puthiyathalaimurai.tv online |
- தங்கம், வெள்ளி விலை நிலவரம்
- திண்டுக்கல் நகராட்சிக் குப்பை கிடங்கில் 3வது நாளாக தீ
- ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 60 பேர் பலி
- கடலூரில் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித் துறை அதிகாரி கைது
- ஹைட்ரஜன் பேருந்து இயக்கம்: நெல்லை விஞ்ஞானி சாதனை
- தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
- பிரதமர் வருகையையொட்டி புதுக்கோட்டையில் பாதுகாப்புக் குழுவினர் ஆய்வு
- ஊழலுக்கு எதிராக வலுவான சட்டம் கொண்டுவர கட்சிகளுக்கு விருப்பம் இல்லை: அன்னா ஹசாரே
- மதுரையில் தலைமைக் காவலரின் மனைவி, மகன் தீக்குளித்து தற்கொலை
- பாஜக நிர்வாகிகளுக்கு மிரட்டல் கடிதம்: காவல்துறையினரிடம் புகார்
| Posted: 29 Jul 2013 10:59 PM PDT தங்கம் சவரனுக்கு 240ரூபாய் உயர்ந்துள்ளது. 22கேரட் தங்கம் சவரனுக்கு 240ரூபாய் உயர்ந்து 21,312 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூபாய் 30 அதிகரித்து 2,664ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூபாய் 32 உயர்ந்து 2,849 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூபாய் 155 அதிகரித்து 41,110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 20பைசா அதிகரித்து ரூபாய் 44-க்கு விற்பனையாகிறது. |
| திண்டுக்கல் நகராட்சிக் குப்பை கிடங்கில் 3வது நாளாக தீ Posted: 29 Jul 2013 08:56 PM PDT திண்டுக்கல் நகராட்சிக் குப்பையில் தொடர்ந்து எரியும் தீயால் எழுந்துள்ள புகையால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தீயணைக்கும் பணிகள் தாமதமாவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து உடனே அங்கு விரைந்த காவல்துறையினர், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டக்காரர்களைக் கலைந்து போகச் செய்தனர். |
| ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 60 பேர் பலி Posted: 29 Jul 2013 08:53 PM PDT ஈராக்கின் பல்வேறு பகுதிகளில் தீவிராதிகள் நிகழ்த்திய கார் குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்களில் 60 பேர் உயிரிழந்தனர். தலைநகர் பாக்தாத்தில் 11 இடங்களில் நேற்றிரவு கார் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதேபோல பாஸ்ரா, சமாவா உள்ளிட்ட நகரங்களிலும் தீவிரவாதிகள் கார் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 60 பேர் கொல்லப்பட்டனர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் 10 பேர் உயிரிழந்தனர். கடந்த 2008ஆம் ஆண்டுக்குப்பிறகு இந்த மாதத்தில் மட்டும் அந்நாட்டில் பயங்கர தாக்குதல்கள் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த மாதத்தில் மட்டும் அங்கு 800 பேர் வரை உயிரிழந்துள்ளனர். |
| கடலூரில் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித் துறை அதிகாரி கைது Posted: 29 Jul 2013 08:52 PM PDT கடலூர் சேத்தியாத்தோப்பில் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித் துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். சேத்தியாத்தோப்பு கூட்டுரோட்டில் உள்ள ஓட்டலுக்கு செல்ல வாய்க்கால் மேல் சிமென்ட் பாலம் அமைக்க முகமது ஹுசைன் நூரனி என்பவர் பொதுப்பணித் துறை அலுவலகத்தை அணுகி அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி அளிக்க நீர்வள அமைப்பு உதவி செயற்பொறியாளர் கண்ணன், நூரனியிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. முதல் தவணையாக 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில், அடுத்த தவணையாக மீதிப்பணம் 20 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் பேரில் கண்ணனிடம் நூரனி கொடுத்தார். அப்போது பொதுப்பணித் துறை அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கண்ணனை கைது செய்தனர். |
| ஹைட்ரஜன் பேருந்து இயக்கம்: நெல்லை விஞ்ஞானி சாதனை Posted: 29 Jul 2013 08:39 PM PDT மகேந்திரகிரி விண்வெளி மையத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஞானகாந்தி கடந்த 5ஆண்டுகளாக ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இவரது முயற்சி வெற்றி பெற்றதையடுத்து நேற்று ஹைட்ரஜன் பேருந்தின் சோதனை ஓட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. டாடா மோட்டார்ஸ் மற்றும் இஸ்ரோ அதிகாரிகள் முன்னிலையில் வெற்றிகரமாக ஹைட்ரஜன் பேருந்து இயக்கிக் காட்டப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் ஹைட்ரஜன் வாயு மூலம் பேருந்து இயங்கியது கண்டு அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தியாவில் ஹைட்ரஜன் மூலம் பேருந்து இயக்கி காட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும். முதல் கட்டமாக நெல்லையில் இருந்து ஆந்திரா வரை ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த பேருந்தை ஓட்டிப் பார்க்கும் முயற்சியும் நடைபெறவுள்ளது. |
| தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு Posted: 29 Jul 2013 08:35 PM PDT தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கலில் காமராஜர் சிலையை திறந்து வைத்து அவர் பேசும் போது, தமிழகத்தை முதன்மையான மாநிலமாக ஆக்கியவர் காமராஜர் என்று குறிப்பிட்டார். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு தமிழக காவல்துறை ஒடுக்க வேண்டும் என அப்போது அவர் கேட்டுக்கொண்டார். மத்தியில் ஆட்சி செய்துவரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மூன்றாவது முறையும் ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார். |
| பிரதமர் வருகையையொட்டி புதுக்கோட்டையில் பாதுகாப்புக் குழுவினர் ஆய்வு Posted: 29 Jul 2013 08:31 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கால் திறக்கப்பட உள்ள பாரத மிகுமின் நிலையப் பகுதியை பிரதமரின் பாதுகாப்புக் குழுவினர் ஆய்வு செய்தனர். திருமயம் அருகே ஓலைக்குடிப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பாரத மிகுமின் நிலையத்தின் துணை நிறுவனத்தை ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் வேகமாக செய்யப்பட்டு வருகின்றன. பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக பிரதமரின் சிறப்புப் பாதுகாப்பு அதிகாரி அனினூத் சங்கிட் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் திருமயம் வந்து ஹெலிகாப்டர் இறங்கு தளம் உள்ளிட்ட இடங்களை ஆய்வுசெய்தனர். பாரத மிகுமின் நிலைய அதிகாரிகளிடமும் அவர்கள் ஆலோசனை நடத்தினர். |
| ஊழலுக்கு எதிராக வலுவான சட்டம் கொண்டுவர கட்சிகளுக்கு விருப்பம் இல்லை: அன்னா ஹசாரே Posted: 29 Jul 2013 08:25 PM PDT லஞ்ச ஊழலுக்கு எதிராக வலுவான சட்டத்தைக் கொண்டுவர எந்தக் கட்சிக்கும் விருப்பம் இல்லை என்று அன்னா ஹசாரே விமர்சித்துள்ளார். ஊழலுக்கு எதிராக யாத்திரை மேற்கொண்டுள்ள அவர், உத்தரப்பிரதேசத்தில் ஜான்பூர் நகரில் பொதுக்கூட்டத்தில் பேசினார். 5 ரூபாயிலும்,12 ரூபாயிலும் வயிறு நிறைய சாப்பிட முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறியதை அன்னா ஹசாரே கடுமையாக கண்டித்தார். குரூரமான நகைச்சுவை என்று அதை வர்ணித்த அவர், ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்குமெனில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாதச் சம்பளமாக 50 ஆயிரம் ரூபாயை ஏன் வாங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். பாரதிய ஜனதாவால் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ள நரேந்திர மோடி கூட, தான் ஆளும் மாநிலமான குஜராத்தில், லோக்பால் மசோதாவை கொண்டு வரவில்லை என்றும் அவர் கூறினார். தனது முன்னாள் சகாவான அரவிந்த் கேஜ்ரிவால் தொடங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்கப் போவதில்லை என்றும் அன்னா ஹசாரே தெரிவித்தார். |
| மதுரையில் தலைமைக் காவலரின் மனைவி, மகன் தீக்குளித்து தற்கொலை Posted: 29 Jul 2013 08:19 PM PDT மதுரை மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக தலைமைக் காவலரின் மனைவியும், மகனும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மதுரை விளக்குத்தூண் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் சுபாஷ் காந்தியின் குடும்பத்தினர். சுபாஷ் காந்திக்கும், மனைவி ராஜேஸ்வரிக்கும், எந்தப் பள்ளியில் மகனைச் சேர்ப்பது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. |
| பாஜக நிர்வாகிகளுக்கு மிரட்டல் கடிதம்: காவல்துறையினரிடம் புகார் Posted: 29 Jul 2013 08:10 PM PDT கட்சியின் நிர்வாகிகளுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியினர் கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அந்தக் கடிதத்தில் பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்பினைச் சேர்ந்த நிர்வாகிகள் 12 பேருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தெரிவித்துள்ளார். பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய அப்துல் நாசர் மதானியின் புகைப்படத்துடன் வந்த அந்த கடிதத்தில், அவரை அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சேகர் கூறினார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |