Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


உணவுப் பாதுகாப்பு மசோதா தன்னிச்சையானது : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

Posted: 02 Aug 2013 10:59 PM PDT


நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள உணவுப் பாதுகாப்பு மசோதாவில் உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம் மத்திய அரசின் தன்னிச்சையான முடிவு என‌ குற்றம் சாட்டியுள்ளார். இந்ந சட்டம் மூலமாக அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளபோதும், தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்த சட்டம், உணவுப் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே பொது விநியாகத் திட்டத்தை ஏற்கனவே செயல்படுத்திவரும் மாநிலங்களுக்கு போதிய உணவு தானியங்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வது, தற்போது வழங்கப்பட்டுவரும் விலையில் உணவு தானியங்களை 3 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்க முடியும் என்ற முடிவை மாற்றியமைப்பது போன்ற திருத்தங்களை மசோதாவில் ஏற்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீரில் 2-வது நாளாக இன்றும் அடுத்தடுத்து நிலநடுக்கம்

Posted: 02 Aug 2013 10:58 PM PDT


ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் 2-வது நாளாக இன்றும் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் கிஸ்துவார் மற்றும் டோடா மாவட்டங்களை மையமாக கொண்டு உருவான முதல் நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5-2 ஆக பதிவானது. இதனால் கடும் மழை மற்றும் பனிபொழிவையும் பொருத்தப்படாமல், காஷ்மீர்வாசிகள் வீதிகளில் திரண்டனர். பின்னர் 3.7 மற்றும் 2.9 ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து பதிவானதால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உருவான பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. நேற்று காலை காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் மையமாக கொண்டு அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8 மணிக்கு முதலில் ஏற்பட்ட நிலநிடுக்கம், ரிக்டர் அளவில் 5 புள்ளி 4ஆக பதிவானது.

மதுவுக்கு அடிமையாகாத மக்கள் : உதாரணமாக வாழும் கிராமம்

Posted: 02 Aug 2013 10:02 PM PDT


மதுவுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மது மட்டுமல்லாமல், எந்த ஒரு போதை வஸ்துவையும் பயன்படுத்தாத ஒரு கிராமமும் இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக போதை வஸ்துகளை பயன்படுத்தாமல் வாழ்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் இவர்கள், பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுந்து கொண்டிருந்தாலும், அதற்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.மதுபானக் கடைகளுக்கு எதிராக மக்கள் போராடினாலும், பூரண மதுவிலக்கு என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது.

ஆனால், தேனி அருகே உள்ள குண்டல் நாயக்கன்பட்டி கிராமத்தில், பூரண மதுவிலக்கு எழுத்தப்படாத சட்டமாக இருக்கிறது. இங்கு வசிக்கும் 700க்கும் அதிகமான மக்கள், மதுபானம் மட்டுமின்றி எந்த ஒரு போதை வஸ்துவையும் பயன்படுத்தியதே இல்லை.

போதைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கையின் காரணமாக அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், தங்களின் குழந்தைகளுக்கும் இதனை போதித்து வருவதாகவும் குண்டல் நாயக்கன்பட்டி மக்கள் தெரிவித்தனர்.

போதைப் பொருள் விஷயத்தில் மட்டுமின்றி, பெண்கள் திருமணத்திற்கு தடையாக விளங்கும் வரதட்சணை விஷயத்திலும், குண்டல் நாயக்கன்பட்டி மக்கள் ஆச்சரியப்பட வைக்கின்றனர். இந்த 2 விஷயங்களும் தங்கள் முன்னோர்களால் முன்மொழியப்பட்டு, தலைமுறை தலைமுறையாக கடைப்பிடிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழும் குண்டல் நாயக்கன்பட்டி கிராம மக்கள் நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்கள்.

காணொளி:மக்களே அமல்படுத்திய மதுவிலக்கு:உதாரணமாக வாழும் கிராம மக்கள்

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Posted: 02 Aug 2013 09:51 PM PDT


மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழைகாரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லூர் அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. முழுமையாக வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 3ஆவது நாளாக பில்லூர் அணை நிரம்பியுள்ளதால், கரையோர பகுதியிலுள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து நீர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பவானி சாகர் அணையும் நிரம்ப வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பில்லூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் மூலம் நீர் மின் நிலையத்தில் 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

திருட்டு வழக்கில் கைதானவர் படுகொலை: டெல்லி போலீசார் 5 பேர் கைது

Posted: 02 Aug 2013 08:05 PM PDT


திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவரை படுகொலை செய்ததாக டெல்லி போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியைச் குஷி பால் என்பவரை திருட்டு வாகனங்கள் வாங்கி விற்பனை செய்துவந்ததாக டெல்லி போலீசார் கைதுசெய்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் மர்மமான முறையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், டெல்லி போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டனர். காணொளி:திருட்டு வழக்கில் கைதானவர் படுகொலை: போலீசார் 5 பேர்கைது

வினாடிக்கு 80,000 கன அடி நீர்வரத்து: ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு

Posted: 02 Aug 2013 08:01 PM PDT


கர்நாடகா அணைகளிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகமாகியுள்ளதால், ஒகேனக்கல் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால், கரையோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான, மற்றும் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து தண்ணீரின் அளவு அதிகமாகி வருகிறது. அதனால், அடிபெருக்கு தினத்தை கொண்டாட யாரும் ஒகேனக்கல் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 14ஆவது நாளாக இன்று ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கிறது. காணொளி:வினாடிக்கு 80,000 கன அடி நீர்வரத்து: ஒகேனக்கல்லில்வெள்ளப்பெருக்கு

அருப்புக்கோட்டை அருகே அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட கருந்திரிகள்: வருவாய்த்துறையினர் பறிமுதல்

Posted: 02 Aug 2013 07:06 PM PDT


அருப்புக்கோட்டை அருகே அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட கருந்திரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டம் புளியம்பட்டி அருகே வாகன சோதனை மேற்கொண்ட வருவாய்த்துறையினர் மினி லாரி ஒன்றைச் சோதனையிட்டனர். அப்போது பட்டாசுகள் தயாரிக்கத் தேவையான கருந்திரிகள் உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து மினி லாரியைப் பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், ஒட்டுநர் கோபால்சாமியை அருப்புக்கோட்டை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஜிம்பாப்வே தேர்தல் முடிவு: அதிபர் முகாபேயின் கட்சி வெற்றி

Posted: 02 Aug 2013 06:59 PM PDT


ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் ராபர்ட் முகாபேயின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வேயில் கடந்த புதன்கிழமை அதிபர் தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் ஒருசேர நடத்தப்பட்டது. ஜிம்பாப்வே சுதந்திரம் பெற்றது முதலே தலைமைப் பீடத்தில் வீற்றிருக்கும் தற்போதைய அதிபர் ராபர்ட் முகாபே 7வது முறையாக களம் கண்டார். அவரை எதிர்த்து, தற்போதைய பிரதமர் மோர்கன் வான்கிரை அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். நாடாளுமன்ற தேர்தலிலும் இவர்களது தலைமையின் கீழ் செயல்படும் கட்சிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 210 நாடாளுமன்ற தொகுதிகளில் இதுவரை 186 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், 137 இடங்களை அதிபர் ராபர்ட் முகாபேயின் கட்சி கைப்பற்றியுள்ளது. எஞ்சிய 24 தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறது. அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் முகாபேயின் கட்சி மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பெற்றுள்ளதால் ஜிம்பாப்வே அரசியல் சட்டத்தை திருத்தியமைக்கும் அளவுக்கு அதிபர் ராபர்ட் முகாபே பலம் பெற்றுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 35 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு

Posted: 02 Aug 2013 06:53 PM PDT


ஜம்மு-காஷ்மீரின் காத்துவா மாவட்டம் உஜ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், சிக்கித் தவித்த 35 பேரை, இந்திய விமானப் படையினரும், எல்லைப் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பாக மீட்டனர். உஜ் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக மெய்சாக் பகுதியில் 18 பேரும், கண்ட்வால் பகுதியில் 11 பேரும் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த காவல்துறையினர், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ராணுவ ஹெலிகாப்டர்கள் உதவியுடன், வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். இதனிடையே, காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் ரோம்ஷி நல்லா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் பெண் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. காணொளி: ஜம்மு-காஷ்மீரில் வெள்ளப்பெருக்கு:35 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு  

உத்தரபிரதேசத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு: ஆம் ஆத்மி கட்சியினர் உண்ணாவிரதம்

Posted: 02 Aug 2013 06:49 PM PDT


உத்தரபிரதேசத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்கா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளது. உத்தரபிரதேச தலைநகர் லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். மணல் கடத்தலுக்கு எதிராக துர்கா கடும் நடவடிக்கைகளை எடுத்ததை பொறுத்துக் கொள்ள முடியாத மணல் கடத்தல் கும்பல், அரசின் இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் இருப்பதாக அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், துர்கா மீதான நடவடிக்கையை உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் நியாயப்படுத்தியுள்ளார். கவுதம புத்தா நகரில் மசூதி ஒன்றின் சுற்றுச்சுவரை இடிக்க உத்தரவிட்ட துர்கா மீதான நடவடிக்கை சரியானதே என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட துர்கா, முதலமைச்சரின் தனிச் செயலாளர் அனிதாசிங்கை லக்னோவில் சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே துர்கா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. காணொளி: துர்கா மீதான நடவடிக்கை:ஆம் ஆத்மி கட்சியினர் உண்ணாவிரதம்  


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™