puthiyathalaimurai.tv online |
- அமெரிக்க உளவு ரகசியங்கள் அம்பலம்:எட்வர்ட் ஸ்னோடனை கைது செய்ய நடவடிக்கை
- திருச்சியில் போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை: 4 பேர் கைது
- குவைத்தில் இந்தியர்கள் வேலை பறிப்பு : பிரதமருக்கு வைகோ கடிதம்
- இந்திய ரூபாயின் மதிப்பு 2வது நாளாக சரிவு
- திருவண்ணாமலை அருகே பேருந்து-கார் மோதல்:ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
- திருச்சியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி
- ஐபிஎல் சூதாட்டப் புகார்: விக்ரம் அகர்வால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
- மதுரை அருகே பிரசவ உதவித் தொகையில் முறைகேடு
- சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி தூத்துக்குடியில் பொதுவேலைநிறுத்தம்
- ஈராக்கில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்: 61 பேர் பலி
| அமெரிக்க உளவு ரகசியங்கள் அம்பலம்:எட்வர்ட் ஸ்னோடனை கைது செய்ய நடவடிக்கை Posted: 10 Jun 2013 11:24 PM PDT அமெரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய சி.ஐ.ஏ. முன்னாள் ஊழியரை கைது செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. வில் கணினி நிபுணராக பணியாற்றிய எட்வர்டு ஸ்னோடன், உளவு ரகசியங்கள் பலவற்றை கார்டியன் பத்திரிகை மூலம் அம்பலப்படுத்தியதாக தெரிவித்தார். இதனால், அமெரிக்க அரசால் எட்வர்டு கைது செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஹாங்காங்கில் தங்கியுள்ள எட்வர்டை, கைது செய்து அமெரிக்க அழைத்து வர அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக சீன அரசுடன் அந்நாட்டு அதிகாரிகள் பேசியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே இணையதள சுதந்திரத்தை மதிக்கும் நாட்டில் தஞ்சமடைய உள்ளதாக தெரிவித்துள்ள எட்வர்ட் ஸ்னோடன், அயர்லாந்தில் தஞ்சமடைய விருப்பம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அமெரிக்க அரசின் பல ரகசியங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈக்வெடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். |
| திருச்சியில் போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை: 4 பேர் கைது Posted: 10 Jun 2013 11:04 PM PDT திருச்சியில் போலி ஆவணம் மூலம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மன்னார்புரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 12 ஏக்கர் நிலத்தை கந்தசாமி என்பவர் ஆக்கிரமித்துள்ளார்.அரசு அதிகாரிகள் உதவியுடன் பட்டா தயாரித்து, அந்த நிலத்தை பலருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நிலத்தின் உரிமையாளரும், கந்தசாமியிடம் இருந்து நிலத்தை வாங்கியவர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டனர். அதனைத்தொடர்ந்து, போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்பனை செய்த கந்தசாமி , அவருக்கு உடந்தையாக செயல்பட்ட வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, நிலஅளவையர்கள் ராஜ்குமார், சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். |
| குவைத்தில் இந்தியர்கள் வேலை பறிப்பு : பிரதமருக்கு வைகோ கடிதம் Posted: 10 Jun 2013 10:58 PM PDT குவைத் நாட்டில் வாழும் இந்தியர்களின் துயரங்களை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், குவைத் நாட்டில் முறையான விசா இல்லாமல் உள்ள வெளிநாட்டவரை ஆண்டுக்கு லட்சம் பேர் என 10 லட்சம் பேரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களில் ஏராளமான இந்தியர்களின் வேலை பறிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். வேலை பார்த்த நிறுவனங்களில் ஊதியம் பெறாமலும், உடைமைகளை எடுக்க அனுமதி தராமலும் இந்தியர்கள் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் வைகோ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இப்படி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுபவர்கள் மீண்டும் முறையான விசா அனுமதியுடன் கூட குவைத் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் வைகோ சுட்டிக்காட்டியுளளார். இந்தப் பிரச்னை குறித்து மத்திய அரசு, குவைத் அரசிடம் பேசி, முறையான ஆவணங்களுடன் இந்தியர்கள் குவைத் செல்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அங்குள்ள 6 லட்சத்து 70 ஆயிரம் இந்தியர்களும் அவரது குடும்பத்தினரின் நலனையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். |
| இந்திய ரூபாயின் மதிப்பு 2வது நாளாக சரிவு Posted: 10 Jun 2013 10:54 PM PDT இந்திய ரூபாய் மதிப்பு இன்று காலை வணிகத்தில் மேலும் வீழ்ச்சி கண்டு, பெரும் சரிவை சந்தித்துள்ளது. வணிகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அன்னிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பு 58 ரூபாய் 66 காசு என்ற நிலையை எட்டியது. நேற்றைய வணிகத்தில், ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு 1ரூபாய் 10 காசுகள் குறைந்து, 58 ரூபாய் 16 காசுகள் என சரிந்தது. இந்த பெரும் சரிவு குறித்து, பீதியடைய தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், இன்றும் ரூபாயின் மதிப்பு 50 காசுகள் வீழ்ச்சி கண்டு, 58 ரூபாய் 66 காசுகள் என்ற நிலையைத் தொட்டுள்ளது. டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பில் இதுவரை காணப்பட்ட சரிவில் இது அதிகபட்சமான வீழ்ச்சியாகும். வங்கியாளர்களும், இறக்குமதியாளர்களும் தொடர்ந்து சந்தையில் டாலர்களை வாங்கிக் குவிப்பதே இந்திய ரூபாய் மதிப்பு குறைய காரணமாகச் சொல்லப்படுகிறது. கடந்த 6 வாரங்களில் மட்டும், இந்திய ரூபாய் மதிப்பு 9 சதவீத வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் எதிரொலியாக, நேற்று மந்த கதியில் இருந்த இந்திய பங்குசந்தை இன்று வீழ்ச்சி பாதையில் பயணிக்கிறது. இன்று காலை சென்செக்ஸ் 125 புள்ளிகளுக்கு அதிகமான வீழ்ச்சியுடனும், நிப்டி 35 புள்ளிகள் இறக்கத்துடனும் காணப்பட்டன. |
| திருவண்ணாமலை அருகே பேருந்து-கார் மோதல்:ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி Posted: 10 Jun 2013 10:51 PM PDT திருவண்ணாமலை அருகே பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். திருவண்ணாமலை கீழ்நாத்தூரைச் சேர்ந்த பெருமாள், தனது மனைவி, மகன், மருமகள், பேரக் குழந்தைகளுடன் வேட்டைவளம் அருகே உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட இன்று காலை சென்றுள்ளார்.காரை அவரது மகன் ரவி ஓட்டினார். ஏந்தல் என்ற இடத்திற்கு வந்த போது பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பெருமாள், மருமகள் மஞ்சு, பேரக் குழந்தைகள் ஆர்யா, சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெருமாளின் மனைவி செல்வி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். படுகாயமடைந்த ரவி சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| திருச்சியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி Posted: 10 Jun 2013 10:34 PM PDT திருச்சியில் கீழக்கல்கண்டார்கோட்டையில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. கீழக்கல்கண்டார்கோட்டையில் டாஸ்மாக் கடை, அரசு அலுவலகம், பேருந்து நிலையம் மருத்துவமனை அருகே இருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது எனக் கோரி இந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியிரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு கொடுத்திருந்தனர். பல முறை மனு கொடுத்திருந்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று காலையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தனர். இதனையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தடையை மீறி கட்சியினர் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்றனர். அப்போது போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. |
| ஐபிஎல் சூதாட்டப் புகார்: விக்ரம் அகர்வால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் Posted: 10 Jun 2013 10:07 PM PDT ஐபிஎல் சூதாட்டப் புகார் தொடர்பாக ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் முன் நேற்று ஆஜரான அகர்வாலிடம், சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது குருநாத் மெய்யப்பன், விண்டூசிங், இடைத்தரகர் கிட்டி தொடர்பாக கேள்வி எழுப்பிய காவல்துறையினர், 7 மணி நேர விசாரணைக்குப் பின் அகர்வாலை கைது செய்தனர். விக்ரம் அகர்வாலை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். காணொளி:<ஐபிஎல் சூதாட்டம்:விக்ரம் அகர்வால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்> |
| மதுரை அருகே பிரசவ உதவித் தொகையில் முறைகேடு Posted: 10 Jun 2013 10:01 PM PDT அரசு ஊழியர்களின் அலட்சியத்தால் மக்கள் பணம் வீணாகி வருகிறது என்ற குற்றச்சாட்டு வலுத்து வரும் நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கர்ப்பிணி பெண்களுக்காக வழங்கப்படும் பிரசவ உதவி தொகையில் நடந்துள்ள மிகப்பெரிய முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்ப்பிணி பெண்களின் மருத்துவம் மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக,12 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்கி வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்காவைப் பொறுத்தவரை வெள்ளளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுற்றுவட்டார கர்ப்பிணி தாய்மார்கள் இத்திட்டத்தால் மருத்துவ உதவி பெற்று வருகின்றனர், கர்ப்பிணிப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் 3 தவணைகளாக வழங்க வேண்டிய 12 ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக 24 ஆயிரம் ரூபாய் வரை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது. இது 2011ம் ஆண்டு முதல் கடந்த மாதம் வரை நடைபெற்றுள்ளது. 2 ஆண்டுகளுக்கப் பிறகு நடைபெற்ற தணிக்கையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கூடுதலாக வழங்கிய கட்டணத்தை பயனாளிகளிடம் இருந்து கந்துவட்டிக்காரர்கள் போல் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 135 பயனாளிகளிடம் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய மாவட்ட சுகாதார துணை இயக்குநர் செந்தில்குமார்,ஆரம்ப சுகாதார செவிலியர்களின் அலட்சியதால் தவறு நடந்திருப்பதாகக் கூறி முடித்துக் கொண்டார். காணொளி:<மதுரை அருகே பிரசவ உதவித் தொகையில் முறைகேடு> |
| சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி தூத்துக்குடியில் பொதுவேலைநிறுத்தம் Posted: 10 Jun 2013 09:59 PM PDT சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரி, சேதுசமுத்திரக் கால்வாய் திட்டப் போராட்டக் குழு இன்று தூத்துக்குடியில் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு தி.மு.க.,ம.தி.மு.க,இந்திய கம்யூனிஸ்ட்,விடுதலைச் சிறுத்தைகள்,திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு வியாபார சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. |
| ஈராக்கில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்: 61 பேர் பலி Posted: 10 Jun 2013 09:46 PM PDT ஈராக்கில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 61 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சன்னி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மொசுல் பகுதியில் ஐந்து கார்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் 29 பேர் உயிரிழந்தனர். இதேபோல் தியாலா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேரும், கிர்குக், திக்ரிட் மற்றும் டூஸ் குர்மது ஆகிய இடங்களில் 8 பேரும் பலியாயினர். காயம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த கடுமையான தாக்குதலை தொடர்ந்து மொசுல் நகரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள ராணுவ படைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணொளி:<ஈராக்கில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்: 61 பேர் பலி> |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |