puthiyathalaimurai.tv online |
- இந்திய சில்லறை விற்பனையில் அன்னிய நிறுவனங்கள் நுழைவதால் வேலைவாய்ப்பு பாதிக்கும்
- ஓசூரில் ஒற்றை யானையை விரட்ட 3 கும்கி யானைகள் வரவேற்பு
- இந்தியாவின் சட்டதிட்டங்களை அனுசரிக்க முடியாது: வால்மார்ட்
- சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலையில் தீ விபத்து
- ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்:சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை
- சவூதியில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகள்
- சிறப்பு பொருளாதார மண்டலங்களை சீரமைக்க மத்திய அரசு திட்டம்
- ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழுவிலிருந்து பிர்லா ராஜிநாமா
- இயற்கை பேரிடரை சமாளிப்பதில் தெற்காசிய நாடுகளிடையே ஒற்றுமை இல்லை…
- மந்தநிலைக்கு செல்லும் சீன பொருளாதாரம்
| இந்திய சில்லறை விற்பனையில் அன்னிய நிறுவனங்கள் நுழைவதால் வேலைவாய்ப்பு பாதிக்கும் Posted: 23 Jul 2013 11:39 PM PDT இந்திய சில்லறை விற்பனையில் அன்னிய நிறுவனங்கள் நுழைவதால் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் பாதிக்கும் என திருச்சி சிவா தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. மல்ட்டி பிராண்டு ரீடெயில் எனப்படும் பல வணிகச் சின்னங்கள் கொண்ட பொருளை விற்கும் அன்னிய நிறுவனங்கள் சரியானபடி வழிநடத்தப்படாவிட்டால் இந்திய சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்தக் குழு தெரிவித்துள்ளது. எனவே இந்திய நிறுவனங்களை பாதிக்காதபடி அன்னிய சில்லறை விற்பனை நிறுவனங்களை வழிநடத்த ஒரு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கலாம் என இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. |
| ஓசூரில் ஒற்றை யானையை விரட்ட 3 கும்கி யானைகள் வரவேற்பு Posted: 23 Jul 2013 11:39 PM PDT கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒற்றை யானையின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வர பொள்ளாச்சியில் இருந்து 3 கும்கி யானைகள் இன்று வரவழைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 4 மணி அளவில் யானை விரட்டும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அந்த நேரத்தில் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 9-ஆம் தேதி கர்நாடக வனப்பகுதியில் இருந்து ஓசூருக்கு வந்த இந்த யானை அன்று முதல் அங்கேயே முகாமிட்டுள்ளது. யானையை விரட்ட 70 பேர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. |
| இந்தியாவின் சட்டதிட்டங்களை அனுசரிக்க முடியாது: வால்மார்ட் Posted: 23 Jul 2013 11:31 PM PDT அன்னிய சில்லறை விற்பனை நிறுவனங்கள் தங்களின் கொள்முதலில் 30 சதவீதத்தை இந்திய சிறு, குறு நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்ற விதிமுறையை தாங்கள் அனுசரிக்க இயலாது என வால்மார்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனினும் 20 சதவீதம் வரை கொள்முதல் செய்யத் தயார் என்று வால்மார்ட் கூறியுள்ளது. இந்திய சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னரும் வெளிநாட்டு நிறுவனங்கள் கடை திறக்கவில்லை. இந்திய அரசின் கடுமையான சட்டதிட்டங்கள்தான் இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது. இந்தநிலையில் வால்மார்ட் இப்போது இதற்கான காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளது. |
| சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலையில் தீ விபத்து Posted: 23 Jul 2013 11:30 PM PDT சிவகாசியில் தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து நாசமாயின. சிவகாசி ஓடைத் தெருவில் செயல்பட்டு வரும் தீப்பெட்டித் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீர் என புகை வந்தது. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.தொழிலாளர்கள் யாரும் பணிபுரியாததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. |
| ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்:சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை Posted: 23 Jul 2013 11:27 PM PDT கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர் மழை கரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாக, கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக அளவிலான தண்ணீர் ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஒக்கேனக்கல் அருவிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஒடுவதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் படகு சவாரி செய்யவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வெள்ள ஆபத்து இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.இதனிடையே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.38 அடியாக அதிகரித்துள்ளது.வினாடிக்கு 19 ஆயிரத்து 75 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. |
| சவூதியில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகள் Posted: 23 Jul 2013 11:25 PM PDT சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அந்நாட்டு கட்டுமானத்துறையை கடுமையாக பாதித்துள்ளது. சவூதி அரேபியாவில் நடந்துவரும் கட்டுமானத் திட்டங்களில் 36 சதவீத திட்டங்கள் தொழிலாளர்கள் இன்றி முடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலும் பெரிய கட்டுமான நிறுவனங்களே பாதிக்கப்பட்டுள்ளதாக சவூதி தொழில்கள் சங்கத்தின் உறுப்பினர் ரயத் அக்கிலி தெரிவித்தார். சவூதியில் உள்நாட்டு மக்களின் பணி வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்காக நிதாகத் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து சவூதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளனர். |
