puthiyathalaimurai.tv online |
- அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ:19 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு
- வணிக வளாகத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்த இளைஞர்
- வேலூரில் இந்து முன்னணி செயலாளர் படுகொலை: 5 வெடிகுண்டுகள் பறிமுதல்
- நட்பு நாடுகளை வேவு பார்த்த அமெரிக்கா: கார்டியன் இதழ் வெளியிட்ட அடுத்த அதிர்ச்சி
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: செரீனா அதிர்ச்சி தோல்வி
- முத்தரப்பு கிரிக்கெட் தொடர் : இந்தியா-இலங்கை இன்று மோதல்
- சுரேஷ் கல்மாதிக்கு எதிர்ப்பு:விளையாட்டு துறைக்கு செய்தது என்ன?
- சவூதி அரசின் புதிய சட்டம்: வேலையிழக்கும் 75 ஆயிரம் இந்தியர்
- உத்தரகண்டில் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் கட்டுமானப் பணிக்கு தடை:முதல்வர் அறிவிப்பு
- நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக பெற்றி பெறும்:ஸ்டாலின்
| அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ:19 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு Posted: 01 Jul 2013 10:45 PM PDT அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள யார்னல் நகரத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ 8 ஆயிரத்து 400 ஏக்கர் வரை பரவியுள்ளது. வேகமாக பரவி வரும் இந்த காட்டுத் தீயில் சிக்கி 19 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் வேகமாக பரவி வரும் தீயினால் ஏற்பட்டுள்ள அதிகமான வெப்பம் மற்றும் வெப்பக் காற்றினால் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 2 ஆயிரம் ஏக்கரில் இருந்து 8 ஆயிரம் ஏக்கர் வரை பரவியுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 400-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். |
| வணிக வளாகத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்த இளைஞர் Posted: 01 Jul 2013 10:35 PM PDT சென்னையின் மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்றின் 3-வது மாடியில் இருந்து 30 வயது இளைஞர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார். விசாரணையில், இறந்தவரின் பெயர் ஷண்முகம் என்பதும், சென்னை மத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. கீழே விழுந்தவரை காப்பாற்ற அங்கிருந்தவர்கள் முயன்றபோது அங்கிருந்த காவலர்கள் தடுத்ததாகவும், தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் இறந்தாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தற்கொலையா, விபத்தா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| வேலூரில் இந்து முன்னணி செயலாளர் படுகொலை: 5 வெடிகுண்டுகள் பறிமுதல் Posted: 01 Jul 2013 09:58 PM PDT வேலூரில் ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையன் கொலை செய்யப்பட்ட இடத்தில் 5 வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவை அனைத்தும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறம், நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையன் படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.வெள்ளையன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, வேலூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த ஹிந்து முன்னணி அழைப்பு அழைப்பு விடுத்திருந்தது. திட்டமிட்டபடி அந்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| நட்பு நாடுகளை வேவு பார்த்த அமெரிக்கா: கார்டியன் இதழ் வெளியிட்ட அடுத்த அதிர்ச்சி Posted: 01 Jul 2013 09:08 PM PDT அமெரிக்காவின் ரகசிய உளவுத் திட்டங்கள் தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுவரை பிற நாடுகளை வேவு பார்த்தாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தன்னுடைய நெருங்கிய நட்பு நாடுகளையே அமெரிக்கா வேவு பார்த்திருப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த கார்டியன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பின் வாஷிங்டன் அலுவலகம் உள்ளிட்டவையும் அமெரிக்காவின் கண்காணிப்புக்குத் தப்பவில்லை என்று கார்டியன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்தச் செயல் தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் விளக்கம் கேட்டுள்ளன. இது தொடர்பாக பதில் அளித்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, வழக்கத்துக்கு மாறாக எதையும் அமெரிக்கா செய்துவிடவில்லை என்று தெரிவித்துள்ளார். |
| விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: செரீனா அதிர்ச்சி தோல்வி Posted: 01 Jul 2013 09:02 PM PDT விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தார். ஆடவர் பிரிவில் ஜோகோவிச், ஆண்டி முர்ரே, தாமஸ் பெர்டிச் ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 23ஆம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் சபைன் லிஸிக்கியிடம் போராடி தோல்வியடைந்தார். ஆடவர் பிரிவில் நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் டாமி ஹாஸ் உடன் விளையாடினார். அதில் 6-1 , 6-4 , 7-6 என்ற நேர் செட்களில் ஜோகோவிச் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச், ஆஸ்திரேலியாவின் பெர்னாட் டாமிக்ஸ்-ஐ வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் டேவிட் ஃபெரர், அர்ஜெண்டினாவின் டெல் பொட்ரோ ஆகியோரும் நான்காவது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். |
| முத்தரப்பு கிரிக்கெட் தொடர் : இந்தியா-இலங்கை இன்று மோதல் Posted: 01 Jul 2013 08:58 PM PDT முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து தோனி விலகியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் ஆட்டத்தின் போது அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தோனிக்கு பதிலாக அம்பாத்தி ராயுடு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். விராட் கோலி அணியின் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் முதல் லீக் ஆட்டத்தில் தோல்வி கண்ட இலங்கையும், இந்தியாவும் இன்று விளையாடுகின்றன. கிங்ஸ்டனில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. |
| சுரேஷ் கல்மாதிக்கு எதிர்ப்பு:விளையாட்டு துறைக்கு செய்தது என்ன? Posted: 01 Jul 2013 08:26 PM PDT ஆசிய தடகள சங்கத் தேர்தலில் தோல்வியடைந்த சுரேஷ் கல்மாதி, விளையாட்டுத் துறையில் இருந்து ஒதுங்க வேண்டும் என பிரபல முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் வலியுறுத்தியுள்ளார். சுரேஷ் கல்மாதி, அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். காமன்வெல்த் போட்டி ஊழலில் சிக்கியபோதே கல்மாதி, விளையாட்டு நிர்வாகத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் மில்கா சிங் தெரிவித்துள்ளார். தடகள துறைக்கு சுரேஷ் கல்மாதி என்ன செய்தார்? என்று மில்கா சிங் கேள்வி எழுப்பியுள்ளார். விளையாட்டு பற்றி எந்த அரிச்சுவடியும் தெரியாத கல்மாதியால், விளையாட்டுத்துறையின் மேம்பாட்டுக்கு என்ன செய்துவிட முடியும்? என மில்கா சிங் வினவியுள்ளார்.விளையாட்டுத் துறையில் சுரேஷ் கல்மாதியின் காலம் முடிவுக்கு வந்திருப்பதை வரவேற்பதாக மில்கா சிங் மேலும் தெரிவித்தார். முன்னதாக ஆசிய தடகள சங்கத்தின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் சுரேஷ் கல்மாதி, கத்தார் நாட்டின் அல் ஹமாதிடம் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். |
| சவூதி அரசின் புதிய சட்டம்: வேலையிழக்கும் 75 ஆயிரம் இந்தியர் Posted: 01 Jul 2013 07:50 PM PDT சவூதி அரேபியாவில், புதிய தொழிலாளர் சட்டத்தால் 75 ஆயிரம் இந்தியர்கள் விரைவில் நாடு திரும்புகின்றனர். அங்கு உள்நாட்டு மக்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு அரசு இந்த சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதன்படி, சவூதி அரேபியாவில் செயல்படும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில், பணிபுரியும் 10 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஒரு உள்நாட்டு தொழிலாளர் என்ற விகிதத்தை பின்பற்ற வேண்டும்.எனவே பணி அனுமதி இல்லாமல் சவூதி அரேபியாவில் தங்கியுள்ள இந்தியர்களை திருப்பி அனுப்பும் பணியில் இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது. பணி அனுமதி இல்லாத இந்தியர்கள் வெளியேறுவதற்கான கெடு, நாளை முடிவடைகிறது. கடந்த மே மாதம் 20 ஆம் தேதி நிலவரப்படி 75 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்காக விண்ணப்பித்துள்ளனர். |
| உத்தரகண்டில் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் கட்டுமானப் பணிக்கு தடை:முதல்வர் அறிவிப்பு Posted: 01 Jul 2013 07:36 PM PDT உத்தரகண்டில் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதித்து அந்த மாநில முதலமைச்சர் விஜய் பகுகுணா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் பகுகுணா, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமது தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். உத்தரகண்டில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். இதனிடையே, மீட்புப்பணிகள் முடியும் நிலையில் உள்ளதாக கூறியுள்ள மீட்புக் குழுவினர், பத்ரிநாத்தில் இருந்து நேற்றிரவு 902 பேரை மீட்டதாகவும், இன்னும் 150 பேரை மீட்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். |
| நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக பெற்றி பெறும்:ஸ்டாலின் Posted: 01 Jul 2013 07:14 PM PDT எதிர் வரும் நாடாளுமன்றத்தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் இந்த கருத்தைத் தெரிவித்தார்.மேலும், தமிழகத்தில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும்,2012 ஆம் ஆண்டு தமிழகத்தில் மின்பற்றாக்குறை முழுமையாக போக்கப்படும் என்று ஜெயலலிதா கூறினார். இருப்பினும், இதுவரை மின் தட்டுப்பாட்டை போக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |