puthiyathalaimurai.tv online |
- இஸ்லாமிய மக்களின் புனித ரமலான் மாதம் தொடங்கியது
- ரயில் மறியலில் ஈடுபட்ட என்.எல்.சி., தொழிலாளர்கள் கைது
- ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தீ விபத்து
- 100 மெகாபிக்சல் கேமராவை வடிவமைத்துள்ளது சீன நிறுவனம்
- முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி: இந்தியா-இலங்கை இன்று மோதல்
- புத்த கயா தொடர் குண்டுவெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் பொறுப்பேற்பு
- குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: அச்சக உரிமையாளர் கைது
- கேரளாவில் நேற்று முழு அடைப்பு: முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலக வலியுறுத்தல்
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
- டெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறார் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
| இஸ்லாமிய மக்களின் புனித ரமலான் மாதம் தொடங்கியது Posted: 10 Jul 2013 10:29 PM PDT இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு கடைபிடிக்கும் ரமலான் மாதம் நேற்று தொடங்கியது. நோன்பின் போது பசித்திருப்பது மட்டுமின்றி, ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூறுகின்றனர். ரமலான் மாதத்தில் தான், திருக்குர்-ஆன் இறைவனால் அருளப்பட்டது. இதனால், மற்ற மாதங்களை விட ரமலான் மாதத்தை புனிதமாகக் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். நோன்பு என்பது உணவில் மட்டுமல்ல, பழக்க வழக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக என்கின்றனர் இஸ்லாமியர்கள். கட்டுப்பாடுகளுடன் வாழ்வது மட்டுமல்ல வறியவர்களுக்கு தான தர்மங்களை தாரளமாக வழங்க வேண்டும் என்பதும் நோன்பின் முக்கிய நியதியாக விளங்குகிறது. |
| ரயில் மறியலில் ஈடுபட்ட என்.எல்.சி., தொழிலாளர்கள் கைது Posted: 10 Jul 2013 10:13 PM PDT என்.எல்.சி.,யின் 5% பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு எந்த வித நிபந்தனை இல்லாமல் கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3ம் தேதி இரவு முதல் என்.எல்.சி.,அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. நேற்று முன் தினம் என்.எல்.சி., முதலாவது யூனிட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இன்று ஜீவா தொழிற்சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். ரயில் மறியலில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர். |
| ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தீ விபத்து Posted: 10 Jul 2013 10:07 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் தலைமைச்செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். ஸ்ரீநகரில் உள்ள தலைமைச்செயலகத்தில் இன்று காலை 9.15 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் 12 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீயில் பல முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமைச் செயலகம் ஸ்ரீநகரின் முக்கிய பகுதியில் இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பகுதி தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. |
| 100 மெகாபிக்சல் கேமராவை வடிவமைத்துள்ளது சீன நிறுவனம் Posted: 10 Jul 2013 09:38 PM PDT சீன நிறுவனம் ஒன்று 100-மெகாபிக்சல் கொண்ட கேமராவை உருவாக்கியுள்ளது. ஐ.ஓ.ஈ 3 – கேன்பன் கேமரா (IOE3-Kanban camera), சைனீஸ் அகடமி ஆஃப் சயின்சஸ்-ன் கீழ் இயங்கும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆப்டிக்ஸ் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா, வான்வழி மேப்பிங் (aerial mapping), பேரழிவு கண்காணித்தல் மற்றும் போக்குவரத்து மேலாண்மை போன்ற துறைகளில் உயர் தெளிவுத்திறன் படம் (high-resolution imaging) எடுக்க உபயோகிக்கப் படுகிறது. இந்த கேமரா 10,240×10,240 (10,240 x 10,240 pixels) பிக்சல்கள் (pixels-படப்புள்ளி) அளவிலான புகைப்படங்கள் எடுக்கும் திறன் கொண்டது. இது மிகவும் சிறியதாகவும், எடை குறைந்ததாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. -20 டிகிரி செண்டிக்ரேட் முதல் +55 டிகிரி செண்டிக்ரேட் வரை எந்த வித வெப்பநிலையிலும் இயங்கும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த கேமரா, உயர் தெளிவுத்திறன் உள்ள படம் எடுக்கும் திறன் கொண்டுள்ளதாலும், உயர் உணர்திறன் (high sensitivity) மற்றும் உயர் டைனமிக் (high dynamic range (HDR)) அம்சங்கள் கொண்டுள்ளதாலும், வான்வழி மேப்பிங், நகர திட்டமிடல், பேரழிவு கண்காணித்தல் மற்றும் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் துறைகளில், பிரயோகிக்கவல்லது. 2001-2005-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், இதே நிறுவனம் 81 மெகாபிக்சல் கேமராஒன்றையும் வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. |
| முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி: இந்தியா-இலங்கை இன்று மோதல் Posted: 10 Jul 2013 07:26 PM PDT மேற்கிந்தியத் தீவில் நடைபெறும் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லுவதற்கு, இந்திய- இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்திய- இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் இலங்கைக்கு எதிரான முதல் சுற்று லீக் போட்டியில், மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி, இரண்டாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையை வென்ற கையோடு, முத்தரப்பு தொடரிலும் சாம்பியன் பட்டம் வெல்லும் நம்பிக்கையில் உள்ளது இந்திய அணி. காயம் காரணமாக தோனி இடம்பெறாத நிலையில் விராத் கோஹ்லி தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். |
| புத்த கயா தொடர் குண்டுவெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் பொறுப்பேற்பு Posted: 10 Jul 2013 07:15 PM PDT புத்தகயாவில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பிற்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பின் டிவிட்டர் இணையதள கணக்கில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையை தாக்கப் போவதாகவும் அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த டிவிட்டர் கணக்கு குறித்து ஆராய்ந்தபோது, அது பாகிஸ்தானில் தொடங்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பிற்கும் தாவூத் இப்ராகிமிற்கும் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையை தீவிரப் படுத் தியுள்ளனர். இந்திய முஜாகிதீன் அமைப்பின் எச்சரிக்கையை தொடர்ந்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. |
| குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: அச்சக உரிமையாளர் கைது Posted: 10 Jul 2013 06:53 PM PDT குரூப் 2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வின் போது, வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த அச்சக உரிமையாளரான ரிஷிகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை ஈரோடு கொண்டு வந்த போலீசார், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| கேரளாவில் நேற்று முழு அடைப்பு: முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலக வலியுறுத்தல் Posted: 10 Jul 2013 06:49 PM PDT முதலமைச்சர் உம்மன் சாண்டி பதவி விலகக் கோரி கேரளாவில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விடுத்த அழைப்பின் பேரில் இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால், கேரளாவில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தலைநகர் திருவனந்தபுரத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. முழு அடைப்பின்போது ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. கேரளாவில் சூரிய மின்சக்தி தயாரிப்புக்கான கூரைகள் அமைத்துத் தருவதாக கூறி, கோடிக்கணக்கில் பண மோசடி செய்த விவகாரத்தில் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் அலுவலக உதவியாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால், உம்மன் சாண்டி பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. |
| தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு Posted: 10 Jul 2013 06:44 PM PDT தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தற்போது பரவலாக தென் மேற்கு மழை பெய்து வருகிறது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கேரள மாநிலம் வைக்கத்தில் நேற்று அதிகபட்சமாக 10 சென்டி மீட்டர் மழையும், பிரவோம்மில் 9 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. தமிழகத்தில் கோவை மாவட்டம் சின்னக்காளர் பகுதியில் அதிகபட்சமாக 6 சென்டி மீட்டர் மழை பெய்தது. சென்னையில் இரவு முழுவதும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டது. |
| டெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறார் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு Posted: 10 Jul 2013 06:31 PM PDT டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு இன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில், 17 வயதிற்குட்பட்ட ஒருவரது வழக்கு விசாரணை மட்டும் டெல்லியில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அவரது வழக்கை விசாரித்த நீதிபதி கீதாஞ்சலி கோயல் இன்று தீர்ப்பளிக்கவுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே தண்டனை கிடைக்கும். இந்த வழக்கில் வழங்கப்படும் முதல் தீர்ப்பு இதுவாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 5 பேரில் ராம்சிங் என்பவர் சிறையில் உயிரிழந்தார். மீதமுள்ள 4 பேர் மீதான வழக்கு டெல்லி சாகேத் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |