Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


நீலகிரியில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

Posted: 02 Jun 2013 11:16 PM PDT


நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலைப் பணிகள் நிறைவுற்றதால் போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியது. இச்சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் சாலையை பழுது பார்க்கும் பணிகள் நடந்து வந்தன. இதனைத் தொடர்ந்து குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது. பணிகள் நிறைவுற்றதை அடுத்து தற்போது இந்த சாலையில் இருவழிப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையில் எங்கு செல்லலாம்,என்ன செய்யலாம்:ஆரோக்கியத்துக்கு வித்திடும் தரங்கம்பாடி

Posted: 02 Jun 2013 11:15 PM PDT


நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்று தரங்கம்பாடி. காலம் காலமாக சோழ மன்னர்களால் ஆளப்பட்டு, பின்னர் அந்நியர் ஆட்சியின் கீழ் நிர்வகிக்கப்பட்டு இன்றளவும் அந்த நினைவுகளோடு காட்சி தருகிறது அந்த அழகிய கடற்கரை நகரம். நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் தரங்கம்பாடி. என்றாலும் இந்தியாவின் எந்த ஒரு பகுதியைக் காட்டிலும் இங்கு வருவதற்கே டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள்.ஒரு காலத்தில் அவர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக தரங்கம்பாடி இருந்ததே இதற்குக் காரணம். 1620-ஆம் ஆண்டு வணிகம் செய்வதற்காக இங்கு வந்த டச்சுக்காரர்கள், அப்போதைய சோழ மன்னர் ரகுநாத நாயக்கரிடம் அனுமதி பெற்று கட்டியதுதான் இந்த டேனிஷ் கோட்டை. பழமை மாறாமல் இன்றளவும் இந்த கோட்டையைப் பராமரித்து வருகிறது தமிழக அரசின் தொல்லியல் துறை. இது மட்டுமின்றி தரங்கம்பாடிக்குப் பல பெருமைகள் உள்ளன. வணிக மையமாக இருந்த டேனிஷ் கோட்டைக்குள், அருங்காட்சியகம் ஒன்றை நிருவியுள்ளது தமிழக அரசு. இதில், இந்தியா-டென்மார்க் இடையேயான உறவை பறைசாற்றும் அம்சங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இந்த கோட்டைக்கு அருகிலேயே டச்சுக்காரர்களின் ஆட்சிக்கால ஆளுநர் மாளிகையும் உள்ளது. தரங்கம்பாடியின் மற்றொரு சிறப்பு ஓசோன் வாயு. உலகிலேயே ஓசோன் வாயு அதிகம் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இடம் தரங்கம்பாடி. மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் இந்த ஓசோன் காற்றை சுவாசிப்பதற்கென்றே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். நாகை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகத் திகழும் தரங்கம்பாடிக்கு வர பேருந்து வசதிகள் ஏராளம். சுற்றுலா பயணிகள் தங்குவதற்கென்று தமிழக அரசுக்குச் சொந்தமான ஓட்டல் தமிழ்நாடும் இங்கு உள்ளது. இதுமட்டுமின்றி, தனியார் லாட்ஜ்களும் இங்கு உள்ளன. சுற்றுலாவோடு, வரலாற்றுச் சுவடுகளையும் அறிந்துகொள்ள ஏற்ற இடமாக தரங்கம்பாடி உள்ளது.

தேனி மாவட்டத்தில் பல்வேறு நோய் தாக்குதல்களினால் மாங்காய் விவசாயம் கடுமையாக பாதிப்பு

Posted: 02 Jun 2013 11:10 PM PDT


தேனி மாவட்டத்தில் பல்வேறு நோய் தாக்குதல்களினால் மாங்காய் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாங்காய் விலை பெரும் சரிவை சந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம். குறிப்பாக பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மா விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்குத் தரம் வாய்ந்த செந்தூரம், காளைபாடி, மல்கோவா, மனோரஞ்சிதம், பங்கனப்பள்ளி உள்ளிட்ட ருசி மிகுந்த ரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால் மாம்பூக்கள் பூக்கும் தருவாயிலேயே கருகி விடுகின்றன. இதனால் மகசூல் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. மேலும், பிஞ்சு விடும் நேரங்களில் வன விலங்குகள் தொல்லையும் இருப்பதாகக் கூறுகின்றனர் விவசாயிகள். பல்வேறு தடைகளைத் தாண்டி மாங்காய் மகசூலுக்கு தயாராகும் நிலையில், மற்றொரு தலைவலியாக சாரை நோய் மாங்கனிகளை தாக்குகிறது. இதனால் விவசாயிகள் கடும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். மாங்காய் அதிகம் விளையும் பெரியகுளம் பகுதியில், மாம்பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றினை ஏற்படுத்த வேண்டும், அழிந்து வரும் மா விவசாயத்தை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே, மா விவசாயத்தில் தொடர்ந்து ஈடுபட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் கடும் சூறாவளி: வானிலை ஆராய்ச்சியாளர்கள் 3 பேர் பலி

