Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


சென்னையில் கார் மோதி சிறுவன் உயிரிழந்த வழக்கு:ஷாஜி சிறையில் அடைப்பு

Posted: 13 Jun 2013 10:19 PM PDT


சென்னையில் கார் மோதி சிறுவன் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுபான ஆலை அதிபரின் மகன் ஷாஜி சிறையில் அடைக்கப்பட்டார். பாங்காக்கில் இருந்து விமானத்தில் வந்த ஷாஜியை, தனிப்படை போலீசார், கொச்சியில் கைது செய்தனர். இதையடுத்து, எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஜூன் 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து, ஷாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மே 23-ம் தேதி, சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில், ஷாஜி சென்ற கார், தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில், முனிராஜ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், ஷாஜியை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும், ஜூலை 19-ம் தேதிக்குள் அவர் சரணடைய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவரது சொத்துக்கள் ஜப்தி செய்யப்படுவதோடு, அவர் தப்பிச் செல்ல உதவியவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஷாஜி கொச்சி வந்தபோது கைது செய்யப்பட்டார். காணொளி:  சிறையில் அடைக்கப்பட்டார் ஷாஜி

சர்வதேச அட்டயா பட்டயா போட்டி: துணைக் கேப்டனாக தமிழக வீரர் தேர்வு

Posted: 13 Jun 2013 09:52 PM PDT


முதன் முறையாக நடத்தப்படும் சர்வதேச அட்டயா பட்டயா போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் சிவ சுப்பிரமணியன் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டனாக புதுச்சேரி மாநில வீரர் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 10ம் தேதி முதல் நேற்று வரை நாக்பூரில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்குப் பின், இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. இந்திய அணியில் தமிழகம், புதுச்சேரி தவிர மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த முகாமில் தமிழக அணியின் கேப்டன் சிவசுப்பிரமணியன், அவரது சகோதரர் சர்வேஸ்வரன் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்த அணி வரும் 16- ஆம் தொடங்கி 19- ஆம் தேதி வரை பூடானில் நடைபெறவுள்ள தெற்கு ஆசிய அளவிலான அட்டயா -பட்டையா போட்டியில் பங்கேற்க உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

சீனாவை வேவு பார்க்கும் அமெரிக்கா: ஸ்னோடெனின் அதிர்ச்சி தகவல்

Posted: 13 Jun 2013 09:44 PM PDT


அமெரிக்காவின் அதிநவீன உளவுத் திட்டங்களை அம்பலப்படுத்திய எர்வர்ட் ஸ்னோடென் அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு வருகிறார். ஹாங்காங் மற்றும் சீனாவின் பிற பகுதிகளில் இணையத்தின் மூலம் அமெரிக்கா வேவு பார்த்து வருவதாக ஹாங்காங் இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். ஹாங்காங்கில் உள்ள சீனப் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் இலக்குகளில் ஒன்று எனவும் ஸ்னோடென் கூறியுள்ளார். ஹாங்காங்கில் இருந்து தாம் வெளியேறப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் மாற்றியமைக்கப்படுகிறது மத்திய அமைச்சரவை: மன்மோகன்சிங்- சோனியா ஆலோசனை

Posted: 13 Jun 2013 09:36 PM PDT


மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் மற்றும் சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் ராஜினாமா செய்ததால், அந்த பதவிகள் காலியாக உள்ளன. இதேபோல மத்திய மந்திரி சபையில் இருந்து திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்ததால், 5 இடங்கள் காலியாக உள்ளன. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்த இடங்களுக்கும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. பல அமைச்சர்கள் கூடுதல் பொறுப்புகளாக துறைகளை கவனித்து வருகின்றனர். அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டியில், காலியாக உள்ள இடங்களுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து பேசினார். அப்போது காலியாக உள்ள இடங்களுக்கு அமைச்சர்களை நியமிப்பது பற்றி இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வருவது பற்றியும் இருவரும் விவாதித்தாகவும் கூறப்படுகிறது. காணொளிவிரைவில் மாற்றியமைக்கப்படுகிறது மத்திய அமைச்சரவை: மன்மோகன்சிங்- சோனியா ஆலோசனை

ஈரானில் இன்று அதிபர் தேர்தல்: பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 13 Jun 2013 09:33 PM PDT


ஈரான் நாட்டில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. அந்நாட்டு சட்டத்தின்படி தற்போதைய அதிபர் மஹ்மூத் அஹ்மத் ஐ நெஜாத் மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது. வெற்றி வாய்ப்புகள் அதிகமுள்ளதாக கருதப்படும் சயீத் ஜலீலி தனது அணு ஆயுத கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கான அதிகாரம் குறைப்பு: மசோதா தாக்கல் செய்ய இலங்கை முடிவு

Posted: 13 Jun 2013 09:23 PM PDT


இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பின் 13வது சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற தேர்வுக் குழு ஒன்றை அமைக்க அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தேர்வுக் குழுவை அமைப்பதற்கான கோரிக்கை வரும் 18ம் தேதி நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் அரசு வைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக் குழு குறிப்பாக மாகாண சபைகளுக்கு உள்ள நிலம் மற்றும் போலீஸ் அதிகாரங்களை குறைப்பது தொடர்பாக ஆராயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009-ல் விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர், முதன்முறையாக வடக்கு மாகாண கவுன்சிலுக்கான தேர்தல், வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. காவல்துறைக்கான அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்க ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, மாகாண கவுன்சிலின் அதிகாரத்தை குறைப்பதற்கான மசோதாவை விரைவாக நிறைவேற்றுவதில் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 1987ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி 13வது சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி மாகாணங்களுக்கு தனித்தனியே காவல்துறை அமைத்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டது. காணொளி:   மசோதா தாக்கல் செய்ய இலங்கை முடிவு

விக்ரம் அகர்வாலுக்கு நெஞ்சுவலி: ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை

Posted: 13 Jun 2013 08:55 PM PDT


ஐ.பி.எல். சூதாட்டப் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஹோட்டல் உரிமையாளர் விக்ரம் அகர்வாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு 7 மணியளவில் அவருக்கு நெஞ்சுவலி மற்றும் ரத்தக் கொதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சைக்குப் பின்னர், நள்ளிரவு 12 மணியளவில் விக்ரம் அகர்வால் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஐ.பி.எல். சூதாட்டப் புகார் தொடர்பாக சென்னை சிபிசிஐடி போலீசார் முன்பு, கடந்த 10-ம் தேதி விக்ரம் அகர்வால் ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸார் பின்னர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். காணொளி:http://puthiyathalaimurai.tv/video-gallery?video=5187

விதை, பூச்சிக்கொல்லி தரமில்லை: கோவை விவசாயிகள் புகார்

Posted: 13 Jun 2013 08:50 PM PDT


தண்ணீர்ப் பற்றாக்குறை, கூலித் தொழிலாளர் தட்டுப்பாடு என விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகளும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் தரமானதாக இல்லை என்று புகார் எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தில் கரும்பும், வாழையும் அதிகளவில் பயிரிடப்பட்டு வந்தன. ஆனால், காட்டு யானைகளின் தொல்லைகளுக்குப் பயந்து மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் காய்கறிப் பயிர்களுக்கு மாறிவிட்டனர். ஆனாலும், விவசாயிகளை விடாமல் வேறொரு வடிவில் துரத்துகிறது பிரச்னை. விதைகள் தரமானதாக இல்லாததால், பயிர்கள் சரிவர முளைக்கவில்லை என்றும், தரமற்ற பூச்சிக்கொல்லிகள் உரிய பலனை தரவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். விவசாயிகளின் குற்றச்சாட்டு குறித்து கோவை மாவட்ட ஆட்சியரின் வேளாண் பிரிவு உதவியாளர் விஜயகுமாரிடம் கேட்டபோது, விதை மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை, நன்கு ஆராய்ந்து வாங்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். தரமற்ற விதைகள், காலாவதியான பூச்சிக் கொல்லிகள் போன்றவை விற்பனைக்கு வராமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. காணொளி: விதை, பூச்சிக்கொல்லி தரமில்லை:கோவை விவசாயிகள் புகார்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்:இங்கிலந்து அணியை வென்றது இலங்கை

Posted: 13 Jun 2013 08:49 PM PDT


சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ட்ராட், 76 ரன்களும், ஜோ ரூட், 68 ரன்களும் எடுத்தனர். 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, தொடக்க விக்கெட்டை விரைவில் பறிகொடுத்தது. பெரேரா 6 ரன்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து தில்ஷனும், சங்ககராவும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.நிதானமாக விளையாடிய தில்ஷன் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த ஜெயவர்த்தனே 42 ரன்கள் சேர்த்து விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சங்ககரா சதம் கடந்தார். அவருடன் இணைந்து அதிரடியாக விளையாடிய குலசேகரா அரை சதம் அடித்தார். 3 விக்கெட்களை மட்டும் இழந்த இலங்கை அணி, 17 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. சங்ககரா 134 ரன்களுடனும், குலசேகரா 58 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் தென்னாப்ரிக்கா அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு: நம்மாழ்வார் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரதம்

Posted: 13 Jun 2013 08:39 PM PDT


காவிரிப் படுகையில், மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி இயற்கை வேளாண் நிபுணர் நம்மாழ்வார் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில், ஏராளமான விவசாயிகளும் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டால், நிலத்தடி நீர் மட்டம் குறைவதுடன், விவசாயமும் பாதிக்கும் அபாயம் ஏற்படும் எனக் கூறி, விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.   நம்மாழ்வார் பேட்டி:   உண்ணாரவிரதப் போராட்டத்திற்கு தலைமை வகித்த இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வார்: காவிரிப் படுகையில் இருந்து மீத்தேன் வாயு எடுக்கும் பிரச்னையை தஞ்சாவூர் பிரச்னையாக பார்க்கக் கூடாது இது ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்னை. மீத்தேன் வாயு எடுப்பதற்காக நிலத்தடி நீர் உரிஞ்சப்பட்டு ஒரு கட்டத்தில் இப்பகுதி வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறி விடும். மத்திய அரசு மக்கள் நலனை ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப் நிறுவனத்திடம் அடகு வைத்துள்ளது. இதனை எதிர்த்து தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றார். காணொளிமீத்தேன் திட்டத்திற்கு நம்மாழ்வார் தலைமையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™