Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போட அனுமதி

Posted: 23 Jun 2013 10:44 PM PDT


தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் மாநிலங்களவைத் தேர்தலில் ஓட்டுப்போட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட 6 எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் வாக்களிக்கலாம் என ஏற்கனவே தேர்தல் ஆணையமும் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்தது

Posted: 23 Jun 2013 10:31 PM PDT


தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்தது. சென்னையில்,22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 2,529 க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்  ரூ.20,232க்கு விற்பனையாகிறது.24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2,704க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 745 குறைந்து ரூ. 41,235க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.44.10க்கு விற்கப்படுகிறது.

சிவகங்கையில் தொழில் பாதுகாப்பு பயிற்சி மையம் தொடங்கி வைத்தார் ப.சிதம்பரம்

Posted: 23 Jun 2013 10:27 PM PDT


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதியில் மத்திய தொழில் பாதுகாப்பு பயி்ற்சி மையத்தை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ப.சிதம்பரம், 100 ஏக்கர் பரப்பளவில் இந்த பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வந்து பணி புரியும் தொழிலாளர்களால் இப்பகுதி பொருளாதார வளர்ச்சி பெறும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவும் பங்கேற்றார்.

ஈகுவடாரில் தஞ்சம் புக ஸ்னோடென் முடிவு

Posted: 23 Jun 2013 09:51 PM PDT


அமெரிக்க அரசின் உளவு ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடென், ஈகுவடார் நாட்டில் தஞ்சம் புக அனுமதி கோரியுள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றிய ஸ்னோடென், அங்கு ஒட்டுகேட்கப்படும் விவரங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டார். ஹாங்காங்கிற்கு தப்பி வந்த அவர், நேற்று விமானத்தில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே Ecuador நாட்டில் தஞ்சமடைய ஸ்னோடென் அனுமதி கேட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒட்டுகேட்பு விவரங்களை வெளியிட்ட ஸ்னோடெனை கைது செய்ய முடிவு செய்துள்ள அமெரிக்கா, அவரது பாஸ்போர்டை முடக்கியுள்ளது. ஸ்னோடென்னுக்கு தஞ்சம் அளிக்க வேண்டாம் என ஈக்வடார், கியூபா உள்ளிட்ட நாடுகளை கேட்டுக்கொண்டுள்ள அமெரிக்கா, அவரை கைது செய்ய உதவுமாறு வலியுறுத்தியுள்ளது. ஸ்னோடென் தஞ்சம் புக முடிவு செய்துள்ள ஈகுவடார் நாட்டின் லண்டன் தூதரகத்தில்தான் விக்கிலீக்ஸ் உரிமையாளர் அசாஞ்ச் தஞ்சம் புகுந்துள்ளார். காணொளி:ஈகுவடாரில் தஞ்சம் புக ஸ்னோடென் முடிவு

உத்தரகாண்ட் மீட்புப்பணி: கள நிலவரம்

Posted: 23 Jun 2013 08:37 PM PDT


உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடர், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய விபத்தாக கருதப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில், சுமார் 80 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உத்தரகாண்ட் மீட்புப் பணிகள் குறித்த சில புள்ளி விவரங்களும் வெளியாகியுள்ளன.  è வெள்ளம் பாதித்த பல இடங்களில் மீட்புப் பணிகள் தற்போதுதான் தொடங்கியுள்ள நிலையில், பத்ரிநாத், ஹர்சில் மற்றும் ஜங்கிள்சத்தி பகுதிகளில் மட்டும் 10 ஆயிரம் பேர் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. è இதுவரை வான்வழியாக, ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ, எடையுள்ள உணவு மற்றும் மீட்புப் பொருட்கள், ராணுவத்தால் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. è சுமார் 45 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. è கடந்த 17ம் தேதி முதல் நேற்று மாலை வரை சுமார் ஆயிரத்து நூற்றுக்கும் அதிகமான தடவை வான்வழி மீட்புமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. è உத்தரகாண்டில் சிக்கித் தவிப்பவர்கள் அனைவரையும் மீட்க, 15 நாட்கள் பிடிக்கும் என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். è அடுத்த 2 ஆண்டுகளுக்கு கேதார்நாத் பயணம் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார். è இந்திய விமானப் படை வரலாற்றிலேயே, அதிக மக்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக கருதப்படும் இந்தப் பணிக்கு ஆபரேஷன் ராஹத் எனப் பெயரிடப்பட்டுள்ளது. è சுமார் 8 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், இந்திய – திபெத் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். è வான்வழி மீட்பின் மூலமாக கேதார்நாத் பள்ளத்தாக்கு முழுவதிலும் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். è கௌரிகுந்த், ஹர்ஷில் பகுதிகளில் உள்ள மக்களை வான்வழியாக மீட்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. è ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்தி, மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிய, ராணுவம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் யாருக்கு ஆதரவு?

