Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மக்களின் குரல்

மக்களின் குரல்


அட்டாளைச்சேனை ஊடகவியாளரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 02 Jun 2012 04:33 AM PDT

அட்டாளைச்சேனை பிராந்திய ஊடகவியாளர் ஒருவரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கடந்த 28ஆம் திகதி தாக்கிய சம்பவத்தை கண்டித்து ஊடகவியாளர்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அட்டாளைச்சேனை பொதுச்சந்தை சதுக்கத்தின் முன்னால் இன்று ஒன்று கூடிய ஊடகவியலாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

இவ் ஆர்ப்பாட்டம் முஸ்லிம் ஜக்கிய ஊடகவியாளர் ஒன்றியம், அம்பாறை மாவட்ட மீடியா பேரம், மூண்பிறைட் ஊடகவியாளர் சங்கம், தேசிய ஜக்கிய ஊடகவியாளர் ஒன்றியம், ஆகிய ஊடக சங்கங்கள் ஒன்றினைந்த ஏற்பாட்டில் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் இதில் ஜவாத்தின் அரசியல் பயணத்துக்கு முற்றுப் புள்ளி வைப்போம், ஊடகவியாளருக்கு எதிரான அடக்கு முறையை நிறுத்து, பேனாமுனைக்கு முன் காடைத்தனம் வெற்றுத் தூசு, உடக சுதந்திரத்தை நிலைநிறுத்த போராடுவோம் என பல வாசகங்கள் தாங்கிய சுலோகங்களை ஏந்தியிருந்தனர். 

முன்னாள் போராளிகள் 75 பேருக்கு இன்று விடுதலை

Posted: 02 Jun 2012 04:27 AM PDT

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலர் இன்று சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர். 

இதன் போது முன்னாள் போராளிகள் 75 பேர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாக சிறைச்சாளைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜவீர தெரிவித்தார். 

மேலும் 678 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

இதுவரையில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நிலையில் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்திரசிறி கஜவீர தெரிவித்தார். 

பாராளுமன்றத்துக்கான தேர்தல்களில் மதகுருமார் போட்டியிடுவதை அரசியல் அமைப்பு ரீதியாக தடை யோகேஸ்வரனுக்கு ஆப்பு

Posted: 01 Jun 2012 08:47 PM PDT


இலங்கை பாராளுமன்றத்துக்கான தேர்தல்களில் மதகுருமார் போட்டியிடுவதை அரசியல் அமைப்பு ரீதியாக தடை செய்வதற்கான நகர்வு ஒன்றினை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான விஜயதாஸ ராஜபக்ஷ முன்னெடுத்துள்ளார். 

இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேசியுள்ள அவர் இது குறித்த தனது முயற்சிகள் வெற்றிபெறுமாயின் அது 19 வது அரசியலமைப்பு திருத்தமாக அமையும் என்றும் கூறியுள்ளார். 

இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தனக்கு ஆதரவு தரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும், தொய்வடைந்துபோகும் பாராளுமன்ற தரத்தை தடுத்து நிறுத்தவும் மதகுருமாரால் சாதகமான பங்களிப்பை செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கொண்டு பார்க்கையில் மதகுருமார் அரசியலில் இருந்து தவிர்க்கப்படுவது சரியானதே என்று அரசியல் ஆய்வாளரான கீதபொன்கலன் தெரிவித்துள்ளார். 

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் போன்ற விடயங்களிலும் பாராளுமன்ற மதகுருமாரின் செயற்பாடுகள் பாதகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டு. பொது நூலக நிர்மாண பணிகளுக்கு கிழக்கு முதல்வர் 40 மில்லியம் ரூபா ஒதுக்கீடு

Posted: 01 Jun 2012 01:32 PM PDT


மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டு வரும் பாரிய பொது நூலகத்தின் கட்டிட நிர்மாண பணிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது விசேட அபிவிருத்தி நிதி மூலம் 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

மட்டக்களப்பின் ஆச்சரியமாக சுமார் 250 மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முழு முயற்சியின் கீழ் இந்த பொது நூலகம் அமைக்கப்பட்டு வருகின்றது.

இதற்காக இதுவரையில் 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அடுத்த வருடம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த பொது நூலகமானது சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்களையும் எங்களையும் வாழ விடுங்கள்: மட்டக்களப்பில் புகைத்தல் ஒழிப்பு வாரம்! (படங்கள்)

Posted: 01 Jun 2012 01:24 PM PDT


சர்வதேச புகைத்தல் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. 

இதன் ஒரு கட்டமாக கல்லடி வேலூர் சமுர்த்தி வங்கியும் சமுர்த்தி ஒன்றியமும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வீதி நாடம் கல்லடி மண்கூண்டு கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்றது. 

இதன்போது மாணவர்கள், சமுர்த்தி ஊழியர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது விழிப்புணர்வு கொடியும் விநியோகிக்கப்பட்டது. 

உங்களையும் எங்களையும் வாழ விடுங்கள்: மட்டக்களப்பில் புகைத்தல் ஒழிப்பு வாரம்! (படங்கள்)

திருக்கோவில் பிரதேச போக்குவரத்தில் தனியார் பஸ்கள் இல்லை

Posted: 01 Jun 2012 01:23 PM PDT


திருக்கோவில் தனியார் போக்குவரத்து சங்க ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். 

திருக்கோவில் மட்டக்களப்பு தனியார் பஸ் நடத்துனர் ஒருவரை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வைத்து தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து இந்த பகிஸ்கரிப்பு இடம்பெறுகிறது. 

திருக்கோவிலில் இருந்து வழமைபோல இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதான வீதி ஊடாக மட்டக்களப்பிற்கு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பஸ் வண்டி நடத்துனர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். 

நடத்துனரை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வைத்து அதேபிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் பஸ்வண்டியை இடைமறித்து தாக்கியுள்ளார். 

இச்சம்பவத்தை கண்டித்தும் தாக்கிய பஸ் உரிமையாளரை கைதுசெய்யுமாறும் கோரி இந்த பஸ்கரிப்பில் திருக்கோவில் தனியார் போக்குவரத்து சங்கம் ஈடுபட்டுள்ளது. 

இவ் பகிஸ்கரிப்பின் காரணமாக திருக்கோவில் பிரதேச பிரயாணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல்வாதிகளின் விருப்பத்தின்படி நியமனங்கள் வழங்கப்படுமானால் போராட்டம் வெடிக்கும்!

Posted: 01 Jun 2012 01:21 PM PDT


மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கவேண்டும். அதனைவிடுத்து அரசியல்வாதிகளின் அட்டவணைகளின் படி நியமனங்கள் வழங்கப்படுமானால் அதற்கெதிராக சாத்வீக ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

மட்டக்களப்பு, விவேகானந்தா கல்வி நிலையத்தில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் அச்சங்கத்தின் தலைவர் வை.பிரதீபன் இவ்வாறு தெரிவித்தார். 

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 

மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிடல் திணைக்களத்துக்கான பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை அடுத்த வாரம் இடம்பெறும் என மாவட்ட அரசாங்க அதிபர் சார்ள்ஸ் தெரிவித்தார். 

நாங்கள் அவரை சந்தித்து மட்டக்களப்பில் பட்டததாரிகள் இன்றைய நிலை அரசியல்வாதிகளின் அட்டவனையின் அடிப்படையில் நியமனங்களை வழங்காது ஆண்டின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கவேண்டும் என கோரியிருந்தோம். 

எனினும் அவ்வாறு வழங்கமாட்டாது என அவர் உறுதியளித்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளின் நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் கதைத்துள்ளதாகவும் அவர் அனைவருக்கும் நியமனங்கள் வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தார். 

2004 - 2009ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர்கள் அனைவருக்கும் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் ஆனால் தமக்கு அதிகளவான பட்டதாரிகள் தேவையாகவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் எம்மிடம் தெரிவித்துள்ளார். 

உண்மையில் எமது பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எமது சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். அவர் எமக்கு வழங்கியுள்ள உறுதிமொழிகள் எமக்கு புது உத்வேகத்தை தந்துள்ளது. 

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளாகிய நாங்கள் ஒன்றுபட்ட சக்தியாக வெளிப்படுவதன் மூலமே எமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளமுடியும். அத்துடன் சங்கத்தினை எவ்வளவுக்கு நாங்கள் பலப்படுத்துகின்றோமோ அந்தளவுக்கு எமக்கு பாரிய வெற்றியை எட்டமுடியும் எனவும் அவர் தெரிவித்தார். 

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு அருகில் மட்டு தமிழரின் சடலம் மீட்பு (படங்கள்)

Posted: 01 Jun 2012 01:19 PM PDT

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு அருகில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

நேற்று இரவு கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் மட்டக்களப்பு கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த தமிழர் என தெரிவிக்கப்படுகிறது. 

இவர் 38 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு அருகில் மட்டு தமிழரின் சடலம் மீட்பு (படங்கள்)

73 ஆயிரம் ரூபா பணத்தை திருடிய 13 சிறுவன் கைது

Posted: 01 Jun 2012 01:17 PM PDT


ஏறாவூர் கடுப்பல்லம என்ற பிரதேசத்தில் 73,430 ரூபா பணப் பொதியை திருடிய சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இத் திருட்டுச் சம்பம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 13 வயதுடைய சிறுவன் என பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று முன்தினம் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் நேற்றைய தினம் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

திருடப்பட்ட பணத்தில் 61,460 ரூபா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

களுதாவளையில் கண்ணகி வரலாறு கரகம் சதங்கை அணிவிழா (புகைப்பட்கள்)

Posted: 01 Jun 2012 01:02 PM PDT

களுதாவளையில் கண்ணகி வரலாறு கரகம் சதங்கை அணிவிழா 31.01.2012 அன்று இடம்பெற்றது.










இலங்கையில் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகளை தமிழகம் ஏன் புறக்கணிக்கிறது?

Posted: 01 Jun 2012 12:09 PM PDT


International Tamil Writers Forum
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
 P.O.BOX 350,Craigieburn,Vic-3064 ,AUSTRALIA T.Ph:             00 61 3 9308 1484      
                            E.Mail:international.twfes@yahoo.com.au
ஊடக அறிக்கை:
 இலங்கையில் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகளை தமிழகம் ஏன் புறக்கணிக்கிறது?
போருக்குப்பின்னர் ஈழத்தமிழ் இலக்கியம் உயிர்ப்புப்பெறவேண்டாமா?
இலக்கிய உறவுக்கு நீட்டும் கரத்தை துண்டிக்கவேண்டாம் !
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பாளர் முருகபூபதி அறிக்கையூடாக வேண்டுகோள்.
murugapoobathyஇலங்கையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் சார்ந்த எந்தவொரு விழாவோ ஆய்வரங்கோ அல்லது மாநாடோ நடைபெற்று அவற்றுக்கு தமிழக எழுத்தாளர்களை தமிழ் அறிஞர்களை அழைத்தால்  முதலில் தமிழ்நாட்டிலிருந்தே  எதிர்ப்புக்குரல் வந்துவிடுகிறது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைந்ததைத்தொடர்ந்து போர்க்குற்றம் நிகழ்ந்த இலங்கையில்; தமிழ்மொழி சார்ந்த ஒன்றுகூடல்களை தமிழ்நாட்டில் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது வழக்கமாகிவிட்டது.இலங்கையில் கொழும்பில் நடக்கும் எந்தவொரு பொது நிகழ்ச்சியும் இலங்கை அரசின் ஆதரவுடனும் ஆசியுடனும்தான் நடப்பதாக கற்பனைசெய்துகொண்டு அறிக்கை விடுவதும் வழக்கமாகிவிட்டது.
2011 ஆம் ஆண்டு சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தவிருந்தவேளையிலும் தமிழகத்திலிருந்து எதிர்ப்புக்குரல் ஓங்கி ஒலித்தது.எனினும் குறிப்பிட்ட மாநாட்டில் சில எழுத்தாளர்கள் உட்பட சில  சிற்றிதழ் ஆசிரியர்களுமாக  சுமார் ஐம்பதுபேரளவில் தமிழ்நாட்டிலருந்து வந்து கலந்து சிறப்பித்தனர்.
குறிப்பிட்ட மாநாடு தொடர்பான முதலாவது ஆலோசனைக்கூட்டம் கொழும்பு தமிழச்சங்கத்தில் 2010 ஜனவரி முதல் வாரம் நடந்தது. தமிழக சிற்றிதழ்கள் சிலவற்றிலும் நடைபெறவிருக்கும் மாநாடு பற்றிய செய்திகள் வந்தபின்பு, சுமார் ஆறுமாதங்கள் கடந்த நிலையில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.
இதேவிதமாகவே தற்போதும்  நாளை ஜூன் 1 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஆரம்பமாகவுள்ள பாரதி விழா, மற்றும் இலக்கிய மாநாட்டிற்கும் தமிழகத்திலிருந்து எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது.
பல மாதகாலமாக கொழும்பு தமிழ்ச்சங்கம் ஆலோசித்து நடைபெறுவதே நாளை ஆரம்பமாகும் நிகழ்ச்சி.
தமிழ்ச்சங்கத்திற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. அதன் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டே பாரதிவிழாவும் இலக்கிய மாநாடும் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது என்று இதுவரையில் வெளியான அனைத்து செய்திகளும் தெரிவிக்கின்றன.இந்நிலையில் தமிழக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் வை.கோபாலசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையும் புலவர் புலமைப்பித்தன் உட்பட சுமார் 50 படைப்பாளிகள், கலைஞர்கள். வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தமிழ்ச்சங்க மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பு இருப்பதாகச்சொல்கின்றன.
இதில் எந்த உண்மையும் இல்லை. ஏற்கனவே 2011 இல் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு தெரிவித்த எதிர்ப்பு அலைதான் மீண்டும் எழுந்திருக்கிறது.
கொழும்பு தமிழ்ச்சங்கம் கடந்த 70 வருட காலத்துள் எத்தனையோ தமிழ் விழாக்களை, மாநாடுகளை, இலக்கிய சந்திப்புகளை, நூல் வெளியீடுகளை நடத்தியிருக்கிறது. அவற்றில் தமிழக அறிஞர்கள், படைப்பாளிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சங்கத்தில் நீண்டகாலமாக இயங்கும் பெறுமதி மிக்க நூல் நிலையத்திற்கு திராவிட பாரம்பரியத்தில் வந்த தமிழக அரசும் பெருமளவு நூல்களை ஏற்கனவே வழங்கியிருக்கிறது.
