Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


கால்வாய் சீரமைப்புப் பணிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

Posted: 12 Aug 2013 11:02 PM PDT


இராமநாதபுரம் மாவட்டம் பரலையாற்று கால்வாயை 22 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது கூடுதல் நீர், வைகை நதியின் இணைக் கால்வாயான பரலையாறு கால்வாய்க்குத் திருப்பி விடப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள ஏரிகள் பயன்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெள்ள நீர் செல்லும் வகையில் பரலையாறு கால்வாய் இல்லாததால் மிகை நீர் வீணாகும் நிலை ஏற்படுகிறது. எனவே தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் 22 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பில் பரலையாறு கால்வாயைச் சீரமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் வட்டங்களில் வறட்சி பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் உள்ள 4 ஆயிரத்து 957 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பள்ளிகளில் மாணவர்கள் கடத்தப்படும் விவகாரம்: பள்ளிகளுக்கு காவல் துறை அறிவுரை

Posted: 12 Aug 2013 10:54 PM PDT


பள்ளிகளில் மாணவர்கள் கடத்தப்படுவதற்கு பள்ளிகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடே காரணம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? என்ன மாதிரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு… அதிகரிக்கும் கடத்தல் சம்பவங்கள் சென்னையில் அண்மையில் தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படிக்கும் சூர்யா என்ற மாணவன் பள்ளி வளாகத்தில் இருந்து கடத்தப்பட்டான். இந்த சம்பவத்தில் 5 மணி நேரத்தில் மாணவரை போலீஸார் மீட்டனர். கடந்த சில ஆண்டுகளாக இது போன்று பள்ளி மாணவர்களை கடத்தும் சம்பவம் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. பள்ளிகளில் மாணவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்காததே இதுபோன்ற கடத்தல் சம்பவங்களுக்கு காரணம் என்று பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பள்ளிகளுக்கு அறிவுரை பள்ளிகளில் மாணவர்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது பற்றி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பள்ளி நிர்வாகிகளுடன் காவல்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் மாணவர்களை அழைத்து வரும் நபர்களுக்கு அடையாள அட்டை அவசியம் என்பன உட்பட பல்வேறு ஆலோசனைகள் பள்ளி நிர்வாகத்திற்கு காவல்துறை சார்பில் வழங்கப்பட்டது. காவல் துறைக்கு பள்ளிகள் கோரிக்கை பள்ளி வளாகத்தில் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடந்தால் அதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களை தவிர்க்க பள்ளி வளாகம் அருகே அவ்வப்போது காவல் துறையினர் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் காவல்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பிற்கு அவரவர் தரப்பில் செய்யவேண்டிய நடவடிக்கைகளை பொறுப்புடன் நிறைவேற்றினால் கடத்தல் போன்ற சம்பவங்களை தடுக்கலாம் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

கனிம மணல் முறைகேடாக அள்ளப்படும் விவகாரம்: மீனவ கிராமத்தினர் போராட்டம்

Posted: 12 Aug 2013 10:34 PM PDT


தூத்துக்குடி மாவட்டத்தில் கனிம மணல் முறைகேடாக அள்ளப்படுவதாக எழுந்த புகார் தொடர்பான ஆய்வின் போது தங்களையும் உடன் அழைத்து செல்ல வலியுறுத்தி பெரியதாழை பகுதி மீனவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குவாரிகளில் கனிமங்கள் அள்ளப்படும் இடங்களும், அவை பதுக்கி வைக்கப்படும் இடங்களும் தங்களுக்கு தெரியும் என மீனவர்கள் கூறினர். முறைகேடாக கனிம மணல் அள்ளப்படுவதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்கும் குழு நேற்று 6 இடங்களில் ஒரே நேரத்தில் ஆய்வு செய்தது. அப்போது, பெரியதாழை பகுதி குவாரியில் ஆய்வு செய்த போது, மீனவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, 5 பேர் கொண்ட மீனவர் குழுவினர் சம்பந்தப்பட்ட கடற்கரை பகுதிகளை அதிகாரிகளிடம் காண்பித்தனர்.

சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Aug 2013 10:27 PM PDT


உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி ஆட்டோக்களின் பயண கட்டணத்தை நிர்ணயிக்கும் போது, ஓட்டுனர்களையும் கருத்தில் கொண்டு கட்டணத்தை நிர்ணயம் செய்யவேண்டும் என ஆட்டோ தொழிற்சங்களின் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இதனை வலியுறுத்தி இன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.  

வாடகை வீட்டில் வசிப்போர்க்கான வரிச் சலுகைகள் என்ன? (பகுதி-2)

Posted: 12 Aug 2013 10:20 PM PDT


சொந்தமாக தொழில் செய்பவர் என்று சொல்லும்போது. அவர் மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர், கட்டிடக் கலை நிபுணர், வியாபாரம் செய்பவர் என எப்படி இருந்தாலும், அவர் தற்போது வாடகை வீட்டில் குடியிருப்போரானால், அவருக்கும் வீட்டு வாடகைக்கான சலுகையை வருமான வரித்துறை வழங்குகிறது. செக்ஷன் 80ஜிஜி, இதற்கு 3 விதமான கணக்கீடுகளைத் தருகிறது. அதாவது, மாதம் ஒன்றுக்கு 2000 ரூபாய் வீதம், ஆண்டு ஒன்றுக்கு மொத்தமாக 24 ஆயிரம் ரூபாய் அல்லது அவரது ஆண்டு மொத்த வருவாயில் 10 சதவீத தொகைக்கு மேல் எவ்வளவு தொகையை அவர் வாடகையாக செலுத்துகிறாரோ, அந்தத் தொகை அல்லது அவரது ஆண்டு மொத்த வருவாயில் 25 சதவீதம். இந்த மூன்றில், எது குறைவான தொகையோ, அது, அவருக்கு வீட்டு வாடகைக்கான கழிவாக அனுமதிக்கப்படுகிறது. எனவே, சொந்தத் தொழில் செய்பவர்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால், இந்த வரிச்சலுகை பெறலாம். இதுதவிர, மாதச் சம்பளம் பெறுவோரில் ஒரு சிலருக்கும் கூட, அவர்களது சம்பளப் பட்டியலில், வீட்டு வாடகைப்படி என்ற பெயரில் தனியாக எந்தத் தொகையும், சில நிறுவனங்கள் தருவதில்லை. அதனால், அவர்களுக்கும்கூட இந்த பிரிவு 80ஜிஜி யின்படி சலுகை பெற வருமான வரித்துறை அனுமதிக்கிறது. ஆனால், இதற்கு சில முன்நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் நிபந்தனை, இந்தச் சலுகை கோரும் நபர், வருமான வரிக்கணக்கு தாக்கல் முறைப்படி, தனிப்பட்ட நபராக இருக்க வேண்டும். இரண்டாவது அவரது வருமானத்தில், வீட்டு வாடகைப்படி என்ற அடிப்படையில், எந்தத் தொகையும் பெற்றிருக்கக் கூடாது, மூன்றாவது, அவர் பணியாற்றும் இடத்தில், அவர் பெயரிலோ, அவரது மனைவி, குழந்தைகள் பெயரிலோ, வேறு குடியிருப்பு அல்லது வீடு இருக்கக் கூடாது. நான்காவது, அவருக்கு, வேறு ஊரில். அல்லது இடத்தில், சொந்த வீடு இருந்தால், அந்த வீடு கட்ட கடன்பெற்று, அதில் வசிப்பதாகச் சொல்லி, அதற்கான வருமான வரிச்சலுகை எதையும் பெற்றிருக்கக் கூடாது. இதுதவிர, மேற்கூறிய தகவல்களை உறுதிப்படுத்தும் 10 பிஎ படிவத்தில் கையொப்பமிட்டு, ஒப்புதல் வாக்குறுதி பத்திரம் ஒன்றை தரவேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, வருமான வரிச்சட்டப் பிரிவு 80ஜிஜி படி வாடகை வீட்டுக்கான சலுகையைப் பெற முடியும். இதை முறைப்படி செய்ய, வருமான வரி ஆலோசகர்கள் உங்களுக்கு உதவக்கூடும். அவர்களது உதவியை நாடுவது நல்லது.

