Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேறு வழியின்றி சங்மாவை ஆதரிக்கும் பாஜக!

Posted: 20 Jun 2012 10:30 PM PDT


குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை எதிர்த்து அதிமுக, பிஜூ ஜனதா தளம் முன்னிறுத்தியுள்ள மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்க பாஜக முடிவு செய்ய இருக்கிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டையில் இடம்பெற்றுள்ள சிவசேனா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும் என்று கூறிவருகிறது. இரு கட்சிகளையும் பாஜக் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சமாதானப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. இதேபோல் திரிணாமுல் காங்கிரஸின் ஆதரவையும் பாஜக கோரி வருகிறது.
சங்மாவை பாஜக ஆர்வத்துடன் ஆதரிக்கவில்லை. அப்துல் கலாம் போட்டியிலிருந்து விலகியதால் வேறு வழியின்றியே அவரை ஆதரிக்கிறது. மேலும் சங்மாவை ஆதரித்தால் ஜெயலலிதா மற்றும் நவீன் பட்நாயக்கின் ஆதரவை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுவிட முடியும் என்ற நப்பாசை காரணமாகவும் சங்மாவை பாஜக ஆதரிக்கிறது.
சங்மா வெற்றி பெறாவிட்டாலும் கூட பழைய கூட்டணிக் கட்சிகளான அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளத்தை மீண்டும் தங்கள் அணியில் இடம்பெறச் செய்வதற்கான வாய்ப்பாக பாஜக குடியரசுத் தலைவர் தேர்தலை கருதுவது குறிப்பிடத்தக்கது.
நேற்று சங்மாவை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியும் சந்தித்து அவருக்கு பாஜக ஆதரவு கிடைக்கும் என்று தகவல் தெரிவித்தார். மேலும் அத்வானியில் இல்லத்தில் அவரை பாஜக தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், ஜஸ்வந்த் சிங், சுதீந்திர குல்கர்னி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து குல்கர்னி மட்டும் தனியாக சென்று சங்மாவை சந்தித்தார். அப்போது பாஜகவின் ஆதரவை அவர் உறுதி செய்ததாகக் தெரிகிறது.



ஐரோப்பிய கால்பந்து: அரை இறுதிக்கு போர்ச்சுக்கல் தகுதி பெறுமா?- செக்குடியரசுடன் இன்று மோதல்

Posted: 20 Jun 2012 10:29 PM PDT


14-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி போலந்து, உக்ரைனில் நடைபெற்று வருகிறது. கடந்த 8-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் லீக் ஆட்டம் நேற்று முன் தினத்துடன் முடிந்தது. லீக் முடிவில் செக்குடியரசு, கிரீஸ், ஜெர்மனி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.
 
போட்டியை நடத்திய போலந்து, உக்ரைன் மற்றும் நெதர்லாந்து, சுவீடன், அயர்லாந்து, ரஷியா, டென்மார்க், குரோஷியா ஆகிய நாடுகள் வெளியேற்றப்பட்டன. கால்இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
 
இந்திய நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு 12.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த செக்குடியரசு- பி பிரிவில் 2-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன.
 
இரு அணிகளுமே தலை சிறந்தவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். செக்குடியரசு அணி லீக் ஆட்டங்களில் கிரீசை 2-1 என்ற கோல் கணக்கிலும், போலந்தை 1-0 என்ற கோல்கணக்கிலும் வென்றது. ரஷியாவிடம் 1-4 என்ற கணக்கில் தோற்றது.
 
போர்ச்சுக்கல் அணி டென்மார்க் (3-2), நெதர் லாந்து (2-1) அணிகளை வென்று இருந்தது. ஜெர்மனியிடம் 0-1 என்ற கணக்கில் தோற்றது.
 
போர்ச்சுக்கல் அணியில் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணியின் கேப்டனும் ரியல் மாட்ரீட் வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தூணாக உள்ளார். நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 2 கோல்கள் அடித்து விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
 
இதேபோல செக்குடியரசு அணி வீரர் தாமஸ் ரோஸ்கியும் சிறந்த வீரர் ஆவார். அரை இறுதியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும். இரு அணிகளும் 11 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் போர்ச்சுக்கலும், செக்குடியரசும் தலா 4 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் டிராவில் முடிந்தது.


டெல்லியில் இந்திய தலைவர்களைச் சந்திக்கும் இரா.சம்பந்தன்

Posted: 20 Jun 2012 10:27 PM PDT


டெல்லியில் இந்திய அரசியல் தலைவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ரகசிய ஆலோசனை நடத்த உள்ளாக கூறப்படுகின்றது.
இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற இங்கு வந்துள்ளார். அவர் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் அடைந்த பிறகு டெல்லியில் உள்ள இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரையை அடுத்து, அவரைக் கைது செய்யுமாறு சிங்களப் பேரினவாதக் கட்சிகள் குரல் எழுப்பி வந்தன. இந்த நிலையில் தான் அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தார்.அவர் சென்னையில் இருந்து கொழும்பு திரும்புவதற்கு முன்பு டெல்லியில் இந்திய அரசியல் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார்.
அப்போது இலங்கையில் தமிழர்களின் நிலை, அவர்களின் வாழ்வாதாரம், மனித உரிமை, தமிழர்களின் தற்போதைய தேவைகள், தற்போதைய சூழல் போன்றவற்றை அவர் விளக்கி கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அவர் சந்திக்கவிருக்கும் அரசியல் தலைவர்கள் குறித்த தகவல்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.



சிரஞ்சீவிக்கு பிடிவாரண்ட் ஓசூர் கோர்ட் உத்தரவு

Posted: 20 Jun 2012 10:25 PM PDT


தமிழக சட்டசபைக்கு கடந்த ஆண்டு (2011) ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதியில்  காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. கோபிநாத் போட்டியிட்டார். அவரை ஆதரித்து நடிகர் சிரஞ்சீவி ஓசூர் மற்றும் அருகில் உள்ள பாகலூர், பேரிகை பகுதியில் பிரசாரம் செய்தார். 

அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கோபிநாத் எம்.எல்.ஏ., நடிகர் சிரஞ்சீவி உள்பட மொத்தம் 6 பேர் மீது பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். 

தேர்தல் விதிமுறையை மீறியதாக தொடரப்பட்ட இந்த வழக்கு ஓசூர் ஜெ.எம்.1 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை என கோபிநாத் எம்.எல்.ஏ., நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  கோபிநாத் எம்.எல்.ஏ.வும், நடிகர் சிரஞ்சீவியும் ஆஜராகவில்லை. இதையடுத்து பிடிவாரண்ட் உத்தரவை நீட்டித்து வழக்கு விசாரணை 2.8.2012-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதற்குள் நடிகர் சிரஞ்சீவி, கோபிநாத் எம்.எல்.ஏ. ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது.




முலாயம்சிங் பாஜகவின் ஏஜெண்ட்: காங். செய்தித் தொடர்பாளர் பேச்சால் சமாஜ்வாதி செம கடுப்பு

Posted: 20 Jun 2012 10:24 PM PDT


குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது அதிருப்தி அடைந்து பின்னர் சமாதானமாகியிருக்கும் சமாஜ்வாதி கட்சியை கடுப்பேற்றியிருக்கிறார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் அல்வி. சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், பாரதிய ஜனதாவின் ஏஜெண்ட் ஒரு அதிரடியாக விமர்சித்திருப்பதுதான் இந்த கடுப்புக்குக் காரணம்.

உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ரஷீத் அல்வி, இன்று நேற்று அல்ல.. 10 ஆண்டுகளாக கூறிவருகிறேன்.. முலாயம்சிங் ஒரு பாஜக ஏஜெண்ட்தான். பாஜக போடும் டியூனுக்கு ஏற்ப இந்த நாட்டிலேயே ஆடக்கூடிய ஒரே ஒருவர் யாராக இருப்பார் எனில் அது முலாயம்சிங் யாதவாகத்தான் இருக்க முடியும் என்றார்.
இதனால் கடுமையான அதிருப்தியில் இருக்கிறது சமாஜ்வாதி கட்சி. ரஷீத் அல்வி பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் சகித் சித்திக், இத்தகைய கருத்துகளை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா உள்ளிட்ட மூத்த தலைவர்களின் அனுமதியுடன் தான் ரஷீத் அல்வி பேசியிருக்க வேண்டும். அப்படி அவர்கள் அனுமதி கொடுத்திருந்தால் ஒவ்வொரு பிரச்சனையிலும் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவை எதிர்பார்க்கக் கூடாது. எங்களது ஆதரவு தேவையில்லை என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டுப் போகலாம் என்றார்.



கைதாவதை தவிர்க்க ஈக்வேடார் தூதரகத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர்அசாங்கே தஞ்சம்

Posted: 20 Jun 2012 10:22 PM PDT

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே, அவரது நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவர் மீதான குற்றச்சாட்டை விசாரித்தபின் ஜூலியன் அசாங்கேவை கைது செய்ய ஸ்வீடன் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அசாங்கே, பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். 

இதற்கிடையே, தங்களிடம் ஒப்படைக்குமாறு ஸ்வீடன் நாடு கோரியது. ஸ்வீடனின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அசாங்கே, லண்டன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அசாங்கேயை சுவீடனிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அசாங்கே, மேல் முறையீடு செய்தார். ஆனால் இவரது மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. 

இதையடுத்து, அசாங்கேயை கைது செய்து, சுவீடனிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து தப்பிக்க லண்டனில் உள்ள ஈக்வேடார் நாட்டு தூதரகத்தில் அசாங்கே தஞ்சம் புகுந்துள்ளார். தூதரகத்தை விட்டு வெளியேறினால் அவர் கைது செய்யப்படுவார் என்ற நிலை உள்ளது. 

இந்நிலையில், அசாங்கேக்கு தூதரக அளவில் உதவிட தயாராக இருப்பதாக, ஆஸ்திரேலியா பிரதமர் ஜூலியா கிளார்ட் தெரிவித்துள்ளார்.





சங்மாவை ஆதரிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை: ஜெயலலிதா

Posted: 20 Jun 2012 10:18 PM PDT


குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்கும் முடிவில் மாற்றம் ஏதும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கொடநாடு செல்லும் முன்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, சங்மாவை ஆதரிக்கும் தங்களது முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் இருந்து அப்துல்கலாம் விலகிவிட்டதால் அவரைப் பற்றி விவரிக்கத் தேவையில்லை சங்மாவை தமது கட்சி முன்னிறுத்திய போதே பல கட்சிகளும் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்தன. மற்ற கட்சிகளும் சங்மாவை ஆதரித்தால் மகிழ்ச்சிதான் என்றார்.
மேலும் சங்மாவை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜியும் ஆதரிக்கக் கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பி.ஏ.சங்மாவை அதிமுகவும், பிஜூ ஜனதா தளமும் முன்னிறுத்தியுள்ளன. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பி.ஏ.சங்மாவை ஆதரிக்கக் கூடிய நிலை உருவாகி உள்ளதால் குடியரசுத் தலைவர் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.



ஜனாதிபதி தேர்தலில் சங்மாவுக்கு பா.ஜனதா கூட்டணி ஆதரவு?: இன்று இறுதி முடிவு

Posted: 20 Jun 2012 10:16 PM PDT

புதிய ஜனாதிபதிக்கான தேர்தல், அடுத்த மாதம் (ஜுலை) 19-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள், வருகிற 30-ந் தேதியாகும். எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ, ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை பலம் இல்லாததால், ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. 

கூட்டணி கட்சிகளுடன் நடைபெற்ற நீண்ட ஆலோசனைக்குப்பின், மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக, மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். பிரணாப் முகர்ஜியின் பெயர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி மற்ற கட்சிகளும் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. 

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை அறிவிப்பதில் காங்கிரஸ் காலதாமதம் செய்து வருவதாக குற்றம் சாட்டிவந்த பா.ஜனதாதான் தற்போது தனது வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திணறி வருகிறது. அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா போன்ற கட்சிகள் பிரணாப் முகர்ஜிக்கு பகிரங்க ஆதரவை தெரிவித்து வருவது பா.ஜனதாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த விவகாரத்தில், கூட்டணியில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் சார்பில், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா ஜனாதிபதி பதவிக்கு முன்னிறுத்தப்பட்டு இருக்கிறார். 

இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நிறுத்த முயன்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை ஆதரிக்க பா.ஜனதா முன்வந்தது. ஆனால், கூட்டணியில் அதற்கு ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை. இந்த நிலையில், அப்துல் கலாம் போட்டியிட மறுத்துவிட்டதால் பா.ஜனதா கட்சி எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத குழப்பத்தில் உள்ளது. 

அதே நேரத்தில் பி.ஏ.சங்மா, காங்கிரஸ் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசில் இருந்து நேற்று விலகி விட்டார். இதனால், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சங்மாவை ஆதரிக்கும் முடிவுக்கு பா.ஜனதா வந்தது. அதுபற்றி முடிவு செய்வதற்காக, பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நேற்று மாலை, அத்வானி வீட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களும், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமியும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற முக்கிய கட்சிகளான ஐக்கிய ஜனதாதளம், சிரோன்மணி அகாலிதளம் மற்றும் சிவசேனா போன்ற கட்சி தலைவர்கள் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதனால், இன்று மீண்டும் பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கிறார்கள்.





துப்பட்டாவால் 'பிரபுதேவாவை' மறைக்கும் நயன்தாரா

Posted: 20 Jun 2012 10:13 PM PDT



நயன்தாரா தன் கையில் உள்ள பிரபுதேவாவின் பெயரை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டிருக்கிறார்.
நயன்தாராவும், பிரபுதோவாவும் உருகி, உருகி காதலித்தனர். கடைசியில் பார்த்தால் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து சென்றுவிட்டனர். காதலித்த காலத்தில் பிரபுதேவாவின் பெயரை நயன்தாரா தனது இடது கையில் பச்சை குத்தினார். காதல் முறிந்த பிறகும் அவர் அந்த பச்சையை இன்னும் அழிக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது கையில் உள்ள பச்சையை அழிக்க வெளிநாடு சென்றார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று நயன் தெரிவித்தார்.
இந்நிலையில் அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் நயன் கலந்து கொண்டார். அவர் கையில் உள்ள பிரபு தேவாவின் பெயரை எப்படியாவது போட்டோ எடுத்துவிட வேண்டும் என்று புகைப்படக்காரர்கள் முயன்றார்கள். அவர் முக்கால் கை உள்ள சுடிதார் அணிந்து துப்பட்டாவால் தன் கையில் உள்ள பச்சையை மறைத்துச் சென்றார்.
புகைப்படக்காரர்கள் முட்டி மோதி ஒரு வழியாக அந்த பச்சையை போட்டோ எடுத்துவிட்டனர். பிரபுதேவா என்னவென்றால் நயன் முடிந்து போன விஷயம் என்கிறார். ஆனால் நயன்தாராவோ பிரபுதேவாவின் பெயரை இன்னும் அழிக்காமல் வைத்துள்ளார்.



திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யுடன் பிரணாப் தொலைப்பேசி உரையாடல்

Posted: 20 Jun 2012 09:00 PM PDT



புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டுள்ளார். இதற்காக அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மற்றொரு வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நிறுத்த திரிணாமூல் காங்கிரஸ் ஆர்வம் காட்டும் நிலையில், தான் போட்டியிட விரும்பவில்லை என கலாம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான கபீர் சுமனிடம் பிரணாப் முகர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. இந்த உரையாடலுக்கு பிறகு பிரணாபுக்கு ஆதரவாக கபீர் செயல்படுவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, திரிணமுல் காங்கிரஸ் கட்சியை உடைக்க, பிரணாப் முயற்சித்து வருவதாக, அக்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்றொரு எம்.பி.யான டெரிக் ஓப்ரேன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
பிரணாப் முகர்ஜி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யை நேரடியாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது அரசியல் நெறிமுறை இல்லை. கட்சியை உடைக்க நினைத்தால் அதற்காக அவ்வளவு முயற்சி செய்தாலும் அது அவரால் முடியாது. மேலும் தேர்தலுக்காக ஆதரவு திரட்டும் அவர் எமது கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.




ஈரோட்டிலும் ஒரு தீண்டாமை சுவர்?

Posted: 20 Jun 2012 09:31 AM PDT


ஈரோடு மாவடத்தில் உள்ள நகப்பாளையத்தில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள நகப்பாளையம் என்னும் கிராமத்தில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளது. 100 அடி நீளமும், 4 அடி உயரமும் கொண்ட இந்த சுவரின் மீது கண்ணாடிகள் பதிக்கப்படு யாரும் இதைத் தாண்டி செல்ல முடியாதவாறு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுவருக்கு இந்த பக்கம் உள்ளவர்கள் அந்தப் பக்கம் 10 அடி தூரத்தில் உள்ள கோயிலுக்கும், பள்ளிக்கூடத்திற்கும் செல்ல கிலோ மீட்டர் நடக்க வேண்டியுள்ளது. இந்த தீண்டாமை சுவரை உடனே அகற்றாவிட்டால் வரும் ஜூலை 2ம் தேதி நாங்களே இடிப்போம் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று கூட சாதிக்காரர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறை அங்கு வந்து கூட்டம் கூடக் கூடாது என்று கூறி அவர்களை கலைந்து போகச் செய்தது. இந்த பிரச்சனைக்கு சாதிக்காரர்களுடன் பேசி ஒரு முடிவு எடுக்கப்படும் என்று தாசில்தாரும், வருவாய்த்துறையினரும் தெரிவித்துள்ளனர். ஆனால் வாக்குறுதி கொடுத்து 2 மாதமாகியும் எதுவும் நடக்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ளது சாதிச் சுவரே இல்லை என்றும் அந்த சுவர் அங்கே 20 ஆண்டுகளாக இருப்பதாகவும் சாதிக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுவர் இடிந்ததால் அதை திரும்பக் கட்டியதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.



விவேக் எப்படி ஜான்பாண்டியனை கிண்டலடிக்கலாம்: தியேட்டரை சூறையாடிய கும்பல்

Posted: 20 Jun 2012 08:59 AM PDT


தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாணடியன் பற்றிய தரக்குறைவான விமர்சனம் தொடர்பாக நெல்லையில் உள்ள ஒரு தியேட்டரை ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் சூறையாடினர். இது தொடர்பாக போலீசார் 6 பேரை தேடி வருகின்றனர்.
சுந்தர் சி. நடித்த முரட்டு காளை நெல்லை டவுனில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தில் காமெடி நடிகரான விவேக் ஜான் என்னும் நபரை கிண்டல் செய்யும் வசனம் இடம் பெற்றுள்ளது. அதில் கூறப்படும் வார்த்தைகள் நெல்லை ஜான் பாண்டியனை கிண்டல் செய்யப்படுவதாக காணப்படுகிறது. இதை கண்டித்து சமுதாய தலைவரின் ஆதரவாளர்கள் 2 நாட்களுக்கு முன்பு தியேட்டருக்கு சென்று சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் தியேட்டரில் சர்சைக்குரிய வசனங்கள் நீக்கப்படவில்லை.
இதனால் கோபம் அடைந்த ஆதரவாளர்கள் நேற்று இரவு 9.30 மணிக்கு தியேட்டருக்கு சென்று ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் தியேட்டரின் ஷோகேஸ் கண்ணாடி மற்றும் கேன்டீன் கண்ணாடிகள் ஆகியவற்றை உடைத்தனர். இது குறித்து தியேட்டர் மேலாளர் சுப்பிரமணியன் நெல்லை பாலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ், சப்-இன்ஸ்பெக்டர் ரேனியஸ், ஜேசுபாதம் ஆகியோர் இது குறித்து விசாரித்து அடையாளம் தெரியாத 6 பேரை தேடி வருகின்றனர்.



பஸ்சில் ஒரு பஞ்சாயத்து... சிபிஎம் எம்.எல்.ஏவுக்கு சீட் கொடுக்காத கண்டக்டர்!!

Posted: 20 Jun 2012 08:56 AM PDT


மதுரையிலிருந்து தேனி சென்ற அரசு பஸ்சில் பயணித்த பெரியகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. லாசர் உட்காருவதற்கு சீட் கொடுக்காத கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திராவிடக் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள்தான் சொகுசாக பறக்கும் கார்கள், மிதக்கும் வாகனங்களில் பயணிப்பார்கள். ஏன், நேற்று பிறந்த தேமுதிகவைச் சேர்ந்த சாதாரண வார்டு பிரதிநிதி கூட ஸ்கார்பியோவில்தான் ஒய்யாரமாக ஊர்வலம் வருகிறார். ஆனால் இந்த கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்களே, ரொம்ப வித்தியாசமானவர்கள். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சாதாரணமாக அரசு பஸ்களில்தான் போவார்கள், வருவார்கள்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பெரியகுளம் எம்.எல்.ஏ லாசர். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். மதுரைக்குப் போயிருந்த லாசர், தேனி செல்வதற்காக பஸ் ஏற வந்தார். மதுரை அரசரடி காளவாசல் பஸ் ஸ்டாப்பில் மக்களோடு மக்களாக காத்திருந்தார். அப்போது பஸ் வந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகளோடு நெருக்கியடித்தபடி நின்றபடி பயணித்தார் லாசர்.
கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்டபோது, தான் ஒரு எம்.எல்.ஏ என்றும், எம்.எல்.ஏவுக்குரிய பஸ் பாஸில் பயணிப்பதாகவும் கூறியுள்ளார். அப்படியா என்று கேட்டு விட்டு போய் விட்டார் கண்டக்டர்.பஸ் முழுக்க கூட்டம் கட்டி ஏறியபடி இருந்தது. கண்டக்டர் தனக்குரிய சீட்டில் பயணித்து வந்தார். இதைப் பார்த்த லாசர், தனது செல்போன் மூலம், தேனி கிளை அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளருக்கு போனைப் போட்டு தகவல் அளித்தார்.
தான் பஸ்சில் நின்று கொண்டு பயணிப்பதாக அவர் கூறினார். இதையடுத்து கிளே மேலாளர் சுப்பிரமணியம், மதுரை கிளைக்குப் போனைப் போட்டு அங்குள்ள மேலாளரிடம் தகவலைத் தெரிவித்தார். இதையடுத்து நான்கு டிக்கெட் பரிசோதகர்களை உசிலம்பட்டிக்கு அனுப்பி பஸ்சை நிறுத்தி எம்.எல்.ஏவுக்கு சீட் கொடுக்க ஏற்பாடு செய்யுமாறு பணித்தார் மதுரை கிளை மேலாளர்.
ஆனால் எந்த பஸ் என்று தெரியாமல் நான்கு செக்கர்களும் பஸ்சை விட்டு விட்டனர். இந்த நிலையில் தொட்டப்பநாயக்கனூரை பஸ் சென்றடைந்தது. அப்போது எம்.எல்.ஏவைத் தொடர்பு கொண்ட தேனி மேலாளர், சார் உட்கார்ந்து விட்டீர்களா என்று கேட்டுள்ளார். இல்லை என்று எம்.எல்.ஏ. பதிலளிக்க, உடனே அப்படியே போனை கண்டக்டரிடம் கொடுங்கள் என்று கூறியுள்ளார் மேலாளர். கண்டக்டரை கண்டித்த அவர் மக்கள் பிரதிநிதி ஒருவர் அரசு பஸ்சில் வரும்போது சீட் ஏற்பாடு செய்து தர வேண்டாமா என்று கடிந்து கொண்டார்.
இதையடுத்து கண்டக்டர் எம்.எல்ஏவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தான் உட்கார்ந்திருந்த சீட்டைக் கொடுத்தார். அதன் பிறகு உட்கார்ந்தபடி தேனிக்குப் போய்ச் சேர்ந்தார் லாசர்.
தற்போது அந்த கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். அவருக்கு பஸ்சில் பணி வழங்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார்களாம்.
இந்த சர்ச்சை குறித்து எம்.எல்.ஏ. கூறுகையில், கண்டக்டர் குறித்து நான் புகார் தெரிவிக்கவில்லை. அது எனது நோக்கமும் அல்ல. நான் எம்.எல்.ஏ. என்று கூறியும் அதை கண்டு கொள்ளாமல் அவர் அலட்சியம் காட்டியதால் வருத்தப்பட்டு அதைக் கிளை மேலாளரிடம் தெரிவித்தேன். கண்டக்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் கூறினேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது என்றார்.
சர்ச்சையில் சிக்கிய கண்டக்டரின் பெயர் ஸ்டீபன். இவர் கூறுகையில், பஸ்சில் ஏற்கனவே 75 பேர் பயணித்து வந்தனர். எம்.எல்.ஏ முன்பக்கமாக ஏறினார். நான் பின்பக்கத்தில் உள்ள சீட்டில் உட்கார்ந்திருந்தேன். நான் உட்கார்ந்திருந்த சீட்டில் ஏற்கனவே 6 பேர் உட்கார்ந்திருந்தனர். அவர்களோடு நெருக்கயடித்தபடிதான் நானும் அமர்ந்திருந்தேன்.
செக்கானுரணியில் முன்பக்கமாக சில பயணிகள் இறங்கியதால் எம்.எல்.ஏ எப்படியாவது சீட்டைப் பிடித்து அமர்ந்திருப்பார் என்று கருதி விட்டு விட்டேன். மற்றபடி எம்.எல்.ஏவை அவமதிக்கும் வகையில் நான் நடந்து கொள்ளவில்லை என்றார்.
எம்.எல்.ஏக்கள் பஸ்சில் வருவதே பெரிய விஷயம், உலக மகா அதிசயம். கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் மட்டும்தான் அரசு பஸ்களை நாடி ஓடி வந்து போய் வருகிறார்கள். அவர்களுக்கு உட்கார இடம் கொடுத்திருக்கலாம்..!
அதேபோல...
அதேபோல, அரசுப் பேருந்துகளில் டவுன்பஸ் உள்பட, முன்பக்கத்தில், ஏறும் படிக்கட்டுக்கு வலது புறம் உள்ள முதல் இருக்கை மாற்றுத் திறனாளிகளுக்கும் இரண்டாவது இருக்கை எம்எல்ஏ, எம்பி என மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் சுற்றறிக்கையே விடப்பட்டுள்ளது. அமரர் எம்ஜிஆர் காலத்திலிருந்து அந்த முறை கடைப்பிடிக்கப்பட்டும் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை இப்போ தூக்கிட்டாங்களோ, என்னவோ!!



பில்லா இல்லாத சந்தோஷத்தில் 450 அரங்குகளில் களமிறங்கும் சகுனி!!

Posted: 20 Jun 2012 05:21 AM PDT



அஜீத் குமார் நடித்த பில்லா 2 படம் வெளியாகாத சூழலில், தன்னந்தனியாக உற்சாகத்துடன் நாளை மறுநாள் களமிறங்குகிறது கார்த்தி நடித்த சகுனி.

இந்தப் படம் நேரடியாக தெலுங்கிலும் அதே பெயரில் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இது கார்த்திக்கு முதல் தெலுங்குப் படமாகும்.

சகுனி படம் ஜூன் 22 என அறிவிக்கப்பட்டதும், 21-ம் தேதியே பில்லா 2 வெளியாகும் என்று கூறப்பட்டது. தியேட்டர்கள் முன்பதிவுக்கான வேலைகளை ஆரம்பித்த நிலையில், திடீரென்று சென்சார் பிரச்சினையில் சிக்கிக் கொண்டது பில்லா 2. பட வெளியீடு இந்த மாத இறுதியிலா... அடுத்த மாதமா என்று தெரியாத நிலை.

இது சகுனிக்கு ரொம்ப சாதகமாக அமைந்துள்ளது. தமிழில் சோலோ ரிலீசாகக் களமிறங்கும் இந்தப் படத்துக்கு இதுவரை 450 திரையரங்குகள் ஒப்பந்தமாகியுள்ளன. இதற்கு முன் கார்த்தி என்ன... சூர்யாவின் படமே தமிழகத்தில் இத்தனை அரங்குகளில் வெளியாகியிருக்குமா என்பது சந்தேகம்!

தியேட்டர்காரர்கள் பெரிய தொகையை மினிமம் கேரண்டியாகத் தந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் ஒரு காம்ப்ளெக்ஸ் மட்டுமே ரூ 30 லட்சத்தை இந்தப் படத்துக்குக் கொடுத்துள்ளதென்றால் சகுனி விற்பனையைப் பார்த்துக் கொள்ளுங்கள்!

விநியோகஸ்தர்கள் பாண்டவர்களாகாமல் இருந்தால் சரி!




விபத்தில் நடிகர் பாண்டியராஜன் மகன் படுகாயம்

Posted: 20 Jun 2012 05:11 AM PDT


நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரேம் ராஜன் (19). இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் படித்து வருகிறார். இவரது நண்பர் பாரத் (18). இருவரும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டனர்.

மத்திய கைலாஷ் பகுதியில் சென்றபோது முன் பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விழுந்தது.

இதில் பிரேம்ராஜன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாரத்தின் கால் உடைந்து போனது. இருவரும் பெருங்குடி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பிரேம்ராஜன் தலையில் 18 தையல் போடப்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்



பி.ஏ.சங்மா தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா!

Posted: 20 Jun 2012 04:31 AM PDT


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மா தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அதை கட்சியின் தலைவர் சரத் பவார் உடனடியாக ஏற்றுக் கொண்டுவிட்டார்.

காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். ஆனால், இந்தக் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான பி.ஏ.சங்மா தானும் போட்டியிடப் போவதாகக் கூறி வருகிறார்.

இதையடுத்து அவரை போட்டியிலிருந்து விலகுமாறும் இல்லாவிட்டால் கட்சியை விட்டு நீக்குவோம் என்றும் பவார் எச்சரித்திருந்தார்.

ஆனாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒடிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆதரவோடு களத்தில் குதித்த சங்மா, இப்போது தன்னை பாஜக கூட்டணியும் ஆதரிக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டுள்ளார்.

அப்துல் கலாம் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டதையடுத்து சங்மாவுக்கு அந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

ஆனால், தினமும் கூடி டீ, பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் கூட்டத்தை கலைத்து வருகிறது பாஜக கூட்டணி. இதுவரை ஒரு டஜன் மீட்டுங்குகள் நடந்து முடிந்தாலும் உருப்படியான முடிவை எடுக்க முடியாத அளவுக்கு பாஜகவிலும் பாஜக கூட்டணியிலும் குழப்பங்கள் நீடிக்கின்றன.

இதையடுத்து பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கூட்டணியின் முக்கியக் கட்சியான சிவசேனா, பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக கூறிவிட்டது. கர்நாடகத்தில் சிபிஐ வழக்குகளை எதிர்நோக்கி வரும் எதியூரப்பா, கட்சி இன்னும் முடிவெ எடுக்காத நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக சொல்லிவிட்டார்.

இந் நிலையில் சரத் பவாரால் கட்சியை விட்டு நீக்கப்படும் அபாயத்தில் இருந்த சங்மா, இன்று கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துவிட்டார். அதை படித்துக் கூட பார்த்தாரோ இல்லையோ உடனடியாக ஏற்றுக் கொண்டுவிட்டார் சரத் பவார்.

இதன்மூலம் சங்மா எப்போது இடத்தை காலி செய்வாரோ என்ற ஆதங்கத்தில் பவார் இருந்தது தெளிவாகிறது.

முன்னதாக சங்மா ராஜினாமா செய்யப் போவதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தான் நிருபர்களிடம் தெரிவித்தார்.



'100 முள்ளிவாய்க்கால்கள்': இலங்கை அமைச்சரின் பேச்சுக்கு கருணாநிதி கண்டனம்-பிரதமருக்கு கடிதம்

Posted: 20 Jun 2012 04:23 AM PDT


ஒரு முள்ளிவாய்க்கால் சம்பவமே போதும், நூறு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்கள் நடைபெற யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பிறகு வட இலங்கையில் தமிழர் நிலங்கள் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தங்கள் பூர்வீக வீடுகள், நிலங்களை இழந்த தமிழ் மக்கள், இப்போது அறவழிப் போரில் மீண்டும் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கடந்த மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரிய நிலம் என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, "சம்பந்தனின் பேச்சு மீண்டும் சிங்களவர்களை சண்டைக்கு இழுப்பதாக உள்ளது. அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு பேசுவது தொடர்ந்தால் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்," என்று சம்பிக ரணவக்க பேசியுள்ளார்.

அதற்கேற்ப யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பழையில் நேற்று காலை நடந்த நிலமீட்புப் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதலும் நடத்தியுள்ளது.

அமைச்சரின் பேச்சு, இலங்கையில் எத்தகைய சூழலில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. மேலும் சிங்கள இனவாதத்தின் உச்சமாகவும் கருதப்படுகிறது. அவரது இந்த பேச்சுக்கு தமிழ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

''நூறு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்கள் நடைபெற வைப்பதற்கு யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளது எங்களது கவனத்துக்கு வந்துள்ளது.

அவரின் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் அமைந்துள்ளது.

எனவே இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் கொண்டு சென்று இதுபோன்று பேசுவதைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்.

மேலும் தமிழர்கள் விஷயத்தில் இலங்கை எத்தகைய கடுமையான நிலையை எடுத்துள்ளது என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பார்வைக்கும் கொண்டு செல்ல வேண்டும். தமிழர் வாழ்வுரிமை காப்பாற்றப்பட வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

சம்பிக்க ரணவக்க இலங்கை மின்துறை அமைச்சராக உள்ளார்.

திருமாவளவன் ஆவேசம்:

இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கடந்த மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரிய நிலம் என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும் எனப் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,

சம்பந்தனின் பேச்சு மீண்டும் சிங்களவர்களை சண்டைக்கு இழுப்பதாக உள்ளது. அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு பேசுவது தொடர்ந்தால் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்று சம்பிக ரணவக்க பேசியுள்ளார்.

அவரின் இந்த பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.



கியூபா தலைவர் பிடெல்காஸ்ட்ரோவை சந்திக்கும் ராஜபக்சே முயற்சி தோல்வி

Posted: 20 Jun 2012 04:02 AM PDT


இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கியூபாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார். அங்குஅவர் வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். கியூபாவின் தற்போதைய அதிபர் ரவுல்காஸ்ட்ரோ, துணை அதிபர் மகினோ முரிலோஜோர்ஸ் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் ஹவானா சென்ற அவர் புரட்சியாளர் சேகுவேராவின் இல்லத்துக்கு சென்றார். அவரது மனைவி அலெடியா, மகன் கமிலோ மற்றும் மகளை சந்தித்தார். 

மேலும் கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ட்ரோவை சந்திக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. தோல்வி அடைந்தது. பிடெல் காஸ்ட்ரோ உலகின் மதிப்புக்குரிய தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தற்போது ஓய்வில் உள்ள அவர் கியூபாவில் இப்போதும் செல்வாக்குமிக்க தலைவராக இருந்து வருகிறார்.













நித்தியானந்தாவின் குரலையும், ரத்தத்தையும் 'டெஸ்ட்' செய்ய உத்தரவு!

Posted: 20 Jun 2012 03:58 AM PDT


நித்தியானந்தா மீதான பாலியல் வழக்கில் அவருக்கு ரத்தம் மற்றும் குரல் பரிசோதனை நடத்த கர்நாடக மாநிலம் ராமநகரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா இருப்பது போன்ற சிடி விவகாரத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனைக்கு ஆஜராகுமாறு ஏற்கனேவ 6 முறை கர்நாடக சிஐடி போலீஸ் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இருப்பினும் நித்தியானந்தா வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சிஐடி போலீஸார் ராமநகரம் கோர்ட்டை நாடினர்.

இதையடுத்து நித்தியானந்தா இந்த பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருப்பது போன்ற சிடியை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது. இந்த சிடியை லெனின் கருப்பன் என்கிற நித்தியானந்தாவின் முன்னாள் சீடர்தான் தயாரித்து வெளியிட்டார். இந்த சிடி விவகாரம் தொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில்தான் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™