Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


நரேந்திர மோதிக்கு எதிர்ப்பு: தே.ஜ. கூட்டணியில் பிளவு ?

Posted: 11 Jun 2013 10:56 PM PDT


பாரதிய ஜனதாவின் உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்திருந்தாலும் அதன் முக்கிய கூட்டணியான ஐக்கிய ஜனதளத்துடனான பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் பாஜக திணறி வருகிறது. நரேந்திர மோதியை முன்னிலை படுத்துவதை எதிர்த்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதளம் வெளியேறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மூத்த அமைச்சர்கள் மற்றும் பிகார் மாநில ஜனதா தள தலைவர்களுடன் அவர் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். 243 உறுப்பினர்களை கொண்ட பிகார் சட்டபேரவையில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 118 எம்எல்ஏக்களும் பாரதிய ஜனதா கட்சிக்கு 91 எம்எல்ஏக்களும் உள்ளனர். பெருபான்மைக்கு 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போதைய சூழலில் பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை முறித்துகொண்டால் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 4 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதற்காக சுயேட்சை உறுப்பினர்களுடன் நிதிஷ் குமார் ஆலோசனை நடத்துகிறார்.

உலகிலேயே அதிக வயதுடையவர் உயிரிழந்தார்

Posted: 11 Jun 2013 10:16 PM PDT


உலகத்திலேயே அதிக வயதுடையவர் என்ற பெருமையை பெற்ற ஜப்பானை சேர்ந்த ஜிரோமோன் கிமுரா (Jiroemon Kimura) இன்று அதிகாலை உயிரிழந்தார். 116 வயதான அவர், நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பயனளிக்காத்தால், கிமுரா இன்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தனது 115 வயதில், உலகில் அதிக வயதுடையவர் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். 1897 ஆம் ஆண்டு பிறந்த கிமுரா ஏழு பிள்ளைகள், 14 பேர பிள்ளைகள், 25 கொள்ளு பேர பிள்ளைகளும், 15 எள்ளு பேர குழந்தைகளும் உள்ளனர். ஜப்பானில் மட்டும் நூறு வயதை கடந்த 50 ஆயிரம் பேர் உள்ளதாக 2011ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கிமுரா உயிரிழந்த நிலையில், அவரது இடத்தை பிடிக்க மற்றொரு ஜப்பானியரான 115 வயதாக மிசாவோ உகாவாவுக்கு (Misao Ookawa) வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா கட்டி வரும் தடுப்பணை பணிகளை நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

Posted: 11 Jun 2013 10:14 PM PDT


தென்பண்ணை ஆற்றில், கர்நாடக அரசு கட்டி வரும் தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் விவசாயிகளின் பேரணி நடைபெற்றது. தமிழக உழவர் முன்னணி சார்பில் ராயக்கோட்டையில் நடைபெற்ற இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இயற்கை விஞ்சானி நம்மாழ்வார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளிடையே உரையாற்றினார். ஓசூர் விவசாயிகளின் நீர்ப்பாசன ஆதாரமான தென்பண்ணை ஆற்றில், கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்று பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் வலியுறுத்தினர்.

மேலூர் அருகே உயிரிழந்த 10 நாட்களுக்கு பின்னர் சிறுவன் உடல் பிரேதப் பரிசோதனை

Posted: 11 Jun 2013 09:57 PM PDT


மேலூர் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் உடல், 10 நாட்களுக்குப் பின்னர், தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. கவனக்குறைவாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் மீதும், மாணவனின் உயிரிழப்புக்கான காரணத்தை மறைத்த குற்றத்திற்காக அவரது தந்தை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கீழவளவு பகுதியைச் சேர்ந்த ஆண்டிசாமி என்பவரின் மகன் சஞ்சீவி. கடந்த 1-ம் தேதி, வயலில் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்தாக கூறப்படுகிறது. இதில், மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சஞ்சீவி உயிரிழந்தான். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல், ஆண்டிசாமியும், உறவினர்களும், சஞ்சீவியின் உடலை அடக்கம் செய்து விட்டனர். தகவலறிந்த காவல்துறையினர், கவனக்குறைவாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் சஞ்சீவியின் தந்தை ஆண்டிசாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலூர் தாசில்தார் முன்னிலையில், 11 வயது சிறுவன் சஞ்சீவியின் உடல், தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

நாமக்கல்லில் 6 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 11 Jun 2013 09:54 PM PDT


நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 6 சிறுமிகளின் திருமணத்தை அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். நாமக்கல்லில் 2, மோகனூரில் 1 , பரமத்திவேலூரில் 1, பள்ளிப்பாளையத்தில் 2 என மொத்தம் 6 திருமணங்கள் இன்று காலை நடைபெறுவதாக இருந்தது. இது குறித்து காவல்துறையின் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு, சமூக நலன் துறையினர், வருவாய் துறையினர், ஆகிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவிகளின் வீடுகளுக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் திருமணங்களை தடுத்து நிறுத்தினர். 18 வயதிற்கு முன்னர் திருமணம் செய்யக் கூடாது என பெற்றோரிடம் உறுதி கையெழுத்துப் பெற்றனர். தொடர்ந்து இது போன்ற திருமணங்கள் நடந்து வருகிறதா என்றும் கண்காணித்து வருகின்றனர். இது தவிர ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த தேயனூரில் சிறுமிக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இது குறித்த ரகசிய தகவலை அடுத்து போலீசார் விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதே போல் சேலம் மற்றும் ஈரோட்டிலும் சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 9 சிறுமிகளுக்கு நடைபெறவிருந்த திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.   காணொளி:<நாமக்கல்லில் 6 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்>

பல்லடம் அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

Posted: 11 Jun 2013 09:37 PM PDT


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, வன்கொடுமை செய்ய முயன்ற விசைத்தறி தொழிலாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி பழையூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி தனியாக வசித்து வருகிறார். தற்போது 26 வயதாகும் நந்தினி, சற்றே மனவளர்ச்சி குன்றியவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான சுப்ரமணியன், நந்தினிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். நந்தினியின் கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்த போது, சுப்ரமணியன் தப்பியோடி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

Posted: 11 Jun 2013 09:36 PM PDT


பி.இ., பி.டெக், எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்களது ரேங்கிக் குறித்த தகவல்களை இணையதளம் மூலம் தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொறியியல் ரேங்கிக் மற்றும் கலந்தாய்வுக்கான விபரங்களை www.annauniv.edu இணையத்திலும், மருத்துவக் கலந்தாய்வு மற்றும் ரேங்கிக் விபரங்களை www.tnhealth.org இணையத்திலும் பார்க்கலாம். எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் படிப்புக்கான ரேங்க் பட்டியல், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இன்று வெளியிடப்படுகிறது. இந்த ரேங்க் பட்டியலை, சுகாதாரத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடுகிறார். பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல், அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இந்த ரேங்க் பட்டியலை, உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று மாலை 3.30 மணிக்கு வெளியிடுகிறார். கலந்தாய்வு தேதிகள்:   பொறியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 17ம் தேதி தொடங்குகிறது. 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை விளையாட்டு பிரிவுக்கும், 20ம் தேதி அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வும், 21ம் தேதி பொதுப் பிரிவுக்கும் கலந்தாய்வு தொடங்குகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 18ம் தேதி தொடங்குகிறது.    காணொளி:<பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு>

வாணியம்பாடியில் போலி உரங்கள் தயாரித்து விற்பனை: 5 பேர் கைது

Posted: 11 Jun 2013 09:30 PM PDT


வாணியம்பாடியில் போலியாக உரம் தயாரித்து விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் நகரங்களில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் உப்புகளை சலித்து, தூய்மைப்படுத்தி, அதனுடன் ரெட் ஆக்ஸைடு உள்ளிட்ட வேதிப் பொருட்களை சேர்த்து போலி உரம் தயாரிக்கப்படுகிறது. முன்னணி நிறுவனத்தின் பெயரில், தரம் குறைவான வேதிப் பொருட்களை சேர்த்து, போலியான உரங்களை உற்பத்தி செய்து, அவைகளை கர்நாடகாவில் விற்பனை செய்வதாக விவசாயிகள் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விற்பனை முகவர் அளித்த புகாரின் பேரில், கர்நாடக வேளாண்மை துணை இயக்குநர் தலைமையில் அம்மாநில போலீசார்,வாணியம்பாடியில் 4 தோல் நிறுவனத்தில் அதிரடி சோதனை செய்தனர்.இந்த ஆய்வில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.தொடர்ந்து 2-வது நாளாக இன்றும்,கர்நாடக போலீசாரின் ஆய்வு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   காணொளி:<வாணியம்பாடியில் போலி உரங்கள் தயாரித்து விற்பனை>

தேனி அருகே விபத்து: 6 பேர் பலி

Posted: 11 Jun 2013 08:48 PM PDT


தேனி மாவட்டம் சீலையம்பட்டி அருகே வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த 3 குடும்பத்தினர் உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூரில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு சென்று கொண்டிருந்த போது, அவர்கள் சென்ற வேன் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள 11 பேரும் தேனி அரசு மருத்துவமனை கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   காணொளி:<தேனி அருகே விபத்து: 6 பேர் பலி>

டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம்

Posted: 11 Jun 2013 08:35 PM PDT


தமிழகத்திற்கு, இந்த மாதம் வழங்கப்பட வேண்டிய காவிரி நீரின் அளவை முடிவு செய்வதற்காக, காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது.  கடந்த 1ம் தேதி கூடிய கூட்டத்தின் போது, கர்நாடகாவில் பருவமழை பெய்யாத காரணத்தால், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என கைவிரித்தது. இதையடுத்து, 12ம் தேதி மீண்டும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெறவுள்ள கூட்டத்தின் போது, இந்த மாதம் வழங்கப்பட வேண்டிய 10 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என தமிழகத் தரப்பில் வலியுறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. பிற்பகல் 3 மணியளவில், மத்திய நீர்வளத்துறை செயலாளரும், மேற்பார்வைக் குழுவின் தலைவருமான சர்க்காரின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத் தரப்பில் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப் பணித்துறை செயலாளர் சாய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.   காணொளி:<டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம்>


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™