Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


அமெரிக்காவின் கொலராடோ நகரில் காட்டுத்தீ: 2 பேர் உயிரிழப்பு

Posted: 14 Jun 2013 11:06 PM PDT


அமெரிக்காவின் கொலராடோ நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், 400-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டுத்தீயில் இதுவரை 24 ஏக்கர் வனப்பகுதி எரிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 11-ஆம் தேதி ஏற்பட்ட இந்த தீயினால் 38 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர். தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் தீயை அணைக்கும் பணி சுலபமாக இருக்கும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழி மீண்டும் போட்டி: இன்று வேட்புமனு தாக்கல்

Posted: 14 Jun 2013 10:44 PM PDT


மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க., சார்பில் மீண்டும் போட்டியிட கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்கிறார். இன்று காலை 11.30 மணியளவில் அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். முன்னதாக சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறார். நேற்று முன் தினம் தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சி எம்.எம்.எல்.,க்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கருணாநிதி: மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 4 நாட்கள் இருக்கின்றன, அதற்குள் உரிய முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார். மேலும் மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், கனிமொழி மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மனு இன்று தாக்கல் செய்கிறார். மாநிலங்களவை தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்ய வரும் 17 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் வரும் 20ஆம் தேதி. ஆறு பதவிகளுக்கு ஆறுக்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்தால் வாக்குப்பதிவு ஜூன் 27ஆம் தேதியன்று நடைபெற்று, அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

காஞ்சிபுரத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

Posted: 14 Jun 2013 10:35 PM PDT


காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தார். திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகள், மொளச்சூர் கிராமத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, உயரழுத்த மின் கம்பியின் மீது கொடி கம்பம் சாய்ந்துள்ளது. அதனைப் பிடிக்கச் சென்ற போது, திமுக கிளைச் செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட 3 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். காயம் அடைந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவர், சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சுங்குவார் சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதரவற்றவர் நிலையில் இருக்கும் முதியோர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அமைப்பு

Posted: 14 Jun 2013 10:24 PM PDT


உலகில்யாரும் அனாதைகள் இல்லை, அனைவருக்கும் உறவுகள் சகமனிதர்களே என்ற வார்த்தையை உண்மையாக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது ஒரு முதியோர் இல்லம். ஆதரவற்று வாழ வழியின்றி சாலையில் திரிந்தவர்களுக்கு அடைக்கலம் தந்திருக்கிறார் ஒருவர். உலகம் முழுவதும் முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோரது நிலை எப்படி இருக்கிறது? உங்கள் பார்வைக்காக… கூடற்ற பறவைகளுக்கு வானமே வீடு… வனமே அதன் கூடு என்பதைப் போல் இந்த முதியோர்கள் அடைக்கலம் புகுந்துள்ள இடம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தர்மா முதியோர் இல்லம். பிள்ளைகளால் கைவிடப்பட்டோர்,கணவனை இழந்து தவிக்கும் பெண்கள் என உறவுகளை இழந்து துயர்படுபவர்கள், தங்களின் நாட்களை சந்தோஷமாக இந்த இல்லத்தில் கழிக்கின்றனர். இவர்களின் இந்த சந்தோஷத்திற்கு காரணம்,சமூக ஆர்வலர் சேகர். சிறுவயதில் தனது தந்தையை இழந்த சேகர் தர்மா என்ற பெயரில் ஆதரவற்ற முதியோவர்களுக்கு அடைக்கலம் அளித்து வருகிறார். தற்போது முதியோர் இல்லத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை தங்களின் எதிரிகளுக்கு கூட வரக்கூடாது என்கின்றனர் இந்த முதியவர்கள். இந்த இல்லத்தில், அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தாலும் பாசத்திற்காக ஏங்கி தவிப்பதாக கூறும் இவர்களின் வார்த்தைகள் கல் நெஞ்சையும் கரைய வைக்கும்படியாகவே உள்ளது. இந்த இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு தலா 600 லிருந்து 700 வரை அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்நிலையில், அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியில் இந்த தொகை போதவில்லை என்றுக் கூறப்படுகிறது. எனவே முதியோர் இல்லங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தித்தர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கின்றார் சேகர். பல கனவுகளுக்கு மத்தியில் பிள்ளைகளை பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கி உயர்ந்த நிலையை எட்ட வழிவகுத்து பிறகு அந்த பிள்ளைகள் பெற்றோர்களை கைவிடுவது வருத்தமளிக்கவே செய்கிறது. காணொளி: முதுமையை மதிப்போம்…முதியோரை ஆதரிப்போம்

