Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


ப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி: மரியா ஷரபோவா, விக்டோரியா அசரென்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்

Posted: 05 Jun 2013 11:06 PM PDT


ப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான மரியா ஷரபோவா, விக்டோரியா அசரென்கா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இன்று நடைபெற்ற காலிறுதியாட்டத்தில், இரண்டாம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, (MARIA SHARAPOVA)   18 -ஆம்  நிலை வீராங்கனையான செர்பியாவின் ஜெலீனா யான்கோவிச்-சை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை பூஜ்யம் – ஆறு என்ற கணக்கில் ஷரபோவா இழந்தார். எனினும் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களில் சுதாரிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷரபோவா, அந்த செட்களை 6-4, 6-3 என கைப்பற்றி வெற்றியை வசமாக்கினார். மற்றொரு காலிறுதியாட்டத்தில் மூன்றாம் நிலை வீராங்கனையான பெலரஸ் நாட்டின் விக்டோரியா அசரென்கா, 12- ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா கிரிலென்கோ-வை எதிர்த்து விளையாடினார். இதில் அசரென்கா 7-6, 6-2 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

கபடியில் கலக்கும் நீலகிரி இளைஞர்கள்

Posted: 05 Jun 2013 10:53 PM PDT


தமிழகத்திலிருந்து தோன்றியதாக கருதப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக திகழ்கிறது கபடி. ஆனால் தேசிய அணியில் தமிழகத்திலிருந்து எத்தனை கபடி வீரர்கள் விளையாடிள்ளனர் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதனை மாற்றும் முயற்சியாக கபடி விளையாட்டில் அதீத ஆர்வம் செலுத்தி வருகின்றனர் நீலகிரி மாவட்ட இளைஞர்கள். “கபடிப் போட்டி நடைபெறுவதே அரிது” கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் வெள்ளை ரோஜா ARTS & SPORTS க்ளப் சார்பில் நடைபெற்ற கபடிப் போட்டியில், அப்பகுதியைச் சேர்ந்த வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்தப் பகுதியில் இதுபோன்ற கபடிப் போட்டிகள் நடைபெறுவது மிகவும் அரிதானது என்பதால், தற்போது நடைபெற்று வரும் போட்டியில் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர் இளைஞர்கள். கபடி வளர்க்கும் நற்பணி மன்றங்கள் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில், அரசின் சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான கபடிப் போட்டிகள் நடத்தப்படுவதில்லை என்பதே இப்பகுதி இளைஞர்களின் வருத்தம். இருப்பினும், கபடிப் போட்டியில் இவர்களுக்கு அதீத பிரியம் ஏற்பட காரணம், கபடிப் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்திவரும் நற்பணி மற்றும் விளையாட்டு மன்றங்கள் தான். சொந்த அணியில் இடமில்லை வெளியூர்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கவும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என குமுறுகிறார்கள் கபடி வீரர்கள். கூடலூரில் கபடிப் போட்டிக்கு பஞ்சம் அதிக போட்டிகள் நடைபெற்றால் தான் வீரர்கள் உருவாக முடியும். அதேசமயம், அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட்டால் தான் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் அவர்களால் பங்கேற்க முடியும். ஆனால், இங்கு ஆர்வமுள்ள வீரர்கள் உள்ள போதிலும், அவர்களை அடையாளம் காட்டும் களத்திற்கு தான் பஞ்சம் அதிகம் உள்ளது. இந்த நிலைமை விரைவில் மாற வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் நோக்கம்.  

குஜராத் பற்றி மட்டுமே மோதிக்கு தெரியும்: சல்மான் குர்ஷித் விமர்சனம்

Posted: 05 Jun 2013 10:46 PM PDT


பாரதிய ஜனதா சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படும், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதிக்கு, அவர் மாநிலத்திற்கு வெளியே நிலவும் பிரச்னைகள் குறித்து எந்த தகவலும் தெரியாது என வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் விமர்சித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற முதலமைச்சர் மாநாட்டில் பேசிய நரேந்திர மோதி, மாவோயிஸ்ட் விவகாரத்தில் மத்திய அரசு மென்மையான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டனர். அப்போது பேசிய குர்ஷித், குஜராத்திற்கு வெளியே நிலவும் பிரச்னைகள் பற்றி மோதிக்கு தெரியாது என்றும், மாவோயிஸ்ட் விவகாரத்தில், அத்வானி கூறியதைப் போல் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்பதை மோதி உணர வேண்டும் என்றும் கூறினார். உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்றும் குர்ஷித் கேட்டுக் கொண்டார்.

ராஜ்குந்த்ரா பாஸ்போர்ட் முடக்கம்:டெல்லி போலீஸார் நடவடிக்கை

Posted: 05 Jun 2013 09:52 PM PDT


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடைபெற்ற சூதாட்டம் தொடர்பாக விசாரணை வளையத்திற்குள் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ராவின் பாஸ்போர்ட்டை டெல்லி போலீஸார் முடக்கியுள்ளனர். குந்த்ராவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டதன் மூலம், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சூதாட்டப் புகாரில் குந்த்ராவும் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கிட் சவான் ஆகியோர் கைதைத் தொடர்ந்து அந்த அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் டெல்லி போலீஸார் நேற்று ஸ்பாட் ஃபிக்சிங் குறித்து ஏராளமான கேள்விகள் எழுப்பினர். இந்நிலையில் இன்று பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரான ராஜ் குந்த்ரா நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆவார் காணொளி: http://puthiyathalaimurai.tv/video-gallery?video=4785

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை வேட்பாளர் யார்?:கட்சிக்குள் சலசலப்பு

Posted: 05 Jun 2013 09:35 PM PDT


மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அ.தி.மு.க.வின் உதவியுடன் ஒரு வேட்பாளரை மாநிலங்களவைக்கு அனுப்ப முயல்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இந்த நிலையில், அக்கட்சியின் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இம்மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆளும் அ.தி.மு.க. தன் சார்பாக நான்கு வேட்பாளர்களை நிறுத்திவிட்டு, மீதமிருக்கும் வாக்குகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்தக் கட்சியின் சார்பில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவருகிறார். அவரது பதவிக் காலம் முடிவடையும் நிலையில், மீண்டும் அவரையே வேட்பாளராக நிறுத்துவதற்கு கட்சியின் தேசியத் தலைமை விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருக்கும் தா. பாண்டியனும் மாநிலங்களவை வேட்பாளராக விரும்புவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயற்குழு கடந்த மே 31ஆம் தேதி கூடியபோது, தன்னையே வேட்பாளராக்க அ.தி.மு.க. விரும்புவதாக தா. பாண்டியன் தெரிவித்ததாகவும் இதற்கு செயற்குழுவின் பல உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. 8 சட்ட மன்ற உறுப்பினர்களை கைவசம் வைத்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளரைச் சந்தித்து ஆதரவுகேட்க நேரம் கேட்டுள்ளது. மாநிலச் செயலாளர் தா. பாண்டியனைச் சுற்றியே சர்ச்சை மையம் கொண்டிருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்து புதிய தலைமுறை கேட்டபோது, அவர் கருத்துத் தெரிவிப்பதற்கு மறுத்துவிட்டார். கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் வெளிப்படையாக இது குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்தாலும் மாநிலங்களவை இடம் குறித்த சலசலப்பு கட்சிக்குள் இருப்பதை ஒப்புக்கொள்கின்றனர். மாநிலங்களவை தேர்தலின் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த சர்ச்சை, அடுத்த இரண்டொரு நாட்களில் முடிவுக்கு வரும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தாலும் இந்த சலசலப்பு இடதுசாரி அனுதாபிகளிடம் வருத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது.   காணொளி : http://puthiyathalaimurai.tv/video-gallery?video=4784

இயக்குநர் விக்ரமன் மீது விசு கடும் சாடல்

Posted: 05 Jun 2013 09:26 PM PDT


தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான தலைவர்,பொது செயலாளர்,பொருளாளர்.,துணைத்தலைவர்கள்,மற்றும் இணைச்செயலாளர்களுக்கான தேர்தல் வருகின்ற ஜூன் 9 ம் தேதி சென்னையில் நடை பெறுகிறது. இதில் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் விசு மற்றும் விக்ரமன் போட்டியிடுகின்றனர்.அதே போல் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி மற்றும் ஆர்.சுந்தர்ராஜன் பொதுச்செயலாலருக்கு போட்டியிடுகின்றனர். மொத்தம் 21 பதவிக்கான தேர்தல் நடக்கவுள்ளது. கிட்டத்தட்ட 2700 உறுப்பினர்களை கொண்ட இயக்குநர் சங்கத்தில் 1518 பேருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. இதில் இயக்குநர் விசு தன்னை எதிர்த்து போட்டியிடும் இயக்குநர் விக்ரமன் மீது தனது புகார்களை பத்திரிக்கையாளர்கள் முன்பு அடுக்கினார். அதில் பிரபல இயக்குநர்களான பாலச்சந்தர்,பாரதிராஜா போன்றோரின் அனுமதியின்றி,அவர்களது புகைப்படங்களை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கிறார் என்று குற்றம் சுமத்தினார். இது பற்றி இயக்குநர் விக்ரமனை தொடர்பு கொண்டு கேட்ட போது தேர்தல் விதிமுறைகளின் படி பத்திரிக்கைகளிலோ தொலைக்காட்சிகளிலோ எனது கருத்துக்களை பதிவு செய்ய கூடாது என்பதை நானறிவேன். அவர் என்ன பேசினாலும் என்னால் கருத்துக்கூற இயலாது என தெரிவித்தார். காணொளி: http://puthiyathalaimurai.tv/video-gallery?video=4783

சாம்பியன்ஸ் கோப்பை பயிற்சி ஆட்டம்: நியூசிலந்தை வீழ்த்தியது இங்கிலந்து

Posted: 05 Jun 2013 09:05 PM PDT


சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது பயிற்சி ஆட்டத்தில், நியூசிலந்து அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலந்து அணி. நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று நியூசிலந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர் கேப்டன் குக் டக் அவுட்டாகி வெளியேறினார். பெல், டிராட் முறையே 82 மற்றும் 37 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் இங்கிலந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. பின்னர் 288 ரன்கள் வெற்றி இலக்காக ஆடிய நியூசிலந்து வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நியூசிலந்து வீரர் டெய்லர் 71 ரன்கள் எடுத்து தனி ஆளாக போராடினார். இருப்பினும் மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாததால், இங்கிலந்தின் வெற்றி உறுதியானது.இறுதியில் 46.3 ஓவர்களில் நியூசிலந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 34 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலந்து அணி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து டெஸ்ட் அந்தஸ்து கொண்ட 8 முன்னணி அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் இங்கிலந்தில் தொடங்குகிறது. இந்த தொடருடன் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை கைவிட ஐசிசி முடிவெடுத்துள்ளது.

தயார் நிலையில் மெட்ரோ ரயில் பெட்டிகள்: அடுத்த மாதம் சோதனை ஓட்டம்

Posted: 05 Jun 2013 08:36 PM PDT


பிரேசில் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் பெட்டிகள் துறைமுகத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக கோயம்பேடு முதல் செயின்ட்தாமஸ் மவுண்ட் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் கடந்த மாதம் 31-ஆம் தேதி கப்பல் மூலமாக சென்னை வந்தன. இவை அனைத்தும், நேற்றிரவு துறைமுகத்தில் இருந்து கோயம்பேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன. மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காணொளி: http://puthiyathalaimurai.tv/video-gallery?video=4779

மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி

Posted: 05 Jun 2013 08:20 PM PDT


மறைந்த பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன் தற்கொலைக்கு முயன்றதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரிசின் உடல் நிலை தேறி வருவதாக அவரது தாயார் டெப்பி ரோவ் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட பாரிஸ், ஆம்புலன்ஸ் மூலம் நேற்றே வீடு திரும்பிவிட்டதாக இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 15 வயதான பாரிஸ் ஜாக்சன் அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. எனினும், பாரிசின் தந்தை மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009 ஆம் ஆண்டு இறந்ததன் சோகம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. 1996 இல், மைக்கேல் ஜாக்சனை திருமணம் செய்த டெப்பி ரோவ்-க்கு பிரின்ஸ் ஜாக்சன், பாரிஸ் ஜாக்சன் என இரு குழந்தைகள் உள்ளனர். எனினும் இத்தம்பதி 1999 இல் விவாகரத்துப் பெற்றனர். காணொளி: http://puthiyathalaimurai.tv/video-gallery?video=4778

ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

Posted: 05 Jun 2013 07:58 PM PDT


ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20-க்கும் அதிகமான மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை, 750-க்கும் அதிகமான படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். பிற்பகலில், கச்சத் தீவுக்கும், தலைமன்னார் பகுதிக்கும் இடையே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர். ஆறு படகுகளில் இருந்த மீனவர்களை சிறைப்பிடித்த அவர்கள், அந்தப் படகுகளில் இருந்த மீன்களையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. சிறைப்பிடிக்கப்பட்ட 20-க்கும் அதிகமான மீனவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™