Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


டெல்லியில் இளம்பெண் காவல்நிலையத்தில் தற்கொலை

Posted: 15 Jun 2013 10:42 PM PDT


டெல்லியில் 16 வயது இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்த பெண், டெல்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் வசித்து வந்தார். வீட்டுவேலை செய்துவந்த அவர், பெற்றோருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மெட்ரோ நிலையம் அருகே நின்றிருந்த அவரை, ஒருவர் விஜய் விகார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த நிலையில் நேற்று மாலை அந்த பெண், காவல்நிலையத்திலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண்ணை, அவரது பெற்றோர் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியதாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி சிறுநீரக மோசடி வழக்கு:பெண் ஒருவர் கைது

Posted: 15 Jun 2013 10:34 PM PDT


தருமபுரி சிறுநீரக மோசடி வழக்கில் வேலுமணி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு கைது செய்யப்பட்ட அவர், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பள்ளிபாளையத்தை சேர்ந்த அந்த பெண்ணிடம் சிறுநீரகம் பெறுவதற்காக பென்னாகரத்தை சேர்ந்த காத்தவராயன் என்பவர் 2 லட்சம் ரூபாய் பணம் அளித்துள்ளார். சிறுநீரகம் பாதிப்படைந்த தனது தந்தைக்காக அந்த பணத்தை காத்தவராயன் அளித்துள்ளார். அறுவை சிகிச்சை நடப்பதற்கு முன்பே, காத்தவராயனின் தந்தை உயிரிழந்தார். அதனால், சிறுநீரகத்திற்காக கொடுத்த பணத்தை அவர் வேலுமணியிடம் கேட்டுள்ளார். அவர் பணத்தை தர மறுத்ததால், காத்தவராயன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். அதன் அடிப்படையில், வழக்குபதிவு செய்த பொன்னாகரம் காவல்துறையினர் வேலுமணியை கைது செய்தனர். அவருக்கும் ஏற்கனவே சிறையிலிருக்கும், இடைதரகர் அய்யாவுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மீத்தேன் எடுப்பதால் ஏற்படும் அச்சத்தை போக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted: 15 Jun 2013 10:14 PM PDT


காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்பதால் மக்களுக்கு ஏற்படும் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மக்களிடம் உண்மையை விளக்கிக் கூற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அங்கு வந்த அவர் இந்த கருத்தைத் தெரிவித்தார். பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், தமிழகத்திற்கு சேரவேண்டிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடகவின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்தார்.

பெட்ரோல் விலை உயர்விற்கு வைகோ கண்டனம்

Posted: 15 Jun 2013 10:06 PM PDT


பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக 2 ரூபாய் 54 காசுகள் விலை உயர்த்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிகாட்டியுள்ளார். ஒவ்வொரு முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வின் போதும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையையும், இந்திய ரூபாய் மதிப்புச் சரிவையையும் காரணம் காட்டுவது மத்திய அரசிற்கு வாடிக்கையாகி விட்டதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவெடுக்கும் பெட்ரோலிய அமைச்சர் மிரட்டப்படுவதாக, அந்த துறை அமைச்சரே கூறுவது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதால், விலைவாசி அதிகரித்து மக்களுக்கு மேலும் பாதிப்புகள் ஏற்படும் என்றும் வைகோ கூறியுள்ளார்.

பெட்ரோல் விலை ரூபாய் 2 உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

Posted: 15 Jun 2013 09:43 PM PDT


பெட்ரோல் விலை, லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையான சரிவை சந்தித்ததைத் தொடர்ந்து, அதனை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வுடன், அந்தந்த மாநிலங்களுக்கான மதிப்புக் கூட்டு வரியும் கூடுதலாக சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2 ரூபாய் 54 காசுகள் உயர்ந்துள்ளன. இதன் காரணமாக, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 69 ரூபாய் 39 காசுகளாக உள்ளது. இதற்கு முன்பு, கடந்த மாதம் 31-ம் தேதி பெட்ரோல் விலை, லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் உயர்த்தப்பட்டன. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

Posted: 15 Jun 2013 09:17 PM PDT


ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள், நேற்று மதியம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் 2 படகுகளில் இருந்த 8 மீனவர்களை சிறைப் பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் அனைவரையும் இன்று மன்னாரில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர். கடலுக்கு சென்ற இதர மீனவர்கள், தற்போது கரை திரும்பி வருகின்றனர். காணொளி: சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

கான்ஃபடரேஷன்ஸ் கோப்பை கால்பந்து:ப்ரேசில் அணி ஜப்பான் அணியை வீழ்த்தியது

Posted: 15 Jun 2013 08:52 PM PDT


கான்ஃபடரேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் ப்ரேசில் அணி ஜப்பான் அணியை மூன்று கோல்கள் அடித்து வீழ்த்தியது. 13-வது கான்ஃபடரேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நேற்றுத் தொடங்கியது. தலைநகர் பிரேசிலியாவில் உலக கால்பந்து சம்மேளனத் தலைவர் ஜோசப் ப்ளேட்டர் இந்த போட்டியை தொடங்கி வைத்தார். நேற்று ஏ பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் பிரேசில் அணி, ஆசிய சாம்பியனான ஜப்பான் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே பிரேசில் அணி வீரர் நெய்மர் முதல் கோல் அடித்தார். சுமார் 30 அடி தொலைவில் இருந்து நெய்மர் அடித்த பந்து மின்னல் வேகத்தில் ஜப்பான் கோல் வளைக்குள் சென்று தஞ்சமடைந்தது. தொடர்ந்து பிற்பாதியில் 48-வது நிமிடத்தில் பவுலின்ஹோ பிரேசில் அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார். பிற்பாதியில் ஜப்பான் அணி வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை பிரேசில் வீரர்கள் எளிதாக தடுத்து விட்டனர். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில், பிரேசில் அணி வீரர் ஜோ அந்த அணிக்கான மூன்றாவது கோலை அடித்தார்.பிரேசில் தேசிய அணிக்காக ஜோ அடித்த முதல் கோல் இதுவாகும். இறுதியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் இத்தலி அணி மெக்சிகோ அணியை எதிர்கொள்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

Posted: 15 Jun 2013 08:18 PM PDT


பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. இங்கிலந்தின் எட்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, பாகிஸ்தான் அணியை முதலில் பேட் செய்யுமாறு அழைத்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் நசீர் 2 ரன்களுக்கு தமது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்தநிலையில், 12 ஓவரின் போது மழை குறுக்கிட ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. மீண்டும் 19-ஆவது ஓவரின் போது மழை குறுக்கிடவே, 40 ஓவராகக் குறைக்கப்பட்டது. எனினும், 39.4 ஓவர்களுக்கு பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ரன்களை எடுத்தது. அந்த அணியின் சார்பில் ஆசாத் சஃபீக் மட்டும் சிறப்பாக விளையாடி 41 ரன்களை எடுத்தார். தொடர்ந்து 166 ரன்களை வெற்றி இலக்காக் கொண்டு இந்திய அணி களமிறங்கிய போதும் 8 ஓவரின் போது மழை பெய்தது. மீண்டும் 11 வது ஓவரிலும் மழை குறுக்கிட டக்வொர்த் முறைப்படி இந்தியாவின் வெற்றி இலக்கு, 22 ஓவருக்கு 102 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ரோஹித் சர்மா 18 ரன்களுக்கு வெளியேற, ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி 48 ரன்களைச் சேர்த்தார். 19 ஆவது ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்த இந்திய அணி, எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. ஏற்கனவே அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றுவிட்ட நிலையில், இந்தத் தொடரில் பாகிஸ்தான் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

கடற்கரை கிராமங்களில் மணல் அள்ளப்படுவதை கண்டித்து திருச்செந்தூரில் மீனவர்கள் மாநாடு

Posted: 15 Jun 2013 08:08 PM PDT


தூத்துக்குடி மாவட்ட கடற்கரை கிராமங்களில் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதை கண்டித்து திருச்செந்தூரில் மீனவ சமுதாய மக்கள் சார்பில் மாநாடு நடைபெறவுள்ளது. தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் விடுதலை இயக்கத் தலைவர் அந்தோணி ராய் இதனை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, மணல் ஏற்றுமதி செய்யும் சில தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து கடற்கரை பகுதிகளில் மணல் அள்ளி வருவதாகவும், இதனால் உவரி, பெரியதாழை, வேம்பார், மணப்பாடு, இடிந்தகரை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் மணல் அரிப்பு ஏற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே அந்த தனியார் நிறுவனங்களுக்கு தடை விதிக்க கோரியும் மணல் அள்ளுவதை தடுக்க கோரியும் இந்த மாநாடு நடத்தப்படுவதாகவும், இதில் ஏராளமான மீனவ சமுதாய மக்கள் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை காட்டவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். காணொளி: கடற்கரை கிராமங்களில் மணல் அள்ளப்படுவதை கண்டித்து மீனவர்கள் மாநாடு

திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஒருவர் கைது

Posted: 15 Jun 2013 08:02 PM PDT


திருப்பூரில் நான்காம் வகுப்பு படிக்கும் மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நபரை காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது மூன்று சிறுமிகளும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்வரன் என்ற அந்த நபர் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக சிறுமிகள் தங்களின் பெற்றோரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, ஈஸ்வரனை அப்பகுதி மக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள ஈஸ்வரனிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.  காணொளி: திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஒருவர் கைது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™