puthiyathalaimurai.tv online |
- குடியரசுத் தலைவர் பிரணப் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு….
- வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் இல்லை: ராஜ்நாத்சிங் உறுதி
- இலங்கை தமிழர்கள் நலன் காக்க மத்திய அரசு முயற்சி: பிரதமர் கடிதம்
- இது ஒரு விசித்திரமான இணையதளம் பற்றிய செய்தி…
- புதியதலைமுறையின் புலனாய்வு!
- நீலகிரி மாவட்டத்தில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு: 35 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
- பிஹாரில் 23 குழந்தைகள் பலியான சம்பவம்: சரணடைந்தார் பள்ளி முதல்வர்
- ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி
- ஸ்பெயினில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து: 56 பேர் பலி
| குடியரசுத் தலைவர் பிரணப் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு…. Posted: 24 Jul 2013 10:58 PM PDT இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று, முதல் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறார் பிரணப் முகர்ஜி. கடந்த ஓராண்டில், நாட்டின் முக்கிய பிரச்னைகள் சிலவற்றில் இவரது தீர்வு, எடுத்த முடிவுகள் சலசலப்பை ஏற்படுத்தின. சில முடிவுகள் ஆச்சரியப்பட வைத்தன. கடந்த ஓராண்டில் அவர் எடுத்த அப்படிப்பட்ட முடிவுகள் என்னென்ன? இதோ உங்களுக்காக…… கருணை மனுக்கள் நிராகரிப்பு நாடாளுமன்ற தாக்குதல் பயங்கரவாதி அப்சல் குருவின் கருணை மனு அப்துல் கலாம், பிரதீபா பாட்டில் ஆகிய 2 குடியரசுத் தலைவர்களைக் கடந்து வந்திருந்தது. 166 பேரை பலி கொண்ட மும்பை தாக்குதலின் போது உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாபின் கருணை மனு மீது பிரதீபா பாட்டில் முடிவெடுக்காமல் ஒத்திப் போட்டிருந்தார். இவையிரண்டையும் அடுத்தடுத்து நிராகரித்து, 3 மாதங்களுக்குள், 2 தீவிரவாதிகளையும் தூக்குமேடை ஏறச் செய்த குடியரசு தலைவரின் இந்த முடிவு பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. கல்வி மற்றும் மகளிர் மேம்பாடு… சுமார் 10 ஆண்டுகளாக கூட்டப்படாத, மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர்கள் கூட்டத்திற்கு குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே ஏற்பாடு செய்தது, பள்ளி, கல்லூரி மாணவர்களை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரவழைத்து போன்றவை ஒதுங்கி இருப்பவர் குடியரசு தலைவர் என்ற எண்ணத்தை மாறச் செய்தது. டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்ற போது,பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரை அழைத்து அதுகுறித்து அவர் ஆலோசித்தார். இதன் பின்னரே, போராட்டக்காரர்களுடன் சுஷில்குமார் ஷிண்டே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த, மகளிர் பாதுகாப்பு குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் பிரதமர் மன்மோகன்சிங். பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்த அவசரச் சட்டத்திற்கு சற்றும் தாமதிக்காமல் அவர் ஒப்புதல் அளித்தார். கடந்த ஜனவரியில், தமது முதல் குடியரசு தின உரையில் மகளிர் மேம்பாடு குறித்து விரிவாகப் பேசினார் பிரணப் முகர்ஜி. மூத்த தலைவர்களுடன் ஆலோசனை… முழுநேர அரசியல்வாதியாக 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருந்த பிரணப் முகர்ஜி, குடியரசுத் தலைவரான பின்பும், தமது அரசியல் தொடர்புகளைக் கைவிடவில்லை. காங்கிரஸ், பாரதிய ஜனதா, இடதுசாரிகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என கட்அனைத்து அரசியல் தலைவர்களையும் அழைத்து பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்து ஆலோசிப்பது பிரணபின் வழக்கம். நாடு முழுவதும் சுற்றுப்பயணம்… குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றதும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களுக்குப் பதிலாக உள்நாட்டு பயணங்களையே அவர் அதிகம் மேற்கொண்டிருக்கிறார். கடந்த ஓராண்டில் ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உள்பட 23 மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றிருக்கிறார். குறிப்பாக, தமிழகத்திற்கு இரண்டு முறை வருகை புரிந்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையின் பொன்விழாவில் பங்கேற்க கடந்த நவம்பரிலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள அதற்கு அடுத்த மாதமும் பிரணப் முகர்ஜி தமிழகம் வந்தார். |
| வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் இல்லை: ராஜ்நாத்சிங் உறுதி Posted: 24 Jul 2013 10:37 PM PDT பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தாலும் வெளியுறவுக் கொள்கைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது என அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை மட்டுமே பாரதிய ஜனதா எதிர்ப்பதாகவும், மற்ற துறைகளில் அதனைத் தாங்கள் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ராஜ்நாத்சிங் வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த போது இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். |
| இலங்கை தமிழர்கள் நலன் காக்க மத்திய அரசு முயற்சி: பிரதமர் கடிதம் Posted: 24 Jul 2013 10:24 PM PDT இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியாக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட இலங்கையில் வாழும் அனைத்து தரப்பினரும் குறிப்பாக தமிழர்கள் சுய கெளரவத்துடன் வாழ வேண்டும் என்பதை நீண்ட காலமாக இந்தியா வலியுறுத்தி வருவதை குறிப்பிட்டுள்ள பிரதமர், அதற்காக இறுதி வரை பணியை தொடருவோம் என்று தெரிவித்துள்ளார். இலங்கையில் 13வது அரசியல் சட்டத்தை ராஜபக்சே அரசு நீர்த்துப் போக முயற்சி மேற்கொண்டிருப்பது பற்றி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த 14ம் தேதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பிரதமர் பதில் கடிதம் எழுதியுள்ளார். |
| இது ஒரு விசித்திரமான இணையதளம் பற்றிய செய்தி… Posted: 24 Jul 2013 10:11 PM PDT இணையம் விரும்பா மனிதர்கள் இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு இணையதளங்கள் நம் வாழ்வில் ஒன்றிணைந்து விட்டன. பொழுது போகாமல் கணினி முன் அமர்பவர்களுக்கு அறிவு, விளையாட்டு, பொழுதுபோக்கு என விதவிதமான தகவல்களை அள்ளித் தரும் இணையதளங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் ஒரு சில விசித்திர இணையதளங்களும் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான இணையதளத்தைப் பற்றிய செய்தி தான் இது. மேலை நாடுகளில் பிள்ளைகள் சம்பாதிக்கும் திறன் வந்தவுடன் தனியாகச் சென்று விடுவதால் வயதான பெற்றோர்கள் பணம், வசதி இருந்தாலும் உறவுகளின் அன்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். இலக்கை நோக்கி ஓடும் மனிதர்கள் தங்கள் பெற்றோர்களையே மறந்து விடுகின்றனர். அவர்கள் உறவுகளின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுவதற்கு இந்த இணையதளம் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. www.seeyourfolks.com இது தான் அந்த வினோதமான இணையதளத்தின் முகவரி. நம் பெற்றோரை அவர்களின் மறைவுக்கு முன் எத்தனை முறை பார்ப்போம் என்று கணக்கிடமுடியும் என்கிறது இந்த இணையதளம். நம்ப முடிகிறதா?! இது ஜோசியம் என்று நினைத்து விடாதீர்கள் ஏன் என்றால் இந்த இணையதளமானது, 2011-ல் உலக சுகாதார அமைப்பு (World Health Organization) வெளியிட்ட வாழ்நாள் எதிர்பார்ப்பு தகவல்களை (life expectancy data) அடிப்படையாக கொண்டே செயல்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல்களை பயன்படுத்தி கணித்துக் கூறுவதால் இதன் நம்பகத்தன்மை அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த இணையதளத்திற்கு சென்றால் சில அடிப்படை கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அவை உங்கள் தாய், தந்தையின் வயது மற்றும் அவர்கள் வசிப்பிடம் பற்றிய கேள்வி. மேலும் ஒரு ஆண்டில் உங்கள் பெற்றோரை நீங்கள் எத்தனை முறை சந்திக்கிறீ்ர்கள் என்ற கேள்வியும் இடம் பெற்றிருக்கும். இந்த தகவல்களை கொடுத்தால் விநாடிகளில் இன்னும் எவ்வளவு நாட்கள் நீங்கள் உங்கள் பெற்றோரை காண முடியும் என்ற தகவல் திரையில் தெரிகிறது. வாழ்க்கை ஒரு ஓட்டப்பந்தயம் மாதிரி அனைவருமே ஓடிக் கொண்டிருக்கிறோம். நம் நெருங்கிய உறவுகளிடம் கூட அதிக நேரம் செலவழிப்பதில்லை. நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்த நம் தாய், தந்தையருடன் நாம் எவ்வளவு நேரம் செலவிட முடியும் என்பதை ஒரு எச்சரிக்கை போல் இந்த இணையம் தெரிவிப்பதால், நீண்ட காலமாக பெற்றோரை பார்க்க தவறியவர்கள் கூட தங்கள் பெற்றோரை தேடி ஓடுவார்கள் என கூறும் இந்த இணையதளம் "மரணம் குறித்த விழிப்புணர்ச்சியை அதிகரிப்பது மிக முக்கியம். அது, நாம் நமது எஞ்சியுள்ள வாழ்நாளை மிக அர்த்தமுள்ளதாக்க உதவும்" என்ற கருத்தை முன்வைக்கிறது. |
| Posted: 24 Jul 2013 08:54 PM PDT வெளிநாட்டு கார்கள் இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அலெக்ஸ் ஜோசப்க்கு, சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமின் அளிக்க மறுத்துள்ளது. முன்னதாக, சிபிஐ-யால் தேடப்பட்டு வந்த அலெக்ஸ் ஜோசப்பை தேடிக் கண்டுபிடித்து கேள்விகளை முன் வைத்தது புதிய தலைமுறை. சிபிஐ-யால் தேடப்பட்டுவரும் நபர், வி.ஐ.பிக்களுக்கு சொகுசு கார்களை இறக்குமதி செய்து கொடுத்தவர், பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பிற்கு காரணகர்த்தா, இப்படி பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அலெக்ஸ் ஜோசப் எங்கு இருக்கிறார், அவர் எப்படித் தோற்றமளிப்பார், குற்றச்சாட்டுகள் தொடர்பான அவரது விளக்கம் என்ன என்பதைக் கண்டறியும் முயற்சியில் களம் இறங்கியது புதிய தலைமுறை. வெள்ளை நிற உடை, கருப்புக்கலர் கண்ணாடி, விதவிதமான தொலைபேசிகள். இப்படி காட்சியளிக்கும் அலெக்ஸ் ஜோசப் இன்றைக்கு ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படும் நபர். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர் சிபிஐ-யால் தேடப்பட்டு வரும் அலெக்ஸ் ஜோசப் கொச்சியில் இருக்கும் தகவல் புதிய தலைமுறைக்குக் கிடைத்தது. இதையடுத்து அவரை சந்தித்து அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தது புதியதலைமுறையின் புலனாய்வுக்குழு. 40க்கும் அதிகமான ஆடம்பரக் கார்களை விதிகளுக்கு புறம்பாக இறக்குமதி செய்து வி.ஐ.பிக்களுக்கு கொடுத்தார் என்று இவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது சிபிஐ. சுங்கத்துறை, மத்திய வருவாய்ப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் துணையுடன் நடைபெற்ற முறைகேடுகளால் சுமார் 500 கோடி ரூபாய் அளவிற்கு வரி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது இவருக்கு எதிரான குற்றச்சாட்டு. ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்தார் அலெக்ஸ் ஜோசப். மேலும் தன் மீது சிபிஐ அதிகாரிகள் தொடுத்திருக்கும் வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருப்பதாகவும் அலெக்ஸ் தெரிவித்தார். தன்னுடைய பெயர் தேவையில்லாமல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக சொல்லும் இவர், இந்த வழக்கில் இருந்து தனது பெயர் நீக்கப்படும் என்று நம்புவுதாக கூறினார். தனக்கும், சிபிஐ விசாரித்துவரும் கார் இறக்குமதி மோசடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறும் அலெக்ஸ், 2001 ஆண்டுக்குப் பிறகு தாம் கார் இறக்குமதியில் ஈடுபடவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தியாவின் தலைசிறந்த புலனாய்வு அமைப்பான சிபிஐ, பொதுவாக ஒருவரது பெயரை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கும் முன்பு அவர் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றும். அதே போல், அலெக்ஸ்க்கு எதிராக வலுவான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், ஓரிரு நாட்களில் சிபிஐ முன்பு ஆஜராகி அலெக்ஸ் அளிக்கவிருக்கும் வாக்குமூலத்திற்குப் பிறகுதான் இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வை அறிய முடியும். காணொளி:புதியதலைமுறையின் புலனாய்வு! |
| நீலகிரி மாவட்டத்தில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை Posted: 24 Jul 2013 07:13 PM PDT நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியிலுள்ள அனைத்து பள்ளி – கல்லூரிகளுக்கும் இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் பருவ மழையின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்தள்ளது. கூடலூர் பகுதியில் தொடர்ந்து நீடிக்கும் கனமழையால், ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மங்குலி பகுதியில் ஆற்றுநீர் ஊருக்குள் புகுந்துள்ளதால், 20க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. புத்தூர் வயல் தேன்கொல்லி கிராமத்தில், மலைவாழ் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீ ர் புகுந்துள்ளதால், பாதிக்கப்பட்ட மக்கள் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காணொளி:நீலகிரி மாவட்டத்தில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை |
| ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு: 35 ஆயிரம் கன அடி நீர் திறப்பு Posted: 24 Jul 2013 07:07 PM PDT கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், ஓகேனக்கல் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, ஓகேனக்கலுக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாக இருந்தது. இதனால் ஓகேனக்கலில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், படகு சவாரி செய்வதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர். அத்துடன் கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காணொளி:ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு: 35 ஆயிரம் கன அடி நீர் திறப்பு |
| பிஹாரில் 23 குழந்தைகள் பலியான சம்பவம்: சரணடைந்தார் பள்ளி முதல்வர் Posted: 24 Jul 2013 07:02 PM PDT பிஹாரில் 23 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த பள்ளியின் முதல்வர் மீனா தேவி சரணடைந்துள்ளார். அவரை கைது செய்த பிஹார் காவல்துறையினர், மதிய உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது எப்படி என விசாரித்து வருகின்றனர். மேலும் பள்ளி முதல்வர் மீனா தேவியின் கணவர், லாலுபிரசாத் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறதா என்பது குறித்தும் அவரிடம் விசாரணை நடைபெறுவதாக தெரிகிறது. |
| ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி Posted: 24 Jul 2013 06:56 PM PDT ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் சதம் விளாசிய இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். ஜிம்பாப்வே-வின் ஹாராரே மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஜெய்தேவ் உனட்கட், அம்பாத்தி ராயுடு ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர் சிபாண்டா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் சிக்கந்தர் ரஸா 82 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய சிகும்புரா 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. 229 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் ஷீகர் தவான் 17 ரன்களிலும், ரோகித் ஷர்மா 20 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் விராத் கோஹ்லி-அம்பாத்தி ராயுடு இணை, ஜிம்பாப்வே பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. இதில் கோஹ்லி அபார சதம் அடித்து இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். பின்னர் கோஹ்லி 115 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் அரைசதம் கடந்த அம்பாத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் உடன் இணைந்து, இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதன்மூலம் 44.5 ஓவர்களிலேயே, 4 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது இந்திய அணி. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ஹாரரேவில் நாளை நடைபெறுகிறது. |
| ஸ்பெயினில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து: 56 பேர் பலி Posted: 24 Jul 2013 06:48 PM PDT ஸ்பெயினில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில் 56 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஸ்பெயினின் வடக்கு பகுதியில் உள்ள சாண்டியோகோ டி கம்போஸ்டெலா என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதனால் ரயில் முற்றிலும் பற்றி எரிந்தது. இதில் சிக்கி கொண்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |