Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


'வடிவேலு இல்லாத காமெடி களம் நல்லால்லதான்... சீக்கிரமே எல்லாம் சரியாகிடும்!' - விவேக் பேட்டி

Posted: 19 Jun 2012 10:29 PM PDT


வடிவேலு இல்லாத காமெடி களம் நன்றாக இல்லைதான். எல்லோருமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். சீக்கிரமே எல்லாம் சரியாகிவிடும், என்றார் நகைச்சுவை நடிகர் விவேக்.

பசுமை கலாம் என்ற தனது மரம் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 10 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நட்டு சாதனைப் புரிந்துள்ளார் விவேக். ஒரு நடிகர் என்ற வட்டத்தைத் தாண்டி, அவரது இமேஜை தூக்கி நிறுத்தியுள்ளது அவரது இந்த முயற்சி.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தத் திட்டத்தை விவேக் ஆரம்பித்தார். இந்த ஆண்டு ஜூனில் திட்ட இலக்கை எட்டியுள்ளார். தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதி உள்ள மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் விவேக்.

இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டி:

அப்துல் கலாமின் கனவான ஒருகோடி மரம் நடுதல் என்ற திட்டத்தின் முதல் பகுதிதான் இது. மீதி தொன்னூறு லட்சம் மரக்கன்றுகளை தமிழகம் முழுக்க நடும் திட்டம் உள்ளது.

அதற்கு எத்தனை ஆண்டுகளாகும் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இந்த இலக்கை தொட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

என்னுடைய இந்த முயற்சிக்கு பல நிறுவனங்கள் துணை நிற்கின்றன. மரம் நடுதலுக்கான பெரும் செலவுகளை ஏற்கின்றனர். அவர்களுக்கு நன்றி.

உண்மையில் மக்களிடையே மரம் நடுதல், மரங்களால்தான் மழை என்ற விஷயம் உணரப்படவில்லை என்பதுதான் வேதனையான உண்மை. இந்த அறிவியல் உண்மைகளை வலியுறுத்தி இனி பிரச்சாரம் செய்யப் போகிறேன்.

அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக வரமுடியாத சூழல் குறித்து...

அதுபற்றி நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது. தேர்தலில் போட்டியிடுவது அவரது சொந்த முடிவு. ஆனால் எங்களுக்கு எப்போதும் ஜனாதிபதி அவர். அவருக்காக எதுவும் செய்வோம். அவர் சொல்லுக்கு கட்டுப்படுவோம்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு நீங்கள் நடித்து வந்துள்ள முரட்டுக்காளை குறித்து...

அது நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொண்ட படம். முதல் முறையாக ஒரு திருநங்கை வேடத்தில் நடித்துள்ளேன். மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக பதினாறு வயதினிலே டாக்டர் - ஸ்ரீதேவி போர்ஷனை நகைச்சுவைக்குப் பயன்படுத்தியிருந்ததற்கு நல்ல வரவேற்பு. பதினாறு வயதினிலே படத்துக்கு நான் பரம ரசிகன். பல ஆண்டுகள் மனசுக்குள் ஊறியிருந்த அந்த விஷயம் இந்தப் படத்தில் நகைச்சுவையாக வெளிப்பட்டுள்ளது.

அந்த டாக்டர் கேரக்டருக்கு செல் முருகன் ரொம்ப பொருத்தமாக இருந்தார். இன்று பெருமளவு பேசப்படும் காமெடியாகிவிட்டது அது!

நீங்களும் வடிவேலுவும் உச்சத்திலிருந்தீர்கள் ஒரு கட்டத்தில். இப்போது வடிவேலு இல்லாத இந்த காமெடி களத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கஷ்டமாகத்தான் உள்ளது. வடிவேலுவின் பிரச்சினைக்கு அவர் காரணமா.. வேறு காரணம் என்றெல்லாம் நான் ஆராய விரும்பவில்லை. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். எல்லாம் சீக்கிரமே சரியாகிவிடும் என நம்புகிறேன்," என்றார்.

இனி அடுத்த ரவுண்டு...

பசுமை கலாம் திட்டத்தை செயல்படுத்தும் மும்முரத்தில் பல பெரிய படங்களைக் கூட இழந்ததாகக் கூறும் விவேக், இந்த ஆண்டு முழுக்க சினிமாவில் கவனம் செலுத்தப் போகிறாராம்.

சூர்யாவுடன் சிங்கம் 2, முக்தா சுந்தரின் பத்தாயிரம் கோடி, கந்தா உள்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அஜீத், விஜய் என தன் முந்தைய ஹீரோக்களுடனும் கைகோர்க்கப் போகிறாராம்!




8 விநாடிகளில் இந்தியா மீது அணு குண்டு போட முடியுமாம் பாகிஸ்தானால்...!

Posted: 19 Jun 2012 10:24 PM PDT


இந்தியாவுடன் போர் என்று வந்தால், அணு ஆயுதத்தை பிரயோகிப்பது என்று தீர்மானித்தால், பாகிஸ்தானால் எட்டு விநாடிகளில் அணு குண்டை போட முடியும் என்று முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் டோனி பிளேரின் முக்கிய உதவியாளர் ஒருவர் தனது டைரிக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

2001ம் ஆண்டு இந்தத் தகவலை பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஒரு ஜெனரல் தன்னிடம் கூறியதாக அவர் கூறியுள்ளார். அவரது பெயர் அலிஸ்டைர் கேம்பெல். இவர் டோனி பிளேரின் முன்னாள் தகவல் தொடர்பு அதிகாரி ஆவார்.

The Burden of Power என்ற பெயரில் தனது குறிப்புகளை அவர் புத்தகமாக்கியுள்ளார். அதை கார்டியன் பத்திரிக்கை தொடராக வெளியிட்டு வருகிறது.

செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல் முதல் 2003ம் ஆண்டு ஈராக் போர் முடிந்ததும் ஆகஸ்ட் மாதம் தனது பதவியிலிருந்து இறங்கியது வரை நடந்த பல்வேறு நிகழ்வுகளை, முக்கியத் தகவல்களை இதில் இடம் பெறச் செய்துள்ளார் அலிஸ்டைர்.

அதில் அலிஸ்டைர் கூறியிருப்பதாவது...

பாகிஸ்தானின் அணு ஆயுதத் திறமை குறித்து இந்தியா கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இந்தியாவால் தங்களுக்கு எப்போதும் ஆபத்து உண்டு என்ற நிரந்தரமான பயத்தில் பாகிஸ்தான் இருந்தாலும் கூட அவர்களது திறமையை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்பதே உண்மை.

இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போரில் ஈடுபட பாகிஸ்தான் தயாராக இருப்பதாக டோனி பிளேரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர் டேவிட் மானிங் கூறியதால், டோனி பிளேர் தலைமையிலான இங்கிலாந்து அரசுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பின்னணியில் டோனி பிளேர் இந்திய துணைக் கண்டத்திற்குப் பயணமானார். அப்போது இஸ்லாமாபாத்தில், அக்டோபர் 5ம் தேதி அதிபர் பர்வேஸ் முஷாரப் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

நான் இரண்டு ராணுவ ஜெனரல்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தேன். அப்போது இந்தியர்களுக்கு எதிராக பாகிஸ்தானியர்கள் எந்த அளவுக்கு துவேஷத்துடன் இருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. இந்தியாவில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு 'சுதந்திரப் போராட்ட வீரர்களைக்' (அதாவது தீவிரவாதிகள்) காரணமாக இந்தியா கூறுவதை அவர்கள் கண்டித்தனர்.

இந்தியா ஒரு நிலையில்லாத நாடு, மக்கள் தொகை அதிகம், நாட்டின் அளவும் அதிகம். எனவே நிச்சயம் ஒரு நாள் எங்களுக்கும், அவர்களுக்கும் போர் வெடிக்கும். அப்படி ஒரு நிலை வந்தால், அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் சூழல் வந்தால் எங்களால் எட்டே விநாடிகளில் இந்தியா மீது அணு குண்டுகளை போட முடியும். அந்த அளவுக்கு எங்களது ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன என்று ஒரு ஜெனரல் கூறினார் என்று அலிஸ்டைர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் இருப்பதை விட அதிக அளவிலான அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் உள்ளதாக ஏற்கனவே ஒரு புள்ளிவிவரத் தகவல் வெளியாகியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.




நித்யானந்தா ஆசிரமம் `தீ' வைத்து எரிப்பு: போலீசார் தீவிர விசாரணை

Posted: 19 Jun 2012 10:22 PM PDT


ராஜபாளையம் முடங்கி யார் ரோட்டில் நித்யானந்தாவிற்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டக்குளம் கிராமத்தை சேர்ந்த நித்யானந்தாவின் சீடர் பழனிவேல் (வயது25) என்பவர் தினந்தோறும் பூஜைகள் செய்து வருகிறார்.
 
இந்நிலையில் கடந்த 14-ந்தேதி பழனிவேல் சொந்த விஷயமாக ஆசிரமத்தை பூட்டி விட்டு வெளியூர் சென்றுள்ளார். இன்று காலை ஊர் திரும்பிய பழனிவேல் வழக்கம் போல் பூஜைகள் செய்வதற்காக ஆசிரமத்திற்கு வந்தார். அப்போது ஆசிரமத்தில் அமைக்கப்பட்டிருந்த குடில் எரிந்து சாம்பலாகி இருந்தன.
 
அங்கிருந்த பூஜை பொருட்களும் தீயில் கருகி நாசமாகி இருந்தது. இதையடுத்து அவர் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரிடம் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையத்தில் உள்ள அவரது ஆசிரமத்தை `மர்ம' நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



அஜித்திற்கு பாலாபிஷேகம் செய்த சிம்பு

Posted: 19 Jun 2012 10:07 PM PDT


அஜித் குமாரின் தீவிர ரசிகர் சிம்பு. அஜித்தின் படம் எப்போது வந்தாலும் அப்படம் வெளிவந்த நாளில், முதல் காட்சியை பார்த்து ரசிக்கும் அளவிற்கு பரம ரசிகர் அவர். தற்போது அவர் அஜித் குமாரின் கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்துள்ளார். நம்ப முடியலையா? அட உண்மைதாங்க...
விஜய சந்தர் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'வாலு'. இப்படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி நடித்து வருகிறார். படத்தின் கதைப்படி சிம்பு, தனது காதலி ஹன்சிகாவுடன் அஜித்தின் பில்லா 2 படத்தை முதல்நாள், முதல் காட்சி பார்க்க தியேட்டருக்கு வருகிறார்.

இக்காட்சி நேற்றைய தினம் சென்னை கமலா தியேட்டரில் வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்போது 'பில்லா 2' அஜித்தின் கட்அவுட்டிற்கு சிம்பு பாலாபிஷேகம் செய்யும் காட்சியும், ஹன்சிகாவுடன் 'பில்லா 2' படத்தை பார்த்து ரசிப்பது போன்ற காட்சியையும் படமாக்கியிருக்கிறார்கள்.

'தல படம்னா தல படம்தாங்க' என்று படப்பிடிப்பு தளத்தில் சிம்பு பஞ்ச் டயலாக்கும் அடித்திருக்கிறாராம்



ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நான் செய்த 4 'தவறுகள்': ராசா

Posted: 19 Jun 2012 10:00 PM PDT


2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் நான் 4 தவறுகளைச் செய்துள்ளேன் என்று முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கூறினார்.

2-ஜி வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராசா தனது சொந்த ஊரான பெரம்பலூருக்கு முதன்முறையாக வந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள திமுக பிரமுகர்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று ராசா சந்தித்தார்.

செந்துறைப் பகுதியில் தொண்டர்களிடையே பேசிய அவர், இந்தப் பகுதி சுயமரியாதை தீரர்கள் வாழ்ந்த பூமி. வழக்கு நிலுவையில் உள்ளதால் அதிகம் பேசக் கூடாது. 3 முறை என்னை மக்களவை உறுப்பினராக்கிய பூமி இது. இந்த மாவட்ட மக்கள் காட்டும் அன்பு என்னைத் திக்குமுக்காட வைத்துள்ளது.

இவ்வளவு வழக்குகள் தொடர்ந்தும், ஒரு தவறும் செய்யவில்லை என ராசா பேசுகிறாரே எனப் பத்திரிகைகள் எழுதுகின்றன.

உலகத்தில் எதைப் பெற விரும்பினாலும், மற்றொன்றை இழந்துதான் பெற முடியும். நாற்காலிக்காக ஒரு மரத்தை இழக்கிறோம். ஒரு பவுன் நகை தயாரிக்கும்போது, ஒரு கிராம் சேதாரம் ஏற்படும்.

இந்தியாவில் தற்போது சாதாரண மனிதன் கையிலும் செல்போன் இருக்கிறது. அதற்காக நான் 15 மாதம் சிறையில் இருந்துள்ளேன். நான் செய்தது 4 தவறுகள்.

முதல் தவறு ஸ்பெக்ட்ரம் பிரச்சனை இவ்வளவுதான் என வெளிப்படையாகக் கூறியது. 2-வது தவறு ஒரு ரூபாய் என்றிருந்த செல்போன் கட்டணத்தை 30 பைசாவாகக் குறைத்தது.

3-வது தவறு நான் பதவியேற்றபோது 100 கோடி இந்திய மக்கள் தொகையில், 30 கோடி பேரே செல்போனை பயன்படுத்தினர். சிலரின் ஆதிக்கத்தில் இருந்த இந்தத் துறையை மீட்டு, பதவியை விட்டு இறங்கும்போது, 90 கோடி பேர் செல்போனை பயன்படுத்தினர். இதை நான் சொல்லவில்லை, நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது.

4-வது தவறு இந்தியக் குடிமகன் சராசரியாக மாதம் ரூ. 310 செல்போன் கட்டணமாகச் செலுத்தி வந்ததை ரூ. 100 ஆகக் குறைத்தது.

இந்தக் 'குற்றங்களை' தவிர, வேறு எதையும் நான் செய்யவில்லை. வழக்குகளில் இருந்து விரைவில் விடுபட்டு உங்களைச் சந்திப்பேன். எப்படி ஒரு பறவை எங்குச் சென்றாலும், கூடு வந்து சேருவதைப் போல அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை மறக்க மாட்டேன் என்றார் ராசா.



இங்கிலாந்தைச் சேர்ந்த இசையமைப்பாளரை காதலிக்கிறேன்: நடிகை ராதிகா ஆப்தே

Posted: 19 Jun 2012 09:36 PM PDT


பிரகாஷ்ராஜின் 'டோனி' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. தற்போது அஜ்மல் ஜோடியாக 'வெற்றிச்செல்வன்' படத்தில் நடிக்கிறார். ருத்ரன் இப்படத்தை இயக்குகிறார்.
சென்னையில் நடந்த இதன் படப்பிடிப்பில் ராதிகா ஆப்தே நிருபர்களை சந்தித்தார். அப்போது இங்கிலாந்து இசையமைப்பாளரை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார்.

ராதிகா ஆப்தே கூறியதாவது:-

இங்கிலாந்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் பெனட்டிக் டெய்லரும் நானும் இரு வருடங்களாக காதலிக்கிறோம். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து உள்ளோம். எப்போது திருமணம் என்பதை கூற இயலாது.

மராத்தி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானேன். இந்தி படங்களிலும் நடித்துள்ளேன். தமிழில் வெற்றிச்செல்வன் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்தது. இதில் வக்கீல் கேரக்டரில் நடிக்கிறேன். காஷ்மீரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. காதல் காட்சிகளில் மென்மையாகவும் வக்கீல் கேரக்டரில் சீரியசாகவும் எனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளேன்.

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

அஜ்மல் கூறும்போது, வெற்றிச்செல்வன் படத்தில் மருத்துவ மாணவராக வருகிறேன். காதல், காமெடி ஆக்ஷன் திரில்லர் கலந்த படமாக தயாராகிறது என்றார்.



கோவையில் குடியேற ரஜினி திட்டமா?: உதவியாளர் விளக்கம்

Posted: 19 Jun 2012 09:07 PM PDT


ரஜினி கோவையில் குடியேறப் போவதாக சமீபத்தில் செய்தி வெளியானது. உடல்நலக்குறைவு ஏற்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியபோதே போயஸ்கார்டன் வீட்டில் இருந்து வெளியேறி கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் குடியேறப் போவதாக கூறப்பட்டது. ஆனால் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கினார்.

தற்போது மன அமைதிக்காக கோவையில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம் அருகே குடியேறப் போவதாக செய்தி பரவியது. இதற்காக அங்கு இடம் தேர்வு செய்து அழகான பங்களா கட்டி வருவதாகவும், அந்த பங்களாவின் கட்டுமான பணி முடியும் தருவாயில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

விரைவில் அந்த பங்களா வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து ரஜினி குடியேறப் போவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதனை ரஜினியின் உதவியாளர் மறுத் துள்ளார்.அவர் கூறும்போது, 'ரஜினி குடியேறப் போவதாக வெளியான செய்தி உண்மை யானது அல்ல. ரஜினி எங்கேயும் போகமாட்டார். சென்னையில்தான் இருப்பார்' என்றார்.

ரஜினி பொதுநிகழ்ச்சிகளில் ஆர்வமாக பங்கேற்று வருகிறார். பெங்களூரில் நடந்த கன்னட நடிகர் அம்பரீஷின் 60-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். சிரஞ்சீவி மகன் ராம்சரண் திருமணத்திலும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.அவரிடம் பழைய உற்சாகத்தை காண முடிகிறது.



மம்தா பானர்ஜிக்கு அப்துல்கலாம் பாராட்டு: வீரம் நிறைந்த தியாகத்தலைவர்

Posted: 19 Jun 2012 08:42 PM PDT


ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமை தனது வேட்பாளராக மம்தா பானர்ஜி அறிவித்தார். முலாயம் சிங்குடன் சேர்ந்து இந்த அறிவிப்பை முதலில் அவர் வெளியிட்டார். ஆனால் பின்னர் முலாயம் சிங், திடீரென தனது முடிவை மாற்றி, பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்தார்.
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பிரணாப் முகர்ஜியை ஆதரித்து, மம்தாவை ஓரங்கட்டின. ஆனாலும் மம்தா அதற்காக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. 'பேஸ் புக்' வலைத்தளம் மூலம் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
 
மக்களும் தங்களது ஏகோபித்த ஆதரவை அப்துல்கலாமுக்கு தெரிவித்தனர். கடைசியில் அப்துல்கலாம், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நேற்று முன்தினம் அறிவித்தார்.
 
இந்த நிலையில், தன்னை வேட்பாளராக அறிவித்து, இறுதி வரை ஆதரவு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த மம்தாவுக்கு அப்துல்கலாம் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
 
உங்களோடு மிகக்குறுகிய நேரமே கலந்துரையாடி இருக்கிறேன். அப்போது, நேர்த்தியான அரசியலில் பெரிய அரசியல் தலைமைக்கான பண்பு நலனை, கொண்ட காரியத்தில் வலிமையான உறுதியை, குறிப்பாக உங்கள் வீரத்தை, அரசியலில் தங்க சிம்மாசனத்தை தியாகம் செய்யும் மன உறுதியை கண்டேன்.
 
இந்த பண்புநலன்கள் நாட்டின் இன்றைய தேவை ஆகும். வீரம் நிறைந்தவர்களால்தான் வரலாறுகள் படைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் எனது பெயரை நீங்கள் முன்வைத்ததற்காகவும், இடைவிடாத (ஆதரவு திரட்டிய) முயற்சிகளுக்காகவும் நன்றி செலுத்துகிறேன். (தேர்தலில் போட்டியிட மறுத்ததால்) என்னால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்துக்காக மிகவும் வருந்துகிறேன்.
 
