Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


ஷெரீன் : இவர் துவண்டு கிடப்பவர்களை தூக்கி விடும் சமுதாய சிற்பி

Posted: 09 Jun 2013 11:05 PM PDT


இந்த உலகத்திற்கு உன் அறிவை உணர்த்தும் போது, இந்த உலகம் உன் தோற்றத்தை மறந்து விடும். இது நெல்சன் மண்டேலாவின் புத்தகத்தில் இருக்கும் வாக்கியம். இந்த வாக்கியம் ஷெரீனின் வாழ்க்கையை செதுக்கியதோடு அவரை இன்று ஒரு சமுதாய சிற்பியாக மாற்றியுள்ளது. சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஆதாரமாய் விளங்குவோரை அடையாளம் கண்டு, அவர்களது பணியை உலகறியச் செய்து மேலும் பலருக்கு வழிகாட்டுவதே “சமுதாய சிற்பிகள்” பகுதியின் நோக்கம். தன் தோற்றம் இப்படித்தான், தன் நிறம் கறுப்பு தான் ஆனால் அது ஒரு தடையல்ல என உணர்ந்தார் ஷெரீன். பார்ப்பதற்கு மிகவும் எளிமையான ஷெரீன் பலரது வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படுத்தித் தந்த ஒரு தெய்வமாகவே பார்க்கப்படுகிறார். வாழ்க்கையின் ஓரத்தை பார்த்த சிலர் இவரது தொலைப்பேசி எண்ணை பார்த்ததால் இன்று எதிர்ப்பார்த்திராத உயரங்களை தொட்டு வருகின்றனர். சோகம், அவமானம், துயரம், போராட்டம் என எதற்கும் ஒரு முடிவு உண்டு, அது தற்கொலை அல்ல. தளராத எண்ணத்துடன் கூடிய உழைப்பு என்பதை இவர் பலருக்கு உணர்த்தி வருகிறார். காதல் தோல்வி, குறைந்த மதிப்பெண், ஆங்கிலம் தெரியவில்லை, பார்க்க அழகாக இல்லை என்று பல அர்ப்ப காரணங்களுக்கு சிலர் மீளமுடியா முடிவுகளை எடுக்கின்றனர். அப்படி இருட்டில் தங்களை தாங்களே தள்ளிக்கொண்டவர்களுக்கு வெளிச்சமாய் இருக்கிறார் ஷெரீன். துவண்டு நிற்பவர்களை தூக்கி விடுவதற்கு கை கொடுக்க பலரை இந்த வெளிச்சம் குழுவினர் நேரடியாக சந்திக்கின்றனர். செய்யப்படும் உதவி இருதரப்பிற்கும் பயன் தரும் வகையில் வெளிப்படையாக நடந்து வருவதாக கூறுகின்றனர். ஒரு கை ஓசை தராது என்பதற்கு விதிவிலக்காக இன்று இவரின் வழிகாட்டுதலினால் பல உயிர்கள் இந்த பூவுலகில் வாழ்வின் நிமிடங்களை ரசித்துக்கொண்டிருக்கின்றனர். மூட்டை தூக்கியவர் விஞ்ஞானியாகவும், கல்வி என்பது எட்டாக் கனியாக இருந்தவர்கள் இன்று முதலாளிகளாவும், வறுமையின் கோராமையை பார்த்தவர் நவநாகரீக உலகில் தொழில் முனைவோராகவும் இன்று உயர்ந்துள்ளனர். தெளிந்த சிந்தனையும், நல்ல பக்குவமும் இருந்தால் மட்டுமே சோர்வின் பிடியிலிருக்கும் உயிர்களை மீட்க முடியும் என்று உளவியல் நிபுணர்கள் சொல்கின்றனர். அத்தனை எளிதாக யாரும் சென்றிராத தடத்தில் செல்வதோடு பலருக்கும் வழியை ஏற்படுத்தி தரும் இந்த வெளிச்சம் ஷெரீன், சமுதாயத்தின் உண்மையான சிற்பி. வாழ்க்கை விசாலமானது, வாழ்ந்தால் மட்டுமே அதன் ஆச்சர்யங்கள் புரியும் என்பதை பலதரப்பட்ட வயதினருக்கு அவர்கள் பாணியிலேயே எடுத்துரைத்து வருகிறார் ஷெரீன்.

தமிழகம் மற்றும் புதுவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

Posted: 09 Jun 2013 10:54 PM PDT


காவல்துறையைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அண்மையில் சென்றுள்ளனர். தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்தபோது, அவர்களுக்கும் அந்த விடுதியின் உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விடுதி உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், 15-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொய்யான வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக்கூறி, தமிழக காவல்துறை தலைவர் ராமானுஜத்திடம் புகார் மனு அளிப்பதற்காக வழக்கறிஞர்கள் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று விசாரணைக்கு வர வேண்டிய வழக்குகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது. காணொளி:<தமிழகம் மற்றும் புதுவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்>

நெல்சன் மண்டேலா தொடர்ந்து கவலைக்கிடம்

Posted: 09 Jun 2013 10:30 PM PDT


உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மூன்றாவது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 94 வயதாகும் மண்டேலாவுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, பிரிட்டோரியாவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று மண்டேலாவின் சொந்த ஊர் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து நான்காவது முறையாக மண்டேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல்., சூதாட்டப் புகார்: விக்ரம் அகர்வால் சிபிசிஐடியில் ஆஜர்

Posted: 09 Jun 2013 10:25 PM PDT


ஐ.பி.எல்., சூதாட்ட விவகாரத்தில் சூதாட்டக்காரர்களுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நட்சத்திர ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். ஏற்கனவே கடந்த 30ம் தேதியன்று ஆஜராகுமாறு விக்ரம் அகவர்லாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அன்று அவர் ஆஜராகவில்லை. அதற்குப் பதிலாக மே31ம் தேதியன்று மும்பையில் ஆஜரானார். கடந்த வெள்ளிக்கிழமையன்று மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது, மேலும் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபிசிஐடி போலீசார் எச்சரித்தனர். இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் விக்ரம் அகர்வால் சிபிசிஐடி போலீசில் ஆஜரானார். அவரிடம் டி.எஸ்.பி., வெங்கட்ராமன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குருநாத் மெய்யப்பன், விந்து தாராசிங், சஞ்சய் பாவ்னா ஆகியோர் குறித்தும், நட்சத்திர ஓட்டலுக்கு சூதாட்ட தரகர்கள் வந்து சென்றது குறித்தும் விக்ரம் அகர்வாலிடம் விசாரணை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   காணொளி:<ஐ.பி.எல். சூதாட்டம்:விக்ரம் அகர்வால் ஆஜர்>

புதுவையில் ஜூனியர் டென்னிஸ் தகுதிப் போட்டிகள்:வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Posted: 09 Jun 2013 10:00 PM PDT


புதுச்சேரி மாநில டென்னிஸ் விளையாட்டு கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஜூனியர் டென்னிஸ் தகுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பரிசுகளை வழங்க உள்ளார். புதுச்சேரியில் வயதின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றன. 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சிவவிஷ்ணு முதலிடத்தையும், 12 மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் தரூன் மற்றும் கார்த்திக் முதலிடத்தையும் பிடித்தனர். மூன்று பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு அடுத்த வாரம் நடைபெற உள்ள விழாவில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளார்.

குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? எதிர்கொள்வது எப்படி?

Posted: 09 Jun 2013 09:58 PM PDT


2 மாத கால கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. விளையாட்டு, தொலைக்காட்சி, உறவினர் வீடு, சுற்றுலா இப்படி பல்வேறு வகையில் பொழுது போக்கிய மாணவர்களுக்கு மீண்டும் புத்தகம், படிப்பு, பரீட்சை என இன்று முதல் ஓட்டம் தொடங்குகிறது. இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் பள்ளி செல்லும் போதே சற்று சேர்வாக காணப்படும் மாணவர்கள், 2 மாத விடுமுறைக்குப் பின்னர் அதுவும் கூடுதலாக 10 நாள் விடுமுறை. இவை எல்லாம் முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்லும் போது குழந்தைகள் மனரீதியாக சந்திக்கும் சவால்கள் என்ன? அவற்றை பெற்றோரும், ஆசிரியர்களும் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? இவை குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரன் பேட்டி அளித்தார். அடம் பிடிக்க காரணம் “பிரிவு பயம்” : பள்ளிக்கு முதன் முதலாக செல்லும் குழந்தைகளுக்கு தான் பிரச்னைகள் அதிகம் என உளவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அப்பா, அம்மா என குடும்பத்தினர் அரவணைப்பில் மட்டுமே இருந்த குழுந்தை முதன் முறையாக புதியதொரு சூழலுக்குச் செல்லும் போது பிரிவு பயம் ஏற்படும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் கூட ஏற்படலாம். இதற்கு நல்ல தீர்வு முதன் முறையாக பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஆசிரியர்கள் அரவணைத்துக் கொள்வதே ஆகும் என மருத்துவர் தெரிவிக்கின்றார். பிரிவு பயம் நீண்ட நாளாக இருக்கும் குழந்தைகளை அவர்களுக்கான மனநல மருத்துவர்களிடம் காட்டி சரி செய்தல் அவசியம். பிரிவு பயம் இருக்கும் குழந்தைகள், பள்ளிக்குச் செல்வதை தவிர்க்கும் வகையில் வயிற்று வலி, பல் வலி என நாளுக்கு ஒரு நோவு ஏற்பட்டதாக கூறலாம். ஆனால் அதே வேளையில் குழந்தைகள் தொடர்ச்சியாக உடல் உபாதைகள் குறித்து கூறினால் அவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது. பெற்றோர்களே…தவறான வழிகாட்டுதல் கூடாது: வீட்டில் குறும்புத் தனம் செய்யும் குழந்தைகளுக்கு நம் வீட்டுப் பெரியவர்கள் முதலில் சொல்வது “நீ சேட்டை செய்தால் பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடுவேன். டீச்சரிடம் சொல்லி திட்டச் செய்வேன், அடிக்கச் சொல்வேன்” இது மிகவும் தவறான வழிகாட்டுதல். இவ்வாறு சொல்வதன் மூலம் சிறு குழந்தை மனதில் பள்ளிக்கூடம் என்பது ஏதோ சித்ரவதைக் கூடம் என தோன்றி விடும்.பெற்றோகள் எப்போதும் இவ்வாறான தவறான வழிகாட்டுதலை குழந்தைக்கு ஏற்படுத்தக் கூடாது. மாறாக பள்ளிக்கூடம் சென்றால் சக வயதில் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிதாக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என எடுத்துரைத்து ஊக்குவிக்க வேண்டும். ஆரியர்களுக்கும் பங்கு உண்டு: பள்ளிக்கு முதன் முதலாக வரும் குழந்தையாக இருக்கட்டும் இல்லை வளர்ந்த குழந்தையாக இருக்கட்டும் ஆசிரியர்கள் அனுகுவதற்கு எளிமையானவராகவும், பழகுவதற்கு இனிமையானவராகவும் இருக்க வேண்டும். கண்டிப்பு அவசியம் ஆனால் கடுமையான தண்டிப்பு தேவையில்லை. அடிப்பதோ, கடுமையான வார்த்தைகளால் குழந்தையை திட்டுவதோ நிச்சயம் சரியான அணுகுமுறை அல்ல. ஒரு குழந்தை உள ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதில் ஆசிரியர்கள் பங்கும் உண்டு. குழந்தையை பள்ளிக்கு கிளப்புவதும் ஒரு கலை: இன்றைய அவசர உலகத்தில் எல்லாமே எந்திரத் தனமாகி விட்டது. குழந்தையை பள்ளிக் கிளப்புவதும் கூட அப்படித் தான். அப்படி அல்லாமல் குழந்தையை பள்ளி செல்ல தயார் செய்வதை பெற்றோர்கள் உற்சாகத்தோடு செய்ய வேண்டும்.குழந்தையை திட்டிக் கொண்டே கிளப்பி விடுதல் கூடாது. குழந்தையை எழுப்பி விடும் நேரம், சிறு உடற்பயிற்சி, காலைக் கடன், குளித்தல், சரி விகிதத்தில் சத்தான உணவு, பழங்கள் ஆகியனவற்றை சாப்பிட வைத்தல் என திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.  வெளியில் விற்கும் உணவுப் பண்டங்களை உண்ணக் கூடாது, இருமினால், தும்மல் ஏற்பட்டால் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும், டாய்லெட் பயன்படுத்திய பின்னர் கைகைளை சோப்பு போட்டு கழுவ வேண்டும், நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் போன்ற பொதுச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். அவற்றை பின்பற்ற குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளை இரவில் சீக்கிரம் தூங்க வைக்க வேண்டும். பெற்றோர்களின் அன்பும், ஆசிரியர்களின் அரவணைப்பும் கிடைக்குமானால் எந்த ஒரு குழந்தையும் நிச்சயமாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நிதர்சனம். காணொளி:<குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளும்:தீர்வுகளும் பகுதி 1> காணொளி:<குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளும்:தீர்வுகளும் பகுதி 2>

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியை வீழ்த்தியது நியூசிலந்து

Posted: 09 Jun 2013 09:50 PM PDT


சாம்பியன்ஸ் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் நியூசிலந்து அணி இலங்கை அணியை போராடி வென்றது. 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடத்துவங்கிய நியுசிலந்து அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 49 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து விட்டது. எனினும் நாதன் மெக்கல்லம் மற்றும் டிம் சவுத்தி போன்ற பின் வரிசை ஆட்டக்காரர்கள் தாக்குப்பிடித்து ஆடியதால் 36.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து நியுசிலந்து அணி வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்று களம் இறங்கிய இலங்கை அணி 37.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சங்ககாரா அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார். இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.

ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் ரஃபேல் நடால்

Posted: 09 Jun 2013 09:42 PM PDT


ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் 8-வது முறையாக பட்டம் வென்று ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் வரலாற்று சாதனை படைத்துள்ளார். பாரிசில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், சக நாட்டு வீரரான டேவிட் ஃபெரரை அவர் எதிர்கொண்டார். இதில் ரஃபேல் நடால் 6-3,6-2,6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று ஃப்ரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார். பட்டம் வென்ற அவருக்குஉலகப்புகழ் பெற்ற ஜமைக்கா தடகள வீரர் உசேன் போல்ட் பரிசுக் கோப்பையை வழங்கினார். இதன் மூலம் ஒரே க்ராண்ட் ஸ்லாம் பட்டத்தை 8 முறை வென்ற முதல் வீரர் என்ற புதிய சாதனையை நடால் படைத்தார். மேலும் நடால் வென்ற 12-வது க்ராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். இதன் மூலம் அதிக முறை க்ராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். 17 க்ராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் இரண்டாம் இடத்தில் 14 க்ராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் அமெரிக்காவின் பீட் சாம்பிராசும் உள்ளனர். நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் எகட்ரினா மகரோவா, எலினா வெஸ்ணினா இணை இத்தாலியின் சாரா இரானி, ராபர்டா வின்சி ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ரஷ்ய இணை 7-6,6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த இணை வெல்லும் முதலாவது ப்ரெஞ்ச் ஓபன் பட்டம் இதுவாகும்.

ஐபிஎல் சூதாட்ட விவகாரம்:டெல்லியில் கூடுகிறது பிசிசிஐ செயற்குழு

Posted: 09 Jun 2013 09:27 PM PDT


ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங் மற்றும் சூதாட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஒப்புக் கொண்ட நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. பி.சி.சி.ஐ.யின் இடைக்கால தலைவர் ஜக்மோகன் டால்மியா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ராஜ் குந்த்ரா விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விசாரணை முடியும் வரையில் ராஜ் குந்த்ரா இடைநீக்கம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ராஜ் குந்த்ராவிடம் குறைந்த அளவு பங்குகளே உள்ளதாக தெரிவித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நடவடிக்கைகளுக்கு அணி நிர்வாகம் துணை நிற்கும் என்றும் கூறியுள்ளது. காணொளி:<டெல்லியில் கூடுகிறது பிசிசிஐ செயற்குழு>

மத்திய பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 09 Jun 2013 09:14 PM PDT


மத்திய பிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. காசா, மல்லம், திந்தோரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையால் பல இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். திந்தோரி கிராமத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பலர் ஆற்றில் சிக்கி கொண்டதையடுத்து மாவட்ட நிர்வாகத்தினரும், பாதுகாப்பு படையினரும் அவர்களை மீட்டனர். வெள்ள பெருக்கின்போது ஆற்றின் நடுவில் சிக்கிக்கொண்ட சிறுவர்களை கயிறுகளை கொண்டு மீட்புபடையினர் மீட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™