தற்போது படைப்பாளிகள் சார்பில் எதிர்ப்புக்குரல் எழுப்பும் தமிழக எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும் தமிழ்ச்சங்க நிகழ்வில் 2010 ஆம் ஆண்டு கலந்துகொண்டவர்தான். இலங்கையில் 1958, 1977, 1981, 1983 ஆகிய காலப்பகுதிகளில் இனவாத வன்செயல்கள் நடந்தன. அப்பொழுது தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள வெள்ளவத்தை உட்பட அதன் சுற்றுப்பிரதேசங்களிலெல்லாம் வன்செயல்கள் நடந்தன. தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பாதிக்கப்பட்டார்கள். அகதிகளாகி இடம்பெயர்ந்தார்கள்.
எனினும் கொழும்பு தமிழ்ச்சங்கம் இந்த வன்முறைகளினால் அழிந்துவிடவில்லை. அதன் பணிகள் தடைப்படவில்லை. தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் மட்டுமின்றி சிங்கள எழுத்தாளர்களும் இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி ஒரு தாய்மக்கள் போன்று உறவாடி கருத்துப்பரிமாற்றம் செய்கிறார்கள்.
அரசாங்கங்கள் வரலாம் போகலாம். ஆட்சித்தலைவர்கள் மாறலாம். இனவாத வன்செயல்களும் கடந்துசெல்லும் மேகங்கள் போன்று வந்துபோகலாம். ஆனால் இலங்கையில் தமிழும் தமிழர்களும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள்.அதனால்தான் 80 ஆண்டுகளைக்கடந்தும் வீரகேசரி கொழும்பிலிருந்து இன்னமும் தங்கு தடையின்றி வெளியாகிக்கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தமிழ்ப்பாடசாலைகள் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இயங்குகின்றன.
இந்த யதார்த்த உண்மைகளை குறிப்பிட்ட ஐம்பது பேர் கருத்துச்சொல்லும் தமிழக படைப்பாளிகள் இயக்கமும் மறுமலர்ச்சி தி.முக. தலைவரும் ஏன் ஏற்றுக்கொள்ளத்தயங்குகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபின்னர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியிருந்த இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தமிழர்கள் வந்து வந்து திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். தமது உறவுகளையும் சந்தித்து திருமணம் உட்பட பல குடும்ப நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறார்கள்.
யாழ்;ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த உற்சவத்திலும் விரதம் இருந்து வந்து கலந்து பிரார்த்திக்கிறார்கள். அவ்வாறே யுத்தம் நிகழ்ந்த முல்லைத்தீவுப்பிரதேசத்தில் வற்றாப்பளை அம்மன் கோயில் பொங்கலுக்கும் நயினை நாகபூஷணி அம்பாள் திருவிழாவுக்கும் வருகைதருகிறார்கள்.
கொழும்பில் ஆடிவேல் விழாவையும் தரிசிக்கிறார்கள். இந்நிகழ்வுகளுக்கு தமிழக நாதஸ்வர வித்துவான்களும் கொழும்பு கம்பன் விழாவுக்கு தமிழக அறிஞர்களும் வந்து சிறப்பிக்கிறார்கள். அத்துடன் தமிழகத்திலிருந்து தினமும் பலர் வந்து திரும்பிக்கொண்டுதானிருக்கிறார்கள். இவர்களில் சாதாரண மக்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், சோதிடர்கள், சாமியார்கள், துறவிகள், வியாபாரிகள் உட்பட பலர் அடங்குவர். ஆனால் அதற்கெல்லாம் எத்தகைய எதிர்ப்பும் தெரிவிக்காதவர்கள் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் புறப்பட்டால் மாத்திரம் எதிர்ப்புத்தெரிவிப்பது ஏன்?
ஈழத்து எழுத்தாளர்களுக்கும் தமிழக படைப்பாளிகளுக்கும் இடையில் நட்பும் உறவும் ஆரோக்கியமாக வளர்ந்துவிடக்கூடாது என நினைக்கிறார்களா? அல்லது இலங்கையில் தமிழ் இலக்கியம் போருக்குப்பின்னர் புத்துயிர் பெற்றுவிடக்கூடாது என்று ஆதங்கப்படுகிறார்களா?
 நீண்ட காலமாக நீடித்த இந்த கலை, இலக்கிய உறவுப்பாலத்;தை தகர்த்nறிவதில்; அவர்களுக்கு அப்படியென்ன வக்கிரமான திருப்தி.
தமிழக படைப்பாளிகள் இயக்கத்தின் அறிக்கையையும் வைகோவின் அறிக்கையையும் பார்த்த பின்பு உடனடியாகவே கொழும்பில் பாரதி விழாவும் இலக்கிய மாநாடும் நடத்தும் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. மு. கதிர்காமநாதனுடனும் இந்நிகழ்வுகளின் இலக்கிய இணைப்புச்செயலாளர் ஞானம் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரனுடனும் தொடர்புகொண்டேன்.