| சிறப்பு பொருளாதார மண்டலங்களை சீரமைக்க மத்திய அரசு திட்டம் Posted: 23 Jul 2013 11:22 PM PDT ஏற்றுமதியை அதிகரிக்கும்விதத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை சீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பெயரளவிலியே செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இவற்றுக்கு புத்துயிர் தர மாநில அரசுகளும், பல்வேறு தொழில் அமைப்புகளும் கேட்டுக் கொண்டிருந்தன. இதனால் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க தேவையான நில அளவு வரம்பை குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் விவசாய விளைபொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பிரிவுக்கு கூடுதல் முக்கியத்துவம் தர அரசு திட்டமிட்டுள்ளது. அதிகரித்து வரும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இதுபோன்ற திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது. |
| ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழுவிலிருந்து பிர்லா ராஜிநாமா Posted: 23 Jul 2013 11:18 PM PDT ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழுவிலிருந்து தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லா ராஜிநாமா செய்துள்ளார். புதிய வங்கி தொடர்பாக விண்ணப்பித்த ஏராளமான நிறுவனங்களில் குமார மங்கலம் பிர்லாவின் நிறுவனமும் ஒன்று. அனுமதி கேட்கும் ஒரு நிறுவனத்தின் தலைவர் அனுமதி தரும் இடத்தில் இருப்பது விதிப்படி தவறு என்பதால் பிர்லா ராஜிநாமா செய்துள்ளார். |
| இயற்கை பேரிடரை சமாளிப்பதில் தெற்காசிய நாடுகளிடையே ஒற்றுமை இல்லை… Posted: 23 Jul 2013 11:13 PM PDT கனமழை அபாயம், வெள்ள எச்சரிக்கை, நிலச்சரிவு என உயிர்களுக்கும், உடமைகளுக்கும் ஊறு ஏற்படுத்தும் இயற்கை சீற்றங்கள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்வதில் தெற்காசிய நாடுகளிடையே ஒற்றுமை சிறிதும் இல்லை என சர்வதேச வானிலை ஆராய்ச்சியாளர்கள் பொதுவான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளனர். அண்மையில் உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகினர், பலர் வீடுகளை இழந்து இன்றளவும் தவித்து வருகின்றனர். வானிலை முன் அறிவிப்புகளை பகிர்ந்து கொள்வதில் தெற்காசிய நாடுகள் முனைப்புக் காட்டியிருந்தால், அண்மையில் உத்தரகண்டிலும், நேபாளத்திலும் ஏற்பட்டது போன்ற இயற்கை பேரிடர்களை முன் கூட்டியே அறிந்து பேரிடரை தவிர்த்திருக்க முடியும் என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள். தீர்வு என்ன?…… தெற்காசிய நாடுகளில் இயற்கை பேரிடர்களை சமாளிப்பது எப்படி என சர்வதேச வானிலை ஆராய்ச்சியாளர்கள் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன்படி, வானிலை தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு தெற்காசிய நாடுகள் இணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த கூட்டமைப்பின் வழியாக தொடர்ச்சியாக வானிலை தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பகிர்ந்து கொள்வது குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவிற்கு பெருமளவில் நன்மை கிடைக்க ஏதுவாக அமையும். இந்தியாவின் உத்தர்கண்ட் மாநிலத்தோடு எல்லைலை பகிர்ந்து கொள்கிறது நேபாளம். கடந்த மாதம் உத்தரகண்டில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது இந்தியா – நேபாளம் என இரண்டு தேசங்கள் வழியாகவும் பயணிக்கு மஹாகாளி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேபாளத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த திடீர் வெள்ளம் குறித்து காரணங்களை இந்திய அதிகாரிகளிடம் கேட்டறிய பல முறை முயற்சித்தும் பலன் இல்லை என குற்றம்சாட்டுகின்றனர் நேபாள நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள். இந்தியாவிடம் இருந்து தங்களுக்கு முன்னறிவிப்பு வந்திருந்தால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்திருக்கலாம் என்கின்றனர் அவர்கள். ஆனால் ஆண்டு தவறாமல் வெள்ளத்தால் பாதிக்கப்படும் வங்கதேசத்திற்கு வானிலை முன்அறிவிப்புகளை நேபாளம் பகிர்ந்து கொள்கிறதா என்றால், இல்லை என்றே கூற வேண்டும். இருப்பினும் இந்தியாவில் இருந்தும் சீனாவில் இருந்தும் தங்களுக்கு அவ்வப்போது வானிலை முன்னெச்சரிக்கை குறித்த தகவல்கள் வருவதாக தெரிவித்துள்ள வங்கதேசம், அத்தகவல் மிகவும் உபயோகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதே போல் கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இதற்குக் காரணம் காபூல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு. காபூல் ஆற்றில் வெள்ளம் குறித்து ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தகவல்கள் பரிமாறிக் கொண்டிருந்தால் 2010ம் ஆண்டு பாதிப்பை பாகிஸ்தான் சமாளித்திருக்க முடியும். இப்படி பல சான்றுகளை முன் வைத்து தெற்காசிய நாடுகளுக்கு இடையே வானிலை முன்அறிவிப்புகளை பகிர்ந்து கொள்ளும் கூட்டமைப்பு உருவாக்குவதன் அவசியத்தை ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைத்துள்ளனர். இது குறித்து இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் துணை தலைவர் சசிதர் ரெட்டி கூறுகையில் : தெற்காசிய நாடுகளுக்கு இடையே வானிலை கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான அவசியத்தை இந்தியா நன்கு உணர்ந்திருக்கிறது என்றும் எதிர்காலத்தில் வானிலை தகவல்களை பகிர்ந்து கொள்வது மேம்படுத்துப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். |
| மந்தநிலைக்கு செல்லும் சீன பொருளாதாரம் Posted: 23 Jul 2013 11:13 PM PDT அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து சீனாவின் பொருளாதாரமும் மந்தநிலைக்கு சென்றுகொண்டுள்ளது. இதனால் சீனா பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதிய அரசு கட்டடங்கள் எதையும் கட்டக்கூடாது என சீன ஆளும்கட்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான நிதி ஒதுக்கீடு 78 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் கடந்த காலாண்டில் 7.5 சதவீதமாக வீழ்ந்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மோசமான வளர்ச்சி நிலையாகும். இந்த வளர்ச்சி மேலும் சரியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சீனாவின் அதிரடி நடவடிக்கை தொடங்கியுள்ளது. |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |