Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


பில்லா-2 தாமதம்! காரணம் கார்த்தியா? கொதிக்கும் தல ரசிகர்கள்

Posted: 21 Jun 2012 09:23 PM PDT


இன்று 22.06.2012 அன்று கார்த்தி நடிக்கும் சகுனி திரைப்படம் உலகெங்கும் வெளியாகிறது. உலகம் முழுக்க 1050 திரையரங்களில் சகுனி வெளியாகிறது. ரஜினி நடித்த எந்திரன் உலகெங்கும் 2050 திரையரங்குகளில் வெளியானது. எந்திரன் படத்திற்கு பிறகு கார்த்தி நடிக்கும் சகுனி தான் அதிக அளவு திரையரங்களில் வெளியாகிறது என்று திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



அஜித் நடிக்கும் பில்லா-2 படமும் இதே தேதியில் வெளியாக இருந்தது. அஜித்தின் பில்லா-2 படமும் கார்த்தி நடிக்கும் சகுனி படமும் மோதிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களுக்காக பில்லா-2 படத்தின் ரிலீஸ் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தள்ளிவைக்கப்பட்டது.  

சகுனி படத்துக்கு கிடைத்த வரவேற்பால் தான் பில்லா-2 படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது என்று பேச்சு வந்தது. பில்லா-2 படத்தின் தாமதத்திற்கு கார்த்தியின் சகுனி தான் காரணமா? என்று பேச்சு வந்ததால், கொதிப்பில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். தல-க்கு போட்டி கார்த்தியா? என்ன பாஸ், ஒன்னும் காமெடி கீமிடி பண்ணலையே! என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

சரி, உண்மையான பிரச்சனை என்ன என்று இயக்குனர் விசாரித்தோம். இதை மறுத்த பில்லா2 படத்தின் இயக்குனர் சக்ரி, சென்சார் விஷயத்தில் சில பிரச்சனைகள் வந்தது. அதனால் ஏற்பட்ட தாமதம் தானே தவிர, வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்றார்.

மேலும் அவர் 'பில்லா-2' படத்துக்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. அனால் படத்திற்கு 'யூ/ஏ' சான்றிதழ் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டோம். இதனால் படத்தை மும்பையில் உள்ள மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பினோம் என்றார்.

படத்தில் வன்முறை மற்றும் கவர்ச்சி காட்சிகள் அதிகம் இருந்த்தால் தணிக்கை குழுவினர் அவற்றை வெட்டி எறிய முயற்சித்தனர். ஆனால் இயக்குனர் சம்மதிக்கவில்லை. இதனால் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர்



மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கருணை இல்ல நிர்வாகியின் மகன் ஜெயிலில் அடைப்பு

Posted: 21 Jun 2012 09:07 PM PDT


சென்னை அருகே உள்ள அரக்கோணத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் ஞானசேகரன். கிறிஸ்தவ மத போதகரான இவர் நாமக்கல் அருகே உள்ள வசந்தபுரம் போலீஸ் காலனியில் வாடகை வீட்டில் ஜாய் கருணை இல்லம் என்ற பெயரில் அனாதை குழந்தைகளை பராமரிக்கும் இல்லத்தை நடத்தி வருகிறார்.
 
இந்த இல்லத்தில் 18 மாணவிகளும், 6 மாணவர்களும் தங்கி படித்து வருகிறார்கள். இவர்கள் நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். ஜார்ஜ் ஞானசேகரனின்  மகன்  ஜானி (28). இவர் அங்குள்ள மற்றொரு வீட்டில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
 
இந்த இல்லத்தை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் நாமக்கல்லில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாக பள்ளிக்கு வேனில் சென்று வரும் இவர் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் பஸ்நிலையத்தில் அழுது கொண்டு இருந்தார்.
 
இதுகுறித்து தகவல் தெரியவந்ததும் அனைத்து  மகளிர் போலீசார் விரைந்து சென்று அந்த மாணவியை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், சக மாணவிகளுடன் கருணை இல்லத்தில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்ததாகவும், அப்போது இரவு 10 மணியளவில் அங்கு வந்த நிர்வாகியின் மகன் ஜானி தன்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்றதாகவும், பின்னர் அங்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
 
மேலும் அடிக்கடி இது போல் தொல்லை கொடுப்பதால் அங்கு தங்கி படிக்க விருப்பம் இல்லாமல் வெளியே வந்து விட்டதாக கூறினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் லலிதா வழக்குப்பதிவு செய்து ஜானியை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.




ஜனாதிபதி தேர்தல்: தந்தையை தொடர்ந்து அகதா சங்மாவும் தேசியவாத காங்கிரசிலிருந்து விலகுகிறார்

Posted: 21 Jun 2012 09:00 PM PDT


ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகருமான பி.ஏ.சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டார்.
 
எனவே சங்மா தேர்தலில் போட்டியிட தேசியவாத காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. சங்மா வாபஸ் பெறாவிட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் அறிவித்தது. எனவே சங்மா தேசியவாத காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியியை நேற்று ராஜினாமா செய்தார்.
 
சங்மாவின் மகள் அகதா சங்மா மத்திய அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அகதா அமைச்சர் பதவியை விரைவில் ராஜினாமா செய்து விட்டு தந்தைக்கு ஆதரவு தெரிவிப்பார் என இன்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை நடந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் அகதா கலந்து கொள்ளவில்லை. 'தவிர்க்க இயலாத காரணங்களால் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை' என கட்சி தலைவர் சரத்பவாருக்கு சங்மா தகவல் தெரிவித்துள்ளார்.
 
எனவே அகதா, தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளதாக தெரிகிறது. அகதா விரைவில், தனது தந்தைக்கு ஆதரவு திரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது 29 வயதாகும் அகதா, கடந்த பாராளுமன்ற தேர்தலில் மேகாலயா மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர்தான் இந்தியாவின் மிக இள வயது எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.




ஐரோப்பிய கால்பந்து: அரை இறுதிக்கு போர்ச்சுக்கல் தகுதி

Posted: 21 Jun 2012 08:58 PM PDT


14-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி போலந்து, உக்ரைனில் நடைபெற்று வருகிறது. கடந்த 8-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் லீக் ஆட்டம் நேற்று முன் தினத்துடன் முடிந்தது. 

லீக் முடிவில் செக்குடியரசு, கிரீஸ், ஜெர்மனி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. போட்டியை நடத்திய போலந்து, உக்ரைன் மற்றும் நெதர்லாந்து, சுவீடன், அயர்லாந்து, ரஷியா, டென்மார்க், குரோஷியா ஆகிய நாடுகள் வெளியேற்றப்பட்டன. 

கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கியது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த செக்குடியரசு- பி பிரிவில் 2-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் அணிகள் மோதியது. 

முதல் பாதி ஆட்ட முடிவி்ல் இரண்டு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. அடுத்த பாதி ஆட்டத்தி்ல் போர்ச்சுக்கல் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான ரொனால்டோ ஒரு கோல் அடித்தார், 

அதன்பின் ஆட்டம் இறுதி வரை போர்ச்சுக்கல் வசமே இருந்தது, செக்குடியரசு அணியால் கோல் அடிக்க முடியவில்லை. அதனால் போர்ச்சுக்கல் 1-0 கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது
.




பிரணாப் முகர்ஜி புதிய ஜனாதிபதி? 6 1/4 லட்சம் ஓட்டுகளுடன் வெற்றி வாய்ப்பு

Posted: 21 Jun 2012 08:53 PM PDT

ஜூலை 19ந் தேதி நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான நடைமுறை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவர், வருகிற 28ந்தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதனால் அந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டு உள்ளது. 

ஆனால், பிரணாப் முகர்ஜிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவதில் உறுதியாக இருந்த பா.ஜனதா, ஏற்கனவே களத்தில் இருக்கும் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்க முடிவு எடுத்து உள்ளது. இந்த தகவலை பா.ஜனதா கட்சி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் ஒடிசா முதல்மந்திரி நவீன்பட்நாயக் ஆகியோர் சங்மாவை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். தற்போது பா.ஜனதாவும் அவரை ஆதரிப்பதன் மூலம், ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கும் சங்மாவுக்கும் நேரடி போட்டி நடைபெறுவது உறுதியாகிவிட்டது. 

காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. 

இந்த கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிக்கும் முயலாம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் போன்ற முக்கிய கட்சிகள் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளித்துள்ளன. 

அதே நேரத்தில், பா.ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, அதில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளும் பிரணாப்பை ஆதரிக்க முன் வந்துள்ளன. அத்துடன்4 இடதுசாரி கட்சிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பார்வர்டுபிளாக் ஆகிய இரு கட்சிகளும் பிரணாப்புக்கு தங்கள் ஆதரவை நேற்று அதிகாரபூர்வமாக தெரிவித்து உள்ளன. 

மற்ற இரு கட்சிகளாக இந்திய கம்யூனிஸ்டு மற்றும் புரட்சிகர சோசலிஸ்டு கட்சி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து இருக்கின்றன. 

ஜனாதிபதி தேர்தலில், பாராளுமன்றத்தின் இரு சபை உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட மாநில சட்டசபை உறுப்பினர்கள் மொத்தம் 4896 பேர்(எம்.பி.க்கள்&776; எம்.எல். ஏ.க்கள் 4120) ஓட்டு போட தகுதி பெற்றவர்கள். அவர்களுடைய மொத்த ஓட்டு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

எம்.பி.க்களுக்கு சமமான ஓட்டு மதிப்பும், எம்.எல்.ஏ.க்களுக்கு அவர்களுடைய மாநில மக்கள் தொகைக்கு ஏற்பவும் ஓட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, அனைத்து வாக்காளர்களும் ஓட்டு போட்டால் பதிவாகும் மொத்த ஓட்டுகளின் மதிப்பு, 10.98 லட்சம் ஆகும். 

இதில் 50 சதவீதத்திற்கு மேல், அதாவது 5 லட்சத்து 49 ஆயிரத்து 442 ஓட்டுகள் பெறுபவர், புதிய ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், தற்போதைய கட்சி நிலவரப்படி, ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

அவர் வெற்றி பெறுவதற்கு 5 லட்சத்து 49 ஆயிரத்து 442 ஓட்டுகள் போதும். ஆனால், பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக 6 லட்சத்து 29 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா ஆதரவு இல்லாததால், பா.ஜனதா கூட்டணியின் ஓட்டு மதிப்பு 3 லட்சத்து 10 ஆயிரமாக குறைந்துவிட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆதரிக்க முன்வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இதனால், திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு யாருக்கு என்பதை மம்தா இன்னும் அறிவிக்கவில்லை.

ஒரு வேளை அவர் சங்மாவை ஆதரிக்க முன்வந்தாலும், பா.ஜனதா கூட்டணியின் ஓட்டு மதிப்பு 3 லட்சத்து 56 ஆயிரமாக மட்டுமே உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு இல்லாததால், காங்கிரஸ் கூட்டணியின் ஓட்டு மதிப்பு 4 லட்சத்து 12 ஆயிரமாக குறைந்துவிட்டது. என்றாலும், சமாஜ்வாடி (66688 ஓட்டுகள்), பகுஜன் சமாஜ் (45473), ஐக்கிய ஜனதா தளம் (40737), சிவசேனா (18495), மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் (6138), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் கட்சிகளும் (41000) ஆதரவு அளிக்க முன்வந்து இருப்பதால், பிரணாப் முகர்ஜியின் ஆதரவு ஓட்டுகள் 6 லட்சத்து 29 ஆயிரமாக அதிகரித்து உள்ளன. 

அதே நேரத்தில், அ.தி.மு.க. (36,920 ஓட்டுகள்), பிஜு ஜனதா தளத்தின் (30125) ஓட்டுகளை சேர்த்தால் சங்மாவின் ஆதரவு ஓட்டுகள் 3 லட்சத்து 10 ஆயிரம் ஓட்டுகள்தான். ஒருவேளை திரிணாமுல் காங்கிரசும் அவரை ஆதரித்தால், இந்த ஆதரவு எண்ணிக்கை 3 லட்சத்து 56 ஆயிரமாக மட்டுமே உயரும். 

எனவே, ஏறத்தாழ 6 லட்சத்து 29 ஆயிரம் ஓட்டுகள் பெற்று, புதிய ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவதற்கு, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.





ஹலோ ரங்கசாமி, எனக்கே ஓட்டு போடுங்க.. பிரணாப் கோரிக்கை!

Posted: 21 Jun 2012 10:28 AM PDT


புதுச்சேரி முதல்வரும், அகில இந்திய என்ஆர் காங்கிரஸின் தலைவருமான ரங்கசாமியை பிரணாப் முகர்ஜி தொலைபேசியில்தொடர்பு கொண்டு தனக்கே வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ரங்கசாமியும் தனது ஆதரவைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி ஒவ்வொரு கட்சித் தலைவராக தொடர்பு கொண்டு பேசி ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் நேற்று மாலை ரங்கசாமியுடன் பேசியுள்ளார். அப்போது தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதை ரங்கசாமி ஏற்றுக் கொண்டாராம்.
புதுச்சேரி சட்டசபையில் ரங்கசாமி கட்சிக்கு மொத்தம் உள்ள 30 எம்.எல்.ஏக்களில் 15 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என் ஓட்டும் உங்களுக்கு ... பிரணாப்புக்கு கெளடா ஆதரவு
இதேபோல பிரணாப் முகர்ஜிக்கு மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளத் தலைவர் தேவகெளடா ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரணாபின் பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தன்னை தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டதாக தேவகெளடா தெரிவித்தார்.



சரியான நேரத்தில் சரியான முடிவை மம்தா எடுப்பார்: திரிணாமூல் காங்கிரஸ்

Posted: 21 Jun 2012 10:22 AM PDT

ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார் என அக்கட்சி கூறியுள்ளது. 'ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் திரிணாமூல் கட்சி இறுதி முடிவை இதுவரை எடுக்கவில்லை. இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வரும் மம்தா, சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார்' என அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், எம்.பி.யுமான குணால் கோஷ் கூறியுள்ளார். 

'சங்மாவுக்கு திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவளிக்குமா அல்லது உங்களால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அப்துல்கலாம் தேர்தலில் போட்டியிடாததால் உங்கள் கட்சி தேர்தலை புறக்கணிக்குமா?' என பத்திரிகையாளர்கள் குணாலிடம் கேட்டனர். 

இக்கேள்விக்கு பதிலளித்த குணால், 'திரிணாமூல் காங்கிரசின் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், இவ்விவகாரத்தில் முடிவெடுக்கும் உரிமையை கட்சித் தலைவரான மம்தாவுக்கு அளித்துள்ளனர்' எனக் கூறினார். 

இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு எதிராகப் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பதாக பாரதீய ஜனதா இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே பிரணாப்புக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்ட திரிணாமூல் காங்கிரஸ், சங்மாவை ஆதரிக்குமா அல்லது தேர்தலை புறக்கணிக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.





நித்தியானந்தா மட்டும் 'ஒண்டி'யாக கொடைக்கானல் பயணம்!

Posted: 21 Jun 2012 10:18 AM PDT


மதுரை ஆதீனத்தை தவிர்த்து விட்டு நித்தியானந்தா மட்டும் கொடைக்கானலுக்குப் போயுள்ளாராம். அங்கு முக்கிய ஆலோசனைகளை அவர் நடத்தப் போயிருப்பதாக கூறப்படுகிறது.
பெங்களூர் ஆசிரமத்திற்குள் போக முடியாத நிலை ஏற்பட்டு விட்டதால் நித்தியானந்தாவும், அவரது பரிவாரங்களும் அங்கிருந்து இடம் பெயர்ந்து ஆங்காங்கு செட்டிலாகியுள்ளனர். நித்தியானந்தா, மதுரை, திருவண்ணாமலை என கேம்ப் அடித்துக் கொண்டிருக்கிறார்.
தன் மீது கர்நாடக அரசு போட்டு வைத்துள்ள வழக்குகளை சந்தித்து வெளிவருவது தொடர்பான தீவிர ஆலோசனைகளில் தற்போது அவர் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது திடீரென கொடைக்கானலுக்கு அவர் கிளம்பிப் போயுள்ளார். ஏன் அவர் கொடைக்கானலுக்குப் போயுள்ளார் என்பது தெரியவில்லை. ஆனால் சில முக்கியஸ்தர்களைப் பார்க்க அவர் போயுள்ளதாக கூறப்படுகிறது. வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தவும் இந்தப் பயணம் என்றும் கூறுகிறார்கள்.
இந்த பயணத்தின்போது மதுரை ஆதீனத்தை அவர் அழைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். ஆதீனத்திற்கு வீசிங் தொல்லை இருப்பதால் அவரை கூட்டிக் கொண்டு போகவில்லையா என்று தெரியவில்லை.



இடதுசாரிகளுக்கிடையே கருத்து வேறுபாடு: பிரணாப்புக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு- இ.கம்யூ. புறக்கணிப்பு

Posted: 21 Jun 2012 10:15 AM PDT

ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் நிலை குறித்து முடிவெடுப்பதற்காக அக்கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, ராமச்சந்திரன் பிள்ளை, ஏ.பி.பரதன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதா, வேண்டாமா என்பதுதான் இக்கூட்டத்தில் இடம்பெற்ற முக்கிய விவாதமாக இருந்தது. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய தலைவர்கள் ஏற்கனவே பிரகாஷ் காரத், பரதன் ஆகியோரிடம் பிரணாப்புக்கு ஆதரவு கோரியிருந்தனர். எனவே பிரணாப்பை ஆதரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது. அதிலும் மேற்குவங்க மாநிலத்தின் மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள் பிரணாப்பை ஆதரிப்பதில் பிடிவாதமாக இருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் பிரணாப்பை ஆதரிக்க எதிர்ப்பு தெரிவித்தன. எனவே இக்கூட்டத்தில் இடதுசாரி கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இறுதியில் இடதுசாரி கட்சிகள் தனித்தனியாக தங்கள் முடிவுகளை வெளியிட்டன. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

பிரணாப்புக்கோ, சங்மாவுக்கோ ஆதரவளிக்க தங்களுக்கு விருப்பமில்லை என இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா கூறினார். அதே போல் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியும் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. ஆனால் மற்றொரு முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. 

மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளிக்க மறுத்து, அப்துல்கலாமை வேட்பாளராக அறிவித்தார். ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் தேர்தலில் போட்டியிட அப்துல்கலாம் மறுத்துவிட்டார். 

இந்நிலையில் மேற்குவங்கத்தில் மம்தாவுக்கு எதிர்கட்சியாக விளங்கிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மம்தாவை எதிர்ப்பதற்காகவே தற்போது பிரணாப்பை ஆதரித்துள்ளதாக தெரிகிறது. மற்றொரு இடதுசாரி கட்சியான பார்வார்டு பிளாக் கட்சியும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. 

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பதாக பாரதீய ஜனதா இன்று அறிவித்தது. இந்நிலையில் இடதுசாரி கட்சிகளும் சங்மாவை ஆதரித்தால் ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்புக்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தேர்தலில் சுமார் 51,000 வாக்குகளை கையில் வைத்துள்ள, இடதுசாரி கட்சிகளின் தற்போதைய முடிவால் பிரணாப் முகர்ஜியின் வெற்றி உறுதியாகி விட்டது.





மதவாதிகளின் வேட்பாளர் பி.ஏ.சங்மா: தேசியவாத காங்கிரஸ் விமர்சனம்

Posted: 21 Jun 2012 10:09 AM PDT


பாரதிய ஜனதாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் பி.ஏ.சங்மா தற்போது மதவாத சக்திகளின் வேட்பாளர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்மா தம்மை பழங்குடியின மக்களின் பிரதிநிதித்துவ வேட்பாளராக அறிவித்துக் கொண்டார். அவருக்கு அதிமுக, பிஜூ ஜனதா தளம் ஆகியவை ஆதரவு தெரிவித்திருந்தன. இருப்பினும் அவர் சார்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி அவரை வேட்பாளராக ஏற்க மறுத்ததுடன் அவரை போட்டியிலிருந்து விலகி பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்கவும் கேட்டுக் கொண்டது. இல்லையெனில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் சங்மா திடீரென தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்தே விலகிவிட்டார். அவரது விலகலை அக்கட்சித் தலைசர் சரத்பவாரு ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் பாரதிய ஜனத கட்சி, சங்மாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஏற்று ஆதரவு தெர்வித்தது.
இது தொடர்பாக தேசியவாத காங்கிரசின் செய்தி தொடர்பாளர் திரிபாதி கூறியதாவது:
பாரதிய ஜனதா கட்சியினர் குடியரசுத் தலைவர் வேட்பாளரைக் கூட ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்துதான் இறக்குமதி செய்துள்ளனர். அந்தக் கட்சியின் வலிமை என்ன என்பதையே இது காட்டுகிறது. சங்மா இப்போது மதவாத சக்திகளின் வேட்பாளராகி விட்டார். இத்தேர்தலில் பிரணாப் முகர்ஜி மாபெரும் வெற்றிபெறுவார் என நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்



லண்டன் ஒலிம்பிக்கிலிருந்து விலக லியாண்டர் பயஸ் முடிவு

Posted: 21 Jun 2012 09:54 AM PDT


லண்டன் ஒலிம்பிக்கின் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் இந்திய அணியில் ,ஆண்கள் பிரிவில் லியாண்டர் பயசுடன், மகேஷ் பூபதி இணைந்து விளையாடுவார் என அகில இந்திய டென்னிஸ் சங்கம் கடந்த வாரம் அறிவித்தது.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பயசுடன் இணைந்து விளையாட முடியாது என மகேஷ் பூபதி கூறினார். இரட்டையர் போட்டிகளில் பல வருடங்களாக வெற்றிகரமான ஜோடியாக விளங்கிவந்த பயசும், பூபதியும் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சில வருடங்களுக்கு முன்னர் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

பூபதி ஆட மறுத்ததால் மற்றொரு பிரபல இந்திய வீரரான ரோகன் போபண்ணா, பயசுடன் இணைந்து விளையாடுவார் என டென்னிஸ் சங்கம் பின்னர் அறிவித்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக பயசுடன் இணைந்து விளையாட முடியாது என போபண்ணாவும் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த டென்னிஸ் சங்கம், விஷ்ணுவர்தன் என்ற வீரர் பயசுடன் இணைந்து விளையாடுவார் என அறிவித்தது.

இந்நிலையில் விஷ்ணுவர்தனுடன் இணைந்து விளையாட முடியாது என பயஸ் நேற்று அறிவித்தார். இதுகுறித்து இந்திய டென்னிஸ் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், 'பூபதி, போபண்ணா ஆகிய இருவர் தவிர யாருடனும் இணைந்து ஆடப் போவதில்லை. தரவரிசையில் எனக்கு நிகராக இல்லாத விஷ்ணுவுடன் இணைந்து ஆட முடியாது. விஷ்ணுவுடன் ஆடுமாறு என்னை நிர்பந்தித்தால் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலக நான் தயார்' என பயஸ் கூறியிருந்தார்.

இதனையடுத்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட இந்திய டென்னிஸ் சங்கம் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் இரண்டு டென்னிஸ் அணிகள் விளையாடும் என இன்று மீண்டும் அறிவித்தது. அதன்படி, 'பயஸ்-விஷ்ணு ஒரு ஜோடியாகவும், பூபதி- போபண்ணா மற்றொரு ஜோடியாகவும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் விளையாடுவார்கள். கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவுடன், பயஸ் இணைந்து ஆடுவார்' எனக் கூறப்பட்டிருந்தது.

டென்னிஸ் சங்கத்தின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்த பயஸ், ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து தான் விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். இத்தகவலை தெரிவித்துள்ள டென்னிஸ் சங்க தலைவர் அனில் கண்ணா, ஆண்கள் இரட்டையர் போட்டிகளிலிருந்து மட்டும் பயஸ் விலகுகிறாரா அல்லது சானியாவுடன் ஆட வேண்டிய கலப்பு இரட்டையர் போட்டிகளிலிருந்தும் விலகுகிறாரா என்பதை தெளிவுபடுத்தவில்லை.

பூபதி மற்றும் போபண்ணாவின் முடிவால் ஏற்கனவே அதிர்ச்சியடைந்த இந்திய ஒலிம்பிக் சங்கம், லியாண்டர் பயசின் இந்த திடீர் அறிவிப்பால் தற்போது மேலும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதோடு, வேறு நல்ல முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கும்  தள்ளப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் அடிக்கடி முடிவை மாற்றிக்கொள்ளும் இந்திய டென்னிஸ் சங்கத்திற்கு, இந்திய ஒலிம்பிக் கழக தலைவர் மல்கோத்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 'வீரர்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப சங்கம் வளைந்து கொடுக்கக் கூடாது. சங்கத்தால் எடுக்கப்படும் முடிவு விளையாட்டை மேம்படுத்தும் விதமாக அமைய வேண்டும் எனவும் மல்கோத்ரா கூறியுள்ளார்.