Posted: 02 Jun 2013 10:59 PM PDT


அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் சூறாவளிக் காற்றுக்கு வானிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த 3 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. ஓக்லஹோமா மாகாணத்தின் மேற்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதில் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. தொடர்ந்து வீசிய சூறாவளி காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சூறாவளிக்கு 12 பேர் பலியானர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சூறாவளி ஆராய்ச்சியாளர்கள் டிம் சமரஸ், பால் சமரஸ், கார்ல் யங் ஆகியோர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூறாவளியின் போது, டிம் சமரஸ் எடுத்த புகைப்படங்கள் ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவி புரிந்ததாகவும் அவரின் மரணம் வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கும் பெரும் இழப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இடி, மழையுடன் கூடிய பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சாலைகள் சேதம் அடைந்தன. ஓக்லஹோமா மாகாணத்தில் கடந்த மாதம் முதல் அவ்வப்போது வீசி வரும் சூறாவளிக்கு இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்.

மீன்பிடி தடைக்காலத்துக்கு பின்னர் இன்று கடலுக்கு சென்ற குமரி மீனவர்கள்

Posted: 02 Jun 2013 10:56 PM PDT


மீன்பிடி தடைக்காலத்துக்கு பின்னர், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீனவர்களுக்காக மீன்பிடி தடைக்காலம் கடந்த 29-ஆம் தேதியே முடிந்துவிட்ட நிலையில், குமரி மாவட்ட மீனவர்கள் கடலோர தேவாலயங்களில் மாதா பிராத்தனை தினம் கொண்டாடி வந்தனர். இந்த தினம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 300 விசைப்படகுகள், 1000 எந்திரப்படகுகள் மற்றும் கட்டுமரங்களிலும் மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்கு சென்றனர். குமரியைச் சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் பேர் கடலுக்கு சென்றுள்ளனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதன் முறையாக கடலுக்கு செல்வதால் தங்களுக்கு அதிகளவில் மீன் கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி: ஹில் கிளாடிஸ் அணி சாம்பியன்

Posted: 02 Jun 2013 10:44 PM PDT


நீலகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் ஹில் கிளாடிஸ் அணி கோப்பையை வென்றது. கடந்த 3 நாட்களாக குன்னூரில் நடைபெற்று வந்த தொடரின் இறுதியாட்டம் நேற்று நடைபெற்து. இதில் ஹில் கிளாடியஸ் அணியும், யுனைடெட் அணியும் மோதின. இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் இருந்தன. பின்னர் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க டைபிரேக்கர் முறை பின்பற்றப்பட்டது. இதில் 9-8 என்ற கோல் கணக்கில் ஹில் கிளாடிஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

துருக்கியில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: கண்ணீர் புகைக் குண்டு வீச்சு

Posted: 02 Jun 2013 10:41 PM PDT


துருக்கியில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இஸ்தான்புல் நகரில் உள்ள பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களைக் கலைத்தனர். அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள மக்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவங்களைக் கண்டித்து, துருக்கியின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்தான்புல் நகரில் உள்ள தக்சிம் பூங்காவை அகற்றி விட்டு, அதில் வணிக வளாகங்களை அமைக்க அரசு முடிவு செய்தது. அதற்காக பூங்காவில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வந்தன. அரசின் இந்த முடிவைக் கண்டித்து, இஸ்தான்புல் நகரில் தொடங்கிய போராட்டம், தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது.

திருவாரூரில் மனுநீதிச்சோழன் மணி மண்டபம் அமைக்க உள்ள இடம் ஆய்வு

Posted: 02 Jun 2013 10:22 PM PDT


திருவாரூரில் மனுநீதிச்சோழன் மணி மண்டபம் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்தை அமைச்சர்கள் குழு இன்று ஆய்வு செய்தது. மனுநீதிச்சோழன் நினைவு மணி மண்டபம் திருவாரூரில் கட்டப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்திருந்தார். அதனையடுத்து மணிமண்டபம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. மனுநீதிச்சோழன் கல்தேர் அமைவிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை அமைச்சர்கள் குழு ஆய்வு செய்தனர். பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகிய மூன்றுபேர் இந்த ஆய்வுக்குழுவில் பங்கேற்றிருந்தனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை:மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 02 Jun 2013 10:00 PM PDT


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.நேற்று 222 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 1,600 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 18.75 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 3.75 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 600 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பருவமழை பொய்த்ததாலும், கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விடாததாலும், கடந்த 3 மாதங்களாக மேட்டூர் அணைக்கு 100 கன அடிக்கும் குறைவான தண்ணீரே வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், பண்ணவாடி, கொளத்தூர், பாலாறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதனால், அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

மாநில அளவிலான கால்பந்து போட்டி:சேலம் அணி சாம்பியன்

Posted: 02 Jun 2013 09:31 PM PDT


அரியலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் சேலம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.குணா கால்பந்து கழகத்தின் சார்பில் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. சேலம், விழுப்புரம், திருச்சி, அரியலூர் உள்பட 10 அணிகள் இதில் பங்கேற்றன. இறுதியாட்டத்திற்கு சேலம், அரியலூர் மாவட்ட அணிகள் தகுதி பெற்றன. நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் சேலம் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™