Posted: 23 Jun 2013 08:05 PM PDT


மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து காங்கிரஸ் கட்சி இன்று முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவின் நான்கு வேட்பாளர்களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கும் போதிய பலம் இருப்பதால் அவர்கள் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. ஆனால், ஆறாவது இடத்துக்கு திமுக மற்றும் தேமுதிக இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்த இரு கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிப்பதில் காங்கிரசின் ஆதரவு முக்கிய பங்கு வகிக்கிறது. திமுக.,விற்கு புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில், காங்கிரசின் ஆதரவை பெற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேமுதிக நிர்வாகிகளும், தமிழக காங்கிரஸ் தலைவரை சந்தித்தும், டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிட நிர்வாகிகளை சந்தித்தும் ஆதரவு கோரியுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், காங்கிரசின் நிலைப்பாடு இன்று முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மேலிட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மோதி குறித்து காங்கிரஸ் விமர்சனம்: பாஜக பதிலடி

Posted: 23 Jun 2013 07:51 PM PDT


குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதியை விமர்சிப்பதை விட்டு உத்தரகாண்ட் நிவாரணப் பணிகளில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட வேண்டும் என பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது. உத்தரகாண்டில் சிக்கியிருந்த 15ஆயிரம் பேரை மீட்க தாம் உதவியதாக நரேந்திர மோதி கூறியிருந்தார். அவரது இந்த கருத்து, அரசியல் உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா, நிலநடுக்க பாதிப்பை ஏற்கனவே உணர்ந்துள்ள நரேந்திர மோதி, உத்தரகாண்ட் மீட்புப் பணி குறித்து கருத்து தெரிவித்ததில் தவறு ஏதுமில்லை என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நரேந்திர மோதியை விமர்சிப்பதை விட்டுவிட்டு நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நரேந்திர மோதியின் வளர்ச்சியைக் கண்டு காங்கிரஸ் கட்சி அஞ்சுவதாகவும் பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்தார். காணொளி: மோதி குறித்து காங்கிரஸ் விமர்சனம்: பாஜக பதிலடி

என்.எல்.சி பங்குகளை விற்க எதிர்ப்பு: போராட்டம் குறித்து இன்று அறிவிப்பு

Posted: 23 Jun 2013 07:38 PM PDT


என்.எல்.சி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக இன்று முடிவு எடுக்கப்பட உள்ளது. போராட்டம் நடத்த அனைத்து சங்கங்களின் ஆதரவையும் திரட்ட தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இன்று பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் பங்கேற்கும் இறுதிக் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதன் பிறகு போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடலூரில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்பட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. இதில் என்.எல்.சி யின் 5 சதவிகித பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவை தடுத்து நிறுத்துவது மற்றும் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், மத்திய அரசின் முடிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் ஆதரவைப் பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. காணொளி:என்.எல்.சி பங்குகளை விற்க எதிர்ப்பு: போராட்டம் குறித்து இன்று அறிவிப்பு

இலங்கை அதிகாரிகள் பயிற்சிக்கு எதிர்ப்பு: நாம் தமிழர் கட்சியினர் கைது

Posted: 23 Jun 2013 07:26 PM PDT


உதகை வெலிங்டன் ராணுவ கல்லூரியில் பயிற்சி பெறும் இலங்கை வீரர்களை வெளியேற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மானக்ஸா பாலம் வழியாக நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் வருவார்கள் என கூறப்பட்டதால் அந்த வழியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் கண்டோன்மெண்ட் வழியாக ராணுவக் கல்லூரிக்கு அருகே வந்த அவர்களை காவல்துறையினர் தடுத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ராணுவ சப்ளை டிப்போ சாலையில் நாம் தமிழர் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் இலங்கைக் கொடியையும் அவர்கள் தீவைத்து கொளுத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே, இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவின் எந்தப்பகுதியிலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார். மேலும் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள வைகோ அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். காணொளி: இலங்கை அதிகாரிகள் பயிற்சிக்கு எதிர்ப்பு: நாம் தமிழர் கட்சியினர் கைது

சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்தியா

Posted: 23 Jun 2013 07:11 PM PDT


சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில் இங்கிலாந்து அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை வென்றது இந்திய அணி. மழை காரணமாக 20 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டைர் குக், இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 9 ரன்களிலும், தவான் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து தினேஷ் கார்த்தி, ரெய்னா, கேப்டன் டோனி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ரன் குவிக்க இந்தியா திணறியது. விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் பொறுப்பான ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்தது. விராட் கோலி 43 ரன்களில் ஆட்டமிழந்தார். ரவீந்திர ஜடேஜா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 46 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஆனால், மோர்கனும், ரவி போபாராவும் சிறப்பான விளையாடினர். ஆனால், இஷாந்த் சர்மா வீசிய ஓவரில் இருவரும் அடுத்தடுத்த ஆட்டமிழந்ததால், இந்தியாவின் கை ஓங்கியது. பின்னர் வந்த வீரர்கள் ஏமாற்றியதால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் கோப்பை வழங்கப்பட்டது. ஆட்டநாயகனமாக ரவீந்திர ஜடேஜாவும், தொடர் நாயகனாக தவானும் அறிவிக்கப்பட்டனர். கடந்த 2002ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் மழை காரணமாக இந்தியாவும், இலங்கையும் கூட்டாக பட்டத்தை பகிர்ந்து கொண்டன. அதன் பிறகு தனி அணியாக இப்போதுதான் முதல்முறையாக இந்தியா கோப்பையை வென்றுள்ளது. காணொளி: சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்தியா


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™