துப்பே கிடைக்காத ராமஜெயம் கொலை வழக்கு- சிபிசிஐடிக்கு மாற்றம்

Posted: 21 Jun 2012 09:51 AM PDT


முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கே.என். ராமஜெயம் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். எதற்காக ராமெஜயம் கொலை செய்யப்பட்டார்? யார் கொலை செய்தது? என்பது போன்ற விவரங்கள் எதுவுமே மாதங்கள் உருண்டோடிவிட்டன.
கடந்தவாரம் கூட இலங்கையின் முக்கிய புள்ளி ஒருவருக்குத் தொடர்பிருக்கிறது..கொலையாளிகளை நெருங்கிவிட்டதாகவும் கூறப்பட்டது. போலீசாருக்கே தெரியாமல் தனிப்படை அமைக்கப்பட்டு ரகசியமாகவே விசாரணை நடத்தப்பட்டது என்றெல்லாம் கூறப்பட்டது.
இன்னொருபுறத்தில் இந்த கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
இனிமேலாவது ராமஜெயம் கொலை வழக்கில் ஏதேனும் முன்னேற்றம் கிடைக்குமா? என எதிர்பார்க்கலாம்.



படம் இயக்குகிறார் விவேக்

Posted: 21 Jun 2012 04:46 AM PDT


விரைவில் படம் இயக்க உள்ளதாக விவேக் சொன்னார். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 'முரட்டுக்காளை'யில் திருநங்கை வேடத்தில் நடித்தேன். என் காமெடிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது கன்னடத்தில் உருவாகும் 'மாரீச்சன்' படத்தில், வில்லனாக நடிக்கிறேன். இது தமிழில் 'வழிப்போக்கன்' என்ற பெயரில் உருவாகிறது. சைக்கோ த்ரில்லர் கதை என்பதால், என் வேடம் பேசப்படும். ஹரி இயக்கும் 'சிங்கம் 2', வி.சேகர் இயக்கத்தில் அவர் மகன் காரல் மார்க்ஸ் அறிமுகமாகும் 'சரவணப் பொய்கை', 'மச்சான்' படங்களில் வித்தியாசமான வேடங்களில் வருகிறேன். 'கிரீன் கலாம்' திட்டம் மூலம் 1 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து, 13 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். வறண்ட கிராமங்களின் நிலை, மரக்கன்று நட்ட அனுபவங்கள் ஆகியவற்றை தொகுத்து கதை எழுதியுள்ளேன். தயாரிப்பாளர் கிடைத்ததும் அந்தப்படத்தை நானே எழுதி, இயக்குவேன். தற்போது காமெடியில் கவனம் செலுத்துகிறேன்.



தூம் 3ல் ரஜினியை நடிக்க வைக்க விரும்பும் ஆமீர் கான்?

Posted: 21 Jun 2012 04:30 AM PDT


பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தான் நடிக்கவிருக்கும் தூம் 3 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்க விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆமீர் கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப் உள்ளிட்டோரை வைத்து எடுக்கும் படம் தூம் 3. இந்த படத்தில் ஆமீர் கான் வில்லனாக நடிக்கவிருக்கிறார். இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இது குறித்து ஏதாவது செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் ஆமீர் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்க விரும்புகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து பாலிவுட் வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,
ரஜினி சாருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட்டில் இருக்கும் யாராலும் அதில் அவரை அடித்துக்கொள்ள முடியாது. அவர் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளார். அவர் ஸ்டைல், நடிப்பைப் பார்த்து விட்டு தான் ஆமீர் அவருடன் பணிபுரிய விரும்புகிறார் என்பது புரிகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா ராய், ஷாருக் கான் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் ரஜினி சாருடன் நடித்துள்ளனர். அவருடன் நடிக்க பாலிவுட்டில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களும் விரும்புகிறார்கள் என்றார்.
தூம் 3 படத்தில் நடிக்க இந்தி கஜினிக்கு, நம்ம ரஜினி ஓ.கே. சொல்வாரா?



ஷங்கரின் புதிய மெகா பட்ஜெட் படம் 'ஐ' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Posted: 21 Jun 2012 03:18 AM PDT


தனது அடுத்த படத்துக்கு வித்தியாசமாக 'ஐ' எனப் பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
இந்தப் படத்தில் ஷங்கருடன் இணைபவர் விக்ரம். நாட்டின் தலையாய பிரச்சினையான தேர்தல் முறைகேடுகள் பின்னணியில் இந்தப் படம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.
படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழில் 'ஐ' என்றால் ஐவர் என்று ஒரு பொருள் உண்டு. ஆங்கிலத்தில் 'நான்' என்று சொல்லலாம்.
படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்துக்காக அவர் மணிரத்னம் படத்தை துறந்ததோடு, மொத்தமாக கால்ஷீட்டை கொடுத்துள்ளாராம்.
விரைவில் படத்தின் பிற விவரங்களை ஷங்கர் வெளியிடவிருக்கிறார்.



சில்க் ஸ்மிதா வாழ்க்கை பாடல்

Posted: 21 Jun 2012 03:14 AM PDT


ஸ்கிராட்சர்ஸ் கிளப் சார்பில் விக்ரம் தயாரிக்கும் படம், 'கலியுகம்'. வினோத், அஜய், பிரபா, சங்கர், நீத்தி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். அருண், தாஜ்நூர், சித்தார்த் இசை.  இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. பின்னர் நிருபர்களிடம் இயக்குனர் யுவராஜ் அழகப்பன் கூறியதாவது: வன்முறையை கையிலெடுத்தால் இந்த சமூகம் தன்னை திரும்பிப் பார்க்கும் என்று இன்றைய இளைஞன் நினைக்கிறான். அதை, அவனை விட வலுவானவன் எப்படி பயன்படுத்திக் கொள்கிறான் என்பதை சொல்லும் படம். படத்தில் மதுபானக் கடை பாடல் வருகிறது. அதில் ஒருவர், தன் காலத்தில் வாழ்ந்த சில்க் ஸ்மிதாவை நினைத்து பாடுவதாக பாடல் அமைகிறது. அவரது அழகை வர்ணித்து, அவர் காலத்து இளைஞர்கள் எப்படி பார்த்தார்கள் என்பதையும் அவரது சோக முடிவையும் சொல்லும் பாடல். இதற்காக பாடலின் இடையே அவரது அபூர்வமான புகைப்படங்களை பயன்படுத்தி உள்ளோம். சில்க்கை கண்ணியப்படுத்தும் பாடலாக இருக்கும். படம் அடுத்த மாதம் வெளிவருகிறது. இவ்வாறு கூறினார். விழாவில் இயக்குனர்கள் ராஜேஷ், சசி, சுசீந்திரன், கவிஞர் அறிவுமதி, மனுஷ்யபுத்திரன், மோகன்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள நயன்தாரா மறுத்த ரூ 2 கோடி!

Posted: 21 Jun 2012 03:12 AM PDT


பிரபு தேவாவைத் திருமணம் செய்து கொள்வதற்காக புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமலிருந்த நயன்தாரா, கடைசியாக ஸ்ரீராமராஜ்யம் படத்தில் சீதாவாக நடித்தார்.
அந்த வேடம் அவருக்கு புதிய அந்தஸ்தைக் கொடுத்தது என்று கூட சொல்லலாம்.
எதிர்ப்பார்த்தபடி பிரபு தேவாவுடன் நயன்தாராவின் திருமணம் நடக்காமல் போனது. இருவரும் இப்போது பிரிந்து நின்று ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.
காதல் முறிந்துவிட்டதால், மீண்டும் முழுவீச்சில் நடிக்க வந்துவிட்டார் நயன்தாரா. தமிழில் 3 படங்களும், தெலுங்கில் 4 படங்களும் அவர் கையில் உள்ளன. இப்போதும் அவர்தான் நம்பர் ஒன்.
இந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு தி டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்தத. சில்க் ஸ்மிதா வேடம். கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் என்று சொல்லி, சம்பளமாக ரூ 2 கோடியை ஒரே செக்காக தந்தார்களாம், படத்தின் தயாரிப்பாளர்கள்.
ஆனால் நயன்தாரா அந்த வேடத்தில் நடிக்க முடியாது என ஒரேயடியாகச் சொல்லிவிட்டாராம்.
காரணம்?
சீதாவாக நடித்து நல்ல இமேஜைப் பெற்றுள்ள தன்னால், ஐட்டம் நடிகை பாத்திரத்தில் நடித்து அந்த இமேஜக் கெடுத்துக் கொள்ள முடியாது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன், என செக்கை திருப்பிக் கொடுத்துவிட்டாராம் நயன்.



ஜனாதிபதி தேர்தலில் சங்மாவுக்கு ஆதரவு: பா.ஜனதா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted: 21 Jun 2012 03:03 AM PDT


ஜனாதிபதி தேர்தல் வருகிற ஜூலை மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இதற்காக கடந்த 16-ந்தேதி தொடங்கிய மனுதாக்கல் வருகிற 30-ந்தேதியுடன் முடிவடைகிறது.
 
ஆளும் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கும் தனி மெஜாரிட்டி இல்லாததால் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் வேட்பாளர் தேர்வில் தேக்கநிலை ஏற்பட்டது.
 
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே முன்னாள் சபாநாயகரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பி.ஏ.சங்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிப்பதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.அவருக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கும் ஆதரவு தெரிவித்தார்.
 
சங்மாவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆதரவு திரட்டினார். இது தொடர்பாக பாரதீய ஜனதா தலைவர் அத்வானி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசினார். காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி அறிவிக்கப்பட்டார்.
 
ஆனால் காங்கிரசில் உள்ள முக்கிய கூட்டணி கட்சி தலைவரான மம்தா பானர்ஜி பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க மறுத்து அப்துல்கலாமை வேட்பாளராக அறிவித்தார்.
 
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் அப்துல்கலாமா? சங்மாவா? என்ற நிலையில் பாரதீய ஜனதா கூட்டணியின் ஆதரவு யாருக்கு என்று முடிவு எடுக்க முடியாமல் திணறியது.
 
கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் அப்துல்கலாம் வேட்பாளராக நிற்க மறுத்து விட்டார். இதனால் சங்மாதான் எதிர்க்கட்சி வேட்பாளர் என்ற முடிவு ஏற்பட்டது. அவரை பாரதீய ஜனதா ஆதரிப்பதாக இன்று அதி காரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது. பாரதீய ஜனதா தலை வர்கள் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோர் டெல்லியில் இன்று கூட்டாக இந்த முடிவை அறிவித்தனர்.
 
இது தொடர்பாக சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:-
 
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் பாரதீய ஜனதா ஆலோசனை நடத்தியது. இதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
 
கூட்டணி தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்துல்கலாம் போட்டியிட மறுத்துவிட்ட நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், சிவசேனாவும் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப்முகர்ஜியை ஆதரிக்கும் நிலையை எடுத்தன.
 
பிரணாப் முகர்ஜியை ஆதரிக்குமாறு காங்கிரஸ் எங்களிடம் கேட்டது. ஆனால் வேட்பாளரை தேர்வு செய்யும்போது எங்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை. தன்னிச்சையாக வேட்பாளரை தேர்வு செய்து விட்டு எங்களிடம் கேட்டால் எப்படி ஆதரவு கொடுக்க முடியும்.
 
பாரதீய ஜனதா முக்கிய எதிர்க்கட்சியாக விளங்குகிறது. எங்களுடன் காங்கிரஸ் ஆலோசிக்காமல் மீறிச் செயல்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜி நாட்டுக்கு என்ன செய்தார் என்று ஆலோசனை நடத்தினோம். குறிப்பிட்டு சொல்லும்படி அவர் எதுவும் செய்யவில்லை.
 
எனவே பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு இல்லை என்ற முடிவை பாரதீய ஜனதா எடுத்துள்ளது. இப்போதைய நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக தேர்தலில் போட்டி இருக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கருதுகிறது.
இதனால் சங்மாவை ஆதரிப்பது என்று முடிவு எடுத்துள்ளோம்.
 
சங்மாவுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜியையும் சேர்க்க முயற்சி செய்வோம். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்யும்போது தேவையில்லாமல் பிரதமர் வேட்பாளர் பிரச்சினையை நிதிஷ்குமார் கிளப்பியது துரதிர்ஷ்டவசமானது.
 
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டாலும் மற்ற பிரச்சினையில் எங்களிடையே பிளவு இல்லை. எனவே கூட்டணி கட்சிகளை தொடர்ந்து அனுசரித்து செல்வோம்.
 
இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.
 
அருண்ஜெட்லி கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதாவும் பங்குகொள்ள வேண்டும் என்பதற்காக சங்மாவை ஆதரிக்கிறோம். இதன்மூலம் ஜனநாயகத்தையும், ஒருமைப்பாட்டையும் காத்து வருகிறோம். தொடர்ந்து முதன்மையான எதிர்க்கட்சியாக பாரதீய ஜனதா இருக்கும் என்றார்.
 
பாரதீய ஜனதா முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் இருந்த திரை விலகி பிரணாப்முகர்ஜிக்கும், சங்மாவுக்கும் இடையே நேரடி போட்டி உருவாகி உள்ளது.
 
சுஷ்மாசுவராஜ் அறிவிப்பின் மூலம் ஐக்கிய ஜனதா தளமும், சிவசேனாவும் கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டன. கம்யூனிஸ்டு கட்சிகள் யாரை ஆதரிப்பது என்று முடிவு செய்வதற்காக டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு உயர்மட்டக்குழு கூட்டம் நடக்கிறது.
 
மம்தா பானர்ஜியும் தனது ஆதரவு யாருக்கு என்பதை இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தனக்கு ஆதரவு தருவதாக அறிவித்த பாரதீய ஜனதாவுக்கு சங்மா நன்றி தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-
 
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. எனக்கு பாரதீய ஜனதா ஆதரவு அளித்து இருப்பது மகிழ்ச்சி அளித்து இருக்கிறது. இதற்காக அந்த கட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஏற்கனவே எனக்கு ஆதரவு தெரிவித்து இருந்த அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம் கட்சிகளுக்கும் நன்றி. மம்தா பானர்ஜியும் எனக்கு ஆதரவு கொடுப்பார் என்று நம்புகிறேன். எனது மகள் மத்திய மந்திரியாக இருக்கிறார். அவர் எடுக்கும் முடிவில் நான் தலையிட மாட்டேன்.
 
இவ்வாறு சங்மா கூறினார்.



ஜெயிலில் வீரபாண்டி ஆறுமுகம் தைரியமாக உள்ளார்: வேலூரில் கனிமொழி எம்.பி.பேட்டி

Posted: 21 Jun 2012 02:55 AM PDT


சேலம் அங்கம்மாள் காலனி பிரச்சினையில் தி.மு.க. வை சேர்ந்த முன்னாள் மந்திரி வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார், அவரை மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்தியமந்திரி ஜெகத்ரட்சகன் உள்பட பலர் சந்தித்துபேசினர்.
 
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்தனர். இதற்கான உத்தரவு அவரிடம் வழங்கப்பட்டது.
 
இந்நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று வேலூர் ஜெயிலுக்கு சென்று வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து பேசினார். பிற்பகல் 12.10 மணிக்கு அவர் வேலூர் ஜெயிலுக்குள் சென்றார், அவருடன் ராசாத்திஅம்மாள் வேலூர் தி.மு.க. செயலாளர் காந்தி சென்றனர்.
 
ஜெயில் வாசலில் கனிமொழியை தி.மு.க. வினர் வரவேற்றனர். வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்துவிட்டு வெளியே வந்த கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
 
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தி.மு.க. தலைவர்கள் மீது வழக்கு தொடருவதும் கைது செய்யபடுவதும் தொடர்கிறது. 3-வது முறையாக வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். மனிதாபிமானமற்ற வகையில் ஒவ்வொரு சிறையாக மாற்றப்பட்டு அவரை அலைக்கழித்து வருகின்றனர்.
 
அவருடைய உடல்நிலைப் பற்றி கவலைபடாமல் மிகமோசமாக நடத்துகின்றனர். அவர் எதற்கும் அஞ்சாதவர் தைரியமாக இருக்கிறார் புழல் சிறையில் இருந்தபோது அவரை கருணாநிதி பார்க்க கூடாது என்பதற்காக தான் அவரை திடீரென வேலூர் ஜெயிலுக்கு மாற்றினர்.
 
வீரபாண்டி ஆறுமுகம் பதவியில் இருந்த போதும் தற்போது ஜெயிலில் இருக்கும் போதும் ஒரே மனநிலையில் தான் உள்ளார். தி.மு.க. தலைவர்கள் மீது வழக்கு போடுவது குறித்து ஆராய்ச்சி செய்து வருவதுதான் அ.தி.மு.க. ஆட்சியின் சாதனையாக உள்ளது.மக்களை பற்றி சிந்திக்காமல் ஓய்வெடுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா செல்கிறார்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
வீரபாண்டி ஆறுமுகத்தை சந்திக்க அவரது குடும்பத்தினர் ஜெயிலுக்கு வெளியே காத்திருந்தனர். அவர்களுக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல் கூறினார். அப்போது அவர்கள் கண்கலங்கினர்.




ராமதாஸ் ஏன் பிரணாபை ஆதரிக்கிறார்?

Posted: 21 Jun 2012 02:53 AM PDT


குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவார் என்பதால் தான் அவரை ஆதரிக்கிறோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குகிறார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. நாளுக்கு நாள் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் சபாநாயகரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பி.ஏ. சங்மா போட்டியிடுகிறார். அவரை தேர்தலில் இருந்து விலகுமாறு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கூறியது. ஆனால் அவர் தேர்தலில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்று கூறி கட்சியில் இருந்து விலகிவிட்டார்.
பிரணாபுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவாக உள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கு பெறப்போவதில்லை என்று தேமுதிக அறிவித்தது. இதையடுத்து தங்கள் முடிவை மாற்றி பிரணாபை ஆதரிக்குமாறு காங்கிரஸ் தேமுதிகவை கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 3 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாமக பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறோம் என்றார்.
பிரணாபுக்கு ஆதரவு கொடுக்க காரணம் என்னவென்று கேட்டதற்கு அவர் கூறுகையில், பிரணாப் வெற்றி பெறும் வேட்பாளர். அதனால் தான் அவருக்கு ஆதரவளி்க்கிறோம் என்றார்.



இலங்கை தூதரகம் முன்பு மந்திரி கொடும்பாவி,இலங்கை கொடி எரிப்பு: விடுதலை சிறுத்தைகள் 50 பேர் கைது

Posted: 21 Jun 2012 02:47 AM PDT

இலங்கையின் வடகிழக்கு பகுதியில் மீண்டும் முள்ளிவாய்க்கால் போன்ற நிலை ஏற்படும் என்று இலங்கை மந்திரி பேசியதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு அமைப்புகள் இலங்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்துக்கு மாநில செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு தலைமை தாங்கினார். அப்போது இலங்கை அரசுடன் உள்ள உறவை துண்டிக்க வேண்டும், திமிராக பேசிய இலங்கை மந்திரியை கண்டிக்க வேண்டும். இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்த வேண்டும். 

பாராளுமன்றத்தில் இனப் படுகொலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். இலங்கை மந்திரியின் கொடும்பாவி மற்றும் அந்த நாட்டு கொடியையும் எரித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

மாநில நிர்வாகிகள் விஞ்சை அரசன், இளஞ்சேகுவரா, நுங்கை அரசன், வெற்றிச் செல்வன், சைதை எஸ்.என்.பாலாஜி, பகலவன், வேலுமணி, மாவட்ட நிர்வாகிகள் கடம்பன், விடுதலை செல்வன், செந்தில்குமார் உள்பட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.





மம்தாவிடம் டெலிபோனில் பேச்சு: பால்தாக்கரேயை சங்மா சந்திக்கிறார்- நேரில் ஆதரவு கேட்க முடிவு

Posted: 21 Jun 2012 02:45 AM PDT

ஜனாதிபதி தேர்தலில் போட்டி உருவாகி உள்ளது. பிராணப் முகர்ஜியை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். இதனால் பிரணாப் முகர்ஜி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படும் நிலை மாறி போட்டி உறுதியாகி விட்டது. 

பி.ஏ.சங்மா ஏற்கனவே கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இடையில் மம்தா பானர்ஜியின் அதிரடி, பாரதீய ஜனதாவின் திணறல் காரணமாக சங்மா பொறுமையாக இருந்தார். தற்போது சங்மாவுக்கு பாரதீய ஜனதா ஆதரவு அளிக்கும் நிலைக்கு வந்துள்ளது. 

இதையடுத்து கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட சங்மா முடிவு செய்துள்ளார். நேற்று மம்தா பானர்ஜியுடன் சங்மா டெலிபோனில் பேசினார். அப்துல்கலாம் போட்டியில் இருந்து விலகிக் கொண்டதால் தன்னை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார். மம்தா இதுபற்றி முடிவு எடுத்து அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். 

இன்று அவர் பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான சிரோன் மணி அகாலிதளம் கட்சி தலைவர் பிரகாஷ் சிங்பாதவை சந்தித்து ஆதரவு கேட்க முடிவு செய்துள்ளார். இந்த கட்சி பாரதீய ஜனதா எடுக்கும் முடிவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. இதுபற்றி சங்மா கூறியதாவது:- 

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் பேசி ஆதரவு கேட்டேன். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களிடமும் பேசினேன். இன்று சிரோன்மணி அகாலிதளம் கட்சிதலைவர் பிரகாஷ்சிங் பாதவை சந்திக்க உள்ளேன். 

இவ்வாறு பி.ஏ.சங்மா கூறினார். 

பிரணாப்முகர்ஜியை ஆதரிப்பதாக கூறியுள்ள சிவசேனா தலைவர் பால்தாக்கரேயை சந்திக்கவும் சங்மா முடிவு செய்துள்ளார். இந்த கட்சி பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





பிரணாப் முகர்ஜிக்கு 52%, சங்மாவுக்கு 33% ஓட்டுக்கள்... எப்படி ஜெயிப்பார் சங்மா??

Posted: 21 Jun 2012 02:43 AM PDT


குடியரசுத் தலைவர் தேர்தலில் தற்போதுள்ள லேட்டஸ் நிலவரப்படி பிரணாப் முகர்ஜிக்கு கிட்டத்தட்ட 52 சதவீதத்திற்கும் மேலான ஓட்டுக்கள் சேர்ந்துள்ளன. அதேசமயம், பி.ஏ.சங்மாவுக்கு 33 சதவீத அளவிலான வாக்குகளே சேகரமாகியுள்ளன. இதனால் சங்மா எப்படி வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எல்லாக் கட்சிகளுமே ஏதோ ஒரு கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகின்றன. தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், அதிமுக, பிஜூ ஜனதாதளம், பாஜக, சிரோமணி அகாலிதளம் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்ற பி.ஏ.சங்மாவும் களத்தில் உள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை ஒவ்வொருவராக அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரணாப் முகர்ஜிக்கு இதுவரை காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி, ராஷ்டிரிய லோக்தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
சங்கமாவைப் பொறுத்தவரை அதிமுக, பாஜக, பிஜூ ஜனதாதளம், சிரோமணி அகாலிதளம் ஆகியவற்றின் ஆதரவுதான் உறுதியாகியுள்ளது.
இதை வைத்துக் கணக்குப் போட்டால் தற்போது பிரணாப் முகர்ஜிக்கு கிட்டத்தட்ட 52 சதவீதத்திற்கு மேலான வாக்குகள் சேகரமாகியுள்ளன. இடதுசாரிகள் ஒருவேளை அவரை ஆதரிப்பதாக அறிவித்தால் இந்த அளவானது 57 சதவீதமாக உயரும்.
அதேசமயம், சங்மாவுக்கு தற்போது கிட்டத்தட்ட 33 சதவீத அளவுக்குத்தான் வாக்குகள் உள்ளன. மமதா மற்றும் இடதுசாரிகளின் ஆதரவை வாங்கினாலும் கூட 40 சதவீதத்தை அவரால் தாண்ட முடியாது என்றே தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியிடம் மட்டும் தனியாக 30 சதவீத வாக்குகள் உள்ளன. பாஜகவின் வாக்கு பலமானது 21 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™