கார் உற்பத்தி நிறுவனங்களின் புதிய வழி

Posted: 12 Aug 2013 10:14 PM PDT


இளைய தலைமுறையினர் கார் வாங்குவதை ஊக்குவிக்க கார் உற்பத்தி நிறுவனங்கள் புதிய வழிமுறையை கையாளத் தொடங்கியுள்ளன. ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக தளங்களில் இந்த நிறுவனங்கள் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளன. கார் பந்தயம் தொடர்பான வீடியோ கேம்களிலும், கார் மாடல்கள், தள்ளுபடி சலுகைகள் உள்ளிட்டவற்றை கார் நிறுவனங்கள் இடம்பெறச் செய்துள்ளன. இதுபோன்ற வணிக யுக்திகள் மூலம் 18 முதல் 34 வயதுக்கு உட்பட்ட இளைய தலைமுறையினரைக் கவர முடியும் என கார் நிறுவனங்கள் நம்புகின்றன. இத்தகவலை இணையதள மற்றும் வீடியோ கேம் விளம்பர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தங்கம் வாங்குவதில் இந்தியாவை சீனா முந்தும்

Posted: 12 Aug 2013 10:11 PM PDT


தங்கம் வாங்குவதில் கடந்த பல ஆண்டுகளாக உலகிலேயே இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவை சீனா முந்தும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியா 860 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது. சீனா 832 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது. இந்த ஆண்டில் முதல் 6 மாதங்களில் மட்டும் 460 டன் தங்கத்தை சீனா இறக்குமதி செய்துள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக, தங்க இறக்குமதி மீது இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால், இறக்குமதி குறைந்து வருகிறது. கடந்த மாதம் தங்கம் இறக்குமதி 30 சதவீத சரிவு கண்டுள்ள நிலையில், அடுத்து வரும் மாதங்களிலும் இறக்குமதி குறையவே வாய்ப்புள்ளதால் இந்த ஆண்டு தங்கம் வாங்குவதில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி, சீனா உலகிலேயே முதலிடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

Posted: 12 Aug 2013 10:10 PM PDT


ஜம்மு- காஷ்மீர் எல்லையில் இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.‌ சம்பா பகுதியில் இன்று காலை 7.30 மணி அளவில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவமும் எதிர்தாக்குதல் நடத்தியது. பூஞ்ச் மாவட்டத்தில் நேற்றிரவு இந்திய நிலைகளை குறிவைத்து 11 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராக்கெட் வெடிகுண்டுகளையும் வீசி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவமும் எதிர்தாக்குதல் நடத்தியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சண்டையில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இதேபோல், சம்பா மாவட்டத்தில் கோத்தே எல்லைப்பகுதியிலும் இந்திய நிலைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பூஞ்ச் பகுதியில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை இந்திய ராணுவ வீரர்கள் 5 பேரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றது. இதனால் இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. தொடர்ந்து நடைபெற்று தாக்குதல் சம்பவம் காரணமாக எல்லை அருகே வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

உலகத் தடகளப் போட்டி: ஜமைக்கா வீராங்கனைக்கு தங்கம்

Posted: 12 Aug 2013 07:14 PM PDT


மாஸ்கோவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியின் 100 மீட்டர் ஆடவர் ஓட்டத்தில் உசேன் போல்ட் தங்கம் வென்ற 24 மணி நேரத்திற்குள் மகளிர் பிரிவிலும் ஜமைக்கா வீராங்கனை தங்கம் வென்று முத்திரை பதித்துள்ளார். நேற்று நடைபெற்ற மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவை சேர்ந்தவர் பந்தய இலக்கினை 10.71 வினாடிகளில் கடந்து தங்கம் வென்று சாதனை படைத்தார். ஐவரிகோஸ்ட் வீராங்கனை முரிலா 10.93 வினாடிகளில் வந்து வெள்ளி பதக்கம் வென்றார். உலகத் தடகள போட்டியில் பதக்கம் வென்ற முதல் ஆப்பிரிக்க நாட்டு வீராங்கனை என்ற பெருமையையும் முரிலா பெற்றார். நடப்பு சாம்பியனும் அமெரிக்க வீராங்கனையுமான கார்மெல்ட்டா ஜெட்டர் 10.94 வினாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார்.  

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு

Posted: 12 Aug 2013 07:04 PM PDT


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று திரும்பிய சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹைதராபாத் விமான நிலையத்திற்கு நேற்றிரவு வந்த சிந்துவுக்கு அங்கு கூடியிருந்த ஏராளமானோர் மலர்கொத்துகள் அளித்து வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். சீனாவில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதிவரை முன்னேறிய சிந்து, உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் மகளிர் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™