இவ்வாறு அதில் அப்துல் கலாம் கூறி உள்ளார்.
 
இந்தக் கடிதத்தை மம்தா, 'பேஸ்புக்' வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அத்துடன் அப்துல்கலாமுக்கு நன்றி தெரிவித்து பதில் கடிதமும் எழுதி உள்ளார். அதில் மம்தா, உங்கள் கடிதம் எனது இதயம் தொட்டது. இந்த நாட்டில், உலகில் உங்களது தனிப்பட்ட சாதனைகளால் இந்தியர்களாகிய நாங்கள் பெருமிதம் கொண்டிருக்கிறோம். நீங்கள் எப்போதும் மக்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பீர்கள். உங்கள் ஆசிகளை எனக்கு வழங்க வேண்டும் என கூறி உள்ளார்.



உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் டோனிக்கு 31-வது இடம்

Posted: 19 Jun 2012 09:28 AM PDT

லண்டனிலிருந்து வெளியாகும் போர்ப்ஸ் இதழ் உலகின் முதல் நூறு பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், டென்னிஸ் வீரர்கள் பெடரர், ஜோகோவிச் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி 31-வது இடத்தைப் பிடித்துள்ளார். டோனியின் சொத்து மதிப்பு 26.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் 23 மில்லியன் டாலர்களை அவர் விளம்பர ஒப்பந்தங்களின் மூலம் சம்பாதித்துள்ளார். 

முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் பிளாயிட் மேவெதர் இப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 85 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அவருக்கு அடுத்தபடியாக பிலிப்பைன்ஸ் குத்துச்சண்டை வீரர் மான்னி பக்குயாயோ 2-ம் இடமும், கோல்ப் பிரபலம் டைகர் உட்ஸ் 3-ம் இடமும் வகிக்கின்றனர். டென்னிஸ் சாதனையாளரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 5-ம் இடத்தில் உள்ளார். 

இப்பட்டியலில் தற்போதைய நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (62-வது இடம்),  உலகின் அதிவேக வீரர் என அழைக்கப்படும் ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் (63-வது இடம்), இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (78-வது இடம்) ஆகியோர் டோனியை விட பின்தங்கி உள்ளனர். 

விளம்பரங்களின் மூலம் டோனி சம்பாதித்துள்ள பணம், உலகின் மிகப் பிரபலமான கால்பந்து வீரராக விளங்கி வரும் அர்ஜென்டினா வீரர் லயனல் மெஸ்சி சம்பாதித்துள்ள பணத்தைவிட அதிகமாகும். ஆனால் மெஸ்சி மொத்த சொத்து மதிப்பில் 39 மில்லியன் டாலர்களுடன் 11-ம் இடம் வகிக்கிறார். 

பிரபல கால்பந்து வீரர்களான இங்கிலாந்தின் டேவிட் பெக்காம் 8-வது இடத்திலும், போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 9-வது இடத்திலும் உள்ளனர்.      

பிரபல டென்னிஸ் வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா இப்பட்டியலில் 26-ம் இடத்தில் இருந்தாலும், உலகின் பணக்கார வீராக்கனைகளில் முதலிடம் வகிக்கிறார்.





இலங்கை இனப்படுகொலையை கண்டுகொள்ளாததை கண்டித்து ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கிறோம்: தே.மு.தி.க

Posted: 19 Jun 2012 08:18 AM PDT

மத்திய அரசைக் கண்டித்து ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைவதால் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க மற்றும் பிஜூ ஜனதாதளம் கட்சிகள் முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணி, இடதுசாரிக் கட்சிகள் ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் இன்னும் முடிவெடுக்கவில்லை. திரிணாமூல் காங்கிரசால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அப்துல்கலாம், தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். 

இந்நிலையில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுபற்றி பேசிய விஜயகாந்த், 'இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அதேபோல் காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசையும், மத்திய அரசு கண்டிக்கவில்லை. எனவே மத்திய அரசின் இப்போக்கைக் கண்டித்து ஜனாதிபதி தேர்தலை தே.மு.தி.க புறக்கணிக்கிறது' என விஜயகாந்த் கூறியுள்ளார்.





பவர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்

Posted: 19 Jun 2012 05:07 AM PDT


பிரபல நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், கார்த்தி உள்ளிட்டவர்களுடன் நடித்த சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசனுடன் இணைந்து நடிக்கப் போகிறார் என்ற பரபரப்பு தகவல் கோலிவுட்டில் உலவி வருகிறது.
ஆனத்த தொல்லை, லத்திகா, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் தற்போது சந்தானத்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு 'கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து சந்தானத்திடம் கேட்டதற்கு ''ஆமாம். இந்த தகவல் உண்மைதான். பவர் ஸ்டார் சீனிவாசனுடன் இணைந்து நடிக்க இருக்கிறேன். இப்படத்தில் இன்னும் யார் யார் எல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அனைத்தும் முடிவான பிறகு அறிவிப்பு வெளிவரும். இப்படம் கண்டிப்பாக கலகலப்பான படமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.'' என்றார்



ஜெயந்திரர் சொல்லித்தான் நித்தியானந்தாவை தூக்கி உள்ளே போட்டாரா கெளடா?

Posted: 19 Jun 2012 05:03 AM PDT


ஜெயேந்திரர் சொல்லித்தான் நித்தியானந்தாவை கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா கைது செய்யச் சொல்லியுள்ளதாக நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் குமுறுகின்றனராம். விரைவில் இதற்குரிய பலனை ஜெயேந்திரர் அனுபவிப்பார் என்றும் அவர்கள் கருவியபடி கூறுகின்றனராம்.

சமீப காலமாக நித்தியானந்தா படு சுதந்திரமாகவே எல்லா இடங்களுக்கும் போய் வந்து கொண்டிருந்தார். அதிலும், மதுரை ஆதீனத்தின் வாரிசாக அவரை மதுரை ஆதீனம் அறிவித்தற்குப் பிறகு அவருக்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் கூட அவர் தங்கு தடையின்றி சுதந்திரமாகவே நடமாடிக் கொண்டிருந்தார். படு துணிச்சலாகவும் பேட்டி கொடுத்து வந்தார். அவருக்கு எதிரான போராட்டங்களும் கூட அவரை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.

இன்னும் சொல்லப் போனால், மதுரை ஆதீன மடமே நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் கையில்தான் முழுமையாக இருந்தது. அங்கு போராட்டத்துக்காகப் போனவர்களுக்குத்தான் அடி விழுந்ததே தவிர நித்தியானந்தா ஆதரவாளர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் தற்போது நித்தியானந்தாவின் நிலைமை மிகவும் சிக்கலாகியுள்ளது. அவரால் முன்பு போல பிடதி ஆசிரமத்தில் இருந்து பணியாற்ற முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இனிமேல் கர்நாடகத்திலிருந்து அவர் 'இறைப் பணியாற்ற' முடியுமா என்பதும் சந்தேகமாகியுள்ளது.

இப்படி நிலைமை மாறிப் போனதற்குக் காரணம் அவர் மீது கர்நாடக அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகளே. ஒரே நாளில் நித்தியானந்தாவின் கர்நாடக செயல்பாடுகள் முடங்கிப் போய் விட்டன. பிடதி ஆசிரமம் மூடப்பட்டு விட்டது, சீல் வைத்து விட்டனர்.

இனிமேல் நம்மால் பிடதியிலிருந்தோ அல்லது கர்நாடகத்திலிருந்தோ செயல்பட முடியாது, மதுரையில்தான் இனிமேல் நமது செயல்பாட்டு மையம் இருக்கும் என்று நித்தியானந்தாவே தனது ஆதரவாளர்களிடம் கூறியதாக ஒரு தகவல் கூறுகிறது.

நித்தியானந்தாவுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட ஜெயேந்திரர்தான் காரணம் என்று நித்தியானந்தா ஆதரவு வட்டாரம் கூறுகிறதாம். ஜெயேந்திரர் சொல்லித்தான் சதானந்த கெளடா நித்தியானந்தாவைக் கைது செய்ய உத்தரவிட்டார், ஆசிரமத்தை முடக்கினார்,அடாவடியாக நடந்து கொண்டார் என்று இவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஜெயேந்திரரின் தீவிர பக்தராம் கெளடா. எனவேதான் நித்தியானந்தா தரப்பு தன் மீது வழக்கு, குற்றச்சாட்டு என்று பாய்ந்ததால் கடுப்பில் இருந்து வந்த ஜெயேந்திரர் சொல்லி, கெளடா இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்து விட்டார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் விரைவில் இதற்குரிய பலனை அவர்கள் அனுபவிப்பார்கள் என்றும் நித்தியானந்தா ஆதரவாளர்கள் கருவியபடி கூறுகிறார்கள்.

ஜெயேந்திரர் - நித்தியானந்தா மோதலுக்கு என்ன காரணம்?

மதுரை ஆதீன மடத்தின் வாரிசாக நித்தியானந்தாவை, மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர் அறிவித்தார். இது பெருத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நித்தியானந்தா, தனக்கு ஜெயேந்திரர் உள்ளிட்டோரின் ஆதரவு உள்ளது என்று கூறியிருந்தார். ஆனால் இதை உடனடியாக காஞ்சி சங்கர மடம் மறுப்பு தெரிவித்து விட்டது.

சில நாட்கள் கழித்து நித்தியானந்தா கூறியது குறித்து ஜெயேந்திரரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, நான் அப்படியெல்லாம் ஆதரவு தருவதாக சொல்லவில்லை. அவருடன் எப்போது பார்த்தாலும் ஒரு பெண் இருக்கிறார். அவரைப் போய் எப்படி நான் ஆதரிப்பது. மதுரை ஆதீன மடத்திற்கென்று பாரம்பரியம் உள்ளது என்று கூறியிருந்தார்.

இதையடுத்து ஜெயேந்திரர் மீது நடிகை ரஞ்சிதாவின் சகோதரி கோர்ட்டில் அவதூறு வழக்கு போட்டு விட்டார். ஜெயேந்திரரின் பேச்சால் தனது சகோதரி பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும், குடும்பமே பெரும் உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் அந்த வழக்கில் கூறியுள்ளார்.

இதுதான் ஜெயேந்திரர் தரப்புக்கும், நித்தியானந்தா தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதன் பின்னணியாகும்.



பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் பதவி பறிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 19 Jun 2012 04:59 AM PDT


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க பிரதமர் யூசுப் ரசா கிலானி மறுத்து விட்டார். எனவே, கிலானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் கிலானி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், நீதிமன்றம் கலையும் வரை சுமார் 30 வினாடிகள் அவருக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. 

உச்ச நீதிமன்றத்தின் அவமதிப்புக்கு ஆளாகி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட கிலானியின் எம்.பி. பதவியை சபாநாயகர் பறிக்கவேண்டும் என பாகிஸ்தான் அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த விவகாரம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மக்களவையில் எதிரொலித்தது. இதற்கு பதிலளித்த சபாநாயகர் பெஞ்மிதா மிர்ஷா, 'பிரதமர் கிலானியின் எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என்று அறிவித்திருந்தார். 

இந்நிலையில் இந்த வழக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளான கிலானி பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர், எனவே அவரது பதவி பறிக்கப்பட வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது. மேலும் கிலானி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் நீடிக்கலாம் என சபாநாயகர் அளித்த தீர்ப்பையும் ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.




வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது எதிரொலி: 10 பஸ்கள் உடைப்பு

Posted: 19 Jun 2012 04:42 AM PDT


சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள அங்கம்மாள் காலனியில் இருக்கும் குடிசைக்கு தீவைத்து, சூறையாடப்பபட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் முன்னாள் அமைச்சரும், சேலம்  மாவட்ட தி.மு.க. செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த வழக்கில் பனமரத்துப்பட்டி ராஜா, தாதை கார்த்தி, கறிக்கடை பெருமாள் உள்பட பலர் கைது  செய்யப்பட்டு  சேலம் சிறையில்  அடைக்கப்பட்டனர். பனமரத்துப்பட்டி ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடிவந்தனர். அங்கம்மாள்  காலனி பிரச்சினையில்  கைது செய்யப்பட்ட  வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அனைவர் மீதும் 13 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் வீரபாண்டிஆறுமுகத்தின் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை சேலம் போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலி பிறப்பித்தார். இதற்கான உத்தரவை நேற்று சேலம் பள்ளப்பட்டி போலீசார்   வேலூர் சென்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள வீர பாண்டி ஆறுமுகத்திடம் ஒப்படைத்தனர்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது சேலம் 5 ரோட்டில்  உள்ள பிரிமியர் ரோலர் மில் இடத்தை அபகரித்ததாகவும், கூட்டுறவு சொசைட்டி நிலத்தை பினாமி மூலம்  குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து அபகரித்ததாகவும், சேலம் தாசநாய்க்கன்பட்டியை சேர்ந்த  பாலமோகன்ராஜ் நிலத்தை அபகரித்ததாகவும், சேலம் கோயமுத்தூர் ஜுவல்லர்ஸ் உரிமையாளரை மிரட்டியதாகவும் வழக்குகள் இருந்தது.

இப்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவர் மீது  குண்டர்  சட்டம் பாய்ந்துள்ளது என உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது  குண்டர்   சட்டம் பாய்ந்ததால் அவர் ஒரு வருடம் சிறையில் இருக்க வேண்டும். வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததால்  அனைத்து பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இருப்பினும் சேலம் 3 ரோடு பகுதியில் 2 பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுபோல் சேலம் குழந்தை இயேசு பேராலயம் பகுதி, காந்தி  ஸ்டேடியம் பகுதி, புதிய பஸ்நிலையம் அருகில் ஏ.வி.ஆர்.ரவுண்டானா உள்பட பல பகுதிகளில் 8 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. சேலம் அருகில் உள்ள மல்லூர் பகுதியிலும் 2 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

நேற்று இரவு எடப்பாடி நகர தி.மு.க. செயலாளர் ஜெயபூபதி எடப்பாடி பஸ்நிலையம் வந்து தீக்குளிக்க முயற்சித்தார். இதை பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். இவரைப்போல் சேலம் மாவட்டம்  முழுவதும்
10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது  விசாரித்து வருகிறார்கள். சேலம் மற்றும் சேலம் மாவட்டத்தில் வேறு ஏதும் அசம்பாவித சம்பவம் நடந்து விடாமல் இருக்க அனைத்து பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு   போடப்பட்டுள்ளது.

புதிய பஸ் நிலையம், பழைய  பஸ் நிலையம், ஜங்சன் ஆகிய பகுதிகளில் கூடுதல் போலீசார் நின்று கண்காணிக்கிறார்கள். சேலத்தில் இருந்து வெளியூருக்கு செல்லும் பஸ்களில் போலீசார் பாதுகாப்புக்கு சென்றும் வந்தனர்.

வீரபாண்டி ஆறுமுகம் மீது உள்ள வழக்குகள் விவரம்:-

1. அங்கம்மாள் காலனி நிலத்தை  ஆக்கிரமித்ததாக 8 பிரிவுகளின் கீழ் வழக்கு.
2. சேலம் பிரிமியர் ரோலர் மில் நிலத்தை மோசடி செய்தது உள்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு.
3. தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவரின் நிலத்தை ஆக்கிரமித்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு.
4. கோயமுத்தூர் ஜுவல்லர்ஸ் உரிமையாளர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக  8 பிரிவுகளின் கீழ் வழக்கு.
5. அக்ரோ கூட்டுறவு சங்க நில மோசடி தொடர்பாக 16 பிரிவுகளின் கீழ் வழக்கு.
6. அங்கம்மாள் காலனிக்குள் புகுந்து குடிசைகளை அடித்து நொறுக்கி தீ வைத்த கும்பலுடன் சேர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து, கூட்டு சதிசெய்ததாக வழக்கு.          



லண்டன் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இளையராஜாவின் இசையில் கமல் பாடல்!!!

Posted: 19 Jun 2012 04:24 AM PDT


லண்டன் லண்டனில் தொடங்கப் போகும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒலிக்கப் போவதாக தகவல்கள் பரவியுள்ளன. இங்கிலாந்து வரும் தகவல்களும் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளதால், இளையராஜா ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

அதிலும் இளையராஜாவின் இந்தப் பாடல் தமிழிலேயே ஒளி, ஒலிபரப்பாகப் போவதுதான் ஹைலைட். உலக அளவிலான கலாச்சாரங்களையும், கலைகளையும் ஒருங்கிணைத்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். அதில் மொத்தம் 86 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அதில் ஒன்றுதான் இளையராஜாவின் பாடல் என்று இங்கிலாந்து நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தப் பாடல் எது என்று தெரியுமா.... 1981ம் ஆண்டு இளையராஜா இசையில் வெளியாகி ஹிட் ஆன நான்தான் ஙொப்பண்டா, நல்லமுத்து பேரண்டா வெள்ளிப் பிரம்பெடுத்து விளையாட வர்றேண்டா என்ற பாடல்தான் அது. கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடிப்பில் உருவான ராம் லட்சுமண் படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

இந்தப் பாடல் அந்தக் காலத்தில் விறுவிறுப்பான பாடலாக ரசிக்கப்பட்டது. இப்போது ஒலிம்பிக் களத்தில், உலகப் புகழ் பெற்ற இசைப் பதிவுகளுக்கு மத்தியில் இளையராஜாவின் இந்தப் பாடல் இடம் பெறப் போவது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு தமிழர்

இளையராஜாவைத் தொடர்ந்து இன்னொரு தமிழரும் ஒலிம்பிக் விழாவில் களை கட்டவுள்ளது. அவர் மாயா அருள் பிரகாசம். எம்ஐஏ என செல்லமாக அழைக்கப்படும் மாயாவின் பிரமாண்டப் பாடலும் நிகழ்ச்சியில் அரங்கேறவுள்ளது.

மொத்தத்தில் லண்டன் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இரண்டு தமிழர்களின் பாடல்கள் ஒலிக்கப் போவது தமிழ் உலகத்துக்கே சந்தோஷமான செய்திதான்.



பெண்ணை கற்பழித்த புகார்: தடகள வீராங்கனை கைது

Posted: 19 Jun 2012 04:09 AM PDT


கடந்த வாரம் தடகள வீராங்கனை பிங்கி பிராம்னிக் மீது பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் கூறியிருந்தார். அப்புகாரில் பிங்கி பெண்ணல்ல.  அவர் ஒரு ஆண். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கற்பழித்து விட்டார் என கூறியிருந்தார்.
 
இதனையடுத்து அரசு மருத்துவமனையில் பிங்கிக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவு இன்று கிடைக்கப்பெற்றது. அதில் பிங்கிக்கு நடத்திய பரிசோதனையில் அவர் பெண்தான் என்பதற்கான உடற்கூறுகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் பிங்கி பிராம்னிக் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்.
 
கத்தார் நாட்டில் உள்ள தோஹாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர் பிங்கி பிராமானிக்.  
 
அதே ஆண்டில் மெல்போர்னில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன் பிங்கி விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



'ஒரிஜினல்' பில்லா கதை உங்களுக்குத் தெரியுமா....?

Posted: 19 Jun 2012 02:18 AM PDT


அமிதாப்பின் பில்லா, ரஜினியின் பில்லா, அஜீத்தின் பில்லா என பில்லா என்றாலே சூப்பர் ஹிட், மெகா ஹிட் என்றாகி விட்டது.

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான முதல் பில்லா சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. பாலிவுட்டில் மட்டுமல்லாமல், சென்னை உள்பட திரையிட்ட இடங்களிலெல்லாம் திருவிழாக் கோலம் பூண்டது.

பின்னர் இப்படத்தை தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ரீமேக் செய்தார்கள். 1979ம் ஆண்டு இப்படத்தின் ரீமேக் தொடங்கியது. அதற்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மகுடம் சூட்டப்பட்டிருந்தார். இதனால் மிகப் பெரிய ஹிட்டான பில்லாவின் ரீமேக்கில் ரஜினி நடிப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

1980ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வெளியான பில்லா, மிகப் பெரிய ஹிட்டானது, சில்வர் ஜூப்ளி ஹிட் கொடுத்தது. ரஜினி ஒன் அண்ட் ஒன்லி சூப்பர்ஸ்டாராக தமிழில் கொடி கட்டிப் பறக்க இந்தப் படம்தான் பிள்ளையார் சுழியாக அமைந்தது. ரஜினிகாந்த் டபுள் ரோலில் நடித்த முதல் படம் பில்லாதான். அதேபோல அமிதாப் பச்சன் படம் ஒன்றின் ரீமேக்கில் ரஜினி நடித்ததும் இதுவே முதல் முறை. இதன் பின்னர் அவர், அமிதாப்பின் தீவார் (தீ), நமக் ஹலால் (வேலைக்காரன்), திரிஷூல் (மிஸ்டர் பாரத்) என ரீமேக் படங்களில் நடித்தார்.

பிறகு பல வருடங்கள் கழித்து அமிதாப்பின் பில்லாவை ஷாருக்கானும், ரஜினியின் பில்லாவை அஜீத்தும் ரீமேக் செய்து ஹிட்டானார்கள். இப்போது அஜீத் மேலும் ஒரு படி போய், பில்லாவின் 2ம் பாகத்தையும் முடித்து விட்டார்.

இந்த பில்லாக்களை விடுங்கள், உங்களுக்கு உண்மையான 'பில்லா' குறித்து தெரியுமா... தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள்..

டெல்லியைக் கலக்கிய பில்லா - ரங்கா

வருடம், 1978. தலைநகர் டெல்லியே அல்லோகல்லப்பட்டுப் போய்க் கிடந்தது. காரணம், கீதா மற்றும் சஞ்சய் சோப்ரா என இரு சிறார்கள் கடத்தப்பட்டதால். அவர்களைக் கடத்தியது பில்லா எனப்படும் ஜஸ்பீர் சிங் மற்றும் ரங்கா எனப்படும் குல்ஜீத் சிங் என்று தெரிய வந்தது.

இந்த இரு இளைஞர்களும் சேர்ந்து கீதாவையும், சோப்ராவையும் கடத்திச் சென்றது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. போலீஸாரின் தீவிர வேட்டையில், இருவரின் உடல்களும் சிக்கின. இதில் கீதாவை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பில்லா, ரங்காவின் இந்த பயங்கரச் செயல் தலைநகர் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரையும் உயிருடனோ அல்லது சுட்டோ பிடிக்க உத்தரவிடப்பட்டது. தலைநகர் போலீஸார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் குதித்தனர்.

பில்லாவும், ரங்காவும் சில மாத தேடுதல் வேட்டைக்குப் பின்னர் சிக்கினர். ஓடும் ரயிலில் வைத்து அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் நிறுத்தி விசாரணை பல மாதங்களுக்கு நீடித்தது. இறுதியில் 1982ம் ஆண்டு இருவரும் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்கள் சிக்கும் வரை அவர்கள் குறித்த செய்திதான் அத்தனை நாளிதழ்களிலும் முதல் பக்க தலைப்புச் செய்தியாக திகழ்ந்தன. அந்த அளவுக்கு பில்லா, ரங்காவைப் பற்றிய கதைகள் காட்டுத் தீ போல அப்போது பற்றி எரிந்தன.

பில்லா-ரங்காவால் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட கீதா சோப்ரா மற்றும் சஞ்சய் சோப்ரா ஆகியோரின் நினைவாக இரு வீர விருதுகளை இந்திய சிறார் நல கவுன்சில் உருவாக்கியது. ஆண்டுதோறும் இந்த தேசிய வீர விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பில்லா-ரங்கா வழக்கு சரிவர கையாளப்படவில்லை, அதில் அப்போது டெல்லியில் ஆளும் கட்சியாக இருந்த ஜனதாக் கட்சி அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு வியாபித்து எழுந்ததால், 1978ல் நடந்த தேர்தலில் ஜனதாக் கட்சி படு தோல்வியைச் சந்தித்தது. அந்த அளவுக்கு அக்காலத்தில் பில்லாவும், ரங்காவும் நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தி வைத்திருந்தனர்.

அமிதாப் பச்சன் நடித்த டான் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இயக்குநரும், நடிகருமான பாலாஜி முடிவு செய்தபோது டான் என்ற பெயர் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானதாக இருக்காது என்று நினைத்தார். அந்த சமயத்தில் பில்லா என்ற பெயர் நாடு முழுவதும் பரபரப்பாக இருந்ததால் அந்தப் பெயரையே ரஜினிக்கு வைத்தார் பாலாஜி. இப்படித்தான் ரஜினிகாந்த் பில்லாவானார்.

இதே ரஜினிகாந்த்தை வைத்து பின்னர் ரங்கா என்ற பெயரிலும் ஒரு படம் வந்தது. ஆனால் பில்லா அளவுக்கு ரங்கா ஓடவில்லை. பில்லா 1980ல் வந்தது என்றால் ரங்கா 82ல் வெளியானது. ரங்கா வெளியான சமயத்தில்தான் பில்லாவும், ரங்காவும் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



சர்ச்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 75 பேர் பலி

Posted: 19 Jun 2012 12:04 AM PDT


நைஜீரியாவில் சர்ச்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய 3 தற்கொலைப்படை தாக்குதல்களில் 75 பேர் பலியாயினர். மேலும் 120 பேர் காயம் அடைந்துள்ளனர். கடுனா, சரியா போன்ற பகுதிகளில் அமைந்துள்ள சர்ச்கள் மீது சிறிய இடைவெளிகளிகளில் அடுத்தடுத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
 
போகோ ஹரம் என்னும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதுபற்றி பேசிய போகோ ஹரம் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் அபு காகா, 'கடுனா, சரியா பகுதிகளின் கிறிஸ்தவ சர்ச்களுக்கு எதிராக அல்லா எங்களுக்கு இன்று சிறந்த வெற்றியைக் கொடுத்துள்ளார்' என்று கூறியுள்ளார்.
 
தனி இஸ்லாமிய மாநிலம் கோரி போகோ ஹரம் இயக்கத்தினர் நைஜீரியாவின் பொது இடங்களிலும், சர்ச்களிலும் சமீபகாலமாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தனி மாநிலம் ஏற்படுத்தித் தராத காரணத்துக்காக பல அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் மத தலைவர்களை போகோ ஹரம் இயக்கத்தினர் கொன்றுள்ளனர்.
 
மொத்தம் 160 மில்லியன் மக்கள் வாழும் நைஜீரியாவின் வடபகுதியில் முஸ்லிம்களும், தென்பகுதியில் கிறிஸ்தவர்களும் அதிகமாக வாழ்ந்து வருவதால், அவர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது!: தி.மு.க

Posted: 19 Jun 2012 12:03 AM PDT


முன்னாள் திமுக அமைச்சர்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள் கைது செய்யப்பட்டு வருவது குறித்து விவாதித்து முடிவெடுக்க கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் ஜூன் 22ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பலர் அதிமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன் உச்சகட்டமாக சேலம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதுபோல, ஏற்கெனவே கைதாகி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 17) விடுதலை செய்யப்பட்ட மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி மீண்டும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக அரசின் இத்தகைய அத்துமீறலைக் கண்டித்து எத்தகைய போராட்டங்களில் ஈடுபடுவது என்பது குறித்து முடிவெடுக்க திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் ஜூன் 22-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும்.

அதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் ஜெயலலிதா அரசின் அடக்குமுறை குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில்,

இன்று நடைபெறுகின்ற ஜெயலலிதாவின் ஆட்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை, மாவட்ட செயலாளர்களை, அடக்குமுறைகளை வீசியே தகர்த்து விடலாமென்று எண்ணி செயல்படுகின்றது.

அட்டகாசத்தின் உச்சகட்டமாக நெருக்கடி கால கொடுமைகளையும் அராஜக அரசுகளின் பூதாகர பொய் வழக்குகளையும் சந்தித்து தியாகத்தழும்பு பெற்ற தி.மு.க. தளபதிகளில் ஒருவரும், தி.மு.க.வை கட்டிக் காக்கும் தீரர்களில் ஒருவருமான சேலம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் மீது ஜெயலலிதா குண்டர் சட்டத்தை ஏவியுள்ளார்.

அது போலவே மதுரை மாநகர மாவட்ட செயலாளர் தளபதியை 2 நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கில் கைது செய்து நேற்று முன்தினம் நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்த பிறகு, நேற்று வேறு ஒரு வழக்கை அவர் மீது திணித்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தகைய கொடுமைகளை ஜனநாயகத்திலும், அறவழியிலும் நம்பிக்கை கொண்டுள்ளதும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் அண்ணாவின் பொன்மொழியின் வழியை பின்பற்றி நடப்பதுமான தி.மு.க. இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த வீண்பழி சுமத்தும் படலத்தை, தமிழகம் இனியும் தாங்காது. இந்த செயலை கண்டிப்பதற்கு எத்தகைய போராட்டங்களில் ஈடுபடுவது என்பது பற்றி விவாதித்து முடிவெடுக்க தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் 22ம் தேதிசென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




மம்தாவை விமர்சித்த விவகாரம்: திக்விஜய் சிங்கை மட்டம் தட்டிய காங்கிரஸ்

Posted: 19 Jun 2012 12:01 AM PDT


ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜியின் பிடிவாதத்தை கண்டித்து இரு தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் திக்விஜய் சிங் காட்டமாக பேட்டி அளித்திருந்தார். இதனால் காங்கிரஸ் கூட்டணியில் உரசல் ஏற்படும் நிலை உருவானது.
 
இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட காங்கிரஸ் 'மீடியாக்களிடம் கட்சி சார்பில் பேசுவதற்கு திக்விஜய் சிங் அதிகாரபூர்வமாக நியமிக்கப்படவில்லை' என்று தற்போது அறிக்கை ஒன்றின் மூலம் அதிரடியாக அறிவித்துள்ளது.
 
இருதினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு திக்விஜய் சிங் அளித்த பேட்டியில் எங்களை பொறுத்தவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து நாங்களாக வெளியேற வற்புறுத்தமாட்ட‌ோம். விரும்பினால் அவர்களாக வெளியேறலாம்.
 
ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் அவரின் பிடிவாதம் சரியல்ல. நாங்களும் கூட்டணி கட்சி என்பதற்காக எவ்வளவு தான் வளைந்து கொடுப்பது. எதற்கும் ஒரு எல்லை உண்டு. அவரை இனிமேல் அவரிடம் ஆதரவு கேட்டு நாடி செல்லமாட்டோம் என்று கூறியிருந்தார்.
 
இதனால் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டிருந்ததாகவும், இதனைத் தவிர்க்கவே காங்கிரஸ் கட்சி திக்விஜய் சிங்கை மட்டம் தட்டியிருக்கிறது என்றும் டெல்லி வட்டார அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்




அஜீத்தின் 'பில்லா 2' ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

Posted: 18 Jun 2012 11:59 PM PDT


அஜீத் நடித்த 'பில்லா-2' படத்துக்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் படத்திற்கு 'யூ/ஏ' சான்றிதழ் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் படத்தை மும்பையில் உள்ள மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பியுள்ளதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டால், அப்படத்தை வயதுக்கு வந்தோர் மட்டும் அதாவது 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்கவேண்டும். யூ/ஏ சான்றிதழ் கிடைத்தால் 12 வயதுக்கு மேற்பட்டோரிலிருந்து இப்படத்தை பார்க்கலாம் என விதிமுறைகள் உள்ளன. 

அஜித்குமார் இப்படத்தில் தாதாவாக நடிக்க, பார்வதி ஓமனகுட்டன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சாதாரண இளைஞன் ரவுடிகளின் தொல்லைகளுக்கு ஆளாகி பயங்கர தாதாவாக உருவாவதே கதை. இப்படத்தில் வன்முறை மற்றும் கவர்ச்சி காட்சிகள் அதிகம் இருப்பதாக தணிக்கை குழுவினர் அவற்றை வெட்டி எறிய முயற்சித்தனர். ஆனால் இயக்குனர் சம்மதிக்கவில்லை. இதனால் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் அளித்தனர்.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் கடைசி வாரத்திற்கு தள்ளிவைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

'பில்லா 2' படத்தை அஜித்தின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™