Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


கிருஷ்ணகிரியில் பஜ்ரங்தள் அமைப்பாளர் கைது

Posted: 30 Jul 2013 08:34 PM PDT


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கடந்த 2010-ம் ஆண்டு கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்ட வழக்கில், கிருஷ்ணகிரி மாவட்ட பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் தேவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி சேலம் சிறையில் இருந்த அவரை, தற்போதைய வழக்கிற்காக ஓசூர் ஜே.எம். முதலாவது கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். வழக்கின் விசாரணையை நீதிபதி ரவிச்சந்திரன் ஒத்தி வைத்தார்.  

சென்னையில் இருந்து மலேசியாவிற்கு போதை பொருள் கடத்தல் முயற்சி: இருவர் கைது

Posted: 30 Jul 2013 08:32 PM PDT


சென்னையில் இருந்து மலேசியாவிற்கு போதை பொருள் கடத்த முயன்ற இரண்டு பேரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். தாம்பரத்தை சேர்ந்த சரவணன், புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரிடம் சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அப்போது ஷூ-வுக்குள் அவர்கள் மறைத்து வைத்திருந்த எபிடிரியன் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.ஒரு கிலோ எடையுடைய இந்த போதை பொருளின் மதிப்பு 10 லட்ச ரூபாயாகும்.

22 பாகிஸ்தான் கைதிகளை விடுவித்தது இந்தியா

Posted: 30 Jul 2013 08:29 PM PDT


ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானுடன் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் 22 பாகிஸ்தான் கைதிகளை இந்தியா விடுவித்துள்ளது. விடுவிக்கப்பட்ட அவர்கள் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தரசரஸ் அருகேயுள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையான வாகா வழியாக பாகிஸ்தான் நாட்டுக்குள் சென்றனர். பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த 22 பாகிஸ்தானியர்கள் பல்வேறு இந்திய சிறைகளில் இருந்தனர். இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த பாகிஸ்தான் மீனவர்களும் விடுவிக்கப்பட்ட கைதிகளில் உண்டு. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அந்த கைதிகளை விடுவிக்க இந்திய அரசு முடிவு செய்தது. நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்ட அவர்கள் 6 மாதம் முதல் 20 ஆண்டு வரை சிறைத்தண்டனைக்குள்ளானவர்கள் . விடுவிக்கப்பட்ட பாகிஸ்தான் கைதிகள் மகிழ்ச்சியுடன் தாய்நாடு திரும்பினர்.

இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி மாணவி படுகாயம்

Posted: 30 Jul 2013 08:18 PM PDT


இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது, அரசு பேருந்து பின்புறமாக வந்து மோதியதில் படுகாயமடைந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சூரியா என்ற அந்த மாணவி கல்லூரி முடிந்து வீடு திரும்பவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது விபத்து நிகழ்ந்தது. இதைக் கண்டித்து, அரசு பேருந்தை சிறை பிடித்து பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வைகை அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் விரிசல்

Posted: 30 Jul 2013 08:17 PM PDT


வைகை அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் ராட்சஸ குழாயில் விரிசல் ஏற்பட்டு, குடிநீர் வீணாக ஆற்றில் கலக்கிறது. குள்ளப்புரம் பகுதியில் செல்லும் அந்த குடிநீர் குழாயில், சிறிதளவு விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இதேபோன்று குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு, பின்னர் சரிசெய்யப்பட்டது.

நாமக்கலில் மறியல் செய்த தொழிலாளர்கள் கைது

Posted: 30 Jul 2013 08:15 PM PDT


கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா நலவராரியங்களை சீரமைக்கக் கோரி நாமக்கலில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் அமைக்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக நிபந்தனைகள் விதிக்கப்படுவதன் மூலம் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிபந்தனைகள் விதிக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்திய சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  

குமரியில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

Posted: 30 Jul 2013 08:13 PM PDT


குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியால் விவசாயிகளுக்காக நடத்தப்படும் பொருள்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல கடைகளில் இருந்த தரமற்ற உணவுப் பொருள்கள் மற்றும் பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நற்பண்புகளை வளர்க்கும் நோக்கில் சுவர் விளம்பரம்: சமுதாயச் சிற்பி பசுபதி

Posted: 30 Jul 2013 08:05 PM PDT


இது விளம்பர யுகம். விளம்பரங்களால் வருவாய் ஈட்டும் யுகம். விளம்பரம் இல்லாத ஒரு தேசத்தைப் பார்ப்பது கடினம். ஆனால் இந்த விளம்பரங்கள் அனைத்துமே தங்களது சொந்த நலனை முன்வைத்தே இருக்கும். இத்தகைய உலகில் சேலத்தைச் சேர்ந்த ஒருவரும் தொடர்ந்து விளம்பரம் செய்து வருகிறார். ஆனால் அவரது விளம்பரங்கள் பணம் ஈட்டித்தருவதில்லை….நல்ல மனங்களை ஈட்டித் தருகின்றன. பொன்மொழிகளோடு காட்சியளிக்கும் சுவர்கள் சேலம் நகரச் சாலைகளில் பெரும்பாலான சுவர்கள், பொன்மொழிகளோடு காட்சியளிக்கின்றன. முத்துமுத்தான, அழகான கையெழுத்துக்குச் சொந்தக்காரர் பசுபதி. இன்றைய சமுதாயத்தினரிடம் நற்பண்புகளையும், தனி மனித ஒழுக்கத்தையும் வளர்க்க வேண்டுமென்ற நோக்கில், கடந்த 20 ஆண்டுகளாக சுவர் விளம்பரங்களை எழுதி வருபவர். பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு சாலைகளில் செல்வோர் பலர் நின்று, பொன்மொழிகளைப் படித்துவிட்டு, சிறு புன்னகையோடு செல்வார்கள். அந்த பொன்மொழிகள் தன்னம்பிக்கையை விதைக்கும், அல்லது விழிப்புணர்வை வளர்க்கும். இதன் மூலம் தன்னம்பிக்கை பெற்ற பலர் தங்களது வாழ்வில் ஏற்படும் இன்னல்களை எளிதில் கடந்து சென்றுள்ளனர். இவரது 50 பொன்மொழிகளைத் தொகுத்த ஒருவர், தனது திருமண விழாவில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசாக அவற்றை வழங்கியிருக்கிறார். பசுபதியின் இந்த சமூகப் பணிக்கு, பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பும் கிடைத்திருக்கிறது. பொருளீட்டுவது மட்டுமே பிரதானம் என எண்ணாமல், சமூகத்தின் மீது அக்கறை கொண்டு, மக்களின் மனங்களில் தன்னம்பிக்கையை விதைக்கும் பசுபதி, சமுதாயச் சிற்பியே.

குற்றாலத்தில் சாரல் விழா: களைகட்டிய கிராமிய கலை நிகழ்ச்சிகள்

Posted: 30 Jul 2013 07:51 PM PDT


குற்றால சாரல் விழாவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக முதல்முறையாக மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான சீசனின்போது சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் சாரல் விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய இந்த ஆண்டு சாரல்விழாவில், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் கிராமிய கலை நிகழ்ச்சிகளான தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. இதற்கு அனைத்து தரப்பினரிடையேயும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதால், கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குற்றால சாரல் விழாவையொட்டி காய்கறி கண்காட்சி முடிவடைந்த நிலையில், மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில் ஹெலிகோனியா, கார்நேசன், அல்பீனியா, ஆந்தோரியம் உள்ளிட்ட அரிய மலர்கள் இடம் பெற்றுள்ளன. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை மட்டுமின்றி, கிராமியக் கலைஞர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திருப்பதான் இந்த ஆண்டு குற்றால சாரல்விழாவின் சிறப்பு அம்சமாகும்.  

புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: தமிழகத்திற்கு பேருந்து சேவை பாதிப்பு

Posted: 30 Jul 2013 07:48 PM PDT


புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு தொடங்கிய இந்த வேலை நிறுத்தப் போராட்த்தை அடுத்து, மாஹே, ஏனாம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பி.ஆர்.டி.சி, பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட 3 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அகவிலைப்படி, பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26 ஆம் தேதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™