Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி சென்னையில் விழிப்புணர்வு பேரணி

Posted: 27 Jul 2013 10:29 PM PDT


பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியானது சென்னை மெரீனா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தொடங்கி, கண்ணகி சிலை வரை நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க வலியுறுத்தும் பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

Posted: 27 Jul 2013 10:05 PM PDT


ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 2012ம் ஆண்டு ஈரான் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 மாத கால சிறைத்தண்டனை அனுபவித்துவிட்ட நிலையில், அவர்களை மீட்க, அங்குள்ள இந்தியத் தூதரகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு, சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். காணொளி:மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இன்று இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையேயான ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டி

Posted: 27 Jul 2013 09:11 PM PDT


இந்திய, ஜிம்பாப்வே அணிகள் இடையேயான ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெறுகிறது. ஏற்கெனவே நடந்த இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் , தொடரைத் தக்க வைக்க இன்றைய போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது ஜிம்பாப்வே அணி. அதே நேரம் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இன்றைய போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் நோக்கத்தோடு இந்திய அணி களமிறங்குகிறது . ஹராரேவில் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. காணொளி:இன்று இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையேயான ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டி

டி20 போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் போராடி தோல்வி

Posted: 27 Jul 2013 09:07 PM PDT


அறிமுக வீரர்களின் அபார ஆட்டத்தினால் மேற்கு இந்தியத் தீவுகளுக்கெதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 153 ரன்களை இலக்காக கொண்டு பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆட்டத்தின் கடைசி பந்தில் அந்த அணியின் அறிமுக வீரர் பாபர் சிக்சர் அடிக்க, பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் மற்றொரு அறிமுக வீரர் உமர் அமின் சிறப்பாக விளையாடி 47 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய சாகித் அஃப்ரிடி 46 ரன்கள் எடுத்தார். முன்னதாக பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பொலார்டு 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணியின் தரப்பில் அறிமுக வீரர் பாபர் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி 20 போட்டி இன்று நடக்கிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் இன்று அதிபர் தேர்தல்

Posted: 27 Jul 2013 08:59 PM PDT


மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. கடந்த வருடத்தில் மாலியில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பிற்கு பின்னர், நாட்டில் வன்முறை மற்றும் குழப்பங்களும் நிலவி வந்த நிலையில், ஃபிரான்ஸின் தொடர் முயற்சியால் தேர்தல் நடக்கிறது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் உள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிபர் பதவிக்கு போட்டியிடும் 27 வேட்பாளர்களில் முன்னாள் பிரதமர் இப்ராஹிம் பவுபாகார் கீட்டா மற்றும் முன்னாள் நிதியமைச்சர் சிஸி ஆகியோரில் ஒருவர் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று பிசிசிஐ செயற்குழு: ஐபிஎல் சூதாட்டம் குறித்து விவாதம்

Posted: 27 Jul 2013 08:57 PM PDT


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. இடைக்காலத் தலைவர் ஜக்மோகன் டால்மியா தலைமையில் நடக்கும் இந்தச் செயற்குழுக் கூட்டத்தில், ஐ.பி.எல். சூதாட்டம் குறித்த அருண் ஜேட்லி தலைமையிலான குழு தாக்கல் செய்த 500 பக்க விசாரணை அறிக்கை பற்றி விவாதிக்கப்படும். இது தவிர, இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. சர்ச்சையில் சிக்கிய பிசிசிஐ தலைவர் சீனிவாசன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.

எகிப்தில் பதற்றம்: வன்முறையில் 127 பேர் பலி

Posted: 27 Jul 2013 08:54 PM PDT


எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது முர்சியின் ஆதரவாளர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் 127 பேர் கொல்லப்பட்டதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு கூறியுள்ளது. ஆனால், 65 பேர் மட்டுமே பலியானதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ராணுவம் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை மட்டுமே வீசியதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, தலைநகர் கெய்ரோவில் உள்ள மசூதிக்கு அருகே முர்சியின் ஆதரவாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை வலுக்கட்டாயமாக அகற்றப் போவதாக ராணுவம் தெரிவித்துள்ளதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதிபராக இருந்த முகமது முர்சியை, பதவியில் இருந்து ராணுவம் அகற்றியதைத் தொடர்ந்து அங்கு போராட்டங்களும் வன்முறைகளும் நடந்து வருகின்றன.  காணொளி:எகிப்தில் பதற்றம்: வன்முறையில் 127 பேர் பலி  

டெல்லி நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகே காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Posted: 27 Jul 2013 08:44 PM PDT


டெல்லியில் நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகே காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். நாடாளுமன்ற சாலையில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்த மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடுமலைப்பேட்டையில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி: அரையிறுதியில் வருமானவரித்துறை அணி

Posted: 27 Jul 2013 08:24 PM PDT


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில், வருமானவரித்துறை அணியும், மதுரை தெற்கு மண்டல காவல்துறை அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. சென்னை சாய் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மதுரை தெற்கு மண்டல காவல்துறை அணி வெற்றிப் பெற்றது. கோவை மாவட்ட அணிக்கு எதிரான மற்றொரு காலிறுதியாட்டத்தில் சென்னை வருமானவரித்துறை அணி நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ராஜபாளையத்தில் முறையாக குடிநீர் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் போராட்டம்

Posted: 27 Jul 2013 08:22 PM PDT


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முறையாக குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராஜபாளையம் பி.எஸ்.கே. பார்க் தெருவில் குடிநீர் சரிவர வராததைக் கண்டித்து தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் இப்போராட்டம் நடைபெற்றது. பின்னர், குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.  


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™