்றிருக்கிறது. திருப்பூரிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது செலக்கரிச்சல் கிராமம். ஊருக்குள் எங்கு பார்த்தாலும், பல வகையான மரங்கள் நிழல் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த கிராமமே பச்சைப் பசேல் என அழகு மிகுந்து காட்சியளிக்கிறது. இத்தனைக்கும் காரணம், 78 வயதான, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வேலுச்சாமி என்ற தனி மனிதர். தனது நண்பர் பழனியோடு இணைந்து, அந்த கிராமத்தில் மரக்கன்று நடும் பணி, கால்நடைகளிடம் இருந்து மரக்கன்றுகளைக் காக்க தடுப்பு வளையம் அமைப்பது என அனைத்து பணிகளையும் செய்கிறார். சைக்கிளில் நீர் கொண்டு சென்று தினமும் செடிகளுக்கு ஊற்றிப் பராமரிக்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் சுமார் ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டு வளர்த்திருக்கிறார். மரத்தைச் சேதப்படுத்துவதை அறிந்தால், அவர்களைத் தடுத்து நிறுத்தப் புறப்பட்டுவிடுகிறார். எதிர்காலத் தலைமுறையினருக்கு மரங்கள் அவசியம் எனக் கருதிய வேலுச்சாமியால் மட்டுமே, இந்த கிராமம், மரங்கள் நிறைந்த, குளிர்ச்சியான பகுதியாகக் காட்சியளிக்கிறது. பறவைகளுக்குச் சரணாலயமாகவும் மாறியிருக்கிறது.பிரதிபலன் பாராமல் அடுத்த தலைமுறையினருக்காகப் பணியாற்றும் வேலுச்சாமியைப் பின்பற்ற வேண்டிய கடமை இளைய தலைமுறையிருக்கு உண்டு. முதிர்ந்த வயதிலும், சமுதாயத்துக்குத் தன்னாலான பணிகளைச் செய்யும் வேலுச்சாமி சமுதாயச் சிற்பியே. புதிய தலைமுறைக்காக செய்தியாளர் தமிழரசியுடன் ஜெய்சங்கர்.

ஈமு கோழி திட்டங்களில் படித்தவர்களே முதலீடு: ரிசர்வ் வங்கி ஆய்வில் தகவல்

Posted: 04 Aug 2013 11:15 PM PDT


ஈமு கோழி திட்டங்களில் பெரும்பாலும் படித்தவர்களே முதலீடு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவி்ததுள்ளது. ஈமு கோழி திட்டத்தில் அதிக அளவில் மோசடிகள் நிகழ்ந்தன. இந்த மோசடிகள் ஈரோடு மாவட்டத்தில் பெருமளவில் நிகழ்ந்த நிலையில் அங்கு ரிசர்வ் வங்கி கடந்த மாதம் ஓர் ஆய்வு நடத்தியது. இதில் ஈமு திட்டங்களில் முதலீடு செய்த 22 கிராமங்களைச் சேர்ந்த 800 முதலீட்டாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் பின்னணி குறித்து ஆராயப்பட்டது. இதில் ஈமு திட்டங்களில் முதலீடு செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள என்பதும் நிதி தொடர்பாக நன்கு விழிப்புணர்வு உள்ளவர்கள் என்பதும் தெரியவந்தது. அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு அவர்கள் ஈமு கோழி திட்டங்களில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளனர். ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் வசந்தன் இதை ஈரோட்டில் தெரிவித்தார்.

செபிக்கு கூடுதல் அதிகாரங்கள்

Posted: 04 Aug 2013 11:11 PM PDT


மோசடி நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த பங்குச்சந்தை வழிகாட்டு ஆணையமான செபிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளது. இதனால் புதிய இலக்குகளை நோக்கி பயணிக்க செபி திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சிறு முதலீட்டாளர்களின் தேவை பூர்த்தியாவதுடன் வீடுகளில் மேற்கொள்ளப்படும் சிறுசேமிப்புகள் பங்குச்சந்தையை நோக்கி திரும்ப வாய்ப்புள்ளது. இதற்காக பொருத்தமான திட்டங்களை அறிமுகப்படுத்த செபி பரிசீலித்து வருகிறது. ரிசர்வ் வங்கி, மத்திய நிதித்துறை, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் போன்ற அமைப்புகளுடன் ஆலோசித்த பிறகு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது.

புதிய தலைமுறை விரைவுச் செய்திகள் : உலகம்

Posted: 04 Aug 2013 11:10 PM PDT


சிறைக் கலவரத்தில் மூவர் பலி: ஹொண்டூராஸ் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் சிறைச்சாலை கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை தலைநகர் தெகுசிகால்பாவில் உள்ள சிறைச்சாலையில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 3 கைதிகள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு பணிகளுக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை: எகிப்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இடைக்கால அரசையும், முர்சி ஆதரவாளர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முர்சி ஆதரவாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை கொண்டு வருமாறு காவல்துறையினருக்கு அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. அமெரிக்க தூதரகங்கள் மூடல்: தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என வெளியான தகவலை தொடர்ந்து மூடப்பட்ட அமெரிக்க தூதரகங்களில் 19 தூதரகங்கள் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை இயங்காது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தாகா, காபூல், ஹெராத், பாக்தாத் உள்ளிட்ட 9 தூதரகங்கள் வழக்கம் போல இன்று முதல் செயல்பட துவங்கும் என கூறப்பட்டுள்ளது. ஸ்னோடெனுக்கு பணி வழங்கத் தயார் :அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்ட, எட்வர்ட் ஸ்னோடனுக்கு பணி வழங்க ரஷ்யாவின் விகாண்டெக்ட் நிறுவனம் முன் வந்துள்ளது. அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு, உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்னோடனுக்கு ஓராண்டு காலம் தற்காலிக அடைக்கலம் வழங்கியது ரஷ்ய அரசு. இந்நிலையில், ரஷ்யாவின் ஃபேஸ்புக் எனப்படும் விகாண்டெக்ட் நிறுவனம் ஸ்னோடனுக்கு பணி வழங்க முன் வந்துள்ளது. அதிபராக பதவியேற்றார் ரௌஹானி : ஈரானின் 7ஆவது அதிபராக ஹசன் ரௌஹானி பதவியேற்றுக் கொண்டார்.ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள நாடாளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் இந்திய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரௌஹானி வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து ஈரானின் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி, ரௌஹானி அதிபராக பதவியேற்க கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கினார். பெர்லுஸ்கோனி ஆதரவாளர்கள் போராட்டம் : இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோணிக்கு வரி ஏய்ப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். ரோமில் அமைந்துள்ள பெர்லுஸ்கோணியின் வீட்டிற்கு முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. இதனிடையே போராட்டக்காரர்களிடம் பேசிய, பெர்லுஸ்கோணி கூட்டணியில் இருந்து தான் விலகப் போவதில்லை என தெரிவித்தார். ஈராக்கில் தொடரும் தாக்குதல்: ஈராக்கில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். கிர்குக் பகுதியில் மக்கள் கூடியிருந்த பகுதியில் காரில் வந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர். பாக்தாத் நகரில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் 3 பேர் கொல்லபப்ட்டனர். அரசு படைகள் மீது தாக்குதல்: சிரியாவில் அரசு படையின் கட்டுப்பாட்டில் உள்ள லடாகியா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில், அரசு படைகளின் முகாம்கள் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. மீண்டும் நாளை பிரேதப் பரிசோதனை :இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த சென்னை மாணவி ஜார்ஜியானாவின் பிரேதப் பரிசோதனை, இரண்டாவது முறையாக லண்டனில் நடத்தப்படுகிறது.இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த ஜார்ஜியானா, கடந்த மாதம் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இதில் சந்தேகம் உள்ளதாகவும், உண்மை நிலையை கண்டறிய வேண்டும் எனவும் ஜார்ஜியானாவின் தந்தை தாம்சன், லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இரண்டாவது முறையாகப் பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, லண்டனில் இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. பதவி விலக மறுப்பு :துனிஷியாவில் பிரதமர் அலி லரேயத் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தான் பதவி விலகப் போவதில்லை என அலி லரேயத் தெரிவித்துள்ளார்.எதிர்ப்பாளர்களின் போராட்டங்களுக்குப் போட்டியாக அரசு ஆதரவாளர்கள் பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.  

தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு

Posted: 04 Aug 2013 11:07 PM PDT


தங்கத்தின் விலை அடுத்த சில மாதங்களில் உயரும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு எடுத்த சில நடவடிக்கைகளால் பங்குச்சந்தை முதலீடும், கடன் பத்திரங்கள் மீதான கவர்ச்சியும் குறைந்துள்ளதாக கூறும் அவர்கள் இதனால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பும் என்றும், தங்கத்தின் தேவை அதிகரிப்பதால் அதன் விலை உயரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இணையதளம் வழியாக ஜவுளி வாங்க மக்கள் விருப்பம்

Posted: 04 Aug 2013 11:05 PM PDT


இணையதளம் மூலமாகவும் ஜவுளி வாங்க மக்கள் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. முன்பெல்லாம் ஆடை வாங்க ஜவுளிக்கடைக்குத்தான் செல்ல வேண்டும். தற்போது கடைக்குத்தான் செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. இணையதளம் வழியாக அவற்றை வாங்குவது எளிதாகியுள்ளது. நாட்டின் முன்னணி ஜவுளிக்கடைகள் இணையதளம் வாயிலாக ஆடைகளை விற்கும்போக்கு அதிகரித்து வருவதாக ஜினீசிஸ் என்ற  நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது. பிரபல ஜவுளிக்கடைகளில் 27.5 சதவீதம் இணையதளம் மூலமாக விற்பனை நடைபெற்று வருவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இணையதளத்தின் மூலமாக மக்கள் பொருள்கள் வாங்க விரும்புவதே ஜவுளிக்கடைகளின் இம்முடிவுக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இணையதள வருமான வரிக்கணக்கில் மோசடி: மெக்காஃபி எச்சரிக்கை

Posted: 04 Aug 2013 11:01 PM PDT


இணையதளம் மூலமாக வரிமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதைப் பயன்படுத்தி பலமோசடிகளும் அரங்கேறுகின்றன. வருமான வரி தவிர உபரி பணத்தை திரும்பப் பெறலாம் என இமெயில் அனுப்பி சில மோசடி இணையதளங்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதாக மெக்காஃபி என்ற இணையதள பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இணையதளங்கள் தரும் இணையதள முகவரி வருமான வரித்துறை தளத்தைப் போலவே தோற்றம் தரும். ஆனால் அவை போலி இணையதளங்களுக்கு அழைத்துச் செல்கின்றன என மெக்காஃபி எச்சரித்துள்ளது. அவ்வாறு செல்பவர்களின் கடன் அட்டை, வங்கிக் கணக்கு தொடர்பான முக்கிய தகவல்களை திருடி பணத்தை சுரண்டும் வேலையில் ஈடுபடுவதாக மெக்காஃபி தனது அறிக்கையில் கூறியுள்ளது. எனவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது சந்தேகத்திற்கிடமான இணையதளங்கள் அல்லது மின்னஞ்சலை திறக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை தனிப்பட்ட நபரின் பாஸ்வேர்டு போன்ற ரகசிய தகவல்களை கேட்பதில்லை. வருமான வரி தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தலைமுறை விரைவுச் செய்திகள் : தேசியச் செய்திகள்

