விழியே பேசு... |
- இந்தியா முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்
- யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
- சாப்பிட வந்த முதியவரை எட்டி உதைத்து அடித்த நித்தியானந்தா ஆதரவாளர்- வீடியோவால் பெரும் பரபரப்பு!
- நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு பிரணாப் முகர்ஜிதான் காரணம்: சங்மா
- கூட்டணியில் மாற்றம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை - கருணாநிதி
- நிதின் கட்காரி மகன் திருமணம் எளிமையாக நடந்தது: உடன் படித்த தோழியை மணந்தார்
- விஸ்வரூபம் .. கமலுக்குக் கோரிக்கை
- மு.க.ஸ்டாலின் மருமகள் குரலில் பேசி மெகா மோசடி: பலகுரல் மன்னன் சென்னையில் கைது
- சிங்கள அரசின் பாதுகாப்பு படைக்கு முன்னாள் விடுதலைப்புலிகள் 1,000 பேர் தேர்வு
| இந்தியா முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் Posted: 24 Jun 2012 09:21 PM PDT மருத்துவம், நர்சிங், பல் மருத்துவம், பார்மசி கவுன்சிலை கலைத்துவிட்டு மத்திய அரசால் நியமிக்கப்படும் 5 முழுநேர நியமன உறுப்பினர்களை கொண்ட தேசிய சுகாதார மனிதவள ஆணையம் ஒன்றை நிறுவும் மசோதவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மத்திய அரசால் நடத்தப்படும் தகுதி தேர்வை எழுதி வெற்றி பெற்ற பின்பு தான் டாக்டராக பணிபுரிய முடியும் என்ற ஆணையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. மேலும் மருத்துவ படிப்பு முடிந்ததும் மூன்றரை ஆண்டுகள் கிராமத்தில் கட்டாயப்பணி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் கூறியுள்ளது. இவை அனைத்துக்கும் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதன்படி, தகுதி தேர்வு முறையை மாற்றி பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தேர்வுகளை தரமுள்ளதாக மாற்ற வேண்டும் என்றும் போலி மருத்துவர்களை ஒழிக்க தனி மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் கடந்த மூன்று ஆண்டுகளாக மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களை இழிவுபடுத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் மருத்துவர்கள் போராட்டம் இன்று காலை தொடங்கியது. சென்னையில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். எனினும், தனியார் மருத்துவமனைகள் அனைத்திலும் அவசரப் பிரிவு மற்றும் உள் நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படும் என கூறப்படுகிறது. புற நோயாளிகள் சிகிச்சை இன்று அளிக்கப்பட மாட்டாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். |
| யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் Posted: 24 Jun 2012 09:18 PM PDT 14-வது யூரோ கோப்பை கால்பந்து போட்டிகளை, போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தி வருகின்றன. இத்தொடரின் முதல் மூன்று காலிறுதி ஆட்டங்களில் போர்ச்சுகல், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய அணிகள் வென்று அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில் நான்காவது மற்றும் கடைசி காலிறுதிப் போட்டி உக்ரைனின் கீவ் நகரிலுள்ள ஒலிம்பிஸ்கி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதின. இங்கிலாந்து அணியில் வெய்ன் ரூனி, ஸ்டீவன் ஜெரார்ட், வல்கோட் போன்ற ஜாம்பவான்கள் விளையாடினர். இத்தாலி தரப்பில் பலோடெல்லி போன்ற சிறந்த வீரர்கள் இடம்பெற்றனர். இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் போட்டி ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடந்தது. மேலும் இரு அணிகளிலும் பல சிறந்த வீரர்கள் இடம்பெற்றிருந்ததாலும் போட்டி பரபப்புக்கு பஞ்சமின்றி நடந்தது. அதிலும் குறிப்பாக இத்தாலி வீரர் பலோடெல்லியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. எனினும் முதல் பாதியில் இரு அணியினரும், கோல் அடிப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாயின. இரு அணியின் கோல் கீப்பர்களும் சிறப்பாக செயல்பட்டு, எதிரணியினரின் முயற்சிகளைத் தடுத்தனர். இரண்டாவது பாதியில் ஆட்டம் மேலும் பரபரப்பான கட்டத்தை எட்டியது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயன்று, இயலாமல் போவது தொடர்ந்து நடந்தவண்ணம் இருந்தது. 90 நிமிடங்களின் முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்க முடியாமல் போனதால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணி வீரர்களும் விடாமல் மல்லுக்கட்டினர். கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களில் கூட கோல் எதுவும் அடிக்கப்படாததால் போட்டியின் முடிவை நிர்ணயிப்பதற்காக, ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றது. இங்கிலாந்து அணியின் முதல் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பை நட்சத்திர வீரர் ரூனி வீணடித்தார். பதிலுக்கு இத்தாலி வீரர் பலோடெல்லி அபாரமாக கோல் அடித்தார். இரண்டாவது வாய்ப்பில் இங்கிலாந்து வீரர் ஜெரார்ட் கோல் அடிக்க, இம்முறை இத்தாலி வீரர் கோல் அடிக்க தவறினார். இதனால் இரண்டு அனிகளும் 1-1 என சமநிலை வகித்தன. மூன்றாவது வாய்ப்பில் இங்கிலாந்தின் ரூனி, கச்சிதமாக கோல் அடித்தார். இம்முறையும் இத்தாலி பதில் கோல் திருப்பியது. 4-வது மற்றும் 5-வது வாய்ப்பை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட, இத்தாலி அணியோ இருமுறையும் கோல் அடித்து 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இத்தாலி அணி யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி அணி, வலுவான ஜெர்மனியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வரும் 29-ம் தேதி நடக்கிறது. முன்னதாக வரும் 28-ம் தேதி நடக்க உள்ள முதலாவது அரையிறுதியில் போர்ச்சுகல் அணி, ஸ்பெயின் அணியுடன் மோதுகிறது. இதையடுத்து அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் ஜூலை 1-ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. இன்றைய போட்டியில் தோற்றதன் மூலம், முதல்முறையாக யூரோ கோப்பையை வெல்லும் இங்கிலாந்து அணியின் கனவு இம்முறையும் பொய்த்துள்ளது. |
| சாப்பிட வந்த முதியவரை எட்டி உதைத்து அடித்த நித்தியானந்தா ஆதரவாளர்- வீடியோவால் பெரும் பரபரப்பு! Posted: 24 Jun 2012 09:16 PM PDT மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தா ஆதரவாளர்களால் நடத்தப்படும் அன்னதானத்தில் சாப்பிட வந்த ஒரு முதியவரை வெள்ளை நிற ஜிப்பா அணிந்த நித்தியானந்தாவின் ஆதரவாளர் ஒருவர் படு கொடூரமாக காலால் எட்டி உதைத்தும், கன்னத்தில் பளார் பளார் என இருமுறை அறைந்தும் மிருகத்தைப் போல நடந்து கொண்டசெயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அடாத செயல் தொடர்பான வீடியோ பதிவும் வெளியாகியுள்ளதால் நித்தியானந்தாவுக்கு எதிராக மதுரை ஆதீனம் மீட்புக் குழுவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா ஆதரவாளர்கள் என்ற போர்வையில் கேடிகளும், ரவுடிகளும், குண்டர்களும் குவிந்திருப்பதாக அவ்வப்போது புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளனர். நித்தியானந்தா ஆதரவாளர்களும் யாராவது எதிர்த்துப் பேசினால் அடிப்பது, உதைப்பது என்ற ரீதியில் போய்க்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அப்பாவி முதியவர் ஒருவரை நித்தியானந்தா ஆதரவாளர் என்று சொல்ல்படும் ஒரு நபர், அடித்து உதைத்து விரட்டிய காட்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆதீன மடத்தை நித்தியானந்தா ஆதரவாளர்கள்தான் தற்போது நிர்வகித்து வருகின்றனர். அன்னதானத் திட்டத்தையும் அவர்கள்தான் நடத்தி வருகின்றனர். ஜூன் 10ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், மதுரை ஆதீன மடத்திற்கு முதியவர்கள் சிலர் சாப்பிட வந்துள்ளனர். சிலர் ஆங்காங்கு அமர்ந்துள்ளனர். ஒரு முதியவர் மட்டும் கையில் தட்டுடன் நின்றபடி காணப்படுகிறார். அவரை வெள்ளை ஜிப்பா போட்ட ஒரு நபர் கன்னத்தில் பளாரென அறைகிறார். பிறகு மீண்டும் அடிக்கிறார். அப்படியும் முதியவர் போகாமல் நின்று கொண்டிருந்ததால் அவரை இடுப்பில் காலை தூக்கி மிகக் கொடூரமாக உதைத்துத் தள்ளுகிறார். இதனால் அந்த முதியவர் தரையில் பரிதாபமாக விழுகிறார். இதைப் பார்த்தும் அங்கு இருப்பவர்கள் தலையிடாமல் அமைதி காக்கின்றனர். வாசலில் வாட்ச்மேன் போல உட்கார்ந்திருக்கும் ஒரு நபர் மட்டும் மெதுவாக எழுந்து வந்து அந்த ஜிப்பா மனிதரை அமைதிப்படுத்துவது போல பேச முயற்சிக்கிறார். மிகக் கொடூரமான இந்தக் காட்சி பதை பதைக்க வைப்பதாக உள்ளது. வயதானவர்களுக்கும், பெண்களுக்கும் மரியாதை கொடுக்கும் ஊர் மதுரை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு ஊரில் சாப்பிட முயன்ற ஒரு முதியவரை இப்படி மகா கேவலமாக அடித்துத் தாக்கிய செயல் பார்த்தவர் நெஞ்சை அதிர வைப்பதாக உள்ளது. இதுகுறித்து நித்தியானந்தாவின் ஆதரவாளராக கூறப்படும் ஞான சொரூபானந்தா என்பவர் கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் ஒருவர் ஆதீன மடத்திற்கு அன்னதானத்தில் சாப்பிட வந்தார். அவர் மடத்தினுள் வந்து தகாத வார்தைகளால் எல்லோரையும் பேசினார். அந்த இடத்தில் பெண் பக்தர்களும் அதிகமாக இருந்தனர். அப்போது ஆதீன மடத்திற்கு சேவை செய்ய வந்த ஒரு நபர் குடிபோதையில் வந்த நபரை வெளியேற்றி உள்ளார். உடனே போலீசாரும் வந்து அந்த நபரை வெளியே கொண்டு சென்றனர். அந்த நபரை வெளியேற்றியவர் ஆதீனமட நிர்வாகி இல்லை என்று விளக்கினார். |
| நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு பிரணாப் முகர்ஜிதான் காரணம்: சங்மா Posted: 24 Jun 2012 09:12 PM PDT நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலைக்கு நிதியமைச்சரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான பிரணாப் முகர்ஜிதான் காரணம் என தேசிய ஜனநாயாகக் கூட்டணி, அ.தி.மு.க, மற்றும் பிஜூ ஜனதாதளம் கட்சிகளின் ஆதரவு பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் பி.ஏ.சங்மா கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சங்மா தற்போது பிரணாப்புக்கு எதிராக விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை போன்ற விவகாரங்களைக் கையில் எடுத்துள்ளார். இதுபற்றி பேசிய சங்மா, 'ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்து வருவதற்கு, ஊழல்தான் காரணம். விலைவாசி உயர்வு, ஊழல், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மற்றும் கறுப்பு பணம் போன்ற பிரச்சினைகளுக்கு பிரதமரும், மத்திய அமைச்சரவையும்தான் காரணம். அதிலும் தனிப்பட்ட முறையில் நிதியமைச்சர்தான் இவையனைத்திற்கும் பொறுப்பு' என்றார். நல்ல ஜனநாயகத்திற்கு விவாதங்கள் அவசியம் என்பதால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தன்னுடன் விவாதம் நடத்த வருமாறு பிரணாப்புக்கு கடந்த வாரம் சங்மா அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் சங்மாவின் அழைப்பைக் காங்கிரஸ் புறக்கணித்து விட்டது. தான் பழங்குடினத்தவர் என்பதாலும், வாக்காளர்கள் மனசாட்சி அடிப்படையில் வாக்களித்தாலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறலாம் என்பது சங்மாவின் கணிப்பு. |
| கூட்டணியில் மாற்றம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை - கருணாநிதி Posted: 24 Jun 2012 09:09 PM PDT தி.மு.க. செயற்குழு கூட்டம் முடிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்: கேள்வி: செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஜுலை 4-ந் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்திருக்கிறீர்கள். ஜுலை 19-ந் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைக்கு போய் விட்டால் எப்படி குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியும்? பதில்: சிறையிலே இருந்தாலும் வாக்களிக்கக்கூடிய அனுமதி அவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும். கேள்வி: சிறை நிரப்பும் போராட்டத்தில் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள்? பதில்: எண்ணற்றவர்கள். கேள்வி: தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு நியாயமற்ற முறையில் கைதுகள் தொடர்ந்து கொண்டே இருப்பதால், மத்திய அரசிடமிருந்து நீங்கள் ஏதாவது ஆட்சி கலைப்பு போன்ற உதவியை எதிர்பார்க்கிறீர்களா? பதில்: முன்பெல்லாம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தமிழகத்திலே இருந்தபோது, இங்கே ஏதாவது பிரச்சினை என்றால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. போராட்டம் நடத்துகிறபோது, தி.மு.க. ஆட்சியை உடனடியாக கலைத்துவிட வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்பார்கள். நாங்கள் அப்படியெல்லாம் மத்திய அரசை கேட்கமாட்டோம். எங்களுக்கு தெரியும். இது மக்கள் பிரச்சினை. இந்த பிரச்சினையில் ஒரு மாநில அரசை, மத்திய அரசு கலைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்வது முறையல்ல என்பதை நாங்கள் நன்றாக அறிவோம். கேள்வி: இந்த போராட்டத்திற்கு தமிழக அரசின் காவல் துறை அனுமதி கிடைக்குமா? அனுமதி கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? பதில்: அனுமதி கிடைக்காவிட்டாலும் சிறையை நிரப்புவோம். கேள்வி: குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக உங்கள் அணியின் சார்பில் நீங்கள் தான் முதன் முதலில் பிரணாப் முகர்ஜியின் பெயரை முன்மொழிந்தீர்கள். அதைப்போல குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக யாரையாவது பரிந்துரை செய்திருக்கிறீர்களா? பதில்: அந்த பிரச்சினை இப்போது எழவில்லை. கேள்வி:- தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்றைய தினம் இலங்கை அதிபர் பேசும்போது, கச்சத்தீவில் மீன் பிடிப்பவர்களுக்கு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டுமென்று பேசியிருக்கிறாரே? பதில்: சட்டத்தை மீறி யார் நடந்து கொண்டாலும், அந்த அரசு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் வேண்டுமென்றே, தமிழக மீனவர்கள் சட்டத்தை மீறி அங்கே மீன் பிடித்தார்கள் என்று பொய்யாக சொல்லி, அவர்களை தண்டிக்க முனைவதை நாங்கள் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. மத்திய அரசுக்கு அதைப்பற்றி தெரிவிப்போம். தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை பற்றி தி.மு.க. சார்பில் கடிதங்கள் எழுதியிருக்கிறோம். அரசின் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். கேள்வி: மத்தியில் பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் நிலவும் இந்த நேரத்தில் தேசிய அரசியலில் ஒரு பெரிய கூட்டணி மாற்றம் வருமா? பதில்:- வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. கேள்வி: பிரணாப் முகர்ஜிக்கு எப்படிப்பட்ட வரவேற்பு அளிக்கப்படவிருக்கிறது? பதில்:- 30-ந் தேதி வருகிறார். மாலையில் அவருக்கு வரவேற்பும், விருந்தும் அளிக்கப்படவுள்ளது. கேள்வி: மத்திய அரசில் தி.மு.க.வுக்கு இரண்டு அமைச்சர்கள் பதவி தரப்பட வேண்டியுள்ளது. தற்போது காலியாக உள்ள நிதி அமைச்சர் பதவி கிடைக்குமா? பதில்: அதைப்பற்றி எந்த கருத்தும் பரிமாறிக்கொள்ளப்படவில்லை. கேள்வி: தி.மு.க.வில் ஏராளமான அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். காலியாக உள்ள நிதியமைச்சர் பதவியைக் கேட்டுப்பெறுவீர்களா? பதில்: காலியாகப்போகிற நிதியை யாராவது கேட்பார்களா?! இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். |
| நிதின் கட்காரி மகன் திருமணம் எளிமையாக நடந்தது: உடன் படித்த தோழியை மணந்தார் Posted: 24 Jun 2012 09:07 PM PDT பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்காரியின் இளைய மகன் சாரங். சாரங்கிற்கும், அவருடன் படித்த மதுரா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாக்பூர் மகல் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மணமகன் சாரங், மணப்பெண் மதுராவின் கழுத்தில் தாலி கட்டினார். திருமணத்துக்கு வந்திருந்தவர்களை நிதின் கட்காரி, அவருடைய மனைவி காஞ்சன், மணமகளின் தந்தை திலீப், அவருடைய மனைவி பிரதீமா ரோடி, கட்காரியின் மூத்த மகன் நிக்கின், அவரது மனைவி ரிதுஜா, இளைய மகள் கெட்கி ஆகியோர் வரவேற்றனர். கட்காரியின் மூத்த மகன் நிக்கின் திருமணம் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகவும் ஆடம்பரமாக வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆனால் கட்காரி இளைய மகன் திருமணம் நேற்று எளிமையாக நடந்தது. திருமண விழாவில் கர்நாடக முதல்-மந்திரி சதானந்த கவுடா, மத்திய மந்திரி பிரபுல் படேல், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி, எம்.