puthiyathalaimurai.tv online |
- இந்த ஆண்டு சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கும்: சரத் பவார்
- ரூபாய் மதிப்பு குறைந்தாலும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது குறையவில்லை
- வெளிநாட்டு டி.வி.க்களுக்கு அதிக வரி
- ஹிமாச்சல் ஆப்பிளுக்கு கடும் போட்டி
- கிருஷ்ண பூனியாவுக்கு கேல் ரத்னா விருது?: இன்று இறுதி முடிவு
- வெங்காயம் விலை குறையத் தொடங்கியுள்ளது
- இந்திய ரூபாய் மதிப்பு இன்றும் சரிவு
- உதகை படுகர் நலச்சங்க தேர்தல் விவகாரம்:ஊர்வலமாக சென்ற 400 பேர் கைது
- அந்தியூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக புகார்
- தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்:பெரிஸிடம் பிரதமர் வலியுறுத்தல்
| இந்த ஆண்டு சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கும்: சரத் பவார் Posted: 19 Aug 2013 10:32 PM PDT சர்க்கரை உற்பத்தி இந்த ஆண்டில் அதிகரிக்கும் என மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார். சர்க்கரை கடந்த ஆண்டு 2 கோடியே 45 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கணிசமாக அதிகரிக்கும் என டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பவார் தெரிவித்தார். பருவ மழை நன்றாக பெய்து வருவதால், இந்த ஆண்டில் கரும்பு சாகுபடி அதிகரிக்கும் என்ற அவர், சுமார் 48 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சர்க்கரை உற்பத்தியில் உலகிலேயே இந்தியா இரண்டாவது இடம் வகிக்கும் நிலையில், நுகர்வில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. |
| ரூபாய் மதிப்பு குறைந்தாலும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது குறையவில்லை Posted: 19 Aug 2013 10:29 PM PDT அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்துக்கு சரிந்துவிட்ட போதும் வெளிநாடுகளுக்கு விடுமுறைக்கால சுற்றுலா செல்லும் திட்டத்தை பெரும்பாலான இந்தியர்கள் கைவிடவில்லை. யாத்ரா டாட் காம் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 63 சதவீதம் பேர் வெளிநாட்டு சுற்றுலா திட்டத்தை கைவிடப் போவதில்லை என கூறியுள்ளனர். 37 சதவீதம் பேரே ரூபாய் மதிப்பு நிலை பெறும் வரை சுற்றுலாவை தள்ளிப்போடுதாக தெரிவித்துள்ளனர். ரூபாய் மதிப்பு சரிவால் வெளிநாட்டு சுற்றுலா பயணத்துக்கு அதிகம் செலவழிக்கவேண்டி வரும். வெளிநாட்டு சுற்றுலா என்றால் பெரும்பாலானோர் தாய்லாந்து, மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளைத்தான் முதலில் தேர்ந்தெடுக்கின்றனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது. |
| வெளிநாட்டு டி.வி.க்களுக்கு அதிக வரி Posted: 19 Aug 2013 10:24 PM PDT வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் எல்சிடி, எல்இடி, பிளாஸ்மா போன்ற நவீன ரக தொலைக்காட்சி பெட்டிகளை கொண்டு வரும் போது இனி அவற்றுக்கு 36 சதவீத வரி கட்ட வேண்டியிருக்கும். வரும் 26ம் தேதி முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது. வெளிநாடுகளில் இது போன்ற டிவிக்கள் ஏறக்குறைய பாதிவிலைக்கு கிடைக்கின்றன. மேலும் இவற்றை கொண்டு வருவதற்கு வரியும் இல்லை. இதனால் வெளிநாடு சென்று திரும்பும் பலரும் இத்தகைய டிவிக்களை கொண்டு வரும் போக்கு அதிகரித்து வந்த நிலையில் அவற்றுக்கு அரசு வரி விதித்துள்ளது. இறக்குமதிகளை குறைத்து அதன் மூலம் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அரசின் அறிவிப்பை இந்திய மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. இதனால் உள்நாட்டு உற்பத்தி வளமடையும் என அவை கூறியுள்ளன. |
| ஹிமாச்சல் ஆப்பிளுக்கு கடும் போட்டி Posted: 19 Aug 2013 10:20 PM PDT இந்தியாவில் ஆப்பிள் விளைச்சலுக்கு புகழ் பெற்ற மாநிலங்களில் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலமும் ஒன்றாகும். ஹிமாச்சலில் விளையும் ஆப்பிள்களுக்கு இந்தியா முழுக்க வரவேற்பு உள்ள நிலையில் தற்போது சீனா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து கடும் போட்டி எழுந்துள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதியாகும் ஆப்பிள்களால் தங்கள் மாநில ஆப்பிள்களுக்கு வரவேற்பு குறைந்துள்ளதாக ஹிமாச்சல முதல்வர் வீரபத்ர சிங் கூறியுள்ளார். சர்வதேச அளவிலான சவால்களை சமாளிக்க தங்கள் மாநில ஆப்பிள்களை மேலும் தரமுள்ளதாக ஆக்க வேண்டும் என்று வீரபத்ர சிங், விவசாயிகளை கேட்டுக் கொண்டார். |
| கிருஷ்ண பூனியாவுக்கு கேல் ரத்னா விருது?: இன்று இறுதி முடிவு Posted: 19 Aug 2013 10:19 PM PDT தடகள வீராங்கனை கிருஷ்ண பூனியாவுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படுவது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. விளையாட்டுத்துறையில் சாதிக்கும் நட்சத்திரங்களுக்கு உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருது வழங்கப்படும். இந்த ஆண்டு துப்பாக்கி சுடுதல் வீரர் ரஞ்சன் சோதிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுந்தது. பாராலிம்பிக் வீரர் கிரிஷா, வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ண பூனியா ஆகியோர் தங்களுக்கும் கேல் ரத்னா விருது வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் விருதுக்கு எந்தெந்த வீரர்களைத் தேர்வு செய்வது என்பது குறித்து முடிவாகவில்லை. இந்த நிலையில் இன்றும் பேச்சுவார்த்தை தொடர்வதால் கிருஷ்ணா பூனியா உள்ளிட்ட வீரர்களுக்கு விருது வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. |
| வெங்காயம் விலை குறையத் தொடங்கியுள்ளது Posted: 19 Aug 2013 10:14 PM PDT வெங்காய விலை உயர்வால் கலங்கிப் போயிருந்த குடும்பத்தலைவிகளுக்கு தற்போது வெங்காயம் விலை குறையத் தொடங்கியுள்ளது என்பது ஆறுதலான செய்தியாகும். இந்தியாவின் மிகப் பெரிய வெங்காய சந்தையான லாசல் கானில் வெங்காயம் குவிண்டாலுக்கு 3 , 250 ரூபாய் என்ற அளவுக்கு விலை குறைந்துள்ளது. இது கடந்த வார விலையை விட 30 சதவீதம் குறைவாகும். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மற்ற முக்கிய சந்தைகளிலும் வெங்காயத்தின் விலை சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளது. மொத்த விலை சந்தைகளில் வெங்காய விலை குறைந்திருந்தாலும் இதன் பலன் நுகர்வோரை அடைய இன்னும் 3 வாரங்களாவது ஆகும் எனக் கூறப்படுகிறது. செப்டம்பர் மத்தியில் சில்லறை விற்பனையில் வெங்காயத்தின் விலை கணிசமாக குறையும் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
| இந்திய ரூபாய் மதிப்பு இன்றும் சரிவு Posted: 19 Aug 2013 10:03 PM PDT அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு இன்றும் தொடர்ந்தது. இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சற்று நேரத்திலேயே ரூபாயின் மதிப்பு 64 ரூபாய் என்ற அளவுக்கும் கீழே சென்று 64.01 என்ற நிலையை எட்டியது. ரூபாயின் மதிப்பு நேற்று ஒரே நாளில் ஒரு ரூபாய் 42 காசு சரிந்து அதிர வைத்த நிலையில் இன்றும் அதே போக்கு தொடர்வது அரசுக்கு நெருக்கடியை கடுமையாக அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளும் சரிவுப்பாதையில் இருந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சற்று முன் 300 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 80 புள்ளிகள் வரை வீழ்ந்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் தொடர் விளைவாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து இதன் மூலம் விலைவாசி கடுமையாக உயரும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. மேலும் வங்கிக் கடன்களுக்கான வட்டி வீதங்களும் அதிகரிக்கும் என்றும் வீடு மற்றும் வாகனக் கடன் வட்டி உயரும் என்ற கவலைகளும் ஏற்பட்டுள்ளது. |
| உதகை படுகர் நலச்சங்க தேர்தல் விவகாரம்:ஊர்வலமாக சென்ற 400 பேர் கைது Posted: 19 Aug 2013 09:35 PM PDT நீலகிரி மாவட்டம் உதகையில் படுகர் நலச்சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, ஊர்வலமாகச் சென்ற 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தேர்தல் நடத்துவதில் பிரச்னை இருந்துவந்த நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குண்டன் தலைமையிலான குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு தேர்தல் நடத்த அனுமதி பெற்றது. தேர்தல் தேதியை அறிவிப்பதற்காக சங்கக் கட்டடம் நோக்கி சென்றுபோது, அனுமதி பெறாமல் ஊர்வலம் நடத்தியதாகக்கூறி போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனிடையே, அ.தி.மு.க.வைச் சேர்ந்த உதகை சட்டமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர், பொதுக்குழுவைக் கூட்டி இளம் படுகர் நலச்சங்கம் என்ற பெயரை மாற்றி தீர்மானம் நிறைவேற்றியது. |
| அந்தியூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக புகார் Posted: 19 Aug 2013 08:37 PM PDT ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள மேட்டூரைச் சேர்ந்த பெரியநாயகம் என்பவரது குடும்பத்தினர், அங்குள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். நடராஜன் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் தாங்கள் பணிபுரிந்துவருவதாகவும், அவரிடம் வாங்கிய கடனில் ஒருபகுதியை திருப்பிக் கொடுத்தவிட்டநிலையில், மீண்டும் முழு தொகையை வழங்க வேண்டும் என செங்கல் சூளை நிர்வாகத்தினர் மிரட்டி வருவதாகவும் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்:பெரிஸிடம் பிரதமர் வலியுறுத்தல் Posted: 19 Aug 2013 08:19 PM PDT இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனே விடுவிக்குமாறு இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜிஎல் பெரிஸிடம் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்த பெரிஸ், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அப்போது, இலங்கையில் மாகாண தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என்று பிரதமரிடம் பெரிஸ் உறுதியளித்தார். இலங்கையில் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பெரிஸிடம் பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டார். பின்னர், இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தை ஜிஎல் பெரிஸ் சந்தித்தார். தமிழக மீனவர் விவகாரம், இருநாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு, இலங்கையில் சம்பூர் மின் திட்டம் போன்றவை குறித்து இருவரும் விவாதித்தனர். பின்னர் பேசிய ஜி எல் பெரிஸ், தமிழக மீனவர் விவகாரம் குறித்து இரு நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |