Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


சென்னையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Aug 2013 11:18 PM PDT


புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வலியுறுத்தி சென்னையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் என பல துறையின் ஊழியர்கள் பங்கேற்றனர். புதிய ஒய்வூதிய திட்டத்தால் நாடு முழுவதும் உள்ள 3.5 கோடி ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் குற்றம்சாட்டினர்.

எல்லை பாதுகாப்பு படையில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 23 Aug 2013 11:02 PM PDT


DGBSF எனப்படும் Directorate General Border Security Force-ல் காலியாக உள்ள 498 காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை நடைபெறவுள்ளது.

498 பணியிடங்களில் HC மாஸ்டர் பணிக்கு 64 இடங்களும், HC இன்ஜின் டிரைவர் பணிக்கு 64 இடங்களும், SI மாஸ்டர், SI இன்ஜின் டிரைவர், HC Workshop, CT Crew, உள்ளிட்ட பணியிடங்களுக்கு 121 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள பணியிடங்களில் பத்து சதவிகித இடங்கள் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. உடல் தகுதி, நேர்காணல் தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் அடிப்படை பயிற்சிக்குப் பிறகு இந்தியாவின் எந்த பகுதியில் வேண்டுமென்றாலும் பணியமர்த்தப்படலாம். மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களை www.bsf.nic.in என்ற இணைய தளம் வழியாக அறிந்து கொள்ளவும்.

அடிப்படைத் தகுதிகள்

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். SI இன்ஜின் டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் Second Class Master சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம்.

CT Crew பணிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் நீச்சல் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஓராண்டு கால முன் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

HC Workshop பணிக்கு மேட்டார், டீசல் மெக்கானிக், எலக்ரிக்கல், ஏர் கண்டிஷனர் டெக்னாலஜி ஆகிய ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பட்டயச் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் 20 வயதிற்கு குறையாமலும் 28 வயதிற்கு மிகாமலும் இருத்தல் அவசியம்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று ஆண்டுகள் வரையில் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் குறித்த கூடுதல் தகவல்களை www.bsf.nic.in என்ற இணைய தளத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு முறை

இந்த பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய எழுத்துத் தேர்வு, Documentation and Physical Measurement, Physical Efficiency Test, Trade Test, நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும்.

இரண்டு மணி நேரம் நடைபெறும் எழுத்துத் தேர்வு கொள்குறி வினா விடை முறையில் நடைபெறும். இரண்டாவது கட்டமாக நடத்தப்படும் Physical Efficiency தேர்வில் விண்ணப்பதாரர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை எட்டு நிமிடத்தில் கடக்க வேண்டும்.

மேலும், மூன்று அடி ஆறு அங்குல உயரத்தை தாண்ட வேண்டும். அத்துடன், 11 அடி நீளத்தை தாண்ட வேண்டும். இந்த விதிமுறைகள் முன்னாள் ராணுவ வீரர்களுக்குப் பொருந்தாது.

இரண்டாவது தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு மூன்றாவது கட்டமாக 25 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். மென்திறன் குறித்து 5 மதிப்பெண்களுக்கும், உளவியல் குறித்து 5 மதிப்பெண்களுக்கும், வேலை சார்ந்த திறன் குறித்து 10 மதிப்பெண்களுக்கும், விண்ணப்பதாரர்கள் ஏதேனும் சாதனை புரிந்திருப்பின் அதற்கு 5 மதிப்பெண்களுக்கும் நேர்முகத்தேர்வில் கேள்விகள் கேட்கப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களை www.bsf.nic.in என்ற இணைய தளத்தை அணுகி அறியலாம்.

புதிய தலைமுறையின் சுவடுகள்…

Posted: 23 Aug 2013 10:53 PM PDT


நாட்டை உலுக்கிய ஒரு குற்றம்…..

 

2012 டிசம்பர் 16 ஆம் தேதி டெல்லியில் நடந்த ஒரு குற்றச் சம்பவம் நாட்டையே உலுக்கியது என்றால், அது மருத்துவ மாணவி ஒருவருக்கு ஓடும் பேருந்தில் நேர்ந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை. அந்த மாணவிக்காக டெல்லியின் சாதாரண மக்கள் வீதிகளில் திரண்டனர். அவர்களின் திடமான போராட்டங்கள் டெல்லியை உலுக்கி எடுத்தன. 2013 ஜனவரி முதல் தேதியில் இருந்து பிப்ரவரி 15 ஆம் தேதி வரை டெல்லியில் மட்டுமே 181 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவற்றில் ஒன்றாக இந்த மாணவிக்கு நேர்ந்த கொடூரமும், மரணமும் அமைந்திடவில்லை. அந்த மாணவிக்காக பெண்பிள்ளைகளை பெற்றவர்களும், ஏராளமான சகோதர, சகோதரிகளும் போர்க்குரல் எழுப்பினர். அவர்களை கலைக்க காவல்துறை நடத்திய முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இந்த போராட்டங்களை தொடர் நேரலையாக ஒளிபரப்பியது புதிய தலைமுறை.

புனிதாவுக்கு நேர்ந்த துயரம்…..
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த நேரம். அந்த சமயத்தில் தூத்துக்குடி அருகே புனிதா என்ற பள்ளி மாணவி உயிரிழந்ததால் அங்கும் போராட்டத்தின் கங்குகள் துளிர்விட்டன. பேருந்து வசதி இல்லாமல் காட்டுப்பாதையில் தண்டவாளம் வழியே பள்ளிக்குச் சென்ற புனிதாவுக்கு நேர்ந்த கதி கண்டு பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் இறங்கினர்.

குற்றவாளி கைது செய்யப்பட்டாலும், அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. டெல்லி மாணவி மற்றும் தூத்துக்குடி புனிதா மரணங்கள் ஏற்படுத்திய தாக்கம், பல பாலியல் குற்றங்கள் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்ட நிலையை மாற்றி, காவல்துறை வரை கொண்டுவந்தன. பாதிக்கப்பட்டவர்கள் குறித்தோ, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்றியோ அவர்களின் நலன் கருதி அடையாளம் காட்டாமல் இத்தகைய செய்திகளை வெளியிட்டது புதிய தலைமுறை.

காணொளி:சுவடுகள்: நாட்டை உலுக்கிய ஒரு குற்றம்

ராணுவ ஆடைத் தொழிற்சாலையில் பணி:விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 23 Aug 2013 10:38 PM PDT


மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Ordnance Clothing Factory என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள 272 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Semi Skilled Grade பிரிவில் Tailor, Machanic Sewing Machine, Electrician போன்ற பிரிவுகளில் 127 இடங்கள் உள்ளன. இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 100 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு நடைபெறும். அதில் பெறப்படும் மதிப்பெண்கள், கல்வித் தகுதி மற்றும் தொழில்நுட்ப அறிவு அடிப்படையில் இறுதி செய்யப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் தமிழ், ஆங்கிலம் அல்லது இந்தி ஆகியவற்றில், ஏதேனும் ஒரு மொழியில் தேர்வு எழுதலாம். தமிழில் தேர்வெழுத விரும்புவோர், விண்ணப்பத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அப்படிக் குறிப்பிடாத விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத்தில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். கூடுதல் விவரங்களை www.ofbindia.gov.in என்ற இணைய தளத்தில் காணலாம்.

அடிப்படைத் தகுதிகள்

விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு அல்லது National Council of Trades for Vocational Training, National Trade Certificate I.T.I ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ சான்றிதழை பெற்ற விண்ணப்பதாரர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, ‌பழங்குடியின வகுப்பினருக்கு 5 ஆண்டு வரை வயதுத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ராணுவத்தில் பணிபுரிந்த வருடங்களோடு கூடுதலாக 3 ஆண்டுகளும், Ordnance Factory நிறுவனத்தில் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களுக்கு தனியாகவும் வயதுத் தளர்வு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் அரசு அலுவலகத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருப்பின், 5 ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு உண்டு. எழுத்துத் தேர்வை தமிழில் எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். கூடுதல் விவரங்களை அறிய www.ofbindia.gov.in என்ற இணைய தளத்தை அணுகலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பப் படிவத்தை Employment News – ஆகஸ்ட் 10 – 16 தேதியிட்ட செய்தித்தாளில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரியை கத்தரித்தோ அல்லது A4 தாளில் தட்டச்சு செய்தோ அல்லது சொந்த கையெழுத்தினால் எழுதியோ தயார் செய்து கொள்ளவும்.

