Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


திருச்சியில் இன்று குப்பை தொட்டியில் கிடந்த லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள்: பொது மக்கள் போட்டி போட்டு அள்ளி சென்றனர்

Posted: 22 Jun 2012 11:02 PM PDT

திருச்சி உறையூர் 57-வது வார்டு அவுசிங் போர்டு காலனி ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. இங்கு அரசு ஊழியர்கள் மற்றும் செல்வந்தர்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பையொட்டி மாநகராட்சியின் 2 பெரிய குப்பை தொட்டிகள் உள்ளது. இங்கு மாநகராட்சி ஊழியர்கள் தினந்தோறும் வந்து லாரிகளில் குப்பைகளை அள்ளி செல்வது வழக்கம். 

வழக்கம் போல் இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றுவதற்கு லாரியில் வந்தனர். அப்போது குப்பை தொட்டியில் இருந்து பாலிதீன் பைகளை சேகரித்தனர். அங்கு 2 பெரிய பாலிதீன் பைகள் கிடந்தது. அதனை அவர்கள் பிரித்து பார்த்தனர். அந்த பையில் 1000 ரூபாய், 500 ரூபாய் என ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டு இருந்தது. அதனை பார்த்து மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. தகவல் அறிந்ததும் ஏராளமான பொது மக்கள், சிறுவர்கள் திரண்டனர். அவர்கள் குப்பை தொட்டியில் இறங்கி அதில் இருந்த ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு அள்ளி சென்றனர். 

தகவல் அறிந்ததும் வார்டு கவுன்சிலர் வனிதா மற்றும் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகாந்தன், ஏட்டுகள் கமலநாதன், ஆறுமுகம் ஆகியோர் அங்கு விரைந்தனர். அவர்கள் அங்கு கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர். மொத்தம் ரூ. 20 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். 

அனைத்து ரூபாய் நோட்டுக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் நல்ல நோட்டுகள் ஆகும். வங்கியில் வைக்கப்பட்ட சீல் கூட ரூபாய் நோட்டுகளில் காணப்பட்டது. குப்பை தொட்டிகள் பக்கம் 3 வங்கிகள் உள்ளது. பொதுவாக வங்கியில் உள்ள பழைய, கிழிந்த நோட்டுகளை குப்பை தொட்டியில் போட்டு தீவைத்து எரிப்பது வழக்கம். எனவே அது போன்ற ரூபாய் நோட்டுகளா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

குடியிருப்பை சுற்றி ஏராளமான கோடீஸ்வரர்கள் வீடு உள்ளது. போலீஸ் மற்றும் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு பயந்து யாராவது பணத்தை கிழித்து வீசி சென்றார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





நல்ல கேரக்டர் அமைந்தால் சினிமாவில் மீண்டும் நடிப்பேன் -ஐஸ்வர்யாராய்

Posted: 22 Jun 2012 10:39 PM PDT


ஐஸ்வர்யாராய் குழந்தை பெற்றபின் குண்டாகி இருக்கிறார். இதனால் சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தி விட்டார். எப்போதும் குழந்தையுடனேயே செலவிடுகிறார். வெளியில் செல்லும்போதும் குழந்தையை எடுத்துச் செல்கிறார். இதுகுறித்து ஐஸ்வர்யாராய் அளித்த பேட்டி வருமாறு:-

குழந்தை பெற்றபின் என் வாழ்க்கையே மாறிவிட்டது. புதுமாதிரியான உணர்வுகள் மனதை ஆக்கிரமித்துள்ளன. தாய்மையின் உன்னதம் பற்றி அறிந்து கொண்டேன். எப்போதும் குழந்தையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி நிற்கிறது.

வெளியே போகும்போதும் குழந்தையை தூக்கிச் செல்ல விரும்புகிறேன். குழந்தை பெற்றதும் நான் குண்டாகி விட்டதாக விமர்சிக்கின்றனர். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

தாய் ஆனபின் உடல் அழகிலும் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துவது இயற்கையாகவே குறைந்து விடுகிறது. அதற்காக நான் கவலைப்படவில்லை. உடல் எடையை குறைப்பதற்காக ஏடாகூடமாக எதுவும் செய்ய விரும்பவில்லை.

பெண்களுக்கு நான் சொல்வதெல்லாம் மனஅழுத்தம் இன்றி சுதந்திரமாக இருங்கள். மனதை வருத்தும் விஷயங்களை பற்றி சிந்திக்காதீர்கள். குடும்பம் முக்கியம். அவர்களுக்காக வாழுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் தன்னம்பிக்கை இருக்கும்.

என்னை பொறுத்தவரை நல்ல கேரக்டர் மற்றும் கதைகள் அமைந்தால் மட்டுமே மீண்டும் சினிமாவில் நடிப்பேன்.

இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.



இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட்

Posted: 22 Jun 2012 10:34 PM PDT


உலகச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவென சரிந்து கொண்டிருக்கிறது. இதற்கான சர்வதேச, உள்நாட்டு காரணங்கள் குறித்து நிதி ஆலோசகர்களும், பொருளாதார விற்பன்னர்களும் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கையில் இந்திய ரூபாயின் சின்னம் வாஸ்து குறைபாடோடு இருப்பதே இதற்குக் காரணம் என்று ஒரே போடாக போட்டிருக்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் ராஜ்குமார் ஜான்ஹரி.
கெளகாத்தி ஐஐடியில் உதவி பேராசிரியாக இருக்கும் தர்மலிங்கம் உதயகுமார் என்பவர் இந்திய ரூபாய்க்கான கரன்சி வடிவத்தை அமைத்தார். 2010ம் ஆண்டு முதல் இது அமலுக்கு வந்தது. இதுதான் இப்போது புயலை கிளப்பியுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தில் வடிவங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டாம். இந்திய ரூபாயில் உள்ள சின்னம் ஆர் என்ற ரோமானிய எண் மற்றும் தேவநகரி மொழி கலந்த வடிவமாக உள்ளது. இதன் நடுவே இருக்கும் கோடு வாஸ்து சாஸ்திரப்படி கழுத்தை அறுக்கும் கத்தி போல இருக்கிறதாம். அது ரூபாயை வெட்டிச் செல்வது போல இருப்பதால் பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது என்று கூறியுள்ளார் நிபுணர்.
இந்த சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டபோதே இதுபற்றி மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறாராம். ஆனால் மத்திய அரசுதான் இதை கண்டு கொள்ளாமல் விட்டதாம்.
2009ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடி நிலையிலும், இதுபோல் பல்வேறு சூழ்நிலைகளிலும் ரூபாயின் மதிப்பு சரிந்ததில்லை. ஆனால் 2010ம் ஆண்டு ரூபாய் சின்னம் அறிமுகமாக காலத்தில் இருந்தே இந்திய ரூபாயின் மதிப்பு கண்டபடி சரிய ஆரம்பித்து விட்டதாகவும் வாஸ்து நிபுணர் கூறியுள்ளார்.
இவரின் கருத்து பதில் கூறியுள்ள சில நிபுணர்கள் வாஸ்து என்பது ஒரு அறிவியல் கட்டிடங்களுக்கு வாஸ்துவின் வடிவம் பார்க்கப்படும். ஆனால் ரூபாய் சின்னத்திற்கு அப்படி கூறமுடியாது என்று கூறியுள்ளனர்.
அப்ப கிரீஸ் நாட்டு பொருளாதாரம் சரிய அந் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமில்லை, வாஸ்து தான் காரணமோ ஜான்ஹரி?



ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் வீரபாண்டி ஆறுமுகம்

Posted: 22 Jun 2012 10:31 PM PDT

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனியில் குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதில் வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறையிலும், மற்றவர்கள் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். 

முதலில் சேலம் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்த வீரபாண்டி ஆறுமுகம், அங்கு ஜாமீன் கிடைக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த தனது மனுவை, வீரபாண்டி ஆறுமுகம் இன்று திடீரென வாபஸ் பெற்றார். மனுதாரரே மனுவை வாபஸ் பெற்றதால், நீதிபதி சுந்தரேஷ்வர் அம்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.





கமல் நடிக்க விரும்பிய 'டிராபிக்'கில் சரத்+பிரகாஷ்ராஜ்+நாசர்+பிரசன்னா

Posted: 22 Jun 2012 11:09 PM PDT


மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'டிராபிக்'. இப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட கமல், இப்படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

கமல் நடிக்க, மலையாள  'டிராபிக்' படத்தினை இயக்கிய ராஜேஷ் பிள்ளை தமிழ் ரீமேக் படத்தினையும் இயக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், கமல் தனது அடுத்தடுத்த படப்பணிகளை முன்னிட்டு இப்படத்தின் ரீமேக்கில் இருந்து விலகிவிட்டார். தற்போது 'டிராபிக்' படத்தின் தமிழ் ரீமேக் துவங்கி இருக்கிறது.

இப்படத்தினை இயக்குகிறார் ஹாகித் கேதிர். சரத்குமார், பிரகாஷ்ராஜ், சேரன், நாசர், பிரசன்னா, பார்வதி, ரோகிணி, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்கள்.

தமிழ் ரீமேக் தாமதம் ஆனதால் ராஜேஷ் பிள்ளை இந்தி டிராபிக் ரீமேக் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அஜய் தேவ்கான் இந்தியில் நடிக்க இருக்கிறார்.


மேலும்

நல்ல கேரக்டர் அமைந்தால் சினிமாவில் மீண்டும் நடிப்பேன் -ஐஸ்வர்யாராய்





















அ.தி.மு.க அரசைக் கண்டித்து ஜூலை 4-ல் சிறை நிரப்பும் போராட்டம்: தி.மு.க செயற்குழு தீர்மானம்

Posted: 22 Jun 2012 10:27 PM PDT

தி.மு.க தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கூடியது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 

செயற்குழு நடப்பதையொட்டி அறிவாலய வளாகத்தில் ஏராளமான கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் ஆர்வமுடன் திரண்டிருந்தனர். தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டது, தி.மு.க. நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்டது ஆகியவை பற்றி கூட்டத்தில் விரிவாகப் பேசப்பட்டது. 

கூட்டத்தின் இறுதியில் அ.தி.மு.க ஆட்சியில் தி.மு.க.வினர் கைது செய்யப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஜூலை 4-ல் தி.மு.க சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பொய் வழக்கில் தி.மு.க.வினரை கைது செய்துவரும் அ.தி.மு.க அரசுக்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.





நரிக்குறவர் மாணவனை டாக்டராக்குவதே லட்சியம்! - ஜீவா

Posted: 22 Jun 2012 10:24 PM PDT


கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகிலுள்ள வெள்ளிமலையை சேர்ந்த முகராசி என்பவர் மகன் ராஜபாண்டி. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவரது தாயார் வெள்ளச்சி, பாசி மற்றும் மாலை கோர்த்தல், விவசாயக் கூலி வேலை செய்கிறார். ராஜபாண்டியை அவரது பெரியப்பா லட்சுமணன், ஊத்தங்கரை தனியார் பள்ளியில் சேர்த்தார். பாசி மாலை தயாரித்து விற்பனை செய்தும், மாந்தோப்புக்கு காவல் பணிக்கு சென்றும் ராஜபாண்டியை படிக்க வைத்தார்.


பிளஸ் 2 தேர்வு முடிவில், 1167 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த ராஜபாண்டி, ரேங்க் பட்டியலில் 197.5 கட் ஆப் மார்க் வாங்கினார். வறுமையில் இருந்தாலும், நன்கு படித்து கல்வியில் சாதனை படைத்த ராஜபாண்டி, மருத்துவம் படிக்க விரும்பினார். ஆனால், அதற்கு பணம் இல்லாமல் தவித்தார்.

இச்செய்தியை தனது மானேஜர் பி.டி.செல்வ குமார் மூலம் அறிந்த ஜீவா, ராஜபாண்டி மருத்துவம் படிக்க உதவுவதாக அறிவித்தார். உடனே அவரை சென்னைக்கு வரவழைத்தனர். தாயார் மற்றும் பெரியப்பாவுடன் சென்னை வந்த ராஜபாண்டி, ஜீவாவை சந்தித்தார். கல்விக் கட்டணம் செலுத்த முதல் தவணையாக, 37 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை ராஜபாண்டியிடம் வழங்கிய ஜீவா, பிறகு நிருபர்களிடம் கூறியதாவது, டிப்ளமோ இன் மல்டி மீடியா கோர்ஸ் படித்தேன். மேற்கொண்டு படிக்காமல், நடிக்க வந்து விட்டேன்.

நான்தான் சரியாகப் படிக்கவில்லை. நன்றாகப் படிக்கும் வசதியற்ற மாணவர்களை மேற்படிப்பு படிக்க வைப்போமே என்ற எண்ணத்தில், ராஜபாண்டி பற்றி கேள்விப்பட்டதும் அவரை வரவழைத்தேன். எம்.பி.பி.எஸ் முடித்து, எம்.எஸ் படிக்க விரும்பினாலும், ராஜபாண்டிக்கான மொத்த செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவரை டாக்டராக்குவதே லட்சியம். இன்று நான் ராஜபாண்டிக்கு செய்த உதவியைப் பார்த்துவிட்டு, மற்றவர்களும் இதுபோல் உதவினால் சந்தோஷப்படுவேன்.இவ்வாறு ஜீவா பேசினார்.

பிறகு ராஜபாண்டி கூறும்போது, 'இதுவரை எனக்கு பலர் உதவி செய்துள்ளனர். நடிகர் ஜீவா செய்துள்ள உதவி பெரியது. அதை மறக்க மாட்டேன். அவரது விருப்பப்படி டாக்டராகி, ஏழைகளுக்கு மருத்துவம் பார்ப்பேன்' என்றார். அப்போது அவரது குரல் தழுதழுத்தது. மேற்கொண்டு பேச முடியாமல் கண்கலங்கினார். இக்காட்சி அனைவரது மனதையும் உருக்குவதாக இருந்தது.



அகிலேஷ் யாதவின் 100 நாள் ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்: முலாயம்சிங்

Posted: 22 Jun 2012 10:17 PM PDT


உத்தரபிரதேசத்தில் நடைபெறும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் 100 நாள் ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வழங்குவதாக அகிலேஷின் தந்தையும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம்சிங் யாதவ் கூறியுள்ளார். 

இதுபற்றி பேசும்போது, 'முந்தைய ஆட்சியைப் போல் ஊழல்கள் இல்லாமல், சமாஜ்வாடி ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகின்றன. 

மேலும் சட்டம், ஒழுங்கும் கட்டுப்பாடில் உள்ளது. எனவே சமாஜ்வாடி கட்சியின் 100 நாள் ஆட்சிக்கு நான் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வழங்குவேன்' என முலாயம் கூறியுள்ளார். 

2014-ல் நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது பற்றி பேசிய முலாயம், 'மூன்றாவது அணி பற்றிய முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்படும்' என்றார். மேலும் ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு தங்கள் கட்சி ஆதரவளிப்பது உறுதி எனவும் முலாயம் கூறினார்.




யூரோ கோப்பை: தொடர் கோல்மழையால் கிரீஸை சாய்த்து அரை இறுதிக்குப் போனது ஜெர்மனி

Posted: 22 Jun 2012 10:15 PM PDT


14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய காலி இறுதிப் போட்டியில் கிரீஸ் அணியை துவம்சம் செய்து மிக வலுவான ஜெர்மனி அணி அரை இறுதிக்குச் சென்றது.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான யூரோ கோப்பை கால்பந்து போட்டியை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் நடத்தி வருகின்றன. லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து 8 நாடுகள் கால் இறுதிக்குத் தகுதி பெற்றன.
இன்றைய 2-வது கால் இறுதிப் போட்டியில் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து வரும் ஜெர்மன், கிரீஸ் அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதல் பாதியில் 39-வது நிமிடத்தில் ஜெர்மனி 1 கோல் அடிக்க ஆட்டம் விறுவிறுப்படைந்தது. ஜெர்மனிக்கு இணையாக கிரீஸ் அணியும் விளையாடிப் பார்த்தது. 55-வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து ஜெர்மனியை சமன் செய்தது கிரீஸ்.
ஆனாலும் அசராத ஜெர்மனி வீரர்கள் 661,68,74 நிமிடங்களில் அடுத்தடுத்து அதிரடியாக கோல்மழை பொழிந்தனர். மொத்தம் 3 கோல்களை 2-வது பாதியில் போட்டது ஜெர்மனி. இதை எதிர்கொள்ள முடியாமல் கிரீஸ் தட்டுத் தடுமாறியது. ஆட்டத்தின் இறுதியில் 85-வது நிமிடத்தில் ஜெர்மனி ஒரு கோல் அடித்தது. 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வென்றது.
கிரீஸ் அணியால் மொத்தம் 9 முறையால்தான் கோல் அடிக்க முயன்றது. ஆனால் ஜெர்மனியோ 24 முறை கோல் அடிக்க முயற்சித்தது. ஜெர்மனிக்கு 10 கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. கிரீஸுக்கு 1 வாய்ப்புதான் கிடைத்தது.
நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.