ஏற்கனவே 2011 இல் நடந்த சர்வதேச மாநாட்டின் இலங்கை இணைப்பாளராகவும் மாநாட்டு அமைப்புக்குழுவின் தலைவராகவும் பணியாற்றிய ஞானசேகரன் மிகவும் நிதானமாக, "சரியான உண்மையை புரிந்துகொள்ளாமல் பொறுப்பற்று கருத்துச்சொல்கிறார்கள். எமது சர்வதேச மாநாட்டிற்கும் இப்படித்தானே அவதூறு கற்பித்தார்கள். எனினும் அவர்களது பொய்ப்பிரசாரத்தை முறியடித்து திட்டமிட்டவாறு குறிப்பிட்ட மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறோம். அதுபோன்று தமிழ்ச்சங்கம் தற்போது நடத்தவுள்ள மாநாடும் திட்டமிட்டவாறு நடைபெறும்" என்றார்.
சங்கத்தலைவர் கதிர்காமநாதனும் மிக நிதானமாகவே பதில் சொன்னார். வைகோ,  சங்கத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாகவும்.  சங்கம் அரசியல் கலப்பில்லாதது. அரசாங்கங்களின் ஆதரவுடன் சங்கம் என்றைக்கும் இயங்கியதும் இல்லை என்றும் இதுதொடர்பாக மாநாட்டு அமைப்புக்குழு கூடிப்பேசும் என்றும் தெரிவித்தார்.
"வைகோவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சங்கத்தின் வரலாற்றை சுருக்கமாகவும் பாரதிவிழாவினதும் இலக்கிய மாநாட்டினதும் நோக்கத்தை தெளிவுபடுத்துமாறும் அவருக்குச்சொன்னேன்.
பின்னர் தமிழகத்தில் சிற்றிதழ் சங்கத்தலைவர் வதிலை பிரபாவுடன் தொடர்புகொண்டு வைகோவின் தொலைபேசி இலக்கம்பெற்றேன். அவரது இல்;லத்திலிருந்து, "அவர் திருச்சிக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்வதாக" தகவல் கிடைத்தது. வைகோவின் கட்சி அலுவலகத்தில் தொடர்புகொண்டேன். பின்னர் அவரது பொதுமக்கள் தொடர்பு ஊழியரை தொடர்புகொண்டேன் எனினும் இந்த ஆக்கம் எழுதும் வரையில் வைகோவுடன் பேச முடியவில்லை. தொடர்ந்து முயற்சிப்பேன்.
 ஏற்கனவே நாம் 2011 இல் மாநாடு நடத்தியபோது தமிழகத்திலிருந்து எதிர்வினைகள் தொடங்கியதும் கோவை ஞானி, பொன்னீலன், தி.க.சிவசங்கரன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், ஜெயமோகன், ராமகிருஷ்ணன்  உட்பட பல முன்னணி படைப்பாளிகளுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு எம்மவரின் நிலைப்பாட்டை விளக்கநேர்ந்தது. அத்துடன் தமிழக இதழ்கள் சிலவற்றிலும் நேர்காணல்கள், மற்றும் கட்டுரைகள் வாயிலாக விளக்கநேர்ந்தது.
 செயப்பிரகாசம் உட்பட பல தமிழக படைப்பாளிகளுக்கு நாம் ஏற்கனவே அளித்துள்ள விளக்கமும் 2011 இல் இலங்கை அரசினதோ அரசியல்வாதிகளினதோ ஆதரவு எதுவுமின்றி படைப்பாளிகள், கலைஞர்கள், தமிழ் அபிமானிகளின் நிதிப்பங்களிப்புடன்தான் மாநாடு வெற்றிகரமாக தரமாக நடந்து முடிந்தது என்பதும் அது நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதும் நன்கு தெரியும்.
  அதனால் மீண்டும் மீண்டும் இப்படியே நாம் விளக்கிக்கொண்டிருந்தாலும்கூட, இலங்கையில் இலங்கையர்களினால் நடத்தப்படும் எந்தவொரு தமிழ் மாநாட்டிற்கும் அவர்கள் சிங்கள அரசியல் சாயம் பூசிக்கொண்டுதானிருப்பார்கள். தமிழகத்திலிருந்து வரவிரும்புபவர்களை செல்ல விடாமல் தடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
 அதனால் இலங்கை தமிழ் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் மற்றும் தமிழ் மாநாடுகளை ஒழுங்குசெய்யும் தமிழ்ச்சங்கம் போன்ற அமைப்புகளும், தமிழகத்தின் எதிர்ப்புக்குரலை அலட்சியம் செய்துவிட்டு பணிகளை தொடரவேண்டியதுதான் அவர்களுக்கு வழங்கும் அமைதியான பதிலாக இருக்கமுடியும்.
 ராஜபக்ஷாவின் அரசாங்கம் பதவியிலிருக்கும் வரையில் இலங்கைத்தமிழன் தமிழின் பெயரால் விழாவோ, மாநாடோ ஒழுங்கு செய்யாமல் வரண்டுபோய்விடவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்போ தெரியவில்லை.
இதற்கு காலம் பதில் சொல்லுமா? அல்லது வழக்கம்போன்று காலம் இதனையெல்லாம் மறந்துவிடுமா? 
முருகபூபதி
அமைப்பாளர்
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
அவுஸ்திரேலியா.

மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

Posted: 01 Jun 2012 11:59 AM PDT


மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவமும் சடங்கும் 10.06.2012 ஆரம்பமாகி எதிர்வரும் 04.06.202 நிறைவுபெற இருக்கின்றன.


பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான கடைத்தொகுதி வாகரையில் திறப்பு

Posted: 01 Jun 2012 11:20 AM PDT


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில், மகளிர் பொருளாதார சமூக அபிவிருத்தி நிறுவனத்தின், பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் சந்தைக் கடைத் தொகுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
நேற்று வியாழக்கிழமை பகல் நடைபெற்ற இந்நிகழ்வில், வாகரை பிரதேச செயலாளர் செல்வி ராகுலநாயகி, லுதரன் உலக நிவாரண நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மிக்கெலே செசெரே, எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஸ்பிரிதியோன், பிரதிப் பணிப்பாளர், விவசாய உத்தியோகத்தர், கால்நடை உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
லுதரன் உலக நிவாரண நிறுவனத்தின் நிதி அனுசரணையில், எஸ்கோ நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் இச் சந்தைக் கடைத் தொகுதி அமைக்கப்பட்டள்ளது.
இச்சந்தைக் கடைத் தொகுதியில், தையல் வேலைகள் செய்யும் நிலையம் ஒன்றும் பல தேவைக்கடையொன்றும் அமைந்துள்ளது.
இக்கடைத் தொகுதியானது மாவடியோடை, வாகரை, உள்ளிட்ட பல பிரதேசங்களையும் சேர்ந்த பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்டகள் பயன் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டு முறிவு குளத்தில் மீன் அறுவடை

Posted: 01 Jun 2012 11:19 AM PDT


யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டுமுறிவு பிரதேச பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கட்டு முறிவு குளத்தில் மீன் அறுவடை இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
லுதரன் உலக நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில், எஸ்கோ நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படம் இத்திட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் கட்டுமுறிவு குளத்தில் 75ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டு அதற்கான அறுவடை இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், வாகரை பிரதேச செயலாளர் செல்வி ராகுலநாயகி, லுதரன் உலக நிவாரண நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மிக்கெலே செசெரே, எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஸ்பிரிதியோன், பிரதிப் பணிப்பாளர், கட்டுமுறிவு பிரதேச கிராம சேவையாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் மூலம் கட்டுமுறிவு, கிரிமிச்சை உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு

Posted: 01 Jun 2012 10:29 AM PDT

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிகு;கும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தற்போது வெளியிடும் கருத்தின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பிரதான கட்சியான தமிழரசுக் கடசிதான் தமிழ் மக்களுக்கான கட்சி என மட்டக்களப்பில் நடந்த தேசிய மாநர்டிலே குறிப்பிட்டிருந்தார் சம்பந்தன். இதனை நாங்கள் ஒருபோதும் எற்க மாட்டோம். தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியும் தமிழ் மக்களுக்கான கட்சிதான். இவ்வாறு இருக்கும் போது திரு சம்பந்தன் அவர்கள் தனது கட்சிதான் தாய் கட்சி எனறு குறிப்பிடுவது ஏற்க முடியாத ஒன்றாகும் என பிபிசிக்கு தெரிவித்தார்.