விண்ணப்பப் படிவத்துடன் மதிப்பெண் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், பணி அனுபவச் சான்றிதழ் உள்ளிட்டவற்றின் நகல்களை இணைத்து The General Manager, Ordnance Clothing Factory, Avadi, Chennai – 600 054 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முன்னாள் ராணுவ வீரர்கள் தங்களின் பணி விலகல் சான்றின் நகலை கட்டாயம் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் மீது Application for the Post of என்று எழுதி, பணிபுரிய விரும்பும் பிரிவைக் குறிப்பிட்டு, OBC, ST, SC உள்ளிட்ட பிரிவுகளில் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதையும் அவசியம் குறிப்பிட வேண்டும்.விண்ணப்பக் கட்டணமாக 50 ரூபாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பக் கட்டணத்தை‌ The General Manager, Ordnance Clothing Factory, Avadi, Chennai – 600 054 என்ற பெயரில் வரைவோலை அல்லது அஞ்சல் ஆணையாக எடுத்துச் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி. கூடுதல் விவரங்களுக்கு www.ofbindia.gov.in என்ற இணைய தளத்தை அணுகலாம்.

சட்டவிரோத கிரானைட் வெட்டியெடுப்பு: பி.ஆர்.பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு

Posted: 23 Aug 2013 10:15 PM PDT


மதுரையில் புறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டியெடுத்ததாக பி.ஆர்.பி நிறுவன அதிபர் பழனிச்சாமி, அவரது மகன்கள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமோகூர், திண்டியூர், சிவலிங்கம் ஆகிய கிராமங்களில் கண்மாய், அரசு நிலங்களில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டிருப்பதாக மதுரை வடக்கு தாலுகா வட்டாட்சியர், ஒத்தக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குறிப்பாக திண்டியூர் கிராமத்தில் கால்வாய் மற்றும் வண்டிப்பாதைகளில் கிரானைட் கற்களின் கழிவுகளை அடுக்கிவைத்து ஆக்கிரமித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 3 லட்சத்து 31ஆயிரத்து 368 புள்ளி ஆறு ஒன்று கனமீட்டர் அளவுக்கு கிரானைட் கற்களை வெட்டியெடுத்ததன் மூலம், அரசுக்கு 662 கோடியே 74 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பி.ஆர்.பி நிறுவன அதிபர் பழனிச்சாமி, அவரது மனைவி, 2 மகன்கள் உட்பட 11 பேர் மீது 10 பிரிவுகளில் ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உடலில் தீப்பற்றும் குழந்தை தொண்டு நிறுவனத்தில் ஒப்படைப்பு

Posted: 23 Aug 2013 10:09 PM PDT


உடலில் தீப்பற்றுவதாக கூறப்பட்ட விழுப்புரம் மாவட்டம் டி.பரங்குனி கிராமத்தை சேர்ந்த இரண்டரை மாத ஆண் குழந்தை தற்போது தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது.முழு சிகிச்சைக்கு பிறகு குழந்தையை மருத்துவர்கள் நேற்று டிச்சார்ஜ் செய்தனர்.

டி.பரங்குனி கிராமத்தில் குழந்தை ராகுலில் உடலில் தீப்பற்றியதாகவும், அதனால் வீடு எரிந்ததாகவும் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து குழந்தை ராகுலையும்,தாயையும் ஊருக்குள் இருக்க அந்த கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடலில் தீ பற்றுவதற்கான காரணத்தை கண்டறிய கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. சிகிச்சைகளுக்கு பிறகு குழந்தையின் உடலில் தீ பிடிப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்வது குறித்து போலீசார் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

Posted: 23 Aug 2013 10:08 PM PDT


மும்பையில் பெண் பத்திரிகையாளர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் ஜாதவ் என்ற அவர், மும்பையின் மதன்புரா பகுதியில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட சந்த் பாபு என்ற 19 வயது நபர் அளித்த தகவலின் பேரில் இவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டுள்ள மேலும் மூன்று பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இவர்களை 20 தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாக மும்பை காவல்துறை ஆணையர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள தனியார் ஆலை வளாகத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற 23 வயது பெண் பத்திரிகையாளரை, 5 பேர் கொண்ட ஒரு கும்பல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது.

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அப்பெண்ணின் உடல்நிலை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மும்பை போலீசாரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்க அறிக்கை கேட்டுள்ளது.