கலைஞர் ரோட்டில் நின்றாலும் மதிப்பேன்! அன்பழகன் பேச்சு!

Posted: 22 Jun 2012 10:12 PM PDT



அதிமுக அரசின் அடக்குமுறைக்கு எதிராக திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் 22.06.2012 சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன்,


ஒரு பிடிவாதம், ஆணவம், தான்தோன்றித்தனம், எதையும் செய்யலாம் என்ற எண்ணம், என்ன செய்து என்ன ஆகிவிடும் என்ற எண்ணம், நீதிமன்றத்தையே மதிக்காத ஒரு மனப்பாண்மை, வாய்தா வாங்குவதையே வாடிக்கையாகிவிட்ட ஒரு முதல் அமைச்சர் ஜெயலலிதா என்ற காரணத்தினால், கருத்து விளக்கம் ஜெயலலிதாவுக்கு புரியாது. நீதி நியாயம் அவருக்கு விளங்காது. சட்டமன்ற மரபு அவர் மதிக்காது. ஜனநாயகம் அவர் ஏற்காது. கொடநாடு ஒண்ணுதான் அவர் ஏற்பதே தவிர, வேற நாடு மக்கள் எதையும் மதிப்பதில்லை. எல்லாவற்றையும் விட கலைஞருக்கு இருக்கிற எந்த தகுதியும் ஜெயலலிதாவுக்கு கிடையாது.




பெரியாருடைய சீடர் அது முதல் தகுதி. அண்ணாவினுடைய தம்பி அது இரண்டாவது தகுதி. மிகப்பெரிய எழுத்தாளர் அது அவருடைய சொந்த தகுதி. சட்டமன்றத்திலே 12 முறை வெற்றி பெற்று வந்தவர். அவது வேறு யாரும் பெறமுடியாத தகுதி. பலமுறை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு இன்னாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முதன் முதல் முன்மொழிந்த பெருமைக்குரியவர். எனவே அப்படி இந்த பெருமையிலே எந்த பெருமையிலும் அந்த அம்மையாருக்கு கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் அந்த அம்மையாருக்கு பெரியாருடைய கொள்கையில் அவருக்கு உடன்பாடு இல்லை. சுயமரியாதை உண்டா. கிடையாது. திராவிட இனப்பற்று உண்டா. இருக்க முடியாது. தமிழை மதிப்பவரா. மதிக்காதவர். தமிழ்நாட்டின் பண்பாட்டுக்கு ஒரு மரியாதை தருபவரா. அதுவும் தருபவர் அல்ல. இன்னும் சொல்லப்போனால் அவர் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று பல நேரத்திலே கருதுகிறார்.


தமிழ்நாட்டு மக்கள் சில நேரங்களிலே ஏமாறுவது உண்மைதான். ஆனால் தொடர்ந்து ஏமாற மாட்டார்கள். தமிழன் சிந்திக்கக் கூடியவன்தான். எண்ணிப்பார்க்கக் கூடியவன்தான், அடியோடு அறிவை இழந்தவிட்டவன் அல்ல. ஆனால் சூழ்நிலை காரணமாக சில நேரத்தில் தமிழக மக்கள் உண்மைகளை புரிநதுகொள்ள முடியாமலோ, அறிந்துகொள்ள முடியாமலோ இந்த நாட்டு மக்கள் ஏமாந்துபோயிருக்கிறார்கள். அப்படி ஒரு நிலையில்தான் கடந்த காலத்திலே அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிற நிலை ஏற்பட்டது. மற்றப்படி கலைஞருக்கோ, எனக்கோ நாம் ஆட்சியிலே இல்லை என்ற கவலை கிடையாது. 


கலைஞர் முதல் அமைச்சராக இருந்தால் தான் நான் மதிப்பேன் என்று கிடையாது. அவர் வீட்டின் ரோட்டில் நின்றாலும் நான் மதிப்பேன். முதல் அமைச்சர் இல்ல, பதவியே தேவையில்லை. செல்வாக்கு என்பது தேர்தல் மூலமாக கிடைப்பதுதான் செல்வாக்கு என்று எண்ணக்கூடாது. தமிழுக்கு தொண்டு செய்தவர் அதற்கே அவரை மதிக்கலாம். தமிழனுடைய இன உணர்வை வளர்த்தவர் அதற்கே மதிக்கலாம். கல்லக்குடி போராட்டத்திலே தலை வைத்து ரயில் வருவதற்கு முன்பு தலை வைத்து படுத்தவர் அதற்கே மதிக்கலாம். 16 வயதிலேயே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கொடிபிடித்தவர் அதற்கே மதிக்கலாம். தமிழ்நாட்டு தலைவர்களிலேயே அதிக முறை சிறைச்சாலைக்கு சென்றவர் அதற்கே மதிக்கலாம். சிறைச்சாலைக்கு போகுவதற்குக்கூட புதுப் புது வழி கண்டுப்பிடித்தவர் அதற்கே மதிக்கலாம். எனவே இப்படி அரசியலில் உள்ள வித்தகர்களுக்கெல்லாம் வித்தகராக விளங்குகிற கலைஞரை எத்தனையோ விஷயங்களுக்கு மதிக்கலாம்.


ஆனால் இன்றைய முதல் அமைச்சர் தமிழ்நாட்டுக்கு பழியாக வந்திருக்கிறார். அண்ணாவின் பெயரை அதிமுக என்ற காரணத்தினாலே அவருடைய படத்தோடு, உருவத்தோடு கொடியிலே அமைத்துக்கொண்டு அண்ணாவின் பெயர் விளங்குவதற்காக செய்கின்ற காரணங்களுக்கு குறுக்கீடாக இருக்கிறார் என்றால், இவரை விட வேறு யாராவது அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவார்களா என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அவரைக் கேட்டால் சொல்வார், நான் கண்ணகியையே தூக்கிப் போட்டவர் என்பார். ஏன் கண்ணகியை தூக்கிப் போட்டார் என்று அவருடைய கட்சிக்காரரையே கேட்டேன். கண்ணகியை அந்த அம்மாவுக்கு பிடிக்காது. ஏன் பிடிக்காது என்று கேட்டேன். அவங்களுக்கு சொல்கிற பெருமையெல்லாம் இவங்களுக்கு ஒத்துவராது என்றார்.


நான் ஒரு புத்தகத்தில் படித்தேன். வைதீக கொள்கையின் அடிப்படையில் உள்ளவர்களுக்கு எந்தப் பெண்ணையும் பெருமைப்படுத்தக் கூடாது. ஆரிய கலாச்சாரத்திலே பெண்கள் என்றால் அறிவில்லாதவர்கள். வைதீக கலாச்சாரத்திலே பெண்களை பெருமைப்படுத்தக் கூடாது. அதற்கிடையிலே திராவிட கலாச்சாரம் புகுந்த காரணத்தினால்தான் சில பெண் தெய்வங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய காலம் வந்தது. ஆகவே கண்ணகி திராவிட இனத்தினுடைய சின்னமாக இருந்த காரணத்தால், சேரன் செங்கூட்டுவன் அந்த கண்ணகிக்கு சிலை எடுத்த அந்த காலத்திலேகூட அந்த கண்ணகியினுடைய சிலையை போற்றுவதற்கு வைதீக பிராமணர் தயாராக இல்லை என்ற கருத்து ஒரு ஆராய்ச்சியாளர் எழுதியிருக்கிறார். ஆகவே அப்படி ஒரு நிலை இருந்த காரணத்தினாலே அந்த அம்மையார் கண்ணகி சிலையைக் கூட தூக்கி எறிந்தார். பின்னர் நம்முடைய ஆட்சி வந்தப் பிறகுதான் ஏற்கனவே கண்ணகி சிலை எங்கு இருந்ததோ அங்கு நிலை நிறுத்தினோம்.


அதுபோல தமிழ்நாட்டின் பெருமையை நிலைநாட்டுகிற பொறுப்பையெல்லாம் கலைஞருக்குத்தான். நண்பர்கள் சொன்னார்கள் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் பலதலைவருக்கு நினைவுச் சின்னங்கள். கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை இத்தனையும். கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் இந்த நாடே பெருமைப்பட கூடிய வகையில் தமிழ் மொழி செம்மொழி என்பதை மத்திய அரசை ஏற்க வைத்து, அந்த செம்மொழிக்கான ஆய்வு அரங்கம் சென்னையிலே உருவாக்கி அந்த ஆய்வரங்கம் கலைஞர் ஆட்சியிலே பழைய சட்டமன்ற கட்டிடத்திலே சிறப்பாக நடைபெற்றது.

ஆனால் ஜெயலலிதா புதிய சட்டமன்றம் சிறப்பாக கட்டப்பட்டு பிரதமரால் திறக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளாமல், பழைய சட்டமன்றத்திலே உருவாக்கப்பட்ட செம்மொழிக்கான ஆய்வரங்கத்தை தூக்கி எறிந்தார். அந்த ஆய்வகம் எங்கே போயிற்று தெரியவில்லை. புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பெயராலே ஒரு நூலகம் அமைக்கப்பட்டிருந்தது. அது எங்கே போயிற்று தெரியவில்லை. ஆகவே தமிழை தூக்கி எறிவார். தமிழனை மதிக்க மாட்டார். தமிழ் உணர்வுள்ள அறிஞர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார். தமிழருடைய புத்தாண்டு தை திங்கள் முதல் நாள் என்று தமிழரிஞர்கள் சொன்னால்கூட அவர் ஏற்க மாட்டார். அவர் பஞ்சாங்கத்தைத்தான் ஏற்பார். அப்படிப்பட்ட ஒருவர் தமிழக்கு, தமிழனுக்கு, திராவிடத்துக்கு மாறன ஒருவர் தமிழ்நாட்டிலே முதல் அமைச்சராக இருக்கிறார் என்று சொன்னால் உள்ளபடியே தமிழர்கள் ஏமாந்தவர்களாக அவரை தேர்ந்தெடுத்துவிட்டார்கள். இனி எதிர்காலத்திலாவது அந்த தமிழர்கள் அந்த ஏமாற்றத்திலிருந்து தமிழ்நாட்டை மீட்பதற்கு முற்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.



ஜனாதிபதி தேர்தலை இந்திய கம்யூனிஸ்டு புறக்கணிப்பது ஏன்?: தா.பாண்டியன் பேட்டி

Posted: 22 Jun 2012 10:07 PM PDT

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

கேரளாவில் அச்சுதமேனன் முதல்-மந்திரியாக இருந்தபோது கோவை மக்களுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி திட்டம் நிறைவேற்றப்பட்டு, பல ஆண்டுகளாக சச்சரவு இல்லாமல் இருந்து வந்தது. இப்போது கேரள அரசு திடீர் என்று சிறுவாணி ஆற்றில் புதிய அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வேலையையும் தொடங்கி விட்டது. 

அப்படி செய்தால் கோவைக்கு குடிநீர் வராது. கோவை மாவட்டமே பாதிக்கப்படும். கோவை தொழில் மாவட்டம் என்பதால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் அது தேசத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கேரள அரசை கண்டித்தும், இதில் மத்திய அரசு தலையிட கோரியும் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் இயக்கங்கள் நடத்த உள்ளோம். 

பிற அமைப்புகள், கட்சிகளுடன் இணைந்தும் போராட்டம் நடத்தப்படும். அது, மறியலா, முற்றுகை போராட்டமா என்பதையும், தேதியையும் பிறகு அறிவிப்போம். நாட்டில் பொருளாதார நெருக்கடி, மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவினால் வந்துள்ளது. இந்த நெருக்கடியில் 56 ஆயிரம் கோடி ரூபாய் ஐரோப்பிய நாடுகளின் நெருக்கடியை தீர்க்க கொடுக்கப்போவதாக பிரதமர் அறிவித்துள்ளார். 

இந்த தவறான கொள்கைக்கு பொறுப்பேற்க வேண்டியவர் நிதி மந்திரியாக இருந்த பிரணாப் முகர்ஜி. மனிதர் என்ற முறையில் அனுபவம் மிக்கவர், மூத்த அரசியல் வாதி. ஆனால் நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர். எனவே ஜனாதிபதி தேர்தலில் அவரை ஆதரிக்க இயலாது. சங்மாவை, பாரதீய ஜனதா முன்மொழிந்துள்ளதால் அவருக்கும் எங்கள் ஆதரவு இல்லை. ஜனாதிபதி தேர்தல் ஓட்டெடுப்பில் இந்திய கம்யூனிஸ்டு பங்கெடுக்காது. 

இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்





திருநங்கையாக ஜெயம் ரவி!

Posted: 22 Jun 2012 09:58 PM PDT


அமீர் ஒரு படத்தினை இயக்கி வெளிவர நீண்ட காலம் ஆனாலும், அப்படத்தில் நாயகனாக நடித்தவருக்கு கண்டிப்பாக நல்ல பெயர் கிடைக்கும்.

எப்போதுமே தனது நாயகர்களை எதார்த்தமாக நடிக்க வைத்து, அவர்களது முழுத்திறனையும் வெளிக் கொண்டுவர முயல்வார் அமீர்.

ஜெயம் ரவியை வைத்து 'ஆதிபகவன்' படத்தினை இயக்கி வருகிறார் அமீர். நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. நீது சந்திரா நாயகியாக நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி முதன் முறையாக இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார், ஆகையால் தான் படம் தாமதமாகிறது  என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இரட்டை வேடத்தில் ஒரு வேடம் திருநங்கை வேடமாம். இப்படம் வெளிவந்ததும் ஜெயம் ரவியின் நடிப்பை பார்த்து பலர் வாயைப் பிளக்கப் போவது உறுதி என்கிறது படக்குழு.

ஆரம்பத்தில் காதல் மற்றும் குடும்பக் கதைகளில் நடித்து வந்த ஜெயம்ரவி 'பேராண்மை' படத்தில் ஆக்ஷன் வேடத்தில் நடித்தார். 'ஆதிபகவன்' படத்தில் நடிப்பில் தனது இன்னொரு பரிமாணத்தை காட்டி இருக்கும் ஜெயம் ரவி தொடந்து வெவ்வேறு கதைக் களங்களில் நடிக்க உள்ளாராம்.



தமிழக மீனவர்களை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க ராஜபக்சே திட்டம்: டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

Posted: 22 Jun 2012 09:54 PM PDT

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் நீடித்த வளர்ச்சிக்கான இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்த ஐ.நா. மாநாட்டில் பங்கேற்று பேசிய இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து மீன் வளங்களையும், அரிய கடல் செல்வங்களையும் கொள்ளையடிப்பதாக குற்றம் சாற்றியுள்ளார். 

ராஜபக்சேவின் இந்த அபாண்டமான குற்றச்சாற்று கண்டிக்கத்தக்கது. சர்வதேச கடல் சட்டப்படி கடல் வளங்களை கொள்ளை அடிப்பவர்களை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கமுடியும் என்பதால் வங்கக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை கைதுசெய்து 20 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கும் நோக்குடன் இப்படி ஒரு குற்றச்சாற்றை இலங்கை அதிபர் கூறியிருக்கிறார். 

தங்களின் வாழ்வாதாரத்திற்காக வங்கக்கடலில் மீன் பிடிக்கசெல்லும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். இதுவரை 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டுள்ளனர். 

இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் தாக்குவதும், விரட்டியடிப்பதும் தொடர்கதையாகி விட்டன. இதனால் தமிழக மீனவர்கள் வாழ்வதா? சாவதா? என்பது தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களை 20 ஆண்டுகளுக்கு சிறையில் தள்ள ராஜபக்சே அனுமதி கோரியுள்ளார். 

இது இந்தியாவின் வலிமைக்கும் இறையாண்மைக்கும் விடுக்கப்பட்ட சவால் ஆகும். ராஜபக்சே பேசிய மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய குழுவினரும் பங்கேற்றிருந்த போதிலும் இதை அவர்கள் கண்டிக்கவில்லை. 

பின்னர் தம்மை ராஜபக்சே சந்தித்தபோதும் இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்ததாக தெரியவில்லை. இது மிகவும் வருத்தமளிக்கிறது. எனவே, மீனவர்கள் தொடர்பான இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்தியா கண்டனம் தெரிவிப்பதுடன், இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவையும் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 

இவ்வாறு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.




பிறந்த நாள் ஸ்பெஷல் : விஜய் 25!

Posted: 22 Jun 2012 11:08 PM PDT


ஏ,பி,சி என எல்லா சென்டர்களிலும் வேட்டையாடும் கில்லி கிங்! ஆக்ஷன் அதிரடியும் காமெடி கதகளியுமாக வெரைட்டி விருந்து வைக்கும் விஜய்யின் டிட் பிட்ஸ்...

* முதல் நான்கைந்து படங்களுக்குப் பிறகு விஜயகாந்த்தோடு நடித்த 'செந்தூரப்பாண்டி', விஜய்யைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது. அதை மிகவும் பெருந்தன்மையோடு இப்பவும் ஒப்புக்கொள்வார் விஜய்!

* பின்னணிப் பாடகராக 'தேவா' படத்தில் பாட ஆரம்பித்த விஜய், 2005-ல் 'சச்சின்' வரை 23 பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் ஏனோ  பாடுவதைத் தவிர்த்து வந்தவர், தற்போது 'துப்பாக்கி' படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார்.

* விஜய்க்குத் திருமணம் ஆனவுடனேயே அவரது காஸ்ட்யூம் டிசைனராக மாறிவிட்டார் மனைவி சங்கீதா. இன்றைக்குவரைக்கும் அவர் தேர்ந்தெடுத்துத் தருகிற டிரெஸ்களை மட்டுமே அணிகிறார் விஜய். இந்த காஸ்ட்யூம் டிசைன் சினிமா வரைக்கும் போகிற வாய்ப்பு இருக்கிறது!

* திடீரென்று நினைவு வந்தால் நண்பர்களோடு காரில் வந்து ஆசையாக லயோலா கல்லூரி வகுப்பு பெஞ்சில் உட்கார்ந்துவிட்டுச் செல்வார் விஜய். அன்றைக்கு மாணவர்களோடு உட்கார்ந்து கலகலப்பாக உரையாடும் விஜய்யை நீங்கள் இதற்கு முன் கண்டிருக்க மாட்டீர்கள்!

* ஜூன் 22 பிறந்த நாளன்று எங்கே இருந்தாலும் ஓடி வந்து தாயின் அருகில் இருக்கவே விரும்புவார். வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்து கிளம்பிவந்து அன்று முழுவதும் அம்மா பக்கமே இருக்கிற அம்மா பிள்ளை விஜய்!

* எவ்வளவு வேலை, ஷூட்டிங் முடிந்து வந்தாலும் ஹோம் தியேட்டரில் ஏதாவது ஒரு ஆங்கிலப் படம் பார்த்துவிட்டுத்தான் தூங்குவார். அதிசயிக்கும்படியான பெருவாரியான டிவிடி கலெக்ஷன் வைத்திருக்கிற பெருமை அவருக்கு உண்டு!

* நான்-வெஜ் உணவுகளின் மேல் விஜய்க்குப் பிரியம் உண்டு. அதுவும் அம்மா சமைத்த அசைவ உணவுகளுக்கு விஜய் அடிமை!

* விஜய்க்கு நகைகளின் மீது அவ்வளவாக ஆசை கிடையாது.

* ஹிந்தியில் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் அமிதாப்தான். இன்றைக்கும் அவர் நடித்து வெளியாகிற ஹிந்திப் படங்களுக்கு முதல் நாள்... முதல் ஷோ பார்க்க ஆசைப்பட்டுப் போவார்!

* ஜாலி மூடில் இருந்தால் மனைவி சங்கீதாவை 'ஹாய் கீஸ்' எனக் கூப்பிடுவார். எப்பவாவது கொஞ்சம் கோபமாக இருந்தால் 'வாங்க போங்க'தான்!

* வருஷத்துக்கு ஒரு தடவையாவது மனைவி, குழந்தைகளுடன் நிச்சயம் லண்டன் டிரிப் உண்டு. சங்கீதாவின் அப்பா வீட்டில் கொஞ்சநாள் இருந்த பிறகு, பயணம் அதற்கடுத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவடையும். எந்த நாட்டுக்கு, எந்த இடம் என்று டிசைட் பண்ணுவது பையன் சஞ்சய்தான்!

* தி.நகரில் சூர்யாவின் அடுத்த வீட்டுக்காரராக இருக்கிற டைரக்டர் பாரதிராஜா, கொட்டிவாக்கத்தில் விஜய்க்குப் பக்கத்துவீட்டுக்காரராக இருக்கிறார்!

* விளையாடுவதற்கு மிகவும் பிரியப்படுவார். கொட்டிவாக்கம் வீட்டில் இப்போது விளையாடுவது டென்னிஸ். இப்ப இவருக்கு விடாப்பிடியாக ஜோடி கட்டுவது அவரது மகன் சஞ்சய்தான்!

* சஞ்சய்யின் ஒவ்வொரு வயது கூடும்போதும் அவனது நடவடிக்கைகளை வீடியோவில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். 20 வயது ஆனதும் அவனது பிறந்த நாளுக்கு விஜய் அளிக்கப்போகிற பெரிய பரிசு அதுதான்!

* அப்பாவிடம் முதலில் சினிமாவில் நடிக்கிற ஆசையைச் சொல்ல, பேசிக் காட்டியது 'அண்ணாமலை' பட வசனம்தான். அதனால் இன்றைக்கும் அந்த வசனத்தை மனப்பாடமாகப் பேசிக் காட்டுவார்!

* நடனத்தில் மிகவும் பெயர் பெற்ற விஜய்க்கு பிடித்த நடனக்காரர்கள் பிரபுதேவா, லாரன்ஸ், மாதுரி தீட்சித்தானாம்!

* நெருக்கமான கல்லூரி நண்பர்களை அழைப்பது 'மச்சி'. மற்றவர்களை விஜய் அழைப்பது 'என்னங்கண்ணா!'

* கிச்சன் பக்கமும் எட்டிப் பார்ப்பார் விஜய். நெருங்கிய நண்பர்கள் குடும்பத்தோடு வந்தால், அழகிய தோசை வார்த்துக் கொடுப்பது இந்த அழகிய தமிழ் மகன்தான். அவர் தயாரித்துத் தருகிற காபி விசேஷ சுவையாக இருக்குமாம்!

* எப்போதும் விரும்பிச் சாப்பிடுவது மட்டன் குருமா, தோசை. இளம் தோசையாக இருந்தால் இன்னும் பிடித்தமாகச் சாப்பிடுவார்!

* வீட்டின் வராந்தாவில் காத்திருக்கும் எல்லா கார்களின் நிறமும் கறுப்பு.

* அம்மா ஷோபா சந்திரசேகர் இசை கச்சேரிகளில் பாட ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்துவார். அம்மாவின் கச்சேரிகளுக்கு முதல் ஆளாக ஆஜர் ஆவார் எப்போதும்!

* மகன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷாவும் அப்பாவின் நடிப்பில் ஆர்வமாக இருந்தாலும் படிப்பிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய். நாலு வயதில் இருந்தே கம்ப்யூட்டரில் விளையாடுகிறாள் சாஷா!

* எவ்வளவோ அழைப்புகள் வந்தும் பிற மொழிப் படங்களில் நடிக்கச் சம்மதிப்பது இல்லை விஜய். தமிழில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக நிற்கிறார்! சமீபத்தில் பிரபுதேவாவின் விருப்பத்திற்காக 'ரவுடி ரத்தோர்' படத்தில் அக்ஷய் கன்னாவுடன் ஒரு குத்தாட்டம் போட்டார்.

* விஜய்யோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா. உலக அழகி ப்ரியங்கா சோப்ரா அறிமுகமானது விஜய்யுடன் ஜோடி சேர்ந்த  'தமிழன்' படத்தில் தான்.

* ஜாலியாக ரிக்கார்டிங்கில் உட்கார ஆசைப்படுவார் விஜய். எப்பவும் அவரது சமீபத்திய பாடல்களின் முணுமுணுப்போடுதான் காணப்படுவார் விஜய்!