ஜி.வைத்யா, சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே, நாக்பூர் மேயர் அனில் சோலே ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சாரங்-மதுரா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாக்பூரில் வரும் 26-ந் தேதியும், டெல்லியில் அடுத்த மாதம் 2-ந் தேதியும் நடைபெறுகிறது. |
| விஸ்வரூபம் .. கமலுக்குக் கோரிக்கை Posted: 24 Jun 2012 09:05 PM PDT விஸ்வரூபம் என்பது சமஸ்கிருதப் பெயர், எனவே அதை கமல்ஹாசன் மாற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்து கமல்ஹாசனுக்கு கடிதமும் அனுப்பியுள்ளது. கமல்ஹாசனின் புதிய படங்களுக்கு ஏதாவது பிரச்சினை கிளம்புவது வாடிக்கையாகி விட்டது. சண்டியர் படத் தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சியினர் பிரச்சினை எழுப்பினர். இதையடுத்து படத் தலைப்பை விருமாண்டி என மாற்றினார் கமல். அந்தத் தலைப்புக்கும், படத்துக்கும் அபாரமான வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தசாவதாரம் படத்துக்கும், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கும் கூட சிக்கல்கள் வந்தன. இந்த நிலையில் விஸ்வரூபம் படத்துக்கும் ஒரு சின்னப் பிரச்சினை கிளம்பியுள்ளது. இந்து மக்கள் கட்சதியின் தலைவரான கண்ணன் இதுதொடர்பாக சர்ச்சையை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீங்கள் தமிழகத்தில் வாழ்கிறீர்கள். பேரும் புகழும் தமிழ் படங்கள் மூலமே உங்களுக்கு கிடைத்துள்ளது. பிறகு தமிழ் மொழியை கண்டுகொள்ளாதது ஏன்? விஸ்வரூபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. அதை மாற்றி நல்ல தமிழ் பெயராக வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எங்களது எண்ணங்களை கமல் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ் மொழி மீதான அக்கறையால் இதை தெரிவிக்கிறோம். தமிழில் பெயர் வைக்காத நிலையில் அதற்கு அரசின் கேளிக்கை வரி சலுகையும் கிடைக்க வாய்ப்பில்லை என்றார் அவர். |
| மு.க.ஸ்டாலின் மருமகள் குரலில் பேசி மெகா மோசடி: பலகுரல் மன்னன் சென்னையில் கைது Posted: 24 Jun 2012 08:54 PM PDT முன்னாள் துணை முதல்-அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி பெயரில் மோசடி நடப்பதாகவும், இது போன்ற மோசடி காரியங்களுக்கு அவர் பொறுப்பு அல்ல என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வக்கீல் ரமன்லால் மூலம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும்படி டி.ஜி.பி அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இது போன்ற மோசடியில் ஈடுபட்டதாக, பிரபல பலகுரல் மோசடி மன்னன் தினேஷ்குமார் (வயது 21) என்பவரை, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டில் வைத்து போலீசார் மடக்கிப்பிடித்தனர். தினேஷ்குமாரை பிடிக்க சினிமா இணை இயக்குனர் குமரேசன் என்பவர் போலீசுக்கு உதவி செய்தார். காரணம் குமரேசன், தினேஷ்குமாரின் மோசடி வலையில் சிக்கி ரூ.50 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். இதுபற்றி குமரேசன் திருவல்லிக்கேணி போலீசில் கொடுத்த புகாரில், 'நான் சினிமாவில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறேன். ஒளி, வசந்தம் வந்தாச்சு, சைவப்பூனை போன்ற படங்களில் நான் பணிபுரிந்துள்ளேன். சமீபத்தில் ஒருநாள், கிருத்திகா உதயநிதி பேசுவதுபோல எனது செல்போனில் ஒருவர் பேசினார். எனது கணவரின் பட நிறுவனமான "ரெட்ஜெயண்ட் மூவிஸ்'' தயாரிக்கும் படங்களில் உங்களுக்கு இணை இயக்குனர் பொறுப்பு தரப்படும், என்று கூறினார். இதையடுத்து, கிருத்திகாவின் தம்பி இன்பநிதி என்று பேசிய இன்னொருவர் என்னிடம் இணை இயக்குனர் பதவிக்காக ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என்றார். இதை நம்பி நானும், ரூ.50 ஆயிரம் பணத்தை முன்பணமாக கொடுத்தேன். மீதி ரூ.50 ஆயிரம் பணத்தை கேட்டு, இன்பநிதி என்று பேசிய நபர் தொடர்ந்து போனில் பேசி தொல்லை கொடுத்து வந்தார். இதற்கிடையில் கிருத்திகா பெயரில் மோசடி நடப்பதாக செய்திகள் வந்ததால், நான் மீதி பணத்தை கொடுக்கவில்லை.நான் ஏற்கனவே கொடுத்த ரூ.50 ஆயிரம் பணத்தை திருப்பிக்கேட்டேன். அந்த பணத்தை திருப்பித்தருவதாக, திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டுக்கு வருமாறு என்னை இன்பநிதி என்று பேசியவர் அழைத்தார். அவ்வாறு பணத்தை வாங்க வந்தபோது தான் மோசடி நபர் தினேஷ்குமார் பிடிபட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை வசூலித்து தருமாறு வேண்டுகிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். கைது செய்யப்பட்ட மோசடி நபர் தினேஷ்குமார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். 10-வது வகுப்பு பெயிலான அவர் பலகுரலில் பேசுவதில் மன்னர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'எனது மோசடிக்கு தி.மு.க. மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஒருவர்தான் பின்னணி. அவரது தூண்டுதலால்தான் நான் மோசடி செய்தேன். ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் தனது சகோதரியை பார்க்க வரும்போது அவர் எனக்கு பழக்கமானார். கிருத்திகா உதயநிதியை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தபோது, அவரது குரலை எனது மனதில் பதிவு செய்துகொண்டேன். பின் மகளிர் அணி செயலாளர் சொன்னபடி கிருத்திகா பெயரில் பேசி மோசடிக்கு துணை போனேன். இதுபோல பேசி 6 முன்னாள் அமைச்சர்களிடம் வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு காரியங்களை அந்த மகளிர் அணி செயலாளர் சாதித்துள்ளார். எனது மோசடிக்கு, எனது நண்பன் மணியும் உறுதுணையாக இருந்தான். இதற்காக எனக்கு மாதம் ரூ.7 ஆயிரமும், மணிக்கு ரூ.5 ஆயிரமும் சம்பளமாக மகளிர் அணி செயலாளர் கொடுத்தார். குமரேசனிடம் நானாக இந்த மோசடியில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டேன்' என்றார். தினேஷ்குமார் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையானது தானா? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். உண்மையாக இருக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட மகளிர் அணி செயலாளர் மீதும், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் குறிப்பிட்டனர்.நேற்று இரவு தினேஷ்குமாரின் நண்பன் மணியையும் போலீசார் பிடித்தனர். தினேஷ்குமாரின் தந்தை ராமச்சந்திரன் இறந்து விட்டார். தாயார் ராஜலட்சுமி ஸ்ரீரங்கம் கோவிலில் துப்புறவு தொழிலாளியாக வேலை பார்க்கிறார். தங்கை ரேவதி பிளஸ்-1 படிக்கிறார். |
| சிங்கள அரசின் பாதுகாப்பு படைக்கு முன்னாள் விடுதலைப்புலிகள் 1,000 பேர் தேர்வு Posted: 24 Jun 2012 08:38 PM PDT இலங்கையில், விடுதலைப்புலிகளுடனான சண்டையின்போது, உள்ளூர் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. சிங்களர்களை பாதுகாக்கும் நோக்கத்திலேயே இப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், இப்படைக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகளை தேர்வு செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, கிளிநொச்சியில் முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. ஜுலை மாதத்துக்குள், ஆயிரம் பேர் இப்படைக்கு தேர்வு செய்யப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விடுதலைப்புலிகளுடனான சண்டை முடிவடைந்த பிறகு, பிடிபட்ட விடுதலைப்புலிகள், இலங்கை அரசின் மறுவாழ்வு திட்ட முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டனர். அவர்கள் மட்டுமே இப்படைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |








