puthiyathalaimurai.tv online |
- உலகக்கோப்பை கால்பந்து: இறுதிப் போட்டியில் பிரான்ஸ்-உருகுவே மோதல்
- இலங்கை கடற்படைக்கு கண்டனம்: நாகை மீனவர்கள் வேலைநிறுத்தம்
- உணவுப் பாதுகாப்பு அவசர சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக சோனியா ஆலோசனை
- கோவையில் மாவட்ட தடகளப் போட்டிகள் : 2,500 வீரர்கள் பங்கேற்பு
- ஜார்க்கண்டில் புதிய அரசு பொறுப்பேற்பு: முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த்
- விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும்: வால்டர் தேவாரம்
- தூத்துக்குடியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி: மதுரை அணி வெற்றி
- இவர்கள் படிப்பை பாதியில் துறந்தனர்… ஆனாலும் பிரபலாமனார்கள்…!
- சூரில் தொடரும் யானையின் அட்டகாசம்: வனத்துறையினர் மீது பொதுமக்கள் புகார்
- ஈரான் சிறையில் தமிழக மீனவர்கள்: மீட்கக் கோரி தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவிப்பு
| உலகக்கோப்பை கால்பந்து: இறுதிப் போட்டியில் பிரான்ஸ்-உருகுவே மோதல் Posted: 12 Jul 2013 10:52 PM PDT இருபது வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, உருகுவேயுடன் மோதுகிறது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி கானாவை 2-1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்திருந்தது. பெனால்டி ஷூட் அவுட் வரை நீடித்த மற்றொரு அரையிறுதியில் உருகுவே அணி 7-6 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி வரை முன்னேறியது. இந்த இரு அணிகளும் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது. உருகுவே அணி அதிகபட்சமாக கடந்த 1997-ம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளது. |
| இலங்கை கடற்படைக்கு கண்டனம்: நாகை மீனவர்கள் வேலைநிறுத்தம் Posted: 12 Jul 2013 10:51 PM PDT இலங்கை கடற்படையினர் மீன்களையும் வலைகளையும் பறித்துச் சென்றதைக் கண்டித்து நாகை மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 50ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. ஏறத்தாழ 500 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன் மீன்பிடிக்கச் சென்ற தங்களிடம் இலங்கை கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக நாகை மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வலைகளையும் மீன்களையும் இலங்கை கடற்படையினர் பறித்துச் சென்றதாக கூறிய மீனவர்கள், அவசர உதவிக்கு அழைத்தால்கூட இந்திய கடலோர காவல்படை வருவதில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். |
| உணவுப் பாதுகாப்பு அவசர சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக சோனியா ஆலோசனை Posted: 12 Jul 2013 10:46 PM PDT உணவுப் பாதுகாப்பு அவசர சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் சோனியா காந்தி, ஆலோசனை நடத்தி வருகிறார். சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற வரும் இந்தக் கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங், உணவுத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உட்பட பலரும் பங்கேற்றுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 82 கோடி பேருக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த திட்டம், 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மக்களின் ஆதரவை காங்கிரஸுக்கு பெற்றுத் தரும் என அக்கட்சி நம்புகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 20ம் தேதி டெல்லியில் உணவுப் பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுகிறது. |
| கோவையில் மாவட்ட தடகளப் போட்டிகள் : 2,500 வீரர்கள் பங்கேற்பு Posted: 12 Jul 2013 10:39 PM PDT 2,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் கோவையில் நேற்று தொடங்கியது. கோவை மாவட்ட தடகள சங்கம் சார்பில் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இன்று நிறைவடையும் இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகள் அடுத்த மாதம் திருவண்ணாமலையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். |
| ஜார்க்கண்டில் புதிய அரசு பொறுப்பேற்பு: முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் Posted: 12 Jul 2013 10:33 PM PDT ஜார்க்கண்ட்டில் சிபுசோரனின் மகன் ஹேமந்த் சோரன் தலைமையிலான புதிய அரசு இன்று பொறுப்பேற்றது. தலைநகர் ராஞ்சியில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ஹேமந்த் சோரன் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் சையத் அகமது, அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத்தும், ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்து அன்னபூர்ணா தேவியும் அமைச்சர்களாக பதவியேற்றனர். 82 சட்டப்பேரவை இடங்களைக் கொண்ட ஜார்க்கண்டில், தனது கட்சிக்கு 43 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறிய ஹேமந்த் சோரன், கடந்த 9ம் தேதி ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து ஜனவரி 18ம் தேதி அம்மாநிலத்தில் அமலுக்கு வந்த ஆளுநர் ஆட்சி இன்று காலை திரும்பப் பெறப்பட்டது. தனது அரசுக்கான ஆதரவை சட்டப்பேரவையில் நிரூபித்த பின்னர், ஹேமந்த் சோரன் தனது அமைச்சரவையை விரிவுபடுத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2000மாவது ஆண்டில் உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில், கடந்த 13 ஆண்டுகளில், எட்டு அரசுகள் பொறுப்பேற்றுள்ளன. தற்போது ஹேமந்த் தலைமையில் 9வது அரசு ஜார்க்கண்டில் பதவியேற்றுள்ளது. |
| விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும்: வால்டர் தேவாரம் Posted: 12 Jul 2013 10:31 PM PDT விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவ- மாணவிகளின் எதிர்காலம் சிறப்பானதாகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும என்று தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் வால்டர் தேவாரம் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கூறினார். இந்த விளையாட்டு விழாவில் மாணவ-மாணவியரின் கலைநிகழச்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு வால்டர் தேவாரம் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். |
| தூத்துக்குடியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி: மதுரை அணி வெற்றி Posted: 12 Jul 2013 10:19 PM PDT தூத்துக்குடியில் நடைபெற்ற பள்ளி அணிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கால்பந்து போட்டியில் மதுரை டான்பாஸ்கோ பள்ளி அணி வெற்றி பெற்றது. தூத்துக்குடி லசால் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் 20 அணிகள் பங்கேற்றிருந்தன. நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மதுரை டான்பாஸ்கோ அணி, தூத்துக்குடி லசால் மேல்நிலைப்பள்ளி அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே மதுரை டான்பாஸ்கோ அணி அபாரமாக விளையாடியது. இதனால் அந்த அணி அடுத்தடுத்து கோல்களை அடித்தது. ஆட்ட நேர இறுதியில் டான்பாஸ்கோ பள்ளி அணி 5-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. |
| இவர்கள் படிப்பை பாதியில் துறந்தனர்… ஆனாலும் பிரபலாமனார்கள்…! Posted: 12 Jul 2013 10:10 PM PDT படிப்பின் அவசியத்தை நாம் அனைவருமே உணர்ந்திருக்கிறோம். ஆனால் முறையாக பள்ளிக்கல்வியை முடிக்காத பலர் எட்ட முடியாத உயரத்தை எட்டிய அதிசயமும் வரலாற்றுப் பக்கங்களில் இடம் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் பற்றி ஒரு சில சவாரஸ்ய தகவல்கள். கடின உழைப்பு, விடாமுயற்சி, விவேகம், இப்படி பல குணாதிசயங்களால் கோபுரத்தை அடைந்த சிலரைப் பற்றிய தகவல்கள் தான் இவை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரது படைப்புகளுக்கு மயங்காதவர்கள் இல்லை. ஆம் விதவிதமான கார்டூன்களை அனிமேட் செய்த இவர் 16 வயதிலேயே பள்ளிப் படிப்பை கைவிட்டார். ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றிய இவர் பின்நாளில் அகிலம் போற்றும் அளவிற்கு உயர்ந்தார். அவரை கவுரவிக்கும் வகையில் அவரது 58வது வயதில் அவருக்கு கவுரவ டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது. குடும்பச் சூழல் காரணமாக 12 வயதில் படிப்பைத் துறந்து வேலைக்குச் செல்லத் துவங்கியவர் 22 வயதில் ஒரு பத்திரிகையில் நிருபரானார். தேர்தல் பிரசாரங்கள், தேர்தல் களம் குறித்த இவரது சுவாரஸ்ய செய்திகள் பரவலாக பேசப்பட்டது. இவர் தான் பின்நாளில் மிகப் பெரிய காவியங்களை படைத்த எழுத்தாளரானார்.அவர் வேறு யாரும் இல்லை..சார்லஸ் டிக்கென்ஸ் புகழ் பெற்ற எழுத்தாளர். மின் விளக்கைக் கண்டுபிடித்து வெளிச்சத்தை தந்த தாமஸ் ஆல்வா எடிசன் சிறு வயதிலேயே பள்ளிக்கு முழுக்கு போட்டவர் தான். இன்றளவும் வியந்து பார்க்கக் கூடிய அளவிற்கு பெருமை வாய்ந்த அரசியல்வாதி, ராஜதந்திரி, எழுத்தாளர், விஞ்ஞானி பெஞ்சமின் பிரான்கிளின். 10 வயதோடு பள்ளிப் படிப்பை துறந்தவர் இவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ், படிப்பை பாதியிலேயே துறந்தவர் தான். சரியாக 15 வயதில் பள்ளிப் படிப்பை துறந்தவர் தான் பின் நாளில் நோபல் பரிசு பெறும் அளவிற்கு மிகப் பெரிய இயற்பியல் விஞ்ஞானியானார். அவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற மேதை. உலகப் புகழ் பெற்ற இளவரசி டயானா திருமணத்திற்கு முன்னர் ஒரு மழலையர் பள்ளிக்கூடத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார் என்பது தெரியும் ஆனால் 16 வயதுடன் பள்ளிக்கல்வியை முடித்துக் கொண்டவர் டயானா என்பது தெரியுமா? இவர்களில் பலரும் பிரபலமான பின்னர் தனிப்பட்ட ஆர்வத்தாலும், கல்வியின் மகத்துவத்தை உணர்ந்தும் உயர்கல்வியை மேற்கொண்டனர் என்பது கூடுதல் தகவல். |
| சூரில் தொடரும் யானையின் அட்டகாசம்: வனத்துறையினர் மீது பொதுமக்கள் புகார் Posted: 12 Jul 2013 09:05 PM PDT ஓசூரில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் ஆண் யானையை காட்டுப்பகுதிக்கு விரட்டுவதில் வனத்துறையினர் மெத்தனமாகச் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலை பகுதியில் கடந்த 4 நாள்களாக சுற்றித் திரியும் ஒற்றை ஆண் யானை, தொழிற்சாலையின் தடுப்புச் சுவற்றை சேதப்படுத்தி உள்ளது. யானையின் அட்டகாசத்தால், மோரணப்பள்ளியில் 3 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. யானையை வனப்பகுதிக்கு விரட்டுவதில் வனத்துறையினர் மெத்தனமாகச் செயல்படுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. |
| ஈரான் சிறையில் தமிழக மீனவர்கள்: மீட்கக் கோரி தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவிப்பு Posted: 12 Jul 2013 09:01 PM PDT ஈரான் சிறையில் தவித்து வரும் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. துபாயில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடித் தொழில் செய்து வந்த தமிழகத்தை சேர்ந்த 10 மீனவர்கள் ஈரான் கடற்எல்லைக்குள் சென்று மீன் பிடித்ததாக, அந்த நாட்டு கடற்படை கடந்த டிசம்பர் மாதம் கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு 6 மாத கால சிறைத்தண்டனையும் இந்திய மதிப்பில் 3.40 லட்சம் ரூபாய் அபராதத் தொகையும் விதிக்கப்பட்டது. இந்த சிறைத்தண்டனை கடந்த ஜூன் 25- ஆம் தேதியுடன் முடிவுற்ற நிலையில், அபராதத் தொகையை செலுத்த வழியில்லாமல் தமிழக மீனவர்கள் சிறையில் இருந்து விடுபட முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து பல உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஈரான் நாட்டு துதரகத்தை விரைவில் முற்றுகையிடப் போவதாக மீனவ தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
