puthiyathalaimurai.tv online |
- சுதந்திர இந்தியாவின் முதல் கொடியை தயாரித்தவர் தமிழர்
- விண்ணிலும் முத்திரை பதித்த பாரதம்: குறுகிய காலத்தில் பிரமிக்கத்தக்க வளர்ச்சி
- கட்சத்தீவில் உரிமைகள் மீட்கப்படும்: ஜெயலலிதா உறுதி
- மத்திய அரசு மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு
- சுதந்திரப் போராட்ட பெண் போராளிகளுக்கு புதிய தலைமுறையின் வீரவணக்கம்..
- முதல் 3 நாடுகளில் இந்தியா! : வலிமையான ஜனநாயகமே காரணம்
- சென்னையில் விடிய விடிய மழை: இன்றும் மழை தொடரும்
- விடுதலைப் போராட்டத்தில் பத்திரிகைகள்…….
- தியாகிகள் கடந்து வந்த பாதை….தியாகிகளை கௌரவிப்பது நமது கடமை
- தனி மனித சுதந்திரமே சுதந்திரத்தின் அடையாளம்: முதலமைச்சர் உரை
| சுதந்திர இந்தியாவின் முதல் கொடியை தயாரித்தவர் தமிழர் Posted: 14 Aug 2013 11:01 PM PDT நமது நாட்டின் தேசிய கொடியை வடிவமைத்தவர் ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி பிங்கலி வெங்கைய்யா. ஆனால், சுதந்திர இந்தியாவுக்காக பல லட்சக்கணக்கான தேசியக் கொடியை தயாரித்து தந்தவர் ஒரு தமிழர் என்பது பலரும் அறிந்திராத உண்மை. தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த அந்த தமிழரைப் பற்றிய அரிய தகவல்கள்…… சுதந்திர இந்தியாவில் பறந்த முதல் கொடியை தயாரித்தவர் என்ற பெருமைக்குரியவர் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வசித்த வெங்கடாச்சல செட்டியார். மகாத்மா காந்தியின் மீது கொண்ட பற்றின் காரணமாக, பருத்தித் துணிகளை நெசவு செய்து அவற்றை சந்தைப்படுத்தினார். இதற்கு அவரது குடும்பத்தினரும் உதவி செய்து, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டங்கள் தீவிரமடைந்து, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு சில தினங்களே இருந்த போது, தேசியக் கொடிகளை தயாரிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 1947ஆம் ஆண்டு இதேநாளில் ஆங்கிலேயர்களின் அடக்கு முறையிலிருந்து விடுதலை பெற்ற இந்தியாவில், பறந்த முதல் கொடி வெங்கடாச்சல செட்டியார் தயாரித்ததே. செங்கோட்டையில் ஏற்றுவதற்காக இவர் தயாரித்த பிரத்யேகமான தேசியக் கொடியின் தரத்தைப் பாராட்டி ஜவஹர்லால் நேரு, வெங்கடாச்சல செட்டியாருக்கு கடிதம் எழுதியுள்ளார். தேசத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில் கொடியைத் தயாரித்த வெங்கடாச்சல செட்டியார், 1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி கொல்லப்பட்ட போது, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பட்டாடையும் நெசவு செய்து கொடுத்தார். நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட வெங்கடாச்சல செட்டியார், 1957ஆம் ஆண்டு தனது 49ஆவது வயதில் உயிரிழந்தார். புதிய தலைமுறைக்காக செய்தியாளர் துரை பாண்டியனுடன் கார்த்திகா. சுதந்திர இந்தியாவில் பறந்த முதல் கொடியை தயாரித்தவர் என்ற பெருமைக்குரியவர் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வசித்த வெங்கடாச்சல செட்டியார். மகாத்மா காந்தியின் மீது கொண்ட பற்றின் காரணமாக, பருத்தித் துணிகளை நெசவு செய்து அவற்றை சந்தைப்படுத்தினார். இதற்கு அவரது குடும்பத்தினரும் உதவி செய்து, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டங்கள் தீவிரமடைந்து, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு சில தினங்களே இருந்த போது, தேசியக் கொடிகளை தயாரிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
|
| விண்ணிலும் முத்திரை பதித்த பாரதம்: குறுகிய காலத்தில் பிரமிக்கத்தக்க வளர்ச்சி Posted: 14 Aug 2013 10:49 PM PDT இந்தியா சுதந்திரம் பெற்று 22 ஆண்டுகளுக்குப் பின்னரே விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடங்கப்பட்டது. எனினும், குறுகிய காலகட்டத்தில், வளர்ந்த நாடுகளுக்கு, போட்டியாக விண்வெளித்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இந்தியா எட்டுவதற்கு இஸ்ரோ உதவி புரிந்துள்ளது. 44 ஆண்டு வரலாற்றில், பல குறிப்பிடத்தக்க விண்வெளி சாதனைகளை படைத்த இஸ்ரோவின் பயணம் பற்றிய சிறப்புப் பார்வை …… செவ்வாய் கிரகத்திற்கு ஒரு விண்கலத்தை, 2013 அக்டோபர், நவம்பரில் அனுப்பும் திட்டம் இருக்கிறது. இதுவே நமது முக்கிய இலக்கு. இதனுடன், இந்திய தயாரிப்பான கிரையோனிக் முறையில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவ வேண்டும்.விண்வெளியை ஆய்வு செய்வதோடு, அதை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றுவது எப்படி என்று யோசிப்பதும், அதனை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதும் இஸ்ரோவின் பணியாகும். கடந்த 1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இஸ்ரோ என்றழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், குறுகிய காலத்திலேயே, வளர்ந்த நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை பெற்றது. 1975 ஆம் ஆண்டு ரஷ்யாவின் உதவியுடன் ஆரியபட்டா என்ற செயற்கைக்கோளை அனுப்பிய, விண்வெளியில் கால்தடம் பதித்த இந்தியா, 1980ம் ஆண்டு உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட SLV-3 என்ற ராக்கெட் மூலமாக ரோஹினி என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. அந்த முயற்சி தோல்வியில் முடிந்தாலும், இஸ்ரோ மையம் அடுத்தகட்டத்திற்கு செல்ல அதுவே அடித்தளமாக அமைந்தது. பின்னர் வெளிநாடுகளின் உதவியுடன் சில செயற்கைக்கோள்களை இஸ்ரோ ஏவியது. இதன் பின்னர் 1994ம் ஆண்டு முதல், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட PSLV மற்றும் GSLV ரக ராக்கெட்கள் மூலமாக, இஸ்ரோ பல செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக அனுப்பியது. போக்குவரத்து வழித்தடங்களை எளிதாக அறிந்து கொள்வதற்கு உதவும், CARTOSAT, GSAT, IRNSS உள்ளிட்ட ஏராளமான செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. வானிலை, புவியமைப்பை அறிதல், தொலைதொடர்பு மட்டுமல்லாமல், கல்விக்கு என தனியாகவும் செயற்கைக் கோள்களை இந்தியா அனுப்பியுள்ளது. இந்தியாவின் விண்வெளி திறமையை உலகம் உணர்ந்து கொண்ட தருணம், சந்திராயன் ஆய்வு வாகனம் நிலவில் கால்பதித்த போதுதான். 2008ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திராயன், நிலவில் இருக்கும் கனிம வளங்கள், தட்பவெப்ப நிலையை மட்டும் ஆராயாமல், அங்கு தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதையும் உலகிற்கு சொல்லியது. |
| கட்சத்தீவில் உரிமைகள் மீட்கப்படும்: ஜெயலலிதா உறுதி Posted: 14 Aug 2013 10:36 PM PDT கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டுவோம் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்றைய சுதந்திர தின உரையில் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் சார்பில் வலுவான வாதங்களை தமிழக அரசு முன் எடுத்து வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து தனது அரசு வலியுறுத்தி வருவதாகவும் அவர் தனது உரையில் கூறினார். |
| மத்திய அரசு மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு Posted: 14 Aug 2013 10:26 PM PDT மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தினக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். பெட்ரோல்-டீசல் விலை அடிக்கடி உயர்வதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், அதனைப் பாதிக்கும் வகையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற முனைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழகத்தில் குடும்ப அட்டைகள் மூலம் வழங்கப்படும் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். |
| சுதந்திரப் போராட்ட பெண் போராளிகளுக்கு புதிய தலைமுறையின் வீரவணக்கம்.. Posted: 14 Aug 2013 10:25 PM PDT இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் போராடிய தீர பெண்மணிகள் பலர் உண்டு. அப்படிப்பட்ட சுதந்திரப் போராட்ட பெண் போராளிகளுக்கு இச் சுதந்திர தின நாளில் வீர வணக்கம் செலுத்துகிறது புதிய தலைமுறை. 1857ம் ஆண்டு நாடுதழுவிய அளவில் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரில் துணிவுடன் பங்கேற்று தனது வீரத்தை வரலாற்றில் பதிவு செய்தவர் ஜான்சி ராணி லட்சுமி பாய். போர் வீரனை போல உடையணிந்து இரு கைகளிலும் ஆயுதமேந்தி போராடியவர். ஆனால் தமிழகத்தில் அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடியவர் வீரமங்கை வேலுநாச்சியார். மருதுசகோதரர்களின் துணையுடன், காளையார் கோயிலில் 1780ல் இவர் நடத்திய போராட்டம் மகத்தானது.
இதுபோலவே ராணி மங்கம்மாவும், கர்நாடகத்தில் ராணி சென்னம்மா, ராணி அவந்திபாய் என வீரப்பெண்களின் விடுதலை போர் பட்டியல் நீண்டது.இதுமட்டுமல்லாமல் சுதந்திர போராட்டத்திற்காக மக்களை ஒன்றினைக்கும் இயக்கமாக காங்கிரஸ் இருந்தபோது, அந்த போராட்டங்களிலும் பெண்களின் பங்கு முக்கியமானது. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கவிக்குயில் சரோஜினி நாயுடு, நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் என பலர் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசியப்படையில் பங்கேற்ற வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள், லட்சுமி ஷெகால் போன்ற பெண்களும் செயற்கரிய செயல்களில் ஈடுபட்டனர். வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்ட ருக்மணி லட்சுமிபதி போன்றோர் ஒருபுறம் இருக்க, கோதை நாயகி, கே.பி.சுந்தராம்பாள், டி.கே பட்டம்மாள் போன்றவர்கள் பாடல்கள் மூலம் சுதந்திர வேட்கையை பற்றி எரியச் செய்தனர். அன்னிபெசண்ட் அம்மையார், நிவேதிதா அம்மையார் என அயல்நாட்டுப்பெண்களும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இடம் பிடித்தனர். ஒத்துழையாமை இயக்கத்தில் கதர் ஆடை நெய்தல், அந்நியத்துணிகளை புறக்கணித்தல், மதுக்கடை மறியல் என சுதந்திர வேட்கையில் முகமறியா எண்ணற்ற பெண்கள் போராடினார்கள். |
| முதல் 3 நாடுகளில் இந்தியா! : வலிமையான ஜனநாயகமே காரணம் Posted: 14 Aug 2013 10:02 PM PDT நாடு விடுதலை பெற்ற போது மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த இந்தியப் பொருளாதாரம், கடந்த 66 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களையும், ஏற்றங்களையும் சந்தித்திருக்கிறது. சுதந்திரத்தின் போது பசி, பட்டியினால் வாடிய தேச மக்களின் நிலை மாறி, இன்று உலகளவில் சிறந்த பொருளாதார முன்னேற்றமுள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. அதன் பின்னணி குறித்த தொகுப்பு. 1991க்குப் பின் வியத்தகு முன்னேற்றம் பாம்பாட்டிகளும், பிச்சைக்காரர்களும் நிறைந்த தேசம் என்றுதான், 1947ம் ஆண்டில் இந்தியா பற்றி உலகின் கருதியது. ஆனால் இன்று. உலகின் வேகமாக வளரும் 3 நாடுகளில் ஒன்றாக உள்ளது இந்தியா. 2035ம் ஆண்டில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உருவெடுக்கும் என பல்வேறு நிறுவனங்களின் புள்ளி விவர மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. கடந்த 67 ஆண்டுகளில் சுமையாக கருதப்பட்ட விஷயங்களையே சாதனைக்கான படிக்கற்களாக மாற்றிக் கொண்டுள்ளது இந்தியா. உதாரணமாக பெருகி வரும் மக்கள் தொகையை இந்தியா எப்படி சமாளிக்கும் எனக் கருதிய நிலையில், அதனை சாதகமாக மாற்றிக் கொண்டது இந்தியா. அதிகளவில் இளைஞர்களை கொண்ட நாடு என்பதால், துடிப்பான எதிர்காலம் நிச்சயம் என்ற நிலை உருவாகியுள்ளது. சுதந்தரத்துக்கு பின்னர் சோஷலிச பாதையை தேர்ந்தெடுத்து சென்று கொண்டிருந்த இந்திய பொருளாதாரம், 1991ல் மிகப்பெரிய திருப்பத்தை சந்தித்தது. இந்த ஆண்டில்தான் தாராளமயமாக்கல் கொள்கை கொண்டு வரப்பட்டது. அன்னிய முதலீடுகளுக்கு தேசத்தின் கதவுகள் திறக்கப்பட்டதால், மக்களுக்கு புதிய வாய்ப்புகளும் கிடைத்தன. தடுமாறிய அன்னியர்கள்.சமாளித்த இந்தியா குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாறியதும், ஏழைகள் கையிலும் செல்ஃபோன்கள் தவழ்வதும் ஒருபுறம் என்றால், வேலைவாய்ப்பின்மை என்ற நிலை மாறி வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை எனச் சொல்லுமளவுக்கு இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது. திறமை வாய்ந்த இந்திய இளைஞர்கள் வருகையால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே, தங்கள் நாட்டினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சட்டம் போடுகின்றன. இப்போது கூட நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகின. ஆனால் உலகெங்கும் வீசிய பொருளாதார மந்தநிலை காரணமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளே திக்குமுக்காடிய போதும், நம் நாடு வெகு விரைவிலேயே சரிவில் இருந்து மீண்டது. சாதனை படைக்குமா இளைய தலைமுறை? தேசத்தின் பொருளாதாரம் குறித்து பெருமைகள் பல இருந்தாலும் வருத்தங்களுக்கும் பஞ்சமில்லை. நாட்டின் வளர்ச்சி அனைத்து பகுதிகளிலும் சீரானதாக இல்லை. மத்திய மாநிலங்களில் வேரூன்றியுள்ள நக்சல் பிரச்னையை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக கூறப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கையே நமக்கு எதிராக திரும்பியுள்ளது. ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் ஏற்படும் உள்நாட்டு பிரச்னை கூட நம்மூரில் தங்கத்தின் விலையும் பெட்ரோலின் விலையும் உயர காரணமாகின்றன. இதோடு புதுப்புது உச்சங்களை தொட்டு வரும் மலைக்க வைக்கும் ஊழல்களும் இந்திய பொருளாதாரம் குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளன. இது போன்று கவலை தரும் பிரச்னைகள் ஏராளமாக இருந்தாலும், இந்தியாவின் இளைய தலைமுறை, இவற்றையெல்லாம் முறியடித்து சாதனை படைக்கும் என நம்பலாம். |
| சென்னையில் விடிய விடிய மழை: இன்றும் மழை தொடரும் Posted: 14 Aug 2013 09:48 PM PDT வளிமண்டல மேல் அடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட ஆந்திர கடலோர பகுதியின், வளி மண்டல மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பகலில் பெய்யத் தொடங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது.சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் பாதிப்புக்கு உள்ளாகினர். சென்னையைப் போன்று, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுச்சேரியில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலையில் 8 சென்டி மீட்டர் மழையும், செஞ்சியில் 7 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. |
| விடுதலைப் போராட்டத்தில் பத்திரிகைகள்……. Posted: 14 Aug 2013 09:36 PM PDT 67ஆவது சுதந்தர தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில், அதற்கான போராட்டங்கள், தியாகங்கள், முயற்சிகளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். அந்த வகையில், மக்கள் இடையே விடுதலைக்கான வேட்கையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த பத்திரிகைகள் பற்றிய அறிந்து கொள்வது அவசியம். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது, அவர்களுக்கு எதிராக நாட்டில் பல போராட்டங்கள் நடந்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இத்தகைய போராட்டங்களுக்கு வித்திட்டதில் பத்திரிகைகளுக்கு முக்கிய பங்கிருக்கிறது. குறிப்பாக 1780ம் ஆண்டு ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்ற வெள்ளையரால் தொடங்கப்பட்ட நாட்டின் முதல் பத்திரிகையான பெங்காலி கெசட் (Bengali Gazatte), ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரக் கொள்கையை விமர்சித்தது. இதனால் கோபமடைந்த ஆங்கிலேயர்கள், பெங்காலி கெசட் பத்திரிகைக்கு தடைவிதித்தனர்.
1857ல் சிப்பாய் கலகத்தைத் தொடர்ந்து இந்தியர்களின் ஒற்றுமையை ஆங்கில பத்திரிகைகள் கேலி செய்ததால், தேசப்பற்று மிக்க தலைவர்கள், தங்களது கொள்கைகளைப் பரப்ப பத்திரிகைகளைத் தொடங்கினர். 1878ல், தி ஹிந்து இதழைத் தொடங்கிய ஜி.சுப்பிரமணிய ஐயர், 1882ல் சுதேசமித்ரன் இதழை அச்சிட்டார். இதன் துணையாசிரியாக இருந்த பாரதியார், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தினார். 1905ஆம் ஆண்டு இந்தியா இதழின் ஆசிரியரான பாரதி, தனது கவிதைகள் மூலம் மக்கள் மத்தியில் புரட்சிக்கு வித்திட்டார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக முதல் பக்கத்தில் கேலிச் சித்திரங்கள் வெளியானதும் இந்த இதழில்தான்.
இதனால் தமிழகத்தில் இந்தியா இதழை வெள்ளையர்கள் தடைசெய்ய, ப்ரெஞ்ச் கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரியில் இந்தியா இதழை பாரதியார் வெளியிட்டார். அங்கிருந்தபடி விஜயா, பாலபாரதி ஆகிய இதழ்களைத் தொடங்கி, மக்களைத் தட்டி எழுப்பினார் பாரதி. 1917ல் தொடங்கப்பட்ட தேசபக்தன் இதழில் ஆங்கிலேய எதிர்ப்புக் கட்டுரையை வெளியிட்டதற்காக வ.வே.சு.ஐயருக்கு 9 மாத சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. அதே இதழில், தேச பக்தாமிர்தம் என்ற பெயரில் கட்டுரைகளை எழுதிய தி.ரு.வி.கல்யாண சுந்தரனார், விடுதலைக்கான கனலை உருவாக்கினார். பின்னர் நவசக்தி இதழ் மூலமாகவும் அந்த கனல் அணையாமல் பார்த்துக்கொண்டார். இதேபோன்று யங் இந்தியா, ஹரிஜன், நவஜீவன் ஆகிய இதழ்கள் மூலமாக விடுதலை வேட்கையையும், சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார் மகாத்மா காந்தி. இரண்டாம் உலகப் போரின் போது, பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்பட, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி பதிப்பை தற்காலிகமாக நிறுத்தினார் ராம்நாத் கோயங்கா. அதேநேரத்தில் தனது அச்சகம் மூலம் அவர், ஆங்கிலேயருக்கு எதிரான புத்தகங்களை வெளியிட்டார்.
இதுதவிர பரலி.சு.நெல்லையப்பரின் லோகோ பகாரி, டாக்டர் வரதராஜிலுவின் தமிழ்நாடு, சுப்ரமணிய சிவாவின் ஞானபாநு, மற்றும் சுதேசி, ஸ்வராஜ்யா போன்ற இதழ்களும் விடுதலைப் போராட்டத்திற்கான விதையை மக்கள் மத்தியில் விதைத்தன. |
| தியாகிகள் கடந்து வந்த பாதை….தியாகிகளை கௌரவிப்பது நமது கடமை Posted: 14 Aug 2013 09:13 PM PDT வெள்ளையர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு அஞ்சாமல், உறுதியுடன் அந்நியர்களை எதிர்த்து நின்றவர்களின் உயிர்த் தியாங்களுக்கு பிறகே, தேசத்தில் சுதந்திர காற்று வீசியது. சுதந்திரத்திற்காக போராடிய ஏராளமானோர் அதனை அனுபவிக்காமல் உயிர்நீத்த நிலையில் தற்போது நம்முடன் வாழும் தியாகிகளை கௌரவிக்க இந்திய தேசமே கடமைப்பட்டிருக்கிறது. வீருகொண்ட போராட்டமாக உருவெடுத்தபோது நாடு முழுவதும் சுதந்திர வேள்வித் தீ பரவத் தொடங்கியது.இந்தியாவை விட்டு வெளியேற மனமில்லாத ஆங்கிலயே அரசு போராட்டக்ளத்தில் குதித்தவர்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது.அந்த கொடுமையான பாதைகளை கடந்து இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றுக்கு காரணமான தியாகிள் பலர் நம்முடன் வாழ்கிறார்கள்.கரூரில் உள்ள தியாகி முத்துசாமி தமது 19 வயதில் சுதந்திர போராட்டக்களத்தில் குதித்தார். கரூரில் வாழும் மற்றொரு தியாகி காளியண்ணன் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் படையில் இணைந்து அந்நியர்களை எதிர்த்தார்.அஸ்ஸாம் எல்லையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய இவர் கிழக்கு வங்கத்தில் உள்ள நீலகஞ்ச் சிறையில் அடைக்கப்படார்.வெள்ளையர்களின் அணு குண்டுவீச்சை எதிர்கொள்ள நேர்ந்ததாக கூறுகிறார். திருவண்ணாமலையில் வாழும் தியாகி ராமலிங்கம் தமது 17வது வயதிலேய சுதந்திர போராட்டக் களத்தில் குதித்தார்.தற்போது 90 வயதாகும் இவர் 1942-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது சிறையில் காமாராஜர் போன்றோரை சந்தித்ததை பெருமிதத்துடன் கூறுகிறார். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதை பெருமிதத்துடன் கூறும் தியாகிகளை அரசு பெருமைப் படுத்தி இருக்கிறதா? என்ற கேள்வி எழாமல் இல்லை.தியாகிளுக்கான சலுகைகள் சரிவர கிடைப்பதில்லை என்பது அவர்களது குற்றச்சாட்டாக இருக்கிறது. |
| தனி மனித சுதந்திரமே சுதந்திரத்தின் அடையாளம்: முதலமைச்சர் உரை Posted: 14 Aug 2013 08:41 PM PDT நாட்டின் 67 வது சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக அவர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டைார். கொடி ஏற்றிய பிறகு சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா: சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தியாகிகளுக்கும் வீர வணக்கம் செலுத்துவதாக தெரிவித்தார். தனிமனித சுதந்திரமே சுதந்திரத்தின் அடையாளம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது என்று பெருமிதம் தெரிவித்தார். தமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர் : மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப்கள் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டினார். தமிழக அரசின் நலத்திட்டங்கள் பலவற்றை பட்டியலிட்டார். தமிழகத்தில் அனைவருக்குமான பொது வினியோகத்திட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் கொண்டு வர தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார். கச்சத்தீவில் தமிழகத்திற்கு உள்ள உரிமை நிலைநாட்டப்படும் என்றார். நிறைவாக, “தமிழகமே எனது குடும்பம், தமிழ்நாட்டு மக்களே என் பிள்ளைகள், தமிழக மக்களின் நலனே என் நலன் “என்று முதல்வர் தெரிவித்தார். |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