* வெளிநாடு படப்பிடிப்பு செல்லும் போதும் சரி, வரும் போதும் சரி முதலில் அம்மாவிற்கு ATTENDANCE கொடுத்து விட்டு தான் தனது கொட்டிவாக்கம் வீட்டிற்கு செல்கிறார்.

* ஒவ்வொரு படம் முடியும் போதும் அதில் பங்குபெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் அன்பளிப்பு கொடுத்து மகிழ்வது விஜய் வழக்கம்.


மேலும்

நல்ல கேரக்டர் அமைந்தால் சினிமாவில் மீண்டும் நடிப்பேன் -ஐஸ்வர்யாராய்



















துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி வீட்டில் ஆண்டுக்கு 171 சமையல் கியாஸ் சிலிண்டர்கள்

Posted: 22 Jun 2012 09:49 PM PDT


மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன. வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை பொறுத்த மட்டில், ஒரு சிலிண்டர் வாங்கி 21 நாட்கள் கழிந்த பிறகுதான் அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்ய முடியும். 

இந்நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை பற்றிய எண்ணெய் நிறுவனங்களின் வெளிப்படையான தகவல் பரிமாற்ற சேவையை மத்திய பெட்ரோலிய மந்திரி ஜெய்பால் ரெட்டி நேற்று டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்த சேவையின் மூலம் பொதுமக்கள், சமையல் கியாஸ் சிலிண்டருக்காக தாங்கள் செய்த பதிவு எந்த நிலையில் இருக்கிறது? தங்களுக்கு பின்னால் பதிவு செய்தவர்கள் யாராவது முன்கூட்டியே சிலிண்டர் பெறுகிறார்களா என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். 

இந்த தகவல் சேவை தளத்தில், கடந்த 31-ந் தேதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலத்தில் டெல்லியில் மிக மிக முக்கிய பிரமுகர்களின் இல்லத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை பற்றிய விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. 

அதன்படி, ஓர் ஆண்டில் அதிக சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தியவர்களின் பட்டியலின்படி பார்த்தால், டெல்லி பிருத்விராஜ் சாலையில் உள்ள பிரபல தொழில் அதிபர் நவீன் ஜிண்டாலின் இல்லத்துக்கு 369 சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டு உள்ளன. அதாவது ஒரு நாளைக்கு ஒரு சிலிண்டருக்கும் அதிகமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். 

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் அதிகாரபூர்வ இல்லத்தில் 171 சிலிண்டர்களும், வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி பிரணீத் கவுரின் வீட்டில் 161 சிலிண்டர்களும், டெல்லியில் உள்ள உத்தரகாண்ட் முதல்-மந்திரி விஜய் பகுகுணாவின் வீட்டில் 83 சிலிண்டர்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 

பாரதீய ஜனதா மூத்த தலைவர் ராஜ்நாத் சிங்கின் வீட்டுக்கு 80 சிலிண்டர்களும், முன்னாள் மத்திய மந்திரி எம்.எஸ்.கில் வீட்டுக்கு 79 சிலிண்டர்களும், பாரதீய ஜனதா எம்.பி. மேனகா காந்தி, காங்கிரசைச் சேர்ந்த சுரேஷ் கல்மாடி ஆகியோரின் வீடுகளுக்கு தலா 63 சிலிண்டர்களும், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்கின் வீட்டுக்கு 58 சிலிண்டர்களும், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவின் வீட்டுக்கு 49 சிலிண்டர்களும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரின் வீடுகளுக்கு தலா 45 சிலிண்டர்களும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்தின் வீட்டுக்கு 43 சிலிண்டர்களும், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் வீட்டுக்கு 42 சிலிண்டர்களும் சப்ளை செய்யப்பட்டு இருக்கின்றன. 

மிக மிக முக்கிய பிரமுகர்களின் இல்லங்களில் அதிக சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவது பற்றி மந்திரி ஜெய்பால் ரெட்டியிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில்: 

என்னை பார்க்க எனது வீட்டுக்கு சில சமயங்களில் 200 முதல் 300 பார்வையாளர்கள் வருகிறார்கள். அப்படி இருக்கும் போது சமையல் கியாஸ் பயன்பாடு அதிகமாக இருப்பது இயற்கையானதுதான்'' என்று வேடிக்கையாக கூறினார்.





பி.ஏ.சங்மா விட்ட சவால்! பின்வாங்கும் காங். தரப்பு!

Posted: 22 Jun 2012 09:45 PM PDT


ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பி.ஏ.சங்மா, நலிந்து வரும் பொருளாதாரம், பெருகி வரும் ஊழல்கள் குறித்து ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி நேருக்கு நேர் விவாதத்துக்கு தயாரா என விடுத்துள்ள சவாலை காங்கிரஸ் நிராகரித்தது.இது பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி, டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசுகையில், "நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்குமாறு இந்திய அரசியல் சட்டம் ஜனாதிபதிக்கு உத்தரவிடவும் இல்லை. அதிகாரம் வழங்கவும் இல்லை. எனவே இது குறித்த பொது விவாத அழைப்பு வாதப்பூர்வமாக பின்பற்றத் தகுந்தது அல்ல'' என கூறினார்.



தனது பதவி காலத்தில் 35 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்த ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்

Posted: 22 Jun 2012 09:42 PM PDT

சுப்ரீம் கோர்ட்டில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகள் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளில் தனது பரிசீலனைக்கு வந்த கருணை மனுக்களில் 35 பேரின் தூக்கு தண்டனையை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ரத்து செய்து உள்ளார். அதாவது அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இருக்கிறார். இவர்கள் 19 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என கூறப்படுகிறது. 

கடந்த 1981-ம் ஆண்டு முதல் இதுவரை 91 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி இருக்கிறார்கள். அவர்களில் 31 பேரின் கருணை மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த 31 மனுக்களில் 23 மனுக்கள் தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீலால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை ஆகும். இவர்கள் கடத்தல், கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களை செய்தவர்கள் ஆவார்கள். 

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டைச் சேர்ந்த மடாதிபதியான பண்டு பாபுராவ் திட்கே, 16 வயதான பள்ளிக்கூட மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்றவர். அவரது மரண தண்டனையை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ரத்து செய்து இருக்கிறார். இதேபோல், 5 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாண்டு என்பவனுக்கும் அவர் கருணை காட்டி உள்ளார். 

மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில், தனக்கு செல்வம் சேருவதற்காக 9 வயது சிறுவனை நரபலி கொடுத்த வழக்கில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் மரண தண்டனையை நோக்கி காத்து இருந்த சுசில் முர்மு என்பவனின் தூக்கு தண்டனையையும் அவர் ரத்து செய்து உள்ளார். இதே போன்று திருமண விழா ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரை கொன்று குவித்த வழக்கில் பியாரா சிங், சரப்ஜித் சிங், குர்தேவ் சிங், சத்னம் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அவர்களுடைய தூக்கு தண்டனையையும் ரத்து செய்து உள்ளார். 

இதேபோல், சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மோலைராம், சந்தோஷ் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோபி, மோகன் ஆகியோரின் தூக்கு தண்டனையையும் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ரத்து செய்து கருணை காட்டி இருக்கிறார். 

என்றாலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உள்பட 5 பேரின் கருணை மனுக்களை அவர் நிராகரித்து இருக்கிறார். மேற்கண்ட தகவல்களை ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.





ரீமேக் ஆகிறது ‘சகலகலா வல்லவன்’: கமல் வேடத்தில் சூர்யா

Posted: 22 Jun 2012 09:32 AM PDT


1982-ம் வருடம் ஏ.வி.எம். தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் சகலகலா வல்லவன். இப்படத்தில் கமல் கிராமத்துவாசி, பட்டணத்துவாசி என இரு வேடங்களில் அசத்தியிருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருந்தார்.

இப்படத்தில் இசைஞானி இசையமைப்பில் 'நேத்து ராத்திரி யம்மா, தூக்கம் போச்சுடி யம்மா', 'இளமை இதோ இதோ..' போன்ற பாடல்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றது.

80-களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய இந்த படத்தை தற்போது ரீமேக் செய்ய முடிவெடுத்திருக்கின்றனர். இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க சூர்யா விருப்பம் தெரிவித்திருந்தார்.

