Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


தனியார்துறை வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு: மத்திய அரசு முயற்சி

Posted: 25 Aug 2013 11:19 PM PDT


தனியார் துறை வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு நடைமுறையை ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சமூக நீதித்துறை அமைச்சர் குமாரி செல்ஜா தெரிவி்த்துள்ளார். இந்த திட்டத்தை சுமுகமான விதத்தில் அமல்படுத்துவதற்கு மத்திய அரசு விரும்புவதாகவும், நாடாளுமன்ற மக்களவையில் பேசும்போது அமைச்சர் குமாரி செல்ஜா கூறியுள்ளார்.

கடையம் அருகே கிராம மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை

Posted: 25 Aug 2013 11:12 PM PDT


நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்துள்ள அழகப்புரம் பகுதியில் சிறுத்தை புகுந்து கிராம மக்களை அச்சுறுத்துவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இரவு நேரங்களில் ஊருக்குள் வரும் சிறுத்தை, ஆடு மாடுகளை கொன்று விடுவதாக அவர்கள் கூறுகினறனர். 15 நாட்களுக்கு முன் 4 ஆடுகளை சிறுத்தை தின்று விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கடையம் முதல் கடனாநதி வரை சுமார் 12 கிலோ மீட்டருக்கும் மேல் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு டிவிக்களுக்கு இன்று முதல் வரி

Posted: 25 Aug 2013 11:09 PM PDT


வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் எல்சிடி, எல்இடி, பிளாஸ்மா போன்ற டிவிக்களுக்கு 36 சதவீத வரி இன்றிலிருந்து அமலுக்கு வருகிறது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருந்தது. இது தொடர்பான அறிவிப்பை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியாகியிருந்த நிலையில் இதற்கு பின் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு டிவிக்கள் கொண்டு வருவது வழக்கத்தை விட அதிகரித்திருந்தது.

டிவிக்களுக்கு வரி விதிக்கும் அரசின் முடிவு குறித்து வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதன் மூலம் கிடைக்கும் தொகையால் அரசுக்கு பெரிதாக எந்த லாபமும் கிடைக்காது என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் அரசின் இந்த முடிவுக்கு இந்திய டிவி உற்பத்தி நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படும் டிவிக்களுக்கு வரி இல்லை என்ற நிலையில் கடந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் டிவிக்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இன்றிலிருந்து வரி விதிக்கப்படும் என்பதால் வெளிநாட்டு டிவி வரத்து வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

94 நீர் மின்னுற்பத்தி திட்டங்கள் பாதிப்பு: மத்திய மின்துறை அமைச்சர்

Posted: 25 Aug 2013 11:01 PM PDT


பல்வேறு தரப்பு ஒப்புதல்கள் கிடைக்காத நிலையில் 94 நீர் மின்னுற்பத்தி திட்டங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய மின்சார அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

இத்திட்டங்களை செயல்படுத்தினால் 37 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்தார். முடங்கியுள்ள திட்டங்களை முடுக்கி விடுவதற்கு தேவையான ஒப்புதல்களை பெற தமது அமைச்சகம் தீவிரமாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவின் மொத்த மின்னுற்பத்தியில் நீர் மின் திட்டங்களின் பங்கு 18.6 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழல் பாதிப்புகள், வனத்துறை எதிர்ப்பு, உள்ளூர் மக்கள் எதிர்ப்பு என பல காரணங்களால் நீர் மின் திட்டங்கள் முடங்கியுள்ளன

ரூபாய் மதிப்பு நிமிரும்: நிபுணர்கள் கணிப்பு

Posted: 25 Aug 2013 10:41 PM PDT


ரூபாயின் மதிப்பு சரிவு நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல.வீட்டு பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்ற அச்சம் இருந்த வந்த நிலையில் இது தொடர்பான நம்பிக்கை தரும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் சீட்டுக்கட்டாய் சரிந்த ரூபாயின் மதிப்பு நடப்பு வாரத்தில் நிமிர்ந்தெழும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் நம்பிக்கையூட்டும் பேச்சுக்களும் அவர் முதலீட்டாளர்களை அழைத்து உறுதிகள் தந்ததும் ரூபாயை நிமிரச் செய்யும் என தனலட்சுமி வங்கியின் கருவூல அதிகாரி ஸ்ரீநிவாச ராகவன் தெரிவித்தார்.

ரூபாயின் மதிப்பு இந்த வாரம் மேற்கொண்டு சரிய வாய்ப்பில்லை என ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி உயரதிகாரி ஏகம் குப்தா தெரிவிதத்தார். ரூபாய் மதிப்பு சரிவால் பெட்ரோல், சமையல் கேஸிலிருந்து செல்ஃபோன், தங்கம் வரை பல்வேறு பொருட்களும் விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

Posted: 25 Aug 2013 10:33 PM PDT


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.64.16 ஆக வர்த்தகமாகியிருந்தது.

தமிழக மீனவர்கள் 35 பேர் சிறைபிடிப்பு

Posted: 25 Aug 2013 10:22 PM PDT


ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 35 மீனவர்கள் நேற்று 4 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில் அவர்கள் அனைவரையும் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 45 பேரது காவல் ஆகஸ்ட் 29-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மொபைல்களுக்கு வரவேற்பு

Posted: 25 Aug 2013 10:20 PM PDT


ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனையில் ஆப்பிள், சாம்சங் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை இந்திய நிறுவனங்கள் பின்னுக்கு தள்ளியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஸ்மார்ட்ஃபோன்கள் குறைவான விலையில் கிடைப்பதே இதற்கு காரணம் என்று ஐடிசி அமைப்பின் ஆய்வு கூறுகிறது. சீனாவிலும் இதே போக்கு நிலவுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மைக்ரோம்க்ஸ்,கார்போன், லாவா, மேக்ஸ், இன்டெக்ஸ் ஆகிய இந்திய நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி பெற்று வருவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையிலான மாத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளதாக ஐடிசி கூறியுள்ளது.

அமெரிக்க ஆப்பிள்: குறையும் வரத்து

Posted: 25 Aug 2013 10:07 PM PDT


அமெரிக்காவில் இருந்து சுவை மிக்க ஆப்பிள் பழங்கள் இந்தியாவுக்கு வருவது இனி குறையும் என தெரிகிறது.

அமெரிக்க வேளாண் துறை இத்தகவலை கூறியுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஆப்பிள்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் என்பதுதான் இதற்கு காரணம் என்று அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது. உலகிலேயே ஆப்பிள் விளைச்சலில் இந்தியா 3வது பெரிய நாடாக இருந்தாலும் அதன் தேவைக்கேற்ப உற்பத்தி இல்லை என்றும் அமெரிக்க வேளாண் துறை கூறியுள்ளது.

இந்தியாவின் ஆப்பிள் இறக்குமதி கடந்த பத்தாண்டுகளில் 9 மடங்கு அதிகரித்திருந்த நிலையில் இப்போது இந்தப் போக்கு மாறும் என்றும் அந்த தகவல் கூறுகிறது.

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு?:அரசு மருத்துவமனை மீது குற்றச்சாட்டு

Posted: 25 Aug 2013 09:57 PM PDT


பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் பெண் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தவுலத் பெர்வினுக்கு கடந்த ஜனவரி மாதம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பபட்டுள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக திருச்சி சி.எஸ்.ஐ மிஷன் மருத்துமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்ட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தவுலத் பெர்வின் நேற்று உயிரிழந்தார். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது தேவையில்லாத பஞ்சை வயிற்றில் வைத்து அறுவை சிகிச்சை செய்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக இறந்த பெண்ணின் சகோதரி குற்றம்சாட்டியுள்ளார்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™