ஐ.நா.சபைக்கு கருணாநிதி வலியுறுத்தல்

Posted: 23 Aug 2013 09:37 PM PDT


இலங்கையில் அடிப்படை ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் என உலகத் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைமை ஆணையர் நவநீதம் பிள்ளையிடம் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேரில் வழங்கியதை குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கைக்குச் சென்று நிலைமையை நேரிலேயே அறிந்துகொள்ளும்படி அப்போது கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அதன்படியே, இந்த மாத இறுதியில் நவநீதம் பிள்ளை இலங்கைக்குச் செல்ல உள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கைச் செல்லும் நவநீதம் பிள்ளை, வடக்கு மாகாணத்தில் தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு கட்டவிழ்த்துவிட்டுள்ள முறைகேடுகள் குறித்து கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழர்களுக்குச் சென்றடைய வேண்டிய நிவாரண உதவிகள் முறையாகச் சென்றடையவில்லை என்ற குறை சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வருவதைப் பற்றியும் நேரடியாகக் கண்டறிந்து நவநீதம் பிள்ளை சரி செய்வார் என்றும் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ரயில்வேயில் பல்வேறு பணியிடங்கள்:விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

Posted: 23 Aug 2013 09:22 PM PDT


இந்திய ரயில்வேயில் அங்கம் வகிக்கும் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 46 காலிப் பணியிடங்களுக்கு விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மொத்தமுள்ள பணியிடங்களில், ஓட்டப் பந்தயம், கூடைப் பந்து, ஹேண்ட் பால், கோ-கோ, பவர் லிஃப்டிங், டேபிள் டென்னிஸ், கைப்பந்து, வெயிட் லிஃப்டிங், பேட்மிண்ட்டன், கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்ற வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் வீரர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடி இனத்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தென்கிழக்கு மத்திய ரயில்வேவிற்கு உட்பட்ட எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம். கூடுதல் விவரங்களை அறிய www.secr.indianrailways.gov.in என்ற இணைய தளத்தை அணுகவும்.

அடிப்படைத் தகுதி

விளையாட்டு வீரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருத்த வேண்டும். ஒரு நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் பத்து நிமிடத்திற்குள் வேகமாக தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன், அசோசியேஷன் ஆஃப் இந்தியன் யுனிவர்சிட்டி, நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷன் ஆகியவற்றிலிருந்து சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம்.

நான்கு முறைக்கும் அதிகமாக சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்ட ஹாக்கி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்கள் 18 வயதிற்கு குறையாமலும், 25 வயதிற்கு மிகாமலும் இருத்தல் அவசியமாகும். கூடுதல் விவரங்களை www.secr.indianrailways.gov.in என்ற இணைய தளம் மூலமாக அறிந்துகொள்ளலாம்.

“1913″: சென்னை மாநகராட்சி புகார் பிரிவு தொலைபேசி எண்

Posted: 23 Aug 2013 09:19 PM PDT


சென்னை மாநகராட்சியின் புகார் பி‌ரிவில் சுகாதாரம் மற்றும் மின் பழுது தொடர்பான புகார்களே அதிக அளவில் பதிவாகி உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டு வாழும் மக்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளை தெரிவிக்க நிர்வாகம் சார்பில் பிரத்தியேக புகார் மையம் செயல்பட்டு வருகிறது.

இருபத்து நான்கு மணி நேரமும் செயல்படும் இந்த மையத்தை 1913 என்ற தொலைபேசி எண் மூலமாக தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகாரை தெரிவித்து வருகின்றனர். கொசு பிரச்சனை,நாய் தொல்லை ,குடிநீர் விநியோகம் என மொத்தம் 92 வகையான பிரச்சனைகளை மக்கள் பதிவு செய்யமுடியும்.புகாரை பதிவு செய்வோருக்கு பதிவு எண் ஒன்று குறுந்தகவல் மூலமாக வழங்கப்படும்.அதன் மூலம் புகாரின் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை குறிந்து புகார் கொடுத்தவர் அறிந்து கொள்ளலாம்.கடந்த இரண்டு ஆண்டு கால கட்டத்தில் மொத்தம் பதினெட்டாயிரம் புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இதில் சுகாதாரம் மற்றும் மின் பழுது தொடர்பான புகார்கள் அதிகமாக பதிவாகி இருக்கின்றன.இந்தாண்டு மே மாதம் முதல் பதிவாகும் புகார்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கின்றன.

மொத்தமுள்ள 15 மண்டலங்களில் அண்ணா நகர் ,திரு.வி.க நகர், தேனாம்பேட்டை,கோடம்பாக்கம்,ராயபுரம் ஆகியவற்றில் இருந்து அதிகமாக புகார்களும் ,மணலி ,திருவொற்றியூர் போன்றவற்றில் இருந்து மிக மிக குறைவாகவும் புகார்கள் பதிவாகி உள்ளன.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™