Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


பிரதமரை வரவேற்க டிஜிபி-க்கு அனுமதி மறுப்பு:முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம்

Posted: 03 Aug 2013 10:15 PM PDT


பிரதமர் மன்மோகன் சிங் திருச்சி வந்தபோது, அவரை வரவேற்க தமிழக டிஜிபி அனுமதிக்கப்படாததற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பிரதமர் நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையம் வந்தபோது, சீருடையில் இருந்தும் தமிழக டிஜிபி பிரதமரை வரவேற்க அனுமதிக்கப்படவில்லை என்று ஜெயலலிதா அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். பிரதமரை வரவேற்க வருபவர்களின் பட்டியலை முன்கூட்டியே பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி அது உறுதி செய்யப்பட்ட பின்னரும் இவ்வாறு நடைபெற்றுள்ளது வருத்தமளிப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், டிஜிபியை அனுமதிக்காத பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவில் இடம்பெற்றிருந்த சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு: 5 மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவர்

Posted: 03 Aug 2013 10:02 PM PDT


காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையிலிருந்து விநாடிக்கு 4500 கனஅடி நீர் காவிரிக்கும், 4500 கனஅடி நீர் வெண்ணாற்றுக்கும் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையில் நீர் திறக்கப்பட்டதன் காரணமாக புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் பயனடைவர். 5 மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கர் நிலம் இதன் மூலம் பாசன வசதி பெறும்.

பார்வையற்றோருக்கான மாநில அளவிலான செஸ்போட்டி:பலதரப்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

Posted: 03 Aug 2013 09:08 PM PDT


பார்வையற்றோருக்கான மாநில அளவிலான செஸ் போட்டி சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்களும் கலந்துகொண்டனர். வயதுவரம்பின்றி நடத்தப்பட்ட இப்போட்டியில் பள்ளி முதல் கல்லூரி வரை பயிலும் பலதரப்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கான இந்த செஸ் போட்டி ஆறு சுற்றுகளாக நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவருக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் பதினைந்தாயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. முதல் ஐந்திடம் பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி தோல்வியைவிட கலந்துகொண்ட அனுபவம் மிக்க மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தனர் போட்டியில் கலந்துகொண்ட பார்வை மாற்றுத்திறனாளிகள்.

மதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

Posted: 03 Aug 2013 08:49 PM PDT


மதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஹைதர் அலி, முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் பசீர் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய வைகோ, மதிமுக மதசார்பின்மை கொள்கையில் உறுதியாக உள்ளதாகக் கூறினார். எந்த காரணத்திற்காகவும் அடிப்படைக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். சிறுபான்மையின மக்களுக்காக , மதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் வைகோ கூறினார். காணொளி:மதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

சென்னையில் நேற்று பல இடங்களில் பலத்த மழை

Posted: 03 Aug 2013 08:41 PM PDT


சென்னையில் நேற்றிரவு பல இடங்களில் சுமார் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கோயம்பேடு, மயிலாப்பூர், கிண்டி, வடபழனி, தி.நகர், அம்பத்தூர், தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரம் பலத்த மழை நீடித்தது. சில பகுதிகளில் இரவு 9 மணி முதலே மழை பெய்யத் தொடங்கியது. அதிகாலையிலும் தூறல் மழை நீடித்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோயம்பேடு உள்பட பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை காரணமாக அம்பத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் சிறிது நேரம் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. காணொளி:சென்னையில் நேற்று பல இடங்களில் பலத்த மழை

விருதுநகர் அருகே புள்ளிமான்களைக் காக்கும் காவல்துறை

Posted: 03 Aug 2013 08:13 PM PDT


விருதுநகர் அருகே புள்ளிமான்களைக் காப்பாற்ற தண்ணீர் தொட்டிகளை காவல் துறையினர் அமைத்து வருகின்றனர். மருளூத்து, பட்டம்புதூர் கண்மாய் பகுதிகளில் புள்ளிமான்கள் உள்ளன. அவை தண்ணீர் மற்றும் உணவுக்காக கண்மாயின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்குப் பகுதிக்குச் செல்ல நான்கு வழிச்சாலையைக் கடக்கும் போது அடிக்கடி வாகனங்கள் மோதி இறக்கின்றன. மான்கள் தண்ணீருக்காக சாலையைக் கடக்காமல் இருக்க விருதுநகர் காவல்துறை சார்பில் கண்மாயில் தற்காலிகமாக சிமென்ட் தொட்டிகள் வைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

பெண்கள் மீதான வன்முறை தொடர்கதை: நீதிபதி கவலை

Posted: 03 Aug 2013 07:57 PM PDT


பெண்களைப் பாதுகாக்க பல சட்டங்கள் இருந்தும் அவை சரியாக அமல்படுத்தப்படாத நிலை உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கூறியுள்ளார். அரியலூரில் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தை திறந்து வைத்து உரையாற்றிய அவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெண் சிசுக் கொலையில் தொடங்கி இணையத்தளம் வரை எல்லைதாண்டி வளர்ந்து வருவதாகவும் கூறினார். நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கதையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பர்வேஷ் ரசூல் களம் இறக்கப்படாததால் சர்ச்சை:உமர் அப்துல்லாவுக்கு கண்டனம்