அதனை இரா சம்பந்தன மறுத்திருக்கின்றார். அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பல கட்சிகள் இருந்தாலும் உண்மையில் தமிழ் மக்களுக்கென்று இதய சுத்தியோடு செயற்படும் கட்சி என்றால் அது தமழரசுக் கடசிதான் என்கின்றார். இப்படி ஆளுக்காள் விவாதித்து கொண்டே செல்கின்றார்கள். தொடர்ந்து இந்த நிலமை தொடருமானால் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டு மாவட்டத்தில் 3 இலட்சத்து 46 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி

Posted: 01 Jun 2012 10:27 AM PDT

நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2011ம் ஆண்டைய வாக்காளர் இடாப்பின் பிரகாரம் 346821 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அஸங்க ரத்னாயக்கா தெரிவித்தார்.
மட்டக்களப்பு தொகுதியில் 162175 வாக்காளர்களும் கல்குடா தொகுதியில் 100615 வாக்காளர்களும் பட்டிருப்பு தொகுதியில் 84031 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

யோகேஸ்வரனால் முதலமைச்சராக வர முடியுமா? கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் சவால்

Posted: 01 Jun 2012 10:08 AM PDT

கிழக்கு மாகாண இன வீதாசாரமோ! வாக்காளர் வாக்களிப்பு வீதமோ தெரியாமல் பிதற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தின் தமிழர் தனித்துப் போட்டியிட்டு பெரும்பான்மையாக வந்து ஆட்சி அமைக்க முடியுமா என்று கூடத் தெரியாமல் சிறு பிள்ளை வேளான்மை செய்வது போல் கருத்து வெளியிடுவது வெட்கப்படக்கூடிய விடயமாகும்.




நாம் பகீரங்கமாக சாவால் விடுகின்றோம், முடிந்தால் யோகேஸ்வரன் தனது பாராளுமன்ற பதவியை துறந்து விட்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராகத் தயாரா? சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துவமாக எடுத்த முடிவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணம் என்பதை மறந்து ஆட்டம் போடும் இவர்கள் எடுத்த வாக்குகளுக்கு மக்களுக்குத்தான் நல்லது செய்யாது விட்டாலும் மட்டக்களப்பு பிரதிநிகளாக இருந்து கொண்டு கிழக்கின் வாக்களிப்பு நிலமை தெரியாது மக்களை ஏமாற்ற முற்படுகின்றது மீண்டும் சந்தேகத்தை தருகின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 15000 
மக்களுக்கு மேல் கலந்து கொண்ட கிழக்கில் மிக பிரமாண்டமான தேசிய மாகாநாட்டினை நடத்தியிருந்தது. அதில் யாரையும் குறை கூறவோ யார் பக்கமும் பழியைப் போடவோ முற்படவில்லை மக்களை ஏமாற்றியும் அழைத்து வரவில்லை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கையின் பின்னாலும் தூர தரிசன செயற்பாடுகள் பின்னாலும் அணி திரண்ட மக்கள் அவர்கள் என்பதை அனைவரும் நன்கு அறிவர்.





ஆனால் வேறு மாவட்டங்களிலிருந்து பஸ் வண்டிகளில் ஏற்றிவந்து மாகாநாடு நடாத்தி விட்டு மக்கள் எல்லாம் எங்கள் பக்கம் நிற்கின்றார்கள் என்று தம்பட்டம் அடிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் 14வது மாநாட்டிற்கு மட்டக்களப்பு மக்கள் பெருமளவு கலந்து கொள்ளாததால் தமது தோல்வியை மறைப்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மீது வசைபாடுவது தமிழ் தேசிய கூட்டடைப்பின் அநாகரிகமான, உண்மைக்கு புறம்பான செயலாகும். தமது கட்சிக்குள் இருக்கும் உட்பிணக்குகளை கூட தீர்த்துக்கொள்ள வழி தெரியாதவர்கள் கூறும் போலியான வார்த்தைகளின் உண்மைகளை வெகு விரைவில் மக்கள் புரிந்து கொள்வார்கள்.





கிழக்கு தமிழருக்கு இருக்கின்ற மாகாணசபை முறைமையினையும் இல்லாதொழித்து தமிழ் மக்களை நட்டாற்றில் அரசியல் அநாதைகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமக்கு கைபோனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுணம் பிழைக்க வேண்டும் என்ற வகையில் தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பற்றி நினைக்;காது தமது அரசியலை மாத்திரம் மையமாக வைத்து செயற்படும் இவர்களின் போலி முகத்திரைகளை மக்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள் என்று கல்லடி கடற்கரையில் இடம்பெற்ற உதயகீற்று இளைஞர் கழகத்தின் வருடாந்த கலாசார விளையாட்டு விழாவின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™