Posted: 04 Aug 2013 10:19 PM PDT


தொடங்குகிறது கூட்டத்தொடர் :நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட 40க்கும் அதிகமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இருப்பினும் தெலங்கானா தனி மாநில விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. விளக்கம் கேட்டது உ.பி அரசு :உத்தரபிரதேசத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்திக்கு அம்மாநில அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10 பக்கம் கொண்ட அந்த நோட்டீஸில், மூத்த அதிகாரிகளை ஆலோசிக்காமல் மசூதியின் சுவரை இடிக்க உத்தரவிட்டது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என துர்கா சக்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உணவு மசோதாவுக்கு ஆதரவில்லை” :உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு ஆதரவு தர மாட்டோம் என்று சமாஜ்வாதி கட்சி கூறியுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரான நரேஷ் அகர்வால் லக்னோவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது இதைத் தெரிவித்தார். மேலும், தேவைப்பட்டால் உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சந்திரசேகர ராவ் மீது வழக்குப்பதிவு :தெலங்கானா மாநில பிரச்னையில் பகைமையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனி மாநிலம் அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்ததைத்தொடர்ந்து பேசிய சந்திரசேகர ராவ், தெலங்கானா பகுதியிலுள்ள ஆந்திர அரசு ஊழியர்களை சொந்த ஊருக்கு செல்லுமாறு கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. காத்திருப்புப் பட்டியலில் அதிகாரி:ராஜஸ்தான் மாநிலத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் தந்தை குறித்த கடந்த கால குற்ற வழக்குகளை விசாரிக்கத் தொடங்கிய ஐ.பி.எஸ். அதிகாரி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவான சலே முகமதுவின் தந்தை காசி பஹீர் என்பவர் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கத் தொடங்கிய அம்மாவட்ட எஸ்.பி. பங்கஜ் சவுத்ரி எந்த பொறுப்பும் அளிக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி இளைஞர் விழிப்புணர்வு பயணம்: திருநங்கைளை சமூகத்தில் மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட புதுச்சேரி இளைஞர் தனது பயணத்தை டெல்லியில் நிறைவு செய்தார். ஜோதி முருகன் என்ற அந்த இளைஞர் கடந்த 35 நாட்களாக தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்பட 11 மாநிலங்கள் வழியாக 4 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டார். எல்லையில் சீனா ஊடுருவல்:எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களை பாதுகாப்பு ரோந்துப் பணிகளில் ஈடுபட விடாமல் சீன ராணுவத்தினர் தடுத்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவுவதுடன், இந்திய ராணுவத்தினரின் வழக்கமான ரோந்து நடவடிக்கைகளை அவர்கள் தடுத்து வருவதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிரமடையும் பொடோலாந்து போராட்டம்:தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி அசாமில் வன்முறை நீடித்து வரும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச அனைத்துக்கட்சிக் குழுவினர் இன்று டெல்லி செல்கின்றனர். அசாம் மாநிலத்தைப் பிரித்து கார்பி ஆங்லாங்க் மாநிலம் அமைக்க வலியுறுத்தும் போராட்டங்கள் தீவிரமடைந்ததுள்ளன. மதிய உணவில் பல்லி :ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில், இறந்துபோன பல்லி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நந்தி பவுண்டேசன் என்ற அமைப்பு தயார் செய்யும் மதிய உணவு, சட்டர்பூர், ஹின்ஜிலி, பெர்காம்பூர் நகரத்தில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த மதிய உணவில் பல்லி கிடந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. “காங்கிரஸ் அகற்றப்பட வேண்டும்”:வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமையாமல் தடுக்க வேண்டும் என குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி பாரதிய ஜனதா கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். குஜராத் காந்தி நகரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், உட்கட்சிப் பூசல், பல்வேறு வகையில் திணறி வரும் காங்கிரஸ் அரசால் நாட்டை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

புதிய தலைமுறை விரைவுச் செய்திகள் : தமிழகம்

Posted: 04 Aug 2013 10:02 PM PDT


கருணாநிதிக்கு கண்டனம் : தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட விவகாரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சட்டத்தை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்திய போது எதிர்ப்புத் தெரிவித்த தி.மு.க., தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் மீட்பு: ஓகேனேக்கல் அருவியில் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 4 பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் ஒவ்வொருவராக 4 பேரையும் மீட்டனர்.

இதற்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒகேனக்கல் பகுதிக்கு வரவழைக்கப்பட்டன. ஒகேனக்கல் அருவியில் நேற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட 3 பேரும் மரத்தைப் பிடித்துக் கொண்டு உயிருக்காக போராடினர். நான்கு பேரும் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டனர்.

121 அடியை எட்டியது மேட்டூர் அணை : எட்டு ஆண்டுகளுக்குப் பின், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 121 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து, அணையில் இருந்து 1 லட்சத்து 11 ஆயிரம் கன அடி திறந்து விடப்படுகிறது.

இதனையொட்டி, காவிரிக் கரையோரத்தில் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

காவிரி வழக்கு இன்று விசாரணை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இம்மனு நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, முகோபாத்யாயா அமர்வு முன் கடந்த மாதம் 5ஆம் தேதி விசாரணைக்குவந்தபோது, 3 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி மத்திய அரசு தரப்பில் இன்று விளக்கமளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றாலத்தில் குளிக்கத் தடை :குற்றாலத்தில் தொடர்ந்து மழைபெய்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் வரை லேசான சாரலுடன் மிதமாக இருந்த பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு திடீர் மழை பெய்யத் தொடங்கியது. 4 மணிநேரத்திற்கும் மேல் மழை பெய்ததால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தமிழக மீனவர்களுக்கு காவல் : இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை வரும் 16 ஆம் தேதி வரை காவலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முனியசாமி, பாக்கியராஜ், இன்னாசி, கருப்பையா உள்ளிட்ட 20 மீனவர்கள் கச்சத்தீவு அருகே நேற்று மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களைச் சிறைப்பிடித்துச் சென்றனர்.

கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு :எட்டு லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட கோவில்பட்டி தொழிலதிபரை, காவல்துறையினர் நெல்லையில் மீட்டனர். நேற்று முன்தினம் கடத்தப்பட்ட தொழிலதிபர் முத்துக்குமரனின் தந்தை சிதம்பரத்திடம் 8 லட்சம் ரூபாய் தருமாறு கடத்தல் கும்பல் மிரட்டல் விடுத்தது.

காவல்துறையினரின் அறிவுறுத்தல் படி, 8 லட்சம் ரூபாயை கடத்தல் கும்பலிடம் சிதம்பரம் கொடுத்தார். அப்போது மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர் கடத்தல் கும்பலைக் கைது செய்தனர்.

தீயில் எரிந்த குடிசைகள்: விழுப்புரம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 8 குடிசை வீடுகள் எரிந்து கருகின. கண்டப்பாக்கம் கிராமத்தில் நேற்று மாலை ஆறுமுகம் என்பவரது வீட்டில் தீப்பிடித்தது.

காற்று வேகமாக வீசியதால் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது. இதனால் 8 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதில் திருமணத்திற்காக வாங்கப்பட்டிருந்த நகை, பணம், கட்டில் பீரோ ஆகியவையும் எரிந்து நாசமாயின.

வெடிகழிவுகள் எரிப்பால் விபத்து அபாயம்: சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைக்கழிவு ரசாயனப் பொருட்களை திறந்தவெளிகளில் எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.சிவகாசியில் செயல்படும் பட்டாசு ஆலைகளில் 3 அல்லது 6 நாட்களுக்கு ஒருமுறை பட்டாசுக்கழிவுகளை தீவைத்து எரித்து அழிக்கும் நடைமுறை உள்ளது. இக்கழிவுகளை திறந்த வெளிகளிலும், ஆறு மற்றும் ஓடைப்பகுதிகளிலும் எரிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

சென்னையில் மிதமான மழை : சென்னையில் நேற்றிரவு மிதமான மழை பெய்தது. சென்னையின் முக்கியமான பகுதிகளான ராயப்பேட்டை, திருவல்லிகேணி, அண்ணாசாலை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், அம்பத்தூர், ஆவடி தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் சாரல் மழையும் பெய்தது.

ஒரு மணி நேரம் பெய்த மழையினால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™