Posted: 03 Aug 2013 07:15 PM PDT


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பர்வேஷ் ரசூல் இந்திய அணிக்காக களம் இறக்கப்படாததற்கு, எதிர்ப்பு தெரிவித்த உமர் அப்துல்லாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் இருந்து முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட பர்வேஸ் ரசூல் ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால் அந்த அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளிலும் அவர் களம் இறக்கப்படவில்லை. முதலில் நடைபெற்ற நான்கு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. எனவே 5-வது ஒருநாள் போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஐந்து ஆட்டங்களிலும் ரசூலுக்கு வாய்ப்பு வழங்கப்படாததையடுத்து, ஜம்மு – காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தமது டுவிட்டர் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்தார். இதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அன்ஷுமன் கெய்க்வாட் , கிரண் மோர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காணொளி:பர்வேஷ் ரசூல் களம் இறக்கப்படாததால் சர்ச்சை:உமர் அப்துல்லாவுக்கு கண்டனம்

ஆந்திராவில் தொடரும் தலைநகர் சர்ச்சை

Posted: 03 Aug 2013 06:45 PM PDT


தெலங்கானா தனி மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் ஒருபுறம் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறன. அதே சமயம் ஆந்திராவின் தலைநகராக எந்த நகரை தேர்ந்தெடுப்பது என்ற சர்ச்சையும் இப்போது தொடங்கி இருக்கிறது. ஆந்திராவின் தலைநகராகும் பகுதி பெரிய அளவில் வளர்ச்சியடைய வாய்ப்பு இருப்பதால் ரியல் எஸ்டேட் துறையினரும், தொழிலதிபர்களும் இப்போதே ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அரசியல், தொழில் நிர்பந்தம் காரணமாக “1953-ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து ஆந்திரா உருவாக்கப்பட்ட போது அதன் முதல் தலைநகராக விளங்கியது கர்னூல். 1956-ம் ஆண்டுக்கு பிறகு கர்னூலில் இருந்து ஹைதராபாத்துக்கு தலைநகர் நகர்ந்தது. பின்தங்கிய தெலங்கானா பகுதியில் ஹைதராபாத் அமைந்திருந்தாலும், இந்தியாவின் மிக வளர்ந்த நகரங்களின் பட்டியலில் தனி இடம் பிடித்து இருக்கிறது. உள்கட்டமைப்பு வசதியில், நவீன வளர்ச்சியிலும் மெட்ரோ நகரங்களுக்கு இணையாக உயர்ந்து இருக்கிறது. இதன் காரணமாகவே ஹைதராபாத் நகரை தெலங்கானாவுக்கு வழங்க ஆந்திராவின் மற்ற பகுதிகளில் தொடர்ந்து எதிர்ப்பு காணப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ஹைதரபாத் நகரை வளர்ச்சியடைய செய்ததில் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த முதலமைச்சர்களின் பங்கு முக்கியமானது. இருந்தாலும் ஆந்திரா மக்கள் இப்போது புதிய தலைநகரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படி ஆந்திராவின் புதிய தலைநகராகும் தகுதி வாய்ந்த நகர் எது? என்பதன் விவரம்:- கடலோர ஆந்திராவில் தலைநகர் போட்டியில் உள்ள முதல் நகரம் விஜயவாடா. ஆந்திராவின் மையப்பகுதியில் இருப்பதும், ஒரளவு வளர்ச்சியடைந்து இருப்பதும் இந்த நகருக்கு பலம். தெலங்கானா அறிவிப்புக்கு பிறகு கடந்த ஒரு வாரத்திற்குள்ளாக விஜயவாடாவில் நிலத்தின் மதிப்பு திடீரென உயர்த்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் போட்டியில் துறைமுக நகரான விசாகபட்டணமும் இருக்கிறது. நெருக்கடி மிகுந்து இருப்பதும் மாநிலத்தின் ஒரு மூலையில் இருப்பதும் இந்நகருக்கு பலவீனமான அம்சம். அதுமட்டுமல்லாமல், குண்டூர் மற்றும் ஓங்கோல் நகரங்களும் கடலோரா ஆந்திர பகுதி அரசியல்வாதிகளாலும். தொழிலதிபர்களாலும் தலைநகர் வரிசையில் முன்னிறுத்தப்படுகின்றன. கடலோர ஆந்திராவில் இப்படி போட்டி இருக்கும் நிலையில், ராயலசீமா மக்களோ வறட்சியான தங்கள் பகுதியில் இருந்து தலைநகர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். அந்த வரிசையில் மீண்டும் கர்னூலை தலைநகராக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இதுபோலவே புகழ் பெற்ற வழிபாட்டுஸ்தலமான திருப்பதியும் தலைநகர் போட்டியில் இருக்கிறது. விமான நிலையம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பது திருப்பதிக்கு பலம். ஆந்திராவுக்கு தலைநகரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு 10 ஆண்டுகள் கெடு விதித்துள்ள போதிலும் அரசியல், தொழில், ஜாதி என பல தரப்பில் இருந்தும் நிர்பந்தங்கள் தொடங்கி விட்டன.

நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்: சுமுகமாக நடத்த முயற்சி

Posted: 03 Aug 2013 06:15 PM PDT


நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவிருக்கிறது. பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மத்திய அரசு, தொடரை சுமுகமாக நடத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி இம்மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து நேற்று சபாநாயகர் மீராகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், பாரதிய ஜனதாக்கட்சியின் மூத்தத் தலைவர் எல் கே அத்வானி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குருதாஸ் தாஸ் குப்தா, ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத், தேவைப்பட்டால் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார். உத்தரகண்ட் வெள்ளப் பெருக்கு, நாட்டின் பொருளாதார சூழல் மற்றும் பல்வேறு விவகாரங்களை இக்கூட்டத்தொடரில் எழுப்ப பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் மிகக் குறுகியகாலம் மட்டுமே நடக்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. முக்கிய எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பவுள்ள நிலையில், அனைத்து பிரச்னைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். காணொளி:நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்: சுமுகமாக நடத்த முயற்சி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™