மோதி காங்கிரசுக்கு சவாலா? ஜெய்ராம் கருத்துக்கு கட்சி மேலிடம் மறுப்பு

Posted: 14 Jun 2013 10:15 PM PDT


குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி, காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக விளங்குவதாக மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியது, அவரது சொந்த கருத்து என காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. மோதியை ஒரு சவாலாக காங்கிரஸ் கட்சி கருதவில்லை என்று தெரிவித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அஹமது, பாரதிய ஜனதா கட்சிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்தான் நரேந்திர மோதி சவாலாக விளங்கி வருவதாகத் தெரிவித்தார். முன்னதாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நரேந்திர மோதி, காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக விளங்கி வருவதாக ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார். மேலும், நரேந்திர மோதியை ஃபாசிஸ்ட் என்றும் அவர் விமர்சித்திருந்தார். ஜெயராம் ரமேஷின் இந்த விமர்சனத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காணொளி:மோதி குறித்து அமைச்சர் ஜெய்ராம் கருத்து

டெல்டா விவசாயிகளுக்கு இன்று முதல் மும்முனை மின்சாரம்: ஜெயலலிதா

Posted: 14 Jun 2013 10:11 PM PDT


டெல்டா மாவட்ட விவசாயிகள் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் வகையில் இன்று முதல் 12 மணிநேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மும்முனை மின்சாரம் செப்டம்பர் மாதம் வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் ஆதாரத்தில் இருந்து வயலுக்கு நீரை எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக 180 மீட்டர் நீளம் கொண்ட 6 ஆயிரம் ஹெச்டிபிஇ குழாய்கள் விலை ஏதுமின்றி விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் உயிர் உரங்கள், நுண் ஊட்டச் சத்துக்கள், தாவர பூச்சிக்கொல்லி ஆகியவை விலை ஏதுமின்றி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டிய தண்ணீரை பெறுவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இதன்பேரில் குறுவை சாகுபடிப் பரப்பின் அளவு மேலும் அதிகரிக்கும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். காணொளி: டெல்டா விவசாயிகளுக்கு இன்று முதல் மும்முனை மின்சாரம்: ஜெயலலிதா

தூத்துக்குடி டாக் தொழிற்சாலையை தமிழக அரசு ஏற்று நடத்த தொழிலாளர்கள் கோரிக்கை

Posted: 14 Jun 2013 09:09 PM PDT


தூத்துக்குடியில் உள்ள ‘டாக்’ தொழிற்சாலையில் நடைபெறும் ஊழல்களை கண்டறிய சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் இந்த போராட்டத்தால் சோடா கெமிக்கல், அமோனியம் குளோரைடு உர உற்பத்தி முடங்கும் சூழ்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது. இந்த போராட்டத்தின் போது, தொழிலாளர் நலனைக் காக்கும் வகையில் டாக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தமிழக அரசின் டிட்கோ கட்டிப்பாட்டில் இருந்த டாக் தொழிற்சாலை, முதலில் ஸ்பிக் நிறுவனத்தின் கீழ் மாற்றப்பட்டது. பின்னர், ஏஎம்ஐஹெச் நிறுவனத்தின் கீழ் கடந்த ஆண்டு டாக் தொழிற்சாலை மாற்றப்பட்டது. அப்போது முதல் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காணொளி:  தூத்துக்குடி டாக் தொழிற்சாலையை தமிழக அரசு ஏற்று நடத்த தொழிலாளர்கள் கோரிக்கை

“அமைச்சர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்”: வீரப்ப மொய்லி பரபரப்பு குற்றச்சாட்டு

Posted: 14 Jun 2013 09:08 PM PDT


டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார். கச்சா எண்ணெய் இறக்குமதியில் தொடர்புடைய சக்திவாய்ந்த குழுக்கள், பெட்ரோலியத் துறை அமைச்சர்களை அச்சுறுத்துகின்றன என்பதுதான் அது. கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பால் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவதாகக் கூறிய வீரப்ப மொய்லி, இறக்குமதியைக் குறைக்கும் அரசின் முயற்சிக்கு எதிராக பல்வேறு சக்திகள் செயல்படுவதாகத் தெரிவித்தார். இறக்குமதியைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்கிறோம். ஆனால் அதிகாரிகள் அதற்கு தடை ஏற்படுத்துகின்றனர். இறக்குமதியால் லாபம் அடையும் ஒரு சிலரும் இறக்குமதிக்கு உதவுகின்றனர். இதனால் இந்தத் துறைக்கு அமைச்சராக வரும் ஒவ்வொருவரும் அச்சுறுத்தப்படுகின்றனர். முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தடுக்க முயற்சிக்கின்றனர் என மொய்லி குற்றஞ்சாட்டியிருந்தார். மொய்லி கூறிய குற்றச்சாட்டு டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெய்ல், பி.எல்.எல். என்ற 2 பொதுத்துறை நிறுவனங்கள்தாம் கச்சா எண்ணெய் இறக்குமதியை செய்கின்றன. அவை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக இருந்தால், அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். அல்லது, கண்ணுக்குத் தெரியாத சக்திகள் அரசை பணியவைக்க முயல்வதாக இருந்தால், அதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடலாம். தொடர்புடையவர்களை கைது செய்யலாம். “மொய்லி ஒரு பொய்யர்”: அமைச்சரின் இந்த குற்றச்சாட்டை அடுத்து, அந்த சக்திவாய்ந்தவர்கள் யார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு நேரடியாக பதிலளிக்காத மொய்லி, பெட்ரோலிய துறை அமைச்சராக பொறுப்பேற்கும் அனைவருமே இத்தகைய அச்சுறுத்தலைச் சந்தித்திருப்பதாகக் கூறினார். எனினும், எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் முயற்சியில் தன்னை யாரும் அச்சுறுத்த முடியாது என்றும் வீரப்ப மொய்லி குறிப்பிட்டார். இதனிடையே, பெட்ரோலிய அமைச்சர்களை அச்சுறுத்தியவர்கள் யார் என்பதை வீரப்ப மொய்லி வெளியிட வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது. இதே கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முன்வைத்துள்ளது. குருதாஸ் தாஸ் குப்தா குற்றச்சாட்டு தனியார் துறையினர் உற்பத்தி செய்யும் இயற்கை எரிவாயுவின் விலையை உயர்த்தவே இதுபோன்ற கட்டுக்கதையை மொய்லி அவிழ்த்துவிடுவதாகவும் குருதாஸ் தாஸ் குப்தா விமர்சித்துள்ளார். காணொளி: "அமைச்சர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்":மொய்லி பரபரப்பு குற்றச்சாட்டு

உடுமலைப்பேட்டை அருகே மழை:விவசாயிகள் மகிழ்ச்சி

Posted: 14 Jun 2013 08:51 PM PDT


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணையின் நீர்பிடிப்பகுதியில் கன மழை பொழிந்தது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால், அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 10 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வருடமாக கடும் வறட்சியில் வாடி வந்த விவசாயிகளுக்கு இந்த மழை மகிழ்ச்சியை அளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி அரசினர் மாணவியர் விடுதியில் மாணவிகளை சேர்க்க மறுப்பதாக குற்றச்சாட்டு

Posted: 14 Jun 2013 08:18 PM PDT


பொள்ளாச்சி அரசினர் மாணவியர் விடுதியில் மாணவிகளை சேர்க்க மறுப்பதாக மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். வால்பாறையில் பாதுகாப்பு இல்லாததால், பொள்ளாச்சியில் உள்ள பள்ளியில் சேர்ந்த மாணவிகளுக்கு, விடுதியில் இடம் ஒதுக்காததால், தினமும் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் துணி பெட்டிகளுடன் விடுதி முன்பு காத்துக்கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்தனர். எனவே, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விடுதியில் இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™