இப்படத்தின் ரீமேக் உரிமையைப் பெற சூர்யா வேறு ஒரு நிறுவனம் மூலமாக ஏ.வி.எம். நிறுவனத்தை அணுகியிருக்கிறார். ஆனால், ஏ.வி.எம்.நிறுவனமோ இப்படத்தை தாங்களே ரீமேக் செய்ய விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிக்க சூர்யாவையே ஒப்பந்தம் செய்துள்ளது ஏ.வி.எம்., இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


ரஜினியின் கோச்சடையான் கதை என்ன?

Posted: 22 Jun 2012 04:54 AM PDT


இந்த ஆண்டின் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் முதலிடத்தில் இருப்பது சந்தேகமில்லாமல் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்தான்.
ஆரம்பத்தில் இது வெறும் அனிமேஷன் படம்தானே, எப்படி வரப் போகிறதோ என்று சந்தேகம் கிளப்பியவர்கள், நாளுக்கு நாள் அந்தப் படம் குறித்த உண்மையான தகவல்கள் தெரிய வந்ததும், அமைதியாகி, ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளது சௌந்தர்யாவுக்கு நிச்சயம் நல்ல செய்திதான்!
இந்தப் படத்துக்கு தமிழ் திரையுலகம் தாண்டி, இந்தி, தெலுங்கு, ஜப்பான், கொரியா, யுஎஸ் என பல நாடுகளிலும் விசாரிப்புகள் தொடர்கின்றன. ஹாலிவுட்டில் நடிக்காமலேயே, ஹாலிவுட் நடிகருக்கு நிகரான செல்வாக்கைப் பெற்றுள்ள ஒரே நடிகர் என்ற பெருமை ரஜினிக்குக் கிடைத்திருக்கிறது.
கோச்சடையான் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. சில பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. அதற்காக மீண்டும் ரஜினி ஹாங்காங் செல்லப் போகிறார்.
இந்த நிலையில் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் ரஜினி, அப்பா - மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். கதைப்படி ரஜினி, ஜாக்கி ஷெராப், நாசர் ஆகியோர் பண்டைய தமிழ் மன்னர்கள். ரஜினி, ஜாக்கி ஷெராப் ஆகிய இரு மன்னர்களுக்கும் இடையில் சண்டை நடக்கிறது.
இந்த சண்டை அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது. ரஜினியின் மகனுக்கும் (ரஜினி), ஜாக்கி ஷெராப் மகனான ஆதிக்கும் நடக்கும் சண்டையில் யார் வெற்றி பெற்றார்கள்? எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இதில் ரஜினிக்கு உதவும் பாத்திரத்தில் சரத்குமார் வருகிறார்.
இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்கிறார்கள். படப்பிடிப்பு குறைந்த நாட்களில் முடிந்துவிட்டாலும், தொழில்நுட்ப நேர்த்திக்காக இன்னும் சில மாதங்கள் கூட அவகாசம் தேவைப்படுகிறதாம். ஹாங்காங், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லண்டனைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தபர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



பிரணாப் மீதான புகார்களை விசாரித்தே ஆக வேண்டும்: அன்னா குழு

Posted: 22 Jun 2012 04:40 AM PDT

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளிடமும் ஆதரவு சேகரிக்கும் முயற்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், பிரணாப் மீது கூறப்படும் பல்வேறு ஊழல் புகார்களை, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாகவே விசாரித்து முடிக்க வேண்டும் என அன்னா ஹசாரே குழு வலியுறுத்தியுள்ளது. 

ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் அறிவிக்கப்பட்ட உடனேயே, அவர் குற்றமற்றவர் என நிரூபித்த பின்னர் தான் பதவியேற்க வேண்டும் என அன்னா குழு அறிவித்திருந்தது. அப்போது அன்னா குழுவுக்கு, பிரணாப் முகர்ஜி அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 'அவர் மீது குற்றம் சாட்டுவது அரசியல் நெறிமுறைக்கு அப்பாற்பட்டது. மேலும் சுயநல நோக்கம் கொண்ட இந்த குற்றச்சாட்டுக்கள் பொறுப்பின்மையை  பிரதிபலிக்கிறது' எனக் கூறப்பட்டுள்ளது. 

இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரணாப் முகர்ஜிக்கு, அன்னா குழுவினர் அனுப்பியுள்ள கடிதத்தில் தங்களது கோரிக்கையை நியாயப்படுத்தி இருந்ததோடு பிரணாப் மீதான புகார்களை விசாரித்தே ஆக வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் இக்கடிதத்தில் அன்னா ஹசாரேயின் கையெழுத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, அன்னா குழு உறுப்பினர்களான ஷாந்தி பூஷன், அரவிந்த் கெஜ்ரிவால், பிரஷாந்த் பூஷன், கிரண் பெடி, குமார் பிஸ்வாஸ், மனீஷ் சிசோதியா மற்றும் சந்திரமோகன் உள்ளிட்டோரின் கையெழுத்துக்கள் இடம்பெற்றிருந்தன.





ஷங்கரின் 'ஐ' யில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் - முழு விவரம்!

Posted: 22 Jun 2012 04:21 AM PDT


ஷங்கரின் அடுத்த படத் தலைப்பு 'ஐ'.படம் தொடர்பான மற்ற விவரங்களை இப்போது ....

ஐ படத்தில் விக்ரம் - சமந்தா ஜோடி. இந்தப் படத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகனும் பிரபல தயாரிப்பாளருமான ராம்குமார் முக்கிய வேடத்தில் நடிப்பது. ராம்குமார் இதற்கு முன் அறுவடை நாள் படத்தில் கிட்டத்தட்ட ஹீரோவுக்கு இணையாக நடித்தார். அதன் பிறகு நடிக்கவில்லை.

பரடத்தின் இன்னொரு பிரதான வேடத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி நடிக்கிறார்.

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுடன் முதல்முறையாக ஷங்கர் இணையும் படம் இது.
காமெடிக்கு சந்தானம் கைகோர்க்கிறார்.

ஐ என்பதற்கு - ஐந்து என்பதைத் தவிர, அழகு, அரசன், ஆசான், வியப்பு, மேன்மை, எழுத்து, எசமானன், நுண்மை, அம்பு, ஐயம் என பல பொருள்கள் உள்ளன. இவற்றின் கலவையாக இந்தப் படம் உருவாகிறது, என செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில் மென் இன் பிளாக் சீரிஸ் படங்களில் பணிபுரிந்த மேரி வாட், கதாபாத்திரங்களுக்கு பிரத்யேகமான உடைகளை வடிவமைக்கிறார்.
ஹாரிபாட்டர் சீரிஸ் படங்களில் பணியாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரைசிங் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் விஷுவல் எஃபக்ட்ஸ் பகுதிகளை உருவாக்குகிறது.

ஹாலிவுட் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்களும் இந்தப் படத்தில் பணிபுரிகிறார்கள்.
சண்டைக் காட்சிகளை அனல் அரசுவும், சீனாவைச் சேர்ந்த பீட்டர் மிங்கும் இணைந்து அமைக்கிறார்கள்.

இது அரசியல் படம் அல்ல... ரொமான்ட்டிக் த்ரில்லர் என்று கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர். படத்தின் படத்தொகுப்புப் பணியை ஆண்டனி ஏற்றுள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கபிலன் எழுதி விஜய்பிரகாஷ் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
இந்த படத்துக்கு வசனம் எழுதுவதன் மூலம் இரட்டை எழுத்தாளர்கள் சுபா முதல் முறையாக ஷங்கருடன் இணைகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.



கருப்புக் கண்ணாடியுடன் மு.க.ஸ்டாலின்.. கருணாநிதியின் அடுத்த வாரிசா??

Posted: 22 Jun 2012 04:10 AM PDT


திமுக செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையைப் போலவே கருப்புக் கண்ணாடியுடன் வந்தது அனைவரையும் சற்றே சிந்திக்க வைத்து யோசிக்க வைத்தது.
திமுக செயற்குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு வந்த அத்தனை பேரின் பார்வையும் ஸ்டாலின் மீதுதான் இருந்தது. காரணம், அவர் போட்டிருந்த கருப்புக் கண்ணாடி. கருப்புக் கண்ணாடியுடன் கருணாநிதிக்குப் பக்கத்தில் அவர் அமர்ந்திருந்த விதம் ஆயிரம் அர்த்தங்களைச் சொல்வதாக திமுகவினர் நமுட்டுச் சிரிப்புடன் பேசிக் கொண்டனர்.
தலைவரைப் போலவே தளபதியும் கருப்புக் கண்ணாடியுடன் வந்திருப்பதால் இவர்தான் அடுத்த வாரிசு என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்களா என்றும் சிலர் பேசிக் கொண்டனராம்.
கருப்புக் கண்ணாடியுடன் ஸ்டாலின் வந்ததற்குரிய காரணம் சொல்லப்படவில்லை. ஒரு வேளை இது தெரிந்துதான் மு.க.அழகிரி கூட்டத்திற்கு வராமல் போய் விட்டாரா என்று தெரியவில்லை!!



ஒலிம்பிக்கை புறக்கணிக்க முடிவு: லியாண்டர் பயசை சமாதனப்படுத்த முயற்சி

Posted: 22 Jun 2012 04:09 AM PDT


லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஒரே ஒரு அணியை அனுப்ப அகில இந்திய டென்னிஸ் சங்கம் முடிவு செய்தது.
 
அதன்படி ஒலிம்பிக் போட்டிக்கு நேரடி தகுதி பெற்ற இந்தியாவின் நம்பர் ஒன் வீரரான லியாண்டர் பயசுடன் மகேஷ் பூபதி ஜோடியாக விளையாடுவார் என்று அறிவித்தது. கருத்து வேறுபாடு காரணமாக பயசுடன் விளையாடாமல் வேறு ஒரு ஜோடியுடன் ஆடும் மகேஷ் பூபதி இந்த முடிவை ஏற்க மறுத்தார்.
 
ஒலிம்பிக்கில் பயசுடன் இணைந்து ஆடமாட்டார் என்று அறிவித்தார். அதோடு மகேஷ்பூபதியுடன் இணைந்து ஆடும் ரோகன் போபண்ணாவும் பயசுடன் சேர்ந்து ஆடமாட்டேன் என்று அறிவித்தார்.
 
இதனால் ஜூனியர் வீரர் ஒருவரை பயசுடன் ஜோடியாக ஆட வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு பயஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அனுபவம் இல்லாத வீரரை ஜோடியாக்கி னால் ஒலிம்பிக்கில் இருந்து விலகுவேன் என்று மிரட்டினார்.
 
இந்த நிலையில் இந்த விஷயத்தில் அகில இந்திய டென்னிஸ் சங்கம் நேற்று முடிவு எடுத்து அறிவித்தது. அதன்படி ஒலிம்பிக் போட்டிக்கு ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2 அணிகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. பயஸ்- விஷ்ணுவர்த்தன் ஒரு ஜோடி என்றும், மகேஷ் பூபதி-போபண்ணா மற் றொரு ஜோடி என்றும் அறிவித்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவுடன், லியாண்டர் பயஸ் ஆடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
 
அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் இந்த முடிவுக்கு லியாண்டர் பயஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகலாம் என்று அவரது தந்தை வேஸ் பயஸ் கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் கூறும்போது,
 
அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் இந்த முடிவை எனது மகன் ஏற்றுக்கொள்ள மாட்டான். மகேஷ்பூபதி- போபண்ணா மிரட்டலுக்கு டென்னிஸ் சங்கம் பணிந்து விட்டது என்றார்.
 
இரண்டு அணி மற்றும் அனுபவமில்லாத வீரருடன் ஆடுவது ஆகியவற்றின் காரணமாக பயஸ் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளார். விம்பிள்டன் போட்டியில் விளையாடுவதற்காக சென்றுள்ள அவரிடம் இது குறித்து கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
 
லியாண்டர் பயசை சமானப்படுத்தி ஒலிம்பிக்கில் ஆட வைக்க அகில இந்திய டென்னிஸ் சங்கம் முடிவு செய்து உள்ளது. அதன்படி டென்னிஸ் தேர்வு குழு தலைவர் ரோகித் லண்டன் செல்கிறார்.
 
6-வது முறையாக ஒலிம்பிக்கில் ஆடி சாதனை படைக்க இருக்கும் நிலையில் பயஸ் தற்போது அதில் விலகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். 1996-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் அவர் வெண்கல பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



'போதை டான்ஸ்' விவகாரம்: நித்தியானந்தா மீது நானே கேஸ் போடுவேன்... நீதிபதி ஆவேசம்!

Posted: 22 Jun 2012 04:05 AM PDT


மதுரை ஆதீன மட வளாகத்தில் புனித நீரைக் குடித்து விட்டு மதுரை ஆதீனம், நித்தியானந்தா, வைஷ்ணவி உள்ளிட்டோரும், ஆண்களும், பெண்களும் டான்ஸ் ஆடியது தொடர்பான புகாரில் முகாந்திரம் உள்ளது. எனவே இதுகுறித்து உடனே போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், இல்லாவிட்டால் நானே வழக்குப் பதிவு செய்வேன் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி செல்வம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்து மக்கள் கட்சி சார்பில் சோலைக்கண்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.அதில், மதுரை ஆதீனம் என்னை மடத்திற்கு அழைத்திருந்தார். பிறகு அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் என்னை கலந்து கொள்ளக் கூறினார்கள்.

அப்போது புனித நீர் என்ற பெயரில் போதை கலந்த பானத்தை அங்கிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள், எனக்கும் கொடுத்தார்கள். அடுத்து நித்தியானந்தாவும், ஆதீனமும் மூன்றுக்கும் மேற்பட்ட புலித்தோலை கீழே போட்டு அதில் அமர்ந்திருந்தனர். அங்கு யானைத் தந்தங்களும் இருந்தன.
அதன் பிறகு நித்தியானந்தா, மதுரை ஆதீனம், ஆதீனத்தின் பெண் உதவியாளர் வைஷ்ணவி மற்றும் ஆண்களும், பெண்களும் போதையில் டான்ஸ் ஆடினர். கேட்டால் ஆனந்த நடனம் என்றனர்.

இந்த நடவடிக்கையால் மதுரை ஆதீனத்தின் புனிதம் கெட்டு விட்டது. ஆதீனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் எனது புகாரின் மீது அவர்கள் நடவடிக்கை எதையும் எடுக்காமல் உள்ளனர். புகாரைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் நித்தியானந்தா, மதுரை ஆதீனம், வைஷ்ணவி ஆகியோரைக் கைது செய்யவும் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், மதுரை ஆதீனம், நித்தியானந்தா, வைஷ்ணவி உள்ளிட்ட 6 பேர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஜூன் 22ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி செல்வம், புகாரில் முகாந்திரம் இருக்கிறது. எனவே உடனடியாக போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் அதைச் செய்ய மறுத்தால் நானே வழக்குப் பதிவு செய்ய வேண்டி வரும் என்று அதிரடியாக அறிவித்தார்.

முன்னதாக உயர்நீதிமன்றக்கிளை அனுப்பிய சம்மனை மதுரை ஆதீனம் பெற மறுத்து விட்டார். அதேசமயம், நித்தியானந்தாவும், வைஷ்ணவியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இருவரும் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜரவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



நரேந்திர மோடிக்கு ஆதரவளிக்கும் பீகார் பாரதீய ஜனதாவினர்: நிதிஷ்குமார் அதிர்ச்சி

Posted: 22 Jun 2012 03:55 AM PDT

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் இன்று நடத்தப்பட்டன. பீகாரில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட அம்மாநில பாரதீய ஜனதா தொண்டர்கள், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் படங்களை ஏந்தியும், அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியும் மோடிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். 

சமீபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கருத்து தெரிவித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், '2014-ல் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதசார்பற்ற தலைவர் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' எனக் கூறினார். 

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முதலில் இவ்வாறு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்த நிதிஷ், அதன் பின்னர் வெளிப்படையாகவே மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

இந்நிலையில் மாநிலம் கடந்தும் பாரதீய ஜனதா தொண்டர்களிடையே மோடிக்கு பலமான ஆதரவு இருப்பதை நிதிஷ்குமாருக்கு உணர்த்தவே தாங்கள் இவ்வாறு நடந்துகொண்டதாக, அத்தொண்டர்கள் தெரிவித்தனர். 

மேலும், 'மோடி சிந்தாபாத்' போன்ற கோஷங்களையும் அவர்கள் முழங்கினர். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க நிதிஷ்குமார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தனது சொந்த மாநிலத்திலேயே மோடிக்கு ஆதரவு வலுத்து வருவது நிதிஷ்குமாரை கலக்கமடைய செய்துள்ளது.







Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™